Pages

Monday, 25 August 2014

நம்ம நாடு நல்ல நாடு! - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ !

நம்ம நாடு நல்ல நாடு!


மக்கள் விரும்பும் செய்திகள்
 ( ஒரு கற்பனை மற்றும் அரசியல் விழிப்புணர்வு)


இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ 

நேற்று வெற்றி பெற்ற நம்மூர் எம்.எல் ஏ   அவர்கள் இன்று காலை 9.00 மணிக்கு தன் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென்று சரியான நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காதவாறு வந்ததால் அந்தப் பகுதி சற்று பரபரப்பிற்குள்ளாகியது. சொற்ப மக்களே அந்த அலுலகத்திற்கு வந்திருந்தார்கள். அவரது அன்றாடப் பணிகள் அவ்வப்போது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அதை பார்த்தவுடன் கூட்டம் கொஞ்ச அதிகமாகியது. கணினியில் தமக்கு வந்திருக்கும் இ.மெயில்களைப் பார்த்தார். கைபேசியில் வரும் அழைப்பிற்கு தகுந்த பதில் அளித்தார். சமூக வலைத்தளங்களில் பலர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலை அனுப்பினார். அலுவலத்திற்கு வந்திருந்த சிலரை ஒவ்வொருவராக அழைத்தார். அவர்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கிக்கொண்டார். ஒருவர் மட்டும் உள்ளே வருவதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு இருக்க எம்.எல்.ஏ அவரைக் கூப்பிட்டார்.


"ஐயா .. உங்களுக்கு என்ன வேண்டும்?"

"ஐயா ,, எம் பேரு மாடசாமிங்க. கூலி வேலை பார்கிறேங்க. எம் பொண்ணு பெரிய படிப்பு படிக்கனும்ன்னு ஆசைபடுறா. படிக்க வைக்க வசதியில்லேங்க"

"என்ன மதிப்பெண் எடுத்திருக்கா ?"

"இந்தாங்க மதிப்பெண் பட்டியல்"


"பரவாயில்லையே. நல்லப் படிக்கிறாப்பிலே இருக்குது"

"உங்க பொண்னை அழைச்சுட்டு , எந்த கல்லூரியிலே சேரனுமோ அங்கு இப்போதே போவோம். உடனே சேர்த்திடுவோம். பொண்ணு படிச்சா குடும்பத்திற்கு நல்லது.

உடனே அந்தக் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய சம்பளத்தில் அந்தப் பெண்ணிற்குன்டான  கல்வி பணத்தைக் கட்டி சேர்த்துவிடுகிறார். ஊர் மக்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த மாதிரி ஒவ்வொருவரும் இருந்தா ஏன் கொலை, கொள்ளை, திருட்டு நடக்குது.. என்று பேசிக்கொண்டனர்.

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777 

 


     

பாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்?

தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 11

'புதிய தென்றல்' ஆகஸ்ட் 2014  மாத இதழில்

வெளியான பகுதி.

யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்? சென்ற இதழ் தொடர்ச்சி 

WHO CAN DO GOOD EXPORT BUSINESS? last Part Continued 




மதுரை கங்காதரன்  

5555555555555555555555555555555555555555555555

Sunday, 24 August 2014

ஒரே விலைக் கதை - சிறுகதை


ஒரே விலைக் கதை 

சிறுகதை 
மதுரை கங்காதரன் 

இந்த முறையாவது தன் கணவரிடத்தில் தான் வகைவகையாய் செய்து வைத்திருக்கும் சமையல்களை காட்டி பாராட்டை பெறவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள் கவிதா. 

'உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லை! நீ வாங்குறது எல்லாமே சொல்லிக்கொள்ளும் படியே இல்லை! நீயும் உங்கம்மா மாதிரி பழைய பஞ்சாங்கம் தான்' என்று ஒவ்வொரு முறையும் குத்திக்காட்டி பேசுவதில் அவள் கணவர் சத்திய சீலன் வல்லவர். 

