அன்னை தெரேசாவின் நிழல்
சிறுகதை
கு.கி.கங்காதரன்
"உனது வாழ்நாளில் சமூகத்தொண்டு செய்தவரின் சரித்திரத்தைப் படிப்பது அல்லது பொதுச்சேவையில்
ஈடுபடுபட்டிருப்பவரை ஒருமுறையாவது சந்தித்துப் பேசினால்தான் உனது பூலோக வாழ்வு
அர்த்தமுள்ளதாக இருக்கும்"
அரிதாக அன்று 'நீதிநெறி' (Moral) வகுப்பு நடந்தது. பொதுவாகக் கல்விக்கூடங்களில் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் 'ஏட்டுக்கல்வி'யை மட்டும் அவர்களின் மனதில் ஆழமாக உழச்செய்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இம்மாதிரியான வகுப்புகள், மாணவர்களுக்குள் இருக்கும் மனஇறுக்கத்தைத் சற்று தளர்த்தும் என்பது ஆசிரியர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும்கூட அதைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் என்பது ஒரு கேள்விக்குறியே?
தமிழாசிரியர் கந்தசாமி அந்த வகுப்பை எடுக்கப்போகிறார் என்பதைக் கேட்டவுடன்
மாணவர்களுக்கு உற்சாகம் பீறிட்டது. தமிழாசிரியராய்
இருப்பதால்தான் என்னவோ தமிழ்பாடம் எடுக்கும்போது அவரின் தமிழ் உணர்வோடு கலந்த
உச்சரிப்பானது ஒவ்வொரு வார்த்தையும் உயிர்பெற்று உறவாடுவதைப்போல் கேட்பவர்களை
மெய்மறக்கச் செய்துவிடுகிறது என்பது உண்மையோ உண்மை. இரக்கம்,
மனிதநேயம், அன்பு ஆகியவை அதிகமாகத் தெரியாத இன்றைய
மாணவ சமுதாயத்திற்குச் சிறப்புமிக்கத் அரசியல் தலைவர்கள், சமூகசேவகர்கள்,
அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள் என்று பலரின்
வாழ்க்கைச் சரித்திரத்தின் மூலம் நல்வழி காட்டவேண்டும் என்கிற அளவளாவிய விருப்பம்
அவருக்குள் இயற்கையாகவே இருந்துவந்தது. குறிப்பாக அவரது
வெற்றியைச் சொல்லவேண்டுமானால் ஆங்கிலமே பேச விரும்பும் தனது மாணவர்களைத் தெள்ளியத்
தனித்தமிழில் பேசவைத்த பெருமை அவரைத்தான் சாரும். மாணவர்களிடத்தில்
அவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தை 'தமிழ் கற்காதவர்கள்
பேச்சுவழக்குத் தமிழில் தெரியாமல் பேசலாம். ஆனால் தமிழ்க்
கற்றவர்கள் தனித்தமிழில் பேசுவதுதான் அழகு' என்பதே. அவர் ஒரு நடமாடும் போதிமரம். அவர் மூலம் கல்வியறிவு ஞானம்
பெற்றுப் பெரிய அளவில் இன்று கௌரவமாய் நடமாடுபவர்கள் பலர்.
அன்றைய வகுப்பில் தனது நீண்டநாள் ஆசையான 'அன்னை தெரேசாவின் வாழ்க்கையை சுருக்கமாகவும் அதேவேளையில் மாணவர்களின்
இதயத்தினுள் நுழைத்து அவர்களின் இரத்தத்தோடு கலக்கச்செய்து அவர்களையும்
சமூகத்தொண்டில் நாட்டம் செய்துவிட வேண்டும்' என்கிற
முனைப்போடு வகுப்பில் நுழைந்து தனது வகுப்பைத் தொடங்கினார் கந்தசாமி. உயரிய 'நோபல் பரிசு பெற்றதோடு உலகளவில் பெருமையும்
புகழும் கொண்ட அன்னை தெரேசா அவர்கள், ''தன்னலம் கருதாது வாழ்நாள் முழுவதும் தனது உடல்உருகிப்போவதைப் பற்றியும், வயது தேய்ந்துபோவதைப் பற்றியும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல்
உலகத்தின் பல்வேறு
இடங்களுக்குச சென்று அங்குள்ள பலத்தரப்பட்ட மக்களுக்குப் பல்வகைப் பொதுத்தொண்டுகள் செய்துவந்தார். அவர் தமது இறுதி மூச்சுவரை பசி, பிணி, நோயில் வாடிய ஏழைகளுக்காகவே தொண்டு செய்து உயிர் நீர்த்தார். அன்னைத் தெரேசாவின் இளகிய மனிதநேய மனத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கந்தசாமி பேசியதைக் கேட்ட மாணவர்களில் ஒருவனான
மாணிக்கத்தின் உடலும் மனமும் ஒருவிதப் புத்துணர்ச்சி பெற்றது. எத்தனையோ வகுப்புகள் இதற்குமுன்
நடந்தபோதிலும் அப்போதிருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையும் ஒன்றுதான்
என்று சொல்லமுடியாத அளவிற்கு அவனை அறியாமலே ஏதோ ஒருவித ஞானமும் ஆற்றலும் அவன் மனதைக் கிழித்து அதனுள் நுழைந்து பத்திரமாய் உட்கார்ந்துவிட்டது.
தொடர்ந்து
கந்தசாமி "நீங்கள் மனது வைத்தால் 'தூய்மை இந்தியா'வை இப்பள்ளியின் மூலம் ஆரம்பிக்கலாம்.
வகுப்பறையை, பள்ளிவளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். மரக்கன்றுகளை நடலாம். ஏன்? உங்கள் வீட்டையும், தெருவையும் சுகாதாரமாகப் பராமரிக்கலாம். இங்கு
படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பற்பல உதவிகள் செய்யலாம். அவர்கள்
படும் துயரங்களைப் போக்கலாம். எல்லாவற்றிக்கும் சொந்தப்பணம்
செலவழிக்கவேண்டும் என்பதில்லை. மனது இருந்தால் அன்னை தெரேசா
செய்ததுபோல் பெரிய மனது படைத்த மக்களிடம் பணமோ, பொருட்களோ வாங்கி
எங்கு எப்போது யாருக்கெல்லாம் சேவை தேவையோ அவர்களுக்கு உதவலாம். அதற்குப் பரந்த மனமும், உதவும் எண்ணமும், இரக்க குணமும் இருந்தாலேப் போதுமானது' என்று பலவிதப் பொதுத்தொண்டுகளை அடுக்கிக்கொண்டே போனார். அன்னைத் தெரேசா
மக்களுக்குத் தொய்வில்லாமல் சேவை செய்யவேண்டுமென்பதற்காக அவர் சந்தித்த அவமானங்கள், அளவில்லாத இன்னல்களை எடுத்துச் சொல்லச்சொல்ல மாணவர்கள் அமைதியாகவும் கவனம்
சிதறாமலும் கேட்டனர்.
அவையனைத்தும் கேட்ட மாணிக்கம் "ஐயா, நானும் வருங்காலத்தில் அன்னை தெரேசாபோல் ஆகவேண்டும்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினான்.
அதைக்கேட்ட கந்தசாமிக்கு 'ஒருநாள் வகுப்பிற்கே தன்னால் ஒரு மாணவனை பொதுச்சேவை செய்யும்
எண்ணத்தைத் தூண்டமுடிந்ததே' என்று சற்று திருப்தியடைந்தார்.
"மிக்க மகிழ்ச்சி" என்று அவனைப்
பாராட்டினார். அதோடு அவனிடத்தில் 'முடிந்தால்
உனது அப்பாவை நாளைச் சந்திக்கிறேன்' என்கிறத் தகவலையும் அவனிடத்தில் கூறினார்.
கந்தசாமியும் மாணிக்கத்தின் அப்பா மதியழகனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் தமிழின்மேல் அலாதியான பற்று உண்டு. பள்ளியில் படிக்கும்போதே பொதுத்தொண்டில் இருவருக்கு ஆர்வம் அதிகமாக
இருந்ததால் தங்களால் முடிந்தளவிற்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் தவறுவதில்லை.
