Pages

Tuesday, 27 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுப்பவன் INNER MAN GIVES HOLY LIFE

உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை 



பாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள்விதி மனிதன் 


INNER MAN GIVES HOLY LIFE


என் பிரியமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை பார்பதற்கு அல்லது இருப்பதை உணர்வதற்கு ஆகாரம் இல்லாமல், உறக்கமில்லாமல் ஆண்டுக்கணக்கில் உடலை மறந்து, உலகத்தை மறந்து ஏன் தன்னையே மறந்து யாரும் தொந்தரவு கொடுக்காதவாறு காட்டிலோ, மலையிலோ தவத்தை மேற்கொண்டால் தான் நான் கிடைப்பேன் என்று அரிய பெரிய ஞானிகள், மகான்கள், முனிகள் சொல்லியிருப்பதை ஏட்டிலும், புத்தகத்தில் வாயிலாகவும், உனது  முன்னோர்கள் சொன்னதின் மூலமாகத் தெரிந்து கொண்டிருப்பாய். அவைகள் உண்மையா? அப்படியென்றால் இன்று எத்தனைபேர் அப்படி இருக்கின்றார்கள்? என்கிற சந்தேகம் உனக்கு வரலாம். அந்த சந்தேகத்தை இந்த உள்விதி மனிதன் தீர்த்துவைக்க விரும்புகிறேன்.

என் இனிய மனிதா! அவைகள் உண்மை தான்! ஆனால் அவைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களுக்குத் தான்  பொருந்தும். ஆனால் காலத்தின் வேகம், மனித அறிவின் ஆற்றல், அறிவியல் முன்னேற்றம், மனப்பக்குவம், எதையும் அறிந்துகொள்ளும் ஆவல், அறிந்ததை உடனே உலகுக்கு அறிவிக்கும் தகவல் பரிமாற்றத்தின் அபரிதமான வளர்ச்சி போன்றவைகள் வளர வளர என்னை தெரிந்து கொள்ளும் காலத்தின் அளவு மிகவும் சுருங்கிவிட்டன. இந்த பரப்பரப்பான உலகில் என்னை அறிய சிறிது நேரமே போதும். என்ன ...?? இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கின்றதா! நீ நினைத்தால் உடனே செய்ய முடியும். அதுவும் நீ இருக்கும் இந்த இடத்தில் இருந்து கொண்டு! 



பெருமை மிக்க மனிதா! இந்த உள்விதி மனிதனைப் பற்றிய விழிப்புணர்வு இது நாள் வரை மறைவாக, இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று, இப்போது முதல் இந்த உள்விதி மனிதனைப் பற்றிய உண்மைகள் நீ கட்டாயம் தெரிந்து கொண்டேத் தீர வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு தெளிவாக பொறுமையாக விவரித்துக் கொண்டிருக்கின்றேன். நீ தெரிந்து கொண்டால் தான் நான் படைத்த இந்த அதிசய, அற்புத உலகத்தை அழிவிலிருந்து காக்க முடியும். பல மகான்களின் கனவுகளும் பூர்த்தி அடையும். இனிமேல் நீ என்னை நன்றாகப் புரிந்து கொள்வாய். புரிந்துகொள்ளும்வரை உன்னை விடவும் மாட்டேன். அதற்குரிய மனப்பக்குவம், உடல் பக்குவம், ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவும் உனக்கு வந்துவிட்டது. என்னை அறிய மும்முரமாக முழு மனதுடன் கூடிய சிறிய முயற்சியும், பழகுவதற்குச் சிறிது பயிற்சியும் இருந்தால் போதுமானது. 



பாசமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை அறிந்தால் என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்பது புரிகின்றது. அதாவது நீயும், உனது முன்னோர்களும் தேடித்தேடி கிடைக்காத நிரந்தர மகிழ்ச்சியை உன்னைத் தேடி வந்து எப்போதும் உன்னிடத்தில் குடிகொண்டிருக்கும்படி செய்யப் போகிறேன். என்னை அறிந்த பிறகு உனக்கு வரப்போகும் நம்பிக்கை இந்த உலகத்தையே சொர்கமாக மாற்றும் ஆற்றல் கிடைத்துவிடும். எனக்காக நீ நான் சொல்கிறபடி நடக்க வேண்டாம். உனக்காக உனது நன்மைக்காக இந்த உள்விதி மனிதனுடன் வா. அதற்குண்டான வழியை உனக்கு காட்டுகிறேன்.