எப்படியும் அவர் வாயார தன்னைப் பாராட்ட வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் தான் வாங்கும் எந்த பொருளையும் நிதானமாகப் தெளிவாகப் பார்த்து பார்த்து வாங்கியும் அவருக்கு திருப்தி அளிக்கவில்லையே  என்று அவள் எண்ணுகின்ற போது வாழ்கையில் சலிப்பு தான் உண்டாகும் கவிதாவுக்கு. 

இதைப்பற்றி பல முறை கவிதா தன் அம்மாவிடம் சொல்லுற போது 'கொஞ்சம் பொறு கவிதா! நீ எவ்வளவு நல்லதா வாங்கினாலும் மாப்பிள்ளைக்கு எந்த காரணத்தினாலே பிடிக்கலேன்னு என்னாலே இப்போ ஓரளவு கணிக்க முடியுது. ஆனால் இன்னைக்கு நீ செய்திருக்கும் சமையலை சாப்பிடும் போது மாப்பிள்ளை எப்படி நடந்துக்கிறார்?ன்னு நான் கவனிக்கிறேன். பிறகு அவருக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை உன்கிட்டே சொல்றேன்' என்று சொல்லியது அவளுக்கு ஆறுதலைத் தந்தது.


இருந்தாலும் அவளுக்கு ஒரு நப்பாசை. 'தன் அம்மா நினைப்பது போல கணவரிடம் ஏதும் ஒளிவு மறைவு இருக்காது' என்கிற ஒருவித குருட்டு நம்பிக்கை அவளிடத்தில் இருந்தது. அவள் எதிர்பார்க்கும் நேரத்தில் சத்தியசீலன் வீட்டிற்குள் நுழைந்தான். சமையல் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.

"இன்னைக்கு என்ன சமையல்? கமகமன்னு இருக்கு. ஒரு பிடி புடிச்சுடுறேன்" என்று சொன்னவுடனே கவிதாவுக்கு பாதி பாராட்டு கிடைத்ததாக கருதினாள். சாப்பிட்ட பிறகு மீதி பாராட்டு கிடைக்கும் என்று நம்பினாள்.

'கவிதா, மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டதாலே ரொம்ப பெருமைபடாதேம்மா. சிலர் உள்ளே ஒண்ணும் வெளியே ஒண்ணும் வைச்சுகிட்டு பேசுவாங்க. கொஞ்ச நேரத்திலே மாப்பிள்ளை மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு சொல்லிடுறேன்" என்று கவிதாவின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டாள் அவள் அம்மா. 


இருந்தாலும் மிகவும் ஆர்வமாக புன்னகையுடன் கணவனுக்கு பரிமாறத் தொடங்கினாள். சற்று தூரத்திலிருந்து  நடப்பதை உன்னிப்பாக கவனித்தாள் கவிதாவின் அம்மா.

"கவி..இது என்ன ? புது மாதிரியா இருக்கு?" என்று சத்தியசீலன் ஆசையைக் கேட்டான்.

"அதுங்களா? கத்தரிக்காய் கூட்டு. கிலோ முப்பது ரூபாய் விக்கிறதை நான் சாமர்த்தியமாய் பேசி இருபது ரூபாய்க்கு வாங்கினேன். நல்லா இருக்குங்களா?" என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.  


"சுமாரா இருக்கு. அவ உன்னை நல்லாவே ஏமாத்திருக்கா. பதினைந்து ரூபா கத்திரிக்காயை முப்பது ரூபா சொல்லி உன் தலையிலே இருபது ரூபான்னு கட்டிட்டா. இது என்ன வெண்டக்கா சாம்பரா? கிலோ நாற்பது ரூபா சொல்லியிருப்பா. நீ பேசி முப்பது ரூபாய்க்கு வாங்கியிருப்பே?" என்று சத்திய சீலன் முந்திக்கொள்ள அவளும் 'ஆமாம்' என்று தலையாட்டினாள்.

"சமையல்லே நீ தேற மாட்டே?" என்று வழக்கம் போல விமர்சித்தான்.

இவ்வாறு பேசியதை சற்றும் எதிர்பார்க்காத கவிதா ஏதும் புரியாமல் சிலையானாள். ஆனால் அனைத்தையும் கவனித்த அவள் அம்மாவுக்கு எல்லாமே விளங்க ஆரம்பித்தது.

