என்று மடியும் அற்பகுணம்?
சிறுகதை
மதுரை கங்காதரன்
'கல்யாணத்தரகர்
தங்கமணி' மனசு வைத்தால் எந்த ஒரு சிக்கலான கல்யாணமும்
சிறப்பாய் முடித்துக் காட்டும் சாதூரியம் கொண்டவர். என்னதான் வான்மதியினிடத்தில்
அழகும் அறிவும் கொட்டிக்கிடந்தாலும் சுமாரான வசதியின் காரணமாக அவளின் திருமணம் தள்ளிப்போய்கொண்டே இருந்தது.
இந்தச் சூழலில் பிரபல செல்வந்த சீமான் நல்லகண்ணுவின்
மகன் செங்கதிரோனுக்கு வான்மதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். அதற்கு காரணம் அவளின் குணமே.
ஒரு
நிகழ்ச்சியின்போது மேடையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒரு சமூகத் தொண்டர் விழா முடிவுற்ற பிறகு
கூட்டத்தைப் பார்த்து "அனைவருக்கும் ஒரு சிறிய விண்ணப்பம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் நடத்திக்
கொண்டுவரும் 'தர்ம
தொண்டு நிறுவனத்திற்கு' உங்களால் இயன்ற உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று
ஒரு அறிவிப்பை வெளியிட்டவுடன் அவை முழுவதும் நிசப்தத்தால் நிரம்பியது.
ஒருவர்கூட
உதவி செய்ய முன்வராதபோது வான்மதி விறுவிறுவென்று மேடையில் ஏறி "ஐயா தாங்கள்
நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு நான் எனது முதல் காணிக்கையாக ரூபாய் ஐந்தினை
கொடுக்கிறேன்" என்று கொடுத்ததைத் தொடர்ந்து கீழே அமர்ந்திருக்கும்
அவையோர்களைப் பார்த்து "நீங்கள்
ஒருவேளை இம்மாதிரி சிறுகாணிக்கை கொடுப்பதற்கு தயங்கமோ கூச்சமோபடலாம். ஆகவே நானே உங்கள்
இருக்கைக்கு வருகிறேன். நீங்கள் செய்யும் இந்த சிறுஉதவிக்குக் கைமாறாகக் கடவுள்
உங்களுக்குப் பெரிய உதவி கட்டாயம் செய்வார்" என்று கூறியவுடன் ஒவ்வொருவரும் நீ,
நான் என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களால் முடிந்த காணிக்கைகளை வழங்கினார்கள். சேர்ந்த பணம் அனைத்தையும் அந்த தொண்டு நிர்வாகியினிடத்தில்
கொடுத்தபோது அரங்கமே கைதட்டித் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியது.
அதை
வாங்கிக்கொண்ட நிர்வாகி "இப்போது இதில் நிறைய பணம் இருக்கின்றது. இந்த பெண் கொடுத்த ஐந்து ரூபாய்
விதையே இப்படி பெருகியுள்ளது" என்று பாராட்டினார்.
அக்கூட்டத்தில்
செங்கதிரோனும் இருந்ததோடு அப்பெண்
காட்டிய ஆர்வத்தையும் பார்த்துப் புல்லரித்துப் போனான். அவன் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. அப்பெண்ணிற்கு ஒருவேளை திருமணம் நடக்காமல்
இருந்தால் தானே கட்டிக்க
ஆசைப்பட்டான்.
"ஐயா
தரகரே, பையன் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்குப் போனானாம். அங்கே ஒரு
பொண்ணோட குணத்திலே
மயங்கிட்டான்" என்றதோடு அவளைப் பற்றி தெரிந்த விவரத்தைச் சொன்னார் நல்லகண்ணு.
"ஓ
.. அந்தப்
பொண்ணா? நான்
சொல்றேன்னு என்று தப்பாக நினைக்காதீங்க. இந்தப் பொண்ணுக்குப் பதிலா உங்க அந்தஸ்துக்கு
ஏத்தாப்போல ஜாதகமும், போட்டோவும் வச்சிருக்கேன். அதிலே ஒண்ணு காட்டுங்க. சிறப்பா கல்யாணத்தை முடிப்போம்"
என்று பிடிகொடுக்காமல் பேசினார்.
"என்ன
சொல்றீங்க. அந்தப்
பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும்னு என்மகன் சாதிக்கிறான். ஏன் அந்த பொண்ணுக்கு என்ன
குறைச்சல்?"
"அச்சச்சோ
வசதியைத் தவிர எந்தக் குறையும் இல்லை! நல்ல குணமுள்ள பொண்ணு. அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க உங்க பையன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று
யதார்த்த உண்மையையை எடுத்துரைத்தார் தரகர்.
அவர்
அனுபவத்தில் இந்தக் கல்யாணம் கட்டாயம் நடக்காது என்பது தெரியும்.
"தரகரே,
அந்தப் பெண்ணின் வசதி பத்திக் கவலை வேண்டாம். நம்ம கிட்ட நல்ல
வசதி இருக்குது. அவர்களின் வசதியைக் காரணம் காட்டுறது எனக்கு அற்பமாத் தோணுது. ஏன்
தரகரே? கல்யாணத்திற்கு
பெண்வீட்டார்கள் மட்டுமா செலவு செய்யணுமா?
ஏன் மாப்பிளை வீட்டார்கள் செய்யக்கூடாதா? கல்யாண
செலவு முழுவதும் நாங்களே செய்யுறோம். நீங்க அந்தப் பெண்ணோட சம்மதம் மட்டும்
வாங்கிட்டு வாங்க" என்று இளவட்டம் ஆவேசமாக வீறுகொண்டு எழுந்ததை இப்போதுதான்
அவன் அப்பா பார்க்கிறார்.
"கதிர்,
உனக்கு ஒன்றும் தெரியாது." என்று தன் மகனை அடக்கிவிட்டு
"தரகரே என் பையனுக்கு நாட்டுநடப்பு எதுவும் தெரியாது. பொண்ணு வீட்டுக்காரங்ககிட்டே இந்தசமயம்
கேட்டு வாங்கிட்டாதான் போச்சு. அவங்களாலே எவ்வளவு செய்ய முடியுமோ செய்யட்டும்" என்று தரகரை முடுக்கினார்
நல்லகண்ணு.
"அப்பா,
இது அந்தப்
பெரியவரின் காதுக்கு போச்சின்னா நம்மளை உண்டு இல்லேன்னு செய்துடுவார். அவர்கிட்டே அசிங்கப்படணுமா? நல்லா யோசிங்க!" என்று ஒரு
குண்டைத் தூக்கிப் போட்டான் செங்கதிரோன்.
ஒருவித அதிர்ச்சி நல்லகண்ணுவின் முகத்தில் தெரிந்தாலும் பிறகு சுதாரித்து, "அவருக்குத்
தெரியத்துக்குள்ளே கல்யாணம் முடிந்திடும். அப்புறம் என்ன செய்வாரு?" என்று பதிலளித்தார்.
இருவரும்
பேசிக்கொள்வதை புரியாதவாறு "யாரு அந்த பெரியவர்? ஏன் அந்தப் பெரியவர் பேச்சு
எடுத்தவுடன் உங்க முகம் சுருங்கி பேய் அறஞ்சதுபோல் ஆனது?"
"அதெல்லாம்
ஒண்ணுமில்லே தரகரே. நீங்க ஆகவேண்டிய வேலையைப் பாருங்க" என்று உத்தரவு
கொடுத்தார் நல்லகண்ணு .
பெண்வீட்டில்
"இதோபாருங்க,
அந்தப் பணக்காரப் பையன் உங்க பெண்ணைக்கட்டிக்க ரொம்ப
ஆசைப்படுறான். தங்கமான பையன். எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. ஏதோ உங்களாலே
முடிஞ்சதை உங்க பொண்ணுக்காவது செய்யுங்க" என்று அழுத்தினார் தரகர்.
இதைக்
கேட்ட வான்மதி "அப்பா,
நாம இருக்கும் இந்த சூழ்நிலையிலே உங்களை கவனிக்க என்னை விட்டால் வேறுயாரும்
இல்லே. எனக்கு கல்யாணம் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். காலம் முழுக்க உங்களை
கவனிச்சா அதுவே போதும்" என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.
"ஆகா,
ரொம்ப நல்லா இருக்கு. இப்படியே இருந்தா ஊரு என்ன சொல்லும்? தன்னோட ஒரேயொரு பொண்ணுக்குக்கூட கல்யாணம் செய்துகொடுக்க முடியலேன்னு
பேசுவாங்க. நாங்க கடன்பட்டாவது உன்னோட கல்யாணத்தை முடிச்சே தீருவோம்" என்று
ஆணித்தரமாகப் பேசினார்.
"அப்பா,
நீங்க ஒரு முடிவு எடுத்தா அதிலிருந்து பின்வாங்க மாட்டீங்கன்னு
எனக்குத் தெரியும். எல்லாம் கடவுள் விட்ட வழி" என்று சமாதானமானாள்.
"அப்போ
அடுத்த வாரம் ஒரு நல்லதினத்திலே பெண்பார்க்க அவர்களை அழைச்சிட்டு வர்றேன்" என்று விடைபெற்றார் தரகர்.
அந்த
நல்லநாளில் தரகர் வான்மதியின் வீட்டினுள் நுழைத்தார். "நீங்க செய்த புண்ணியமோ
உங்க பொண்ணு செய்த புண்ணியமோ இந்த கல்யாண சம்பந்தம் நல்லபடியா முடியும்ன்னு எனக்கு
நம்பிக்கை இருக்குது. சீக்கிரம் தயாராக இருங்க. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடுவாங்க" என்று
அவசரப்படுத்தினார் தரகர்.
வெளியில்
தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாலும் உள்ளே அவளின் அம்மா அப்பாவின்
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. உதட்டளவில் சிரிப்பை
வம்படியாக வரவழைத்து உட்கார்ந்து இருந்தாள் வான்மதி.
முதல்
வரவிலேயே நல்லகண்ணு தன்னுடைய பகட்டான பணக்காரத்தனத்தைக் காட்டினார். பளபளக்கும் காரில் பவனி வந்தார்.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் பொறாமைகொண்டாலும், 'வான்மதிக்கு இருக்கும் நல்ல குணத்திற்கு கடவுள்
ஒரு நல்ல காரியாத்தைச் செய்திருக்கிறார். கடவுள் இருக்கிறார். நல்லதை நினச்சா நல்லது நடக்குன்னு இப்போதாவது மக்களுக்குப் புரியட்டும். பெரிய இடம் தேடி வருதுன்னா எவ்வளவு
புண்ணியம் பண்ணியிருக்கணும்?'
என்று வாய்நிறைய வாழ்த்தினார்கள்.
வந்தவர்களை
மகிழ்ச்சியாக வரவேற்று நாட்டில் நடக்கும் பொதுவான விசயங்களை பேச ஆரம்பித்தனர். ஆனால் வான்மதியின்
மனம் அதில் லயிக்க மறுத்தது. 'இந்தக் கல்யாணம்
எப்படி முடியப்போகுதோ?' என்கிற
அச்சத்தில் இருந்தாள்.
"தரகரே,
வந்த காரியத்தை முதல்லே முடிப்போம்" என்றார் நல்லகண்ணு.
வானத்தில்
இருக்கும் அந்தச் சூரியனின்
கதிர்கள் எப்போதும் நிலவில் விழுவதுபோல் தன் பார்வையும் வான்மதி மீது எப்போதும்
விழுந்துகொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணினான் செங்கதிரோன். ஆனால் வான்மதி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து தலைகுனிந்தே இருந்தாள்.
"அப்போ.. மாப்பிள்ளைக்கு நீங்க என்ன பண்றீங்கன்னு விவரமா சொல்லுங்க" என்று தரகர்
ஆரம்பித்தார். ‘அப்பா
என்ன வாக்குத் தரப்போகிறாரோ?’ என்று வான்மதிக்கு பயம் அதிகமாகியது.
"பொண்ணுக்கு
நான்.." என்று ஆரம்பிப்பதற்குள் வான்மதி வைத்துக்கொண்டிருந்த கைபேசி
ஒலித்தது. எல்லோரும் கைபேசியை அனைத்துவிடுவாள் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது
"அப்பா 'சாத்தனார்' ஐயா
பேசுறார்" என்று ஓடிப்போய் தனி அறையில் பேச்சைத் தொடர்ந்தாள்.
ஓரிரு
நிமிடங்கள் பேசியபின்னே "வான்மதி
அங்கே ஏதாவது விசேசமா?" என்று மறுமுனையில் கேட்க
"விசேசம் இருக்கு. ஆனால் என்னவென்று முடிஞ்ச பின்னே சொல்றேன்" என்று தன்
பேச்சை முடித்துக்கொண்டாள்.
இந்தச் செயலை பையன் வீட்டார்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற படபடப்பு
வான்மதி அப்பாவுக்கு இருந்தது.
மாறாக
செங்கதிரோனும் நல்லகண்ணுவும் சிலைபோல உட்கார்ந்து இருந்தனர்.
அவர்களை
சகஜ நிலைமைக்கு கொண்டுவருவதற்காக விட்ட இடத்திலிருந்து சற்று உறக்கவே பேச்சைத் தொடர்ந்தார்.
"பொண்ணுக்கு
.." என்று மறுபடியும் ஆரம்பிப்பதற்குள்
"அதெல்லாம்
இருக்கட்டும். இப்போ உங்க பொண்ணு 'சாத்தனார் ஐயா’ பேசுறாருன்னு சொல்லிட்டு போனதே யாரு அந்த சாத்தனார்? அவரு எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று
தளர்ச்சியான குரலில் கேட்டார்.
"இந்த
சமயத்திலே என் பொண்ணு இப்படிச் செய்திருக்கக் கூடாது. அதுக்கு மன்னிச்சிடுங்க.
அந்த சாத்தனார் ஐயா எங்க குடும்ப நண்பர். நீங்க
எப்படி ஒரு நிகழ்ச்சியிலே என் பொண்ணைப் பார்த்தீங்களோ அதேமாதிரி அவரும் ஏதோ ஒரு நிகழ்ச்சியிலே என்
பொண்ணை பார்த்திருக்கார். அவரோட கனிவான பேச்சு பிடிச்சதனாலே ஒருநாள் வீட்டுக்கு
வாங்கன்னு கூப்பிட்டுருக்கா. அவரும் வந்தார். வயது என்னைவிடக் கூடுதலாக
இருந்தாலும் அவரோட அன்புப்பேச்சு நட்புறவா தொடர்ந்துட்டே இருக்கு" என்று
புதிரை அவிழ்த்துவிட்டார்.
"ஆமாம்.
அவர் எந்த கார்லே வருவார்?" என்று நல்லகண்ணு கேட்டவுடன்
சிரித்துக்கொண்டே "காரா? நடந்துதான் வருவார்"
என்று மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தார்.
"நடந்தா?
ஒரே குழப்பமா இருக்கே. எங்களுக்கும் 'சாத்தனார்'
பேர்லே ஒரு பெரியவரைத் தெரியும். அவராக இருப்பாரோ? என்கிற பயம் தான்"
"அட
சாத்தனார் பேர்லே நிறைய பேர் இருக்கலாம். உங்க சாத்தனார் பெரியவர் கட்டாயம் பெரிய
பணக்காரராக இருப்பார். இவர் ரொம்ப எளிமை"
"நீங்க
நினைக்கிறாப்பிலே 'சாத்தனார்' பேரு
அரிது. அவரோட புகைப்படம் ஏதாவது …?"
"என்
பொண்ணோட கைபேசியிலே இருக்கு" என்று அந்த நிகழ்ச்சியிலே எடுத்த படத்தைக்
காட்டினார்.
"அதனைப்
பார்த்த இருவரும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தொட்டதுபோல் அதிர்ச்சியில் உறைந்தனர்.