பெருமை கொண்ட மனிதா! சம்சாரத்திலிருந்து விலகி, பந்தபாசத்தைத்  துறந்து தான் முக்தி நிலை அடையமுடியுமென்று சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றில் உண்மையில்லை என்று தான் நான் சொல்லுவேன். சம்சார பந்தம் என்பது என்னால் மனித குலத்திற்கு அளித்திருக்கும் விதி. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டிய புண்ணிய காரியமாகும். நான் உனக்குள் இருந்துகொண்டு உன்னைக் 'காத்தல்' வேலையை செய்துகொண்டு வருகிறேன். இந்த உலகில் பெருகிவரும் ஜனத்தொகையில் என்னால் ஒரே நேரத்தில் அனைவரையும் தனித்தனியாக காத்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே தான் நல்ல சிந்தனை உனக்களித்து, சம்சார பந்தங்களை ஏற்படுத்தி, குடும்ப பந்தத்தை உருவாக்கி ஒருவருக்கொருவர் காத்துக்கொள்ளும்படி செய்து இருக்கிறேன். அந்த பந்தத்தில் இருப்பவர்கள் அவர்களுக்குள் இரத்த உறவுகளை, நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டு உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் காக்கும் அக்கறை உள்ளவர்களாக ஒரு உணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.



பண்புமிக்க மனிதா! அந்த உறவுகளெல்லாம் நான் கொடுத்திருக்கும் அனுபவத்தையும், செல்வத்தையும், இன்பத்தையும் கொடுத்து அவர்களைச் சந்தோஷத்தில் மிதப்பதற்கு உதவியாக இருக்கவே நான் உன்னுடன் இருக்கிறேன். அதை விட்டுவிட்டு என் பெயரைச் சொல்லி என்னை உணர்வதற்குச் சம்சாரப்பந்தத்தை துறந்து தான் உணரவேண்டும் என்று எண்ணுவது மிகப்பெரிய தவறு என்பதை புரிந்துகொள்.

நல்ல எண்ணமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை உணர அனைத்தையும் மறக்கவேண்டும். பிறகு உனது கடமையைச் செய்யாமல் எனது கடமையைச் செய்யவேண்டும் என்பது சரியே இல்லை. உன்னிடத்தில் எண்ணற்ற எண்ணங்களும், செயல்களுக்கான அறிவுகள் இருக்கும்போது அவைகளையெல்லாம் யாராலும் ஒருகாலும் மறக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆக்க மற்றும் அழிப்பது எல்லாம்  உன் கையில் தான் இருக்கின்றது. என்னை உணர்வதற்கு சராசரியானச் செயலே போதும். நூல்கள் பலவற்றை கரைத்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை.



உண்மையான மனிதா! இந்த உள்விதி மனிதனைச் சில நிமிடங்கள் நினைத்தாலே போதுமானது. ஏனென்றால் எனக்கு இருக்கும் அனுபவத்தில் நீ ஒரு கோடு போட்டால் நான் ரோடே போட்டுவிடுவேன். நீ ஆரம்பித்து வைத்தால் உன்னை தூண்டிகொண்டும், ஊக்கப்படுத்தியும் தினமும் ஞாபகபடுத்தி அந்தச் செயலை முடிக்கும்படி செய்துவிடுவேன். நீயும் கூட கேள்விபட்டிருப்பாய். ஒரு செயலை செய்ய ஆரம்பித்தாலே அந்த செயல் பாதி முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் அந்த செயல் நன்மை தரும் செயலாக இருக்கவேண்டும்.

இரக்கமுள்ள மனிதா! முக்தி அடைவதற்கு சம்சாரிகளுக்குத் தடை ஏதுமில்லை. அப்படி சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டால் அவர்களின் குடும்பத்தை யார் கவனிப்பது? அவருடைய கடமைகளை யார் செய்வது? நீ தான் செய்யவேண்டும். உனது  குடும்பத்திற்கு உனது ஆயுள் முழுவதும் நீ தான் வழிகாட்டியாக நீயல்லாமல் வேறு யார் தான் இருப்பார்கள். உனது சுய நலத்திற்காக பேராசைப்பட்டு எனக்கு சேவை செய்வதற்கு உனது குடும்பத்தை பிரிந்து வந்தால் உன் எண்ணம் மற்றும் செயல் முற்றுப் பெறாது. மனிதா! செல்வங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்கிற நினைவு உனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்காக குறுக்கு வழியில் செல்வதற்கும் துணிந்து விடுகின்றாய்! இந்த உள்விதி மனிதனை நீ உணரவேண்டுமானால் எனக்கு கோடிக்கணக்கான ரூபாய், தங்கம், வைரம், வைடூரியம் போன்ற காணிக்கைகள் தேவையில்லை. உனது அன்பு கலந்த தூய்மையான எண்ணங்களும், நன்மை தரும் செயல்களுமே என்னை ஆட்கொள்ளும் வழி.

