Pages

Saturday 12 July 2014

குடும்ப ரகசியம் - FAMILY SECRET - SHORT STORY - சிறுகதை

குடும்ப ரகசியம் 
சிறுகதை 
மதுரை கங்காதரன் 
 

"என்ன மரகதம், கம்ப்யூட்டர்லே ரொம்ப வேலையா இருக்கிறது போலத் தெரியுது. அப்படி என்னதான் பார்க்கிறே?" அவள் கணவர் முத்தரசன் கனிவாய்க் கேட்டார்.

"என்னங்க, அப்படி கேட்டீங்க. நம்ம குழந்தைங்களோட பள்ளிக்கட்டணம், தேர்வு மதிப்பெண்கள், அவங்களோட வருகை பதிவேடு, அவர்களுடைய செயல்திறன்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆகியவைகள் இதுலே தாங்க பார்க்கணும். அதில்லாம அவங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்றாங்களா? அதுவும் வலைத்தளத்திலே தான் பார்க்க முடியுது" என்று ஒரு குடும்பத்தலைவிக்குரிய பொறுப்புடன் பதிலளித்தாள்.  

"உனக்கு இந்த அளவுக்கு கம்ப்யூட்டர் அறிவு இருக்கிறதை நெனச்சா எனக்குப்  பெருமையா இருக்குது. அதோடு இ.லாக்கர் வலைத்தளத்திலே மிக முக்கியமான நம்ம வீட்டு விசயங்கள் இருக்கு அதையும் பார்க்கக் கூடாதா?" என்று கெஞ்சினார்.


"போதுங்க உங்க சுய புராணம்! எனக்கு நம்ம குழந்தைங்களோடதை பார்க்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு. அதெல்லாம் பார்த்துக்கிறத்துக்கு நீங்க இருக்கீங்கல்லே" என்று ஒவ்வொருமுறை அவர் கம்ப்யூட்டரில் தங்கள் குடும்ப சமாச்சாரம் இருக்கின்றது என்று சொல்லும் போதெல்லாம்  இப்படி தட்டிக் கழித்துவிடுவாள்.   

என்னதான் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்போடு இருந்தாலும் அவர்களுக்கிடையில் 'பணவிசயம்' என்று ஒன்று வரும் போது எவ்வளவு இடைவெளி உண்டாகிறது. எவ்வளவு மனக்கசப்பு, ஒருவித புரிதல் இல்லாத தன்மை? எல்லோர் குடும்பத்திலும்  இப்படி இருக்கும்போது இந்த குடும்பத்திலும் இல்லாமல் போகுமா என்ன ? ஒருநாள் ..        

"மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்ன்னு பேரு தான்.  வாங்குகிற சம்பளமெல்லாம் என்னாங்க பண்றீங்க. நீங்களும் செலவு செய்யுறாப்பிலே தெரியல்லே. நம்ம குடும்பத்துக்கு தேவையான செலவு தான் செய்யுறீங்க. ஒருமாசம் உங்களுக்கு, எனக்கு, நம்ம ரெண்டு குழந்தைங்களுக்கு பள்ளிச் செலவு, வீட்டு வாடகை, மளிகை சாமான்ன்னு ரொம்ப போனா இருபதாயிரம் தாண்டாது. மிச்ச பணம் என்னங்க பண்றீங்க? வட்டி தொழில் பண்றீங்களா? அல்லது பெரிய சொத்து எதாச்சும் வாங்கப் போறீங்களா?" என்று அடுக்கடுக்காய் கேட்கும் கேள்விக்கு எப்போதும் ஒரு சிரிப்பு தான் பதிலாய் கிடைக்கும். அந்த சிரிப்பில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்  உள்ளது என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும். 