"அதே
சாத்தனார்!" என்றவாறு இருவரும் வான்மதியின் அப்பா காலில் விழுந்தவாறே " எங்களை நீங்க மன்னிக்கிறதா
சொன்னாதான் எழுந்திருப்போம்" என்று விடாப்பிடியாய் விழுந்துகிடந்தனர்.
"உங்களை.. நான் மன்னிக்கிறதா? அப்படியென்ன நீங்க தப்பு
செஞ்சீங்க?"
"நான்
உங்ககிட்டே சீர் பணம் கேட்டது தயவுசெய்து அவர்கிட்டே சொல்லிடாதீங்க. சொன்னா அவரு
எங்களை அற்பமா பார்ப்பாரு" என்று கெஞ்சினார்.
"முதல்லே
எழுந்திருங்க" அவர்கள் எழுந்திருந்தும் கூனிக்குறுகி நின்றனர்.
வான்மதிக்கு
என்ன நடக்கின்றது என்று தெரியாமல் முழித்தாள். தரகரோ சற்றுமுன் இருந்த நிலைமை, கனவிலும்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எப்படி தலைகீழாக மாறியது? என்று யோசித்தார்.
"முதல்லே
பிடிங்க கார்
சாவி, இப்போதைக்கு
எங்கிட்டே இருக்கிற பணம், நகைங்க எல்லாமே எடுத்துக்குங்க. நாளைக்கு எங்க சொத்து
பூராவும் உங்களுக்கே கொடுக்கிறோம். இப்போ கொடுக்கிற கையா உங்க கை மேலே இருக்கணும். எங்க கை எப்போதும்
கீழே வாங்கிற கையா இருக்கணும். உங்க பொண்ணை மட்டும் என் பையனுக்கு கொடுக்கிறதா
வாக்குறுதி கொடுங்க" என்றார்.
.
"நீங்க
சொல்றது ஒண்ணுமே புரியலே. ஏதேதோ பேசுறீங்க. அந்தச் சாத்தனார் ஐயா படத்தைப் பார்த்ததிலே இருந்து
நீங்க சரியில்லே"
"எங்களைப்
பத்தி சாத்தனார் ஐயாவுக்கு நல்லாத் தெரியும். அவரு கோடீசுவரர். கொஞ்சம்
வருசத்துக்கு முன்னாடி ஒருநாள்
சாப்பாட்டுகிடைக்காம நானும் என் பையனும் ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்போ ஒரு பெரியவர் 'சாத்தனார் ஐயாவைப் பாருங்க. அவரு உங்களுக்கு உதவி செய்வாருன்னு’ சொன்னார்..
போனோம்.
சாப்பாடு கொடுத்தார். பையன்
படிக்கிறதுக்கு வசதியும் எனக்கு ஒரு வேலையும் கொடுத்தார். பையன் படிச்சுமுடிஞ்ச
உடனே ஒரு தொழில் தொடங்குறதுக்கு வசதி செய்துகொடுத்தார். இப்போ இந்த நிலைக்கு வந்த
காரணம் அவரோட தயாள குணம். இந்த நிலைக்கு வந்தபிறகும் உங்ககிட்டே சீர் பணம் கேட்டு
மிக அற்பமா நடந்துக்கிட்டேன். இன்னும் சொல்லப்போனா எந்தஒரு நிபந்தனையும் இல்லாமல்
மகிழ்ச்சியா உங்க பொண்ணை என்பையனுக்கு கல்யாணம் செய்து கொடுத்திருக்கணும். அப்படி
செய்திருந்தா 'சாத்தனார்'
அய்யாவோட மனம் பூரிச்சிபோயிருக்கும். இப்போ எந்த முகத்தை வைத்து
விழிக்கிறது" என்று வருத்தப்பட்டார்.
"நடந்து போனதை மறப்போம். இனி நடக்கபோறதை நினைப்போம்.
உங்க பையனுக்கு என் பொண்ணைக் கொடுக்க இஷ்டம்" என்று சொன்னவுடன் அனைவரின்
முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
***************************
No comments:
Post a Comment