Pages

Thursday, 12 October 2023

12.10.2023 எனது புரிதலில் ‘வார்த்தைகளும் உண்மைத்தன்மையும்’ (என்னுடைய கருத்து) கு.கி.கங்காதரன்

 



எனது  புரிதலில் வார்த்தைகளும் உண்மைத்தன்மையும்

(என்னுடைய கருத்து)

கு.கி.கங்காதரன்

 

ஒருவரிடத்தில் நாம், நமக்குத் தெரிந்த 'மாற்றம் ஒன்றே மாறாதது' மற்றும் பழையன தேய்தலும் புதியன உருவாதலும்' என்றால் என்ன? என்று கேட்போமானால்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வார்கள். அதில் எது 'சரி' ? என்று ஆராய ஆரம்பித்தால், முடிவு எட்டுவது மிகக் கடினம். எளிமையாகச் சொல்வதென்றால், தண்ணீர் எந்த வடிவத்தில் இருக்கின்றது? என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்வார்கள். ஏனென்றால், அவரவர்களிடத்தில் இருக்கும் பாத்திரத்தின் வடிவினைப் பொறுத்து பதில்  கூறுவார். அவரவர் கூறும் விளக்கங்கள் 'உண்மையே' என்று அந்தந்த குழுவினர் கூறுவார்கள். உண்மை என்றும் சாதிப்பார்கள். ஏன்? சண்டையும் போடுவார்கள். ஆனால், எல்லோரும் சொல்வது உண்மை. அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும்  மனப்பக்குவம் வரவேண்டும். என்னுடைய புரிதலில் ‘வார்த்தைகளும் உண்மைத்தன்மையும் என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

உண்மையை மக்களுக்கு உணர்த்துவதற்காக, பகவத்கீதைக்கு பலர் உரை தந்திருக்கிறார்கள். அதுபோல திருக்குறளும் மற்றும் சில படைப்புகளும் அடங்கும். இவை எல்லாம் எதற்காக? ஏனென்றால், அவைகளில் வார்த்தைகள் வேண்டுமென்றால் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதற்கான புரிதல் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு அறிஞர்கள், மகான்கள், பெரியவர்கள், ஞானிகள், ஆசிரியர்கள், மற்றும் பலர் அவரவர் குழுவில் உள்ள மக்களின் அறிவைப் பொறுத்து, அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவ்வார்த்தைக்கான  விளக்கங்களைக்  கொடுத்துக் கொண்டு  வருவதைப்  பல ஊடகங்களின் வாயிலாக நாம் அறிகிறோம். இவ்வளவு ஏன்? ஒரு பழமொழிக்கு எத்தனையோ விளக்கங்களைத் தருகிறார்கள். அவற்றில் எது சரி என்று வாதிட்டு விடை காண்பது அறியாமை அல்லது மடமை என்று தான் சொல்ல வேண்டும். 

இரு கண்களின் எது நல்லது? தாய் தந்தையரில் யார் சிறந்தவர்கள் என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் எல்லா நடுவர்களும்  ஒரே  மாதிரியான தீர்ப்பினைக் கொடுப்பார்களா?  எல்லா நடுவர்களுக்கும் உண்மையில் 'இரண்டும் ஒன்றே' என்று விசாரணை அறிவோடு தெரிந்திருந்தால் மட்டுமே ஒரே தீர்ப்பு கொடுக்க முடியும். இல்லையென்றால் நேயர்களைத்  திருப்திப்  படுத்துவதற்காகவும் குழப்புவதற்காகவும் தன் தலைமையை நிலைநாட்டுவதற்காகவும் மாறி மாறி தீர்ப்புகள் சொல்கின்றனர். நீங்களே சொல்லுங்கள், அது சரியா? இதில் கூத்து என்னவென்றால், பலர் பொழுது போக்கிற்காக வரும்போது அவர்களுக்கு 'உண்மை' பற்றி  அறிந்துகொள்ள எண்ணம் வருமா? பல வழக்குகளில் கூட ஒவ்வொரு நீதிமன்றங்களில் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கியிருப்பதை நாம் அறிவோம். காரணம்?! சூழ்நிலை, சாட்சிகள், அதிகாரம், பின்பலம் ஆகியவை பொறுத்து  உண்மையையும்  பொய் வென்றுவிடுகிறது. அப்போது யாரைக் குறைகூற முடியும்? எங்கு முரண்பாடு இருக்கின்றதோ, அங்கு உண்மை இருக்காது என்று ஆணித்தரமாகக் கூறலாம். ஏனென்றால், உண்மைக்கு ஒரே ஒரு விளக்கம் தான் இருக்கும். ஆனால், அதற்கு எதிராக பற்பல விளக்கங்களை நாம் தரலாம். ஏன்? தருகிறவர்கள் புகழுக்குரியவராக இருந்தால் அவரைக் கண்மூடி பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை சில காலம் கடந்துதான் தெரிய வரும். 

