Pages

Thursday, 28 January 2021

பாகம் : 3 பருத்தியில் வண்ணப் புரட்சி - அறிவியல் - குறுநாவல் - மதுரை கங்காதரன்

                                                 பருத்தியில் வண்ணப் புரட்சி

பாகம் : 3



அறிவியல் - குறுநாவல் 

                                                    மதுரை கங்காதரன் 


 தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு வேண்டியது கையிலே காசு, வாயிலே தோசை! அதாவது இடது கையாலே செலவழித்த உடனே, வலது கையிலே லாபத்தை அள்ளனும். அதுதான் அவர்களுடைய வியாபாரக் கொள்கை. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் யாராவது இளித்தவாயர்கள்…. இந்த வார்த்தையினைச் சொல்வதற்கு மன்னிக்கவும்…. கஷ்டப்பட்டு புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். பெருமுதலாளிகள் நோகாமல் அதனை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்கள்? இதில் நானும் விதிவிலக்கல்ல!” என்றபோது அவர் சற்று உணர்ச்சியுடன் காணப்பட்டார்.

அதாவது, பணக்காரர்களின் செயல் எப்படி இருக்கிறதென்றால்ஒருவரின் தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல், அவர்கள் பெறும் வெற்றியை மட்டும் ஏற்றுக் கொள்கின்றனர். அப்படி அடைந்த வெற்றிற்கு என்னமோத் தாங்கள்தான் காரணம் என்கிற பிம்பத்தை உண்டுபண்ணுவதோடு, அதனை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தித் தலைகால் புரியாமல் கொண்டாடுவதே அவர்களது தலையாய நோக்கமாகக் கொள்கின்றனர்என்றபோது அனைவரும் ஒருபுறம் அதிர்ந்தனர். ஜான் மில்லரின் உண்மை பிசகாத வெளிப்படையான இந்தப் பேச்சு, விஞ்ஞானி வினோதனுக்கு அவர் மீதுள்ள நம்பிக்கை, அதன்  உச்சத்திற்கே அழைத்துச் சென்றது. அதேவேளையில் தான் இந்தக் கருத்தைக் கூறியிருப்போமா? என்கிற கேள்வியும் அவருள் எழுந்தது.

இந்த வெளிநாட்டுக்காரர், ‘யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லைன்னு, இவருக்கு என்ன நடந்ததோ அதை சொல்லியேத் தீருவேண்ணு புட்டுப்புட்டு வைக்கிறார் போலல்லே இருக்கு.  இதைக் கேட்ட பிறகாவது, உலகில் உள்ள தனியார் நிறுவனங்க, அரசுங்க இவர் போன்றக் கண்டுபிடிப்பாளர்களுக்கு உரிய உதவிகள் செய்வாங்கன்னு நான் நம்புறேன்!” என்று கூட்டத்தில் ஒருவர் அவரின் கருத்தை முணுமுணுத்தார்.

தொடர்ச்சியாக, இவரது ஆராய்ச்சியில் இவர் எண்ணியபடி எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை. சாயத்தண்ணீரைச் சுத்திகரிக்க அதிக செலவு ஆனதோடு, அதிக நேரமும் ஆனது. மீண்டும் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டார். திடீரென்று யாருக்குமே எட்டாத ஒரு யோசனை இவரது மூளையில் உதித்தது. அதாவது செய்த செயலுக்குத் தீர்வைத் தேடாமல், செயலுக்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரி செய்தால்! அடுத்து நடக்கும் செயல்களும் மிகச் சரியாகத்தானே இருக்கும்!’ என்பதே இவரது நம்பிக்கை.”

 அதாவது துணிகளாக அல்லது நூல்களாகத் தயாரிக்கப்பட்டுத் தானே அதில் பலவிதமான நிறத்தை ஏற்றுகிறார்கள். அதற்கு எல்லாவற்றிருக்கும் பருத்தியிலிருந்து கிடைக்கும் பஞ்சுதானே மூலமாக விளங்குகின்றது. மேலும் வெண்மையாக இருப்பதால்தான் நாம் நினைக்கும் வர்ணங்களை அதற்குத் தரமுடிகிறது. ஆனால் வெண்மை நிறத்திற்குக் காரணம் வானவில்லில் இருக்கும் நிறங்கள் என்று முக்கோணப் பட்டக ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதாவது இவர் என்ன சொல்ல வருகிறாரென்றால் பருத்தி விதைகளில் சில பல ஆய்வுகளை மேற்கொண்டால் அந்த விதையிலிருந்து நமக்குத் தேவையான வர்ணத்தைப் பெறலாம் என்பது தான் இவருக்கு வந்த யோசனைஎன்றபோது அனைவரின் எதிர்பார்ப்புகள் எகிறிப் போனது என்றே சொல்ல வேண்டும்.

அதாவது பருத்தியில் இருக்கும் பஞ்சே, இயற்கையாகவேப் பல நிறங்களில் கிடைத்தால் சாயம் போடுவதற்கு வேலையே இருக்காது அல்லவா? அதனால் தண்ணீரும், நிலமும் மாசுபடுவதை முற்றிலும் தடுக்கலாம்என்று நம்பினார். அதாவது இது எப்படியென்றால், இரசாயன உரங்கள் பயன்படுத்திய உணவுப்பொருட்களை சாப்பிடுவதால்தானே பலருக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகிறது. அந்நோய்களைக் குணப்படுத்த நாம் பல புதிய புதிய மருந்து மாத்திரைகள், டானிக் என்று உட்கொள்ளுவதால்தான் மனித குலத்திற்கு இனம் தெரியாத புதிது புதிதாக வியாதிகள் வருகின்றது?” என்றபோது,

ரொம்ப சரியாச் சொன்னீங்க என்று அங்கிருந்த கூட்டம் ஒத்துக் கொண்டது.

அப்படியில்லாமல், இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிட்டு, அதில் கிடைக்கும் காய், கனிகள், கீரை வகைகள் உட்கொண்டால், பெரும் வியாதிக்கு ஆளாகாமல் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியுமல்லவா! அதுபோலத்தான் இயற்கையாகவே பருத்தியில் கிடைக்கும் வெண்பஞ்சுகள், பல வர்ணங்களுடன் கிடைத்தால் தண்ணீர், நிலம் மாசுபடுவதைத் தடுப்பதோடு, அதனால் நெய்யப்படும் ஆடைகள் நம் உடலைக் காப்பதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுமல்லவா!” என்று சொல்லியதுதான் தாமதம், அந்நிகழ்ச்சியை நேரடியாக மற்றும் ஊடகங்கள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

இவர் எத்தகையச் சிறப்பானதொரு கண்டுபிடிப்பை உலக மக்களுக்கு வழங்கியிருக்கிறார் என்பதை அனைவரும் உணர்ந்தனர். மாணவ மாணவிகள் இளைஞர்களோ நானும் விஞ்ஞானி வினோதனைப் போலவே, அன்றாட வாழ்வில் பயன்படும் ஏதாவது ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பேன் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டனர். 

கூட்டத்தின் சலசலப்பு சற்று அடங்கியவுடன், இந்த யோசனை உதித்த மாத்திரத்தில் இவருடைய கடமை அதிகமாயிற்று. எப்படியும் இதில் வெற்றி பெற்றேத் தீர வேண்டுமென்ற காரணத்தினாலும், அதில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டுமென்ற ஆசையினாலும், பேருக்காக உண்ணுவது, உறங்குவது என்று இவர் தன்னை மாற்றிக் கொண்டார். மற்ற நேரத்தில் ஓயாது தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

சூரிய ஒளியின் உதவியால் தானே பூக்கள் பல நிறங்களில் உருவாகி மலர்ந்து காட்சியளிக்கின்றது. அந்தப் பலவர்ணபூவின் விதைகளோடு பருத்தி விதையையும் சேர்த்தால் கட்டாயம் பல வர்ணமுள்ள பருத்தி விதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு உண்டானது. அவ்வேளையில் இவருக்கு அறிவியல் உலகில் பல சாதனைகள் நிகழ்த்திய ஒரு விஞ்ஞானி மேற்கொண்ட அசுரத்தனமான ஆராய்ச்சிகள் ஞாபகத்திற்கு வந்தது. அதையே முன்மாதிரியாகக் கொண்டு தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று உறுதி கொண்டார். அதாவது தாமஸ் ஆல்வா எடிசன், எவ்வாறு பல உலோகக்கம்பி இழைகளைக் கொண்டு மின்சார பல்பு கண்டுபிடித்தாரோ? அவ்வாறு போல் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். அத்தைகைய விடாமுயற்சியோடு கடினஉழைப்புக்கும் தயாரானார். இவ்வாராய்ச்சிக்கு, நவீன கருவிகளுடன், நல்ல கட்டமைப்புள்ள ஒரு ஆய்வுக்கூடம் இவருக்குத் தேவைப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் பல நூறு விதைகளை வளர்க்கும் வசதியும் இருக்க வேண்டும்என்றும் விரும்பினார். திட்டமிட்டபடி அங்கு பல ஆயிரம் விதைகளின் கலப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்என்று எண்ணினார். அதன் விளக்கமான ஆய்வுகளைப் பற்றி, பல ஆராய்ச்சிப் புத்தகங்களில் சொல்லப்பட்டும், நிரூபிக்கப்பட்ட முடிவுகளின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சுமார் ஐநூறு பக்கங்களில் ஒரு கட்டுரையினை எழுதினார்என்று பேசியதைக் கேட்டபோது விஞ்ஞானி வினோதனின் மனம் கணத்தது. அதனை வெளியில் காட்டாமல் முகத்தை மேலே பார்ப்பதுபோல பாசாங்கு செய்தார்.   

அதன் பிறகுதான் இவருக்குப் பலவிதமான பிரச்சனைகள் முளைத்தது. மனிதர்களைப் பற்றிய உண்மையான சொரூபமும் தெரிந்தது. இவர் எழுதிய கட்டுரையினை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் இருக்கும் பல்வேறு அறிவியல் அறிஞர்களிடம் தன் கண்டுபிடிப்பினை எடுத்துச் சொன்னார். சிலர் முழுவதும் படிக்காமலே இதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை!’ என்று முகத்தில் அடித்தாற்போல் நேரடியாக சொல்லும்போது, இவரது இதயம் என்ன பாடுபட்டிருக்கும்? என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.”

ஆமாம் யாராக இருந்தாலும் அந்நேரம் மனமுடைந்து போயிப்பார்கள் என்று பதிலாய்ச் சொன்னார்கள்.

 ஆனால், இவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. மீண்டும் படையெடுத்தார். அவர்களில் சிலர் சரி, கட்டுரை ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் கண்டுபிடிப்பினைப் பற்றி ஐந்து நிமிடத்தில் விளக்கிச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சொல்லியதைக் கேட்டவுடன் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார். அதற்குக் காரணம், பல மாதங்களாக உழைத்துப் புதிதாகக் கண்டுபிடித்த ஒன்றை எப்படி ஐந்து நிமிடத்தில் அவர்களிடம் சொல்லி விளங்க வைப்பது? அப்படி விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அந்த அறிவியல் அறிஞர்கள் என்ன, அனைத்தையும் படித்துக்கரைத்துக் குடித்தவராக இருப்பாரா? அதாவது ஒருவர், அவர் துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையினை வெளியிட்டிருந்தாலும் அவர் எப்படி அனைத்தும் தெரிந்தவராக இருப்பார்? என்பது யதார்த்தமான உண்மையாகவே இருந்தாலும், அவர்கள் சொல்வதைத்தானே வேதவாக்காகக் கல்வியாளர்களும் சரி, அரசும் சரி, ஏனையோரும் ஆணித்தரமாக ஏற்றுக் கொள்கின்றனர்.”

கூட்டமும் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக பேசாமல் அமைதி காத்தது.

தொலைநோக்குப் பார்வையில் அறிவியல் அறிஞர்கள் சொல்லும்போதெல்லாம், அவர்களைப் பல துறையினைச் சார்ந்தவர்கள் ஏளனம் செய்ததோடு, கடுமையாக விமர்சித்ததை அதன் வரலாறு காட்டுகிறது. அணுவில் மிகப்பெரிய ஆற்றல் இருக்கின்றது என்றும், நிலவில் மனிதன் காலடி பதிக்கலாம் என்பதை அறிவியல் அறிஞர்கள் பலர் சொன்னபோது என்னென்ன விமர்சனங்கள அவர்கள் மீது வைக்கப்பட்டன என்பதை அறிவியல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியவரும். அதுபோல விஞ்ஞானி வினோதனும் அனுபவித்தார்.

ஆமாம் என்று அதனை எல்லோரும் ஆமோதித்தனர்.

நிறைவாக அவர்களுக்கு விளங்கிய வரையில், இவரது கட்டுரையினை மதிப்பீடு செய்து ஒரு அறிக்கை மேலிடத்திற்கு அனுப்பினார்கள். அதில் இவர் அடிப்படையில் ஒரு வேதியியல் முதுகலைப் பட்டதாரி. இவரால் எப்படி தாவரவியலில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும்? மேலும் இவரின் ஆராய்ச்சிக்கு ஆய்வுக்கூடம் அமைக்க சில கோடிகள் கூட ஆகலாம்! அவ்வளவு பணமும் செலவு பண்ணிய பின்பும் இந்த ஆராய்ச்சி வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது!” என்று அதில் இருந்ததால் இவர் மேற்கொண்டு என்ன செய்வதென அறியாமல் திணறினார். சுருக்கச் சொன்னால் கிட்டத்தட்ட எல்லோரும் இவரது கண்டுப்பிடிப்பைத் தட்டிக் கழித்தார்கள்.”

அடுத்து என்ன நடந்திருக்கும்? என்று  கூட்டத்தில் உள்ளவர்கள் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால் வினோதனின் மனதில் அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் மின்னலாகத் தோன்றி மறைந்தன.

 கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தனியார் மற்றும் அரசு மூலமாக இமாலய முயற்சி செய்தும் இவரைக் கண்டுகொள்ள ஒருவரும் இல்லை. எப்படியும் இந்த ஆராய்ச்சியில் நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை விஞ்ஞானி வினோதனுக்கு இருந்தது. இறுதியாகஇங்கு ஆதரவு இல்லாவிட்டால் என்ன? வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் முயற்சி செய்தால் என்ன?’ என்று  அங்கு இவருடைய நண்பர் வீட்டில் இருந்துகொண்டே முயற்சி செய்தார். ஆனால் அங்கேயும் இவரது ஆராய்ச்சியை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. இது எப்படி சாத்தியம்? இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை! வேறு ஒரு நல்ல ஆராய்ச்சி இருந்தால் சொல்லுங்கள். முக்கியமா செலவு குறைவா இருக்க வேண்டும். குறைந்த நாளில் அதிக லாபம் கிடைக்க வேண்டும்!’ என்று நளினமாகச் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டனர்.”

பாகம் : 4 தொடரும் 


No comments:

Post a Comment