Pages

Saturday, 12 July 2014

குடும்ப ரகசியம் - FAMILY SECRET - SHORT STORY - சிறுகதை

குடும்ப ரகசியம் 
சிறுகதை 
மதுரை கங்காதரன் 
 

"என்ன மரகதம், கம்ப்யூட்டர்லே ரொம்ப வேலையா இருக்கிறது போலத் தெரியுது. அப்படி என்னதான் பார்க்கிறே?" அவள் கணவர் முத்தரசன் கனிவாய்க் கேட்டார்.

"என்னங்க, அப்படி கேட்டீங்க. நம்ம குழந்தைங்களோட பள்ளிக்கட்டணம், தேர்வு மதிப்பெண்கள், அவங்களோட வருகை பதிவேடு, அவர்களுடைய செயல்திறன்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆகியவைகள் இதுலே தாங்க பார்க்கணும். அதில்லாம அவங்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்றாங்களா? அதுவும் வலைத்தளத்திலே தான் பார்க்க முடியுது" என்று ஒரு குடும்பத்தலைவிக்குரிய பொறுப்புடன் பதிலளித்தாள்.  

"உனக்கு இந்த அளவுக்கு கம்ப்யூட்டர் அறிவு இருக்கிறதை நெனச்சா எனக்குப்  பெருமையா இருக்குது. அதோடு இ.லாக்கர் வலைத்தளத்திலே மிக முக்கியமான நம்ம வீட்டு விசயங்கள் இருக்கு அதையும் பார்க்கக் கூடாதா?" என்று கெஞ்சினார்.


"போதுங்க உங்க சுய புராணம்! எனக்கு நம்ம குழந்தைங்களோடதை பார்க்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு. அதெல்லாம் பார்த்துக்கிறத்துக்கு நீங்க இருக்கீங்கல்லே" என்று ஒவ்வொருமுறை அவர் கம்ப்யூட்டரில் தங்கள் குடும்ப சமாச்சாரம் இருக்கின்றது என்று சொல்லும் போதெல்லாம்  இப்படி தட்டிக் கழித்துவிடுவாள்.   

என்னதான் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்போடு இருந்தாலும் அவர்களுக்கிடையில் 'பணவிசயம்' என்று ஒன்று வரும் போது எவ்வளவு இடைவெளி உண்டாகிறது. எவ்வளவு மனக்கசப்பு, ஒருவித புரிதல் இல்லாத தன்மை? எல்லோர் குடும்பத்திலும்  இப்படி இருக்கும்போது இந்த குடும்பத்திலும் இல்லாமல் போகுமா என்ன ? ஒருநாள் ..        

"மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்ன்னு பேரு தான்.  வாங்குகிற சம்பளமெல்லாம் என்னாங்க பண்றீங்க. நீங்களும் செலவு செய்யுறாப்பிலே தெரியல்லே. நம்ம குடும்பத்துக்கு தேவையான செலவு தான் செய்யுறீங்க. ஒருமாசம் உங்களுக்கு, எனக்கு, நம்ம ரெண்டு குழந்தைங்களுக்கு பள்ளிச் செலவு, வீட்டு வாடகை, மளிகை சாமான்ன்னு ரொம்ப போனா இருபதாயிரம் தாண்டாது. மிச்ச பணம் என்னங்க பண்றீங்க? வட்டி தொழில் பண்றீங்களா? அல்லது பெரிய சொத்து எதாச்சும் வாங்கப் போறீங்களா?" என்று அடுக்கடுக்காய் கேட்கும் கேள்விக்கு எப்போதும் ஒரு சிரிப்பு தான் பதிலாய் கிடைக்கும். அந்த சிரிப்பில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்  உள்ளது என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும். 

அதாவது 'உங்களுக்கு நான் இருக்கிறேன். உங்களுக்காகத் தான் நான் இதெல்லாம்  பண்றேன். என்னை நம்பு. உங்களை எப்போதும் கைவிடமாட்டேன். உங்களை கண்கலங்கவிடாமல் காலமெல்லாம் சந்தோசமாக வைத்திருப்பேன்' போன்றவைகள் தான் அதன் அர்த்தம்.


வீட்டு வாடகை உட்பட எந்த வகை வீட்டுச் செலவு செய்வதிலும், குழந்தைகளுக்கு கல்விச் செலவு செய்வதிலும் எப்போதுமே தள்ளிப் போட்டது கிடையாது. அந்தந்த நேரத்தில் அந்தந்த செலவு தவறாமல் திட்டமிட்டபடி செய்துவிடுவதால் தன் குடும்பத்தில் இதுநாள் வரை எந்த ஒரு பிரச்னையும் வந்தது கிடையாது.

'முத்துன்னா முத்து தான். பெயருக்கேத்த செயலும் முத்தாத் தான் இருக்கு. உங்களைப் போல எல்லாரும் இருந்துட்டா என்னைப்போல வீட்டுச் சொந்தக்காரங்களுக்கு ஏது பிரச்னை. சிலர் வீடு வாடகை சரியான நேரத்திலே கொடுக்காம என்னமாய் இழுத்தடிக்கிறாங்க? அட 'எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. அதுவும் இந்த மாதிரி வீட்டு வாடகை நம்பித் தான் இருக்குன்னு' மத்த ரெண்டு குடித்தனக்காரங்க எப்பத்தான் நினைக்கப் போறாங்களோ?' என்று ஒவ்வொரு மாதமும் வாடகை வாங்க வரும் போது மனம் நொந்து புலம்பும் வசனம் கிட்டத்தட்ட அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் அத்துப்படி. 


இவர் இப்படியென்றால் மளிகைக்காரர் ஒருபடி மேலே 'உங்க வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எதுவேண்டுமானாலும் வாங்கிக்குங்க. பணம் என்னங்க பணம். அதுகிடக்கட்டும். உங்ககிட்டே இருந்தா அது வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலே அதாவது பேங்க் லாக்கர்லே இருக்கிறது போல. நீங்க கூட வராதிங்க. நானே பையனை விட்டு போடச் சொல்றேன்' என்று முத்தரசனை புகழ்ந்து தள்ளிவிடுவார்.

என்னதான் ஒருவர் நல்லவராக, நாணயமாக, நேர்மை தவறாதவராக இருந்தாலும் இந்த சமுதாயம் நல்ல பட்டமா கொடுக்கப் போகுது?  அந்த தெருவில் உள்ளவர்களோ 'இதுக்கெல்லாம் காரணம் ! தான் அதிகமா சம்பாதிக்கிறதா பணத்திமிர். இந்த அலட்டல் எங்கே கொண்டு போய் முடியும் என்கிறதைப் பார்க்கத் தானே போறோம்' என்று பொறாமையால் மனதில் கருவும் மனிதர்கள் இருக்கத் தானே செய்வார்கள்.

உண்மையில் முத்தரசனுக்கு வறட்டு கௌரவம் துளி கூட இருந்தது கிடையாது. நியாமாய் நடப்பது அவருடைய குணம். அதேபோல் 'இல்லை' என்பவர்களுக்கு இருப்பதை கொடுக்கும் மனம் உண்டு. அவ்வாறு சிலர் உதவி பெற்று தங்களுடைய வாழ்க்கையில் வளமான திருப்புமுனைக்குக் காரணமாக அவர் இருந்துள்ளார். 

