Pages

Thursday, 13 December 2012

விழிப்புணர்வு உள்ளவரா? வாழ்கையில் நூற்றுக்கு நூறு வெற்றி AWARENESS GIVES 100% SUCCESS

அனுபவப் பொன்வரிகள் 



மதுரை கங்காதரன் 



விழிப்புணர்வு உள்ளவரா? 
வாழ்கையில் நூற்றுக்கு நூறு வெற்றி 
AWARENESS GIVES 100% SUCCESS



மாணவர்களே ! உங்களது வெற்றி தோல்வி என்பது நீங்கள் கொண்டிருக்கும் பழக்கவழக்கத்தைப் பொறுத்துள்ளது.


ஒவ்வொரு பழக்கவழக்கத்திறக்கும் மதிப்பெண்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பதைப் பொறுத்து உங்களது வெற்றிக்கான சதவிகிதம். 


ஒவ்வொன்றிக்கும் பத்து மதிப்பெண்கள். நீங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறீர்கள் எனபதைப் பார்ப்போம். இதோ...


1. நீங்கள் அதிகாலையில் எழுந்து வரும் பழக்கம் கொண்டும், மனதை ஒருமுகப்படுத்தி உங்களது பாடங்களை படிக்கின்றீர்களா? (Reading with concentration) அப்படியென்றால் உங்களுக்கு 10 மதிப்பெண்கள்.


2. படித்ததை நன்றாக புரிந்து கொண்டு அதை பலமுறை எழுதிப் பார்க்கும் 'எழுத்துப் பயிற்சி ' (Writing Practice) செய்கிறீர்களா? ஆம் என்றால் மேலும் 10 மதிப்பெண்கள்.


3. படித்ததை எழுதிப் பார்ப்பதோடு நின்றுவிடாமல் அதை 'திருப்புதல் ' (Revision) செய்கிறீர்களா? உங்களுக்கு அதிகம் 10 மதிப்பெண்கள்.


4. வீட்டில் உள்ளவர்களோடும் நண்பர்களோடும் வீண் அரட்டை அடிக்காமல், அதிகநேரம் டி.வி (TV) பார்க்காமல் இருந்தால் மீண்டும் உங்களுக்கு 10 மதிப்பெண்கள்.


5. எந்த நேரமும் 'கைபேசி '  (Mobile) வைத்துக்கொண்டு படங்களைப் (Cinema) பார்த்தும் , பாட்டு (Songs)  கேட்டும், குறுந்தகவல்களை (SMS) அனுப்பி நேரத்தை வீணாக்காமல் இருந்தால் அதற்காக 10 மதிப்பெண்கள்.


6. நண்பர்களுடன் சினிமா செல்லுதல், ஊர் சுற்றுதல், வெட்டியாக பொழுதைக் கழிக்காமல் இருந்தால் அதற்கு 10 மதிப்பெண்கள்.


7. ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும்போது நன்றாக கவனித்துக் கொண்டும், சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளும் பழக்கம் இருந்தால் மேலும் உங்களுக்கு 10 மதிப்பெண்கள்.


8 படிக்கும்போது இந்த பாடத்தை இந்த நேரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு திட்டமிட்ட அட்டவணை போட்டு சரியாக செயல்படுத்தி வந்தால் மீண்டும் உங்களுக்கு 10 மதிப்பெண்கள்.


9. வெறும் படிப்பு , படிப்பு என்று நின்றுவிடாமல் கொஞ்சம் விளையாட்டு, தியானம், பொது அறிவு, நாட்டு நடப்பு, நடனம், பாட்டு போன்றவற்றில் ஆர்வம் இருந்தால் அதற்கு 10 மதிப்பெண்கள்.


10. கடைசியாக பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுத்தும் , ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்தும் போட்டி, பொறாமை உதறி தள்ளிவிட்டு அனைவர்களிடத்தில் அன்பாக நட்புடன் பழகிவந்தால் அதற்கும் 10 மதிப்பெண்கள்.

இதில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டீர்களா?


குறிப்பு: குறைய மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதிகம் எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களால் கட்டாயம் முடியும். அதேபோல் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதை தக்கவைத்துக்கொள்ள தவறாமல் இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள். 


இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உந்துசக்தி மற்றும் கடின உழைப்பு கிடைக்கும். இனியென்ன உங்களுக்கு நூற்றுக்கு நூறு வெற்றி தான். வாழ்கையில் நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி ! வணக்கம் ! 



Wednesday, 12 December 2012

உள்விதி மனிதன் பாகம்: 37 உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும் YOU MUST ACT IN GOOD ROLE

உள்விதி மனிதன்  



சமமனிதக் கொள்கை 

பாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும் 
YOU MUST ACT IN GOOD ROLE 



பெருமைக்குரிய மனிதா! உலகச் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார். இந்த உலகம் எதற்காகப் படைக்கப்பட்டது என்று தெரியவரும். அதாவது நீ உனக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் மற்றும் துயரம் தரக்கூடிய பாவச்செயலைச் செய்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்காக அல்ல. இந்த உள்விதி மனிதனின்  படைப்புகளை ரசித்து, மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக உனக்கு ஜீவ ஓட்டத்தை கொடுத்திருக்கிறேன் என்பதை இப்போதாவது தெரிந்து கொள். அதுவும் எனது படைப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்குமாறு அளந்து அளந்து கஞ்சத்தனமாகப் படைக்கவில்லை. எங்கு நோக்கினும் நீ சந்தோசத்தை அனுபவிக்க, நீ காணுமிடமெல்லாம் பலவித அற்புதப் படைப்புகளைப்  படைத்துள்ளேன். ஆனால் சில சுயநலமிக்க மனிதர்களால் எல்லோரும் சமமாக அனுபவிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, பேராசைகளை வளர்த்து சுயலாபத்திற்காக  தகாத தீயவழியில் சென்று தன்னுடைய அறிவையும், திறமையும் பிறரை ஏமாற்றுவதில் அக்கறை கொள்வததோடு நிற்காமல் அவர்களை   அடிமைபடுத்தித் துன்புறுத்துகிறார்கள்.



என் இனிய மனிதா! அத்தகைய அரக்க குணம் வாய்ந்தவர்களை அழித்து உன்னைப் போன்றவர்களின் துன்பத்தைத் துடைத்து எப்போதும் மகிழ்ச்சியைத் தரவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். அதற்குண்டான வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றாய் என்பதால் உனக்கு எப்போதும் உதவி செய்வதற்காக உனக்குள் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவதோடு உனக்கு வழி நடத்திச் செல்லவும் வந்துள்ளேன். மனிதா! விவரமில்லாத, விழிப்புணர்வு இல்லாத மனிதர்களின் பலவீனத்தை அறிந்துகொண்டு தகுந்த சமயத்தில் சில பலசாலி மற்றும் அறிவுள்ள மனிதர்கள் அவர்களுக்குத் தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்து உனது அறியாமை, இயலாமை, முயலாமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உன்னை ஏமாற்றி, அவர்களின்  வலையில் சிக்கவைத்து வேடிக்கை காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

என் பாசமுள்ள மனிதா! உனக்கும் வேறுவழியில்லாமல் உனது வயிற்றுப் பிழைப்பிற்காக அவர்களிடம் ஆடு,  மாடு போல் அடிமைபட்டு உனது உழைப்பை உறிஞ்சி அரை வயிறு கஞ்சி கூட வேளாவேளைக்குத் தராமல் உன்னை அவர்கள் தரும் இம்சையிலிருந்து காக்கவே உள்விதி  மனிதனாக,  உனது ஆன்ம ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றேன். அந்த சுயநலவாதிகள் அப்படிச் செய்கிறார்கள் என்றால் உனக்கு கிடைத்த அந்த கொஞ்சம் காசு, பணம், செல்வத்தையும்  பகட்டு வேஷத்திற்காகவும், வறட்டு கௌரவத்திற்காகவும், கேலி கூத்தில் ஈடுபட்டும் , தீய பாதையில் சென்றல்லவா நீ தொலைத்து வருகின்றாய். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி உன்னை ஒழுக்கச்சீலனாக மாற்றி உனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத்  தரவே உனக்குள் வந்துள்ளேன்.