நல்ல சிந்தனை கொண்ட மனிதா! இந்த உலகத்தில் போலி மற்றும் வறட்டுக் கௌரவத்திற்காக என்னை ஆட்கொள்வதற்கு பலவழிகளில் செலவு செய்து பலரிடத்தில் சிபாரிசு பெற்று பல ஆயிரம் ரூபாய்களை கொட்டி ஆரவாரம் செய்கிறார்கள். அவைகள் வெறும் வெத்து வேட்டு. அதைப் பெற்றுக்கொண்டு  சிலர் பரவசம் ஏற்படும்படி உணர்வுகளைத் தூண்டி ஆசியும் அருளும் வழங்குகிறார்கள். அந்த போலியான நடிப்பை உண்மையென்று நம்பி அவர்களிடத்தில்  நீ கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை காணிக்கையாக செலுத்துகிறாயே, இது உனக்கே நல்லதாகத் தெரிகின்றதா!  உன்னுடைய கஷ்டத்தை இந்த உள்விதி மனிதன் மனதில் வைத்துக்கொண்டு உனது வயிற்றுப் பசியை போக்க என்னாலான உதவியாக சொற்பமான பணத்தையும் நல்ல ஆரோக்கியமான உடலும் தருகிறேன். அதையும் நீ போலி ஆசாமிகளிடம் கொடுத்து ஏமாறுகிறாயே? அந்தச் செயலை இக்கணமோடு நிறுத்திக்கொள். அது உனக்கு மேலும் மேலும் துயரத்தைக் கொடுக்கும். நிம்மதியை இழக்கச் செய்யும். 



சத்திய மனிதா! சிலர் பரவசமாகப் பேசுவார்கள், காட்சி அளிப்பார்கள்! அந்தப் பரவசமெல்லாம் அந்த கணம் மட்டுமே உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த இடத்திலிருந்து உனது சொந்த இடத்திற்கு வந்தால் மீண்டும் நீ உனது பழைய நிலையை அடைந்து புலம்ப ஆரம்பித்துவிடுகிறாய். அதனால் அதில் உனக்கு லாபம் இருப்பதாக உணருகின்றாயா!  அந்தப் பரவசம் ஒருவித மயக்கமே! மனிதா! என்னை வைரத்தால், தங்கத்தால் அபிஷேகம் செய்தால் அது எனக்குள் ஒட்டுமா! ஒட்டாது அல்லவா! அப்படியென்றால் அவைகள் யாருக்குப் போய்ச் சேருகின்றது? அப்படிச் சேராத இடத்தில் சேருகின்றதால் கெடுதலே உண்டாகும். அதற்கு நீ உடந்தையாக இருப்பதை நான் தடுத்து நிறுத்தி உன்னை இலவசமாக நல்ல எண்ணங்களின் மூலம் பிறப்பில்லா பெருவாழ்வு கொடுத்து முக்தியை பெற்று தருவதே இந்த உள்விதி மனிதனின் நோக்கம். அதற்கான ஆரம்பமே இது தான். நீ என்றும் நல்லவன். நீ சம்சார கடமை செய். அதன் மூலம் நான் உனக்கு முக்தி தருகிறேன்.




முக்தியை  இலவசமாக அடையக்கூடிய வழி உன்னிடத்தில்...


உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...


'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை

'தெய்வப்பெண்' மறந்த பாரதி  
புதுக்கவிதை 





காணுமுன்னே தோன்றி 

கண்ணெதிரே மறைந்தவள் 

பாரதி படைத்தான் 
புதுமை பெண் 
இவன் படைப்பதோ 
தெய்வப் பெண் 



ஈடில்லா அன்பு 
அளவில்லா பொறுமை 
அசராத உறுதி 
பார்ப்பதில் குளுமை 
பழகுவதில் இனிமை 
தோற்றத்தில் எளிமை 
அவளே தெய்வப் பெண் 

வார்த்தையின் கணம் 
படிக்கும் போதும் 
நட்பின் கணம் 
பிரியும் போதும் 
உறவின் கணம் 
இழக்கும் போதும் உணரும்.