இத்தனை நல்ல குணங்கள் இருந்தும் சில மனிதருக்கு ஒரு சில பலவீனம் இருக்கத் தானே செய்கிறது. அவருக்கும் ஒரு பலவீனம். அதாவது தான் செய்யும் காரியங்கள் வெளிப்படையாக எவரிடத்திலும் பேசியது கிடையாது. அதற்கு தனது மனைவியும் விதிவிலக்கில்லாமல் இருந்தது. அவரது மனைவிக்கும் மனதில் அவ்வப்போது பயம் எழும். ஒவ்வொரு மாதம் மிச்சமாகும் பணத்தை வேறு யாருக்காவது... சே..சே.. அப்படியிருக்காது. அல்லது தவறான வழியில் ..சீ ..சீ .. அதுவும் இருக்கிறதுக்கு வாய்ப்பில்லை. கடைசியில் 'எனக்கேன் இந்த வேண்டாத எண்ணம். இதுவரைக்கும் ஒரு குறையும் வைக்காமல் எந்த பிரச்னையும் இல்லாமல் வண்டி போகுது. பிறகு ஏன் எதைப் பத்தியும் கவலை படனும்?' என்று சமாதானம் அடைந்துவிடுவாள்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதிரியான சோதனை. ஆம். அந்த குடும்பத்திற்கும் எமன் வடிவில் வந்தது. எதிர்பாராத அந்தக் குடும்பத் தலைவர் முத்தரசனின் வாகன விபத்து மரணத்தில் முடிந்தது. அதுவே அந்த குடும்பத்து விதியை தலைகீழாகப் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்த்தது. பொதுவாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்துவிடாலோ அல்லது நினைவிழந்து விட்டாலோ எப்படியெல்லாம் துன்பம் வரும் என்று அதை அனுபவிப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதுவும் இரு குழந்தை வைத்து அவர்களது வாழ்க்கை வண்டி எவ்வாறு ஓடும்? என்று சற்று நினைத்துப் பார்த்தால் நமக்கே ஒரு கணம் இருள் சூழும். 


"இன்னும் எத்தனை நாளம்மா பொறுக்கிறது. மாசம் ஆறாச்சி. இனிமேல் என்னாலே பொறுக்க முடியாதம்மா. சீக்கிரம் வீட்டை காலி பண்ணிடுங்க. அவரு வேலை பார்த்த நிறுவனம் மூலமா கிடைச்ச பணத்தை வச்சிட்டு எத்தனை நாளைக்குத் தான் வாழ்க்கையை ஓட்டுவீங்க" என்று எப்போதும் புகழ்ந்து பேசும் வீட்டுக்காரர் பணம் வராததால் அவரும் மாறிவிட்டார். 


"ஐயா, இன்னும் ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்குங்க. எப்படியும் பூரா வாடகையும் தந்துடுறேன்" என்று எதோ ஒரு நம்பிக்கையில் கெஞ்சினார்.

"என்னமா? எப்படித் தருவீங்க? மனுசன் சொந்த பொண்டாட்டியைக் கூட நம்பாம சம்பாதிச்ச  பணத்தை என்ன தான் செஞ்சாரோ? அந்த பணத்தை யார் யார் சாப்பிடுறாங்களோ? ஏதாவது ஒரு சின்ன விவரம் தெரிஞ்சாக் கூட எதாச்சும் பண்ணலாம். இப்படி நட்டாத்துலே இந்த குடும்பத்தை தவிக்க விட்டுட்டு போய்விட்டாரே. ஓஹோன்னு எப்படி வாழ்ந்த குடும்பம் இப்படி நிர்கதியாய் போயிடுச்சே. இருந்தாலும் என்னோட பொழப்பு இதுலே தாம்மா இருக்கு. என்னை மன்னிச்சிடுங்க" என்று வீட்டுக்காரர் தன் பங்கிற்கு சொல்லிவிட்டுச் சென்றார்.

'இவங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். பணம் இருக்கிற திமிருலே என்னமாய் ஆடுனாங்க! இப்ப என்னாச்சு?' என்று பொறமைபட்டவர்களுக்கு அவல் கிடைத்தது போல் இருந்தது அவர்களது குடும்ப வாழ்க்கை. கடன் கொடுத்த அனைவரும் அக்குடும்பத்திற்கு கொடுத்த கெடு முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் தான் இந்த குடும்பம் உயிர் பிழைக்கும் என்று இருக்கும் போது அது ஒரு நண்பனின் மூலம் வந்தது.

"ஐயா ! கொஞ்சநாளைக்கு முன்னாடி முத்தரசன்னு ஒருத்தர் விபத்திலே மரணம் அடைந்தாரே அவரோட வீடு எதுங்க?" என்று ஒருவர் அந்த தெருவில் விசாரித்து வர " அதோ அந்த மூணு வீடு ஒரே மாதிரியாத்  தெரியுதில்லே. அதுலே நடு வீடு தாங்க" என்று விடை கிடைக்க அந்த வீட்டை அடைந்தார்.


வீடு சோகத்தில் மூழ்கிக் கிடந்ததை பார்த்து பதற்றப்பட்டார். 

"நீங்க...தானே முத்தரசனோட மனைவி மரகதம் .." என்று வார்த்தைகள் அவர் முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் 

"ஆமாங்க . நான்தாங்க அவரோட மனைவி!"

"நான் அவரது நெருங்கிய நண்பர். அவன் இறந்த நாள்லே நான் வெளிநாட்டிலே இருந்ததாலே உடனே வரமுடியல்லே. நேற்று தான் இந்தியாவுக்கு வந்தேன். விசயத்தை கேள்விப்பட்ட உடனே புறப்பட்டு வந்துட்டேன். முத்தரசன் தங்கமானவன். குடும்பத்து மேலே அதிக அக்கறையுள்ளவன். திடீரென்று இப்படியாயிடுச்சேன்னு எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு. நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. உங்க வீட்டுக்காரர் உங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போற அளவுக்கு எந்த தப்பும் பண்ணலை. அவர் உயிரோட இருக்கும்போது இந்த கடிதம் என்கிட்டே கொடுத்தாரு. 'எனக்கு ஏதாச்சு ஒண்ணு  ஆனா இந்த கடிதத்தை என் மனைவிகிட்டே  கொடுத்து அவங்களுக்கு வேண்டிய உதவி செய்யுங்க'ன்னு சொன்னாரு. இதுலே எல்லா விவரமும் இருக்குது " என்று அந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.


பிரித்து பார்த்த போது அதில் இ.லாக்கர் என்கிற வலைதள விலாசமும், அதன் கடவுச்சொல்லும் இருந்தது. அதைப் பார்த்தபோது சட்டென்று தன கணவர்  தன்னிடம் தங்கள் குடும்ப விசயங்கள் எல்லாம் இந்த வலைத்தளத்திலே இருக்கிறதுன்னு அடிக்கடி சொல்லுவாரே அந்த ஞாபகம் வந்தது. அப்படியென்ன அதில் இருக்கோ'  என்று அந்த நாட்களில் வராத ஆர்வம் இப்போது அவளுக்கு வந்தது.

"அப்போ நான் வர்றேங்க" என்று விடைபெற்று செல்ல நினைத்தவரை "'கொஞ்சம் நில்லுங்க" என்று தடுத்து நிறுத்தினாள்.  


"நீங்க அவருக்கு உண்மையா இருக்கீங்கன்னு இந்த கடிதம் மூலமாத் தெரியுது. அதென்னங்க இ. லாக்கர் கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா எனக்கு உதவி செய்ய முடியுமா?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.

"என்னென்ன இருக்குன்னு சொல்றேன். அதுக்கு என்னென்ன பண்ணனும்ன்னு சொல்றேன். சந்தேகம் இருந்தா அதையும் தீர்த்து வைக்கிறேன். இ.லாக்கர் என்பது வங்கியிலே இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் போல ஒண்ணு. உங்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவதற்கு கொஞ்சம் தெரியும்ன்னு நினைக்கிறேன். வலைதளத்தில் இ .லாக்கர் னு டைப் பண்ணுங்க" என்று சொன்னார்.

உடனே கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து "ம் ..டைப் ..பண்ணிட்டேன்" என்றாள். 

திரையில் இ.லாக்கர் உங்களை  வரவேற்கிறது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க உங்களது சரியான விலாசமும் , கடவுச்சொல்லும் அதில் டைப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வந்தது 

 
"அதில் அவர் கொடுத்திருக்கும் விலாசத்தையும், கடவுச்சொல்லையும் டைப் பண்ணுங்கள். என்ன வருதுன்னு பாருங்கள்" என்றார் அவரது நண்பர்.

பார்த்தாள். பார்த்தவுடன் முகத்தில் மூடிக்கிடந்த சோகத்திரை மறைந்து மகிழ்ச்சி திரையாக மாறியது.

"என்னங்க. இப்போது அவரு என்ன பண்ணியிருக்கார்ன்னு தெரிஞ்சதா? இந்த நவீன கம்ப்யூட்டர் உலகத்திலே இதுவும் ஒரு வசதி. மனுசனை நம்பாதவர்களுக்கு இந்த கம்ப்யூட்டர் தான் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாத் தெரியுது, இந்த இயந்திரமயமான உலகத்திலே எப்பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர்  நேரடியாக நிதானமாய் பேச முடியாத நிலைமை வருதோ அப்பெல்லாம் இந்த கம்ப்யூட்டர் தான் எல்லோருக்கும் துணை. இந்த சூழ்நிலையிலே இதனோட மகத்துவமும் உதவும் கண்டிப்பா தேவைப்படும் " என்று நம்பிக்கையும் ஆறுதலும் சொன்னார்.


