Pages

Tuesday, 16 August 2016

AN EASY WAY TO COLLECT TAXES - 'வரி' (Tax) வசூலிக்க எளிய வழி

AN EASY WAY TO COLLECT TAXES            
'வரி' (Tax) வசூலிக்க எளிய வழி
விழிப்புணர்வுக் கட்டுரை  
மதுரை கங்காதரன்
வரியும் வரவும்
சுதந்திரத்திற்கு முன் 'உப்பு' (Salt Tax) க்கு வரி போட்ட வெள்ளையனை எதிர்த்து நம் நாடே கொந்தளித்து 'உப்புச் சத்தியாகிரகம்' செய்தது என்பதை சரித்திரம் சொல்கிறது. ஆனால் சுதந்திரத்திற்குப் பின், ஒவ்வொரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிலவிய தொழில் அபிவிருத்தி, அதைத் தொடர்ந்து அதன் சேவையில் ஏற்பட்ட  தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகலாவிய பொருளாதார மாற்றம் நிகழ்ந்த காரணமாக அதற்கான வசதி மற்றும் சூழ்நிலையை உருவாக்கவும், கட்டமைப்பு செய்து தரவும், நமது அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு துறையில் 'வரி' என்கிற சாத்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்கள் தலையில் ஏற்றி, அதை சுமக்கச்  செய்து கொண்டு வருகின்றது. ஒவ்வொரு வரியை அறிமுகப்படுத்தும் போது, இந்த வரியால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். அதனைக் கொண்டு மக்களுக்குப் பல வசதிகள், சலுகைகள் தர முடியும் என்று சொல்லி சொல்லித் தான் மக்கள் தலையில் திணிக்கிறார்கள். புதிய வரிக்கும், வரி ஏற்றத்திற்கும் ஆதரவாக நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களுக்கு விசுவாசமாக, தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள 'ஆமாம் சாமி' போட்டுச் செயல்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

இது வரையில் கிடைத்தப் புள்ளி விவரப்படி, நமது மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே வரியைச் செலுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அதில் கிட்டத்தட்ட பாதி சதவீதம் மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை, வரியைக் கட்டியேத் தீர வேண்டும் என்கிற சூழ்நிலை. அதேபோல் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் அனைத்தும் சரியாக வரியைக் கட்டுவார்கள் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். இதில் நலிவுற்ற, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வாறு வரியைக் கட்டுவார்கள்? மற்ற சிறு, பெரு, தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நேர்மையாக வரியைச் செலுத்துகிறார்கள்? என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாத ஒன்று. ஆனால் இங்கு ஒரு சந்தேகம் எழுகின்றது. பல பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்களானது அவர்கள் வாங்கிய கடனையே திருப்பிச் செலுத்தாதபோது எப்படி இந்த வரிகளைச் சரியாக அரசாங்கத்திற்குச் செலுத்துவார்கள்?           

வரியா? வலையா?
இந்த அரசாங்கம் மக்கள் மீது விதிக்கும் வரியானது, கடலில் வீசுகின்ற வலைக்குச் சமம். வலையில் சிக்கிய மீன்கள் சுதந்திரமாக இருக்க முடியுமா? இது நாள் வரையில்  நாம் சந்தித்தது என்ன? இருந்த மானியமும், கொடுத்த சலுகையும் பறித்தது தான் மிச்சம். அதோடு விட்டார்களா? பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல, விலையேற்றத்தோடு வரி ஏற்றமும், கடன் தொல்லையும் தான் நாம் கண்டது. மேலும் கொடுக்கின்ற கொஞ்சம் மானியத்தில் இந்த அடையாள அட்டை கொண்டு வா! அந்த அடையாள அட்டை எங்கே? என்று மக்களை அரசாங்கம், ஏதாவது ஒருவிதத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பதே ஒரு வேலையாக செய்து விட்டது. இப்படி மக்களை பாடாய்ப் படுத்தினால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்குமா? தினம் தினம் நடைமுறையில் பற்பல மாற்றங்கள். நேற்று ஒரு நடைமுறை, இன்று வேறொரு நடைமுறை! நாளை எப்படியோ? இதில் கூத்து என்னவென்றால் படித்தவர்களுக்கே இத்தகைய நடைமுறைகள் சிக்கலாய் தெரியும்போது படிக்காதவர்களும், பாமர மக்களும் என்ன செய்வார்கள்?       

முன்பெல்லாம் புதிதாக 'வரி'யை விதித்தாலோ அல்லது இருக்கின்ற வரியை ஏற்றினாலோ, வியாபாரிகள் தான் முதலில் ஆர்ப்பாட்டமோ அல்லது கண்டனக் குரல்களோ கொடுப்பார்கள். ஏனென்றால் வரியால் பொருட்களின் விலை ஏறும், அதனால் மக்கள் பொருட்கள் வாங்குவது குறையும். அதன் எதிரொலியாக வியாபாரம் படுத்துவிடும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் சமீபமாக, அரசு எந்த ஒரு 'வரி' யை விதித்தாலும் பெரும்பாலான வியாபாரிகளுக்கு கொண்டாட்டமாகத் தான் இருக்கின்றது. அவர்களுக்கு 'வரி' என்பது கூரையை பிய்த்துக் வாரிக் கொடுக்கும் அதிர்ஷ்ட அல்லது ஐஸ்வர்ய தேவதையாகக் காட்சியளிக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதுவும் அரசாங்கமே செய்து தரும் ஏற்பாடு ஆகையால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் 'வரி'யை வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்ன?

