Pages

Wednesday, 25 January 2017

தவறான வழியைக் காட்டுகிறதா உலகம்? - WHETHER THE WORLD GUIDING WRONG WAY?

தவறான வழியைக் காட்டுகிறதா உலகம்?
WHETHER THE WORLD IS GUIDING WRONG WAY?
விழிப்புணர்வுக் கட்டுரை
மதுரை கங்காதரன்

இந்த அவசர உலகத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு ஊடகங்கள் எவ்வாறெல்லாம் இளைஞர்களை மாயவலையில் சிக்கவைத்து, அவர்களின் பலவீனத்தைப் பணமாக மாற்றுகிறார்கள் அதாவது இளைஞர்களை மொய் கொடுக்கத் தயாராக்கி அதைக் கரக்கும் விசயத்தில் நிறுவனங்கள், ஊடகங்களை மிஞ்ச யாருமில்லை. அதற்காக அவர்கள் பயன்படுத்தும் பகடைக் காய்கள்! அழகை அள்ளிக் காட்டும் நடிக நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தேன் ஒழுகப் பேசிடும் புகழ்ச்சியாளர்கள், ஒன்றுமில்லாததற்கும், உப்புச்சப்பான செய்கைக்கு ஆஹா, ஓஹோ என்று விசில் ஊதி கைத்தட்டி ஆரவாரம் செய்யும் கூட்டம் போன்றோர்களே. அதனால் இளைஞர்களின் எதிர்காலம் எவ்வாறு கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது என்பது பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கவலை கொள்வது போல் தெரியவில்லை. எப்போதும் கைபேசி கொண்டு எப்போதும் சீண்டியும், வாய்பேசும் இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்தாததால் வாழ்க்கை நிலை, சமூக கௌரவம், வேலைவாய்ப்புகள் எவ்வாறு பறிபோகின்றன? அதற்குக் காரணம் என்ன என்பதுதான் இந்த விழிப்புணர்வுக் கட்டுரை.

ஊடகங்களோ, எங்கே அதிகம் பணம் செலவழிக்காமல் நாள் முழுதும் தினமும் நடக்கும் ஏதாவது ஒன்றோ அல்லது பல சம்பவத்தை எவ்வாறு பரபரப்பாக ஒளிபரப்பலாம் என்று இருக்கின்றனர். இடை இடையே பணம் கொடுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தவறுவதில்லை. அதிலும் அதிகப் பணம் பார்க்கத் தவறுவதில்லை. மக்கள் எல்லோருக்கும் பயன்படும் ஆக்கப்பூர்வமான செய்திகள் கொடுப்பது மிகவும் அரிதாகிப் போய்விட்டது. நடந்த நிகழ்வுகளையே, காட்சிகளையே, செய்திகளையே, திரைப்படங்களையே திரும்ப திரும்பக் காட்டும் பாங்கு பெருகிவிட்டது.

சொந்த பணத்திலே எப்போதும் சமூகவலைதளங்களே கதி என்று இருக்கின்ற இளைஞர்களுக்கு ஆறு மாதம் இலவசமாக மணிக்கணக்கில் யாருடனும் பேசலாம், இணையதளம் பயன்படுத்தலாம் என்று ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தின் அறிவிப்பானது இளைஞர்களை உழைப்பாளிகளாக்கச் செய்யுமா? அல்லது மகா சோம்பேறிகளாக்குமா? அதுவும் ஒருவகையில் பல இளைஞர்களை பலவீனமாக்கி அதற்கு அடிமைகளாக மாற்றி வீட்டிற்கும் நாட்டிற்க்கும் பாரமாகச் செய்து வருவது உண்மை தானே! அதற்கு நாட்டின் சட்டமும், அரசும் அனுமதிப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா? இந்த இலட்சனத்தில் இப்போது இருக்கும் இளைஞர்கள் பலருக்கு கல்வி இருக்கின்றதே தவிர அறிவு, ஆற்றல், புத்திசாலித்தனம், உழைக்கும் மனநிலை இல்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்டவைகள் எல்லாம் பார்க்கின்றபோது ஒருவேளை  வேண்டுமென்றே கண்ணாடியை உடைக்கச் செய்து அதை அவர்களே சரி செய்யும் அந்த வேண்டாத வேலையைச் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. மொத்தத்தில் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்பதில்தான் ஆழமாகச் சிந்திக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. இல்லையென்றால் மத்திய மாநில அரசுகளின் (மக்களின்) கடன் சுமை எந்த அளவில் இருக்கின்றது என்பதிலிருந்து தெரிகின்றதல்லவா! 

