அவன் தேடிய அழகி!
சிறுகதை
கு.கி.கங்காதரன்
"'அழகு' என்பது நிரந்தரமானதல்ல என்ற உண்மையை
அறிந்துகொண்டால் அதனைப் பற்றிய ஆசைகள் மனதில் உண்டாகாது"
"இதோபாரு ராகவா, இனிமே உனக்குப் பொண்ணு பார்க்க எங்களாலே முடியாதுப்பா.
இதுவரை எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தாச்சு.
அவங்கள்லே ஒருத்தரைக்கூடப் பிடிக்கலேன்னா, அதுக்கு
என்ன அர்த்தம்? எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் ‘மூக்கு’ சரியில்லை. ‘கண்ணு’ காந்தம்போல இல்லை. சிரிச்சாப் பல்லு தெரியுது.
இப்படியே ஒவ்வொரு குறையைச் சொல்லிட்டே இருந்தா இந்தப்பிறவியிலே உனக்கு
கல்யாணம் நடக்கவே நடக்காது. ஒருவேளை இப்படியெல்லாம் குறை
சொல்லுறதுக்குக் காரணம் ‘காதல் கீதல்’னு
மனசுலே இருக்கான்னும் கேட்டதற்கு 'அதெல்லாம் கிடையாது'ன்னும் சொல்லிட்டே. கடைசியாக் கேட்கிறேன் 'நீ எப்படிப்பட்ட பொண்ணைத்தான்
விரும்புறே?’ அதையாச்சும் சொல்லு"
என்று சரவெடிபோலப் படபடவென்று இடைவிடாது பேசி முடித்தார் அவனுடைய அப்பா
விநாயகம்.
"நல்ல அழகானப் பொண்ணா வேணும்னு ஆசைப்படுறது
தப்பா? அதுக்கு ரதிபோல இருக்கனும்னு
நினைக்கலே. பார்த்தவுடனேப் பிடிக்கிற அளவுக்கு இருந்தாலேப்
போதும்" என்று ராகவன் தனது எதிர்கால மனைவியைப் பற்றிய
விருப்பத்தைக் கவலையாக வெளிப்படுத்தினான்.
"சுத்திவளைச்சு பேசாதே. எங்களுக்குக்கெல்லாம் தெரிஞ்ச
பொண்ணைக் காட்டிச் சொல்லு.
'இப்படிப்பட்டப் பொண்ணுதான் வேண்டும்’னு!
அவள் மாதிரி அமையுதான்னுப் பார்ப்போம்.
ஆனா எது எப்படி இருந்தாலும் இப்போப் பார்க்கப்போற பொண்ணுதான் கடைசி. அதன் பிறகு
நீயாச்சி, உன் கல்யாணமாச்சு. எங்களை ஆளைவிட்டுடுடா
சாமி" என்று கெஞ்சியபடியும், அதனை
மிஞ்சியபடியும் கையெடுத்து கும்பிடுபோட்டாள் அவன் அம்மா விமலா.
"பொண்ணைப் பார்த்தா கற்பனையைத் தூண்டுவதாக
இருக்கனும். அதோடு பேசிட்டே இருக்கனும்போல தோணனும். சிரிச்சா பார்த்திட்டே
இருக்கனும். பேசினாக் கேட்டுட்டே இருக்கனும்போலத் தோணனும். மொத்ததிலே நம்ம 'சிந்தாலா’போல இருக்கனும்" என்று கடைசியில் தனது மனதில் இருக்கும்
‘கனவுக்கன்னி’ப்பற்றிய இரகசியத்தை
போட்டு உடைத்தான் ராகவன்.
"அடே! நடிகை சிந்தாலாவா?"
"அவளேதாம்மா"
"ஆமா, சமீபத்திலேகூட ஒரு படத்திலே குடும்பக் கதாப்பாத்திரத்திலே
நடிச்சு தேசிய அளவிலே சிறந்த நடிகையாத் தேர்ந்தெடுத்தாங்களே அவங்களா?"
