Pages

Saturday, 6 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 12 எனது லட்சியம், ஜீவன்களைக் காப்பது - MY AIM IS TO SAVE ALL

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 



பாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களைக்  காப்பது - 
MY AIM IS TO SAVE ALL



இனிமையான மனிதா! நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன்! நீ உனக்குள் தேடிக்கொண்டிருக்கும் ரகசியமான விலைமதிக்க முடியாத எங்கும் கிடைக்காத ஒரு அதிசயமானப் பொக்கிஷத்தை எடுத்துக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். பூமியில் தோன்றிய பெரிய பெரிய ஞானிகள், முனிவர்கள், அறிஞர்கள், மகான்கள் போன்றோர்கள் 'தாங்கள் எதற்காக மனிதப் பிறவி எடுத்துள்ளோம்' என்கிற ரகசியத்தைப் பல ஆண்டுகளாகத் தவமிருந்து அதை அழகான பாடல்கள், கதைகள், மந்திரங்கள், சொற்பொழிவுகள், புத்தகங்கள் மூலம் நமக்காக எழுதி வைத்துள்ளனர். அவைகள் எப்படி இருக்கிறதென்றால் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியுள்ளார்கள். அதன் அர்த்தம் எளிதில் புரியாது. படிக்கவே கடினமாக இருக்கும். என்னதான் திரும்பத் திரும்ப படித்தாலும், துருவித்துருவி, தோண்டித்தோண்டி ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் அதற்கான உண்மைப்பொருள் அறிவது மிகவும் கடினம் தான். அதிலும் இந்த அவசர உலகத்தில் இதற்கெல்லாம் யோசிப்பது ஏது நேரம்? அதைப்படித்து ஒவ்வொரு வரியையும் விளக்கிச் சொன்னாலும் கேட்பதற்கு பொறுமை இருக்குமா? என்கிற கேள்விக்குறி இருக்கத்தான் செய்கிறது.

பிரிய மனிதா! விஞ்ஞானம் வளர்ச்சியடையாத நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , ரஷ்யா போன்ற நாடுகளை பார்க்க வேண்டுமென்றால் நாமே நடையாகவோ, வண்டியிலோ செல்லவேண்டும். ஆனால் இந்தக் காலம் அப்படியா? உலகமே உங்கள் உள்ளங்கையில்! எந்த நாட்டிற்கும் ஒரு நொடியில் சென்று வந்துவிடலாம். அப்படியிருக்கும்போது ஆன்மீகத்திலும் இருக்கின்ற இடத்திலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ளும் வழியைத்தான் காலத்திற்குத் தகுந்தாற்ப் போல் எளிமையாக்கி அதை  உனக்குச் சொல்லவே உனக்குள்ளேயே இருந்து வருகிறேன்.


மதிப்பு மிக்க மனிதா! நான் உனக்குள் ஜீவ ஓட்டமாய் ஓடிக்கொண்டிருப்பது, உனது வயிற்று பிழைப்பு மற்றும் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதற்கும், அனைவரும் போற்றும்படி வாழ்வதற்கும், தேடிய செல்வங்களை காப்பதற்கும், நான் படைத்த உலகத்தை நல்லபடியாக இருப்பதற்கும் தான் என்பதை உனக்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். இந்த பூமி சூரியனைச் சுற்றி வருவது போன்று நான் உனக்குள் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். 

அன்புமிக்க மனிதா! உன்னைப் படைத்த நோக்கம் என்னைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ, புகழ்ந்து கொண்டோ இருக்கவேண்டும் என்பதில்லை. என்னைப் பற்றி பேசுவதால், புகழ்வதால் உன்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கில்லை. அப்படி இருந்திருந்தால் உனக்கு ஒரு சாண் வயிற்றை கொடுத்திருக்கமாட்டேன். உனது பிறப்பின் நோக்கம் மனிதர்களை இரக்கம் கொண்டு காப்பதற்கேயன்றி வேறு இல்லை. அப்படியென்றால் என்னைப் பற்றி மட்டும் நினைக்கும் சக்தியை மட்டுமல்லவா கொடுத்திருப்பேன். ஆனால் உனக்கு அனைத்தையும் சிந்திக்கும் சக்தி மற்றும் என்னைப்போல் படைக்கும் ஆற்றலையுமல்லவா கொடுத்துள்ளேன். அதாவது என்னைப் போன்று! என்னை நினைக்கும் பக்தர்களுக்குச் சகலவித செல்வங்களையுமல்லவா கொடுத்திருப்பேன். குறைந்தபட்சம் மனிதன் கஷ்டத்தை அனுபவிக்காமல் காலம் காலமாக எல்லோரும் தவம் செய்துகொண்டே இருக்குமாறு அல்லவா படைத்திருப்பேனே?


பெருமை மிக்க மனிதா! எனது அகராதியில் 'புதுப்பித்தல் ' மற்றும் 'மாறுதல் ' இரண்டும் தவிர்க்க முடியாது! நான் மாற்றுவதினாலும், நீ மாறுவதினாலும் இந்த உலகம் அழியாமல் நிலைத்து இருக்கின்றது. சற்று பயத்துடன் இயங்குகின்றது! இல்லையேல் என்றோ நான் படைத்த இந்த அதிசய உலகம் அழிந்திருக்கும்! 

இரக்கமுள்ள மனிதா! உன்னைப் பல செயற்கரிய வல்ல செயலை செய்வதற்காகவே படைத்துள்ளேன். அவைகளைப் பார்த்து நான் ஆனந்தம் அடைவதற்குப் படைத்துள்ளேன். செயல்களை செய்யாதவர்களை நீ எல்லாம் தெரிந்த தவசிகள் என்கிறாய்! எதையும் செய்யாமல் சதா மௌனமாய் இருக்கும் சாதுக்களை முற்றிலும் துறந்த முனி என்றும் முக்காலமும் அறிந்தவர் என்றும் பல அரிய சக்திகளை கொண்டவர் என்றும் பேசுகின்றாய்.