வரி வசூலா? பகல் கொள்ளையா?
பலர் வியாபாரம் மற்றும் சேவை என்கிற போர்வையில் 'வரி' என்கிற பெயரில் எளிதாக மக்களிடத்தில் வசூல் செய்து, அதை அரசுக்குச் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தால் அதற்குப் பெயர் பட்டப் பகல் கொள்ளை என்று சொல்லலாமா? கூடாதா? அதிலும் பணபலம், அரசியல்பலம், பதவி, பேரும், புகழும் இருப்பவர்களுக்குச் சொல்லவே தேவையில்லை! அவர்களில் சிலரின் கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு பற்றிய செய்திகள் தினம் தினம் பல ஊடகங்களில் வந்த வண்ணம் இருக்கின்றதா? இல்லையா? அதற்குக் காரணம் பெரும்பாலான  மக்களிடத்தில் சட்டம், ஒழுங்கு பற்றிய பயம் துளி கூட இல்லாமல் போய்விட்டது எனலாம். ஏனென்றால் எது நடந்தாலும் ஒரு வழக்கைப் போட்டால் போதும். ஆயுள் வரைக்கும் இழுக்கலாம்! என்கிற எண்ணம் அவர்களின் மனதில் பதிந்துவிட்டது. இதில் அப்பாவிகளும், ஏழைகளும் தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையா? இல்லையா?  

இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் வியாபாரிகள், நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சிறு, குறு, பெரும் சேவை நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் போன்றவர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எழுதப்படாத 'முகவர்கள்' (Agents) என்றே சொல்லவேண்டும். அதாவது அரசாங்கம் எந்தெந்த வரிகள் எதிலெதில் எவ்வளவுக்கெவ்வளவு போடுகின்றதோ அதை மக்களிடத்தில் உடனுக்குடன் வசூலித்து மெல்ல மெல்ல அரசுக்குச் செலுத்தினால் போதும். அதாவது அதை மாதாமாதமோ, காலாண்டுகளாகவோ, வருடம் தோறும் கட்டினால் போதுமாம். யானைக்குப் பக்கத்தில் இருக்கின்ற கரும்பு, யானை வாய்க்குள் போகுமா? அல்லது அப்படியே இருக்குமா? என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

மக்களிடத்தில் வசூலித்த 'வரி' அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியது அவர்களுடைய  'கடன்'. பொதுவாக கடன் யார் சரியாகச் செலுத்துவார்கள்? சிறு, குறு சேவையும், வியாபாரமும் செய்பவர்களே! இது வரையில் எத்தனை பெரும் வியாபாரிகள், நிறுவனங்கள், சேவை தருபவர்கள், புகழ் பெற்றவர்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் மக்களிடத்தில் வாங்கிய அத்தனை 'வரி'ப் பணத்தையும் அரசாங்கத்திற்குத் செலுத்தியிருக்கின்றார்கள்? ஆக அரசாங்கம் என்ன தான் புதுப்புது விதமான வரிகள் விதித்தாலும், ஏமாற்றுகிறவர்கள் எப்போதும் எந்த வகையிலாவது ஏமாற்றுவதும், ஒழுங்காகச் செலுத்துபவர்கள் எப்போதும் ஒழுங்காகச் செலுத்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.

பதினாறு வயதிலே ஜி.எஸ்.டி
2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த ஜி.எஸ்.டி வரியின் பயணம் 2016 ம் ஆண்டில் ஒரு வழியாக அரங்கேறி உள்ளது. ஏன் ஜி.எஸ்.டி (GST) என்கிற வரிக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? வழக்கம் போல் இது நாள் வரை விதித்த வரி முறைகள் சரியில்லை! அதை சரியாக வசூலிக்க முடியவில்லை. அதனால் அரசுக்கு இவ்வளவு நஷ்டம்! ஆனால் இந்த புதுவரியான ஜி.எஸ்.டி யில் யாரும் ஏமாற்ற முடியாதாம்! அப்படி மட்டும் இருப்பது தெரியவந்தால் இந்நேரம் அரசியல்வாதிகள் சும்மா இருந்திருப்பார்களா? நாட்டையே கொந்தளித்திருக்கச் செய்திருப்பார்கள் அல்லவா? அப்படி இல்லையென்றால் அதில் சில சாதகமாக ஓட்டைகள் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

எந்த வரி எப்படிப் போட்டாலும் அதை நடைமுறை படுத்துப்பவர்கள் மற்றும் கண்கானிப்பவர்கள் அரசாங்க ஊழியர்களே. அவர்களின் பலவீனம் லஞ்சம் பெறுவது. இதைத் தடுக்க முடிகின்றதா? அட லஞ்சம் வாங்கியவர்களைத் தான் என்ன செய்தார்கள்? ஆனால் எல்லோரும் அவ்வாறு இருப்பதில்லை. அதிலும் 'சுத்தமான கைகள்' இருப்பது சற்று பெருமைபடக்குரிய விஷயம் தான்.    

உதாரணமாக சமீபத்தில் நகை கடைக்கு ஒரு சதவீதம் (1%) கலால் வரி போட்டதற்கே எத்தனை நாட்கள் போராட்டம் செய்தார்கள்? ஏனென்றால் அதில் ஏதோ ஒரு கிடுக்கிப்பிடிஇருக்கின்றது என்று அர்த்தம். அப்படி ஏதாவது இப்போது நடந்ததா? அதாவது ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நம் நாட்டை எங்கோ கொண்டு போகப்போகிறது பாருங்கள் என்று மக்களை நம்ப வைப்பதற்கு பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். இது நாள் வரையில் அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு திட்டமும் சட்டமும் நடைமுறைக்கு வராது என்பது எழுதம்படாத விதி. ஒருவேளை அப்படி வந்தாலும் அது அரசியல்வாதிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சாதகமாகத் தான் இருக்கும்.      