வாழ்க்கை ஒரு புதிர் 
நிறைந்த பயணம் 
இறந்த காலம் தெரிந்த விடை 
எதிர்காலமோ தெரியாத விடை 
நிகழ காலம் புரியாத விடை.



அன்புக்கு உதாரணம் 
தாய்.
பேரன்புக்கு 
தெய்வப் பெண்.

புதுமைப் பெண்ணாய் 
இருக்கும்போது 
ஓரெழுத்து கூட எழுதாதவன் 
ஒரு வரி கூட படிக்காதவன் 
எதையும் சிந்திக்காமல் 
இருந்தவன்.



தெய்வப் பெண்ணாய் 
மாறிய பிறகு 
வண்டி வண்டியாக எழுத வைத்தவள் 
பலவற்றை படிக்க வைத்தவள் 
புதிது புதிதாக சிந்திக்க வைத்தவள் 
எல்லாம் 
எனக்குள் அவள் விதைத்த விதைகள்.



வாழ்க்கைக்கு புது இலக்கணம் 
கற்றுக் கொடுப்பவள் 
புதுமைப் பெண்ணுக்கு 
புது விதி தந்தவள்.



அவள் இருக்கும்போது 
எழுத நேரமில்லாதவன் 
படிக்க நேரமில்லாதவன் 
சிந்திப்பதற்கு நேரமில்லாதவன் 
அவள்  நினைவு 
என் பேனாவில் நுழையும் போது 
ஆஹா...அற்புத படைப்புகள் 
எழுதியது நானா?
இல்லை அந்த தெய்வப் பெண்ணா?



அணுஅணுவாக ரசிப்பவள் 
அக்கறையோடு செதுக்குபவள் 
அளவில்லா இன்பத்தை தருபவள் 
ஆரோக்கிய வாழ்வு கொடுப்பவள் 
அன்பை கொட்டி தீர்ப்பவள் 
அவளஅல்லவோ தெய்வப் பெண்.




அவளில்லாமல் என்னை நினைக்காதவன் 
அவள் இருக்கும்போது சுகமாய் உணர்ந்தவள் 
நொடிபொழுது கூட கவலை தராதவள் 
கவலைப்படத் தெரியாமல் காப்பவள் 
எப்போதும் புத்துணர்வு தருபவள் 
மாறாத புன்சிரிப்பை உதிர்ப்பவள் 
அவள் பெயர் தெய்வப் பெண்ணோ?



நல்லதை கற்கச் சொல்பவள் 
நன்மை தரும் செயலை செய்பவள் 
அழக் கற்றுக்கொடுக்காதவள் 
அன்பே வடிவமாய் ஆனவள் 
அவளே தெய்வப் பெண் 



வாழ்க்கைக்கு வலிமை கொடுப்பவள் 
செயலில் தன்னம்பிக்கை தருபவள் 
சிந்தையில் புதுமை உருவாக்குபவள் 
எதையும் செய்யும் துணிச்சல் தருபவள் 
வெற்றிகளை குவிக்கும் ஆசி கொடுப்பவள் 
தெய்வப் பெண்ணே 
நீ என்றும் வாழ்கவே பல்லாண்டு.



நீ கண்ட கனவு 
நிச்சயம் மெய்படும்.
புதுமை பெண்ணுக்கு இணையாய் 
அனைவருக்கும் துணையாய் 
வாழ்கையில் நம்பிக்கை 
தருவாள் 
இந்த தெய்வப்பெண்!




பாரதி படைக்க மறந்த படைப்புகள் 



இன்னும் தொடரும்...

Monday, 26 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 32 அறுபட்டத் தோலை ஒட்ட வைப்பவன் - INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN

உள்விதி மனிதன்  


சமமனிதக் கொள்கை  

பாகம்: 32 உனது உடலில் அறுபட்டத் தோலை ஒட்ட வைக்கும் உள் மனிதன்-
INNER MAN HELPS TO JOIN YOUR CUT SKIN



அன்புள்ளம் கொண்ட மனிதா! உனக்குள் ஆன்ம ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் உள்விதி மனிதன் உனது வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சிகளைக் கொடுக்க வந்திருக்கிறேன். நீ என்னை விருந்தாளியாக எண்ணிவிடாதே! உனது உள்ளக்கோவிலில் இருக்கும் அணையாத கோடி பிரகாசம் வெளிச்சம் கொண்ட 'சேவகன்' என்பதை சொல்லிக் கொள்வதில்  பெருமைபடுகிறேன். எனது அனுபவங்களை கடல்போல் வற்றாமல் உனக்குள் வைத்திருக்கிறேன். அந்த அனுபவக்கடல் நிஜக்கடலைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. அதாவது நிஜக்கடலில் மதிப்புமிக்க பொக்கிஷங்கள் கடலின் ஆழத்தில் இருக்கும். சாதாரணமான உள்ளவைகள் மேல்பகுதியில் இருக்கும்.