இனிய மனிதா! மனித சக்தியை மௌனம் காப்பதற்கும், அமைதியாய் இருப்பதற்குமா பயன்படும்? அப்படியென்றால் ஒன்றுமறியாத முட்டாள்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? அதாவது செயலின் மூலம் தான் இருவருக்கும் வித்தியாசம் காணமுடியும். செயல்களைக் கொண்டு தான் எத்தகையவன் என்று தெரிந்துகொள்ள முடியும்.

பாசமுள்ள மனிதா! உன் உடலில் கைகள், கால்கள், கண்கள், வாய், காதுகள் என்று பல்வேறு வேலைசெய்யும் உறுப்புகளை படைத்திருக்கிறேன் எதற்காக? அமைதியாய், மௌனமாய் உட்காரவா? அல்லவே அல்ல. அவைகளைக்கொண்டு நான் பூமியில் படைத்திருக்கும் அனைத்து ஜீவ ராசிகளின் துன்பத்தைப் போக்கவே. நான் அவர்களுக்கு கொடுத்திருக்கும் உண்ண உணவு, உடை, இருப்பிடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை தங்கு தடையின்றி கிடைப்பதற்கு?! மேலும் ஏமாளிகளை ரட்சிப்பதற்கும், ஏமாற்றுபவர்களை உனக்கு அடையாளம் காண்பித்து உன்மூலமாக அவர்களைத் திருத்துவதற்குமல்லவா  உனக்கு என்னுடைய அளவில்லா அறிவையும், அசுரத்தனமான ஆற்றலையும் கொடுத்திருக்கிறேன்!

பெருமையுள்ள மனிதா! உனது உறுப்புகளைக் கொண்டு, அறிவு கொண்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள். அதுதான் என் ஜீவ ஓட்டத்திற்கு உதவியாக இருக்கும். அதிகமாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடு. எனக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் இந்த உலகில் மனித ஜீவராசிகள் பல்கி பெருகி வருகின்றன. என் ஒருவனால் அவர்களை காப்பது கடினம். ஆனால் நானே பல உருவங்களில் காக்கும் செயலை செய்து வருகிறேன். நோய்களை தீர்ப்பதில் டாக்டராகவும், கல்வி போதிப்பதில் ஆசிரியராகவும், வாழ்கையில் குருவாகவும், தாயாகவும், தந்தையாகவும், நண்பனாகவும் இருந்து காத்து வருகிறேன். 

இரக்கமுள்ள மனிதா! யார் ஒருவர் உனக்கு என் ரகசியத்தை, என் வித்தையை கற்று தருவதாகவோ அல்லது பரிகாரமோ செய்யச் சொன்னால் என்னிடம் கேள். அந்த மாதிரி எதாவது செய்தால் உனது அறிவை புதைப்பதற்குச் சமம். அதற்கு நீ அடிமையாகிவிட்டால் நானும் உன்னுடன் சேர்ந்து அடிமையாகி இந்த உலக நலனுக்காக அனைத்து ஜீவன்களையும் காக்கும் கடமை மறந்து மகிமையை இழக்க நேரிடும்.

மதிப்பு மிக்க மனிதா! உனக்குள் இருக்கும் என்னை தினமும் கவனி! எனக்கு வேண்டுபவை நல்ல சிந்தனை, நல்ல செயல்கள், எல்லோருக்கும் நன்மை செய்யும் குணம், எப்போதும் என்னை மறக்காமல் அனைவரையும் காக்கும் செயல்கள் ஆகியவை. 

அருமை மனிதா !


இன்றே புறப்பட்டு!

நானும் வருகிறேன் !


அனைத்து ஜீவன்களை காப்போம்!         

    

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

உள்விதி மனிதன் பாகம் :11 நல்லது எது? தீயது எது? எப்படி தெரிந்து கொள்வது? GOOD AND BAD THINGS?

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை


பாகம் : 11 நல்லது எது? தீயது எது? 
எப்படித்  தெரிந்து கொள்வது?
HOW DO YOU KNOW GOOD AND BAD THINGS?


அன்பு மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். இந்த உலகில் உனக்கு நல்லது எது? தீயது எது? என்பது தெரியாமலோ அல்லது புரியாமலோ அல்லது அறியாமலோ இருக்கும்! அதாவது பிறர்க்கு மனதளவிலோ அல்லது உடலளவிலோ தீங்கு தரும் எந்த ஒரு செயலும் செய்யத்தகாத செயலே! ஒருவேளை நீ தீய செயலைச் செய்வதற்கு முற்பட்டால் அதன் பலன் உனக்கோ அல்லது உன்னைச் சேர்ந்தவர்களுக்கோ உனக்கேத் தெரியாமல் நீ நினைத்துக் கூட பார்க்காத சமயத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்குபோது கெடுதலாக முடிவடையும். உன் தவறுக்குத் தக்கவாறு உனக்கோ அல்லது உன்னைச் சேர்ந்த அனைவர்களுக்கோ உடனேயோ  அல்லது சற்று காலம் தாழ்த்தியோ தக்க தண்டனை கிடைக்கும். ஆகையால் அத்தகைய செயலைச் செய்ய ஒருபோதும் நினைக்காதே!  



அதேபோல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயலை அதாவது மகிழ்ச்சியும், சந்தோஷமும் தரக்கூடிய எந்த செயலும் செய்யக்கூடியவையே. அந்தச் செயலை செய்வதற்கு நான் எப்போதும் துணையாய் இருப்பேன். அதன் மூலம் நான் பெருமையையை புகழை செல்வத்தை மகிழ்ச்சியை உனக்குத் தேடித்தருவேன். 