புதுவரி போடுவதில் ஒரு வசதி இருக்கிறது. அதாவது போனதெல்லாம் போகட்டும். இதிலிருந்து சரியாக கட்டுங்கள் என்று சொல்வது போல் இருக்கின்றது. இதில் வரியைக் கட்டாதவர்கள், நாமம் போட்டதவர்கள் தான் பலன் அடைகிறார்கள். பயந்து வரியைக் கட்டியவர்களுக்கு  வழக்கம்போல்ஏமாளிகள்என்கிற பட்டம்!

தெறிக்க வைக்கும் வரி
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக கண்களை மூடிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வதும் அல்லது சில சலுகை கொடுப்பதும், சிலவேளைகளில் வரி கட்டாத சிலருக்கு வரியைத் தள்ளுபடி செய்தும் அல்லது வரியைக் குறைப்பதும் வழக்கமாக நடைபெறுவது ஒன்று. அப்படி இருக்கும் போது இந்த ஜி.எஸ்.டி வரி நிலைத்து நிற்குமா? எல்லா மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி சீராக இல்லாதபோது இந்த ஒரே வரியை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள்? என்கிற கேள்வி மனதில் எழுகின்றதல்லவா? எந்த வரி நடைமுறைக்கு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் வரி ஏற்றமும், அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு மட்டும் தடைபடாது.          

இந்த நேரத்தில் நம் பழமொழி ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது. அதாவது 'கூரையில் ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போவானாம்?' என்பது தான். இது நாள் வரை சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட வரிகள் போட்டு கிழித்தாகி விட்டது. இப்போது இது தான் பாக்கி! என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த வரி விதிப்பிற்குப் பிறகு பணக்காரர்களை பெரியப் பணக்காரர்களாக உருவாக்கும். ஆனால் நடுத்தரவர்கமும், ஏழைகளும் அதற்கு பலிகடாவாகப் போவதென்னமோ உண்மை. இது போதாது என்று சந்தடி சாக்கில் கல்வி வரி, சுத்தமான பாரதம் என்பது போன்று கொசுறு வரிகளையும் போடுவார்கள். இதனால் கறுப்புப் பணமும், வரி ஏய்ப்பும் பெருகுமே தவிர அவைகளை முற்றிலும் ஒழிக்கவோ அல்லது குறைப்பது என்பது கனவிலும் நடக்காதது ஒன்று.
  
காரணம், தினம் நிகழும் அரசியல் மாற்றம், சட்ட விதிகள் மாற்றம், நீதிபதிகள் மாற்றம், அரசு அதிகாரிகள் மாற்றம், தினம் தினம் காணாமல் போகும் வியாபாரிகள், நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சிறு, குறு, பெரும் சேவை நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் போன்றவர்கள். அதே சமயத்தில் தினம் தினம் புதிது புதிதாக முளைக்கும் வியாபாரிகள், நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சிறு, குறு, பெரும் சேவை நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் போன்றவர்கள். ஆனால் மாற்றமே இல்லாமல் யார் என்றால் வரியைச் செலுத்திவரும் மக்களே!

சரி, அப்படி காணாமல் போனவர்கள், மக்களிடம் வசூலித்த வரிப் பணம் அரசாங்கத்திற்குப் போய் சேருமாஅதுபோல பழைய வரிக்காக நிலுவையில் உள்ள வழக்குகள் என்னாவது? அவைகள் எல்லாம் எத்தனை ஆண்டுகள் இழுக்கும்? என்பதும், கடைசியில் என்னாவாகும்? என்பதும் நமக்கு அத்துப்படியாகத் தெரியும். இது தவிர, புதுப்புது வரிகள் விதிக்கும் போது அதுக்கான சட்ட புத்தகங்கள் இருக்கின்றதே, அந்த தடிமனைப் பார்த்தாலே தலை சற்ற வைக்கும். இந்த காலத்தில் ஒரு பக்கம் கூட பொறுமையாய் படிக்காத மக்களிடத்தில் இது தான் ஜி.எஸ்.டிக்கான புத்தகம்! என்று கொடுத்தால் அதை படித்துப் புரிந்து கொள்ள எத்தனை வருடமாகும்? என்று சற்று யோசியுங்கள். அப்படி இருக்கும் போது அவர்களால் எப்படி அதை நடைமுறைப்படுத்தி, சரியாக வரியை வசூலித்து அரசாங்கத்திற்குக் கட்ட முடியும்?

வரியா? அபராதமா?
நாடு முன்னேற்றம் அடைய தொழிலும், சேவையும் முக்கியம் தான். அதற்காக வரியை விதிப்பது நியாயம் தான். ஆனால் பேரும், புகழும், பணமும் இருக்கும் பலரிடம் வரி வசூல் செய்ய முடியாமல் அவர்களை விட்டுவிட்டு, அகப்படும் சிலரிடம் மட்டும் கிடுக்கிப்பிடி போட்டு வரி வசூல் செய்வது எந்த வகையில் நியாயம்? என்பது தான் கேள்வி. அப்படியானால் வரியானது எளியோரை பயமுறுத்தும் 'சாத்தானா?' என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஏனென்றால் வரி ஏய்ப்பு செய்வோர்களுக்கும், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும் யார் யார்? எந்தெந்த வகையில் உதவி செய்து வருகிறார்கள்? என்பதை பல ஊடகங்கள் தினம் தினம் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தாலும் அதனால் எவ்வித பயனும் இல்லை என்பது தெரிகின்றதல்லவா?
இது நாள் எந்தெந்த பெயரில் என்னென்ன வரிகள் வதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். பொதுவாக காற்று இல்லாத இடம் இல்லைஎன்று சொல்வார்கள். இப்போது சற்று மாறி 'வரி கட்டாத வாழ்க்கை இல்லை' என்று சொல்லும் படி வைத்து விட்டார்கள்.