'ஆமாம்' என்றுத் தலையாட்டினான்.
"இன்றைக்குகூட நம்ம ஊர்லே எங்கேயோ படப்பிடிப்பு நடக்கிற சமயத்திலே எதிர்பாராதவிதமா
விபத்துக்குள்ளாகி தலையிலை அடிபட்டு நம்ம ஊரு ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்களே அவங்கதானே?"
என்று அந்த நடிகையைப் பற்றிய நடப்புத்தகவலை அமைதியாகத்தந்தாள் விமலா.
"என்னம்மா சொல்றே? அவங்களை ஆஸ்பத்திரியிலே
சேர்த்திருக்காங்களா?"
"ஆமாண்டா ராகவா. அதுதான் இப்போதைய தலைப்பு செய்தி,
முக்கியச் செய்தியும்கூட!" என்று உறுதிபடுத்தினாள்.
ராகவனுக்கு
அந்தச்செய்தி அதிர்ச்சியளித்தாலும் விரைவிலே இயல்பான நிலைக்குத் திரும்பினான்.
அழகை
ரசிப்பது ராகவனுக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பது.
அழகின்மேல் மனதைப் பறிகொடுப்பது யதார்த்தமாக இருந்தாலும் அதனை அர்த்தமுள்ளதாக்கும்
திறமை அவனுக்குண்டு. அழகைப்பற்றியக் கவிதை எழுதச் சொன்னால் நன்றாகவே
எழுதுவான். அவனுடைய
கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளதே அதற்குச் சாட்சி. அழகின்மேல் அவ்வளவு ஈடுபாடு இருப்பதால் தனக்கு
வரப்போகும் மனைவி, தன் கற்பனைக்கும் அப்பால் இருக்கவேண்டுமென்பதால்
சலிக்காமல் பெண்பார்க்கும் படலத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறான்.
ராகவன்
பக்கத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. வசீகரிக்கும்
அழகும், துள்ளும் இளமையோடு நல்ல வேலையில் கைநிறைய சம்பளம்
வாங்கும் அவன், ‘தனக்கு அழகானப் பெண் வேண்டும்’ என்று எதிர்பார்ப்பதில்
தவறு ஏதும் இருப்பதாக யாரும் சொல்லமுடியாது.
"ராகவா, சொல்ல மறந்திட்டேன். உன்னோட
நண்பன் முருகவேல் கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி இங்கு வந்திருந்தான். நேரமிருந்தால் உன்னை அவன்
வீட்டிற்கு வரச் சொன்னான்" என்பதை
விமலா நினைவுபடுத்தி ராகவனிடத்தில் தெரிவித்தாள்.
"அப்படியாம்மா. அவனை ஒரு எட்டு போய்ப்பார்த்துட்டு வந்துடுறேன்"
என்று மேலோட்டமாகத் தன்னை அலங்கரித்துப் புறப்படத்தயாரானான்.
"ராகவா, இன்னிக்கு நாம பார்க்கப்போறப் பொண்ணுகூட அந்தப் பகுதியில்தான் இருக்குன்னு சொன்னங்க.
ஒருவேளை நீ போறவழியிலே எந்தப்பொண்ணாவது அழகாத் தெரிஞ்சா அவதான் உன்னுடைய வருங்கால மனைவியா இருக்கலாம்!"
என்று கிடைக்கிற சந்தில் சிந்து பாடி கேலியாகப் பேசினார் விநாயகம்.
முருகவேல்
வீடு சற்றுத் தொலைவில் இருந்தாலும் நடையாகவே செல்வது ராகவனுக்குப் பழக்கம்.