"என்னான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க. பணவிசயம் தான் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லேயே" என்றாள் மரகதம்.

"இவ்வளவு கேட்கிறதாலே நான் என்னான்னு பார்த்து உங்களுக்கு விளக்கம் சொல்றேன். இதோ வரிசையா ஆயுள் காப்பீடு பாலிசி, வங்கி லாக்கர், நிரந்த வைப்பு , வீடு மற்றும் மனை விவரம், முக்கிய சான்றிதழ்கள்ன்னு  இருக்கா? ஒவ்வொன்றும் அழுத்திப் பார்த்தா என்னென்ன அசல் இருக்கோ அதெல்லாமே ஸ்கேன் பண்ணி அப்லோடு செய்திருக்கிறார். முதல்லே ஆயுள் காப்பீடு பார்ப்போம்" என்று அழுத்தினார். 


"இது உங்க குடும்பத்தோட ஆயுள் காப்பீடு விவரம் . அவரு பேர்லே ஐந்து லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்திருக்கிறார். அந்த பாலிசியோட படம் இது தான். இதுலே அதனுடைய பெயர், ஊர், எப்போது ஆரம்பித்த விவரம், காலாவதி ஆகும் நாள் என்றும் அதில் உங்கள் பேரை நாமினியாகவும் போட்டுயிருக்கிறார்" என்று சொல்ல ஓரளவு பயம் நீங்கி தைரியம் வந்தது அவளுக்கு.

"இது தான் வங்கி லாக்கர் விவரம்" என்று அதை அழுத்தினார். 'இதுலே வங்கி லாக்கர்லே என்னென்ன தங்க வைர நகைகள், பத்திரங்கள் இருக்கிறதோ அந்த படங்கள் தான் இவைகள். எல்லாமே எப்படியும் இருபது லட்சம் இருக்கும் " என்று அனைத்தையும் படங்கள் மூலமாகப் பார்த்து பரவசம் அடைந்தாலும் அவர் இல்லாதது ஒரு குறையாக அவளுக்கு இருந்தது. 


"வங்கி லாக்கர் சாவி எங்கிருக்கின்றது என்கிற இடத்தின் பகுதியை படம் பிடித்து வைத்திருகிறார். பாருங்க. இதோ ஒரு கருப்புகலர் பெட்டியிலே இருக்கு. எப்படி திறப்பது என்றும் படம் பிடித்து வைத்திருக்கிறார் பாருங்க " அதன் வீடியோ படம் ஓடியது.

"பிறகு இது பாருங்க. இது உங்க பேர்லே, உங்க குழந்தைங்க பேர்லே உள்ள நிரந்தர வைப்பு பணம். குத்துமதிப்பா ஒரு அஞ்சு லட்சம் இருக்கும்.  இது உங்க மூணு பேர்லே உள்ள அஞ்சல் அலுவலக வைப்பு பணம். இதுலேயும் ஒரு அஞ்சு லட்சம் இருக்கும்" என்று அடுத்ததிற்கு தாவினார். 

"இது வீட்டு பிளாட் வீடியோ படம். பிளாட் எங்கிருக்கிறதை காட்டும் படம். அதன் பத்திரத்தின் படம் இது" விலாவாரியாக எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிமுடித்தார். 

இப்போது தன் கணவரை நினைத்து பெருமைபட்டாலும் இந்த விசயங்களை அவர் சொல்லும் போதெல்லாம் அலட்சியாமாக தான் இருந்ததை எண்ணி வெட்கப்பட்டாள். எதோ அவருடைய நண்பர் நல்லவராக இருப்பதால் சரியாப் போச்சி. இல்லையென்றால் .. அதை நினைச்சாலே .அப்பப்பா வாழ்க்கையே இருட்டாயிருக்கும்'  என்று பல சிந்தனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவரே தொடர்ந்து "இவையெல்லாம் கிடைக்கிறதுக்கு உங்க கணவரோட இறப்புச் சான்று முக்கியம். அதை வாங்கிட்டீங்களா?" என்று கேட்டார்.

"அது எப்படியோ அந்த சமயத்திலே பலரோட வற்புறுத்தலின் பேர்லே அவரோட இறப்புச் சான்றும் , வாரிசு சான்றும் வாங்கிட்டேங்க" என்று உடனே பதில் சொன்னார்.


"ரொம்ப நல்ல காரியம் பண்ணீட்டீங்க. ஒவ்வொன்னா நீங்க உங்க பேர்லேயும் குழந்தைங்க பேர்லேயும் மாத்திக்குங்க. உதவி தேவைபட்டா தாராளமா இந்த நம்பர்லே பேசுங்க. நான் வர்றேன்" என்று கிளம்பினார்.

அப்போது தான் இந்த கம்ப்யூட்டரைக் கொண்டு  யாரெல்லாம் எப்படியெல்லாம் மக்களுக்கு சேவை கொடுக்கிறாங்க. கம்ப்யூட்டராலே பல நன்மைகள் இருக்கத் தான் செய்யுது. இவ்வளவையும் அவரு சொல்லியிருந்தாலும் எனக்கு அப்போ ஒண்ணுமே புரியல்லே . ஆனா இப்போ எல்லாமே புரியுது. இனி வாழ்க்கையிலே கவலையில்லை. இருந்தாலும் மனைவிகிட்டே  பணவிசயங்களை மூடி மறைக்கிறது எவ்வளவு பெரிய தவறுன்னு ஏன் பலருக்கு தெரியாமல் இருக்குது? கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவு இல்லாமல் வாழ்க்கை நடத்தினால் இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் துன்பப்பட தேவை இருக்காதே. அவர் நம்பும் மூன்றாம் மனுசன் நம்பிக்கையா எல்லாமே சொன்னால் சரி. அதில்லாமே அதை மூடி மறைச்சாலோ அல்லது மறந்து போனாலோ வாழ்க்கை என்னாவது? எனக்கு கிடைத்திருக்கும் இந்த அனுபவம் மற்ற எல்லோருக்கும் ஒரு பாடமாக கட்டாயம் இருக்கும். எல்லோரும் இ.லாக்கரை எல்லோரும் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு உறுதியாக தனது அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&            

      

'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டி

                                                  இது நம்ம சானல் வழங்கும் 

                                          

                                   'வருங்கால உலக நாடுகளின் கதி' 
                              புத்தக ஆசிரியருடன் ஒரு நேரடி பேட்டி ...

                                                                            மதுரை கங்காதரன் 

உலகம் முழுவதும் விற்பனையில் புதிய சாதனை செய்து  கிட்டத்தட்ட எல்லா மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தி மக்களிடையே அதிகமாக பேசப்படும்   'வருங்கால உலக நாடுகளின் கதி'  என்கிற புத்தகம் எழுதிய ஆசிரியருடன் ஒரு சிறப்பு பேட்டி . (இது ஒரு கற்பனை பேட்டி - யாரையும் குறிப்பிடுவது அல்ல ) 


இடம் : இது நம்ம சானல் அலுவலகம்       பேட்டி எடுப்பவர் : 'இது நம்ம சானல்' நிர்வாகி 

குறிப்பு : புத்தக ஆசிரியருக்கு தமிழ் உட்பட அனத்து பிரபல மொழிகள் நன்கு தெரியும். ஆகையால் பேட்டி தமிழிலே எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகி : வணக்கம் ஆசிரியர் அவர்களே ! இதுவரை யாருக்குமே பேட்டி தராத உங்களது சிறப்புப் பேட்டியை முதல் முதலாக  நம்ம தொலைகாட்சியிலே ஒளிபரப்பு செய்வதில் நாங்க மிகவும் பெருமைபடுறோம். 

ஆசிரியர்:  வணக்கம் இது நம்ம சானல் நிர்வாகி மற்றும் பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்களே !


நிர்வாகி : உங்களோட புத்தகம் 'வருங்கால உலக நாடுகளின் கதி' உலக மக்களுக்கு மிகப் பெரிய அதிர்வை எற்படுத்தியிருக்கே! அந்த மாதிரி புத்தகம் எழுதத் தூண்டியது என்ன காரணம்? உங்களோட நோக்கம் என்னான்னு எங்க நேயர்களுக்குச் சொல்லனும்னு நான் ரொம்ப ஆசைபடுறேன்.  

ஆசிரியர்: இந்த உலகத்திலே எல்லா நாடுகளில் வாழும் மக்கள் எதாவது ஒரு வகையிலே அல்லது பல வகையிலே நேரடியாகவோ அல்லது மறைமுகமாக பாதிக்கப்பட்டுகிட்டே இருக்காங்க. இப்படியே கண்டுக்காம போன இந்த உலகம் நம்ம கண்ணு முன்னாலே அழிஞ்சிடும். இன்றைய மக்கள் இனம் போட்டி மற்றும் பொறாமையால் தினம் தினம் செத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றது.  கூடிய விரைவிலே எதிர்பாராத பேரழிவு நடக்கப் போகுது. அது எங்கே? எப்போது? என்று கூடிய விரைவில் தெரிந்துவிடும். அது நடக்காம இருக்கணும்னா இப்போதே பலவிதமான நடவடிக்கைகள் கொஞ்சமும் தாமதமில்லாமல் எடுக்கவேண்டும். அதில் என் பங்கிற்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கத் தான் நான் எழுதிய இந்த புத்தகமும் இப்போது கொடுக்கும் பேட்டியும்.   

நிர்வாகி : நீங்க சொல்றது எனக்கு புரியல்லே? புரிஞ்சிக்கிறதுக்கும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!  

ஆசிரியர்: புரியும்படி சொல்லணும்னா இந்த உலகம் இதுவரைக்கும் ரெண்டு உலகப் போரை பார்த்திருக்கு. மூன்றாவது உலகப்போர் இதுவரைக்கும் வரலேன்னு நினைக்கிறாங்க. ஆனா மறைமுகமா அது ஆரம்பிச்சிடுச்சி. அது பத்தி தான் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   


நிர்வாகி : என்னா , மூன்றாவது  உலகப்போர் ஆரம்பிடுச்சா? ரொம்ப குழப்புறீங்களே. 

ஆசிரியர்: இப்போ உங்களுக்கு குழப்பமாத் தோணும். ஆனா இந்த பேட்டியின் முடிவுலே உங்களுக்கு எல்லாமே தெளிவாய் புரியும்.

நிர்வாகி : அப்படியா! அதுவும் பார்த்திடலாம். ஆமாம், உங்க புத்தகத்திலே பல நாடுகள் பத்தி எழுதியிருக்கீங்க.  அவங்களோட பாதிப்புகள் என்னவென்று விலாவாரியா எழுதியிருக்கீங்க.  சில நாடுகள் இந்த பாதிப்பை உணர்ந்து தொலைக்குப் பார்வையிலே பல தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக எழுதியிருக்கீங்க. இன்னும் சில நாடுகள் தாங்கள் எப்போதுமே வல்லரசாக இருக்க பல தந்திரங்களை கையாண்டு சில நாடுகளை தங்கள் அடிமை நாடுகளாக ஆக்கிகொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்.. ஆனா இந்தியாவைப் பத்தி ரொம்பவே மட்டம் தட்டி எழுதியிருக்கீங்க. நம்நாட்டு மக்கள் என்னாடான்னா 'வருங்கால இந்தியா ஒரு சிறந்த வல்லரசாக மாறும்னு எல்லோரும் கனவுலே மிதந்துகிட்டே இருக்காங்க. கடைசியில் ' இந்தியாவின் கதி அதோ கதி !'ன்னு முடிச்சிருக்கீங்க.. அது தான்  எங்களுக்கு நெருடலாக இருக்கு. அப்படீன்னா என்ன அர்த்தம்? 

ஆசிரியர்: என்ன .. இந்தியா .. ஒரு வல்லரசாக மாறுமா? என்னங்க கிண்டல் பண்றீங்களா? அப்படி மாறப் போறதா ஒரு அறிகுறியும் தெரியல்லேயே? வல்லரசு கில்லரசு இதெல்லாம்  மக்களை ஏமாத்துறதுக்காக போடும் கோசம் ! இதனாலே சாதிக்கப் போறது ஒண்ணும்  கிடையாது. ஆனா ஏழைகளுக்கும்  , நடுத்தர மக்களுக்கும் எப்போதுமே  பாதிப்பு இருக்கும்!   


நிர்வாகி : என்னாங்க அப்படி சொல்லிட்டீங்க. வலிமையான திறமையான புது அரசு பொறுப்பேத்திருக்கு. இப்பவும் உங்க எண்ணம் அப்படித்தானா?  

ஆசிரியர்: அதெப்படீங்க. அரசு மாறினா உடனே நாடு வளர்ச்சி அடைஞ்சிடும்மா. சட்டியிலே இருந்தாத் தானே அகப்பையிலே வரும்? 

நிர்வாகி : எப்படி .. எப்படி.. எங்களுக்கே பழமொழியா? சட்டின்னு எதைச் சொல்றீங்க. அகப்பைன்னு எந்த அர்த்தத்திலே சொல்றீங்க? 

ஆசிரியர்: சட்டீன்னா மக்களோட வருமானம், வாழ்வாதாரம், வளர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி, பணபுழக்கம் இது போல பலது. அகப்பைன்னா அரசு ! மக்கள்கிட்டே அளவுக்கதிமா பணம் இருந்தா அதை அரசு தாராளமாக எடுத்து செலவு பண்ணலாம். இந்த நாடு  பணக்காரங்களை விட்டுட்டு நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள்கிட்டே தானே  தன்னோட பணவசூல் பலத்தை காட்டுது. அட நாடு தான் கடன்கார நாடாக மாறிடிச்சி. அதுபோல் நாட்டிலே அதிகம் பேருக்கு எதோ ஒரு விதத்திலே கடன் கொடுத்து அவங்களை கடன்காரங்களாக மாறிட்டே இருப்பது தான் கொடுமை. மக்கள்கிட்டே  பணபுழக்கம் இல்லைன்னு தெரிந்தும் அவங்க கிட்டேயிருந்து இரத்தம் வர்றவரைக்கும் கறக்குது இந்த அரசு. ஆனா மேல் தட்டு மக்களுக்கு அரசும் சட்டமும் நல்லாவே வளைஞ்சு கொடுக்குது.  அதனாலே அவங்ககிட்டே தான் கோடி கோடியா கருப்புப்பணம் , வெள்ளைப் பணம்னு கொட்டி கிடக்குது. அதை யாராவது தட்டி  கேட்கிறாங்களா? மீறி அப்படி யாராவது கேட்டா அவங்களை பண பலம், அதிகார பலம், சட்டத்தின் மூலமா பணிய வச்சிடுறாங்களே. இதிலே கூத்து என்னான்னா சில தலைவர்கள், அரசு அதிகாரிகள் அவங்க அவங்க பதவிக்கேத்த படி சில முறைகேட்டிலும், சட்டத்தை மதிக்காமலும் மக்களுக்கு பல தொல்லைகள் கொடுக்கின்றனர். அப்படி இருக்கும் போது வருங்கால இந்தியா எப்படி இருக்கும்னு நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!     

நிர்வாகி : நீங்க எங்கேயோ இருக்கீங்க. ஆனா எல்லாத்தையும் நேரிலே பார்த்தது போல புட்டு புட்டு வைக்கிறீங்களே. அப்படீன்னா இப்போதுள்ள இந்தியாவிலே வளர்ச்சி இல்லையா? அப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு எதெல்லாம் முட்டுக்கட்டையா இருக்குது? ன்னு நேயர்களுக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. 