1.     The Madras General Sales Tax (MGST)
2.     Sales Tax (ST) – Selling the Goods
3.     Value Added Tax (VAT)
4.     Central Sales Tax (CST), Custom Duty & Octroi – From other area / State / Abroad
5.     Entertainment Tax Act (Cinema, Resort)
6.     Agriculture Income Tax Act
7.     Professional Tax  - For Business & Staff
8.     Luxuries Tax (Hotel)
9.     Commercial Tax
10.  Income Tax – Profit
11.  Service Tax (Any service)
12.  Edu. Cess
13.  Road Tax
14.  Swatch Bharath
15.  Property Tax
16.  Dividend Distribution Tax – For Dividend    
17.  Excise Duty ( Manufacturing Goods)
18.  Municipal & Fire Tax (Factory & Warehouse)  
19.  Turnover Tax or Minimum Alternate Tax (MAT)
20.  Cash Handling Tax ( Above Rs 25,000/= cash take from bank)
21.  Gift Tax (Birthday Gift)
22.  Wealth Tax (For wealth)
23.  Registration Fee (Purchase House)
24.  Sur-charge (Travel ) Bus  
25.  Interest & Penalty for timely unpaid Taxes   
26.  Water and Drainage Tax
இந்த பட்டியல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று சொல்வது போல் தோன்றுகின்றதல்லவா? இதிலிருந்து என்னத் தெரிகின்றதென்றால் எந்த ஒரு வரியை விதித்தாலும் தொலைநோக்குப் பார்வை இல்லாமல், அதன் பின் விளைவுகளை ஆராயாமல் கண்ணைமூடிக் கொண்டு அறிமுகப்படுத்தி, அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்துகின்றதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அதை நிரூபிக்கும் வண்ணம் பல வரிகளைப் இதுவரைப் பார்த்தீர்கள்.   

இனியும் புதிய வரிகள் வருமா?
இப்போது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் பத்தாண்டுகளில் என்னென்ன வரிகள் புதிதாக போடுகிறார்கள் என்று பாருங்கள். இப்போது ஒரே நாடு, ஒரே வரிஎன்று சொல்கிறார்கள். பிறகு ஒரே உலகம், ஒரே வரிஎன்று முழங்கி வரியை கூட கொஞ்சம் கூட்டி வசூல் செய்வார்கள். அதாவது இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று யார் யார் பணம் சம்பாத்கிறார்களோ அவர்கள் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரியாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இல்லாவிட்டால் அந்த நாட்டில் வாழ முடியாது! என்று நெருக்கடி கொடுப்பார்கள். வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தான் தெரியும்?  

அப்படி இல்லாவிட்டால், "மாநில அரசாங்கம் எதிலும் தங்கள் இஷ்டம் போல் வரியைப் போடலாம். ஆனால் மத்திய அரசாங்கத்திற்கு அதில் பத்து சதவீதம் (10%) கட்டாயம் கொடுக்க வேண்டும்" என்று சொன்னாலும் அதற்கும் 'ஆமாம், ஆமாம்' என்று ஏற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கும்போது நாட்டு மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? ஒன்று மட்டும் நிச்சயம். முழுமையாக வரி வசூல் செய்வது என்பது, ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதற்குச் சமம். அதாவது அரசியல்வாதிகள், எந்த ஒரு சட்டமோ, திட்டமோ கொண்டு வந்தாலும் அதில் இருக்கும் பலன்கள் ஏழைகளுக்குச் சென்றடைவது சொற்பமே! ஏனென்றால் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பலமுகங்கள் இருக்கின்றன. சிலவேளைகளில் தங்களை ஏழைகளாகவும், பலவேளைகளில் பணக்காரர்களாகவும் காட்டிக் கொள்வார்கள். அது அரசு அளிக்கும் சலுகைகள் பொறுத்து தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

இது நாள் வரை வரியானது, பல தொழில்களை முடங்கிப் போவதற்கும், சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் சம்பாதியத்தை கரப்பதற்குமான வேலை தான் செய்து வந்துள்ளது. இனிமேலும் அதைத் தான் செய்ப்போகிறது என்கிற மனோபாவமே மக்கள் மனதில் ஓங்கியுள்ளது.  

'பில்லும்' வேண்டாம், வரியும் வேண்டாம்!
எங்கே உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்! நீங்கள் மருந்து மாத்திரை, நகைகள் வாங்கும்போதும், பெட்ரோல், டீசல், எண்ணெய் ஊற்றும் போதும், காய்கறி பழங்கள் வாங்கும்போதும் 'பில்' வாங்குகிறீர்களா? சரியான கட்டணம் கொடுத்து திரைப்படம் பார்க்கிறீர்களா? கல்விக் கட்டணத்திற்கு சரியான ரசீதைப் பெறுகிறீர்களா? தனியார் பேருந்தில் பயணம் செய்கின்றபோது சரியான கட்டணம் தான் கொடுக்கிறீர்களா? ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு 'பில்' வாங்குகிறீர்களாஒர்க் ஷாப் வேலை பார்த்ததற்கு 'பில்' வாங்குகிறீர்களா? இப்படி பலவற்றிற்கும் பில்என்கிற ஒன்று இல்லாத / பலர் கொடுக்காத போது, அரசாங்கம் எப்படி சரியாக வரி வசூல் செய்ய முடியும்? மேலும் எல்லாம் கணினிமயமான படியால் ஒரு சில நிமிடத்தில் வரியை ஏய்க்கும்படியான போலி பில்கள் எளிதில் தயாரிக்கலாம். அப்படி இருக்கும் போது பொருட்களை வாங்கப் போகும் மக்கள் எங்கே? யார்? வரி இல்லாமல் குறைந்த விலையில் பொருட்களை விற்கிறார்களோ அங்கு தான் வாங்குவார்கள். இதனால் அரசாங்கத்திற்க்குக் கிடைக்க வேண்டிய வரி கிடைக்காது அல்லது குறைவாகக் கிடைக்கும்.     