எந்த ஒரு பரிமாற்றமோ, நிகழ்வோ, செயலோ, மாற்றமோ ஆக்கப்பூர்வமாகவும் இயற்கையாக அல்லது செயற்கையாக நடைபெற வேண்டுமென்றால், கொடுப்பவர்கள் மேல் நிலையிலும் (நேர்மை, எளிமை, திறமை, ஆற்றல், புலமை, கடமை உட்பட), பெறுபவர்கள் கீழ் நிலையிலும் இருக்க வேண்டும். அது கல்வியாக, செல்வமாக, வீரமாக, கலையாக, இலக்கியமாக, நடிப்பாக, விளையாட்டாக, அரசியலாக, ஆன்மீகமாக, அறிவாக, தொழில்நுட்பமாக போன்று எதுவாக இருந்தாலும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து வரும் மழை, நீர்வீழ்ச்சி, அருவிகளிலிருந்து கொட்டுகின்ற தண்ணீர் இயற்கையாக நிகழ்கின்து. அது கீழ் நிலையில் உள்ள நிலம், ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவைகள் வாங்கிக் கொள்கின்றன. எங்கேயாவது தண்ணீர் தானாக மேல் நோக்கிச் செல்லுவதைக் கண்டிருக்கின்றோமா? ஒருவேளை கீழ் நிலையில் இருப்பவர்கள் பிறர்க்கு ஏதாவது கொடுக்க நினைத்தால், முதலில் மேல் நிலைக்கு உண்டானத் தகுதியை, திறமையை, அறிவை வளர்த்துக் கொண்டு, பெறவேண்டியதை உயர் நிலையில் இருப்பவர்களிடம் பெற வேண்டும். பிறகு கொடுப்பதுதான் மிகச் சரியாக இருக்கும். அதுதான் விதியாய் இருக்கும்போது இப்போது நடப்பது என்ன?

விளையாட்டை எடுத்துக் கொள்வோம். இது எதற்காக உருவாக்கப்பட்டது? மன்னர் காலத்தில் எதிரிகளிடமிருந்து மக்களை, நாட்டைக் காக்க வீரர்கள், காவலர்கள் பலர் தேவைப்பட்டனர். அதற்காக காளையை அடக்குதல், மல்யுத்தம், கத்திச் சண்டை, வேல் சண்டை, குதிரை, யானையின் மீது அமர்ந்து சண்டையிடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. திறமை மற்றும் வீரத்தின் அடிப்படையில் அந்தப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களின் மூலம் அவர்களுக்குத் தகுந்த அரச பதவிகள் அளிக்கப்பட்டன. பிற்காலத்தில் அதுவே காலாட் படை, கப்பற் படை, விமானப்படை, பீரங்கிப் படை, காவலர்கள் என்றாக மாறி வீரத்துடன் கல்வியும், அறிவும், திறமையும் சேர்க்கப்பட்டு அதன் மூலம் வீரர்கள், காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்வாறுத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு எந்தெந்த விளையாட்டில் எந்தெந்த வீரர்களுக்கு எவ்வகையானத் திறமைகள் இருக்கின்றனஅதுபற்றி மத்திய மாநில அரசுகள் ஏதாவது ஒன்றோ அல்லது பலவகை ஊடகங்களின் மூலம் அவர்களைப் பற்றிய வீரதீர சாகச விவரங்கள் ஏதாவது தெரியப்படுத்திருக்கின்றனரா? இந்த இந்த பிரிவுகளில் இவர்கள் இப்படியாக பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்கிற வீடியோ இது வரையில் எந்த ஊடகமாவது வெளியிட்டு இருக்கின்றதா? எப்படி இருந்தாலும் அவர்கள்தான் நம் மக்களையும், நாட்டையும் காக்கின்றனர். அதற்காக அவர்களுக்குச் சலுகைகள், விருதுகள், பணப்பரிசுகள் கொடுக்கப்படுகின்றனவாஆண்டிற்கு ஒரு முறை அவர்களின் வீரத்தனம் வீடியோவாக எடுத்து தொலைக்காட்சியில் காட்டியிருக்கிறார்களா? அப்படிக் காட்டினால்தானே இளைஞர்களுக்கும், மக்களுக்கும் அவர்களின் அருமை, பெருமைகள் தெரிவதோடு நாட்டுப்பற்றும், நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையும் வரும்?