இனிய மனிதா! இதை கூறும்போது உன்னிடத்தில் புன்சிரிப்பு, ஞான சிரிப்பு உதிர்வது எனக்குத் தெரிகின்றது. ஏனென்றால் இந்த உலகில் எத்தனையோ பேர் பெரிய பெரிய தவறுகள் செய்தும் எந்த ஒரு தண்டனையை அனுபவிக்காமல் இருக்கின்றனரே? அல்லது அதிலிருந்து தப்பித்து  நிம்மதியாக வாழ்கின்றனரே என்ற கேள்வி கேட்பது எனக்குத்  தெரிகின்றது. ஆனால் அவர்கள் தினமும் வினாடிக்கு வினாடி கஷ்டப்படுவது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.



மரியாதையுள்ள மனிதா! தவறு செய்கின்றவர்களின் துயரம் இந்த மனிதக் கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தீய செயலை செய்த மனிதனுக்குள் இருக்கும் உள்விதி மனிதன் உள்ள எனது ஆன்ம ஓட்டம், ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம் மூலம் தக்க சமயத்தில் வெளிக்காட்டும்படி செய்து விடுவேன். அதாவது அவர்களுக்குப் பூலோக அவஸ்தைகளை பலவற்றைக் கொடுத்து அவர்கள் திருந்தும் வரை பலவிதமான தொந்தரவை பலரூபத்தில் கொடுத்துக்கொண்டு பல இம்சைகளுக்கு ஆளாக்கி விடுவேன். அதில் ஏதேனும் பாக்கியோ அல்லது கடனோ வைத்திருந்தால் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு கொடுத்து அந்த கடன் தீரும் வரை என்னுடைய தண்டனை தொடரும். ஆகவே தவறு செய்யுமுன் அந்த தவறு உன்னையும், உன்னைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்கிற எண்ணம் இருக்காட்டும். இதை  அவ்வப்போது உனக்கு எச்சரித்துக் கொண்டு இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!



இனிமையான மனிதா! தீய செயலை செய்த மனிதனோ! அல்லது அதன் மூலம் பல சொத்துகளை சேர்த்த பணக்காரனோ என்றைக்குமே நிம்மதியாக இருந்தது கிடையாது. ஏனென்றால் அவர்களுக்குள்ளும் நான் இருப்பதால் அவன் செயல்களை நன்றாக கவனிக்க முடிகின்றது. அதாவது அவனுக்குள் இருக்கும் ஜீவ ஓட்டம் எப்போதும் அதிகமாக இருக்குபடி பார்த்துக் கொள்வேன். அதுவே நான் தண்டனை கொடுத்தது போலவும், மீண்டும் தவறு செய்யாமல் உணருவதற்குமாகும். அப்படிபட்டவன், யாரைப் பார்த்தாலும் பயந்து சாவான். எங்கேயோ ஒரு தவறு நடந்தாலும் அதைக்கண்டு பயப்படுவான். தன்னை சுற்றியுள்ளவர்களையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் நம்ப மறுப்பததை  எனக்கு நன்றாகத் தெரியும். நிம்மதியான தூக்கம் என்பது அவன் வாழ்நாளில் இல்லாமல் போய்விடும் என்று தெரிந்தும் மென்மேலும் தவறு செய்வதினால் அவனுக்கு நானே உள்ளுக்குள் கடுமையான தண்டனை கொடுத்துவருவேன். அவன் சீக்கிரம் திருந்திவிடுவான் என்று உறுதியாக நான் நம்புகிறேன். மீறியும் தவறு செய்வது தொடர்ந்தால் அவனைக் காக்க யாராலும் முடியவே முடியாது. அவனது குடும்பம் வெகு சீக்கிரத்தில் அனாதையாய் கேட்பாரற்று வீதிக்கு வருவது சர்வ நிச்சயம். 



இரக்கமுள்ள மனிதா! தீயவை செய்யும் மனிதனை திருத்துவதற்கு பலவழிகளில் உள்விதி மனிதனாகிய நான் முயற்சி செய்துவருகிறேன். உடனே அவனுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது எனது மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் அவனால் உனக்கு எந்த ஒரு தீயதும் உனக்கு வராமல் காப்பது எனது முழுமுதற்கடமை.

மேன்மையான மனிதா! நான் அதாவது இந்த உள்விதி  மனிதன் இருக்கின்றேனா? இல்லையா? என்பது பற்றி உனக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும். ஏனென்றால் என்னைக் காட்டுவதாக சொல்லி, எனது அறிய செயலை உனக்கு அருளுவதாகச் சொல்லி பலர் பலவழிகளில் பணம் வாங்கிக் கொண்டு அருமையான நேர்மையான மனிதர்களை ஏமாற்றுவதோடு நிற்காமல் அவர்களைக் குறுக்குவழியில் பல தவறுகளை செய்யும்படி தூண்டிவருகிறார்கள். அவர்களை உனக்கு அடையாளம் காட்டி உன்மூலம் அவர்களைத் திருத்துவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றும் வருகிறேன். கூடிய விரைவில் முழு வெற்றி அடைவேன். அப்போது உனக்கு மகிழ்ச்சி தானே?