வரி வசூலிக்க எளிய வழி!
'வரி'யை வசூலிக்க எளிய வழி என்னவென்றால், எந்த ஒரு வரி இருந்தாலும் அதை சரி சமமாக நான்கு பாகமாகப் பிரிக்க வேண்டும். அவைகள் முறையே மத்திய அரசு, மாநில அரசு, வாங்குபவர்கள், விற்பவர்கள் ஆவார்கள். அந்த நால்வரும் வரியைச் செலுத்துவதற்கு தனித்தனியே வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அதாவது பொருட்களுக்கான செலுத்தும் வரி நூறு சதம் (100%) என்று வைத்துக் கொண்டால் ஆளுக்கு இருபத்தைந்து சதவீதம் (25%). உதாரணமாக 'வரி' யானது இருபது சதவீதம் (20%) என்று வைத்துக் கொண்டால் ஆளுக்கு ஐந்து சதவீதம் (5%) பிரித்துக் கொள்ள வேண்டும். இது எதற்காக என்றால் ஒரு திட்டம் சரியாகச் செயல்பட வேண்டுமென்றால் மக்களுக்கும் ஏதாவது லாபம் கிடைத்தால் தான் அவர்கள் அதை சரியாகப் பின்பற்றுவார்கள். ஏனென்றால் 'வரி' யை மக்களிடத்தில் தான் வசூல் செய்ய வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பு நூறு சதம் இருந்தால் தான் திட்டம் வெற்றி பெறும். இத்தகைய வசூல் முறை வரிக்கு மட்டுமல்ல, நன்கொடை, வரிச் சலுகை மற்றும் கணக்கில் காட்ட முடியாத பணம் போன்றவற்றிற்கும் வரிவுபடுத்தலாம்.

மக்கள் ஓரிடத்தில் பொருளை வாங்கும் போதே பொருளுக்கான விலை தனியாகவும் அதற்கான 'வரி'யை நான்கு வங்கிக் கணக்கில் அதனதன் பங்குகளை உடனுக்குடன் சேர்த்துவிட வேண்டும். அது ஒரு சேமிப்பாக கணக்கில் (Savings Account) எடுத்துக் கொண்டு, வருட முடிவில் அவரவர் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம் என்கிற முறை இருந்தால் எப்படி இருக்கும்? மக்கள் தானாகவே எங்கே சரியான படி 'பில்' எங்கே கொடுகிறார்களோ அங்கே தான் பொருட்களை வாங்குவார்கள். ஏனென்றால் யாரும் அவர்களின் பங்கை இழக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் அல்லவா! இதனால் ஒருவர் வருடம் ஒன்றுக்கு சுமார் ஐய்யாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரை சேமிக்கலாம்.       
         
அதோடு வியாபாரம் கூட்டிக் காட்டுவதற்கு பல போலி பில்கள் போட்டாலும், அதிகப்படியான பில்கள் போட்டாலும் வரி விகிதத்தில் ஐம்பது சதவீத வரியை கட்டாயம் கட்டியேத் தீர வேண்டும் என்கிற நிலை வரும்! ஒருவேளை பில்’ (Bill) தராமல் வியாபாரமோ அல்லது சேவையோ செய்தால் எல்லாருடைய பங்கையும் அவர்களே செலுத்த வேண்டும். ஆக பில்களை சரியானபடி போடுவதால் அந்த வரியின் பங்கை வைத்துக் கொண்டு, அவர்களுடைய அசல் வியாபாரத்தை தெரிந்து கொள்ளலாம். இதனால் வியாபாரத்தை செயற்கையாக கூட்டிக் காட்டவோ அல்லது குறைத்துக் காட்டவோ முடியாது. அது வங்கிக்கும், அரசாங்கத்திற்கும் சரியானக் கணக்கைக் காட்டும் புள்ளி விவரமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது முக்கியமாகத் தேவை என்றே தெரிகின்றது. ஏனென்றால் சமீப வருடமாக நம்நாடு இதில் சாதனை செய்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் நமக்கு பாதிப்பில்லை என்று ஒரு பக்கம் கூறுவதும், மறுபக்கத்தில் விலைவாசி ஏற்றத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், மானியத்தைக் குறைத்துக் கொண்டே வருதற்குப் பெயர் என்ன அர்த்தமோ? அவற்றிலிருந்து என்ன தெரிகின்றது, அவர்கள் கூறும் புள்ளி விவரங்கள் உண்மையல்ல என்று தானே நினைக்கத் தோன்றுகின்றது.    

சிலர் இருவகையான கணக்கை வைத்து இருப்பார்கள். வங்கியில் 'கடன்' வாங்க வேண்டுமென்றால் செயற்கையாக லாபத்தைக் கூட்டிக் காட்டுவார்கள். அப்போது தான் அதிக கடன் கிடைக்கும். அவர்களே வரியைக் கட்ட வேண்டுமென்றால் லாபத்தைக் குறைத்தோ அல்லது நஷ்டமோ காட்டுவார்கள். அதனால் எது உண்மையான கணக்கு? என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த முறையில் சரியான கணக்கு தெரிந்துவிடும். உடனுக்குடன் வரி வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடுவதால் 'வரி ஏய்ப்பு' என்கிற பேச்சுகே இடமில்லை. மேலும் அவர்கள் வியாபாரத்தையோ அல்லது சேவையையோ நிறுத்தினாலும் அதுநாள் வரை வசூலித்த வரி பற்றிய தலைவலி அரசாங்கத்திற்கு இல்லை. ஏனென்றால் வரிகள் உடனுக்குடன் சுடச்சுட வங்கியில் போய்விடுகின்றதல்லவா?   

மேலும் பல விதமான வரிகள் இருப்பதால் மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு கிடைக்கும்? எதற்கு எவ்வளவு வரி என்று மக்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கின்றதா? அதைவிடக் கொடுமை என்னவென்றால் நேற்றைக்கு ஒரு வரி இருந்திருக்கும். இன்றைக்கு அது மாறி இருக்கும். அது கூடவோ, குறையவோ இருக்கலாம். அவைகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? சிலர் சந்தடி சாக்கில் வரிகள் இல்லாதவற்றிற்கும் வரியை நுழைத்து விடுகிறார்கள். உதாரணமாக சமீபத்தில் கேளிக்கை வரிஇல்லாத திரைப்படத்திற்கும் மக்கள் கேளிக்கை வரி செலுத்தியதாக சில ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளது. அதே போல் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. அப்படியென்றால் மக்களிடம் பெற்ற அந்த அதிகமான பணத்தை எந்த கணக்கில் காட்டுவார்கள்? அந்த மாதிரியாகத் தான் கறுப்புப் பணமும், வரி ஏய்ப்பும் உருவாகின்றதுஆனால் சம பங்கு முறை இருந்தால் எவ்வளவு பணம் கொடுக்கின்றனரோ அதற்குத் தகுந்தாற் போல் வரியும் பிரியும். அதனால் அனைவருகும் நன்மை கிடைக்கும் அல்லவா?         

ஏற்கனவே எல்லாவிதமானக் கணக்கும் ஆன்-லைன் மூலம் நடக்கின்றபடியால் இதைச் செயல்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது, தாமதமும் ஏற்படாது. இதனால் வரி ஏய்ப்பும், கறுப்புப் பணமும், கள்ளக் கணக்கும் தடுக்கலாம். இதனால் அரசின் வரி வசூல் இலக்கை எளிதாக எட்டலாம். நாளடைவில் வரி விகிதம் குறையலாம். விலைவாசியும் குறையலாம். இந்த வெளிப்படையும், நம்பகத் தன்மையும் இருக்கின்ற காரணத்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் இந்தியாவில் வியாபாரத்தைத் தொடங்க முன் வருவார்கள். இதனால் தொழில் பெருகும், வேலை வாய்ப்பு அதிகமாகும், மக்களின் வாழ்க்கை சிறக்கும், விரைவில் உலகமே வியக்கும் வண்ணம் நம்நாடு வல்லரசாக விளங்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.     

முடிவல்ல, கடைசியாக!  
இந்த முறையால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அது தவிர மக்களே வரியை நேரடியாக வரியைச் செலுத்துவதால் வரியைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவதோடு, அவர்களை முறையாக வழிகாட்டுவதாகவும் அமையும். மக்கள் நலனில் உண்மையாக அக்கறை இருந்தால் இத்தகைய வரி வசூல் முறையை இனிவரும் காலத்திலாவது அமுல்படுத்தினால் நாடும், வீடும் வளம் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பொறுத்து இருந்து என்ன நடக்கின்றது? என்பதை கவனிப்போம். இதைப் பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

**************************************************

Wednesday, 10 August 2016

From VIP to V V I P - வேலை வேண்டுமா? இதைப் படி!


 V            V                  I           P
வேலை வேண்டுமா? இதைப் படி!
(From VIP to VVIP)
வேலை தேடும் இளைஞர்களுக்காக சில வழிகாட்டுதல்கள்
ஆசிரியரின் பருந்துப் பார்வை
படைப்பு : மதுரை கங்காதரன்
தங்களுடைய பாட புத்தகங்களையே ஒழுங்காக வாசிக்க விரும்பாத இளைஞர்களைப் பிடித்து உட்கார வைத்து, இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்வது அவ்வளவு நியாயமாக எனக்குப் படவில்லை. ஆகையால், யார் ஒருவர் நன்கு கல்வி கற்று, பின்பு வேலைக்குச் சென்று சம்பாதித்துவாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் இந்தப் புத்தகத்தைப் படிப்பது நல்லது. பொழுதுபோக்கிற்காக அல்லது கௌரவத்திற்காக வேலைக்கு செல்ல நினைப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பும் நிலையில் இருப்பவர்கள், ஒரு குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்கள், ‘வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் ஆகியோர் இந்த புத்தகத்தைப் படிப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.


அதாவது இந்த படித்தகத்தைப் படித்து 'பூஜ்ஜியம்' பெறுதைவிட, படிக்காமல் 'பூஜ்ஜியம்' வாங்குவதே மேல் என்று நான் கருதுகிறேன். ஆகையால் அவர்கள் இந்த புத்தகம் படிக்கும் நேரத்தில் 'மொபைலில் கேம்' விளையாடப் போகலாம், ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் நண்பர்களிடம் அரட்டை அடிக்கலாம் அல்லது திரைப்படத்திற்குச் செல்லலாம். அவர்களுக்கு அன்றையப் பொழுது அட்டகாசமாய்ப் போய்விடும். அது உறுதி. ஆனால் இதை நினைத்துப் பின்னாளில் வருத்தப்படாமல், புலம்பாமல் என்ன கஷ்டம் வந்தாலும் அதை அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும். ஒருவேளை இந்த புத்தகம் உங்கள் கையில் கிடைத்தால், அதை யாருக்கு உபயோகப்படுமோ அவர்களுக்குக் கொடுத்தாலே மிகப் பெரிய உதவியாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவராக வர நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களே இந்த புத்தகத்தைப் படிப்பதற்குப் பொருத்தமானர்கள் ஆவார்கள்.