என் பிரியமுள்ள மனிதா! அப்படிப்பட்ட உனது வாழ்க்கைக் கடனிலிருந்து காப்பாற்றி உன்னை நீயே பாழ்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்தி உனக்கு நல்லவழி காட்ட ஆர்வத்துடன் உனக்குள் எழுந்தருளி நிற்கிறேன். மனிதா! இனிமேல் உன்னைச் சார்ந்தவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் நலனுக்காக, நன்மைக்காக உனது உழைப்பை அவர்களுக்குத் தாராளமாகக் கொடு. அது உனது வயிற்றுப் பிழைப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உதவும்.



புத்திகூர்மையுள்ள மனிதா! வசதி படைத்தவர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்காதே! அவர்கள் பெரும்பாலும் தன்னுடைய எச்சில் கையைக்கொண்டு காக்கையை விரட்டாதவர்கள். அவர்கள் எப்படி உனது கஷ்டத்தை அறிவார்கள். மேலும் அவர்களைச் சாராதே! அவர்களின் பேச்சு தேன்கலந்த நஞ்சு. உன்னை அழிக்கவே பார்க்கும். உனக்கு எவ்வித பலனும் தராது. ஏழைசாதியினர்கள் மற்றும் நேர்மையுடையவர்கள் தான் உனக்கு உதவி செய்வர். அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கொடு. அது நன்மை தரும்.

ஆற்றல் கொண்ட மனிதா! நீ நினைத்தால் உனது உழைப்பை விலைமதிப்பற்றப் பொன்னாக மாற்றலாம். அதைக்கொண்டு உனது வாழ்வை செழிக்கச் செய்யலாம். அதற்காக உனது சுயநலத்தை அகற்றி உனக்குள்ள கடமைகளை தவறாது செய். பிறகு உனது குடும்பம் பட்ட கடனை அடை.க்கப் பாடுபடு. உனது குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பதற்கு உழை. பகட்டு வாழ்கையைத் துற. நிரந்தரப் 'பசியின்மை ' மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காகச் சோர்வில்லாமல் உழை. அதை செய்வதால் நீ என்னுடைய 'காத்தல்' தொழிலுக்கு உதவி செய்வதுபோலவாகும்.



சக்தியுள்ள மனிதா! இந்த உலகில் சுமார் எழுநூறு கோடி மக்கள் இருக்கின்றார்கள். இன்னமும் அதிகமாவார்கள். அவர்களத்தனை பேர்களையும் நான் ஒருவன் காக்க முடியுமா என்று யோசித்துப் பார். மனிதா! பணம் கொடுத்தால் உனக்கு காட்சி தருவேன் என்றும் அந்த பணத்தைக்கொண்டு  நீ நினைக்கும் எந்த செயலையும் நான் செய்துவிடுவேன் என்றும் என்னை அற்பத்தனமாக எண்ணிவிடாதே. நான் நினைத்தால் உனது பத்து மாத பிறப்பைக் கூட பத்துவருடம் தவமிருந்தால் தான் கிடைக்கும் என்று செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உனது கதி என்னவாகும்? 

பண்புள்ள மனிதா! பிறப்பு என்பதை ஓரளவு கஷ்டம் கொடுக்காதவாறு அதே சமயத்தில் நீ பிறப்பின் மகிமையை அணு அணுவாக ரசிக்கும்படி பல அற்புதங்களை செய்துவருகிறேன். ஏழை எளியவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து பிறப்பை எளிமையாக்கி இருக்கிறேன். அவர்களுக்கு அள்ளி அள்ளியும் தந்துள்ளேன். இனி அதோடு அவர்களின் ஏமாளித்தனத்தை போக்கி, அறியாமையை அகற்றி அவர்களுக்குச்  சிறந்த அறிவு, கல்வி, செல்வம் கொடுத்து எப்போதும் மகிழ்ச்சி கொடுக்கவே இந்த உள்விதி மனிதன் வந்துள்ளான். அதேபோல் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்குப் பிறப்பை எளிதாகக் கொடுக்காமல் சில மாதங்கள் / வருடங்கள் காக்க வைத்துத் தருகிறேன். ஏனென்றால் அவர்களின் செல்வங்கள் அப்போதாவது ஏழைகளுக்கு போய்ச் சேரவேண்டும் என்ற ஒரே காரணம் தான்.



