Pages

Wednesday, 9 May 2018

குப்பையில் வாழப்போகும் உலகம் - FUTURE WORLD THAT WILL LIVE IN TRASH



குப்பையில் வாழப்போகும் உலகம் -
FUTURE WORLD THAT WILL LIVE IN TRASH
கட்டுரை 
மதுரை கங்காதரன்
 


தினந்தோறும் திடக்கழிவு உற்பத்தி அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. நகர்ப்புறங்களில் எங்கு பார்த்தாலும் பலவகைக் கழிவுகள் கண்ணுக்குத் தெரிகின்றது. அதன் நீட்சியாக கிராமப்பறங்களிலும் பிரதிபலிக்க ஆரம்பித்து வருகிறது. கிட்டத்தட்டப் பெருநகரங்கள் பெரிய குப்பைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிக்கொண்டு இருக்கின்றது. அதன் கிளையாக 'ஒவ்வொரு வீடு' என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கெல்லாம் முதற் மூலக்காரணம் 'கார்பரேட் நிறுவனங்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றுப்புறம் மாசாகுமே? , சாலையோரங்கள் குப்பையாகுமே? அதனால் மழைநீர் பூமிக்குள் போகாதே? என்பதைப் பற்றி சிறிதும் கவலைபடாமல் அன்றாடம் மக்களுக்குத் தேவைபடும் உணவு வகைகள், மளிகை சாமான்கள், காய்கறிகள், குடிபானங்கள், மின்னனு சாதனங்கள், மருந்து வகைகள் மற்றும் உபகரணங்கள், உடைகள் ஆகியவைகளைக் கவர்ச்சியாகப் பல்வேறு பொருட்களைக் கொண்டு பல்வேறு வடிவப் பொட்டலத்தில் அடைத்து விற்கும் முறை வழக்கமாக ஆரம்பித்து  அதுவே பழக்கமாக மாற்றி இப்போது மக்களை அதற்கு அடிமைபடும் அளவிற்கு வளர்ந்து உச்சத்தைத் தொட்டு இருக்கின்றது. அதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதச் சிந்தனையின் எழுச்சி, கணினியின் மலர்ச்சி என்று சொல்லலாம். அதுமட்டுமல்ல, மனிதர்களுடைய எண்ணங்கள் தினம் தினம் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. அதையே சாதகமாக்கி தங்களின் புதிய சிந்தனைகளைச் செயலாக்கி அதைக் காசாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  

மேலைநாட்டின் 'ஒரே முறை உபயோகி! பிறகு தூக்கி எறி!' என்கிற கலாச்சாரம் இப்போது உலகெங்கும் வேகமாகப் பரவுவதால் நாளை நம் தலைமுறையினர் குப்பைகளுக்கு இடையில் வாழும் அவலமான சூழ்நிலை உருவாகப்போகின்றது. அதனால் சுற்றுப்புறம் மாசடைவதோடு கேடு விளைவிக்கும் பலவித நுண்ணுயிரிகள் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதற்குக் காரணம் மக்களின் சோம்பேறித்தனம், மெத்தனம், அசட்டை, விழிப்பணர்வு இன்மை, கல்வியின்மை போன்றவைகளாகும்.

