சொந்தக் காலில் .....
சிறுகதை
மதுரை கங்காதரன்
"என்ன முருகா, ஏது இந்த பக்கம்? "
"மாணிக்கம் ! உன்னைப் பார்க்கத் தான் புறப்பட்டேன். என்னான்னு தெரியலே. உன்னைப் பார்த்த பின்னே ஏதோ ஒரு புது தெம்பு வந்திருக்கு. மனசிலே இருக்கிற பாரம் குறைஞ்சது போல இருக்கு " தன் நண்பனை பார்த்தது கடவுளைப் பார்த்தது போல உணர்ந்தான். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று சொல்லுவார்கள். இவர் விசயத்தில் அவர் நண்பர் தான் தெய்வம்!
"விசயத்தை சொல்லு. உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. அதனாலே தான் இப்படி பேசுறே. பிரச்சனை என்னான்னு சொல்லு ? முடிஞ்சளவு தீர்க்கப் பார்க்கிறேன் !"
"ஒண்ணுமில்லே, என்னோட வருமானத்திலே வாடகை , சாப்பாட்டு செலவுக்கே சரியா இருக்கு. நல்ல நாளப்போ கூட நல்ல துணிமணி எடுக்க முடியாத சூழ்நிலை! இது தான் என்னோட வாழ்க்கை சூழ்நிலைன்னு உனககுத் நல்லாத் தெரியும். அப்பப்போ நீயும் கொஞ்சம் உதவி செய்றதாலே ஏதோ வண்டி ஓடுது. என் பையன் பாண்டியன் இந்த வருசம் +2 தேர்வு எழுதியிருக்கிறான். நல்ல மதிப்பெண்கள் வரும்ன்னு சொல்றான். ஆனா அவன் எவ்வளவு மதிப்பெண் வாங்கினாலும் என்னாலே அவனை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூட சேர்க்க முடியாது. என்னோட பொண்ணு +2 தேர்விலே ரொம்ப நல்ல மதிப்பெண் எடுத்தும் அவளை அரசு கலைக்கல்லூரியில் தான் படிக்க வைக்க முடிஞ்சது. அதுவும் கஷ்டப்பட்டுத் படிக்க வைக்கிறேன். அவளுக்கு இந்த வருசத்தோட படிப்பு முடியுது. அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். அந்த செலவும் இருக்கு"
"இதெல்லாம் எனக்குத் தெரியாதா? அது சரி பிரச்சனை என்னான்னு சொல்லு ?"
"சொல்றேன். என்னோட பையன் தன்னுடைய மேற்படிப்பு தொழில் நுட்பக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும்ன்னு அடம்பிடிக்கிறான். அவன் வாங்கும் மதிப்பெண்ணிற்கு எங்கேயோ ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனா கண்டிப்பா உள்ளூரில் கிடைக்காது. அவன் கேட்கும் பாடமும் விரும்பும் கல்லூரியும்அதிக பணம் கொடுத்தாத் தான் கிடைக்கும் . அதுக்கு எப்படியும் மூன்று , நான்கு லட்சம் செலவாகும். வங்கியில் கடன் வாங்கும் வசதியும் எனக்கில்லை. அவனை சாதாரண கல்லூரிக்கு கூட சேர்க்க முடியாத நிலைமையிலே நான் இருக்கிறேன். அவன்கிட்டே என்னோட வீட்டு நிலைமை எப்படி சொல்றது? இந்த காலத்துப் பசங்க எப்படி அதை எடுத்துக்குவாங்க? நீ தான் அவன்கிட்டே பக்குவமா சொல்லிப் புரிய வைக்கணும்" என்றார்.
" சரி, சரி நான் வந்து அவன்கிட்டே பேசிப் பார்க்கிறேன். இப்போ அவன் எங்கே இருக்கிறான்?"
"வீட்டிலே தான் இருக்கிறான். ஏதோ அவங்க பள்ளியிலே ஒரு விழாவாம். அதுக்குப் போகணும்ன்னு சொன்னான்!"
முருகன் தன் நண்பனுடன் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
" வள்ளி ! மாணிக்கம் வந்திருக்கிறான். மோர் கொண்டு வா சீக்கிரம்" என்று தன் மனைவிடம் கூறினான் முருகன்.
" வாங்க அண்ணே. எப்படி இருக்கீங்க? இதோ வந்துடுறேன்" அவள் சமையலறையில் தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.
"பாண்டியா ! பாண்டியா!" என்று செல்லமாக அழைத்தார் முருகன்.
"இதோ வந்துட்டேனப்பா" பணிவாக அவர்கள் முன் நின்றான்.
"என்ன பாண்டியா. பரீட்சை எல்லாம் எப்படி எழுதியிருக்கே?"
"நல்லா எழுதியிருக்கிறேன் மாமா "
"எங்கேயோ போறதுக்கு தயாராக இருக்கிறாப்பிலே இருக்கே?" என்றார் மாணிக்கம்.
"ஆமாம் மாமா. எங்களோட பள்ளியிலே புதுசா ஒரு கட்டிடத்திற்கு திறப்பு விழா இன்னைக்கு நடக்குது. சிறப்பு விருந்தினர் யாரோ 'மதியரசன்' வருகிறாராம். கண்டிப்பா எல்லா மாணவர்கள் வரவேண்டும். அதிலேயும் +2 மாணவர்கள் தவறாம வரவேண்டும்ன்னு சொல்லியிருக்காங்க"
"யாரு , மதியரசனா? அவரா! அப்போ நீ அவசியமா போயேத் தீரனும். போயிட்டு வந்த பிறகு உன்கிட்டே பேசுறேன்" என்று அவனை அனுப்பி வைத்தான் முருகனின் நண்பன் மாணிக்கம்.
" என்ன மாணிக்கம், என் பையன்கிட்டே ரெண்டு வார்த்தை பேசுவேன்னு நினைச்சேன். இப்படி புசுக்குன்னு அனுப்பி வைச்சுட்டே!" என்று உரிமையாகக் கடிந்து கொண்டான்.
"முருகா. நான் உங்க மகன்கிட்டே பேசுறதுக்கு வேலை இருக்காது. நீ நினைக்கிறது போல எல்லாம் தானாக நல்லாவே நடக்கும்"
"என்னப்பா , சொல்றே. எனக்கு ஒண்ணும் புரியல்லே" என்று முழித்தார் முருகன். அதற்குள் வள்ளி இருவருக்கும் மோர் கொடுத்தாள்.
மோரைக் குடித்துவிட்டு "இப்போ புரியாதது. உன் மகன் விழா முடிச்சிட்டு வரட்டும். வந்த பிறகு எல்லாமே புரியும். அவனைப் பத்தி இனிமேல் கவலை படாதே. அவசியம் ஏற்பட்டா நான் பிறகு வந்து பார்க்குறேன்" என்று விடை பெற்றுச் சென்றார் மாணிக்கம்.
பள்ளி நுழைவாயிலில் ஒரே ஒரு அதுவும் சற்று பெரிய அளவில் திறப்பு விழா பற்றிய நிகழ்ச்சிப் பலகையினை வைத்திருந்தார்கள். அதில் தலைமை ஆசிரியர் அவர்களின் பெயரும் அதற்குப் பக்கத்தில் பல பட்டப்படிப்புகளும், அதற்கு கீழ் சிறப்பு விருந்தினர் அவர்களின் பெயர் தான் மட்டும் இருந்தன. படிப்பும் , பதவியும் அதில் குறிப்பிடவில்லை. அதற்கு அடக்கம் , பணிவு தான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
பாண்டியனும் அவன் நண்பர்கள் பலரும் ஆர்வமாக விழாவிற்குச் சென்றனர். பள்ளியில் அனைவருடன் பாண்டியன் இப்படிக் கூடுவது அனேகமாக இது தான் கடைசியாக இருக்கும். இதற்குப் பிறகு எல்லோரும் பிரிந்து கல்லூரி வாழ்கையில் நுழையப் போகிறார்களே!
வழக்கம் போல அனைவரும் முதல் வரிசையில் அமர்ந்தனர்.
கடவுள் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்ந்தனர்.
"இப்போது நமது சிறப்பு விருந்தினர் திரு மதியரசன் அவர்கள் பேசுவார்கள். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது. அவர் ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். பல தொழிற்சாலைக்குச் சொந்தக்காரர். கடுமையான உழைப்பாளி. வேண்டியவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளல். இதைவிட சிறப்பு, அவர் நம் தலைமை ஆசிரியரின் நெருங்கிய நண்பர்!" என்று சொல்ல விழாவிற்கு வந்திருந்த அனைவரும் கைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அவர் என்னப் பேசப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர் நோக்கி காத்திருந்தனர்.
எளிமையான உடையில் காட்சியளித்த அவர் தெளிவான நடையில் பேச்சை ஆரம்பித்தார்.
"நான் இருப்பவர்களைப் பற்றியோ அல்லது இல்லாதவர்களைப் பற்றியோ நான் பேசப் போவது இல்லை. ஒருவேளை அப்படிப் பேசினால் நீங்கள் அது கதையாக நினைக்கலாம் அல்லது அவர்களைப் மிகைப்படுத்தியும் பேசுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டல்லவா? ஆகவே நான் என்னைப் பற்றித் தான் பேசப் போகிறேன். இப்போது உங்களை எல்லாம் பார்க்குபோது எனக்கு என் பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகின்றது. நானும் அன்று +2 படித்து முடித்த பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர்கள் பலர் அவர்களுக்குள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் மூலையில் ஒரு ஓரத்தில் எவ்வித சிந்தனையும் இல்லாமல் இருப்பதை இப்போதைய தலைமை ஆசிரியரும் எனது நண்பருமான கதிரேசன் கவனிக்கத் தவறவில்லை. அவர் மட்டும் என் பக்கத்தில் வந்தார்.
"ஏம்பா மதி. ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே. நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறே. அடுத்து என்ன செய்வதா இருக்கிறே?"
"கதிர், இப்போ இருக்கிற குடும்ப சூழ்நிலையில் மேற்கொண்டு படிப்பது கனவிலே கூட நினைக்க முடியாது. அப்பாவுக்கு வருமானம் அவ்வளவா இல்லை. அக்காவுக்கு கல்யாணப் பேச்சு நடக்குது. இப்போ என்னோட மேற்படிப்பு பத்தி பேசி பிரயோசனம் இல்லை " என்று அவர் தொடங்கிய பேச்சு பாண்டியனின் தற்போதைய குடும்ப சூழ்நிலைக்கு ஒத்து வந்ததால் அதில் அவன் மனம் ஒன்றிப் போனான்.
அப்போ இந்த தலைமை ஆசிரியர் தான் எனக்கு ஆறுதல் சொன்னார்."மதி, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. அதுக்கு ஏன் இவ்வளவு கவலைப்படுறே? உன்கிட்டே இருக்கிற திறமைக்கும் அறிவுக்கும் படிச்சுத் தான் பெரிய ஆளா வரணும் என்பதில்லை. உழைத்தும் பெரிய ஆளாக வரலாம். அதுக்கு பல உதாரணங்கள் இருக்கு! வாழ்க்கைக்கு எழுத, படிக்கன்னு அடிப்படை கல்வி மட்டும் போதும். வசதி இருக்கிறவங்க பல லட்சங்கள் செலவழித்து படிக்கிறாங்க. வசதி இல்லாதவங்க வேலைக்குப் போறாங்க. அவங்களுக்கு படிப்பறிவு வளருது. வேலைக்கு போறவங்களுக்கு அனுபவ அறிவு வளருது. அந்த இரண்டு அறிவிலே அனுபவம் தான் ஜெயிக்கும். நான் அடிச்சு சொல்றேன். என்னை விட நீ தான் பெரிய ஆளாய் வருவாய். வெறும் புத்தகப் படிப்பு இல்லாத உனது சுதந்திரமான அறிவு பல சாதனைகள் செய்யும். உனக்கு பிடிச்சா சொல்லு. என் அப்பாவோட நண்பர் ஒருவர் ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். அங்கே வேலை வாங்கித் தருகிறேன். சம்மதமா? உனக்கும், உங்க அப்பா, அம்மாவுக்கும் சம்மதம்னா நாளைக்கே சேர்ந்திடலாம்" என்று நம்பிக்கை கொடுத்தார். அவர் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும் தான் இன்று நான் செய்யும் பல சாதனைக்குக் காரணம்.
அன்றைக்கு நடுக்கடல்லே தத்தளிக்கிற எனக்கு ஒரு மரக்கட்டை கிடைச்சதா நினைத்தேன். மறுநாள் அப்பா அம்மாவோட சம்மதத்தோட அந்த ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப்பிலே சேர்ந்தேன். தொழில் நுணுக்கங்களை அந்த முதலாளி எனக்கு நன்றாக சொல்லிக் கொடுத்தார். கூடவே தரம், நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கையும் கொடுத்தார். பிறகு வியாபார விசயங்களையும், வாடிக்கையாளர்களை எவ்வாறு திருப்திபடுத்துவது என்பதைத் விளக்கமாய் எடுத்துச் சொல்வார். எனக்குள் இருந்த அத்தனை சந்தேகங்களுக்குத் தெளிவாகவும், பொறுமையாகவும் பதில் சொல்வார். நாளடைவில் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். பிறகு அவரே எனக்கு ஒரு சிறிய ஒர்க் சாப் வைத்துக் கொடுத்தார். நன்றாக ஓடியது. பிறகு அதன் வருமானத்தில் பழைய இருசக்கர வாகனத்தை வாங்கி அதை ஓரளவு புத்தம் புதிய வண்டியாக மாற்றி குறைந்த லாபத்திற்கு விற்க ஆரம்பித்தேன். அதுவும் நன்றாக நடந்தது. பிறகு புகழ் வாய்ந்த நிறுவனத்தின் இருசக்கர ஷோரூம் வைத்தேன். முதல் வருடத்திலேயே அதிகமான விற்பனைக்கும், சிறந்த சேவைக்கும் என்று பல விருதுகள் கிடைத்தது. இப்போது தமிழகமெங்கும் பல கிளைகள் இருக்கின்றன. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுடன் நான் வேலை செய்து வருகிறேன். என்னிடம் வேலை பார்க்கும் அத்தனை பேரும் தங்கமானவர்கள். அவ்வளவு ஏன்? மேற்படிப்பு படிக்க வசதியில்லாத இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் என்னிடத்தில் வேலை பார்த்து நன்றாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு கணினியில் 'ஆப்' எனப்படும் அப்ளிகேசன் செய்வதற்க்கு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சி கொடுத்து அதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதற்கு வழிவகை செய்வதாக இருக்கிறேன். விருப்பமுள்ள மாணவர்கள் நாளைக்கே பயிற்சிக்கு வரலாம். உங்களுடைய வாழ்க்கையில் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதை விட நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கலாம். பலரை நீங்கள் வாழ வைக்கலாம்" என்று கம்பீரமாக குரலில் உரையாற்ற அங்குள்ள அத்தனை மாணவர்களுக்கும் புத்துணர்வு பெற்றதாக உணர்ந்தார்கள். அவர்களின் வருங்கால வாழ்க்கைப் பாதையை தெளிவாகப் மனக்கண்ணில் பார்த்தனர். பாண்டியனின் மனதும் தப்பவில்லை. விழா முடிந்தவுடன் பாண்டியன் மிக மகிழ்ச்சியாக வீட்டை அடைந்தான்.
வீட்டில் நுழைந்தவுடன் "அப்பா, நான் தொழில் நுட்ப மேற்படிப்பு படிக்கப் போறது கிடையாது. நாளை முதல் தொழிலதிபர் மதியரசன் அவர்கள் நடத்தும் 'கணினி ஆப்' பயிற்சியில் சேரப்போகிறேன். ஏன்னா இப்போது இருக்கும் நம்மோட குடும்ப சூழ்நிலையில் நாலைந்து லட்சம் செலவழித்து படிக்கிறது முடியாத காரியம். அப்படி படித்தாலும் படிப்பிற்குத் தகுந்த வேலை கிடைக்குமா? என்பது சந்தேகம். அதனாலே இப்போதே நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு சொந்தக் காலில் நிற்க முடிவு செய்துவிட்டேன். குடும்பத்திற்கு பாரமா இருப்பதை விட இப்போதே வேலை செய்து குடும்பத்தை தாங்கி நிறுத்தப் போகிறேன். என் வாழ்க்கைப் பற்றி நீங்கள் எதுவும் கவலை படாதீர்கள். நானும் மதியரசனைப் போல் சாதித்து என்னைப் போன்ற பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பேன்" என்று தன்னம்பிக்கையோடு பேசியதை கேட்ட முருகனும், வள்ளியும் பூரித்துப் போனார்கள். அப்போது தான் தன் நண்பர் மாணிககம் கடைசியாக சொல்லிவிட்டுச் சென்றதை சற்று நினைவு படுத்திக்கொண்டார் முருகன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$