மேன்மையுள்ள மனிதா! ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பணக்காரர்களிடம் நீ மிகவும் நேர்மையாகவும், விசுவாசமாகவும், நன்றியுடனும் நடந்துகொள். உனது நல்ல எண்ணத்தைக் கண்டு அவர்களும் நல்லவர்களாக மாறி அவர்களின் சொத்து கொஞ்சமாவது உனக்கு வந்து சேரும். அப்படி உன்னிடம் வந்த பிறகு ஒன்று மட்டும் செய்துவிடாதே. அவற்றை எக்காரணத்தைக் கொண்டும் உனது சுயநலத்திற்காக வைத்துக்கொள்ளாதே! அப்படி செய்தால் உன் கதி அதோ கதி தான். 



நன்மை தரும் மனிதா! சிலர் முகவரி தெரியாதர்கள் திடீரென்று தொழிலில் லாபமடைவர். நடிப்புத் தொழிலில் புகழ்பெறுவர். அரசியல் பதவி அடைவர். எழுதுவதில், நடனத்தில், பேச்சில் ஜொலிப்பர். இவன் வாழ்கையில் தேறமாட்டான் என்றிருந்தவர்கள் பணம், புகழ் பெறுவார். எதிர்பாராமல் சிலருக்கு உயர்ந்த பதவி, சிலருக்கு உயர்ந்த அந்தஸ்து, ராஜ வாழ்க்கை கிடைக்கும். அவைகளெல்லாம் எனது அருளினால், எனது உதவியால் மற்றவர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்பதற்காக அளிக்கப்பட்டவை. ஆனால் பணத்தைக் கண்டவுடன் அவர்கள் புத்தி மாறி அவர்களுக்குக் கிடைத்தப் பணம் பிறர்க்குப் பங்கு கொடுக்க மறுக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் செல்வங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பிரித்து கொடுக்க வந்துள்ளேன்.



நற்குணமுள்ள மனிதா! அத்தகைய செல்வங்கள் இனிமேல் உனக்கும் எதிர்பாராமல் கிடைக்கச் செய்வேன். அதை வைத்துக்கொண்டு நல்ல வழியில் நன்மை தரும் செயல்களைச் செய். மனிதா! உன்னுடைய செயல்கள் அனைத்தும் அறிவேன். இதுநாள் வரை மௌனமாய் இருந்த எனக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டாய். இனிமேல் நான் மௌனமாய் இருந்தால் உனக்கு ஆபத்து. இந்த உலகுக்கும் ஆபத்து. உன்னுடைய தேவைகள் எனக்குத் தெரியும். இனிமேல் என்னைப் பேசவிடு. நான் காட்டும் வழியில் நட. உன்னால் செய்ய முடியாத, மக்களுக்குக் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நான் கொடுக்கிறேன். என்னுடன் வா!

நன்றியுள்ள மனிதா! உனது பிறப்பிலிருந்து முடிவுவரைக்கும் எத்தனையோவிதமான வேஷங்களைத் தந்திருக்கிறேன். அதாவது குழந்தை, இளமை, முதுமை என்றும் அதற்கேற்றாற்ப்போல் அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளேன். அவைகளெல்லாம் எதற்காக? மனிதா! விலங்கினங்களுக்கு, பறவைகளுக்கு, புல் ,பூண்டு, தாவர மரம் செடி, கொடிகளுக்கு அதனுடைய செயல்கள் ஒன்றே ஒன்று தான் இருக்கும். அதுவும் மாறாதது. ஆப்பிள் மரத்தில் தப்பித்தவறி கூட தக்காளி பழம் காய்ப்பதில்லை. நெல் கோதுமையாக மாறுவதில்லை. கரும்பு போட்டு வாழையாக பலன் கிடைப்பதில்லை. புலி பசித்தாலும் புல் தின்பதில்லை. யானை, ஆடு பசித்தாலும் மாமிசம் புசிப்பதில்லை. 

இனிமையான மனிதா! அவைகளெல்லாம் அதனுடைய செயல்களை மாறாமல், மறக்காமல் செய்து வருகின்றது. அதேபோல் பாம்பின் விஷம் அமுதமாக மாறுவதில்லை. இவைகள் இப்படியிருக்க!! மனிதனோ ???? நேற்றுவரை நல்லவனாக இருந்தவன் திடீரென்று தீயச்செயளைச் செய்கிறான். நேற்றுவரை நல்ல ஆசாமியாக இருந்தவன் இன்று பலேஆசாமியாக மாறிவிடுகிறான். அதற்கு எதிராக வெகுசிலர் தீயதைச்  செய்தவர்கள் திருந்தியிருக்கிறார்கள். மனிதா! உனக்கு பிறப்பு கொடுத்ததே உன்னை நான் சந்தோசமாக வைத்துக்கொண்டு பிறரையும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வதே எனது குறிக்கோள்.

பிரிய மனிதா! நீ புத்துணர்ச்சிப் பெறுவதற்காகவே உன்னை விதவிதமாகப் படைத்துள்ளேன். அதேபோல் பல மாற்றங்களையும் தந்துள்ளேன். அனுபவம் ஏற ஏற காலத்திற்க்கேற்ப பல புதுமைகளையும், மாற்றங்களையும் உன் மூலமாக நிகழ்த்தி வருகிறேன். அதேபோல் உனக்கு உறவுரீதியாக, பொருளாதாரரீதியாக பல வேஷங்களைத்  தந்துள்ளேன். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள் தங்கை, தாத்தா பாட்டி, மாமா, மாமி இன்னும் பல. அதேபோல் பொருளாதாரரீதியாக குரு, ஆசான், ஆசிரியர், வியாபாரி, வேலையாள், தொழிலாளி, அரசியல்வாதி, டாக்டர், இன்ஜீனியர், பத்திரிக்கையாளர் போன்றவைகள் உனது அறிவு, வசதி, அந்தஸ்து, படிப்புக்கேற்றபடி வேஷங்கள் கிடைக்கின்றன.

தன்னம்பிக்கை மனிதா! சிலர் குறுக்கு வழியில் பெரிய வேஷங்களைப்  பெற்று அதைக் கலைக்காமல் நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்கிறான். மனிதா! சினிமா, நாடகத்தில் ஒரு நடிகன் ராஜா வேஷம் கிடைக்கும்போது அதில் வரும் மக்கள் அனைவரும் அவருக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவருக்கு அடிமையாக இருப்பார்களா? அதுபோல குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட வேஷம் போட்டு அது முடிந்தவுடன் அதை கலைத்து வேறு புது வேஷம் போட்டால் தான் மதிப்பு இருக்கும்.



பெருமை கொண்ட மனிதா! நான் கொடுக்கும் வேஷம் பலருக்கு நன்மை தருவதாக இருந்தால் மட்டுமே அதை நிரந்தரமாக போட வழிவகுத்துத் தருவேன். ஆனால் தீய செயல் செய்யும் வேஷம் போட்டால் உடனே அதனை எறியச்செய்து விடுவேன். சிலர் என்பேச்சைக் கேட்காமல் அதை நிரந்தரமாகப் போடுகிறார்கள். அது அவர்களுக்கு கெடுதலில் தான் முடியும்! என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொள்கிறார்கள். மனிதா ! உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும். எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கட்டும்.



உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...

Monday, 10 December 2012

உள்விதி மனிதன் பாகம்: 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், எண், ராசி- GOOD TIME MEANS GOOD PLAN

உள்விதி மனிதன்  


சமமனிதக் கொள்கை 

பாகம் : 36  திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து மற்றும் எண் ராசி 

- GOOD TIME MEANS GOOD PLAN


என் இனிய மனிதா! மீண்டும் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி  மனிதனின் ஜீவ ஓட்டம் பேசுகிறேன். இந்த உலகத்தில் எவ்வளவோ கெட்ட செயல்கள் கெட்ட மனிதர்களால் நடக்கின்றது. அவர்களையெல்லாம் நல்வழிக்கு கொண்டு வருவதற்கு ஏதேனும் உபாயம் இருக்கின்றதா! அல்லது அந்த மாதிரிக் கெட்ட செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு வழி ஏதாவது உண்டா? இல்லவே இல்லை! ஒருவேளை நீங்கள் அதற்குத் தான் 'சட்டம் - ஒழுங்கு - நீதிமன்றம்' இருக்கின்றது என்று பதில் சொல்லலாம். ஆனால் அவற்றின் செயல்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அவற்றின் பயம் மக்களிடையே போய்விட்டது. 

பெருமையுள்ள மனிதா! இன்று சட்டம்  வலியோர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கையில் அது கைப் பொம்மையாக இருக்கின்றது. அதனால் அம்மாதிரியான சிலர் எந்த ஒரு கெட்டச்செயலையும் துணிச்சலுடன் செய்துவிட்டு, ஒருவேளை அவர்கள் காவல்துறையால் பிடிபட்டுவிட்டால் அவர்கள் வழக்கறிஞர்கள் உதவியால் சட்டத்தின் ஓட்டைகளின் வழியாக  எளிதாகத் தப்பித்து வருகின்றனர். மனிதனே அவனாக 'இது செய்தால் தவறு' என்று எண்ணி தானாக  தவறு செய்யாமல் இருந்தால் ஒழிய தீய செயல்களை தடுக்கமுடியாது.

என் பிரிய மனிதா ! கெட்ட விஷயங்கள் நடக்காமல் இருக்க இதுவரை எழுதிய நூல்களிலும், பேசிய சொற்பொழிவுகளிலும், யாராவது செய்த செயல்களிலும், குருமார்கள், மகான்கள், முனிகள் போன்றவர்கள் எப்போதாவது தவறு செய்த மனிதர்களின் கூட்டத்தை அழைத்து அவர்களை நல்வழிக்கு கொண்டுவருவோம் என்று கூறியதுண்டா! இல்லவே இல்லை. அதாவது தீவிரவாதிகள், கைதிகள், கொலை கொள்ளை குற்றம் புரிந்தவர்கள் எல்லோரும் எதற்கும் துணிச்சல் மிகுந்தவர்கள். அவர்களில் காதில் எவ்வளவுதான் நல்லதை ஓதினாலும் அது செவிடன் காதில் சங்கு ஊதுவதற்குச் சமம். நல்லவர்களை உட்கார வைத்து நல்லதை சொல்லி அவர்களை நல்வழி படுத்திவிட்டேன் என்று சொல்வதில் ஏதேனும் பெருமை உண்டோ?


பெருமைக்குரிய மனிதா! நன்றாக படிப்பவனை அழைத்து அவனுக்கு வேளாவேளைக்கு 'டியுசன் ' சொல்லித்தந்து முதல் மாணவனாக வரச்செய்வது ஒரு சாதனையா? படிக்காத மாணவனை நன்றாக படிக்க வைப்பதல்லவோ சாதனை! ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் நன்றாகத் தெரியம். சுமாராக படிக்கும் பையனை வெற்றி மாணவனாக மாற்றுவது ஆயிரத்தில் ஒன்று தான் நடக்கும் என்று. பலர் பெரும்பாலும் ஆசியர்கள்  பாடுபடத் தயாராக இருப்பதில்லை. அப்படி செய்தாலும் பலன் மிக மிக அரிது.

சக்தியுள்ள மனிதா! அதுபோல் பெரிய பெரிய ஆன்மீகவாதிகள் என்று சொல்லிகொள்ளும் போலி ஆசாமிகள் யாராவது எப்போதாவது ஒரு ஏழையைப் பணக்காரனாக்கி இருக்கின்றனரா? அவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களைத் தான் மேலும் பணக்காரர்களாக்குவார்களே  தவிர ஏழையை அல்ல. என்னென்றால் பணக்காரனிடத்தில் தான் அதிக பலன் எதிர்பார்க முடியும். திடீர் பணக்காரர்கள் அனைவரும்  இத்தகைய போலி ஆசாமிகள் உதவியினால் அல்லது அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தாங்கள் பிறர்க்குச் செய்த நம்பிக்கை துரோகத்தை மூடி மறைக்கின்றனர். தங்களின் சுயநலத்தை அவர்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர். தங்களுடையப் பேராசை நிறைவேற்றும் பதவியினை அடையத் துடிக்கின்றனர். 


ஆற்றல் கொண்ட மனிதா! வெறும் பேச்சால், புத்தகங்களால், சொற்பொழிவு -களால், உருபோட்டு மனப்பாடம் செய்வதால் ஒருவனைத் திருத்த முடியாது. ஒரு மனிதன் தவறு செய்வதற்குக் காரணம் வளர்ப்பு, சூழ்நிலை, சேர்க்கை, காலாவதியான நடைமுறைக்கு ஒவ்வாதப்  பல சட்டங்கள், தவறான எண்ணங்களை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் / திரைப்பட நடிகர்கள், உண்மையை மூடிமறைத்து பொய்யை உண்மையாக்கி பரப்பிவரும் பல ஊடகங்கள், நல்ல செயல்களை ஊக்குவிக்காத நாட்டுத் தலைவர்கள் / அரசுகள், தகாத செயல்கள் பல செய்தும் பதவியினால் தண்டிக்காத நீதிமன்றம் போன்றவைகளாகும்.

பண்புள்ள மனிதா! இதற்காவா இந்த அதிசய உலகத்தில் அற்புத மனிதனைப்  படைத்தேன். மனிதா! ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள். அத்தகைய தவறு செய்பவனிடத்திலும் இந்த உள்விதி மனிதன் இருக்கிறான் இருப்பதை அவன் மறந்து விடுகிறான். அவனுடைய தவறுகளை நான் கணக்கிட்டுக்கொண்டு தான் வருகிறேன். அதற்கேற்ற தண்டனை கொடுக்கும் நேரத்திற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றியுள்ள மனிதா! இந்த மனித உலகத்தில் ஆசை உள்ளவன் பேராசைபடுகிறான். நல்லவர்களோ பலவற்றுக்குப் பயந்து தன்மானம், கெளரவம் தக்கவைத்துக் கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். ஈர மனம் படைத்தவர்களிடமிருந்து பணம் படைத்தவர்கள் இந்த உலகத்தை எப்போதோ பறித்துக்கொண்டு மற்றவர்களைக்  கைப்பாவையாய் அவர்கள் இஷ்டப்படி ஆட்டிப் படைத்து வருகின்றனர். அவர்களை அழிப்பதற்கு நேரம் வந்துவிட்டது. இனி இந்த உள்விதி  மனிதனின் அறிவும், ஆற்றலும் அவர்களை சும்மா விட்டுவைக்காது. கெட்ட செயல்களை செய்யும் மனிதர்களைக் கூண்டோடு அழியும் நேரம் வந்துவிட்டது. இப்போது கூட நேரம் கெட்டுப் போய்விடவில்லை. செய்த கெட்ட செயல்களை மறந்து நல்ல செயல்களைச் செய்து அதன் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இது தான் இந்த உள்விதி  மனிதனாகிய நான் அவர்களுக்குத் தரும் இறுதி எச்சரிக்கையும், வாய்ப்புமாகும்.

பாசமுள்ள மனிதா! உன்னால் உழைப்பு மற்றும் முயற்சியில்லாமல் எந்த ஒருவனையும் செல்வ சீமானாக ஆக்க முடியாது. அப்படி நீ ஆக்க முடிந்தால் அது ஏமாற்றும் வழியன்றி நேர்மையான வழியாக இருக்காது. உன்னை முட்டாளாக்கி அவர்கள் பணம் சம்பாதிக்கும் வழியாகும். மனிதா! நீ உழைப்பினால் உயரும்போது நீ கீழே விழாமல் இருக்க நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன். அதேபோல் தீய வழியில் உயர நினைத்தால் உன்னை தூக்குவதுபோல் தூக்கி, நேரம் வரும்போது உன்னை 'பொத்'தென்று போட்டுவிடுவேன். அப்போது உன்னுடைய எலும்புகள் கூட மிஞ்சாது.


நேசமுள்ள மனிதா! நடப்பதெல்லாம் அவனுக்குத் தெரியும் என்றும் அவன் எப்போதும் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்  என்று கூறிவருகின்றனர். உண்மையில் அவர்களுக்கு ஒரு தைரியம். நான்கு சுவர்களுக்குள் அல்லது இருட்டுக்குள் நடப்பதை யாராலும் பார்க்க முடியாது என்பதுதான். மனிதா! அதனால் பலவிதத் தவறுகள் செய்துவருகிறான். ஆனால் நான் உள்விதி மனிதனாக உள்ளே இருப்பதை மறந்துவிட்டுப் பலதவறுகள் செய்துவருகிறான்.


நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதா! உனக்குள்ளே இருக்கும் நான், எனக்குத்தெரியாமல் நீ யோசிக்க முடியாது. எந்த செயலும் செய்யவும் முடியாது. இனிமேலாவது தீய செயல்கள் செய்வதை நிறுத்திவிட்டு நன்மை தரும் நல்ல செயல்களை செய். உனக்கு நிரந்தர வெற்றியும், வாழ்கையில் முன்னேற்றமும் கிடைக்கும்.

நன்மை செய்யும் மனிதா! நேரங்களில் நல்ல நேரம், ராகு காலம், குளிகை, எமகண்டம், அமாவாசை போன்றவைகள் திட்டங்களின் மறுபெயர்களாகும். உனது திட்டம் வெற்றிபெறச் செய்யும் நம்பிக்கையாகும். நீங்கள் பல விசேஷங்களில் பார்த்திருப்பீர்கள். நல்ல நேரம் நெருங்க நெருங்க பரபரப்பு அதிகமாக இருக்கும். அந்த நேரத்திற்குள் அனைத்தையும் முடிக்கவேண்டுமமென்ற முனைப்பு இருக்கும். அப்படி ஒரு நேரம் இல்லையெனில் இஷ்டம் போல் திட்டமிடாமல் வேலைகளை செய்தால் மற்றவர்களின் வேலையும் கெட்டுவிடும்.


மகிழ்ச்சியான் மனிதா! அதுபோல் தான் வாஸ்து, எண் ராசி பலன் போன்றவை. உனது எண்ணத்தில் நம்பிக்கை கொடுப்பதின் பல்வேறு பெயர்கள். ஆனால் அது மட்டும் உனது செயலின் வெற்றிக்கு போதுமானது அல்ல. அவைகள் பணம் கொடுத்தால் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு, தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால் மேற்கூறியதைப் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை. அதற்காகப் பணத்தை வீணாக்காமல் நல்ல திடட்டமும், விடாமுயற்சி இருந்தாலே இந்த உள்விதி  மனிதன் உனக்கு வெற்றி கிட்டும்படி செய்துவிடுவான். இந்த உள்விதி மனிதனை நம்பினால் உனது ஜீவா ஓட்டம் தடையில்லாமல் ஓடும்.


உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் இன்னும் தொடரும்.  



என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில்

மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி 
மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய 
கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை 




          


தலைப்பு :


என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் !
ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில்!

இதோ கவிதை !


பூ வாசம் தேன் சுவை அனுபவித்தோர் மறுப்போரோ?
தமிழ் வளம் மொழி இனிமை சுவைத்தோர் மாறுவோரோ ?

ஆயிரமாயிரம் ஆண்டைக் கடந்து சாகாவரம் பெற்ற மொழி 
உணர்வுள்ள எழுத்துக்களே வளமான மொழி 

உயிராய் மெய்யாய் உயிர்மெய்யாய் கலந்த மொழி 
வல்லின மெல்லின இடையினமுள்ள ஒய்யார மொழி 

உச்சரிப்புக்கேற்ற சொற்கள் கொண்ட தெளிவான மொழி 
எம்மொழியும் கலவாத கன்னித் தமிழ் மொழி 

வள்ளுவனும் பாரதியும் பெற்றெடுத்த செம்மை மொழி 
எழிச்சி வீரமுடன் தாலாட்டும் அமுதமொழி 

இலக்கண இலக்கிய முத்தமிழ் கொடுத்த சிறப்பு மொழி 
எதற்கும் விலைபோகாத தன்மான மொழி 

எப்போதும் கடன் வாங்காத மதிப்பான மொழி 
எம்மொழிக்கும் வாரிவழங்கும் வள்ளல் தன்மை மொழி 

வந்தாரை வாழவைக்கும் ஈரமுள்ள மொழி 
ஆன்மீக கலாச்சார பண்பாட்டுக்கு முன்னோடியான மொழி 

எல்லோரும் ஓர் இனம் ஓர் குலம் உணர்த்திய அருமை மொழி 
எட்டுத் திசையில் புகழ் பரவி நிற்கும் உயந்த மொழி 

தமிழ் கடவுளாக வணங்கி வழிபாடும் மொழி 
பிறமொழி சிறப்பென்பார் செந்தமிழின் ஆழம் அறியாதோர் 

இத்தனை வளம் கொண்ட மொழி 
கையேந்த அவசியமுண்டோ பிறமொழியில்.



நன்றி 



வணக்கம் 



ஆக்கியோன் 



மதுரை கங்காதரன்