அது போகட்டும். சென்ற ஆண்டின் ஆதாவது கிரிக்கெட், டென்னிஸ், பூப்பந்து, சதுரங்கம், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் யார்? யார்? என்பது நமக்குத் தெரியும். அவர்களை கௌரவித்து விருதும், பணமும். வெகுமதியும் கொடுக்கும் அளவிற்கு நாட்டிற்காக என்ன தியாகம் செய்தார்கள்? நாட்டு மக்களுக்காக என்ன உதவி செய்தார்கள்? என்று கேட்கும் கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்குமா? ஆனால் அவர்களால் பெரிய நிறுவனங்களுக்கு வியாபாரம் நன்றாகவே நடக்கிறது. அதனால் மக்களுக்கு ஏதாவது நன்மை இருக்கின்றதா? அப்படியென்றால் நாட்டைக் காப்பதை விட, ஒன்றுக்கும் உதவாத பல விளையாட்டுகளில் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டு வாழ்கையை வீணாக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்மறையாக உலகம் சொல்லுகின்றதா என்று நினைக்கத் தோன்றுகின்றது. அதாவது விளையாடுங்கள். விருதுகள் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அரசிடம் வேலை மட்டும் கேட்காதீர்கள். ஏனென்றால் அதற்கு எங்கள் வாரிசுகள். உறவுகள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்று அரசுகள் எழுதாத சட்டமாக வரையறுத்து இருக்கின்றது. மீறியும் நான் விளையாடியேத் தீருவேன் என்று அந்தப் பக்கம் போனால் பலன் பூஜ்ஜியம்தான் பெரும்பாலும் இருக்கும். உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள கல்வியறிவுடன் உடற்பயிற்சி கட்டாயம் தேவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒன்று மட்டும் உண்மை, ஒரு வீரரோ, காவலரோ இறந்தால் உடனே ஊடகத்தில் அதே போடுகிறார்கள். அது எப்படி?

அதைவிடக் கொடுமை என்னவென்றால் விவசாயம் சரிவு, விவசாயி தற்கொலை என்று வாய்கிழிய பேசும் பல ஊடகங்கள் தினம் ஒரு விவசாயின் பேட்டியாவது ஒளிபரப்புகின்றனரா? அதுபோல் இந்த வருட சிறந்த விவசாயி, இந்த விளைச்சலில் என்று யாராவது கௌரவித்து விருதும், பணமும் தருகிறார்களா? அதுவும் எதைக் காட்டுகின்றதென்றால், இளைஞர்களே! விவசாயத் துறையில் நீங்கள் எந்த சாதனை படைத்தாலும் நாங்கள் யாரும் கண்டு கொள்ளமாட்டோம் என்று பல ஊடகங்கள் சொல்லுகிறார்கள் போலத் தோன்றுகின்றது. எப்போது ஊடகங்கள் கண்டிப்பாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறைந்தது இரண்டு மணிநேரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்வளம், நிலவளம், உரம், பூச்சிக்கொல்லி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியேத் தீரவேண்டும் என்கிற சட்டம் வருகின்றதோ அப்போது இருந்துதான் விவசாயத் துறை வளரும். இல்லையென்றால் உணவுக்கு அயல்நாட்டில் ஐயா, ஐயா என்று கெஞ்ச வேண்டிய சூழ்நிலை விரைவில் வரும் வாய்ப்பு இருக்கின்றது.

அரசியலை எடுத்துக் கொண்டால் சில தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்தில் எவ்வித  தொலைநோக்கும், நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகளின் மூலக்காரணங்களை அறிந்து ஆராயமாலும், கவனத்தில் கொள்ளாமலும், இன்றையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கருத்தில் ஏற்றுக் கொள்ளத் தெரியாமல் ஆட்சியை  நடத்தும் விதம் அழுவதா? சிரிப்பதா என்று தெரியவில்லை. எதெற்கெடுத்தாலும் சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைப் பற்றிப் பேசாமல் அதற்குத் தீர்வு காணும் செய்திகள் கொடுப்பதற்குப் பதிலாக  அங்கு வெளிநடப்பு இல்லையென்றால் கூச்சல், குழப்பம் செய்திகள் வருவதுதான் அதிகமாகிவிட்டது. அதாவது சரியான அரசியல் தலைவர்களைத் தேர்தெடுக்கத் 'தேர்தல்' வைக்கிறார்கள். அப்போது சரியான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டு பிறகு, எங்கள் பகுதியில் குடிநீர், சாலைப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் செய்துத் தரப்படவில்லை என்று ஒரு முறையல்ல, பலமுறைகள் ஆட்சியாளர்களிடத்தில் புகார் கொடுத்தால் நன்றாகவா இருக்கும். வாய்ப்பு வரும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் அதனைப் பயன்படுத்தாமல் ஏமாந்தால் யாருக்கு என்ன நஷ்டம்? இதில் எத்தனை முறை அடிபட்டாலும் திரும்பத் திரும்ப மக்களின் குறைகளைத் தீர்க்காதவர்களையேத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு முறையும் ஏமாறும் மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? அவர்களின் வாழ்நாள் முழுதும் கஷ்டம்தவிர வேறு என்ன பரிசு கொடுத்தாலும் சரியாக இருக்காது.

கல்வித்துறையில் நடக்கும் கேலிக்கூத்து அதைவிடக் கொடுமை. இப்போது இருக்கும் கல்வி முறையால் உலகளவில் போட்டி போட முடியாது என்று நன்றாகத் தெரிந்தும் பல ஆண்டுகளாக பின்பற்றியதன் பலன் சிறந்த சில விஞ்ஞானிகளை, தொழில்நுட்ப வல்லுனர்களை, மேதைகளைசிந்தனையாளர்களை உருவாக்க முடியவில்லை. அந்த மாதிரி அறிஞர்களை உருவானால்தானே நாட்டுக்கும், மக்களும் லாபம். அந்த அளவுக்குக் கல்வியின் தரம் இருக்கின்றது? ஒருவேளை ஒரு விஞ்ஞானி சாதனை செய்து விட்டால் அவர்களுக்கு ஒரு விருது மட்டும் கொடுத்து அத்தோடு தங்களது கடமைகளை முடித்துக் கொள்வார்கள். ஆனால் நடிக நடிகைகளுக்கு கொடுக்கும் கௌரவம், மரியாதை, சலுகைகள், பதவிகள் கால் பங்குகூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. அவைகளை எல்லாம் இளைஞர்கள் பார்க்கின்றபோது ஒஹோ, அப்படியானால் எப்படியாவது நடிகனாகிவிட வேண்டும் என்றே நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்றளவில் சிறந்த முன்மாதிரியாகப் பழைய தலைவர்களையோ, கல்வியாளர்களையோ, விஞ்ஞானிகளையோ எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார்களே தவிர நடப்பில் இருப்பவர்கள், தங்களைத் தகுதிபடுத்திக் கொள்ள தவறி, சுயநலவாதிகளாக மாற்றிய பெருமை மக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்போது வந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் சுதந்திரம், விழிப்புணர்வு, காதல் என்கிற பெயரில் வன்முறை, தீவிரவாதம், பொய், பித்தலாட்டம், சட்டத்திற்கும், இயற்கைக்கும் புறம்பான செயல்கள் என்பதே அதிகமாக இருக்கின்றது. ஊடகங்கள் கண்டிப்பும், கண்காணிப்பும் குறைந்துபோனால் பின்னால் அவதிப்பட வேண்டியிருக்கும்.   
                             