இனிமையான மனிதா! உன் ஒவ்வொரு செயலையும் நான் உன்னிப்புடன் கவனித்து வருகிறேன். அப்படியிருக்கும் போது என்னை பணத்தால், செல்வத்தால் காண்பதற்கு முயற்சி செய்தால் அது வீண் தான். அப்படி காட்டுகிறேன் என்பவன் உண்மையானவன் அல்ல. அவனை நம்பி நீ சேர்த்த செல்வத்தை கொடுத்து ஏமாறாதே! ஏற்கனவே நீ பிறக்கும் போது  உனக்காக கொடுத்த மகிழ்ச்சியின் பங்கை, உனது முன்னோர்கள் தங்கள் அறியாமையினால் இழந்துவிட்டார்கள். நீயாவது இப்போது விழித்துக்கொள். உனக்குரிய அந்த மகிழ்ச்சி பங்கை வெகுசீக்கிரத்தில் கிடைக்குபடி செய்கிறேன். அதற்கான செயல்கள் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.



பாசமுள்ள மனிதா! எனது ஆற்றல் ஓட்டம், ஜீவ ஓட்டம், விதி ஓட்டம், இரத்த ஓட்டம் உனக்கு இலவசமாகவே கொடுத்திருக்கிறேன். என்னை வெளியில் தேடி உனது ஆற்றல், அறிவை வீணாக்கி விடாதே! எவரிடத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கின்றதோ அதுவே என் ஓட்டம், என் ஆற்றல். அதுவே பலவித சக்திகளாக மாற்றும் வல்லமை கொண்டது. அப்படி சந்தேகம் இருந்தால் உன்போன்ற ஓட்டம் மற்றவர்களிடத்தில் இருக்கின்றதா? என்று சரிபார்த்துக் கொள் அல்லது கேட்டு தெரிந்துகொள். அதுவே அழியா சக்தி. அதுவே உன் ஜீவ சக்தி.

பிரியமுள்ள மனிதா! உனக்குள் இருக்கும் எனது ஓட்டம் சீராக நடைபெற வேண்டுமென்றால் எனக்கு வேண்டியவை நல்ல எண்ணங்கள், நல்ல உணவு, நல்ல செயல்கள். அதுவே எனக்கு போதுமானது. நான் வேண்டும்போதேல்லாம்  அவைகளை நீ எனக்குக் கொடுத்துவிட்டால் நான் உனக்கு எப்போதும் மகிழ்ச்சி தருவேன். அது என் கடமை. அப்படி இல்லாவிட்டால் உனக்கு பல கஷ்டங்கள் கொடுக்க நேரிடும் ஜாக்கிரதை!



அன்புமிக்க மனிதா! உன்னை படைக்கும்போதே எனது ஜீவ ஓட்டத்திற்கான அனைத்தையும் படைத்துவிட்டேன். நீ இந்த உலகத்தில் உள்ள பலவற்றை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியை உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனாகிய நான் உன் மூலம் காணவேண்டுமென்கிற ஆசையால் உனக்குள் வந்துள்ளேன். எக்காரணம் கொண்டும் உனது ஏமாற்றும் குணத்தால் அல்லது திமிர்த்தனத்தால் அல்லது வீண் ஜம்பத்தால் இழந்துவிடாதே.


இனிமை மனிதா! தீய வழியில் பணம் சேர்த்த சிலர், அதிகமான, அனைத்து வசதிகள் இருந்தும் அதை வெளிகாட்டிக் கொள்ளமுடியாமல், அனுபவிக்க முடியாமல் மரண அவஸ்தைகள் படுவதை என்னால் உணரமுடிகின்றது. அதற்கு நான் என்ன செய்யமுடியும். நீ செய்யும் தவறுகள், எனக்கு செலுத்தும் கடன். நல்ல செயல்கள் நான் உனக்கு கொடுக்கும் மகிழ்ச்சியானச் செல்வம். என் பேச்சை கேட்காமல் உனது மமதையால் அல்லது உனது பேராசையால் அல்லது உனது சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஜீவ ஓட்டத்தை இழந்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அந்த மாதிரியான எண்ணத்தை தடுத்து உனக்கு மன்னித்து என்னால் ஆன நன்மை தரவே வந்துள்ளேன்.



மரியாதை மிக்க மனிதா! நீ தீய செயலில் ஈடுபடும்போதெல்லாம் எனது ஜீவ ஓட்டத்தைப் பலவழிகளில் தடையாக அல்லது அதிவேகமாக ஓடச் செய்து உன் உடலை உண்டு இல்லையாக்கிக் கொண்டிருக்கிறேன். எதனால் என்றால் உனக்காக கொடுத்த குடும்ப கடமைகளை செய்ய மறந்து, என்றோ நீ பிறர்க்குத் தீமைகளைச் செய்ததால் அதன் பலனை நீ இப்போது அனுபவிக்கிறாய். அப்படி அனைத்து தவறுகளையும் உணர்ந்து பாவமன்னிப்பு கேட்க நினைத்தால் இன்று முதல் நான் எந்த ஒரு பாவத்தையும் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு எனது ஜீவ ஓட்டத்தில் கலந்து கொள். நான் உன்னையும் , உன்னைச் சேர்ந்தவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வேன் ! இது உறுதி!


அன்பு மனிதா!


தீயதை தவிர்த்திடு!


நல்லதை செய்திடு!


எனது ஜீவ ஓட்டம் உனக்கு மகிழ்ச்சி தரும்!

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

மனிதனின் வெற்றி மனிதனாக மாறுவதில் ?- SUCCESS OF HUMAN IS BEHAVE LIKE A HUMAN ?

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


மனிதனின் வெற்றி மனிதனாக மாறுவதில் ?-
SUCCESS OF HUMAN IS BEHAVE LIKE A HUMAN ?


மனிதன் சமீப காலமாக கற்பனைக்கு எட்டாத பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்துக் கொண்டும் தன்னுடைய ஆற்றலையும், திறமையும் பல வழிகளில் நிரூபித்து வருகிறான் என்பதை யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ஏன்? ஒவ்வொரு மனிதனும் தான் எதாவது ஒரு வகையில் சாதனைபுரிய வேண்டுமென்று ஒரு குறிக்கோளுடன் இருக்கின்றனர்.


அதனால் ஒரு சிலர் அகிலம் போற்றும் விஞ்ஞானியாக திகழ்கின்றனர். ஒரு சிலர் உலகை ஆளும் கணிப்பொறியை உருவாக்குகின்றனர். மிகப் பெரிய தொழிலதிபர், கோடீஸ்வரர், சிறந்த நிர்வாகி, அரசியல்வாதி, ஞானி, ஆன்மீகவாதி ஏன் ஒரு சிலர் தெய்வங்களாக மாறி மனிதகுலத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். இன்னும் மிகைபடுத்தி சொல்லவேண்டுமென்றால் அவன் மிருகமாகவும் மாறிவிட்டான்.


அவனுடைய அறிவும், ஆற்றலும் பூமியில் பாதாளம் முதல் விண்ணிற்கும் வரையிலும் தன்னுடைய சாதனைகளை விரித்துக் கொண்டு வருகிறான், இவ்வளவு சாதனைகள் செய்தாலும் அவனால் செய்ய இயலாத சாதனை ஒன்றே ஓன்று தான்! அது என்னவென்றால் மனிதன் மனிதனாக இருப்பது தான் !?  


மனிதனுக்கு பகுததறிவோடு ஆறறிவு இருப்பதை ஏற்றுக் கொண்டாலும் மனிதன் உருவில் இருக்கும் மனிதன் எப்படி மனிதனுக்குரிய  குணத்துடன் மாறுவது ? என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறான். மனிதப் பண்புகள் என்னவென்றால் எப்போதும் 


பிறரிடத்தில் அன்பு செலுத்துவது, 
அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவிகள் செய்வது, 
இரக்கத்தை காட்டுவது, 
மனிதர்களுடைய கஷ்டத்தை போக்கி சுகத்தை கொடுப்பது, 
சத்தியமான வழிகளில் நடப்பது, 
இருப்பதை பகிர்ந்து கொடுப்பது, 
நேர் வழியில் நடப்பது, 
அறியாமையை அகற்றுவது, 
வாழ்க்கைக்கான கல்வி வழங்குவது, 
சிறிய தவறுகளை மன்னிப்பது, 
பொறாமை போக்கி பொறுமை காப்பது, 
கோபத்தை அழிப்பது ????


மேற்கூறியவற்றில் மனிதன் யாராவது சாதனை படைத்தால் தான் உண்மையான சாதனையாக ஏற்றுக்கொள்ளலாம்.

இன்று முதல் மனிதனாக மாற புதிய சபதம் எடுத்துக் கொள்வோம்.


வாழ்க மனிதன் !


வளர்க மனித சமுதாயம் !

  
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

Friday, 5 October 2012

முயல் - ஆமை பந்தயம் - நமக்கு சொல்லித்தரும் பாடம் A LIFE LESSON FROM HARE AND TORTOISE

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 



முயல் - ஆமை பந்தயம் - 
நமக்கு சொல்லித்தரும் பாடம் 
A LIFE LESSON FROM HARE AND TORTOISE 



முயலுக்கும் , ஆமைக்கும் இடையே நடந்த பந்தயம் உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இதில் என்ன பிரமாதம். அந்த பந்தயத்தில் ஆமை ஜெயித்தது. முயல் தோற்றது! இது தெரிந்தது தானே! ஆனால் எதற்காக வேகமாக ஓடும் முயலையும், மெதுவாக நடக்கும் ஆமைக்கும் பந்தயம் வந்தது. ஏன் ? வேகமாக ஓடும் சிறுத்தைக்கும் , மெதுவாக ஊரும் நத்தைக்கும் பந்தயம் வரவில்லை. மேலும் ஏன் முயல் தோற்றுப் போகும்படி சித்தரித்தார்கள். அதற்கு வலுவான காரணம் என்ன? இதற்கெல்லாம் விடை இதோ!



அதாவது முயல் தோற்றது 'இயலாமையால்' அல்ல. அது முயலாமையால் தோற்றது. அதை பிரித்து பார்த்தால் முயல் + ஆமை = முயலாமை. அதாவது முயற்சி செய்யாமை. தன்னுடைய ஓட்டத்தின் முன்னால் இந்த ஆமை ஜெயிக்கமுடியுமா என்கிற இறுமாப்பு! தலைக்கணம்! தொடர் முயற்சி இன்மையால் தனது  அலட்சிய போக்கால் வெற்றியை இழந்தது. ஆமையோ தன்னால் மெதுவாகத்த்தான் நடக்க முடியும், கட்டாயம் தான் முயலிடம் தோற்று விடுவோம் என்று தெரிந்தும் தைரியமாக முயலிடம் பந்தயத்திற்கு போனது. ஏனென்றால் அதனிடம் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கின்ற தைரியத்தினால். தான் மெதுவாக நடந்தாலும் தன்னுடைய தொடர் முயற்சியால் முயன்று வெற்றி பெற்றது. ஆகவே நீங்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். உங்களிடம் உள்ள தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை மட்டும் இழக்காதீர்கள்.    



ஆனால் உண்மையான போட்டி உலகில் முயலுக்கும் , ஆமைக்குமா பந்தயம் நடக்கிறது. அதாவது சைக்கிளுக்கும் , மோட்டார் காருக்குமா போட்டி நடக்கிறது. மோட்டாருக்கும் , மோட்டாருக்குமல்லவா போட்டி நடக்கிறது. அதாவது முயலுக்கும், முயலுக்குமல்லவா போட்டி நடந்திருக்க வேண்டும்.



அதாவது பள்ளி வகுப்பில் முதல் மாணவனாக வரும் பலர், மாவட்ட அளவில் முதலாவதாகவா வருகிறார்கள்? அவர்கள் மாநில அளவில் எங்கேயோ இருப்பார்கள். அவ்வளவு கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது முதலாவதாக வருவதற்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது தான் இந்த பந்தயம் சொல்லும் பாடம்.