ஆங்கிலத்தில் VVIP என்றால் Very Very Important Person அதாவதுமிகமிக முக்கியமான மனிதன்என்று அர்த்தம். ஆமாம். ‘இளைஞர்கள் தான் ஒரு குடும்பத்திற்கும், நாட்டிற்கும் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி அவர்களை 'விலை மதிக்க முடியாத சொத்து' என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த வயதிலிருந்து தான் அவர்களுடைய அறிவும் ஆற்றலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட ஆரம்பிக்கின்றது. இன்றைக்குப் பார்க்கும் வளர்ச்சிகள், பலர் இளைஞராக இருந்த போது விதைத்த விதைகளே. இளைஞர்களைச் சிறந்த முறையில் வழிகாட்டினால், அவர்களுக்குள் இருக்கும் திறமை கட்டாயம் வெளிப்படும். அது வீட்டிற்கும், நாட்டிற்கும் பல நன்மைகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு தாயின் கருவறையிலிருந்து பத்து மாத குழந்தை பிறந்து வெளி உலகத்திற்கு அறிமுகமாவதைப் போலபள்ளி, கல்லூரிக் கூட்டிலிருந்து இந்த வெளி உலகத்திற்கு முதலில் அறிமுகப்படுத்துவது இந்த 'வேலை' ஒன்றே. அந்த வேலைக்கான வழிகாட்டுதல் தான் இந்த புத்தகம். VIP  VVIP ஆக மாற்றுவது இந்த வேலைக்குத் தான் அதிக சக்தி உள்ளது என்பதை இப்போது பெரிய பெரிய பதவியில் இருக்கும் பலரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகம் எழுதுவதற்குக் காரணம், தினம் தினம் பல ஆண்களும், பெண்களும் வேலைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? என்பதை பார்க்கும் போது என் மனம் வருந்தியது. ஏன் இந்த நிலைமை? என்று ஆராயும் போது, இளைஞர்களுக்கு யாருமே வேலை கிடைப்பதற்கான வழிகாட்டுதல்கள் சொல்லுவதில்லை என்பதை அறிந்தேன். அதற்கான புத்தகம், அதுவும் தமிழ்மொழியில் மிக அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு இருந்தாலும் இன்றைய இளைஞர்களுக்குப் புரியும்படி எளிதாக விளக்கப்படாததை உணர்ந்தேன். ஏன்? அவர்களுக்காக வேலைக்கான வழிகாட்டுதல்களை புத்தக வடிவில் தரக்கூடாது என் மனதில் பட்டதன் பிரதிபலிப்பு தான் இந்த புத்தகம்.  

இருபதிலிருந்து அறுபது வரை, சிலருக்கு அதற்கு மேலும் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு இருப்பது 'வேலை' ஒன்றே. இந்த வேலை தான் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்குகின்றது என்பது மெய்யான கூற்று. நாலு பேருக்கு நடுவில் கௌரவமாய் நடமாட உதவுவது இந்த வேலையே. முன்பு வீட்டிற்கு ஒருவர் வேலை பார்த்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது வீட்டிற்கு இருவர் வேலைக்குப் போனால் தான் குடும்பத்தை சமாளிக்கலாம் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. வேலை இல்லாதவனுக்கு மக்கள் வைத்திருக்கும் பெயர் வெட்டி ஆபிஸர்அல்லது தண்டச்சோறு’. ஒருவன் படித்து முடித்தவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி, "தம்பி, எங்கே வேலை பார்க்கிறான்?" என்பது தான். ஒரு இளைஞர் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் அவர் குடும்பத்திற்குப் பாரமாக கருதப்படுகிறார். ‘வேலை, புருஷ லட்சணம்என்று மாறி வேலை, வாழ்க்கை லட்சணமாகஆகிவிட்டது எனலாம். படித்து முடிந்தவுடன்  ஒரு இளைஞருக்குத் தேவையாய் இருப்பது 'வேலை' ஒன்றே.                    

கல்லூரி வாழ்க்கை முடித்த பிறகு, இளைஞர்கள் வேலை தேடும் போது, அவர்களின் கண்களை கட்டிக் காட்டில் விட்டது என்பது போலத் தான் உணர்கிறார்கள். எங்கு யாரிடத்தில் எப்படி வேலை கேட்பது? என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. கல்லூரியில் அதற்கான யோசனையோ, வழிகாட்டுதலோ அவ்வளவாகக் கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரியில் இடம் கிடைப்பது போலல்ல இந்த வேலை சமாச்சாரம்! ஏனென்றால் அதில் சேருவதற்கு மதிப்பெண், இட ஒதுக்கீடு, நன்கொடை, சிபாரிசு போன்றவைகள் உதவலாம்ஆனால் வேலையில் சேருவதற்கு முழுக்க முழுக்க அவரவர்களின் முயற்சியும், தன்னம்பிக்கையும் தேவைபடுகிறது. அவர்களுக்குச் சரியான நேரத்தில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் போனால் காலவிரயமும் (Time Waste), பணவிரயமும் (Money waste) ஏற்படும். சிலர் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, கிடைத்த நல்லவேலையை விட்டுவிட்டு கிடைக்காத வேலைக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசு வேலையை நம்பி, சுடச்சுடக் கிடைக்கும் தனியார் வேலையை உதரித் தள்ளுவது சரிதானா? இந்த நிலைமைக்குக் காரணம் அவர்களின் அறியாமையும், எவரும் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்காததே.

'வேலை' என்பது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான முதல் படி. அவர்கள் ஆண்களாக இருக்கலாம் அல்லது பெண்களாகவும் இருக்கலாம். இந்த பரபரப்பான உலகில் அவர்களுக்கு யார் நிதானமாக வழிகாட்டுவார்கள்? மேலும் சுயநலம் பெருகிவிட்ட இந்த காலத்தில் யார் அவர்களுக்கு அக்கறையுடன் பொறுமையாக யோசனை சொல்லுவார்கள்? 'பணம் கொடுத்தால் தான் எதுவும் நடக்கும்' என்று இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு இலவசமான ஆலோசனை வழங்குவது யார்? என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இந்த 'கை(யே)டு' (Hand book or Guide) தான்.

இந்த 'கையேடு' தயாரிக்க எனது முப்பது வருடத்திற்கும் மேலான பல்வேறுத் தொழில்துறையில் ஏற்பட்ட அனுபவமும், மனித வளம் நிர்வாகிப்பதில் ஏற்பட்ட அனுபவமும் சேர்ந்து உதவியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மாறி வரும் உலகில் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை  அனுசரித்து நடந்துகொள்வதில் தான் திறமையும், வெற்றியும் இருக்கின்றது.

'வேலை' என்று வரும் போது இப்புத்தகத்தில் அதன் மூன்று நிலைகளை விளக்கியுள்ளது.
1. வேலை கிடைப்பதற்கு உண்டான வழிகளும், அதற்குத் தயாராகும் முறைகளும்
2. புது வேலை கிடைத்தவுடன் நடந்து கொள்ளும் விதம்
3. கையில் பணம் கிடைத்தவுடன் உதிக்கின்ற எண்ணங்களும், பாதுகாக்கும் வழிகளும் 

இப்புத்தகத்தில் இந்த காலத்தில் வேலை கொடுப்பவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? அவர்கள் இளைஞர்களிடத்தில் அல்லது வேலை வேண்டுபவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்? என்பதைத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதே போல் வேலை தேடுபவர்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் எத்தகைய அணுகுமுறை? மேற்கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

வேலை இல்லாதவர்கள் வீடு எங்கேயும் பார்க்க முடியாது. வேலை எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கட்டாயம் தேவைபடுகிறது. ஆகவே இப்புத்தகம் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இதை முழுமையாகப் படித்து முடித்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும், வேலை வாய்ப்பு கொடுப்பவர்களுக்கும்  ஒருவித நிம்மதியையும், மனநிறைவையும் தரும். எக்காலத்திலும் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
படியுங்கள், பயன் படுத்துங்கள், பலன் பெறுங்கள்!

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
Smart Work Consultants
No. 15, First floor, North veli street,
Near Sethupathi school signal, Madurai – 625001.
Mobile: 7373993339, 8489498080; e.mai: look4jobss@gmail.com

குறிப்பு: இந்த புத்தகம் மட்டுமல்ல, எங்களிடம் பதிவு செய்து கொள்ளும் ஆண்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பினை விரைவாகப் பெற்றுத் தருகிறோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை நேரடியாக அல்லது கைபேசி மூலமாக தொடர்ப்பு கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். கல்லூரி மற்றும் நிறுவனங்கள் மொத்தமாக புத்தகம் வாங்கும்பட்சத்தில் சலுகை விலையில் கிடைக்கும்.    
****************************


பொருளடக்கம்

ஆசிரியரின் பருந்துப் பார்வை                                                                                          .
முதல் நிலை
'வேல்' போல் வேலை வேண்டுமா?                                                                            .
'வேலை' எதற்கு வேண்டும்?                                                                                                          .
வேலைக்கு முன் தெரிய வேண்டியவைகள்                                                                        .
வேலைக்கு கை கொடுக்கும் ஒழுக்கம்                                                                                   .
வேலையின் போது சமர்பிக்க வேண்டியவைகள்                                                 .
வேலை கிடைக்கும் வழிகள்                                                                                                         .
வேலை தரும் இடங்களும் அதன் தேர்வுகளும்                                                   .
பகுதிநேர வேலைகள்                                                                                                             .

இரண்டாம் நிலை
வேலையில் சேர்ந்த பிறகு நடப்பவைகள்                                                                .
நேர்மை தரும் உயர்வு                                                                                                                     .
உயர்வதற்கான வழிகள்                                                                                                        . .
மூன்றாம் நிலை
வேலை கிடைத்தவர்கள் பண விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டியவைகள்
எட்டிப் பார்க்கும் பணக்காரத்தனம்                                                                                              ..
வேலைக்கு முழுக்கு போடும் வயது!                                                                         ..
சேமிக்காத வாழ்க்கை                                                                                                                        ..
புது உறவுகளும், பழக்கங்களும்                                                                                       ..
வேலை பற்றி இன்றைய இளைஞர்களின் மனோபாவம்                                             ..
உங்களுக்குள் பல திறமைகள்                                                                                          ..
மாற்றங்களை எதிர்கொள்ளும் கல்வி மற்றும் தொழில்                                              ..
கைகொடுக்கும் கணினிக் கல்வி                                                                                     ..
இணையதளமே அனைத்திற்கும் அடித்தளம்                                                                        ..
கடைசியாக ஆனால் முடிவு இல்லை!                                                                         ..