இதற்கெல்லாம் தீர்வு இருக்கின்றதா? என்று கேட்டால் 'இருக்கின்றது' என்றுதான் சொல்லுவேன். முதலில் உங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். உடலில் வேர்வை சிந்த உழையுங்கள், உழவுத் தொழிலை இளைஞர்கள் செய்ய அவர்களை உற்சாகப்படுத்துங்கள், அதுதான் உங்களுக்கு எப்போதும் நிம்மதியைக் கொடுக்கும். சோறும் போடும். பிறகு தொலைக்காட்சி அதிகபட்சம் ஒரு மணிநேரம் பாருங்கள். ஏனென்றால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் உங்கள் தகுதிக்கும் கீழ் உள்ளதுதான் இருக்கும். அவர்களைவிட உங்களால் நன்றாகச் சிந்திக்க முடியும். சிறந்த படைப்புகளைப் படைக்க முடியும். மக்கள் நல்வழியில் அழைத்துச் செல்ல முடியும். அதனால் பகட்டைக் கண்டு பயந்து விடாமல், தீவிரவாதம் கண்டு மிரண்டு விடாமல், தோல்வியைக் கண்டுத் துவண்டுவிடாமல், ஏழைகளைக் கண்டு ஒதுங்கிவிடாமல் அனைத்தையும் எதிர்க்கொண்டு இளைஞர்களே! நீங்கள் நினைத்தால், மனது வைத்தால் அரிய பெரிய சாதனைகளைச் செய்ய முடியும். ஆகையால் நீங்கள் பார்க்கும் பலவற்றில் மூழ்கிவிடாமல் உங்களுக்குள் இருக்கும் திறமையையும், ஆற்றலையும், அறிவையும் வீட்டிற்கும், நாட்டுக்கும் கொடுத்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் அரைமணி நேரம் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை அதிக நேரம் படியுங்கள்.

இளைஞர்களே, 120 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் உங்களுக்குத் தெரிந்து எந்த ஒரு விஞ்ஞானியாவது விவசாயத்துறையில் அதிக மகசூல் தரும் காய், கனி விதைகளையும், குறைந்த அளவுத் தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் நெல், கோதுமை, பயிர் மற்றும் எண்ணெய் வித்துகள் வகைகளை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்காக இதுநாள் வரையில் கொடுத்திருக்கிறார்களா? ஆனால் நாமோ நமது பாரம்பரிய விவசாயத்தை அழித்து, இழந்தும் (அடுக்குமனைக்காக, அடுக்குமாடி கட்டிடங்களுக்காக விளைநிலத்தை விற்றதன் வாயிலாக), வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தையும் பின்பற்றாமல் எல்லாவற்றையும் விதைகள் மற்றும் உரங்கள், பூச்சி மருந்துகள் முதலியன வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றோமே அதைப் பற்றி இளைஞர்களே நீங்கள் சிந்தித்து இருக்கின்றீர்களா? மேலும் வறட்சியான மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று நாக்கூசாமல் சொல்லுகின்றனரே அது சரியா இளைஞர்களே! இது எப்படி இருக்கின்றதென்றால் 'நான் தேர்வில் தோற்றுவிட்டேன்' என்று அறிவித்தால் எப்படி இருக்கும்? அது பெருமையாகுமா?

எல்லாவற்றிற்கும் அந்நிய நாட்டையே நம்பியிருந்தால், கையேந்தி நின்றால் நம் நாட்டில் விவசாயிகளைக் காக்கும் விஞ்ஞானிகளே இல்லையா? நாட்டு மக்கள் வாழ்வைச் சிறக்க வைக்கும் பொருளாதார நிபுணர்களே இல்லையா? நீர் வளம் பெருக்கச் செய்யும் தொழில்நுட்ப வல்லுணர்களே இல்லையா? எளிய வழியில் மிகக் குறைந்த விலையில் அனவருக்கும் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு கொடுக்கும் பொறியியல் வல்லுனர்கள் இல்லையா? அவ்வாறு இல்லாது போனால் எவ்வாறு இன்றைய இளைஞர்கள் சமுதாயம் நம் நாட்டை வல்லரசாக விளங்கச் செய்ய முடியும்? அதற்கு எவையெல்லாம் தடையாய் இருக்கின்றதோ அவைகளைத் தகர்த்து நாட்டு மக்களின் நன்மைக்காக இளைஞர்களே சற்றுச் சிந்தியுங்கள். உங்களின் வருங்கால வாழ்க்கையும், உங்கள் தலைமுறைகளும் மகிழ்ச்சியாக இருக்க இப்போதே அதற்கான திட்டங்களை, கண்டுபிடிப்புகளைத் தருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக பல அனுபவசாலிகள், அறிவாளிகள், திறமைசாலிகள் உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். இப்போதும் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் இளைஞர்களே நீங்களும் உங்களின் சந்ததிகளும் பல இன்னல்களுக்கு ஆளாவீர்கள் இது உறுதி.

இளைஞர்களே! நீங்கள் விவசாயத்தில் சாதனை செய்து விஞ்ஞானிகளானால் நாடே செழிக்கும். பொறியியல் துறையில் சாதனை செய்தால் நாடே வளம் பெறும். புதுக் கண்டுபிடிப்புகள் கொடுத்தால் நாடு வல்லரசாகும். இந்த நாட்டின் வளர்ச்சியால் உலகமே மகிழ்ச்சியில் மிதக்கும். அதை விட்டுவிட்டு ஒரு விளையாட்டு வீரனானால், சிறந்த நடிகனானால், பாடகனானால், பேச்சாளரானால் பலன் என்னவோ சுயநலமான உனக்கு மட்டும் தான். அதனைக் கொண்டு நாட்டை செழுமை ஆக்கிட முடியுமா? ஆனால் இந்த நாடு அப்படிப்பட்ட் சுயநலத்திற்குதான் மதிப்பு கொடுக்கின்றது. பெருமை கொடுக்கின்றது. உன்னையும் அவ்வாறு இருக்கத் தூண்டுகின்றது. அந்த புதைகுழியில் விழுந்தால் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாது. இப்போது நீயே முடிவு செய்து கொள். நீ மட்டும் நன்றாக வாழவேண்டும் என்கிற சுயநலத்தை தேர்ந்தெடுக்கப் போகின்றாயா? அல்லது சுயநலத்துடன் பொது நலத்தைத் தேர்ந்தெடுக்கப் போகின்றாயா?

இளைஞர்களே, உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாய் விளங்கும் கல்வியில் கவனம் செலுத்தாமல் கைபேசியிலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலும், வீண் அரட்டை அடிப்பதிலும் காலத்தைப் போக்குவீர்களானால் விரைவில் தாய்நாடுஎன்னும் கௌரவத்தை இழந்து பிறநாட்டிற்குத் தலையாட்டும் பொம்மை நாடாக மாறிவிடும் ஆபத்து இருக்கின்றது. ஆகவே இளைஞர்களே, நாட்டை முன்னேற்றும் வழிகளில் உங்களுடைய கவனமும், செயலும் இருக்க வேண்டும்.

காய், கனியில் உள்ளே இருக்கும் சதைப் பாகத்தை கீழே போட்டு வீணாக்கிவிட்டு அதன் மேலே இருக்கும் தோலை ரசித்து ருசித்துச் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இருக்கின்றது இப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. எதையுமே ஆழமாக ஆராயாமல் மேலோட்டவாறு படித்துவிட்டு, பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு உணர்வுக்கு அதிக மதிப்பளித்து செயலில் இறங்குவது நிரந்தர வெற்றியைத் தருமா? தங்களுடைய தகுதி என்ன? மற்றவர்களின் தகுதி என்ன? என்று எதுவுமே சிந்திக்காமல் ஒரு முடிவுக்கு வருவது நல்லதா? தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் எவ்வளவு தூரம் மனித மனங்களை ஆக்கிரமிக்கும் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஊடகங்கள் அனைத்து இடங்களில் ஏதாவது ஒரு வடிவில் இருக்கின்றன. உங்கள் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி ஊடகத்தில் எத்தனை சேனல்கள் இருக்கின்றன. அந்தச் சேனல்களில் எத்தனைச் சேனல்கள் உங்கள், உங்கள் குழந்தைகளின் , சந்ததியினர்களின் நல்வாழ்வுக்காக, நல்ல தொழிலுக்காக, உங்கள் ஊரில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளைக் காட்டுகின்றதா? நல்ல வேலைவாய்ப்புக்காக, அரசின் சலுகைக்கு நல்ல வழியைக் காட்டுகின்றதா? ஒவ்வொரு வினாடியும் வியாபார நோக்கிலே இருப்பதால் பெரும்பாலும் வீண் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கின்றதே தவிர ஆக்கப்பூர்வமான அம்சங்களுக்கு துளியும் இல்லாதபோது எவ்வாறு இளைஞர்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுக்க முடியும்? முக்கியமாக விவசாயம் பற்றிய செய்திகள் மருந்திற்கும் இல்லையென்றால் எவ்வாறு இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவார்கள்? மக்களும், நாடும் எவ்வாறு முன்னேறும்? இப்படியே போய்க் கொண்டிருந்தால் வருங்கால இளைஞர்கள் சமுதாயத்தைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இப்போது இருக்கும் பெற்றோர்கள் புலம்புவது தவிர எதுவும் செய்ய முடியாது. இப்போதே பல இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களை மதிப்பதில்லை அவர்களின் சொல் கேட்பதில்லை என்கிற கூற்று இருக்கின்றது. இதற்குக் காரணம் ஊடகங்களே. இளைஞர்களே சுயநினைவு கொண்டு எங்கு அவர்களுக்கு உண்டான முன்னேற்றம் கிடைக்கின்றதோ அதை அவர்களேத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இது நடக்கின்ற காரியமா? இளைஞர்கள் மனத்தில் அயல்நாட்டு விதை மோகம், ஆழமாக வேரூன்றி வளர்ந்து விருட்சமாக வளர்ந்துவிட்டது. இதை அகற்ற சில ஆண்டுகள் நாம் பொருத்துக் கொண்டேத் தீரவேண்டும்.

எப்போது தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் ஏன் செய்தித்தாள்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்ததோ அன்றிலிருந்து மக்கள் சமுதாயத்திற்கும், இளைஞர்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். சென்ஸார் துறை செயல்படுகின்றதா என்று சொல்லும் அளவிற்கு இன்றைய ஊடகங்கள் அதிகச் சுதந்திரமாகச் செயல்படுகின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அரசாங்கமும், சட்டமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. "நீங்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் மக்களுக்குக் கொடுங்கள். அவர்கள் கெட்டாலும் பரவாயில்லை. எப்படியெல்லாம் இளைஞர்களை உழைக்க விடாமல், தங்களது வருங்காலத்தை சிந்தனைச் செய்யவிடாமல் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். குறிப்பாக விவசாயம், தொழில் பற்றிய எண்ணங்களை வளர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக நாங்கள் அதிகக் கடன் தருகிறோம். நீங்கள் செய்யும் தொழிலுக்கு சரியான வரி கட்ட வேண்டாம். கடனுக்கான வட்டியும் கட்ட வேண்டாம். முதலும் கட்ட வேண்டாம். எல்லாம் தள்ளுபடி செய்கிறோம். எல்லாம் மக்களின் வரிப்பணம்தான். அவர்கள் எதையும் தாங்கிக் கொள்வார்கள்" என்று சொல்வது இருக்கின்றது.            

இளைஞர்களே இறுதியாக, எது உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுகின்றதோ, நல்ல குணத்தை வளர்க்கின்றதோ அதைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள். யார் உங்கள் மகிழ்ச்சிக்கு நல்வழி காட்டுகின்றனரோ அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு அதன்படி நடப்பதே நன்மை பயக்கும். எது உங்கள் வாழ்க்கையை, நேரத்தை வீணடிக்கின்றதோ, எது உங்கள் பணத்தை ஆக்கப்பூர்வமாக இல்லாமல் செலவு செய்யத் தூண்டுகின்றதோ அதனை விட்டு விலகுங்கள் அல்லது அதனை மறந்துவிடுங்கள் அல்லது அழித்துவிடுங்கள். பிறகு பாருங்கள் நம் நாடு வல்லரசு ஆகின்றதா? இல்லையா என்று!
*****
                              


No comments:

Post a Comment