வெள்ளை முடி காதல்
சிறு கதை
மதுரை கங்காதரன்
"உண்மையிலே உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? எம்மேலே உங்களுக்கு இருக்கிறது ஆசையா? அன்பா?" என்று கேள்வி
கேட்டாள் கீதா.
"என்ன அப்படி சொல்லிட்டே கீது. இதையே நான் திருப்பி உன்கிட்டே கேட்டா அதுக்கு நீ
என்ன பதில் சொல்லுவாயோ அது தான்
என்னோட பதில்!" என்றான் ராஜேஷ்.
"இல்லே, நாளைக்கு நமக்கு கல்யாணமாகி என்கிட்டே ஒரு சின்ன குறையிருந்து அதையே ஒரு சாக்காக வைச்சுட்டு என்னை ஒதுக்கிடமாட்டீங்களே"
"இதுக்கும் உன்னோட பதில் எதுவோ அது தான் என்னோட பதில்"
“நான் எதனாலே சொல்றேன்னா, காதலிக்கிறப்போ பெரிய பெரிய பிரச்சனை கூட சின்னதாய்த் தெரியும். ஆனா கல்யாணமான பின்னே சின்ன
சின்ன பிரச்சனைங்க கூட பெரிசாத் தெரியும்.
அப்படி
ஒரு சின்ன பிரச்சனை கூட உங்களுக்கு பூதாகரமாய்த்
தெரியும். அதனாலே என்கிட்டே பிரியம் காட்ட
மறக்கமாட்டீங்களே!"
"இதே கேள்வியை நான் உன்கிட்டே திருப்பிக் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவாயோ அது தான் என் பதில்!"
"அதெல்லாம் போகட்டும்! இப்போ நான் என் கிட்டே உள்ள ஒரு குறையைச் சொல்லப் போகிறேன். அதை கேட்ட உடனே உங்கிட்டேயிருந்து
சூடா ஒரு பதில் வரும்னு நான் எதிர் பார்க்கிறேன்"
"புதிர் போடாதே! எங்கே சொல்லு பார்ப்போம்"
"அது வந்து ..... வந்து ..... நீங்க ஆசையா தொட்டு வர்ணீப்பீங்களே! என்னோட கூந்தல்லே முன்னாலே இருக்கிற தலைமுடி ... "
"மேலே சொல்லு"
"சொன்னா கோபிக்கமாட்டீங்களே..."
"கோபிக்கமாட்டேன். சும்மா சொல்லு"
"முன்னாலே இருக்கிற தலைமுடி.. உண்மையான கருப்பு இல்லே! கொஞ்சம் 'டை' போட்டு கருப்பாக்கியிருக்கிறேன். இதனாலே நீங்க என்னை வெறுப்பீங்களா?" அவன் பதிலுக்காக ஏங்கினாள்.
அவனோ கண்களை அகல விரித்து
புருவங்களை உயர்த்தி, "இதே கேள்வியை நான் உன் கிட்டே திருப்பிக் கேட்டா...."
அதை கேட்டு இன்ப அதிர்ச்சியோடு "நீங்க .... என்ன சொல்றீங்க! உங்களுக்கும் முன்னாலே இருக்கிற தலைமுடி வெள்ளைங்களா?"
அவன் பலமாய்த் தலையாட்ட, இருவரும் சிரிப்பில்
மூழ்கினர்.
"இதிலே கூட நமக்கு எவ்வளவு பொருத்தம்
பாருங்க! உண்மையிலே நாம் தான் தெய்வீகக் காதலர்கள்" என்று சொல்லி ஆனந்தமடைந்தனர்.