நடப்பது அவனுக்கு நிறையவேப் பிடிக்கும். அதற்கு
முக்கிய காரணம் நடந்து செல்லும்வேளையில் பல நண்பர்கள், உறவினர்கள்
பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். யாரையும் சந்திக்க
நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் இம்மாதிரியான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்
என்பதற்காகவே வம்படியாக நடத்தே செல்வான். அவன் இளமையாய் இருப்பதற்கு
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவன்
போகின்ற வழியில் விநாயகம் சொன்னதுபோல் திருமணமாகாத அழகிகள் தென்படுகிறார்களா?
என்று உண்மையில் பார்த்துக்கொண்டே கடந்தான். எதிர்பார்த்ததுபோல்
தேவதையாக ஒரு பெண் சற்று தூரத்தில் நின்றிருக்க 'அப்பா
சொல்லியப் பெண் இவளாய் இருப்பாளோ?' என்று எண்ணியபடி அருகில்
செல்லச்செல்ல அதற்குள் அவளிடத்தில்
ஒருவன் மிக உரிமையாக 'உன்னோடப் பையன் என்னகிட்டே இருக்கவேமாட்டேன்’னு ரொம்பவே அடம்பிடிக்கிறான்.
அம்மாதான் வேணுமாம், இந்த அப்பா வேண்டாமாம்' என்றபடி
குழந்தையை அவளிடத்தில் கொடுக்க அதைக் கவனித்துக்கொண்டிருந்த ராகவனின் எண்ணம் தவிடுபொடியானது.
அதேபோல்
சற்றுதூரம் செல்ல ஒரு ‘அப்சராஸ்’ அழகி யாரோ ஒரு பெரியவருடன் செல்வதைப் பார்த்த ராகவன் ‘நான் தேடும் அழகி இவளாய் இருக்குமோ?’
என்கிற ஆர்வத்தில் அணுக, அவள் அதேவேளையில் 'பார்த்தீங்களா, உங்க மாப்பிள்ளையை! நாம வந்து அரைமணி நேரமாச்சு.
இன்னும் அவரைக் காணாம்' என்ற வசனம் காதில்
விழுந்தபோது அவன் காதுகள் இரண்டும் அடைப்பட்டுப் போனதாக உணர்ந்தான்.
இப்போது ராகவன் மனதில் இந்த எண்ணம் ஓடியது. ‘அழகானப் பெண்களை யாரும் விட்டுவைக்கமாட்டார்கள்போலல்லவாத்
தெரிகிறது. ஒருவேளை நான் தாமதமாகப் பெண்பார்க்க ஆரம்பித்திருக்கேனோ?
நடந்த நிகழ்வுகளைப் பார்த்த ராகவன் தனக்குள்ளே 'எனக்கென்னவோ நான் நினைத்தபடி அழகான மனைவி கிடைப்பாள் என்ற நம்பிக்கை இல்லை’ என்று எண்ணியதால் அந்த நம்பிக்கைச் சற்று குறைந்துவிட்டதாக உணர்ந்தான்.
மனது
கற்பனையிலும் கண்கள் சாலையிலும் நடந்துகொண்டிருந்த ராகவன்,
சற்று
தூரத்தில் பதற்றத்துக்குள்ளாகும்
அதிர்ச்சியான அந்தக் காட்சியைக் கண்டமாத்திரத்தில் அவனுடைய கால்கள் அதை நோக்கி ஓட்டமெடுத்தது.
அங்கே ஒரு தாயின் கவனக்குறைவால் அவளுடைய
குழந்தை அவசரமாகக்
சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக
எதிரே ஒரு கனரகவாகனம் வேகமாக அக்குழந்தையை
நோக்கி வருவதை ராகவன் கவனித்தாலும், அக்குழந்தையைக்
காப்பாற்ற முடியாத தூரத்தில் இருந்தான். அவன் இதயம் ஒரு சில மணித்துளிகள்
நின்றேவிட்டது! தன் கண்ணெதிரே ஒரு குழந்தை இறக்கும்காட்சியைக்
காணச் சகிக்கமுடியாமல் இருகண்களை நன்றாக மூடிக்கொண்டபோதும் தன் கைவிரல்களின் சிறு
இடைவெளியின்
வழியாக நடக்கப்போகும் கோரநிகழ்ச்சியைப் பார்க்க முனைந்தான்.
ஆனால்
அவன் எண்ணியதற்கு மாறாக, எங்கிருந்தோ ஒரு பெண் உருவம்
அக்குழந்தையைச் சாலையிலிருந்து சட்டென்று நடைபாதையில் தூக்கி வீசிய
வேகத்தில் அவள் தன்வசத்தில் வைத்திருந்த கைப்பையை நழுவியபடி
கீழேவிழுந்து அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறிப் போனதோடு அவளும் மயக்கமாகிக் கீழே சாய்ந்து விழுந்தாள்.
அவ்விடத்தில்
இருந்த குழந்தையின்
தாயானவள் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த ராகவனிடம்
"தம்பி, இந்தப் பொண்ணுமட்டும் என் குழந்தையைக் காப்பாத்திருக்காவிட்டால் நான் உயிரோடு
இருந்திருக்கவே மாட்டேன். இந்தப்
பெண்ணுக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு தெரியலே. சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போங்க தம்பி' என்று தனது இயலாத நிலையை நாசூக்காக எடுத்துக்கூறி ராகவனை விரைவுபடுத்தினாள்.
அந்தவேளையில் ராகவனும் ஒரு மனிதாபிமான முறையில் ஒரு ஆட்டோவை உடனே அழைத்து
அவளை அதில்
ஏற்றியபின்,
அப்பெண்ணின் கைப்பையிலிருந்து வெளியே சிதறிக்கிடந்த பொருட்களை அவன் நிதானத்தை இழந்தவாறு அவசரம்
அவசரமாகச் சேகரித்தான். அவற்றில் அப்பெண் மாநில அளவில்
நடந்த கதை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றச்
சான்றிதழ்கள், பதக்கங்கள் அடங்கியிருந்தன. இது தவிர அப்பெண் எழுதியப் புத்தகங்கள் சில அப்பெண்ணின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் விதமாக இருந்தன.
அவைகளைப் பத்திரமாக அவளின் கைப்பையில் சேகரித்தபடி
'ஆட்டோக்காரரே, நிர்மலா ஆஸ்பத்திரிக்கு
கொஞ்சம் சீக்கிரமா போப்பா' என்று பணிவாகக் கட்டளையிட்டான். அதேவேளையில்
அவன் தனது கைபேசியை எடுத்து "யாரு, டாக்டர் பிரபாகரா?" என்று பதற்றத்தில் நாக்கு உளறியபடி பேச "ஆமாண்டா,
ராகவா. உனக்கு என்னாச்சு? பேச்சு ஒருமாதிரியாக இருக்கே!" என்று அவன் டாக்டர் நண்பன் விசாரிக்க, நடந்ததை
சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னான் ராகவன்.
"டோண்ட் வொரி ராகவன். நான் இருக்கேன். தைரிமா இரு. நீ ஆட்டோவில் அந்தப்பெண்ணை எடுத்துட்டு வர்றதை
‘கேட்’டிலிருந்து மற்ற எல்லாருக்கும்
சொல்லி விடுகிறேன்.
அவங்க நேராக எங்கிட்டே அழைச்சுட்டு வந்துடுவாங்க.
மற்றதை நான் பார்த்துக்கிறேன்"
என்று தைரியம் கொடுத்தபிறகே ராகவனுக்கு நிம்மதி வந்தது.
அந்த
ஆட்டோவை பார்த்தமாத்திரத்தில் "சார்,
டாக்டர் பிரபாகரன் சொன்ன கேஸா?" என்ற
கேள்விக்கு "ஆமாங்க" என்றவாறே
தலையாட்டினாலும் ராகவனுக்கு இனம்புரியாத ஒருகவலையும் அன்பும் அப்பெண்ணைப் பார்த்தபிறகு
எட்டிப்பார்த்தது. இவ்வளவுக்கும் அவள் ராகவன் கற்பனையில் வரும்
'கனவுக்கன்னி' போல் இல்லாமல் இருந்தாள்.
டாக்டர்
பிரபாகரோ, “ராகவா, பயப்படும்படியா இருக்காதுபோல்
தெரியுது. இருந்தாலும் தலையிலே லேசா அடிப்பட்டதால்
மயக்கம்போட்டு விழுந்திருக்கிறாள். எதுக்கும் தலைப் பகுதியை ஒரு
எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்துடுவோம்” என்றுத் தனது உதவி
டாக்டரிடம் அந்த வேலையைச் சொல்ல, அவரும் 'ஆகட்டும்' என்று அப்பெண்ணை எக்ஸ்-ரே எடுக்கும் அறைக்கு எடுத்துச் சென்றார்.
"ராகவா, நீ இங்கேயே
இருந்தா வீணாக ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருப்பாய்.
நீ என் கூட என் அறைக்கே வந்து இரு. அதுதான் நல்லதுன்னு
எனக்குப்படுது" என்று ராகவனைத் தன் அறைக்கு அழைத்துச்
சென்றார் டாக்டர் பிரபாகரன்.
பிரபாகரும் ராகவனும் அறையில் உள்ளே நுழைந்த அதேவேளையில் "டாக்டர்,
படப்பிடிப்பின்போது தலையிலே அடிபட்ட 'சிந்தாலா' நடிகையின்
'எக்ஸ்-ரே' ரிப்போர்ட் வந்திருச்சி
டாக்டர்' என்றபடி உதவி டாக்டர் தன் கையில் இருந்த எக்ஸ்-ரே படத்தைக் கொடுக்க அதனை வாங்கிய பிரபாகர், சிறிய வெள்ளைநிறச் சோதனைப் பெட்டிபோல் இருக்கும் இடத்தில்
அதனை மாட்டிவிட்டு விளக்கினை எறியவிட்டார். அழகாக
இருக்கும் 'சிந்தாலா' எலும்புக்கூடாய்
மண்டை ஓடாய்க் காட்சியளித்தாள். அதை நுண்ணிப்பாகப் பார்த்த
டாக்டர் பிரபாகர் "அடி ஒன்றும் பலமாய் இல்லை. ஷி இஸ் பெர்ஃபக்ட்லி ஆல் ரைட். அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க.
ஆனா ரெண்டு மூனு நாட்கள் மட்டும்
ஓய்வு எடுக்கச் சொல்லிடுங்க" என்று உத்தரவிட்டார்.
அதைக்கேட்ட
ராகவன், தான் அழைத்து வந்த பெண்ணிற்கும் ‘இதுபோல்
ஒன்றுமில்லாமல் இருக்கவேண்டும்’ என்று மனதில்
வேண்டிக்கொண்டான்.
சற்று
நேரத்தில் உதவி டாக்டர் ஒருவர் பிரபாகரிடம்
"டாக்டர், இந்த
சார் அழைச்சிட்டுவந்தப் பெண்ணின் 'எக்ஸ்-ரே' படம் வந்திருச்சு. அதனை
வாங்கிப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு சோதனைப்
பெட்டியில் வைத்து விளக்கினை எறியவிட்டு அதிக நேரமாகவே ஆராய்ந்தார்.
அதனைப் பார்க்க பார்க்க ராகவன், கவலையின் உச்சத்திற்கேப்
போய்விட்டான். அதன்பின் "ராகவன்,
அவளுக்கு பயப்படும்படியாக ஒண்ணுமாகலே.
எல்லாமே சரியாய்தான் இருக்கு! இந்நேரம் அந்தப் பொண்ணுக்கு மயக்கம் தெளிந்திருக்கும். மேற்கொண்டு ஆகப்போவதை உடனே கவனி ராகவா"
என்பதைக் கேட்டவுடன் அவன் மனதில் அதுவரையில் ஏற்றிவைத்திருந்த பல ஆயிரம்
டன் சுமை இறங்கியதுபோல் உணர்ந்தான். அவன் இப்போது சாதாரண
நிலைக்கு வந்தான்.
"ராகவா, இந்த ரெண்டு எக்ஸ்-ரேயினைக்
கவனிச்சியா? ஒண்ணு அழகு தேவதை, அழகு ரதி,
இளைஞர்களின்
கனவுக்கன்னி
'சிந்தாலாவின் மண்டையோடு!
இன்னொன்று நீ அழைச்சிட்டு வந்திருந்த பெண்ணோட மண்டையோடு! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு நீயே சொல்லு” என்றபோது அதுவரையில் லட்சியம் செய்யாத ராகவன் அவ்விருபடத்தினை நன்றாகப்
பார்த்தான். இரண்டிற்கும் எவ்வித
வேறுபாடு இல்லாமல் இருப்பதைக் கவனித்தான்.
"இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது" என்றான்.
"பார்த்தாயா. மனிசனுக்குள்ளே இருக்கிற எலும்புகளின் அமைப்பு
எல்லாருக்கும் ஒரேமாதிரியாகத்தான் இறைவன் படைச்சிருக்கான்.
ஆனா வெளியே பார்க்கிற அழகு இருக்கே வெறும் சதையும் தோலாலும் ஆனது.
அந்த அழகுக்கு மனிதர்கள் அடிமையாகி வாழ்க்கையில் எவ்வளவு
துயரப்படுறாங்க? வெளி அழகு நிலையானதல்ல. அதை மனிதன் உணர்ந்துட்டா போதும்" என்று முடிக்க,
அந்த வசனங்கள் ராகவன் காதுகளில் நுழைந்தபோது அவன் தலையில்
யாரோ நறுக்கென்று கொட்டியதுபோல் உணர்ந்தான். அன்றுதான் அவன் உண்மையான அழகைப்பற்றிய
பாடத்தை கற்றுக்கொண்டான். அதனைப்பற்றிய அறிவும்,
புத்தியும் வந்தது.
டாக்டரிடம்
விடைபெற்ற ராகவன், உடனடியாகத் தான் அழைத்து வந்திருக்கும் பெண்ணை அவளுடைய வீட்டில் ஒப்படைத்தபிறகு,
இன்றைக்கு அவனுக்காகப் பார்க்கப்போகும் பெண் எப்படியிருந்தாலும்
'சம்மதம்' என்று தனது அம்மா, அப்பாவிடம் தெரிவித்து தனது 'பெண் பார்க்கும்'
படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன்
அவள் இருக்கும் அறைக்கு விரைந்தான்.
அங்கு, தான் கொஞ்சமும் நினைத்துப்பார்த்திராதபடிப் பலர் அவளைச் சூழ்ந்திருந்தனர்.
"தம்பி, நீங்க யாரு
பெத்த பிள்ளையோ நல்ல நேரத்திலே என் பொண்ணோட
உசிரைக்
காப்பாத்தீட்டீங்க. ஆயுசு பூரா உங்களை மறக்கவே
மாட்டேன்" என்று பெண்ணின் அப்பா ராகவனைப் பார்த்துக் கையெடுத்துக்
கும்பிட்டார்.
அப்போதுதான்
அங்கு தனது அப்பா அம்மாவும் இருப்பதைக் கவனித்தான்.
"அப்பா, நீங்க எப்படி இங்கே..?" என்று ஆச்சரியமாய்க் கேட்டான்.
"எனக்கு வேண்டப்பட்ட ஒருவர், நீ
ஒரு பொண்ணை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு
ஆஸ்பத்திரி பக்கம் போனதாக என்னிடம்
சொன்னார்" என்று தனது வரவிற்கானக்
காரணத்தை விளக்கினார்.
