Pages

Wednesday, 3 April 2019

ONE FAMILY ONE GOVERNMENT JOB - ஒரு குடும்பம், ஒரே ஒரு அரசு வேலை


 ஒரு குடும்பம், ஒரே ஒரு அரசு வேலை 
ONE FAMILY ONE GOVERNMENT JOB

இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு படிக்கின்ற பாடங்களை விட டி.வி மற்றும் சினிமா பார்ப்பதை மிகவும் விரும்புகின்றனர். அதற்கு காரணம் இருக்கத் தான் செய்கின்றது.

இந்த மாற்றம் எப்போது வானொலி வந்ததோ அன்றிலிருந்து ஆரம்பித்தது என்றே சொல்லலாம். அந்த சமயத்தில் பாடல்கள், ஒலிச்சித்திரம், நாடகம், கிரிக்கெட் நேர்முக வர்ணனை, பேட்டி போன்றவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். சிலர் பணம் கொடுத்து படம் தியேட்டருக்குச் சென்று சினிமா படங்கள் பார்த்தனர். அதற்கடுத்து ஒலி நாடா வந்தது. அதைத் தொடர்ந்து வி.சி.டி வந்த பிறகு ஒரு புரட்சியே நடந்தது. முதன்முதலில் ஒலி - ஒளி அதன் பிறகு எப்போது ஒலி - ஒளி கொடுக்கும் டி.வி வீட்டில் நுழைந்ததோ அன்றிலிருந்து சினிமாவின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது என்று கூறலாம்.

அதன் பிறகு தொடுதிரை கைபேசிகளின் வரவு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வானம் அளவுக்கு உயர்த்து விட்டது. குறிப்பாக மாணவர்களையும், இளம் வயதினர் முதல் முதியோர்கள் வரை எல்லோரையும் அடிமையாக்கும் அளவற்ற சமூக வலைத்தளங்கள், சினிமா படங்கள், பாடல்கள், தொடர்கள், பலவகைச் செய்திகள், முக்கியமாக நேரத்தை வீணாக்கும் விளையாட்டுச் செயலிகள் ஆகும். 

இந்த பிரபலத்திற்கு முக்கிய காரணம் தினம் தினம் புதிது புதிதான விறுவிறுப்பூட்டும் செயலிகளே. பாடங்கள் அப்படி அல்ல. அதை சோம்பேறிகள் தான் படிப்பார்கள் அல்லது சோம்பேறித்தனத்தை உருவாக்கும் புத்தகங்கள் என்கிற எண்ணம் பொதுவாக எல்லா மாணவ மாணவிகளிடம் இருக்கின்றது. மேலும் அவர்கள் படிக்கும் பாடமும், சொல்லித்தரும் ஆசிரியர்களும் ஹீரோ போல் இல்லாமல் அல்லது காமெடியன் போல் இல்லாமல் தேமே என்று கடனுக்காக பாடங்களை நடத்தினால் எப்படி மாணவர்களுக்கு ஆர்வம் வரும். அதோடு படித்துப் பட்டம் பெற்றாலும் பணம், பதவி, அதிகாரம், சிபாரிசு இவற்றில் ஏதாவது இரண்டு இருந்தால் தான் வேலை கிடைக்கும். இது இல்லாமல் எவ்வளவு மதிப்பெண்கள், திறமை, அறிவு, ஆற்றல் இருந்தாலும் ஒன்றுக்கும் உதவாது.

இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் அரசு வேலைகளில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் ஆகியவர்களின் எல்லா சம்பள செலவுகள், படிகள் எல்லாம் நம் வரிப்பணம் தான் என்கிற விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றார்கள். ஏனென்றால் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் அதன் பதவிகளை மற்றவர்களுக்கு விட்டுத்தராமல் அவர்களின் பரம்பரைகளே பதவி வகிக்கின்றனர். அவர்களுக்கு நம் வரிப்பணம் தாரைவார்த்துத் தருகிறோம். இதுநாள்வரை யாரும் வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அரசு வேலைக்குத் தகுதியானவர்கள், மற்றவர்கள் கண்டிப்பாக தனியார் துறையில் தான் வேலை தேட வேண்டும் என்கிற கூக்குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றனவா? 

ஒரு வீட்டில் அரசு வேலையில் கணவன், மனைவி, மகன், மகள் நால்வருமே இருக்கின்றார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்கிற பழமொழிக்கு ஏற்ப அவர்களுக்குத் தான் எப்படி, யாரை, எப்போது அணுகினால் அரசு வேலை கிடைக்கும் என்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு தெரியாவிட்டால் அரசு வேலை என்பது குதிரைக்கொம்பு தான். ஒரு பக்கம் அரசு வேலைகள் குறைந்துகொண்டே வருகின்றது. இன்றுவரையில் பல குடும்பங்களின் பரம்பரைகள் 'அரசு வேலை' என்கிற வாசனையே இல்லாமல் இருக்கின்றார்களே! அவர்கள் அரசு வேலையினை அனுபவிக்க ஏதாவது சட்டம் இருக்கின்றதா? அதாவது ஒரு குடும்ப பரம்பரையில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலைக்குத் தகுதி பெறுவர். 

இதுநாள் வரை ஒருவர்கூட ஒருமுறைகூட அரசு வேலை பெறாத குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் கொண்டுவந்தால் தான் ஏழ்மை இருக்காது. மக்கள் வரிப்பணம்  'ஒரு குடும்பம், ஒரே ஒரு அரசு வேலை' என்கிற முழக்கத்தின் கீழ்  எல்லோருக்கும் கிடைக்கும். அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். அவ்வாறு இல்லையேல் ஏழைகள் எப்போது ஏழைகளாகவும், பணக்காரர்கள் எப்போதும் பணக்காரர்களாகவே இருப்பார்கள். ஏமாந்த மக்கள் அவர்களின் வரிப்பணம் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு அள்ள அள்ளக் குறையாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
********************

No comments:

Post a Comment