அதாவது 'உங்களுக்கு நான் இருக்கிறேன். உங்களுக்காகத் தான் நான் இதெல்லாம்  பண்றேன். என்னை நம்பு. உங்களை எப்போதும் கைவிடமாட்டேன். உங்களை கண்கலங்கவிடாமல் காலமெல்லாம் சந்தோசமாக வைத்திருப்பேன்' போன்றவைகள் தான் அதன் அர்த்தம்.


வீட்டு வாடகை உட்பட எந்த வகை வீட்டுச் செலவு செய்வதிலும், குழந்தைகளுக்கு கல்விச் செலவு செய்வதிலும் எப்போதுமே தள்ளிப் போட்டது கிடையாது. அந்தந்த நேரத்தில் அந்தந்த செலவு தவறாமல் திட்டமிட்டபடி செய்துவிடுவதால் தன் குடும்பத்தில் இதுநாள் வரை எந்த ஒரு பிரச்னையும் வந்தது கிடையாது.

'முத்துன்னா முத்து தான். பெயருக்கேத்த செயலும் முத்தாத் தான் இருக்கு. உங்களைப் போல எல்லாரும் இருந்துட்டா என்னைப்போல வீட்டுச் சொந்தக்காரங்களுக்கு ஏது பிரச்னை. சிலர் வீடு வாடகை சரியான நேரத்திலே கொடுக்காம என்னமாய் இழுத்தடிக்கிறாங்க? அட 'எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. அதுவும் இந்த மாதிரி வீட்டு வாடகை நம்பித் தான் இருக்குன்னு' மத்த ரெண்டு குடித்தனக்காரங்க எப்பத்தான் நினைக்கப் போறாங்களோ?' என்று ஒவ்வொரு மாதமும் வாடகை வாங்க வரும் போது மனம் நொந்து புலம்பும் வசனம் கிட்டத்தட்ட அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் அத்துப்படி. 


இவர் இப்படியென்றால் மளிகைக்காரர் ஒருபடி மேலே 'உங்க வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எதுவேண்டுமானாலும் வாங்கிக்குங்க. பணம் என்னங்க பணம். அதுகிடக்கட்டும். உங்ககிட்டே இருந்தா அது வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலே அதாவது பேங்க் லாக்கர்லே இருக்கிறது போல. நீங்க கூட வராதிங்க. நானே பையனை விட்டு போடச் சொல்றேன்' என்று முத்தரசனை புகழ்ந்து தள்ளிவிடுவார்.

என்னதான் ஒருவர் நல்லவராக, நாணயமாக, நேர்மை தவறாதவராக இருந்தாலும் இந்த சமுதாயம் நல்ல பட்டமா கொடுக்கப் போகுது?  அந்த தெருவில் உள்ளவர்களோ 'இதுக்கெல்லாம் காரணம் ! தான் அதிகமா சம்பாதிக்கிறதா பணத்திமிர். இந்த அலட்டல் எங்கே கொண்டு போய் முடியும் என்கிறதைப் பார்க்கத் தானே போறோம்' என்று பொறாமையால் மனதில் கருவும் மனிதர்கள் இருக்கத் தானே செய்வார்கள்.

உண்மையில் முத்தரசனுக்கு வறட்டு கௌரவம் துளி கூட இருந்தது கிடையாது. நியாமாய் நடப்பது அவருடைய குணம். அதேபோல் 'இல்லை' என்பவர்களுக்கு இருப்பதை கொடுக்கும் மனம் உண்டு. அவ்வாறு சிலர் உதவி பெற்று தங்களுடைய வாழ்க்கையில் வளமான திருப்புமுனைக்குக் காரணமாக அவர் இருந்துள்ளார். 

இத்தனை நல்ல குணங்கள் இருந்தும் சில மனிதருக்கு ஒரு சில பலவீனம் இருக்கத் தானே செய்கிறது. அவருக்கும் ஒரு பலவீனம். அதாவது தான் செய்யும் காரியங்கள் வெளிப்படையாக எவரிடத்திலும் பேசியது கிடையாது. அதற்கு தனது மனைவியும் விதிவிலக்கில்லாமல் இருந்தது. அவரது மனைவிக்கும் மனதில் அவ்வப்போது பயம் எழும். ஒவ்வொரு மாதம் மிச்சமாகும் பணத்தை வேறு யாருக்காவது... சே..சே.. அப்படியிருக்காது. அல்லது தவறான வழியில் ..சீ ..சீ .. அதுவும் இருக்கிறதுக்கு வாய்ப்பில்லை. கடைசியில் 'எனக்கேன் இந்த வேண்டாத எண்ணம். இதுவரைக்கும் ஒரு குறையும் வைக்காமல் எந்த பிரச்னையும் இல்லாமல் வண்டி போகுது. பிறகு ஏன் எதைப் பத்தியும் கவலை படனும்?' என்று சமாதானம் அடைந்துவிடுவாள்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதிரியான சோதனை. ஆம். அந்த குடும்பத்திற்கும் எமன் வடிவில் வந்தது. எதிர்பாராத அந்தக் குடும்பத் தலைவர் முத்தரசனின் வாகன விபத்து மரணத்தில் முடிந்தது. அதுவே அந்த குடும்பத்து விதியை தலைகீழாகப் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்த்தது. பொதுவாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்துவிடாலோ அல்லது நினைவிழந்து விட்டாலோ எப்படியெல்லாம் துன்பம் வரும் என்று அதை அனுபவிப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதுவும் இரு குழந்தை வைத்து அவர்களது வாழ்க்கை வண்டி எவ்வாறு ஓடும்? என்று சற்று நினைத்துப் பார்த்தால் நமக்கே ஒரு கணம் இருள் சூழும். 


"இன்னும் எத்தனை நாளம்மா பொறுக்கிறது. மாசம் ஆறாச்சி. இனிமேல் என்னாலே பொறுக்க முடியாதம்மா. சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க. அவரு வேலை பார்த்த நிறுவனம் மூலமா கிடைச்ச பணத்தை வச்சிட்டு எத்தனை நாளைக்குத் தான் வாழ்க்கையை ஓட்டுவீங்க" என்று எப்போதும் புகழ்ந்து பேசும் வீட்டுக்காரர் பணம் வராததால் அவரும் மாறிவிட்டார். 


"ஐயா, இன்னும் ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்குங்க. எப்படியும் பூரா வாடகையும் தந்துடுறேன்" என்று எதோ ஒரு நம்பிக்கையில் கெஞ்சினார்.

"என்னமா? எப்படித் தருவீங்க? மனுசன் சொந்த பொண்டாட்டியைக் கூட நம்பாம சம்பாதிச்ச  பணத்தை என்ன தான் செஞ்சாரோ? அந்த பணத்தை யார் யார் சாப்பிடுறாங்களோ? ஏதாவது ஒரு சின்ன விவரம் தெரிஞ்சாக் கூட எதாச்சும் பண்ணலாம். இப்படி நட்டாத்துலே இந்த குடும்பத்தை தவிக்க விட்டுட்டு போய்விட்டாரே. ஓஹோன்னு எப்படி வாழ்ந்த குடும்பம் இப்படி நிர்கதியாய் போயிடுச்சே. இருந்தாலும் என்னோட பொழப்பு இதுலே தாம்மா இருக்கு. என்னை மன்னிச்சிடுங்க" என்று வீட்டுக்காரர் தன் பங்கிற்கு சொல்லிவிட்டுச் சென்றார்.

'இவங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். பணம் இருக்கிற திமிருலே என்னமாய் ஆடுனாங்க! இப்ப என்னாச்சு?' என்று பொறமைபட்டவர்களுக்கு அவல் கிடைத்தது போல் இருந்தது அவர்களது குடும்ப வாழ்க்கை. கடன் கொடுத்த அனைவரும் அக்குடும்பத்திற்கு கொடுத்த கெடு முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் தான் இந்த குடும்பம் உயிர் பிழைக்கும் என்று இருக்கும் போது அது ஒரு நண்பனின் மூலம் வந்தது.

"ஐயா ! கொஞ்சநாளைக்கு முன்னாடி முத்தரசன்னு ஒருத்தர் விபத்திலே மரணம் அடைந்தாரே அவரோட வீடு எதுங்க?" என்று ஒருவர் அந்த தெருவில் விசாரித்து வர " அதோ அந்த மூணு வீடு ஒரே மாதிரியாத்  தெரியுதில்லே. அதுலே நடு வீடு தாங்க" என்று விடை கிடைக்க அந்த வீட்டை அடைந்தார்.


வீடு சோகத்தில் மூழ்கிக் கிடந்ததை பார்த்து பதற்றப்பட்டார். 

"நீங்க...தானே முத்தரசனோட மனைவி மரகதம் .." என்று வார்த்தைகள் அவர் முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் 

"ஆமாங்க . நான்தாங்க அவரோட மனைவி!"

"நான் அவரது நெருங்கிய நண்பர். அவன் இறந்த நாள்லே நான் வெளிநாட்டிலே இருந்ததாலே உடனே வரமுடியல்லே. நேற்று தான் இந்தியாவுக்கு வந்தேன். விசயத்தை கேள்விப்பட்ட உடனே புறப்பட்டு வந்துட்டேன். முத்தரசன் தங்கமானவன். குடும்பத்து மேலே அதிக அக்கறையுள்ளவன். திடீரென்று இப்படியாயிடுச்சேன்னு எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு. நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. உங்க வீட்டுக்காரர் உங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போற அளவுக்கு எந்த தப்பும் பண்ணலை. அவர் உயிரோட இருக்கும்போது இந்த கடிதம் என்கிட்டே கொடுத்தாரு. 'எனக்கு ஏதாச்சு ஒண்ணு  ஆனா இந்த கடிதத்தை என் மனைவிகிட்டே  கொடுத்து அவங்களுக்கு வேண்டிய உதவி செய்யுங்க'ன்னு சொன்னாரு. இதுலே எல்லா விவரமும் இருக்குது " என்று அந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.


பிரித்து பார்த்த போது அதில் இ.லாக்கர் என்கிற வலைதள விலாசமும், அதன் கடவுச்சொல்லும் இருந்தது. அதைப் பார்த்தபோது சட்டென்று தன கணவர்  தன்னிடம் தங்கள் குடும்ப விசயங்கள் எல்லாம் இந்த வலைத்தளத்திலே இருக்கிறதுன்னு அடிக்கடி சொல்லுவாரே அந்த ஞாபகம் வந்தது. அப்படியென்ன அதில் இருக்கோ'  என்று அந்த நாட்களில் வராத ஆர்வம் இப்போது அவளுக்கு வந்தது.

"அப்போ நான் வர்றேங்க" என்று விடைபெற்று செல்ல நினைத்தவரை "'கொஞ்சம் நில்லுங்க" என்று தடுத்து நிறுத்தினாள்.  


"நீங்க அவருக்கு உண்மையா இருக்கீங்கன்னு இந்த கடிதம் மூலமாத் தெரியுது. அதென்னங்க இ. லாக்கர் கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா எனக்கு உதவி செய்ய முடியுமா?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.

"என்னென்ன இருக்குன்னு சொல்றேன். அதுக்கு என்னென்ன பண்ணனும்ன்னு சொல்றேன். சந்தேகம் இருந்தா அதையும் தீர்த்து வைக்கிறேன். இ.லாக்கர் என்பது வங்கியிலே இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் போல ஒண்ணு. உங்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவதற்கு கொஞ்சம் தெரியும்ன்னு நினைக்கிறேன். வலைதளத்தில் இ .லாக்கர் னு டைப் பண்ணுங்க" என்று சொன்னார்.

உடனே கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து "ம் ..டைப் ..பண்ணிட்டேன்" என்றாள். 

திரையில் இ.லாக்கர் உங்களை  வரவேற்கிறது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க உங்களது சரியான விலாசமும் , கடவுச்சொல்லும் அதில் டைப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வந்தது 

 
"அதில் அவர் கொடுத்திருக்கும் விலாசத்தையும், கடவுச்சொல்லையும் டைப் பண்ணுங்கள். என்ன வருதுன்னு பாருங்கள்" என்றார் அவரது நண்பர்.

பார்த்தாள். பார்த்தவுடன் முகத்தில் மூடிக்கிடந்த சோகத்திரை மறைந்து மகிழ்ச்சி திரையாக மாறியது.

"என்னங்க. இப்போது அவரு என்ன பண்ணியிருக்கார்ன்னு தெரிஞ்சதா? இந்த நவீன கம்ப்யூட்டர் உலகத்திலே இதுவும் ஒரு வசதி. மனுசனை நம்பாதவர்களுக்கு இந்த கம்ப்யூட்டர் தான் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாத் தெரியுது, இந்த இயந்திரமயமான உலகத்திலே எப்பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர்  நேரடியாக நிதானமாய் பேச முடியாத நிலைமை வருதோ அப்பெல்லாம் இந்த கம்ப்யூட்டர் தான் எல்லோருக்கும் துணை. இந்த சூழ்நிலையிலே இதனோட மகத்துவமும் உதவும் கண்டிப்பா தேவைப்படும் " என்று நம்பிக்கையும் ஆறுதலும் சொன்னார்.


"என்னான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க. பணவிசயம் தான் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லேயே" என்றாள் மரகதம்.

"இவ்வளவு கேட்கிறதாலே நான் என்னான்னு பார்த்து உங்களுக்கு விளக்கம் சொல்றேன். இதோ வரிசையா ஆயுள் காப்பீடு பாலிசி, வங்கி லாக்கர், நிரந்த வைப்பு , வீடு மற்றும் மனை விவரம், முக்கிய சான்றிதழ்கள்ன்னு  இருக்கா? ஒவ்வொன்றும் அழுத்திப் பார்த்தா என்னென்ன அசல் இருக்கோ அதெல்லாமே ஸ்கேன் பண்ணி அப்லோடு செய்திருக்கிறார். முதல்லே ஆயுள் காப்பீடு பார்ப்போம்" என்று அழுத்தினார். 


"இது உங்க குடும்பத்தோட ஆயுள் காப்பீடு விவரம் . அவரு பேர்லே ஐந்து லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்திருக்கிறார். அந்த பாலிசியோட படம் இது தான். இதுலே அதனுடைய பெயர், ஊர், எப்போது ஆரம்பித்த விவரம், காலாவதி ஆகும் நாள் என்றும் அதில் உங்கள் பேரை நாமினியாகவும் போட்டுயிருக்கிறார்" என்று சொல்ல ஓரளவு பயம் நீங்கி தைரியம் வந்தது அவளுக்கு.

"இது தான் வங்கி லாக்கர் விவரம்" என்று அதை அழுத்தினார். 'இதுலே வங்கி லாக்கர்லே என்னென்ன தங்க வைர நகைகள், பத்திரங்கள் இருக்கிறதோ அந்த படங்கள் தான் இவைகள். எல்லாமே எப்படியும் இருபது லட்சம் இருக்கும் " என்று அனைத்தையும் படங்கள் மூலமாகப் பார்த்து பரவசம் அடைந்தாலும் அவர் இல்லாதது ஒரு குறையாக அவளுக்கு இருந்தது. 


"வங்கி லாக்கர் சாவி எங்கிருக்கின்றது என்கிற இடத்தின் பகுதியை படம் பிடித்து வைத்திருகிறார். பாருங்க. இதோ ஒரு கருப்புகலர் பெட்டியிலே இருக்கு. எப்படி திறப்பது என்றும் படம் பிடித்து வைத்திருக்கிறார் பாருங்க " அதன் வீடியோ படம் ஓடியது.

"பிறகு இது பாருங்க. இது உங்க பேர்லே, உங்க குழந்தைங்க பேர்லே உள்ள நிரந்தர வைப்பு பணம். குத்துமதிப்பா ஒரு அஞ்சு லட்சம் இருக்கும்.  இது உங்க மூணு பேர்லே உள்ள அஞ்சல் அலுவலக வைப்பு பணம். இதுலேயும் ஒரு அஞ்சு லட்சம் இருக்கும்" என்று அடுத்ததிற்கு தாவினார். 

"இது வீட்டு பிளாட் வீடியோ படம். பிளாட் எங்கிருக்கிறதை காட்டும் படம். அதன் பத்திரத்தின் படம் இது" விலாவாரியாக எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிமுடித்தார். 

இப்போது தன் கணவரை நினைத்து பெருமைபட்டாலும் இந்த விசயங்களை அவர் சொல்லும் போதெல்லாம் அலட்சியாமாக தான் இருந்ததை எண்ணி வெட்கப்பட்டாள். எதோ அவருடைய நண்பர் நல்லவராக இருப்பதால் சரியாப் போச்சி. இல்லையென்றால் .. அதை நினைச்சாலே .அப்பப்பா வாழ்க்கையே இருட்டாயிருக்கும்'  என்று பல சிந்தனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவரே தொடர்ந்து "இவையெல்லாம் கிடைக்கிறதுக்கு உங்க கணவரோட இறப்புச் சான்று முக்கியம். அதை வாங்கிட்டீங்களா?" என்று கேட்டார்.

"அது எப்படியோ அந்த சமயத்திலே பலரோட வற்புறுத்தலின் பேர்லே அவரோட இறப்புச் சான்றும் , வாரிசு சான்றும் வாங்கிட்டேங்க" என்று உடனே பதில் சொன்னார்.


"ரொம்ப நல்ல காரியம் பண்ணீட்டீங்க. ஒவ்வொன்னா நீங்க உங்க பேர்லேயும் குழந்தைங்க பேர்லேயும் மாத்திக்குங்க. உதவி தேவைபட்டா தாராளமா இந்த நம்பர்லே பேசுங்க. நான் வர்றேன்" என்று கிளம்பினார்.

அப்போது தான் இந்த கம்ப்யூட்டரைக் கொண்டு  யாரெல்லாம் எப்படியெல்லாம் மக்களுக்கு சேவை கொடுக்கிறாங்க. கம்ப்யூட்டராலே பல நன்மைகள் இருக்கத் தான் செய்யுது. இவ்வளவையும் அவரு சொல்லியிருந்தாலும் எனக்கு அப்போ ஒண்ணுமே புரியல்லே . ஆனா இப்போ எல்லாமே புரியுது. இனி வாழ்க்கையிலே கவலையில்லை. இருந்தாலும் மனைவிகிட்டே  பணவிசயங்களை மூடி மறைக்கிறது எவ்வளவு பெரிய தவறுன்னு ஏன் பலருக்கு தெரியாமல் இருக்குது? கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவு இல்லாமல் வாழ்க்கை நடத்தினால் இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் துன்பப்பட தேவை இருக்காதே. அவர் நம்பும் மூன்றாம் மனுசன் நம்பிக்கையா எல்லாமே சொன்னால் சரி. அதில்லாமே அதை மூடி மறைச்சாலோ அல்லது மறந்து போனாலோ வாழ்க்கை என்னாவது? எனக்கு கிடைத்திருக்கும் இந்த அனுபவம் மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக கட்டாயம் இருக்கும். எல்லோரும் இ.லாக்கரை எல்லோரும் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு உறுதியாக தனது அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&            

      

No comments:

Post a Comment