"ராகவா, இப்ப நீ காப்பாத்தினப் பொண்ணு, வேறு யாருமில்லே. இன்றைக்கு உனக்காக ஒரு பொண்ணைப் பார்க்கப் போறோம்னு சொன்னோமே அந்தப் பொண்ணுதான் இவள்!" என்று மேலும்
வியப்பை வெளிப்படுத்தினார் விநாயகம்.
அதைத்
கேட்ட பெண்ணின் அப்பா, "இந்தத் தம்பியா உங்கள்
பையன்? நல்லவேளையாக நீங்க பெண் பார்க்க வரலே. அப்படி வந்திருந்தா கட்டாயம் என் பொண்ணை வேண்டாம்னுதான் சொல்லியிருப்பீங்க!" என்று
புதிராக ஒரு குண்டைத் தூங்கிப் போட்டார்.
"ஏங்க நீங்களே உங்க பொண்ணைப்
பத்தி இப்படிப் பேசுறீங்க?" என்று விநாயகம் கவலையாக
வெளிப்படுத்தினார்.
"நான் இப்படி பேசுறதுக்குப் பல காரணங்கள்
இருந்தாலும் முதலாவது உங்கப் பையனோட அழகு!
இவரோடு எம் பொண்ணை ஒப்பிட்டா ஏணி வச்சா கூட எட்டாது.
இரண்டாவது பொண்ணைப் பார்க்குறதுக்கு முன்னாடியே அபசகுணமாக இந்த
நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனாலே..."
"மாமா" என்று உணர்ச்சிவசப்பட்டு சப்தமாய் அழைக்க
அனைவரும் வியப்பாக ராகவனைப் பாரத்தார்கள்.
"மாமா, நான் இப்போ உறுதியாச் சொல்றேன். உங்கப் பொண்ணைக் கட்டிக்க எனக்கு முழு சம்மதம்! நானும்
நேற்றுவரை அழகு அழகுன்னு கண்மூடித்தனமா, இல்லே இல்லே
மூடத்தனமா இருந்திடேன். உங்க பொண்ணு மூலமா அழகுன்னா என்னான்னு
தெரிஞ்சுட்டேன். வெறும் சதையிலே இருக்கிற அழகு உண்மையில்லேன்னு
இப்போ உணர்ந்துட்டேன். இதுவரை எனது அழகு
பைத்தியத்தாலே பல பெண்களை இழிவுபடுத்திட்டேன்.
அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது. இனிமேலும் இந்தமாதிரி
தவறு செய்வதாக இல்லே. அழகுக்கு நான் வகுத்திருந்த இலக்கணத்தை
அடியோடு மறந்துட்டேன்" என்று மனமுவந்து ராகவன் பேசியதைக் கேட்ட அப்பெண் உட்பட எல்லோரும் ஆனந்தத்தால் கண்கலங்கி நின்றனர்.
"மாபிள்ளை, நீங்க எம் மகளோட உசிரைக் காப்பாத்தினதோடு வாழ்க்கையும் தர்றதா சொல்றீங்களே!
அதைவிட மகிழ்ச்சி எங்களுக்கு வேறென்ன இருக்கு?”
"எனக்கு முழு
சம்மதமாக இருந்தாலும் பொண்ணுக்குச் சம்மதமா?ன்னு அவளோட அபிப்பிராயத்தைக்
கேளுங்க அம்மா?" என்று ராகவன் தனது அம்மாவிடம் காதைக் கடித்தான்.
"நீ என்னம்மா
சொல்றே? என் பையனைப் பிடிச்சிருக்கா?"
இந்தக் கேள்விக்கு தன் வாயால் பதில்
சொல்லாமல் அவள் நாணத்தின் மூலம் அக்மார்க் முத்திரைபோல வெளிப்படுத்தினாள்.
************************************** **************************************