அது இன்றளவுக்கும் தொடருவதே சிறப்பு.
வீட்டிற்கு வந்த பிறகும் மாணிக்கத்தின் மனதில் பொதுச்சேவைப் பற்றிய சிந்தனையே
ஓடிக்கொண்டிருந்தது. பொதுச்சேவை செய்வதில் இவ்வளவு துன்பங்கள்
இருக்கின்றனவா? என்று அப்போதுதான் உணர்ந்தான். அத்தகைய துயரங்கள் யாருக்காக எதற்காக தாங்கிக்கொள்ளவேண்டும்? எதற்காக ஏழைகளுக்கு அன்னைத் தெரேசா அவர்கள் தன்னை
வறுத்திக்கொண்டு இத்தனை உதவிகள் செய்யவேண்டும் என்கிற கேள்வியும் கூடவே அவனுள் எழுந்தது. அவ்வாறு எழுந்த எண்ணங்களானது, எவ்வாறு பெரிதான நீர்குமிழி சில வினாடிகளிலே தானாக உடைவதுபோல சில நிமிடங்களிலே அவனைவிட்டு அகன்றதன் அடையாளமாக அவன் அவசரம் அவசரமாகக் கைகால் கழுவிவிட்டு
நேராக டிவி (தொலைக்காட்சி)யின்
முன் அமர்ந்து ரிமோட்டை (தானியக்கி) கையில் எடுத்து டக்கு டக்குவென்று சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான்.
அந்தவேளையில் முக்கியச் செய்தியாக 'வானிலை அறிவிப்பு' அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில்
அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியும் வந்தது. அதாவது 'இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில்
பலத்தமழைப் பெய்யக்கூடும் என்பதாலும் குறிப்பாக சென்னையை அதிவேகக்காற்றுடன் கூடிய புயல்மழை தாக்கக்கூடும் என்பதாலும் பள்ளிக்கல்லூரிகளுக்கு நான்கு தினங்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றன' என்கிற எதிர்பாராதச் செய்தி மாணிக்கத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அச்செய்தியை வீட்டிலுள்ளவர்களுக்கும்
கேட்கவேண்டு மென்பதற்- காகச் சப்தமாக வைத்தான்.
அச்செய்தியைக்
கேட்டவுடன் சமையலறையிலிருந்து ஒருகுரல் "போச்சுடா, மறுபடியும் நாலுநாள் லீவா? இப்படியே லீவுவிட்டுட்டே இருந்தா வாத்தியாருங்க எப்போ பாடத்தை நடத்திமுடிக்கிறது? நீங்க எப்போ பாடத்தைப் படிச்சு தேர்வு எழுதுறது?" என்று மாணிக்கத்தின் அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
"அம்மா, உனக்கு என்னைத் திட்டுவதே ஒரு வேலையாகப் போய்விட்டது. எப்பொழுது பார்த்தாலும் படி, படி... இது மட்டும்தான் உனக்குத் தெரியும். படிப்பதை நான் மறக்கமாட்டேன். அதைத்தவிர எனது இலட்சியம்
மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று மாணிக்கம் தன் பங்கிற்குப் பதிலளித்தான்.
"உனக்கு லீவு விட்டாலும் விட்டாங்க, ஏண்டாப்பா சதா டிவியை வச்ச கண்ணு எடுக்காம பார்த்துக்கொண்டே இருக்கனுமா? இது உனக்கே நல்லா இருக்கா? லீவு விடுறது இதுமாதிரி பொழுதுபோக்குறதுக்கு இல்லே. பாடத்தைப் படிக்கிறதுக்கு! ம்... உனக்கு எப்போ புத்தி வரப்போறதோ" என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் மாணிக்கத்திற்குக் கேட்கும்படி வழக்கம்போல் பல்லவியைப் பாடி
முடித்தாள் அவன் அம்மா கீதா.
மறுநாள் வானிலை எச்சரிக்கையின்படி சென்னையில் கொட்ட ஆரம்பித்த மழையானது, வானத்திலிருந்து வீசியெறியப்பட்ட
தண்ணீர்க்குண்டுகளாய் சாலை, வீடு, வாகனங்கள்,
கடைகள், கட்டிடங்கள், குடிசைகள்,
தெருவோரத்தில் வசிக்கும் மனிதர்களை தயவுதாட்சண்யம் இல்லாமல் தாக்கிக்கொண்டிருந்தது.
அச்செயல் விண்ணிற்கும் மண்ணிற்கும் நடக்கும் போர்களம்போல்
காட்சியளித்தது. அதில் சிக்கிய மனிதர்கள் உட்பட பல்லுயிர்கள்
என்னவென்றுச் செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தது. கொந்தளிக்கும் கடல்போல் அனைத்து இடங்களையும் தீவுபோல்
சூழ்ந்து கொண்டிருந்ததால் மீட்புப்பணிகள் முழுவீச்சில் செய்யமுடியாதபடி
கிட்டத்தட்ட அனைத்துக்கரங்களையும் கட்டிப்போட்டிருந்தது. மின்சாரம் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. மழைவெள்ளம் சாலைகள் இருப்பதே தெரியாதவண்ணம் காட்டாறாய் ஆர்ப்பரித்தபடித் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வினைச் செய்திகளாய் நேரலையாக அனைத்து வீடுகளின் சின்னத்திரையில்
ஓடிக்கொண்டிருந்தன.
சென்னையில் மாணிக்கத்தின் வீடுச் சற்று மேடான பகுதியாதலால் அங்கு மழையின் தாக்கம்
குறைவாகவேக் காணப்பட்டது.
இம்மாதிரி நிகழ்வு, சென்னையானது நூறுஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவித்துக்கொண்டிருந்தது. அதேவேளையில் இத்தகையப் பேரிடரானது, மக்கள் நகரத்தின் தாழ்வான பகுதிகளில் பல வீடுகளைக் கட்டியதாலும், வீடுகளில் மழைநீரைச் சேமிக்கும் வசதி இல்லாமையாலும், சாலைகளில் தண்ணீரை உறிஞ்சிடாத அளவுக்குத் தார், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டதாலும், நீர்வடிகால் கட்டமைப்பு இல்லாததாலும் ஏற்பட்டது? என்கிறப் பலகாரணங்களை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தது. நல்லவேளையாக முன்னெச்சரிக்கை காரணமாகவும், அரசு மற்றும் மக்களின் ஒத்துழைப்புக் காரணமாகவும் மனித உயிர்கள் இறப்பதைக் கணிசமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தது. அதைவிடக் கூடுதல் தகவலாக வாட்ஸ் ஆப், முகநூல் மூலம் பல்வேறுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைச் சென்னைப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுவீச்சில் இறங்கி தொண்டுசெய்வதை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்த்த மாணிக்கத்தின் உள்ளம் பரவசத்தில் ஆழ்த்தன.
பல
பகுதியிலிருந்து வந்திருந்த இளைஞர்கள், பாதித்தவர்கள் பலருக்குப் பால், உணவுப்பொட்டலங்களை வழங்குவது, வெள்ளத்திலிருந்துச் சிலரைக் காப்பாற்றுவது, முதியோர்களைப் பத்திரமாக ஒரிடத்தில் அழைத்துச் செல்வது, மருந்தும் மருத்துவ உதவிகளும் செய்வதை நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த மாணக்கத்தின் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது.
சொல்லியபடி கந்தசாமி, தன் நண்பன் மதியழகனைப் பார்க்க
வீட்டிற்குச்சென்றார். வீட்டுச் சூழ்நிலையை அவர் நோட்டமிட்டார். தொலைக்காட்சிப்பெட்டியில்
மூழ்கியிருக்கும் தன் மாணவன் மாணிக்கம் ஒருபுறம், சமையலறையே கதியென்றுகிடக்கும் அவன் அம்மா, வீட்டுச்சாமான்ககளை ஒழுங்குபடுத்துவதற்கும், வீட்டுவேலைகளைச் செய்துப்பழகிப்போன தன் நண்பன் மதியழகன் ஆகிய எல்லோரும் அவரவர் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
சற்று நிதானித்த கந்தசாமி "தொலைக்காட்சியைப் பார்த்தாயா மதியழகா? எப்படியிருந்த சென்னை! இப்படி ஆகிவிட்டது! ‘கலிகாலம்’ என்பது சரியாகத்தான் இருக்கின்றது! இம்மாதிரிப் புயலும், மழைவெள்ளமும் என்வாழ்நாளிலேப் பார்த்ததே இல்லை. மூலைமுடுக்குகளில் இருக்கும் யார்யாரோ போட்டிப்போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல உதவிகள் செய்யும்போது பக்கத்தில் இருக்கும் நாம் அவங்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று தனது ஆசையைச் சொன்னார் கந்தசாமி.
"நீ சொல்வதுச் சரிதான். ஆனால் இந்த
நிலைமையில் யாரிடத்தில் எந்த உதவி கேட்டு எப்படி அதை அவங்களிடத்தில் சேர்ப்பது
என்பதுதான் தெரியவில்லை?" என்று இருவரும் ஆழ்ந்த
சிந்தனையில் இருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தின் குரல்
கம்பீரமாய்க் கேட்டது.
"வணக்கம் ஐயா. அப்பா, நீங்கள் பேசியதை நான் கேட்டேன். நீங்கள் அனுமதிக்கொடுத்தால் என்கூட படிப்பவர்கள்
இப்பகுதியில் பலர் இருக்கிறார்கள். சற்றும்
தாமதிக்காமல் அவர்களிடம் உணவும் உடைகளும் சேகரித்து அதை எனது நண்பனின் அப்பா
வாகனத்தில் ஏற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் பல அளிக்கலாம்" என்று மாணிக்கம் என்றைக்குமில்லாமல் இவ்வாறுப் பேசியத்தைக் கேட்டு வாயடைத்துப் போனார்கள்.
"மாணிக்கம், ஒருவரிடத்தில் உதவி பெறுவது என்பது மிகவும் கடினமானச் செயல்!" என்றார் கந்தசாமி.
"தெரியும் ஐயா! கொடுக்க நினைப்பவர்களிடத்தில் வாங்குகிறேன். அவர்களில் சிலர் எத்தகைய வார்த்தைகள் பேசுவார்கள்? எவ்வாறுத் தரக்குறைவாக நடந்துகொள்வார்கள் என்பது நீங்கள் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது ஐயா! நீங்கள் நன்னெறி வகுப்பில் போதித்த அன்னைத் தெரேசா அவர்கள் மக்களுக்குச் செய்த தொண்டுகள் பசுமரத்தாணிபோல் என்மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது ஐயா. என்னால் சென்னை மக்கள் படும் துன்பமும் வேதனையும் பார்த்து சும்மா இருக்கமுடியவில்லை ஐயா. சென்னையில் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத தகுந்த நேரத்தில் உதவிசெய்வதுதான் நாம் மற்றவர்களுக்குச் செய்யும் அற்புதத்தொண்டு என்று நான் கருதுகிறேன். அன்னைத் தெரேசா இருந்திருந்தால் என்ன செய்வாரோ அதை நான்செய்ய வேண்டும் என்று என்மனது துடிக்கின்றது. இதுநாள்வரை தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்துப்பழகிப்போன எனக்கு இன்று காலை மழையால்பாதித்த மக்களை நேரலையாகப் பலஊடகங்களில் பார்த்தபின் எனக்கு அன்னைத் தெரேசா அவர்களின் தொண்டு நினைவுக்கு வந்தது. போரில் காயமடைந்தவர்களுக்கு அவர்கள் செய்த தொண்டு இன்றளவும் உலகம் பேசிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல் நானும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தேதீர வேண்டும் என்று என்மனம் சொல்கிறது" என்று தனது உணர்வுகளை மழையாகக் கொட்டினான்.
'மாணிக்கம்தான் இவ்வாறு பேசுகிறானா?' என்று இருவருக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
"கந்தசாமி, நம்ம மாணிக்கம் ஏதோ ஒரு
வேகத்தில் இருக்கிறான். புத்தபகவான் ஞானம் பெற்றதுபோலல்லவா
துள்ளுகிறான். எனக்கென்னமோ நீதான் கண்ணபிரான் அர்சுனனுக்கு உபதேசம் செய்ததுபோல் ஏதாச்சும் சொல்லியிருப்பாய் என்று நினைக்கிறேன். எப்படியோ இந்த அளவுக்கு இவன் பேசுவதே எனக்குப் பெருமையாய்
இருக்கின்றது" என்று மதியழகன் அதிசயமாய்ப் பேசினார்.
"மதியழகா, அவனைத் தடைசெய்யாமல்
பாதித்தவர்களுக்குத் தொண்டு செய்ய மாணிக்கத்திற்கு அனுமதி கொடுப்போம். அவனுக்குத் துணையாய்
நாம் இருப்போம்" என்று கூறியதுதான் தாமதம் மாணிக்கம்
மக்களிடமிருந்து பல உதவிகளைச் சேகரிக்கச் சிட்டாகப் பறந்தான்.
ஒருமணி நேரம், இரண்டுமணி நேரம் என்று நான்குமணி
நேரம் கடந்தது. கையைப் பிசந்தபடி கந்தசாமியும், மயில்சாமியும் இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருந்தனர். 'தன் மகனுக்கு என்னானதோ' என்று பதறியபடி புலம்பினாள்
கீதா. இந்நிலையிலும் மூவரும் நேர்மறை நம்பிக்கையோடு
இருந்தனர்.
"மாணிக்கம் கட்டாயம் நல்ல செய்தியோடு வருவான்' என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் கந்தசாமி.
சிலமணிநேரத்திற்குப் பிறகு, மாணிக்கம்
எங்கு எப்படி யாரித்தில்லெல்லாம் உதவி கேட்டானோ என்றுத் தெரியவில்லை. அவனின் ஆர்வமும் வேகமும் தொண்டுசெய்யவேண்டும் என்கிற எண்ணமும் எல்லோரும் எண்ணியபடியைவிடவும்
கூடுதலாக அனைத்தையும் எளிதாகச் செய்யவைத்தது. இன்றுதான்
மக்களின் எண்ணத்தை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு தனக்கு நல்லதொரு சந்தர்ப்பம்
கிடைத்தது என்றே எண்ணினான்.
"யாரு, மதியழகன் மகன் மாணிக்கமா? பரவாயில்லையே.
உன்னைப்போல மாணவங்க சமூகசேவை செய்றது ரொம்பப் பெருமையா இருக்கு.
எங்களாலே நேரடியா பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவிசெய்ய
முடியலேன்னாலும் உன் மூலமாச் செய்றது நாமக் கொடுத்து வச்சிருக்கனும். எங்களான உதவிங்க இதோ' என்று பலரும்
போட்டிப்போட்டுக்கொண்டு கொடுத்ததை கண்ட மாணிக்கம், மக்களுக்கும்
ஈரம் உண்டு என்பதை உணர்ந்துகொண்டான்.
உணவும் உடையும் நிரம்பிய படி வாகனத்தின் முன்கண்ணாடியில் 'வெள்ள நிவாரணப் பணி வாகனம்' என்கிற
வாசகம் தாங்கிய பதாகையுடன் வந்து சேர்ந்த மாணிக்கத்தைப் பார்த்த மதியழகன், கந்தசாமி, கீதா மற்றும் தெருவில் உள்ள
அனைவரும் வியப்பாகப் பார்த்ததோடு அவர்களும் பல உதவிகள் செய்தனர்.
"ம்.. மாணிக்கம் செய்த வேலை! மகத்தானது. இதைக்கொண்டு பாதிக்கப்பட்ட சிலருக்காவது உடனே உதவ வேண்டும்" என்று சற்றும் தாமதிக்காமல் அம்மூவரும் வாகனத்தில் அமர, வாகனம் வெள்ளம் பாத்தித்த திசையை நோக்கிப் பறந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment