மனமே மனமே தயங்காதே!
புதுக்கவிதை
கவிபாரதி கு.கி.கங்காதரன்
மனமே மனமே தயங்காதே - நீ
மந்திர வார்த்தையில் மயங்காதே
சினமே சினமே நெருங்காதே
சிந்தித்துச் செயல்பட மறக்காதே!
குணமே குணமே இழக்காதே
கொடுத்து வருவதை அழிக்காதே
பணமே பணமே வெறுக்காதே
பாசத்தைப் பகையாய் மாற்றாதே!
உறவே உறவே பிரியாதே
உன்னத இணைப்பைப் பிரிக்காதே
நட்பே நட்பே செல்லாதே
நித்தமும் நிம்மதியை அறுக்காதே!
கண்ணே கண்ணே காணாதே
கண்டதை மெய்யென நம்பாதே
செவியே செவியே கேட்காதே
சொல்வதைச் சிலையாய் ஏற்காதே!
வாயே வாயே பேசாதே
வாய்மை தவறி நடக்காதே
கனவே கனவே கொல்லாதே
கற்பனை வாழ்வில் மிதக்காதே!
உயிரே உயிரே தாங்காதே
ஆறுதல் தராமல் தூங்காதே
வாழ்வே வாழ்வை வெறுக்காதே
விரும்பும் வெற்றியைத் தடுக்காதே!
படைப்பு :
கவிபாரதி கு.கி.கங்காதரன்
No comments:
Post a Comment