பிரம்மம், கடவுள், அன்பு, அறம், கருணை, பக்தி, மோட்சம், ஞானம், சொர்க்கம், மரணமில்லாப் பெருவாழ்வு, சத்தியம், தர்மம், ஆகியவற்றுக்கு ஒவ்வொரு விளக்கங்களைக் கொடுத்தாலும் அவைகள் எல்லாம் ஒன்றுதான் என்று எப்போது யார்  அறிகிறாரோ  அப்போது தான் அவர் பூரணத்துவம் அல்லது உண்மையை அறிந்திருக்கிறார்! என்று நான் கருதுகிறேன். பல விளக்கங்களைக்  கொடுத்தால் அறிவாளி, பல புத்தகங்களைப்  படித்திருக்கிறார். என்று வைத்துக் கொள்ளலாம். ஆளால், அவர் இன்னும் உண்மையை அறியவில்லை என்று நமக்கு எப்போது தெரியவரும் என்றால் அவரது நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கும். அப்போது அறிந்து கொள்ளலாம்.  

உலகில் இருக்கும் அனைத்து மக்களும் உயிர் வாழ்வதற்கு ஒவ்வொரு விதமான அதாவது அவரது உடல் ஜீரணிக்கக் கூடிய உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக அங்கு கிடைக்கும் உணவுகள். இது உண்மை தானே. இப்போது உங்கள் முன் கேட்கும் கேள்வி? அவைகளில் எவ்வகை உணவு நல்லது? என்று கேட்டால்.. எல்லாமே பசியை தணிக்கும் உணவு தானே! இவற்றில் யாரவது ஒருவரோ பலரோ 'இந்த உணவு தான் சிறந்தது' என்று ஒரு தீர்ப்பு சொன்னால்.. அது அறியாமை தானே! உண்மையல்ல, பொய் தானே?! அதுபோல தான் ஆன்மீக விசயத்தில் தீர்ப்பு சொல்வதும், சிறந்தது, உயர்ந்தது, தாழ்ந்தது என்று சொல்வதும் அறியாமை என்று தானே அர்த்தம். அல்லது உண்மை அறியாதவர், உணராதவர் என்று தானே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம், உன்னை குழப்புவதற்கும், தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்கும், உங்கள் செல்வங்களை கைப்பற்றுவதற்கும், தாங்கள் எல்லாவித சுகங்களை எவ்வித வேலையும் செய்யாமல் அனுபவிப்பதற்காக நடக்கும் சூழ்ச்சி. ஆனால், மிக அரிதாக நல்லவர்களும், அறத்தை, தர்மத்தைக் கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்.        

கடவுளை வணங்குவது, கடவுளை நினைப்பது, கோவிலுக்குச் செல்வது, விரதம் இருப்பது, கடமை செய்வது, கடவுளை ஆராதனை செய்வது, மக்களுக்குத் தொண்டு, சேவை செய்வது கடவுளைப் பாடுவது, தான தர்மம் செய்வது, பிறர்க்கு உதவுவது இவற்றில் எது சிறந்தது? என்று கேட்டால், ஒவ்வொரு பதில் வரும். ஆனால், எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றிலும் ஒரு ஆன்மீக ஒற்றுமை நாம் அறிந்துகொள்வதே உண்மையை அறிவதற்கான சிறந்த பலன் என்றே கருதுகிறேன். தர்க்கம், விசாரணை, பட்டிமன்றம், என்பன எல்லாம் உண்மையை நோக்கி அல்லது எல்லாம் ஒன்றே என்ற சிந்தனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும். எச்செயலிலும்  நன்மை தருவதானால் அதுவே உண்மைக்கான வழி என்று நாம் அறிந்துகொண்டு, அதற்கான பலன்களை நாம் நடைமுறையில் கற்று உணர வேண்டும்.

 எல்லா மனித இனமும் ஒன்று தான் என்கிற எண்ணம் நம்முள் வருமா? அச்சிந்தனை வளருமா? இந்தக் கருத்தினை தெரிந்துகொண்டாலே,  எல்லாவற்றிலும் இருக்கின்ற ஆன்மீக ஒற்றுமை தெரியவரும். அதோடு, அவரவர் ஆன்மிகம், உண்மையை உணர்தல் எல்லாம் அவரவர் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், மற்றும் சூழ்நிலை மாற்றங்களோடு தொடர்புள்ளதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கே இறைவனைப் பற்றிய புரிதல், ஒவ்வொரு வயது காலகட்டத்தில் எவ்வாறு பரிணாமம் பெற்று வந்திருக்கின்றது  என்பதைச் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை தெரிய வரும். கடவுள் இருக்கிறார் என்பதும் ‘கடவுள் இல்லை என்பதுவும் அதில் அடங்கும். நிறைவாக, உண்மை என்பது ஒன்றே ஒன்று. எல்லாவற்றிலும் அந்த ஒன்றை, ஒற்றுமையை, உண்மையை அறிந்துகொள்வதே,  உணர்ந்து கொள்வதே மனிதப் பிறப்புக்கான காரணமாகும். 

எந்த ஒரு நல்ல எண்ணமும் உண்மையை அறிவதற்கான அடிப்படை அறிவு. அந்த நல்ல எண்ணத்தை நடைமுறை படுத்தி அதன் பலனை அனுபவிப்பதே உண்மையை உணரும் பக்குவம். கெட்ட எண்ணங்களை அகற்ற அகற்ற உண்மை உணரும் நேரம் வரும்...

*********

No comments:

Post a Comment