பாடம் : 1

முயல் எவ்வளவு வேகமாக ஓடினாலும் தன்னுடைய தொடர் ஓட்டம் , இடைநில்லா ஓட்டம் இல்லாததால் சாதாரண ஒரு ஆமையிடம் தோற்றது. அதனால் ஆமை தான் எப்போதும் ஜெயிக்கும் என்பது கிடையாது. போட்டியின் போது எப்போதும் விழிப்புடன் இரு. தொடர் முயற்சியை விட்டுவிடாதே.

பாடம் : 2

தம்மை விட தகுதி குறைந்தர்வர்களிடம் போட்டியிடும்போது அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது.



பாடம் ; 3

போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்போதும் தொடர் முன்னேற்றம் இருக்க வேண்டும். இடையில் தொய்வு எற்பட்டாலோ அல்லது ஓய்வு எடுத்துக்கொண்டாலோ தோல்வி உறுதி. அதாவது வெற்றி இலக்கை நெருங்க நெருங்க மிக வேகமாக முன்னேற வேண்டும்.


ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்கள் வெற்றி இலக்கை நெருங்க நெருங்க மிக வேகமாக ஓடித் தொடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம், வேகமாக ஓடிவந்து இலக்கை நெருங்கும்போது வேகம் குறைத்துக்கொண்டால் , இதற்கு முன் பாடுபட்டது வீணாகிவிடும் என்கிற காரணம் தான்.

பாடம்: 4

வாழ்கையில் உங்களிடம் போட்டிபோடுபவர்கள் உங்களைவிட அதிக மடங்கு திறமை உள்ளவர்கள் இருப்பார்கள் என்று கருதி அதற்குத் தகுந்தாற்ப்போல் உங்கள் திறமையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாடம் : 5

யார் போட்டுக்கு வந்தாலும் உங்கள் தொடர் முன்னேற்றம், கடின உழைப்பு, தன்னம்பிக்கை  மற்றும் விடாமுயற்சியை  எப்போதும் கைவிடக் கூடாது.

பாடம் : 6 

இயலாமையால் முயலாமையை வேண்டாம். ஆமை போன்ற சோம்பேறிதனத்தை விரட்டி வாழ்கையில் முயல்...முயல்...முயல்.. முயலைப்போன்று வேகமாக முன்னேறு.


உன்னிடத்தில் பெரிய அளவில் திறமையும் , முயற்சியும், அறிவும் இருந்தாலும்  உனது கவனம் முழுவதும் உனக்கு முன்னே , பின்னே இருக்கும் போட்டியாளர்களை விழிப்புடன் கவனித்து தொடர் முன்னேற்றம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் உனக்கு வெற்றி கிடைக்கும்.



இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com          

Thursday, 4 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள்விதி மனித ஜீவ ஓட்டம்- CIRCULATION OF BLOOD IS YOUR INNER HAPPY MAN'S SOUL


உள்விதி மனிதன் 
சம மனிதக்  கொள்கை 

பாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள்விதி  மனித ஜீவ ஓட்டம்- 
CIRCULATION OF BLOOD IS YOUR
 INNER HAPPY MAN'S SOUL

அன்பு மனிதா! சில நேரங்களில் நீ செய்யும் காரியங்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாய் இருக்கின்றது. அதாவது நீ செய்யும் தவறுகள் உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது என்று இதுநாள் வரை எண்ணிக் கொண்டு இருக்கின்றாய்.  எனக்குத் தெரியாமல் நீ எதுவும் செய்யமுடியாது என்று இப்போதாவது தெரிந்து கொள். நான் உனக்குள் இருப்பதையும், நான் எப்படி , என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று நான் சொன்னால் தான் உனக்குத் தெரியும். நான் சதா ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்து கொள்! என்ன? ஓடிகொண்டா ??? என்று ஆச்சரியமாய் கேட்பது எனக்கு தெரிகின்றது. 


இனிய மனிதா! உன்னுள் ஓடும் இரத்த ஓட்டமே எனது ஓட்டம்! அதுவும் சுத்தமுள்ள இரத்த ஓட்டம்! அது நின்று விட்டால் நான் உன்னுடன் இல்லை என்று அர்த்தம். அப்படி நான் நின்று விட்டால் யாராலும் என்னை மறுபடியும் ஓட வைக்கமுடியாது. எல்லோரும் மனிதனின் முக்கிய உறுப்பு மூளை என்று இதுநாள் வரை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மூளையை விட இரத்த ஓட்டமே முக்கியம். மூளை செயலற்று இருந்தால் கூட நீண்ட நாட்கள் வாழலாம்! ஆனால் இரத்த ஓட்டம்  செய்யலற்றுவிட்டால் சில வினாடிகளில் உள்விதி மனிதனாகிய நான் உன்னைவிட்டு பிரிந்துவிடுவேன். இப்போது சொல். நான் எங்கு, எப்படி இருக்கிறேன் என்று தெரிந்துவிட்டதா?

பிரியமான மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் அளவில்லா ஆற்றல் உன் இரத்தத்தில் கலந்து இருக்கின்றது. உனது எண்ண ஓட்டங்கள் நன்மை தருவதாக இருந்தால் அதை இந்த இரத்த ஓட்டத்தில் கலந்துவிடு. நான் அதை செய்யலாக்கிக் காட்டுகிறேன். நீ உறங்கினாலும், ஏதும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் நான் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு வினாடியும் உன்னிடமிருந்து நல்ல எண்ணங்களை எதிர்பார்த்து ஓடிக்கொண்டிருக்கிறேன். உன் கண்கள் தூக்கத்தில் மூடினாலும் நான் விழித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுபோல் காது, மூக்கு, வாய், கை, கால் எல்லாம் ஓய்ந்து இளைப்பாற உறங்கிக் கொண்டிருந்தாலும் எனது ஓட்டம் எப்போதும் நிற்காது. 



பாசமுள்ள மனிதா! நீ அசைவற்று உறங்குவதுபோல் நான் இளைப்பாற நினைத்தால் ... நீ என்னாவாய் என்று சற்று சிந்தித்துச் செயல் படு. எனது ஆற்றல் இப்போது புரிந்துவிட்டதா? உனது ஒவ்வொரு அசைவுகளும் செயல்படுகிறதென்றால் இந்த உள்விதி மனிதன் ஓட்டத்தினால் தான்., ஒவ்வொரு நினைவும் கை நொடிக்கும் வேளையில் நடைபெறுகிறதென்றால்  என்னால் தான். அதுபோல் உனக்கு அறிவு கொடுத்து உதவி செய்கிறேன். நீ நினைக்கும் பலவித நினைவுகளை ஒன்று திரட்டி சேமித்து வைத்திருக்கிறேன். அங்கு ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் கலந்து உன் மூலம் புதிய படைப்புகளை படை த்துவருகிறேன். 


மதிப்பு மிக்க மனிதா! இந்த ஓட்டத்தை நீ இரத்த ஓட்டம் என்று சொல்கிறாய்! ஆனால் இதற்கு ஆன்ம ஓட்டம், ஜீவ ஓட்டம், ஆற்றல் ஓட்டம், அறிவு ஓட்டம், செயல் ஓட்டம், எண்ண ஓட்டம், சிந்தனை ஓட்டம், உணர்வு ஓட்டம் என்று பலவித பெயரில் அழைக்கலாம். உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் இந்த ஓட்டம் வெளியில் இருப்பதாக சித்தரித்து என்னை கல்லாக்கி, சிலையாக்கி அதில் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற அற்ப விலைகொண்ட (நீயாக அது விலை மதிப்பில்லாது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அவையெல்லாம் எனக்கு சாதாரண கற்களுக்குச் சமம்) ஆபரணங்களால் அலங்கரித்து, செயற்கையான முறையில் என்னை பலவகை பொருட்களினால் அபிஷேகம் செய்கிறாயே ! அதில் ஒரு குண்டூசி முனையாவது எனக்குள் வந்து ஒட்டுமா! 

மரியாதை கொண்ட மனிதா! நீ எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து ஆராதனை செய்தாலும், லட்சக்கணக்கான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது. அது எனக்கு சேருவதாக நினைத்து பேராசை கொண்ட வீணர்களுக்கு கொடுத்து ஏமாறுகிறாய்! 



மேன்மையான மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக உனது நன்மைக்காக ஓடிக்கொண்டிருக்கும்போது வெளியில் என் பெயரை சொல்லி பணம், தங்கம் வசூல் செய்து தங்களுடைய பணக்கார அந்தஸ்தை வெளியில் சொல்வதற்காக எனக்காக செய்வதுபோல் பாவனை செய்து மனிதகுலத்தை ஏமாற்றும் கயவர்களை அடையாளம் உனக்கு காட்டவே வந்துள்ளேன். அதை உண்மையென எண்ணி , நீ உனது உழைப்பினால் சேர்த்த செல்வத்தை அவர்களிடம் கொடுத்து ஏமாறுவதை தடுக்கவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்துள்ளேன்.

பெருமைக்குரிய மனிதா! எனது ஓட்டம் தங்கத்தை கொண்டு ஓட வைக்க உன்னால் முடியுமா? கோடிக்கணக்கான பணத்தைக்கொண்டு ஓட வைக்க முடியுமா! எனக்குத் தேவை ஒரு சான் வயிறு உணவு.

அன்பு மனிதா! யார் ஒருவர் உன் வாழ்வைப் பொன்னாக்கி நீ இருக்கும் நிலையைவிட உயர்த்துவதற்கு உன்னிடம் பணம் மற்றும் யாதொரு உதவியும் வாங்கிக்கொள்ளாமல், உனக்குள் இருக்கும் எனது ஜீவ ஓட்டத்திற்காக சக்தியான ஆகாரம், உணவு தருகின்றனரோ அவர்களே நீ தேடும் ஞானி, சந்நியாசி, முனி, மகான், சமூக சேவகர், உனது வாழ்க்கை காப்பாளர், வழிகாட்டி, துணைவன், உனது ஆபத்தை, கஷ்டத்தை போக்கும் பெரியவர். அவர்களை நீ தைரியமாக அணுகினால் உன் நிலை உயரும். உனக்குள் இருக்கும் எனது ஆத்ம ஓட்டமும் நிற்காது. 

பெருமைக்குரிய மனிதா! நீ பிறக்கும்போது உனக்குரிய பங்கான நிம்மதி, சந்தோஷம், உணவு, உடை மற்றும் இருப்பிடம் கொடுத்தேன். ஆனால் உன்னுடைய அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் அதை இழந்து அல்லது தேடி அலைகிறாய். அவைகளை மறுபடியும் உனக்கு கிடைக்கும் வரை எனது ஜீவா ஓட்டம் நிற்காது.



இனிய மனிதா! நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கவனித்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னால் உனக்கு நம்பிக்கை இருக்காது. நீ நன்மையான, நலம் தரும் செயல் செய்கின்ற போது , எனது ஜீவ ஓட்டம் சீராகவும், ஒரே அளவு வெப்பம் கொண்டதாகவும், இரத்த கொதிப்பு சீராகவும், இதய துடிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். அப்படி இருந்தால் உனது செயலை நான் ஆமோதிக்கிறேன் என்று அர்த்தம். அந்த செயலை தைரியமாகச் செய்யலாம். அதன் மூலம் மனித குலம் மகிழ்ச்சி அடையும் என்பதை நான் இப்போது உறுதி செய்கிறேன்.



இரக்கமான மனிதா! நீ தவறாக, பிறருக்கு கெடுதல் தரும் செயல் செய்ய நினைத்தால் ஜீவ ஓட்டம் வேகமாகவும், இரத்த கொதிப்பு, இதய துடிப்பு அதிகமாகவும், உடம்பு சூடாகவும் ஆவது எனது எண்ணத்திற்கு முரண்பட்டு உன் செயல் இருப்பதை உனக்கு உணர்த்துகிறேன். உள்ளுக்குள் இருக்கும் எனது இந்த ஓட்டத்தை வெளியில் காண்பிக்கிறேன் என்று யாராவது சொன்னால் அதை ஒருபோதும் நம்பாதே! சில சமயங்களில் நீ அதற்கு பணம் கொடுத்து ஏமாந்தும் , சிலசமயத்தில் தீய செயலில் ஈடுபட்டும் உன்னை நீயே சிறிது சிறிதாக அழித்துக் கொள்வதோடு நில்லாமல் என்னையும் அல்லவா அழித்துக் கொண்டு வருகிறாய். அதற்கு இனிமேல் கட்டாயம் இடம் கொடுக்க மாட்டேன். 



பாசமுள்ள மனிதா! ஓடிக்கொண்டிருக்கும் என்னை கல்லாக்கி, சிலையாக்கி என்னை அலங்கரித்து, அதை வைத்து மனித குலத்திற்கு நல்லது செய்யாமல் என் பெயரைச் சொல்லி சுயநலத்தை மனிதில் கொண்டு சுயலாபம் அடைகிறாய். அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் உன்னுடன் ஆரம்பம் முதலே இருக்கிறேன். எனக்காக பணம் செலவு செய்வதைவிட மனிதகுலத்திற்கு பெருமை தரும் செயலைச் செய்தால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பைத்  தருகிறேன்.

இனிய மனிதா!


எனது ஓட்டத்தைக் கவனி !

உன்னுடன் இருப்பதைத் தெரிந்து கொள்!

இனி வாழ்கையில் மகிழ்ச்சி பொங்கும்!


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

'அதிர்ஷ்டம் ' உன்வசத்தில் இருக்கின்றது- LUCK IS IN YOUR HAND

அனுபவ பொன் வரிகள் 

மதுரை கங்காதரன் 
'அதிர்ஷ்டம் ' உன்வசத்தில் இருக்கின்றது-
LUCK IS IN YOUR HAND


'காலம்' என்னும் அதிர்ஷ்ட தேவதையானவள், தனது இரு கைகளைக் கொண்டு தன்னிடம் இருக்கும் அதிர்ஷ்டத்தை உனக்கு அள்ளி அள்ளித் தர தயாராக இருக்கின்றது. அது உன்னைச் சுற்றிலும் தன்னம்பிக்கை ரூபத்தில், விடா முயற்சி என்கிற செயலில், கடின உழைப்பு என்ற வடிவில், பலவித சந்தர்ப்பங்களில் வாய்ப்புகளாக உனக்கு தரக் காத்திருக்கின்றது. ஆனால் நீ தான் பிரயாசை படாமல் அலட்சியப் படுத்துகிறாய். அந்த உருவங்களில்  நடமாடும் அதிர்ஷ்டத்தை  ஒரு சிலர் அடையாளம் கண்டு அதை இறுக்கமாக பற்றிக் கொள்வதால் அவர்களுக்கு எளிதாகவும், பலருக்கு எட்டாக்கனியாகவும் இருக்கின்றது.



அத்தகைய அதிர்ஷ்டத்தை 'மின்னலுக்கு ' ஒப்பிடலாம்! மின்னல் சில வினாடிகளே ஏற்பட்டாலும் அதன் ஆற்றல் மகத்தானது என்பதை நாம் நன்கு அறிவோம். சரி ! அப்படிப்பட்ட மின்னல் எப்போது வரும்? மழை மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது ஏற்படும்! மழை மேகங்கள் எப்போது உண்டாகும்? நீர் ஆவியாகி மேலே செல்லும்போது உருவாகும்!



அதுபோல அதிர்ஷ்டம் எப்போது வரும்? நீ கடுமையாக உழைக்கும்போது! கடுமையான உழைப்பு எப்போது உண்டாகும்? விடா முயற்சியின் போது உருவாகும். விடா முயற்சி எப்போது பிறக்கும்? அறிவும், ஆற்றலும் ஒன்று சேரும்போது! அறிவும் , ஆற்றலும் எவ்வாறு வரும்? தன்னம்பிக்கை கொண்ட எண்ணங்களாலும் முறையான பயிற்சியாலும் கிடைப்பது. இது தான் அதிர்ஷ்டத்த்தின் அடிப்படை.

நீங்களும் உங்களைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கையையும் , விடா முயற்சி மற்றும் கடின உழைப்பை பற்றிக்கொள்ளுங்கள்! இனி அதிர்ஷ்ட தேவதையின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும்! நீங்கள் ஈடுபடும் செயல்களின் இனி வெற்றி தான் கிடைக்கும் என்பது உறுதி.



ஆக அதிர்ஷ்ட தேவதை உன்னிடம் வரவேண்டுமென்றால் வளமான எண்ணங்களைக் கொண்டு அவளை நினை. கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி கொண்டு அழைப்பிதழ் கொடு. தன்னம்பிக்கை கொண்டு நன்கு உபசரி. இப்போது அதிஷ்டதேவதை உங்கள் வசம்.


 இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com