பிரிய மனிதா! எனது இந்த அனுபவக்கடலில் விலைமதிப்பில்லாத நன்மை தரும் செயல்கள் அவைகள் எளிதில் கிடைக்கும் வண்ணம் தனியாக மேலேயும், தீய மற்றும் அழிவு செயல்கள் அதலபாதாளத்தில் உனக்குத் தெரியாதவாறு புதைத்து வைத்திருக்கிறேன். எப்படியென்றால் நாலுபேருக்கு நன்மை செய்ய நினைத்தால் அதை பகிரங்கமாக உடனே செய்வதற்குத் துணிவு தந்துள்ளேன். அதனால் உனக்கு தீங்கு எதுவும் வராது. ஆனால் தீய செயல்கள் உன்னால் எளிதாகவோ, அனைவருக்கும் தெரியும்படியோ சட்டென்று செய்யவிடாமல் மிகவும் யோசித்து பயத்துடன் ஒருவித படபடப்புடன் நிதானமாக அதைச் செய்யலாமா? வேண்டாமா? என்று நானே முடிந்தவரை தடை போட பார்ப்பேன். என்ன செய்வது! அதையும் மீறி சிலர் தீய செயல்கள் செய்யும்போது எனது ஓட்டம் பாதிப்படைகின்றது. அது உனக்கு கெடுதல் விளைவிக்கும் என்று எண்ணியே உன்னறிவுக்கு எளிதில் எட்டாதவாறு மறைத்து வைத்திருக்கிறேன். 


மதிப்புமிக்க மனிதா! எனது கோடிக்கணக்கான வருட அனுபவங்களை மறைத்து வைக்கமுடியாது. ஆனால் உனக்கு எது நல்லது என்பதை முதலில் அடுக்கி வைக்க முடியும். ஆகவே உனக்கு நல்லவைகள் மேலேயும், கெட்டவைகள் கீழேயும் கஷ்டப்பட்டு அடுக்கி வைத்துள்ளேன். 


பாசமுள்ள மனிதா! மனிதருள் சிலர் கெட்ட எண்ணங்கள் கொண்டு இங்குள்ள பலரை நாடு, சாதி, மொழி, இனம் மற்றும் உறவுகளின் பெயரால் தங்களின் சுயநலத்திற்காகவும், பதவி ஆசையினாலும், பேராசை காரணமாகவும் தவறான வழியில் அழைத்துச்சென்று அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் சொல்வதோ, உங்களுக்கு நல்வழி காட்டுகிறேன் என்றும், உங்களுக்கு எப்போதும் நிம்மதி சந்தோஷம் கொடுக்கிறேன் என்று சொல்லிச் சொல்லியே செயலில் இம்மியளவு கூட காட்டாமல் அவர்களைப் பசி பட்டினிக்கு ஆளாக்கி, அடிமைகளாக நடத்தி அவர்களின் வாழ்வாதாரங்களை அபகரித்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து தன்  சுயநலத்திற்க்காக சக்கையாக பிழிந்து வேலை வாங்கி, தாங்கள் சொல்கிறபடி ஆடுகின்ற கைப்பொம்மையாக மாற்றி நல்லவன் போல வேஷம் போடும்  வேடதாரிகளை நம்பாதே! அவர்களின் துணைக்குப் போகாதே! அது உன்னையும், உனது பரம்பரையும் அழித்துவிடும்.


மதிப்புமிக்க மனிதா! அவர்கள் நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள உனது உணர்வை தூண்டுவதற்காக வேண்டுமென்றே சாதி , மதம், இனம் பற்றி அவதூறாக பேசுவார்கள். அதனால் உடனே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து தீய செயலை செய்ய துணிந்துவிடுகின்றாய். அப்படிப்பட்டவர்களை மதியாதே! உனக்குத் தொல்லை கொடுத்து நிரந்தரமாகக் கஷ்டத்தில் மாட்டவைக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். மனிதா! சாதி, மதம், இனம் அனைத்தும் சமுதாயத்தில் ஒழுக்கத்திற்காக உள்ளவை. அவற்றிற்கு கலங்கம் வராமல் காப்பதே நமது கடமையும் கூட. அவற்றில் உனது ஆற்றலை வீணாக்காதே!

பெருமைமிக்க மனிதா! நமது மதம், இனம் என்று சொன்னால் மட்டும் உன்னுடைய பசி நீங்காது. அவற்றை கட்டிக்காத்து உழைத்தால் தான் நீ நினைப்பதை அடைய முடியும். அதற்குப் பரந்தமனப்பன்மையும், விசாலமான குணமும் தேவை. அதற்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள். அதன் மூலம் அனைவருக்கும் நன்மை செய்யப் பார்.

அன்பு மனிதா! உனக்கு ஒரு காயமோ அல்லது கத்தி அறுபட்டாலோ எனது அன்பை துடிப்பை வெளியே காட்டும்விதமாக வலியையும், அதை உனக்கு தெரிவிக்கும் வண்ணமாக வலியைக் கொடுத்து அல்லது இரத்தத்தை வெளியே வரும்படி செய்து உனது கவனத்தை காயம் அல்லது அடிபட்ட இடத்தை உணர்த்துகிறேன். நான் அப்படி உணர்த்தாமல் இருந்து விட்டால் உனது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை தெரிந்து கொள். அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்தாலும், நானே தோல்களை ஒட்ட வைத்து காயத்தை ஆற்ற வைக்கிறேன்.   


இரக்கமுள்ள மனிதா! இதிலிருந்து தெரிந்துகொள் ! இந்த உள்விதி  மனிதன் எவ்வளவு அன்பானவன், எவ்வளவு இரக்கமானவன் என்று! இந்தச் செயலை நீ எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் யாராலும் செய்ய இயலாது. ஆனால் உனக்கு இலவசமாகச் செய்கிறேன். டாக்டர்கள் ஒருவேளை சீக்கிரம் ஆறவைப்பதற்குக் கிரியா ஊக்கியாக செயல்படலாம். ஆனால் ஒட்டவைக்க என்னால் மட்டுமே முடியும். இதன் மூலம் நான் எவ்வளவு அனுபவசாலி என்பதை புரிந்துகொண்டாயா! 


உள்விதி மனிதனின் மன ஓட்டம் இன்னும் வரும்...
மகிழ்சிகள் தொடரும்...


          

Friday, 23 November 2012

உள்விதி மனிதன் பாகம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி- INNER MAN'S HELP TO AGED PEOPLE



உள்விதி மனிதன் 
சமமனிதக் கொள்கை  

பாகம் : 31 வயதானவர்களுக்கு உள்விதி மனிதன் செய்யும் உதவி-
INNER MAN'S HELP TO AGED PEOPLE 


என் இனிய மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் ஜீவ ஓட்டத்துடன் பேசுகிறேன். என்னைப்பற்றி இப்போது சற்று தெளிவாக புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். மனிதா! ஞானம், நல்ல செயல்கள், அறிவு, உணர்வு, ஆயுள், கல்வி, ருசி இவைகள் போன்றவைகளெல்லாம் பிறர் உனக்கு அன்பளிப்பாகவோ, தானமாகவோ, பணம் கொடுத்தோ வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது உன்னால் முடியவே முடியாது. 


நேசமுள்ள மனிதா! உனக்குத் தேவையென்றால் அதை அடைவதற்கோ அல்லது அதை பெறுவதற்கோ நீ தான் முழு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அவைகள் வெறும் அருளினாளோ, பக்தியினாலோ, செல்வங்களினாலோ, தீட்சையினாலோ, பாடுவதினாலோ, ஆடுவதினாலோ, படித்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதினாலோ, பேசுவதினாலோப் பெற முடியாது. உன் செயலினால் தான் அதை அடைய முடியும். வேண்டுமென்றால் அவர்களின் துணையை நாடலாம் . அறிவுரையை பின்பற்றலாம். ஆனால் செயல் முக்கியம். அதைப் பொருத்து தான் உனக்குப் பலன் கிடைக்கும்.

அன்பு மனம் கொண்ட மனிதா! மேலும் இவைகளைத் தருகிறவர்கள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அப்படியிருந்தாலும் அதை எவ்வாறு கண்டுகொள்வது என்ற சந்தேகம் உன் மனதில் எழலாம் ! அது கண்டு கொள்வது ஒன்றும் பிரமாதமில்லை. யார் ஒருவர் உன்னுடையப் பசியை தள்ளிப்போடும் செயல் செய்கிறார்களோ அவர்களே நீ தேடிக்கொண்டிருக்கும் குருக்கள், மகான்கள்! மனிதா! உன்னாலும் அந்தப் புனிதமான, தூய்மையான நிலையை அடைய முடியும். அதற்கு உனது கடமையை தினமும் தவறாது அன்புடனும் நல்ல எண்ணங்களுடன் பிறர்க்கு நன்மை தரும் செயல்கள் செய்தாலே போதுமானது. நீயும் ஒரு மகானின் அந்தஸ்து அடையலாம். அதற்கு இந்த உள்விதி மனிதனின் ஒத்துழைப்பு உனக்கு எப்போதும் உண்டு. ஏனெனில் மனித பிறப்பு எடுத்திருக்கும் எல்லோரும் இத்தகைய நற்கதி அடைய வேண்டுமென்பதே இந்த உள்விதி மனிதனின் நோக்கம். அப்போது தான் நீ நினைக்கும் செயல்கள் மகிழ்ச்சியாக நடக்கும்.


பெருமைக்குரிய மனிதா! இந்த நவநாகரிக கணினி உலகில் பலர் தங்களை அண்டியிருக்கும் சற்று வயதானவர்களைக் (தாய் தந்தை மற்றும் உறவினர்கள்) கீழ்த்தரமாகவும், இளக்காரமாகவும், மரியாதை இல்லாமல் பேசுவதும், வேண்டாதவர்களைப் போலவும், அவர்கள் ஒரு சாபக்கேடு போலவும் நடந்துகொள்ளும் விதம் எனக்கும் மிகவும் துக்கத்தை தருகிறது. அவர்கள் தங்களுடைய ஒரு சாண் வயிற்றுக்காக உன்னிடத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனை தருகின்றது. நீயே இவ்வாறு நினைத்தால் நான் எப்படி உன்னிடத்தில் நடந்துகொள்ள வேண்டும்? உன்னிடத்தில் இதைவிடக் கடுமையாக நடந்துகொள்ள முடியும்!


பாசமுள்ள மனிதா! உனக்காக, உன் மகிழ்ச்சிக்காக எவ்வளவோ அற்புத படைப்புகளை படைத்துள்ளேன். அதற்கு உன்னிடத்தில் எந்த ஒரு விசுவாசமும், பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த வயதானவர்கள் தானே உன்னை ஆக்கியவர்கள், படைத்தவர்கள், உனக்கு இந்த பிறவியைக் கொடுத்தவர்கள். அவற்றையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவர்களை தினமும் இம்சைபடுத்தி சுடுசொற்களைக் கொண்டு தாக்கி தினம் தினம் அவர்களின் ஜீவ ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கிறாயே, அந்தச் செயலுக்கு அர்த்தம் என்ன? அதற்குப் பெயர் தான் சுயநலம் என்பதா? பேராசை என்பதா? போலி அல்லது வறட்டு கெளரவம் என்பதா? அவர்களை மதிக்கக் கூடாது என்கிற எழுதாத சட்டம் நடைமுறையில் இருப்பது மனித படைப்புக்கு அவமானமாகும். அவை இனிமேலும் நீடித்தால் இந்த உலகம் மிகப் பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக நீ இப்போதிலிருந்து அவர்களின் நல்வாழ்வுக்காக கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்கொள்.


இரக்கமுள்ள மனிதா! கொசு என்று கேவலமாக எண்ணுகிறாயே, அந்தக்  கொசுவுக்கும் கூட வாழ்கையில் மேல் எவ்வளவு அக்கறை அல்லது ஆசை? நம்மைப் போல் அது அனுபவிப்பதில்லை. அனுபவிக்கவும் முடியாது. தன்னுடைய ஆயுள் சில நாட்களே இருந்தாலும் அது உயிர் வாழ்வதில்லையா? மனிதனில் ஓடும் இரத்தத்தை உறிஞ்ச நினைத்தால் நம்மை அடித்து கொன்றுவிடுவார்கள் என்பதால் கொசுக்கள் மனிதனைக் கடிக்காமல் தானே நெருப்பில் குதித்து மாண்டுபோகின்றதா? அல்லது கொசு உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகின்றதா? அப்படியில்லையே. தான் இறந்தாலும் பரவாயில்லை என்று மனிதனைக் கடிக்கச் தான் செய்கின்றது. அதனால் சில இறக்கின்றது. பல உயிர் வாழ்கின்றது! கொசுவிற்கே இந்த உயிர் மேல் ஆசை. இதை போல் சில மணிநேரமே ஆயுள் இருக்கும் ஈசலுக்கும் தான் எத்தனை ஆசை !

மதிப்புமிக்க மனிதா! அதுமட்டுமா! புல் பூண்டுகள் நீ கால்பட்டு மிதித்தாலும், பிடுங்கி எடுத்தாலும், எரித்து அழித்தாலும் அது மீண்டும் மீண்டும் வளர்வது ஆசையினாலா? ஒரு சிறிய விதை கூட காய்ந்துவிடாமல் எப்படியாவது, எந்த மூலையிலாவது புதைந்து ஒரு சொட்டு தண்ணீர் கொண்டு வளரத்துடிப்பது வாழ்கையின் மகத்துவம் நீ உணருவதற்காகப் படைத்துள்ளேன்.

பொறுமையுள்ள மனிதா! இவ்வகை ஜந்துகளுக்கே உயிர்மேல் ஆசை இருக்கும் போது பலவற்றை வாழ்ந்து அனுபவித்த வயதானவர்களுக்கு உயிர்மேல் எவ்வளவு ஆசை இருக்கும் என்பதை நினைத்துப் பார். நீ வாழ்கையில் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்காகவே இந்த வகையானப் படைப்புகளைப் படைத்துள்ளேன். மனிதா! என்னால் உன்னை அசையா மரமாகவோ, பேசாத விளங்கினமாகவோ படைத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்வதால் என் படைப்பை யார் அனுபவிப்பார்கள்? அதற்காகவா அத்தனையும் படைத்து அதை பார்க்க உனக்குள் உள்விதி  மனிதனாக இருக்கிறேன்? 

உண்மையுள்ள மனிதா! வயது என்பது இயற்கையானது. கட்டாயம் மனிதப் பிறவிகள் மற்றுமுள்ள உயிரினங்கள் எதிர்கொண்டேத்  தீரவேண்டிய காலம். அப்படியிருக்கும்போது வயதானவர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டி அல்லது மனதில் வைத்துக்கொண்டு சிலர் அவர்களைக் கொடுமை படுத்துவதை என்னால் இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. இனிமேல் அவ்வாறு நடந்துகொண்டால் இந்த உள்விதி மனிதன் உன்னை நிம்மதியாக வாழவிடமாட்டான்.


பிரியமான மனிதா! நீ  மற்றவர்களுடைய நலனுக்காக நல்லவழியில் நல்ல செயல்கள் செய்யாமல் இருந்தால் அது மன்னிக்கமுடியாத மானுட தர்மமாகும். நீயும் ஒரு நாள் அவர்களைப் போல வயோதிகனாக மாறப்போகிறாய். அவர்கள் படும் அவஸ்தை மற்றும் கஷ்டம் நீயும் ஒருநாள் அனுபவிக்கப் போகிறாய். அப்போது நீ என்னிடம் 'எனக்கு உதவி செய்' என்று மன்றாடுவாயானால் அதற்குப் பலன் கிடைக்காது. ஏனென்றால் நீ மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறாயோ அதுபோலத் தான் உன் வாழ்விலும் பிரதிபலிக்கும் . அது தான் இந்த உள்விதி மனிதன் வகுத்து வைத்திருக்கும் சட்டம்.

நல்ல குணமுள்ள மனிதா! நீ உனது நல்ல செயல்கள் மூலம் இந்த உள்விதி மனிதனைக் கவனிப்பாயானால் நான் அதற்குப் பரிகாரமாகப்  பல நன்மைகளைத் தருவேன். அப்படியில்லாமல் நீ என்னை தீய செயல் கொண்டு பழக்குவாயானால் அதற்கு உபகாரமாக உனக்குத் தீமையையே தருவேன். இது உறுதி. ஆகவே வயதான இந்த அனுபவமிக்க உள்விதி  மனிதனையும், உன்னைச் சார்ந்து இருக்கும் வயதானவர்களை தினமும் நன்றாக கவனித்தாயானால் உனக்கு எப்போது மகிழ்ச்சி தான். உனது வயதான காலத்தில் இந்த உள்விதி மனிதன் உனக்கு மகிழ்ச்சி பல அளிப்பான். இதை நம்பினால் நீ நலம் பெறுவாய்.


உள்விதி மனிதனின் இந்த ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும். 

வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும்  தினமும் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சியைக் கற்றுக்கொடுங்கள்.