Image result for The world that lives in the trash

நாமெல்லாம் நினைக்கிறோம், அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் தலைவர்கள், வல்லரசு நாடுகள் எல்லாரும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறவர்கள் என்று. அது முற்றிலும் தவறு. அவர்கள் எல்லோருக்கும் ஒரே சிந்தனை தான். 'மக்களை எவ்வழிகளில் தொல்லை கொடுக்கலாம். அவற்றின் மூலம் எவ்வாறு நமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளலாம்' என்பதே. இதில் மேலும் ஒரு விந்தை என்னவென்றால், பூமியை நோக்கி ஏதோ ஒரு விண்கல் வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியைத்தாக்கி இந்த உலகத்தை அழிக்கும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள். அதுவும் தாண்டி சில ஆய்வாளர்கள் நீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கிறார்கள். அதாவது கண்ணுக்கெதிரே திடக்கழிவுகளால் பூமியானது நாசமாகிக் கொண்டிருப்பதையும், புவி வெப்பமயமாகிக் கொண்டிருப்பதையும், நிலத்தடிநீர் குறைந்து கொண்டிருப்பதையும், நீருக்காக மக்கள் அலைவதையும், நச்சு வாயுக்கள் காற்றை மாசுபடுத்திக் கொண்டிருப்பதையும், கழிவுநீர்களால் நிலத்தடி நீர், நீர்நிலைகள், கடல் அசுத்தமாகிக் கொண்டிருப்பதை எப்படி அவர்களால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறார்களோ?!

இப்போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றது. அதாவது 'குழந்தையைக் கிள்ளி அழவிட்டு பிறகு தொட்டிலை ஆட்டுவதுபோல்' பாசாங்கு செய்யும் செயல்தான் நடந்துகொண்டு இருக்கின்றது. இப்போது இதுவரை உருவாகி இருக்கும் திடக்கழிவுகள் மலைபோல் உயர்ந்துகொண்டு வருக்கின்றது. அதில் சொற்ப அளவு மண்ணுக்குள் புதைத்து வருகிறார்கள். சிறிதளவு எரிக்கவும் செய்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிய இக்கழிவுப்பொருட்கள் அதை அழிக்க மக்களின் வரிப்பணம் வீணாகப்போகின்றது.

இதிலும் பன்னாட்டு மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் தந்திரம் அடங்கியிருக்கின்றது. அதாவது நீங்கள் குப்பை கொட்டுங்கள், அதைப் பொறுக்கக் குத்தகை எடுத்து அதன் மூலம் கோடானகோடி சம்பாதிக்கலாம் என்று தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகின்றது. கூடியவிரைவில் எந்தக் குப்பையானாலும் தனியார் மூலமாகதான் அப்புறப்படுத்தவோ அல்லது குப்பைக்கூடங்களுக்குக் கொண்டு சேர்க்கவோ, மறுசுழற்சி செய்யவோ முடியும். அரசாங்கம் ஏதும் செய்யாது. அதற்குத் தனியாக ஒரு விலைகொடுத்தால் நடக்கும். இல்லையென்றால் வீட்டுக்குள்ளே எல்லாக் குப்பைகளை வைத்துக் கொள்ளவேண்டும். இது கூடியவிரைவில் நடக்கப்போகிறது. அப்போது மக்கள் 'குய்யோ, முய்யோ'ன்னு கத்தவும், கதறவும் செய்வார்கள்.

இவ்வாறு பொட்டலங்களின் மூலம் திடக்கழிவாக பூமி நச்சுத்தன்மை ஏறவும், வாகனம் மூலம் கற்று மாசுபடுவதையும், தொழிற்சாலைக் கழிவுநீரினால் நீர்நிலைகள் அசுத்தமாவதையும், கடல்வாழ் உயிரினங்கள் அழிவதையும் தடுக்க அதிலிருந்து மனித இனம் காக்கும் ஏதாவது ஒரு கூட்டமைப்போ, சட்டமோ, இயக்கமோ ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றதா? என்றால் அது கண்டிப்பாக 'இல்லை' என்பதே உண்மை. ஏதோ ஒப்புக்கு பக்கம் பக்கமாக சட்டத்தையும் அதை மீறுவோருக்கான தண்டனையும் இயற்றி வைத்ததோடு சரி. அது செயலாக பின்பற்றப்படுகின்றதா? என்கிற கண்காணிப்பு அறவே இல்லை.                         
'குப்பைதானே! கழிவுதானே! மாசுதானே! அசுத்தம்தானே!' என்று இன்று அலட்சியமாக இருந்தாலோ அல்லது செயல்பட்டாலோ வரும்காலத்தில் அதன் எதிர்விணை மிகத்தீவிரமாக இருக்கும் என்பதில் எள்ளவிலும் ஐயமில்லை. அண்மையில் பல புதிய புதிய நோய்கள் உண்டாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது நம்புவது கடினமாகத்தான் இருக்கும். மேலும் குப்பைகள் கையாளுவதற்குத் திறமையும், மிகுந்த கல்வியும், அறிவியல் அறிவும், மாசுக்கட்டுப்பாடு சட்டங்களை பின்பற்றும் மன உறுதியும் மிகவும் தேவை.

உங்களிடம் ஒரு கேள்வி! நீங்கள் எதிர்கொள்ளும் குப்பைகளில் எவை மறுசுழற்சிக்கு உரியவை? அதேபோல் எவை புதைக்கப்பட வேண்டியவை? எவை எரிக்கப்பட வேண்டியவை? எவை மீண்டும் பயன்படுத்தக் கூடியவை என்று சரியாகச் சொல்லமுடியுமா? கண்டிப்பாக முடியாது! ஒரு எடுத்துக்காட்டு. நாம் பயன்படுத்தும் காகிதம், அட்டை போன்றவைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவை. ஆனால் ஆய்வு, அதில் சுமாராக 50% கீழ்தான் மறுசுழற்சிக்கு போகின்றது. அதுபோல் பிளாசுடிக் விசயத்தில் கூட. அதாவது பல ஆண்டுகளாக மரத்தைக் கொண்டு காகிதம், அட்டைகளையும், பிளாசுடிக் மூலப்பொருட்களையும் உபயோகித்து வருகிறோம். அப்படி இருக்கும்போது இருக்கின்ற அதன் கழிவுக்கொண்டு நாம் மறுசுழற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இன்றும் மரத்தை வெட்டுகிறோம். புதிய பிளாசுடிக் மூலப்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அப்படியென்றால் அதன் கழிவுப்பொருட்கள் என்ன ஆயிருக்கும்? அது பூமியில் பல இடங்களில் பத்திரமாக இருக்கின்றது என்றுதானே பொருள். மேலும் கணினிப்புரட்சி வந்திராவிட்டால் பூமியில் ஒரு மரம்கூட மிஞ்சி இருக்காது.  அவைகள் மறைமுகமாக மரங்களைக் காப்பாற்றி வருகின்றது.  

Image result for The world that lives in the trash

குப்பைகள் இவ்வாறு மனிதகுலத்தை நாசம் செய்ய வந்தச் 'சாத்தான்' என்றே அழைக்கலாம். ஏனென்றால் அதன் ஆக்கம் பலவித பண்புகள் கலந்த பொருட்களால் ஆனது. எடுத்துகாட்டாக ஒரு காகித்தில் ஒரு பிளாசுடிக் காகிதத்தை வைத்து அதில் உணவுபண்டத்தை வைத்து பொட்டலமாகக் கட்டி இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் காகிதம் மறுசுழற்சிக்கும், மெல்லிய பிளாசுடிக் காகிதம் புதைக்கவும், மிஞ்சிய உணவுப்பண்டத்தை மக்க வைக்கவும் வேண்டும். ஆனால் நாம் அவற்றை ஒன்று சேரத்து குப்பையாகப் போடுவதால் காகிதம் மறுசுழற்சியாவதுத் தடுக்கப்படுகிறது. இப்படி குப்பைகளுக்குப் பலபணபுகள் இருப்பதால் படித்தவர்களுக்கே குழப்பம் வருகிறதென்றால், குப்பை அள்ளும் படிக்காத பாரமரர்களினால் என்ன செய்ய முடியும். ஒன்று மட்டும் உறுதி. குப்பைகள் வாங்கும் இடத்திலே பிரித்து பிரித்து வாங்குவது தான் நல்லது. அது தவிர்த்து குப்பைகள் ஒரேயடியாய் வாங்கி மொத்தமாகச் சேர்த்து வைத்து பிறகு பிரிக்கலாம் என்றால் அது இயலாத காரியம். ஏனெனில் நாள் ஆக ஆக குப்பைகளில் இருந்து துருநாற்றம் வருவது அதிகமாகும். சரி கண்காணாத இடத்தில் புதைக்கலாம் என்றால் அங்கு வரை யார் எடுத்துச் செல்வது? யார் குழியைத் தோண்டுவது? யார் அதில் போட்டு மூடுவது? அதற்கு பணம் கொடுப்பது யார்? அதைவிட்டு எரிக்கலாம் என்றால் அதிலிருந்து வெளிப்படும் நச்சுவாயுக்களை எப்படி தடுப்பது? அதனால் மக்களுக்குப் பாதிப்பு உண்டானால் யார் பதில் சொல்வது? என்கிற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லையே?!

அப்படியென்றால் பூணைக்கு யார் மணிகட்டுவது? என்கிற பழமொழியில் முடியும். அதாவது எந்த ஒரு ஆக்கப்பூர்வமாக வேலையும் காசு இல்லாமல் நடக்காதுஅதுவும் பணத்தைத் தண்ணியாகச் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் தானே. அரசாங்கம் செய்யட்டும் என்றாலும் கழிவு அகற்றும் வேலைகள் முழுமையாக நடக்காது. ஆனால் பணம் மட்டும் கார்பரேட் நிறுவனத்திற்குத் தந்து கொண்டே இருக்கவேண்டும். மேலும் அவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்களை வைத்துக் கொண்டே பாதி வேலைகளை முடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன சொல்வோம்? அரசு கார்பரேட் நிறுவனத்திற்குத் துணை போகின்றது என்று போராட்டம் பண்ணி அரசியல் ஆதாயம் தேடவேண்டியது. ஆக தானும் செய்யக் கூடாது. பிறரையும் வேலை செய்யவிடக்கூடாது என்கிற சித்தாந்தத்தில்தானை அரசியல் நடக்கின்றது. மக்கள் பொதுவாக கண்கெட்ட பின்னேதான் சூரியனைப் பார்த்து வணங்க ஆசைப்படுவார்கள்! என்பது உண்மை தானே.

சரி, நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்க வேண்டியது பார்க்கலாமா? எவ்வகைகளில் இ்க்குப்பைகளைக் கையாளலாம். மேற்கொண்டு உருவாகாமல் தடுக்கலாம். இருக்கின்ற குப்பைகளை என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். அரசாங்கம் 'குப்பைச் செயலி' ஒன்றை உருவாக்கி அதில் குப்பை வகையினை தினமும் பதிவேற்றம் செய்திட வேண்டும். முதலில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட, கல்லூரி, பள்ளி, அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவ மனைகள், தியேட்டர்கள், மால்கள், மார்கெட், திருமண மண்டபங்கள் போன்றனவற்றில் அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது குப்பைகள் உற்பத்தியாகும் இடங்கள், அதன் அளவுகள் மற்றும் அதன் வகைகள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் வேண்டும்.  

இப்போது சேர்ந்து இருக்கின்ற குப்பைகளைக் கண்டிப்பாக மறுசுழற்சி, புதைப்பது, எரிப்பது, மறுபயன்பாடு என்று பிரித்தே தீரவேண்டும்.

Image result for The world that lives in the trash

இனி சேரவிடாமல் தடுக்க

1. எந்த ஒரு பொட்டலம் மடிக்கும் பொருளில் கட்டாயம் அதன் பண்புகளுக்குத் தகுந்தாற்போல் எவ்வகையில் குப்பையினை ஒழிக்கவேண்டும் என்கிற முறையினை நிறத்தின் மூலம் தெரியப்படுத்தலாம். சிவப்பு - எரிக்க (மருந்து, நச்சு உலோகம், வேதிப்பொருட்கள், மின்னணு பொருட்கள் போன்றவை), பச்சை - மக்க (உணவு, இலை, காய்கறிகள், கனிகள் போன்றவை), ஊதா - மறுசுழற்சி (தகுந்த பிளாசுடிக், மரக்கட்டைகள் போன்றவை), மற்றும் மஞ்சள் - மறுபயன்பாடு (கண்ணாடி புட்டிகள், உலோக டப்பாக்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவை)  என்றபடி இருந்தால் குழப்பமில்லாமல் இருக்கும். 

