16.2.14 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம், மதுரை.
ஆய்வரங்கம் - கவியரங்கம் நிகழ்ச்சியில் நடைபெற்ற
'நினைவுப் பரிசு' பெற்ற கவிதை
இடம் : நாடார் மகாசன சங்க மேன்சன் ,
மேல்மாடி அரங்கம் , மதுரை.
தமிழை நினைக்காதவன் தமிழனா ?
புதுக்கவிதை
கணினி செய்யும் புரட்சியில் இதுவும் ஒன்று!அது விடும் சவாலும் கூட!
'பேசும் மொழி எதுவானாலும் பிசகாமல் எழுதுவேன்' என்று!
பல மொழி மக்கள் மொய்த்தனர் அந்த அதிசயத்தைப் பார்க்க
சிலர் வந்தனர் கணினிக்கு எழுதும் பரீட்சை கொடுக்க
இனிமையாக பேசினார் ஒரு ஜப்பானியர் 'ஜபனீஸ்' மொழியில்
ஆச்சரியம் ! பிழையில்லாமல் எழுதி அசத்தியது கணினி !
பெருமை மிக்க 'ஜப்பானியர்' என நற்ச்சான்றிதழ் கொடுத்தது கணினி
கம்பீரமாக பேசினார் ஒரு ஆங்கிலேயர் 'ஆங்கில' மொழியில்
கணினி ! எழுத எழுத கூட்டம் கரவொலி எழுப்பி புகழ்ந்தது
நீங்கள் சிறப்புமிக்க 'ஆங்கிலேயர்' என பறைசாற்றியது கணினி.
நிதானமாக தெளிவாகப் பேசினார் ஒரு தமிழர் 'தமிழ்' மொழியில்
அவர் பேச பேச கணினி எழுதத் திணறியது !
தமிழ் மொழியில் இல்லாத வார்த்தைகளைப் பேசியதால்
கணினி சகிக்காமல் கேட்டது
மனிதரே ! நீர் பேசுவது தமிழா ? ஆங்கிலமா ? இல்லை நீர் தமிழர் தானா ?
மீண்டும் தமிழை நன்கு கற்று வா ! என திருப்பி அனுப்பியது அவரை !
தமிழர் தலைகுனிந்து நின்றார்! தன்னிலை உணர்ந்தார்!
தமிழை நினைக்காமல் இருந்ததை வருந்தி உணர்ந்தார் !
இதுவரை ஆங்கிலம் கலந்து பேசியதை நினைத்து வெட்கிப் போனார்
சபதம் எடுத்தார் ! சரியான தமிழில் பேச முடிவு செய்தார்
பேசினார் ! கணினியின் முன் நின்றார் ! சவாலுக்குத் தயாரானார் !
அவர் பேசிய சுந்தரத் தமிழில் கணினி மயங்கியது ! முதன்முறையாக
சரியாக எழுதியதுடன் 'தமிழால் எனக்குப் பெருமை ' என்றது கணினி !
தமிழரே உன் புகழ் எம் கணினியால் உலகம் முழுதும் பரவும்!
தமிழா ! இன்று வெண்திரையில் சின்னத் திரையில் பார்கின்றாயே
பலவகையான புத்தகங்களை படிகின்றாயே ! ரசிக்கின்றாயே !
அவைகள் யாரால் எப்படி விளைந்தது ?
முன்னோர்கள் விதைத்து வைத்த விதை
இன்று நிழல் கொடுக்கும் மரமாய் விரிந்து
செழுமையாய் இருக்கின்றது
அவர்கள் தமிழை நினைக்காமல் , தமிழை வளர்க்காமல்
தமிழை பேசாமல் இருந்திருந்தால் உன் கதி என்னவாயிருக்கும் ?
தாய் மொழிக்கு பிள்ளையாய் இல்லாமல்
நீ பிற மொழிக்கு எடுப்பார் கைப்பிள்ளையாய்
அல்லவா இருந்திருப்பாய்
தமிழர்களே ! தமிழை தினமும் நினையுங்கள் ! தமிழில் பேசுங்கள் !
தமிழைக் காத்திடுங்கள் ! தமிழனாக நிமிர்ந்து நில்லுங்கள் !
படைப்பு: கு.கி.கங்காதரன், மதுரை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment