இதுவும் சாணக்கிய தந்திரம் -
சிறுகதை
மதுரை கங்காதரன்
அன்றைய தினம் 'உமா எக்ஸ்போர்ட்ஸ் & இம்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காரணம், புதிதாக வர இருக்கும் அதிகாரி சோமசுந்தரம் ! மிகவும் அனுபவமிக்க எந்த ஒரு பிரச்சனையும் எளிதாகவும் அதேவேளையில் இருவருக்கும் நஷ்டமில்லாமலும் , சமாதானமாகவும் தீர்ப்பதில் வல்லவர். சுயநலமில்லாமல் அனைவரையும் பாகுபாடு இல்லாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்.
'இதற்கு முன் அவர் எங்கு பணியாற்றினார்? எந்த மாதிரியான குணமுள்ளவர்' எனபதைப் பற்றி அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நிறையவே தெரிந்து வைத்துக்கொண்டிருந்தனர். அனைவர் மனதிலும் 'அப்பாடா! எங்களுக்கெல்லாம் விமோட்சணம் கிடைத்துவிட்டது. வருகின்றவர் மிகவும் அன்பானவர். இரக்க குணம் கொண்டவர். தொழிலாளர்களின் குறைகளை தினமும் கேட்டு , நிர்வாகத்திடம் சொல்லி அதை சாமர்த்தியமாக நிவர்த்தி செய்யும் திறமை படைத்தவர். கூட்டுமுயற்சியின் பலனாக உற்பத்தியை பெருக்கி அந்த லாபத்தின் ஒருபகுதியை தொழிலாளிகளுக்கு வாங்கிக் கொடுப்பவர். தொழிலாளிகளுக்கு வேண்டிய வசதிகளையும், சலுகைகளையும் வாங்கித் தருவதில் கை தேர்ந்தவர். அவரால் கட்டாயம் நிறுவனம் வளரும். அதில் வேலை செய்பவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்' என்று பலவாறு கனவும் கற்பனையும் ஒவ்வோர் தொழிலாளிகளிடம் இருந்தது.
இப்போது இருக்கும் அதிகாரி கோதண்டம் இவருக்கு நேர்மாறானவர். எல்லாமே சுயநலம் தான். தொழிலாளிகளுக்கு இம்மியளவு நல்லது செய்யும் மனமில்லாதவர். வேலை மட்டும் பிழிந்து வாங்குவார். அவர்களுக்கு அதிக வேலைநேர சம்பளம், சாப்பாடு படி, போக்குவரத்து , தொழிலாளர்களின் குடும்பத்தைப் பற்றி அக்கறையில்லாதவர்! தொழிலாளர்கள் உழைப்பினால் கிடைக்கும் எல்லாப் பலனும் அவருக்கு மட்டும் தான். அதாவது சம்பளம், போனஸ் மற்றும் பதவி உயர்வு எல்லாமே இவருக்கு கிடைக்கும்படி செய்து கொள்வார்.
ஆகையால் சோமசுந்தரம் வரவினால் 'இன்றோடு நமது துன்பம் தொலைந்தது. வாழ்கையில் விடிவு காலம் பிறந்தது' என்று நம்பிக்கையோடு இருந்தனர். அவருக்குச் சம்பளம், அதிகாரம் மற்றும் வசதிகள் கிட்டத்தட்ட கோதண்டம் அதிகாரிக்குச் சமம்.
அனைவரும் எதிர்பார்த்தபடி இல்லாமல் சோமசுந்தரம் எவ்வித பரபரப்பில்லாமல் அனைவரைப் போல் பணியில் சேர்ந்தவுடன் தனது வேலையில் மூழ்கினார். ஆனால் தொழிலாளிகள் நினைத்தது போல் அவர் ஏதும் புதிதாக செய்யவில்லை. மேலும் அதிகாரி கோதண்டத்தின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி வந்தார்.
இப்போது எல்லோரின் மனதில் ' என்னடா , நாம ஒண்ணு நினைச்சோம். அவரு நல்லவரு, வல்லவருன்னு. ஆனா இவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்' என்று சிலர் சலித்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் ' பணமும், அதிகாரமும் கொடுத்து காலம் அவரை சுயநலவாதியாக மாற்றிவிட்டது போலும் " என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டனர். மற்றவர்கள் 'நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்' என்று அங்கலாய்த்துக்கொண்டனர்.
அதிகாரி கோதண்டமும், சோமசுந்தரம் தன்னுடன் சேர்ந்து தனக்குச் சாதகமாக நடந்துகொள்வார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது அவருக்கு பலம் என்பதோடு தன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறார் என்பது அவருக்கு ஆறுதலைத் தந்தது.
வழக்கம் போல் ஒரே மாதிரியான உற்பத்தி , வழக்கமான அலுவலக வேலைகள் நடந்து வந்தமையால் நிர்வாகம் சோமசுந்தரத்தின் வரவினால் ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை. நாள்கள் ஓடின.
எதிர்பாராத சூழ்நிலையில் அதிகாரி கோதண்டம் ஒரு மாதம் விடுப்பு எடுக்க நேர்ந்தது. நிர்வாக மேலிடம் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சோமசுந்தரத்தை அழைத்து " மிஸ்டர் சோமசுந்தரம்! பார் தி அன் எக்ஸ்பெக்ட் ரீசன் மிஸ்டர் கோதண்டம் இஸ் கோயின் டு டேக் ஒன் மந்த் லீவ் . அவரின் வேலைகளை நீங்கள் தான் கவனிக்கவேண்டும். வேலையில் எவ்வித இடையூறும் தொய்வும் வரக்கூடாது. சோ யூ ஹவ் டு டேக் கேர் ஆப் ஹிஸ் ரெஸ்பான்சிபிலிடி" என்று சற்று கடுமையாக உத்தரவு போட " எஸ் சார் , ஐ வில் டேக் கேர் சார் ! " என்கிற அமைதியான பதில் தந்துவிட்டு தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்.
மறுநாள் சோமசுந்தரம் எப்போதும் போல இல்லாமல் மிகவும் வித்தியாசமாக அனைவரிடத்தில் நடந்து கொண்டார். அலுவலகத்தில் நுழைந்தவுடன் அன்றைய தினத்தில் நடக்க இருக்கும் வேலைகளைப் பற்றிய திட்டத்தினை அனைத்து துறை பொறுப்பாளர்களை அழைத்து பேசினார். அவ்வாறு பேசும்போது மிகவும் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவர்களது திறமைகளை பாராட்டினார். ஏதேனும் உதவி வேண்டுமானால் நான் செய்யாத் தயார். நான் உங்களின் ஒருவன். அல்லது பிரச்சனை ஏற்பட்டால் அது எனது பிரச்சனை என்று எண்ணி தீர்த்து வைக்கிறேன் என்று உறுதி தந்தார். அவ்வாறு பேச பேச அனைவருக்கும் புது தெம்பு ஏற்பட்டது. மேலும் தினமும் இவ்வாறு கூடுவோம். கூட்டு முயற்சியால் எதுவும் சாதிக்கலாம்" என்று அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்தார்.
அதோடு நிற்காமல் ஒவ்வொரு தொழிலாளியையும் இனிமையாக விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். காலையில் பலர் சாப்பிடாமல் வந்திருப்பதை கணக்கில் கொண்டு மறுநாள் முதல் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தார். போக்குவரத்திற்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்தார். மருத்துவம், கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். தொழிலாளிகளோடு தொழிலாளியாய் தானும் அவர்களின் உழைப்பில் பங்கு கொண்டார். அத்தகைய செயல்களைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மிதந்தனர். தாங்கள் காண்பது நனவா ? அல்லது கனவா? பலமுறை சரி பார்த்துக்கொண்டனர். சோமசுந்தரத்திற்கு இத்தகைய 'ஞான உதயம்' எதனால் பிறந்திற்று? இதுவரை எதனால் இல்லாமல் போயிற்று? என்கிற ஆராய்ச்சியில் விடை தெரியாமல் விழித்தனர்.
அவரின் இத்தகைய நடவடிக்கையினால் நாளுக்கு நாள் உற்பத்தி பெருகியதோடு அனைவரும் ஆர்வத்துடன் வேலை செய்தமையால் தரமும் அதிகமாகியது. தொழிலாளிகள் பலரும் அனாவசிய விடுப்பு எடுக்காமல் தினமும் வருகை தந்தமையால் நாளுக்கு நாள் திட்டமிட்டதற்கு மேலாக உற்பத்தியைக் கொடுத்தனர். அனைவரும் விருப்பத்துடன் சற்று அதிக நேரம் வேலை செய்தார்கள். அவற்றிக்கு சரியானபடி கூடுதல் சம்பளமும், சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்தார். இரண்டு மாத உற்பத்தியை ஒரே மாதத்தில் கொடுத்து சாதனை படைத்தனர்.
நிர்வாகம் அவரை தனியே அழைத்து பேசியது. " மிஸ்டர் சோமசுந்தரம், யூ ஹாவ் டன் அன் எக்ஸ்செல்லேன்ட் ஜாப். வி அப்ப்ரிசியாட் யுவர் பெர்பார்மன்ஸ். தரம், அதிவேக உற்பத்தி, சரியான நேரத்தில் டெலிவரி , நிறைந்த லாபம் கொடுத்த உங்களுக்கு நிர்வாகம் அந்த லாபத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கின்றது. அது போல் மென்மேலும் சிறப்பாக பல சாதனைகளைப் படைக்க வேண்டுகிறோம். இந்தாருங்கள் உங்களுக்கான ஊக்கத் தொகை " என்று சில பணக்கட்டுகளை சோமசுந்தரத்திற்கு கொடுத்தார்கள்.
ஆனால் அதை கையால் வாங்கிக்கொள்ளாமல் "சாரி சார்! இதற்கு முன் யார் எப்படி இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த பணம் உழைப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணம். அது தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணம். அவர்களின் முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் அதற்குக் காரணம். இதை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள்" என்று ஆணித்தரமான பதிலைக் கொடுத்தார். நிர்வாகம் சற்று மிரண்டது. இப்படியும் நேர்மையாக இருப்பார்களா? என்று ஆச்சரியப்பட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்காத நிர்வாகம் "உங்களின் தாராளமான குணத்தை நான் பாராட்டியே தீரவேண்டும். உங்கள் விருப்பப்படி அனைவருக்கும் லாபத்தின் அதிக பகுதியை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்படி செய்கிறோம்" என்று உறுதி கொடுத்த பின்னரே சோமசுந்தரம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
இச்செய்தி காட்டுத்தீ போல் அனைவரின் காதுகளில் எட்டும்போது தேன் பாய்கின்றவாறு உணர்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி அன்றோடு கரைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனெனில் கோதண்டம் ஒரு மாத விடுமுறை முடித்துக் கொண்டு மறுநாள் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டால் ' நம் நிலைமை பழைய குருடி , கதவைத் திறடி' போலாயிற்றே என்று நொந்து கொண்டார்கள். அந்த பொன்னான நாட்கள் மீண்டும் வருமா? என்று நப்பாசையுடன் அன்று வேலைகளை முடித்து வீட்டிற்குச் சென்றனர்.
மறுநாள்..
கோதண்டத்திற்கு பதிலாக சோமசுந்தரமே அலுவலகத்தில் நுழைந்தார். அது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியைத் தந்தது. ஏன் கோதண்டம் வரவில்லை? அனேகமாக கூடுதல் விடுப்பு கேட்டிருப்பார்' என்று நினைத்துக்கொண்டு அனைவரும் சந்தோசப்பட்டனர்.
சோமசுந்தரம் அனைவரின் முன்பு தோன்றினார். "தொழிலாள தோழர்களே ! சற்று முன் நிர்வாக எனக்கு ஒரு இ . மெயில் அனுப்பியிருந்தது. அதில் நம் அதிகாரி கோதண்டம் அவர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளார். இனிமேல் என்னை அவரின் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் உங்களுக்கெல்லாம் என்னுடைய முந்தைய செயல்கள் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். எப்படி இருந்த நான் இப்படி மாறிவிட்டேன் என்று? எல்லாமே சாணக்கியன் தந்திரம் தான். அவரின் தந்திரத்தை இக்காலத்தின் படி சற்று மாற்றி நடந்து கொண்டேன். வெற்றி பெற்றேன். எப்படி என்று சற்று விரிவாகச் சொல்கிறேன். நான் இங்கு வேலைக்குச் சேரும்போது எல்லோரையும் எனது கண்களைப் போல் காக்கவேண்டும் என்கிற உறுதியோடு இருந்தேன். ஆனால் நாம் நமக்கும் மேலே அதிகாரம், பதவி , பணம் படைத்தவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியாது. அதற்கு காலம் நேரம் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். என்னதான் நீதி, நேர்மை, உறுதி, நம்பிக்கை இருந்தாலும் காலம் தவறி எதிர்கொண்டால் நமக்கு தோல்வி உறுதி தான். ஆகவே புதிதாக வந்தவுடன் அதிகாரி கோதண்டம் அவர்களை பகைத்து என் நோக்கத்தை நிறைவேற்ற நினைத்தால் எனக்கு நிச்சயம் தோல்வி தான் கிடைத்திருக்கும்.
நானும் அந்த அதிகாரி கோதண்டம் அவருடன் சேர்ந்து உங்களுக்கு 'துரோகம்' செய்தது எனக்கு பெரிய கஷ்டத்தை தந்தது. ஆயினும் 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற கூற்றின்படி பொறுத்தேன். ஒரு நாள் அதிகாரி கோதண்டத்தின் அதிகாரம் எனக்கு கட்டாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அப்படி அதிகாரம் கிடைத்த மறு நொடியிலிருந்து நான் நினைத்து சாதிக்க வேண்டும் என்கிற கங்கணம் கொண்டேன். அதுவரை என் குணம் மாற்றிக்கொள்ளக் கூடாது என்கிற வைராக்கியமும் கொண்டடேன். நான் மனதளவில் அவ்வாறு மாறவில்லை. நேரம் கைகூடும் வரை உங்களை பகைத்துக் கொண்டு அவருடன் கூட்டு சேர்ந்து துரோகம் செய்தேன். அதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
அவர் விடுப்பிற்கு சென்றது எனக்கு சாதகாம ஆக்கிக்கொண்டேன். அந்த சமயத்தில் என்னால் இயன்றளவு உங்களுக்கும், நிறுவனத்திற்கும் நிறைய செய்யவேண்டும் என்று இரவும் பகலும் கஷ்டப்பட்டேன். அதற்கு மறுவார்த்தை கூறாமல் என்னுடன் சேர்ந்து உழைத்தபடியால் தான் இத்தகைய சாதனை நிகழ்ந்தது. நிர்வாகம் உங்கள் அனைவரையும் பாராட்டியது. இனி வரும் காலம் நம் கையில். நீதி, நேர்மை, சத்தியத்தோடு உழைப்போம். வெற்றி பெறுவோம். புது சரித்திரம் படைப்போம்" என்று இலட்சிய உரையாற்ற அனைவரும் 'நாளை நமது தான்' என்கிற நம்பிக்கையோடு பணியாற்றச் சென்றனர்.
முற்றும்...
********************************************************************************************
நன்றி..
வணக்கம்..
*********************************************************************************************