2. பள்ளி குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களுக்கும் குப்பைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3. குப்பையினைச் சேகரிப்பவர்கள் குறைந்த அளவு கல்வித்தகுதியும், அதில் அச்சிடப்பட்ட நிறத்தினைப்பற்றிய விளக்கம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

4. குப்பை சேகரிப்பர்கள் விலை உயர்ந்த பொருட்களைத் தவிர மற்ற பொருட்களையும் சேகரிக்க வலியுறுத்த வேண்டும்.

5. அவர்களை அமைப்பு சாராத் தொண்டு நிறுவனங்கள் வழிநடத்த வேண்டும்.

6. ஒவ்வொரு வார்டு உம் அங்குள்ள அல்லது ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

7. வாகன விற்பனை கட்டுப்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பு இல்லாத வாகனத்தை ஓட்டிட அனுமதி அளிக்கக் கூடாது.

8. பிளாசுடிக் உற்பத்தியாளர்களை கட்டுப்படுத்துவதுடன், புதிதாகத் தொடங்குபவர்களுக்கு மாசுக்கட்டுப்பாடு சட்டத்தை கண்டிப்பான முறையில் பின்பற்றச் செய்யவேண்டும்.

9. பிளாசுடிக் மற்றும் காகித உற்பத்தியாளர்கள் கட்டாயம் அவர்களின் விற்பனை அளவுக்கேற்ப மக்கள் கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று அவர்களின் ஐயங்களை போக்க வேண்டும்.

10. குப்பைச் சேகரிப்பவர்கள் நேரடியாக வீடுகளுகுச் சென்று பிரிக்கப்பட்ட குப்பையினை மட்டும் பெறவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு வகை குப்பை மட்டும் பெறவேண்டும். ஒரே நாளில் எல்லாவிதக் குப்பைகள் பெறவேக் கூடாது.

11. நடமாடும் குப்பை வண்டி மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு குப்பை மட்டும் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

12. பொது இடங்களில் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகள் வைப்பது தவிர்க்க வேண்டும். அதிக குப்பைகள் தனியாக நகராட்சிக்குத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

Image result for The world that lives in the trash

இவ்வாறு செய்தால் மட்டுமே வருங்கால சந்ததியினர்கள் தப்பிப்பார்கள். இல்லையேல் அவர்களுக்கு குப்பை ஒரு சொத்தாக விட்டுச் செல்ல நேரிடும். எல்லா இடத்திலும் குப்பையினைப் புதைக்க ஆரம்பித்தால் பின்பு அதன் மேல் தான் மக்கள் குடியேற வேண்டியிருக்கும். எவ்வாறு 'மயான இடங்கள்' குடியிருப்பு இடமாக மாறியதோ அவ்வாறு குப்பை விசயத்திலும் நடைபெற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. ஆக குப்பை விசயத்தில் மக்கள் சற்று அக்கறையாகச் செயல்பட்டால் பூமியைக் காக்கலாம். அதனால் மழைநீர் நிலத்தடிக்குச் செல்லும். அதன் நீர்மட்டம் உயரும். அதோடு மரம், செடி, கொடிகள், கால்நடைகள், நீர்வாழ் உயிரினங்கள் பெருகும். மக்களின் வாழ்வாதாரம் பெருகும். அதனால் தண்ணீர் தட்டுப்பாடின்றி, பசிப்பஞ்சமின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம்.  
*****************************


1 comment: