Pages

Thursday 10 October 2013

மகனிடம் கற்க வேண்டிய பாடம் - சிறுகதை - மதுரை கங்காதரன்

மகனிடம் கற்க வேண்டிய பாடம் 


சிறுகதை 

மதுரை கங்காதரன் 

புதிதாக வாங்கியிருக்கும் 'மொபைலை ' பத்திரமாகப் பிரித்தான் சுந்தர்.

"என்னங்க ! ஏது இந்த புது மொபைல் ! எவ்வளவு ஆச்சு' என்று சுந்தரின் மனைவி ராதிகா ஆச்சரியாமாக பார்த்தாள். 

"சும்மா பத்தாயிரம் தான்"

"என்ன பத்தாயிரமா? அப்படியென்ன இதிலே இருக்கு?"



"என்னவா! இது எல்லாமே டச் ஸ்கிரீன் தான்.இதோ, இந்த மொபைல் புத்தகத்திலே இதை எப்படி இயக்குறதுன்னு தெளிவா போட்டிருக்காங்க. நான் படிச்சு அதுபடி செஞ்சு பார்த்து உனக்குச் சொல்லித் தருகிறேன். ம்.. இதுக்கே பாதி நாள் ஆயிடும் போலயிருக்கு. முக்கியமா இதுக்குள்ளே போறதுக்கு 'பாஸ் வேர்டு' இருக்கு. அதைப் பத்தி விவரமா படிச்சு முடிச்ச பிறகு சொல்றேன்" என்றான் சுந்தர்.

"சரி சரி ..நீங்க படிங்க.. எனக்கு சமையலறையிலே வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் ராதிகா.

சுமார் ஒரு மணி நேரம் ஆயிருக்கும்.


"என்னங்க , இன்னுமா படிச்சு முடியல்லே! இங்கே கொடுங்க அந்த புத்தகத்தை!" என்று கேட்டு வாங்கி ஒரு பக்கத்தைப் படித்துப் பார்த்தாள்.

"என்னங்க ஒன்னும் புரியல்லை. ம்.. நீங்க எப்போ படிச்சு முடிக்கிறது.எப்போ உபயோகிக்க போறோமோ?" என்று மீண்டும் சமையலறைக்கு ஓடினாள்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். சுந்தரின் பழைய மொபைலில் ஒரு அழைப்பு மணி வந்தது.


யார் பேசுகிறார்கள் என்று பார்த்துவிட்டு " சொல்லு ராஜா ..நான் சுந்தர் பேசுறேன். அங்கே அப்பா அம்மா எல்லோரும் சௌக்கியமா? நீ இப்போ எங்கேயிருந்து பேசுறே?" என்று பேசிக்கொண்டே ராதிகாவிடம் அந்த மொபைலை கொடுத்தான். நம்ம ராஜா பேசுறான்" என்று கொடுக்க ,"யாரு நம்ம ராஜாவா" என்று சமையலை மறந்து அரை மணி நேரம் பேசிவிட்டு அவசரம் அவசரமாக சமையலை கவனிக்கும் வேலையில் அந்த மொபைலை எங்கேயோ வைத்துவிட்டாள் ராதிகா.

சுந்தர் மும்முரமாக அந்த புத்தகத்தை ஒவ்வொன்றாக படித்து அதன்படி செய்யும் வேலையில் மூழ்கியிருந்தான்.

இந்த நேரத்தில் மூன்றாவது படிக்கும் அவனது பையன் தன் அப்பாவின் கையில் புது மொபைலை பார்த்தவுடன் " டாடி. இது நீங்க வாங்கின புது மொபைலா?'


"ஆமாண்டா செல்லம். இன்னைக்குத் தான் வாங்கினேன்"

"சரி நான் ஹோம் வொர்க் முடிச்சுட்டு வந்து பார்க்கிறேன்' என்று சந்தோசமாக ரீடிங் அறைக்குள் சென்றான்.

சற்று நேரம் சென்றிருக்கும். சுந்தருக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தவனாக "ராது குட்டி" என்று கொஞ்சலாக அழைத்தவாறு "என்னோட பழைய மொபைல் கொஞ்சம் கொடு. முக்கியமா ஒரு கால் பண்ணனும்" என்று கேட்டபிறகு தான் ராதிகா தான் அவசரமாக எங்கோ வைத்த மொபைலைத் தேடினாள்.

"என்னங்க. இங்கே தான் வச்சேன். கொஞ்சம் தேடுங்க. இல்லாட்டி மறதியா ஹால்லே வச்சுட்டேன்னா கூட தெரியல்லே.அங்கேயும் கொஞ்சம் தேடிப்பாருங்க" என்று சொல்ல சுந்தர் பொறுமையாக தேடினான். இதிலிருந்து இந்த மாதிரி நடப்பது அவனுக்கு புதிதல்லவென்று தெரிகின்றது.

எல்லா இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. பரபரப்பாக சுந்தர் ஏதோ தேடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மகன் "என்னப்பா .. என்ன தேடுறீங்க?" என்று அவனும் சற்று பதற்றத்துடன் கேட்டான்.

"ஒண்ணுமில்லேடா செல்லம்.! என்னோட பழைய மொபைலை அம்மா எங்கேயோ வச்சுட்டாங்க. அதை தான் தேடுறேன்" என்றான் சுந்தர்.


" அப்பா. இதுக்குப் போய் இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே. உங்களோட புது மொபைலைக் கொடுங்க. இதுக்காக நேத்து நீங்க வாங்கின 'சிம்' கொடுங்க" என்று கேட்டான்.

அவன் இரண்டையும் தன் மகனிடம் கொடுத்தான். 

அந்த புது மொபைலின் கவரைக் கழட்டி , பேட்டரியை எடுத்து அதற்கு கீழே அந்த புது சிம்மை சொருகி மீண்டும் பழையபடி அனைத்தும் பொருத்தி மொபைல் திரையை இரண்டு மூன்று தடவை தேய்த்து 

"டாடி உங்க நம்பர் இது தானே என்று கண் இமைக்கும் நேரத்தில் அனைத்து எங்களையும் அழுத்தி கால் செய்தான். இந்த குட்டி பையன் செய்வதை கண் இமைக்காமல் அவர்கள் இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்.   


சமையலறையிலிருந்து மொபைலின் சப்தம் கேட்டது. இருவரும் அங்கு ஓடி சரியாக அந்த மொபைலை எடுத்தனர். அந்த சந்தோசத்துடன் "என் செல்லம்! எப்படி? எங்கே  இதெல்லாம் கத்துகிட்டே? யார் உனக்கு சொல்லித் தந்தா? இந்த புத்தகத்தை எப்போ படிச்சே? என்று அடுக்கு அடுக்காய் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் பதிலளித்தான்.


"அப்பா..அம்மா.. என்னோட பிரன்ஸ் செய்யறதை பார்த்தேன். என்னோட கை தானாக செய்யுது" என்று விளக்கம் கூற 

"என்னங்க , இனிமே இந்த புத்தகத்தை படிச்சு டயத்தை வேஸ்ட் பண்ணாமே உங்க பையன் கிட்டே இதை பத்தி நல்ல கேட்டுத் தெரிஞ்சுக்குங்க."


"அமாம். நீ சொல்றது சரிதான்.எதையும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறதை  விட செய்யறதை பார்த்து தெரிஞ்சுக்கிறது ரொம்ப ஈஸியா இருக்கு. இந்த காலத்து குழந்தைங்க சும்மா சொல்லக்கூடாது கம்ப்யூட்டர் , மொபைல் ஹான்டில் பன்றதிலே நல்லாவே செய்யுறாங்க" என்று அவனை மெச்சிவிட்டு தான் படித்துக்கொண்டிருந்த மொபைல் புத்தகத்தை ஓரத்தில் வைத்துவிட்டு தன் மகனிடம் மொபைல் ஆப்பரேட் செய்யும் நுணுக்கத்தை படிக்க ஆரம்பித்தான் சுந்தர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  

No comments:

Post a Comment