ஆசிரியர்: முதல்லே அரசியல் தலைவர்களும் மக்களும் தற்பெருமை கொண்டு பேசுறதை நிறுத்தனும். எல்லோரும் அவங்களே அவங்களோட பெருமைகளைப் பத்தி  பேசுறாங்க. இல்லாட்டி அவங்களே ஒரு சின்ன கூட்டத்தை வச்சிக்கிட்டு அவங்க மூலமா பிரமாண்டமா போலியான மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி பல மீடியாக்களில் முக்கியமா அவங்களோட மீடியாவில் பெரிய அளவில் தங்களை பெருமையாக் காட்டுறாங்க. அதெல்லாம் உண்மைன்னு சில மக்கள் இன்னமும் குருட்டாம் போக்கா நம்பிட்டுத் தான் இருக்காங்க. அது ஒழியனும். நல்லது கெட்டது ! எது நடக்குதோ அதை ஒளிவுமறைவில்லாம மக்களுக்குத் தெரியப்படுத்தணும். மக்களின் நல்வாழ்வுக்குத் தேவைபடி அரசு ஆட்சி நடத்தனும். ஏழை பணக்காரங்கன்னு வித்தியாசம் பார்க்காம அவங்க எல்லோரையும் சமமா மதித்து நடத்தனும். 

நிர்வாகி : தற்பெருமை , மாயத்தோற்றம்ன்னு சொல்றீங்க எதுலே ?  அது எப்படீன்னு சொல்லுங்க? 

ஆசிரியர்: முதல்லே கல்வியை எடுத்துக்கொள்வோம். அது முழுக்க முழுக்க வியாபாரமா மாறியிருக்குது. அதுக்கு கூட விளம்பரம் கொடுத்து சேரச் சொல்றாங்க . பணம் கொடுத்தா நல்ல மதிப்பெண்களோட ஒரு பட்டம் கொடுக்குறாங்க . ஒவ்வொரு படிப்பிற்கும் ஒவ்வொரு மாதிரியான நன்கொடை,  கட்டணம். அவங்க படிச்சிட்டு எப்படி நல்லபடியா வேலை செய்வாங்க?  கல்வி தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரம். இந்தியாவிலே இப்போதுள்ள கல்விவளர்ச்சி எப்படி இருக்குதுன்னா படித்த அடிமைகளை உருவாக்குது ! குறைஞ்சது மூன்று வருசமா ஒரே பாடம் படிக்கிறாங்க. அதுவும் பழைய பாடங்கள் ! எப்பவோ கண்டுபிடிச்சதை இப்ப படிக்கிறாங்க. உலகளவிலே இன்றைய காலகட்டத்திலே சில நாடுகள்லே தினம் தினம் பல கண்டுபிடிப்புகள் நடக்குது , உலகத்தில் புவியியல் மாற்றங்கள், மக்கள் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளில் மாற்றங்கள், பொருளாதாரக் கொள்கை,அவசர சட்டங்கள் , அரசியல் மாற்றங்கள், வியாபாரம் பற்றிய பலவித யுக்திகள் போன்றவைகளைப் பற்றிய கட்டுரைகள் வலைத்தளத்திலே வந்துட்டே இருக்கு. அதெல்லாம் ஆங்கிலத்தில் பெரும்பாலும் வந்துட்டே இருக்கு. இப்போதைய பாட புத்தகத்தில் அதெல்லாம் இருக்காது. அதுவுமில்லாம இந்நாட்டு மக்கள் சிலருக்கு ஆங்கிலம் ரொம்பவே  'வீக்'. பின்னே எப்படி அவங்களுக்கு இப்போதைய நாட்டு நடப்புகளைப் பற்றித் தெரியும்? மக்களுடைய எண்ணங்களின் மாற்றத்தைப் பற்றித் தெரியும்? அதையெல்லாம்  தற்போதைய கல்வி பாட திட்டங்களின்  மூலமா மறைச்சுடுறாங்க. அவங்க படிக்கிறது முற்கால கல்வி! இன்னும் அவங்க தற்கால கல்வி படிக்கணும்! பிற்கால கல்வியை யோசிச்சு புதுசா எப்போ உருவாக்குவாங்க? அதுக்குள்ளே பிற நாடுகள் எங்கேயோ போய்விடும்!   


நிர்வாகி : கல்வியிலே இவ்வளவு சமாச்சாரம் இருக்குதா? அதுக்கு கல்வி முறை எப்படி இருக்கனுன்னு நினைக்கிறீங்க?

ஆசிரியர்: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? அதாவது சின்ன வயதில் கல்வியோடு ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொடுத்தால் பிற்காலத்தில் எந்த தொழிலையும் கற்பதற்கு திறமை வரும். தொழிலை கற்பதற்கு மனப்பாடம் தேவையில்லை. பரீட்சையும் வேண்டியதில்லை. கொஞ்சம் ஞாபக சக்தி இருந்தா போதும். அதனாலே அவங்களுக்கு ஆர்வம் தானாக பெருகும். எந்த பல்கலைக்கழகத்திலே படிச்சிட்டு திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், கண்ணதாசன் போன்றவர்கள் காலத்தால் அழியாமல் இருக்கும் படைப்புகளைப் படைச்சாங்க? அவங்களுக்கும் தேர்வு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உண்மை விளங்கும்! அதுக்கெல்லாம் காரணம் முற்போக்குச் சிந்தனையில்லாத கல்வி ஆர்வலர்கள்! சுதந்திரமான மூளை தான் பல கண்டுபிடிப்பு கொடுக்கும். இன்னும் கொஞ்ச நாள்லே எல்லாத்துக்கும் தேர்வு வைத்து அது மூலமா தேர்வு செய்தாலும் ஆட்சேபனையில்லை.   

நிர்வாகி : பரவாயில்லை. நாங்க படைச்ச பழமொழிகளின் அருமை எங்களுக்குத் தெரியல்லை. ஆனா நீங்க அதை சரியா புரிஞ்சிட்டு அதுபடி நடக்கிறீங்க. அதென்ன எல்லாத்துக்கும் தேர்வு வைத்தாலும் வைக்கலாம் என்கிறீர்களே. அதுக்கு என்ன அர்த்தம்? 

ஆசிரியர்: அதுங்களா! தட்டச்சு தேர்வுக்கு தட்டச்சு மூலமா தேர்வு செய்றாங்க! ஒரு ஆசிரியர் தேர்வை வெறும் எழுத்து மூலமா தேர்வு செய்றீங்க! அது எப்படி ஒரு அனுபவமில்லாம நேரடியாக பெரிய வகுப்புக்கு எப்படி பாடங்களை சொல்லித் தருவாங்க? அவர்களிடத்தில் படிக்கும் மாணவர்கள் எப்படி படிப்பாங்க! இப்போ எல்லாத்துக்கும் டியூசன் வைக்கிறாங்க. பிறகு எதுக்கு பள்ளிக்கூடம்? அதுவும் ஓராயிரம் இடத்திற்கு ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதுறாங்க! அதுலே பணம் கொடுத்தவங்களுக்கு இடம் ஒதுக்குறாங்க ? அதுக்கு காரணம் தொழில் கையில் இல்லை. வெறும் படிப்பு மட்டும் இருந்தால் எப்போதும் இப்படித் தான் இருக்கும். அது போல ஒலிம்பிக்கில் சேரணுமா? இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடனுமா? அதுக்கும் தேர்வு மூலமா தேர்ந்து எடுத்தாலும் எடுக்கலாம். கோடிகணக்கான மக்கள் தேர்வு எழுதுவாங்க. அதன் மூலமா அரசுக்கும் பணம் கிடைக்கும்? அதுவும் இங்கு வருவதற்கு ரொம்ப நாட்கள் இல்லை! இத்தனைக்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகம் இருக்கு! ஒப்புக்கு அது இருக்கு. வயது தான் ஏறுது தவிர அவங்களுக்கு வேலை கிடைத்தபாடில்லை. இப்படி மனப்பாட கல்வி முறை இருந்தால் எப்படி இந்நாடு வல்லரசாக மாறும்?   

நிர்வாகி : உங்க ஆதங்கம் புரியுது. அதனாலேத் தான் அறிவுள்ளவர்கள் எல்லோருமே வெளிநாட்டிற்கு போகிறாங்களோ ? ஏன்னா அவங்களை இந்த நாடு ஏத்துகிறத்துக்கு மறுக்குது. வசதி, வாய்ப்பு, சம்பளம் தர மறுக்குது. அவங்க வெளிநாட்டிலே தங்கள் திறமைகளை காட்டி மீண்டும் இந்த நாட்டிற்கே விக்குறாங்க. அது மூலமா நல்லா சம்பாதிக்கிறாங்க. ஒரு வேளை அவங்க அனுப்பும் பணத்தில் இந்த நாடு வாழுதோ என்னவோ? அது போதாதுன்னு அந்நிய முதலீடு வேண்டுமாம் ! இவங்களை வைச்சு அவங்க வியாபாரம் செய்துடுவாங்களா ? அவங்க தலையெழுத்து மாத்தவா முடியும்?அது கிடக்கட்டும் !  வல்லரசு நாடுகள் இப்ப என்ன செய்திட்டு இருக்காங்க?

ஆசிரியர்: அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான  உணவு, மின்சாரம் ,ஆரோக்கியம், கல்வியை எந்த ஒரு மக்கள் பாகுபாடு இல்லாமல் வழங்கி அரசே நேரடியாக கவனிக்குது. அதிலே எந்த ஒரு குறையும் இல்லாம பார்த்திருக்குது. ஆரம்பம் முதற்கொண்டே செய்முறைக் கல்வி பயிலுறாங்க. அதனாலே அவங்களுக்கு எளிதா தொழிலும் வருது. புதுமையா பலது படைக்கவும் எளிதா முடியுது.  அவங்க படிக்கும்போதே சம்பாதிக்கவும் செய்யுறாங்க.  அவங்களைப் போல சிறிய வயது முதற்கொண்டே தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் பழக்கத்தை உண்டுபண்ணினால் வருங்கால இந்தியா சிறந்து விளங்கும்!   


நிர்வாகி : உங்களோட அறிவுரையை இப்போதிருந்தாவது இந்த நாட்டு மக்கள் பின்பற்றுவர்கள். குறைந்தபட்சம் நம் நேயர்கள் கட்டாயம் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். கல்விக்குப் பிறகு விவசாயத்திற்கு வருவோம். நம் நாட்டில் கூடிய விரைவில் விவசாயம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும் அபாயம் இருக்கு என்று எழுதியிருக்கீங்களே அவ்வளவு ஆபத்தாகவா நம் விவசாயத் தொழில் இருக்கின்றது?

ஆசிரியர்: கண்டிப்பாக! சுழலும் ஏர் , பின்னது உலகம் என்று உங்களக்குத் நன்றாகவேத் தெரியும்.  இப்போது இருக்கும் இளைஞர்கள் உடல் உழைப்பை அறவே வெறுக்கிறாங்க. அதனாலே சின்ன வயசிலே குண்டா இருக்காங்க. அதனாலே அவங்க வேலைகளை அவங்களாலே செய்ய முடியிறதில்லே. மனுசன் உயிர் வாழ சாப்பாடு தான் முக்கியம்.  அதுக்கு விவசாயம் அவசியம். இந்த உண்மையை ஏத்துக்கிறதுக்கு அரசும் யோசிக்குது. மக்களும் தயங்குறாங்க. விவசாயத்திற்கு தண்ணீர் அவசியம். இந்தியாவிலே நிலப்பரப்பு அதிகம். அதனாலே இந்தியாவில் எங்கே மழை பெய்தாலும் அதை சேமிக்க முடியும். இங்கு பெய்யும் 75% மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை முதலில் தடுத்தாலே போதும். வற்றாத ஜீவ நதிகள் இருந்தும் சரியானபடி நீர் மேலாண்மை திட்டம் அரசு மேற்கொள்ளாததனால் நாட்டில் ஒரு பகுதி வெள்ளமும், மறுபகுதி வறட்சியும் நிலவுது. தொழில்நுட்பம் அதிகம் இருக்கும் இந்த நூற்றாண்டில் இனிமேலும் துரிதமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகால மக்களுக்கு  சோற்றுக்கு சிக்கல் தான். ஆக விவசாயத்திற்கு முன்னுரிமை தந்து இளைஞர்களை அதில் ஈடுபட வைத்து விவசாயத்திற்கு ஒரு புத்துயிர் கொடுத்தாத் தான் வறுமை ஒழியும். விவசாயமும், மழை நீர் சேகரிப்பும் மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கச் செய்தால் இந்தியா வளரும்.  வளரும் நாடுகள்லே விவசாயம் ரொம்பவே முக்கியத்துவம் தர்றாங்க. அவங்க எப்போதும் மற்ற நாடுகளை நம்பியிருப்பதில்லை.   

நிர்வாகி : வந்திருக்கும் புதிய அரசு இதற்கான நடவடிக்கை எடுப்பாங்கன்னு மக்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருக்காங்க. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மொழியும் ஒரு தடையா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க. அதெப்படி தடையாய் இருக்க முடியும். மொழியில்லாமல் ஏது தகவல் பரிமாற்றம்?    


ஆசிரியர்:  சரிதான். இந்த நாட்டில் மொழியை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலமாக பிரிக்கப்பட்டியிருக்கு. அதனால் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் தாய் மொழிகளைத் தவிர பிற மொழிகளை கற்க விரும்புவதில்லை. ஏன் சிலர் தங்கள் தாய் மொழியைக் கூட சரியாக கற்றுக் கொள்வதில்லை. அதனால் தற்போதைய உலகம் எங்கு நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்கிற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். ஏன் அரசியல் தலைவர்கள் சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். பல மொழிகள் கற்றுக் கொள்வதால் ஆற்றலும், திறமையும் பெருகும். அதனால் தன்னம்பிக்கை உண்டாகும் என்று அரசியல்வாதிகள் உணர வேண்டும். பல மொழி கற்றவருக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும். நாட்டு நலன் ஒன்றே முக்கியம் என்கிற ஒரே நோக்கத்தை  வளர்க்க வேண்டும். அனைத்து மொழிகள் முக்கியம். அதனால் போட்டி கூடாது. எப்போது இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியோடு ஏதாவது பொது மொழி ஒன்றை கற்கிறார்களோ அப்போது தான் வளர்ச்சி சாத்தியம். அரசியல்வாதிகள் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிற மொழிகளைக் கற்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரன்கள் மேலை நாட்டில் படிக்க வைக்கிறார்கள். ஆக ஊருக்குத் தான் உபதேசம். ஆக பிற மொழி கற்பதை தள்ளிப்போட தள்ளிப்போட வளர்ச்சியும் தள்ளிப்  போகும். ஒருவருக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். இப்போதிருக்கும் வல்லரசு நாட்டில் ஒரே ஒரு மொழியே பின்பற்றி வருவதால் இந்த பிரச்னை அங்கே எழுவதில்லை. மேலும் அவர்கள் பல மொழிகளை அரசியல் தடையில்லாமல் கற்கிறார்கள். அங்கு பல கட்சிகள் இருப்பதில்லை.          

நிர்வாகி : மொழி, சாதி கொண்டு இருக்கும் சில சுயநலக் கட்சிகள் இனிமேல் மக்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்று நம்புவோமாக. பிறகு சட்டம், நீதி மற்றும் தீர்ப்பு பற்றி கிண்டலாக எழுதியிருந்தீர்கள். கடனை திருப்பி பெறுவதும், இந்த நாட்டில் நீதியும், தீர்ப்பும் கிடைப்பதும் ஒண்ணுன்னு எழுதியிருந்தீங்க. அவ்வளவு நகைப்புக்குரியதாகவா நம் சட்டம், நீதி இருக்கின்றது?  


ஆசிரியர்: ஒண்ணுமில்லை. ஒரு வக்கீல் அலுவலகத்திற்குப் போங்க. அங்கே உள்ள அலமாரியிலே பல கனத்த புத்தகங்களைப் பார்க்கலாம். முதல்லே அவ்வளவையும் யார் படிச்சிருக்காங்க? நீதிபதிக்கு எந்த பிரிவில் எந்த தண்டனை வழங்க வேண்டும் என்று தெரியாததால் பெரும்பாலான வழக்குகள் வருடக் கணக்கில் ஒத்தி வைக்கிறார்கள். நேற்று சாப்பிட்டதையே நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் வழக்கு கட்டில் விவரம் இருந்தாலும் அதை படிப்பதற்கு நேரம் இருக்குமா?ஆண்டுக்கணக்கில் எப்படி யார் யார் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்? ஆக அதிக  வழக்குகள்   நிலுவையில் இருப்பதால் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. மேலும் பணக்காரர்களின் வழக்குகள் எல்லாமே கண்துடைப்பாகவே நடை பெறுவதால் அவர்களின் ஆதிக்கம் ஓங்கியே இருக்கின்றது. அப்பாவிகள் கடைசியில் மாட்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள வழக்கறிஞர்களுக்கு சட்டம் என்பது சக்கரைப் பொங்கலாக இருக்குது. ஏதாவது ஒரு வலுவான வழக்கு ஒரு வழக்கறிங்கருக்கு கிடைச்சா போதும் அதை வைச்சே ஆயுள் முழுதும் ஓட்டிவிடுறாங்க. சட்டம் அனைவருக்கும் சமமாக அதே சமயத்தில் வேகமாக நடை பெறவேண்டும். அதை கணினி மயமாக்கிவிட்டால் மிக நன்றாக இருக்கும். இந்த தவறுக்கு இந்த தண்டனை என்று இருந்தால் எளிதாக தீர்ப்பு கிடைக்கும். குற்றங்கள் குறையும். வல்லரசு நாட்டில் யாருமே தவறு செய்து தப்பிக்க முடியாது. தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்கும். மேலும் தீர்ப்புகள் வேகமாக கிடைக்கும்.
 
நிர்வாகி : நீதிமன்றங்கள் , சட்டங்கள் இருந்தாலும் நீதிபதி பதவிகள் சில இடங்களில் காலியாகவே இருக்கின்றது. கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி கிடக்கின்றது என்று கூசாமல் புள்ளிவிவரம் சொல்கிறார்கள். ஒன்று , இரண்டு, மூன்று என்று ஒரு கோடி வரை சொல்வதற்கே ஒருவரின் ஆயுசு போதாது. பின் எப்படி எல்லா வழக்கையும் தீர்க்கப் போகிறார்களோ? ஆனால் இந்த அரசு எல்லாவற்றையும் கணினியில்  இருக்க வேண்டும்   என்று அதற்கான  பல நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றது. ஆகவே  வெகு விரைவில் நீதித் துறையும் கணினி மயமாக மாறும். அந்த நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கின்றது. பிறகு விலைவாசி பற்றி எழுதியிருந்தீர்கள். எப்படியிருந்தால் விலைவாசி குறையும்?


ஆசிரியர்: விலைவாசி அதிகமாவதற்கு முக்கிய காரணங்கள் பணக்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின்  பேராசை. முக்கியமாக மீடியாக்கள் தினமும் ஏதாவது சொல்லி மக்களை பயமுறுத்தியும்,  மக்களின்  எண்ணங்களையும்  மாற்றி வருகின்றது. முக்கியமாக பதுக்கல், வரி ஏய்ப்பு , லஞ்சம், ஊழல் மற்றும் இந்த நாட்டிற்கு கொஞ்சமும் ஒத்துவராத வல்லரசு நாடுகள் எப்போதுமே வல்லரசாக இருக்க வளரும் நாடுகளின் திணிக்கப் பட்ட ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம். இந்த இரண்டினால் பணக்கார வர்க்கம் எளிதாக நடுத்தர மக்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களை நடுத்     தெருவுக்கு சத்தமில்லாமல் கொண்டுவந்து விடுகின்றனர்.  இதில்  அதிக வருமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் தங்கள் தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டமல் இருந்து  விடுகின்றனர். அரசும் அவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளித் தருகின்றது. கடைசியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி  ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும்   விலைவாசி உயருகின்ற அளவுக்கு மக்கள் வருமானம் உயருவதில்லை. பின் எப்படி அவர்கள் விலைவாசி உயர்வை  எதிர்கொள்வார்கள்? அதை ஈடு கட்ட மக்கள்  பலர் பணக்காரர்களிடம், வங்கிகளில்  கடன் பெறுவார்கள். கட்ட முடியாமல் திண்டாடுவார்கள். பிறகு தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆக விலைவாசி கட்டுப்படுத்த அரசால் மட்டுமே முடியும். ஒரு பொருள் உற்பத்தி செய்யும்போது அதன் அடக்க விலை தெரியுமல்லவா? அதிலிருந்து லாபம் இவ்வளவு என்று அரசு நிர்ணயித்தால் போதுமே! அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.   

நிர்வாகி : இந்த புதிய அரசு லஞ்சம் , ஊழல் ஒழிப்பதோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தையும் வரவழைப்பதற்கு பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது என்று எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் எளிய வரி முறையை நடைமுறைபடுத்துவதாக இருக்கிறார்கள். ஆகவே போகப்போக விலைவாசி குறையும் என்று அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஒரு வருடம் பொறுப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அது போகட்டும் ! புத்தகத்தில் பல இடங்களில் 'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டது போல' என்று குறிபிட்டுயிருந்தீங்களே ! அப்படியின்னா எதை சொல்ல வர்றீங்க?       


ஆசிரியர்: உலகத்திலே இருக்கும் பல சிறிய நாடுகளின் நிலப்பரப்புகள் குறைவு. ஆகையால் பல மாடி கட்டிடங்கள் வேறு வழியில்லாமல் கட்டுகிறார்கள். ஆனால் இங்கு நிலப்பரப்பு அதிகமாய் இருந்தும் பல மாடிக்கட்டிடங்கள் கட்டி நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்கள். கடற்கரைகள் ஒட்டித் தான் அதிக  மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். இயற்கைப்  பேரிடர்  ஏற்படும்  அபாயம் அதிகம். அதனால்  அதிக  நிலப்பரப்பு இருக்கும் நாடுகள் தங்கள் (தலை) நகரங்களை  நாட்டின்  நடுவில்  இருந்தால்  மக்களுக்கும் பாதுகாப்பு. கடற்கரையும் செழிப்பாக இருக்கும். அரேபியா, ஜப்பான், சிங்கபூர் போன்ற  நகரங்களில் சாலைகள்  பளப்பளப்பாக இருப்பதற்குக் காரணம் அங்கு   சுற்றிலும்  கடல் இருக்கின்றது. மண் அரிப்பு உண்டாகாமல்  இருக்க  பலவித சாலைகள் போடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர்  பிரச்னை  இருப்பதில்லை. ஆனால் அதைப் பார்த்து இந்த நாட்டில் இருக்கும்  நகரத்தில் மழை பெய்தாலும்  அங்கு   இருக்கும்  தார்  மற்றும்  சிமெண்ட் சாலைகள் மட்டுமே இருக்கின்றது. மழை நீரை உறிஞ்ச போதிய மண் தரை இல்லாததால் அங்கு நிலத்தடி நீர் குறைந்து  எப்போதுமே தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. தண்ணீருக்கும் மற்ற மாநிலத்தில் கை ஏந்தும் நிலை இருக்கின்றது. பின் எப்படி இந்நாடு வல்லரசாக ஆக முடியும்? ஆக கடற்கரை ஒட்டி நகரங்களை அமைக்காமல்  நாட்டின் நடுவில் ஒரே இடத்தில் அதிக நெருக்கடியில்லாத கட்டிடங்கள் மற்றும்  மழை நீர் நிலத்தடிக்குச் செல்லுமாறு பார்த்துக்கொண்டாலே நகர வாழ்க்கை நன்றாக இருக்கும். விவசாயமும் பெருகும்.      

நிர்வாகி : நீங்கள் நினைப்பது சரி தான். இப்போது தான் 'விலை குறைவாகக் கிடைக்கின்றது' என்கிற ஒரே காரணத்தினால் பலர் நகரத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் மனைகளை வாங்குகிறார்கள். ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் வீடுகட்டாமல் அல்லது குடியேறாமல் மீண்டும் அவர்கள் நகரத்திற்கே வந்துவிடுகிறார்கள். கூடிய விரைவில் இதற்கும் ஒரு விடிவு காலம் வரும். பிறகு பல இடங்களில் இன்றைய இளைஞர்களைப் பற்றியும் மக்கள் எண்ணங்களைப் பற்றியும் எதிர்மறையா எழுதியிருந்தீர்களே !  அது எப்படி?  


ஆசிரியர்: இந்நாட்டில் இன்றைய மக்கள் பேராசையும், சுய நல மிக்கவர்களாக இருக்கிறார்கள். சில பெரியவர்கள் பேராசை கொண்டவர்களாகவும், விளம்பத்தில் அதிக ஈர்ப்பு கொண்டவர்களாகவும், சில  இளைஞர்கள் எந்நேரமும் வலைத்தளம், கைபேசி, மது மற்றும் பல கேளிக்கைகளில் நேரத்தை வீணாக்குவதிலும், சில குடும்பங்கள் திரைப்படம், சின்னத்திரையில் பொழுதைக் களிப்பவர்களாகவும், குழந்தைகள் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆகையால்  பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டாலும் தனக்கு  கவலையில்லை ! தான் வாழ்தால் போதுமென்ற சுயநலம் மற்றும் பிறரை அடிமை படுத்தும் எண்ணம் ஓங்கி வளர்ந்தும் , குறைந்த சிந்தனை, அதிக பேசும் மனிதர்களாகவும், புதியனவற்றை  தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களாகவும், பிறர் பேச்சில் , புகழ்ச்சியில் திருப்தி மற்றும் சந்தோசப்படும் மனிதர்களாகவும்,  மொத்தத்தில் மாயையில் மயங்கும் மனிதர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நாட்டை  'யார் ஆண்டாலும் கவலை இல்லை' என்கிற மனப்பாங்கு ஒழிக்க வேண்டும்.
 
நிர்வாகி : இந்த எண்ணங்கள எளிதாக ஒழிக்க முடியாது. ஆனால் தானாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். பிறகு ஒன்றை ஆணித் தரமாக குறிப்பிட்டு சொல்லியிருந்தீர்கள். அதாவது முதல், இரண்டாம் உலகப் போரின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் இப்போது வல்லரசுகளில் ஒன்றாக திகழ்கிறார்கள். ஆனால் எதிலும் பாதிக்கப் படாத இந்நாடு அந்த நாட்டில் கையேந்தும் நிலை உள்ளதே! என்று சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தீர்கள். அவர்கள் எவ்வாறு முன்னேறினார்கள் என்பதைக் கூற முடியுமா?   


ஆசிரியர்: இந்நாட்டிற்கு பின்னால் உதித்த நாடுகளான அமெரிக்கா , ஜப்பான், சீனா , ஜெர்மனி, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் போன்ற நாடுகள்  இப்போது உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு இந்நாட்டை விட பல மடங்கு என்று சொன்னாலும் மிகையாகாது. அவற்றிற்கு காரணம் உழைப்பு, வெளிப்படையான நிர்வாகம், ஆரோக்கியமான மாற்றங்கள், தேசபக்தி, மக்கள் ஒற்றுமை போன்றவை. இங்கு அவ்வாறு வருமா ? என்பது சந்தேகமே. ஏனென்றால் சுய சிந்தனை இல்லாமை , தனனால் முடியாது என்று கொள்ளும் தாழ்வு மனப்பான்மை,  குப்புசாமி பணக்காரனாகி விட்டால் தான் பணக்காரனாகியதாய் நினைத்துக்கொள்ளும் அற்ப சந்தோசம் , தேவையில்லாதவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது , அரசு பதவியில் இருப்பவர்கள்  மக்கள் வரிப் பணத்தில் அதிகமாக அனுபவிப்பது,வறட்டு மற்றும் போலி கௌரவத்திற்கு அதிக மதிப்பளிப்பது, காரணம் தெரியாமல் பழைய நடைமுறைகளை விடாப்பிடியுடன் பின்பற்றுவது, எதையும் பின்விளைவை ஆராயாமல் அலட்சியமாய் இருப்பது, பிரச்னைகளை தள்ளிப் போடுதலும் அதை எதிர்கொள்ள திறமை இல்லாமை, ஒரு பிரச்னை கையாளும் வேறு ஒரு புது பிரச்னை உண்டாகுதல் போன்ற செயல்கள் காலம் காலமாக மக்கள் தவறாமல் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி இந்நாடு  வல்லரசாக மாறும் ? எதற்கெடுத்தாலும் சாலை மறியல், போராட்டம், உண்ணாவிரதம், கதவடைப்பு, வேலை நிறுத்தம் போன்றவைகளால் ஏதேனும் ஒரு பிரயோசனம் இருக்கின்றத்தா? பெரும்பாலும் அவைகள் அரசியல் தலைவர்கள் நடத்தும் பத்திரிக்கை மற்றும் மீடியாக்களுக்கு கொடுத்து அதையும் பணமாக மாற்றிவிடுகிறார்கள்? இவைகளெல்லாம் வளரும் நாடுகளுக்குத் ஆரோக்கியமானதல்ல. மேலும் தராது ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவைகளில்  எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென்று தெரியவில்லை. பின் எப்படி இந்நாடு வல்லரசாக மாறும்?     
 
நிர்வாகி : ஆக உலகத்திலே எங்கெங்கே, என்னென்ன பிரச்னை இருக்கின்றதோ அதெல்லாம் இங்கே காணலாம்னு ஒத்த வரியிலே சொல்றீங்க. அப்படித்தானே. அதையும்  மக்கள் உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். பிறகு உறவுகள், அணுகுமுறை, தகவல் பரிமாற்றம் எப்படி?  

ஆசிரியர்: சொல்லிக்கொள்ளும் படி உறவுகள் இல்லை. எப்போது மகாபாரதம் உறவுக்குள் சண்டை வளர்த்துவிட்டதோ அப்போதிலிருந்து உறவுகள் வலிமைக்கு பதிலாக விரிசல் தான் இருக்கின்றது. மனித நேயத்துடன் அணுகுபவர்கள் மிகக் குறைவு! போலியான தகவல் பரிமாற்றங்களால் தினமும் பலர் ஏமாந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறார்கள். அதற்கு பரந்த மனதோடு எப்போதும்  நேர்மையான, உண்மையான , சத்தியமான வழியில் வாழ்க்கையைச் செலுத்தினால் நாட்டு எல்லோரும் மகிழ்வுடன் இருக்கலாம். விரைவில் இந்நாடு வல்லரசாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது.

நிர்வாகி : இதை இன்றைய இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு ஆரோக்கியமான மாற்றம் பார்க்க முடிகின்றது. அவர்கள் நினைத்துவிட்டார்கள். அதன்படி நடத்திமுடிப்பார்கள். பிறகு மக்களிடத்தில் இனம் தெரியாத பயம் இருப்பதாக கூறுகிறீர்கள். அது எந்த அளவுக்கு உண்மையோ? 


ஆசிரியர்: இந்த நாட்டில் பயமில்லாத மனிதர்கள் அனேகமாக வெகு சிலரே இருக்கலாம். ஒவ்வொருவரும், ஒவ்வொருவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். பயப்படுவனவற்றில் சமூகம், போலி சாமியார்கள், ஜோதிடர்கள், நிறுவங்கள், அதிகாரிகள், தலைவர்கள்,  சட்டம் போன்றவைகள் அடங்கும். இவைகளெல்லாம்  சுயநலவாதிகளால் உண்டானவை. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு, தெளிந்த சிந்தனை, தன்னம்பிக்கை இருந்தால் பயத்தை வெற்றி கொள்ளலாம்.  

நிர்வாகி : நம் பேட்டி முடியும் நேரம் வருகின்றது. ஆரம்பத்தில் மூன்றாவது உலகப் போர் எப்போதோ ஆரம்பித்ததாக சொன்னீர்களே அதன் அர்த்தம் என்ன?


ஆசிரியர்: மேற்கூறிய எல்லா தடைகள் எல்லாமே நமது எதிரிகள். அவைகள் தான் மூன்றாவது உலகப்போர். நமது பலவீனத்தால் அவைகள் வலிமையாக இருக்கின்றது.. அவைகளை  நீங்கள் வெற்றி கொள்ள ஆரம்பித்தால் கட்டாயம் இந்நாடு ஒரு வல்லரசாக விளங்கும். எல்லோரும் ஒற்றுமையுடன் மனது வைத்தால் இது நடந்தே தீரும்! 

நிர்வாகி : இது வரை எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்கு ஆக்கப்பூர்வமாக சில யோசனைகள் சொல்லியதற்கு நேயர்களின் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் இந்நாடு வல்லரசாக உருவெடுக்கும். அப்போது நீங்கள் மீண்டும் ஒரு முறை எங்களுடன் பேட்டி காண அழைப்போம். நன்றி வணக்கம். 

ஆசிரியர்: இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மாத்திரமே. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். எல்லாமே மக்கள் கையில் உள்ளது. இது நம்ம சானல் நேயர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு இனிய நாளில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் ! நன்றி, வணக்கம்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&