Pages

Wednesday, 23 January 2019

13.1.19 தைமகளே தைமகளே வருக இங்கே தமிழர்களுக்குத் தமிழ்பற்று தருக நன்றே




அன்று நான் வாசித்தக் கவிதை 
தைமகளே தைமகளே வருக இங்கே
தமிழர்களுக்குத் தமிழ்பற்று தருக நன்றே
மதுரை கங்காதரன் 

தொன்று தொட்டுத் தொடரும் திருநாள்
தைப்பொங்கல் கொண்டாடும் தமிழர்களே
தொன்மையான மூத்தமொழித் 'தமிழே'
தமிழரின் அடையாளமென உணர்வீரோ.

அடங்க மறுத்துச் சீறிப்பாயும்  காளைகளை 
அடக்கும் சிங்கங்களைப் பெற்றத் தமிழ்த்தாயே 
தமிழில் கலந்துள்ள கிரந்த எழுத்துக்களைத்
தணிக்கை செய்யும் துணிவை தருவாயே.

முன்னிரு ஆண்டுகள் முடங்கிய சல்லிக்கட்டை
மெரினாவில் முடிவு கட்டியத் தமிழினமே
தமிழில் தழுவி நிற்கும் அந்நியச் சொற்களைத்
தூக்கி எறிந்து வலிமையை நிலைநாட்டுவாயே .

மஞ்சுவிரட்டு வாடிவாசலில் நுழைந்த காளைகளை
முட்டிமோதி விரட்டும் திறன்மிக்க தமிழர்களே
தமிழில் பின்வாசலில் நுழைந்த அயலெழுத்துகளைத்
தடுத்து விரட்டும் நெஞ்சுறுதியை காட்டுவாயே.

உலகத் தமிழர்களே ஒருகுடையில் கூடுங்கள் 
உறவுகளே நட்புகளே சபதம் எடுங்கள்
தைத்திருநாளில் பொங்கல் திருநாளை மறவோம்
தமிழ்பற்றைத் தலையாய்த் தவறாது கடைபிடிப்போம்.

கு.கி.கங்காதரன், மதுரை


மேலும் கவிஞர்களின் கவிகள் மற்றும் மின்படங்களுக்கு.....
இதனை 'கிளிக்' செய்யவும்...































மின்படங்களுக்கு நன்றி....
 ஐக்கூ திலகம் திரு இரா. இரவி மற்றும் திரு கார்த்திகேயன் அவர்கள்.. 

No comments:

Post a Comment