"அம்மாடி கவிதா! மாப்பிள்ளைக்கு நீ எது வாங்கினாலும் அவருக்கு பிடிக்காத காரணம் எனக்கு தெரிஞ்சிருச்சி. இனிமேல் அதுபத்திக் கவலைப்படாதே. நாளையிலிருந்து அவர் எப்படி உன்னை பாராட்டுகிறாருன்னு மட்டும் பாரு"  என்று கவிதாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.   

மறுநாள் புதிதாக வாங்கிய கண் கவர் வண்ணமயமான சேலையும், காலுக்கு ஏற்ற அழகான செருப்பையும் தன் கணவனிடம் காட்ட ஆயுத்தமானாள்.

சத்தியசீலன் வந்தவுடன் தயாராக வைத்திருந்த சேலை மற்றும் செருப்பு பார்சலை அவன் கண் முன் வைத்தாள். 

வழக்கம் போல " இந்த சேலை எவ்வளவு?"ன்னு சற்று நக்கலாகக் கேட்டான்.

"நான் எப்போதும் இருநூறு, முந்நூறு ரூபாயிலே தான் சேலை வாங்குவேன். ஆனா அந்த மாதிரி வாங்கிறது இந்த தடவை எனக்கும் உங்களைப் போல அதெல்லாம் பிடிக்கல்லே. இந்த சேலை இப்போ தான் புதுசா விற்பனைக்கு வந்திருக்கும் சேலைன்னு கடையிலே உள்ளவங்க சொன்னாங்க. விலையே கேட்டேன். ஆயிரத்து அறுநூருன்னு சொன்னாங்க. உடனே 'பில்' போடுன்னு சொல்லீட்டேன். எப்படீங்க இருக்கு?"

"ஆஹா இப்போ தான் உருப்பிடியா ஒரு காரியத்தை செய்திருக்கே. என்னமாய் இருக்கும். கலர் என் கண்ணைப் பறிக்குது. இதை கட்டிட்டுப் பாரு அந்த தேவதை கூட உன் அழகுக்கு ஈடு இணையாக மாட்டா !" என்று கவிதாவை சத்தியசீலன் புகழ அவளோ தூரத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கு தன் கட்டை விரலை உயர்த்துக்காட்டி 'வெற்றி' என்று சொல்லாமல் சைகை செய்தாள். 

இன்னும் அவனிடத்தில் புன்னகை மறையாமலும் கண்களில் பிரகாசம் குறையாமலும் இருப்பதை அவள் கவனித்தாள். 

"ஆமாம், செருப்பு வாங்குவதாக சொன்னாயே. வாங்கிட்டியா கவி" என்று முதல் முதலாக ஆர்வமாய்க் கேட்டான்.

" இதோ பாருங்க" என்று பார்சலைப் பிரித்து அவனிடத்தில் காண்பித்தாள்.

"இது எவ்வளவு கவி?" என்று கேட்டான்.

"போன தடவை நூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கினேன். அது உங்களுக்கு சுத்தமா பிடிக்கல்லே. அதனாலே இந்த செருப்பு வாங்கினேன். காலுக்கு இதமா குளிர்ச்சியா இருக்கும்ன்னு சொன்னாங்க. என்னோட காலுக்கு ரொம்பவே நல்லா இருந்துச்சி. விலையைக் கேட்டேன். எண்ணூறு ரூபாயின்னு சொனாங்க. உடனே மறு பேச்சு பேசாம வாங்கிட்டேன்" என்று கூறினாள்.

"அற்புதம். உன் காலுக்கு, சும்மா சொல்லக் கூடாது. எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? ரொம்ப நல்லா இருக்கு" என்று இன்னொரு முறையும் வாயாரப் பாராட்டினான். இப்போதும் 'வெற்றி' என்று தன் அம்மாவுக்கு சைகை காட்டினாள்.

"கவி! எனக்கு இப்போ ரொம்ப திருப்தியா இருக்கு. பரவாயில்லை நீ எல்லாத்துலேயும் தேறிட்டே" என்று கூற கவிதா மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றாள்.


சரியாக நான்கைந்து நாட்கள் தான் சென்றிருக்கும். 

"ஏங்க ! ஒரு ஐயாயிரம் ரூபாய் தாங்க. காய்கறிங்க, மளிகை சாமான்ங்க வாங்கணும். இப்போதெல்லாம் நான் மளிகை சாமாங்ன்க எப்போதும் வாங்குற கடையிலே வாங்கிறதில்லீங்க. பெரிய ஸ்டோர்லே தான் வாங்குறேன். விலை அதிகமா இருந்தாலும் சரக்கு தரமா இருக்கு பாருங்க" என்று சற்று பெருமையாகச் சொன்னாள்.

"என்னம்மா கவி? முன்னமெல்லாம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தா மாசக்கடைசியிலே ஆயிரம் ரூபாய் மிச்சம் இருக்குன்னு சொல்லுவே. இப்போ என்னான்னா ஒரு வாரத்துக்கு ஐயாயிரம் ரூபாய் கேட்கிறே" என்று கேட்டான் சத்தியசீலன்.

"என்னாங்க செய்றது. உங்களுக்கு விலை குறைவா எந்த பொருளும் வாங்கினா பிடிக்கிறதில்லே. அதனாலே எது வாங்கினாலும் விலை அதிகமா இருந்தாலும் தரமா வாங்குறேன். அது தானே உங்களுக்கும் பிடிக்குது" என்று சொல்லிக் காண்பித்தாள்.

"கவி. உண்மையா சொல்லப் போனா. நீ அப்போ வாங்கிய பொருளும், இப்போ வாங்கிய பொருளும் தரம் எல்லாமே ஒரே மாதிரியாத்  தான் இருக்கு. நீ விலையை குறைச்சி வாங்கினதாலே அதோட தரத்தையும் குறைவா எடை போட்டேன். விலையை கூட்டி வாங்குறது பெரிய கௌரவம்னு நினைச்சேன். நீ எப்போதும் போல குறைச்சு வாங்குவேயே அப்படியே வாங்கு. அது தான் நல்லா இருக்கு. நம்ம வரவுக்குள் அது அடங்கும்" என்று வீட்டின் சூழ்நிலையை முதல்முதலாக உணர்ந்து பேசினான் சத்தியசீலன்.


"அப்படீன்னா. இந்தாங்க மூவாயிரம் ரூபாய்" என்று ரூபாயை நீட்டி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள். 

"என்னம்மா கவி! இந்த பணம் ஏது?"

"இது நீங்க கொடுத்த பணம் தாங்க. நான் எப்போதும் போல எல்லாப் பொருளையும் விலை குறைவா வாங்குற இடத்திலே தான் வாங்கினேன். ஆனா உங்ககிட்டே விலையை மட்டும் நான்கைந்து மடங்கு அதிகமா சொன்னேன். நீங்களும் நல்லா இருக்குன்னு சொன்னீங்க. உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும்னு நினைச்சேன். நீங்க மட்டுமில்லீங்க. பொதுவா எல்லோரும் பெரிய இடங்களிலே விலை அதிகம் கொடுத்து ஏமாந்து வாங்குறது தான் கௌரவம்னு நினைக்கிறாங்க. உண்மையில் நம்மோட பலவீனத்தை நல்லா புரிஞ்சிகிட்டு விலையை அதிகம் சொல்லி அப்படி இப்படின்னு இனிமையா பேசுறதாலே அதை அதிகம் விலை கொடுத்து ஏமாந்து வாங்கிறோம். அதை உங்களுக்கு செயலாலே புரிய வைக்கிறதுக்கு தான் என் அம்மா சொல்லி நான் போட்ட நாடகம்" என்று குட்டை உடைத்தாள்.


"உங்கம்மா பழைய பஞ்சாங்கம்னு குறை சொன்னேன். ஆனா அவங்ககிட்டே தான் அறிவும் , திறமையும் இருக்கு. இனிமே விலையைப் பத்தி மூச்சு விடமாட்டேன். நீ எது செய்தாலும் குடும்பத்துக்கு நல்லதுக்குத் தான் இருக்கும்" என்று மனதாரப் பாராட்டினான் சத்தியசீலன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^                     
         

       

இடி மின்னல் தாங்கும் இதயம் - TO GET BRAVE HEART புதுக்கவிதை

இடி மின்னல் தாங்கும் இதயம் 
 
      TO GET BRAVE HEART 

    
            புதுக்கவிதை 

      மதுரை கங்காதரன் 


வானத்தில் மாற்றங்கள் இருக்கலாம்  
உன் கொள்கையில் மாற்றம் கூடாது 

கடலில் கூட சீற்றம் உண்டாகலாம் 
உன் உணர்வில் சீற்றம் கூடாது 

நிலத்தில் அதிர்வுகள் ஏற்படலாம் 
உன் இதயத்தில் அதிர்வுகள் கூடாது 

காலம் தோல்வியைத் தரலாம் 
உன் செயலில் தோல்வி கூடாது 

எதிர்பாராதது சில நடக்கலாம் 
தன்னம்பிக்கை இழக்கக் கூடாது 

உடலில் சோர்வுகள் உண்டாகலாம் 
மனதில் சோர்வு கூடாது 

உழைப்பு உன்னை ஏமாற்றலாம் 
சத்தியம் தவறக் கூடாது 

நாளை உலகம் அழியலாம் 
கடமை செய்ய தவறக் கூடாது 

உனது ஆயுள் முடியலாம் 
உனது புகழ் அழியக் கூடாது 

நிழல் உன் கூட வராமல் போகலாம் 
நேர்வழியை தவறக் கூடாது 
இறைவனும் உன்னை கைவிடலாம் 
நம்பிக்கையை  கை விடக் கூடாது 

நினைப்பது நடக்காமல் போகலாம் 
நடத்துவது  தவறக் கூடாது  

வார்த்தைகள் தவறி வரலாம் 
வாய்மை தவறக் கூடாது 

இடி மின்னல் தாங்கும் இதயம் 
இன்று முதல் நீ பெறுவாய்!


9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

Sunday, 27 July 2014

நித்தம் ஏமாறும் நிசங்கள் ! புதுக்கவிதை

  நித்தம் ஏமாறும் நிசங்கள் ! 
   
          புதுக்கவிதை 

     மதுரை கங்காதரன் 

காட்சிகளால் ஏமாறும் கண்கள் 
ஒலிகளால் ஏமாறும் காதுகள் 

நறுமணங்களினால் ஏமாறும் மூக்கு 
சுவைகளினால் ஏமாறும் நாக்கு 

தொடுவதினால் ஏமாறும் உணர்வுகள்
உதவிகளால் ஏமாறும் உறவுகள்  

        

உறுதிமொழிகளால் ஏமாறும் நட்புகள் 
கண்களால் ஏமாறும் காதல்கள் 

போலி கௌரவதினால் ஏமாறும் வாழ்க்கை
சாதிகளால் ஏமாறும் ஒற்றுமை  

விலைவாசிகளால் ஏமாறும் மகிழ்ச்சி 
மழையின்மையால் ஏமாறும் விவசாயி  

உழைப்பினால் ஏமாறும் ஏழைகள் 
பேராசையினால் ஏமாறும் நடுத்தர வர்க்கத்தினர்

          

சட்டங்களினால் ஏமாறும் பணக்காரர்கள் 
பேஸ் புக்கினால் ஏமாறும் இளைஞர்கள் 

லஞ்சம் ஊழலினால் ஏமாறும் நேர்மைகள் 
கருப்புபணத்தினால் ஏமாறும் மக்கள் நலன்கள் 

விபத்துகளால் ஏமாறும் உயிர்கள் 
தீய பழக்கங்களினால் ஏமாறும் நோய்கள் 

இளசுகளால் ஏமாறும் முதுமைகள் 
சூதாட்டத்தினால் ஏமாறும் கௌரவங்கள்

   

அரசியலால் ஏமாறும் மக்கள்
இறப்பினால் ஏமாறும் பிறப்பு  

நித்தம் ஏமாறும் நிசங்கள் 
நிழலாக ஏமாறும் வாழ்கையே 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


 
   

இறந்தாலும் வரும் வாரிசு! சிறுகதை

இறந்தாலும் வரும் வாரிசு!

சிறுகதை 


மதுரை கங்காதரன்  

" இந்த நிலைமையிலே எனக்குக் இன்னொரு கல்யாணம் தேவைதானம்மா? அது ஏமாத்துறதா ஆகாதா? இப்போ எனெக்கென்ன குறைச்சல் ? நான் சந்தோசமா இல்லையா என்ன? நீங்களே சொல்லுங்க. பொழுதை நல்லபடியா கழிக்கிறதுக்கு என்கிட்டே படிப்பு இருக்கு. கைவசம் கைத்தொழில்கள் பல இருக்கு. அதையெல்லாம் மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆர்வமும் இருக்கு. அந்த சுகம் போதும் எனக்கு !" என்று நியாமான மனிதத்தன்மையோடு சொன்னாள் பாரதி.

"எதும்மா ஏமாத்துறது? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்த மாதிரி கொடுத்து உன் கணவரை அற்ப ஆயுசோட உன்னை விதவையாக்கி  தன்னோட அழைச்சுகிட்டாரே அந்தக் கடவுள் செஞ்சது மட்டும் ஏமாத்துறதா ஆகாதா?  திறமைகள் பலது உன்கிட்டே இருக்கு. அது எனக்குத் தெரியும். மக்களுக்கு சேவை செய்யும் குணம் உனக்கு சின்ன வயசிலிருந்து இருக்குன்னும் தெரியும்! ஆனா அதனாலே உன் வயிறு நிரம்புமா? உனக்கு இப்போ சின்ன வயசு. உனக்கும் ஒரு பாதுகாப்பு அவசியம். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நாங்க உன்னை பார்த்துட்டு இருக்க முடியும்? உனக்குன்னு ஒரு புதிய வாழ்க்கை காலம் தாழ்த்தாம அமைச்சுகிட்டாத் தான் உனக்கு நல்லது. ஒரு பொண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் கூடாது தான். ஆனா நீ ஓரளவுக்கு வாழ்க்கையை அனுபவிச்சு குழந்தை குட்டின்னு இருந்திருந்தாக் கூட ஏதோ அவங்களைப் பார்த்துகிட்டே ஒரு வகையான ஆறுதலோட வாழ்க்கையை ஒப்பேத்தலாம். அப்படி எதுவுமில்லாம இருக்கிறதாலே தான் நாங்க அவசரப்படுறோம். நாங்க இருக்கும்போதே உனக்கு பிடிச்சாப்பிலே உன்னோட ஆசையை நிறைவேத்துகிறவரைப் பார்த்து உனக்கு மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திட்டா எங்க கடமை நல்லபடியா முடிஞ்சிடும்" என்று அவளை பலவற்றை சொல்லி சமாதானப்படுத்த முயலுவாள் பாரதியின்  அம்மா.


"அவரோட கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அவரை மறக்கமுடியல்லேம்மா. எனக்குன்னு ஒரு ஆசை இருக்காதா? என்னை கட்டிக்கப் போறவர் என் எண்ணங்களுக்கு ஒத்துவந்தால் கூட ஏத்துக்கலாம்.  ஆனா எனக்கென்னமோ நான் போடும் கண்டீசனுக்கு அவர் ஒத்துவருவாரான்னு தெரியலே. அப்படி ஒத்து வந்தாத் தான் எனக்கு மறுமணம். இல்லாட்டி இல்லை தான்' என்று கறாராய் சொல்லிவிட்டாள் பாரதி.

"இப்போவாவது ஏதோ ஒருவகையிலே ஒத்துகிட்டேயே அதுவரைக்கும் எனக்கு சந்தோசம். அவருக்கும் உன்னைப் போல சில வைராக்கியம் இருக்கிறதாலே தான் நாங்களும் சம்மதிச்சோம். அவோரோட பெயர் கண்ணன் " என்று புதிர் போட்டார் பாரதியின் அம்மா.

"அப்படி என்னம்மா அவரோட வையாக்கியம்? கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.


"அவருக்கும் உன்னைப் போலவே எப்போதுமே சமூகத் தொண்டு செய்யறது தான் பிடிக்குமாம். அதாவது பிறருக்கு கல்வி கற்றுக்கொடுப்பது, சிறிய தொழில் சொல்லிக்கொடுப்பது, ஏழைகளுக்கு நோட்டு, புத்தகம், துணிமணி கொடுப்பது, சிலருக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவுவது, கணினி பயன்பாடு சொல்லிக்கொடுப்பது இது போன்ற பல உதவிகள் செய்வாராம்!" என்று சற்று பெருமையாகவே சொன்னாள்.

"அம்மா ! அதுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கும் என்னம்மா சம்பந்தம். தண்ணிக்கும் மண்ணுக்கும் முடிச்சு போடுறாப்பிலே இருக்கு!" என்று சற்று சலித்துக்கொண்டாள்.

"சொல்றேன். அதுக்குள்ளே என்ன உனக்கு அவசரம். இந்த காரணத்தினாலே அவரு தன்னோட கல்யாணத்தைப் பத்திக் கவலைபடாமே ஒரு பேச்சிலரா காலத்தை தள்ளிக்கொண்டே வந்திருக்கிறார். ஒருசமயம் ஏதோ ஒரு சமூகநலக் கூட்டத்திலே அவரு பேசிகிட்டே இருக்கும் போது யாரோ ஒருவர் 'சமூகநலத்தைப் பற்றி இவ்வளவு அருமையாப் பேசுறீங்களே ! எல்லாமே சரி தான். உங்களுக்கும் மக்கள் சமூகத்துக்கு மேலே உண்மையான அக்கறை இருந்தா, எங்கே உங்களாலே ஒரு விதவை பொண்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? தம்பி ! உன்னைப்போல பல பேர் இதை விட நல்லா பேசியிருக்காங்க. ஆனா செயல்னு வந்துட்டா எட்டிப்போய் விடுவாங்க!' என்கிற அந்த வார்த்தைகளை இன்று உனது மூலமா செயல்படுத்திக் காட்டணும்னு துடிக்கிறார். அதாவது உன்னைப்போல ஒரு விதவைக்குத் தான் வாழ்வு கொடுக்கணும்னு இத்தனை நாளா கல்யாணத்தைத் தள்ளிபோட்டுகிட்டே வந்திருக்கிறார். இப்போதான் அவருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கப் போகுதுன்னு நான் நினைக்கிறேன். இந்த கல்யாண ஏற்பாடு  நாங்க வற்புறுத்தி செஞ்சது கிடையாது. அவங்களாகவே அன்போடு கேட்டதாலே தான் எங்களாலே தட்டமுடியல்லே. நானும் உங்க அப்பாவும் எல்லாவிததிலேயும் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்" என்று தனக்குத் தெரிந்ததை அனைத்தையும் பாரதியிடம் கூறினாள்.


"ஆயிரம் நீங்க சொன்னாலும் எனக்கு என்னமோ ஏதோ ஒரு சின்ன அதிருப்தி இருக்கு" என்று மீண்டும் தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டாள்.   

"ஒண்ணு செய்யுறோம். அவரும் உன்கிட்டே ஏதோ பேசணும்னு சொல்றார். அப்போ உன்னோட அபிப்பிராயமும் அவர்கிட்டே சொல்லு. பிறகு நீ ஒரு நல்ல முடிவுக்கு வரலாம்" என்று யோசனை சொன்னாள்.

கண்ணனின்  எண்ணம் 'பாரதியிடம் எல்லாமே கல்யாணத்திற்கு முன்னால் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கும் நல்லது. பின்னால் எந்தவித பிரச்னையும் வராது' என்கிற சிந்தனையுடன் போகலாமா வேண்டாமா ? என்று பலமுறை யோசித்த பிறகு ஒருநாள் பாரதி வீட்டிற்குச் சென்றார்.   

"பாரதி இருக்காங்களா? அவங்கிட்டே ஒரு பத்து நிமிசம் பேசணும்" என்று அனுமதி கேட்டு இருவரும் பேசினார்கள். 

"எனக்கு பாரதியோட பேசினதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. என் வருங்கால வாழ்க்கை என்னான்னு இப்போத் தான் தெரிஞ்சுகிட்டேன். சீக்கிரமே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திடுறேன்" என்கிற உறுதியளித்த பிறகு கிளம்பினார் கண்ணன்.    

அந்த சந்திப்பு பாரதிக்கு ஒரு புது தெம்பைக் கொடுத்தது. தான் நினைக்கும் வாழ்வு கிடைத்திருப்பதை எண்ணி மனமெல்லாம் பூரித்துப் போனாள்.

"என்னம்மா. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ..  திருப்தியில்லைன்னு சொன்னே.. இப்போ எந்த சொக்குபொடி போட்டு உன்னை மயக்கினாரோன்னு எனக்குத் தெரியாது. உன்னோட மனசு இப்போவாவது ஒத்துகிடதே பெரிய விசயம். மேற்கொண்டு ஆகவேண்டியதை நாங்க பார்த்துக்கிறோம்" என்று மனப்பூர்வமாக மகிழ்ச்சி அடைந்தாள் அவள் அம்மா.      


பாரதிக்கு முதல் கல்யாணம் , இரண்டாண்டுக்கு முன்பு நடந்தது. அழகான மாப்பிள்ளை, மிக நல்ல குணம், கை நிறைய சம்பளம், கௌரவமான குடும்பம், திருமணம் பத்து பொருத்தம் பார்த்து அனைவரின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது. ஆனால் திடீரென்று அவருக்கு இதய நோய் தாக்கியதால் கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்து அவளின் வாழ்க்கை இருள் சூழ்ந்து விட்டது போலாகிவிட்டது என்றே சொல்லலாம். இத்தனை நாள் தனக்கு மறுமணம் வேண்டாம் என்று சொல்லியும் அவளின் அம்மா, அப்பா பிடிவாதமாய் அவளுக்கேத்த ஒரு நல்ல வரனை பார்த்து சம்மதிக்க வைத்தனர். வேறு வழி தெரியாமல் அவளும் ஒப்புக்காக ஒத்துக்கொண்டாள்.

நிச்சயதார்த்த விழா கலைகட்டியிருந்தது. எல்லோரும் இந்த அதிசய நிகழ்ச்சியை ஆவலோடு கண்டுகளிக்க வந்திருந்தனர். முக்கியமாக பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மற்றும் அவர்களது மனநிலை எப்படியிருக்கும்? அவர்களுக்கிடையே உண்டாகும்  அபூர்வ உணர்வைப் பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பவர்கள் மிகவும் அவசரப்பட்டனர் என்றே எண்ணிக்கொள்ளலாம். 

"சற்று நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்னும்  ஒரே இடத்தில் இருந்த காட்சி அனைவரையும் அதிசயிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி இருவருக்கும் பிடித்த காரணத்தினால் தான் என்னவோ இருவரின் முகத்தில் பிரகாசம் பொங்கி வழிந்தது. உணர்வுகள் பீறிட்டு வந்ததன் காரணமாக இருவரின் முகமும் சிவந்து இருந்தது. இனிதாக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையில் தான் அந்த சம்பவம் நடந்தது.

திடீரென்று பாரதி "அம்மா , எனக்கு மயக்கமும் வாந்தியும் வருது" என்று சொல்லிக்கொண்டே கைகழுவும் தொட்டியில் வாந்தியெடுத்து மிகவும் சோர்வாக உட்கார்ந்துவிட்டாள்.

அங்குள்ள அனைவருக்கும் என்ன செய்வதென்று கை கால் ஓடாமல்   பதறினார். இத்தனை குழப்பத்திற்கு மத்தியில் அரசல்புரசலாக "ஒருவேளை அதுவாயிருக்குமோ? யார் கண்டது? ம் .... நாம நினைச்சதெல்லாம் நடக்கவாப்போது ?" என்று எரிகின்ற தீயில் கூட கொஞ்சம் எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்த்தனர்.

பாரதியின்  அம்மா அப்பாவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் " மாமா ! ஒண்ணுதுக்கும் பயப்படாதீங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும்" என்று அவர்களைத் தேற்றினார். அதற்குள் ஒரு அனுபவமிக்க மூதாட்டி ஒருவர் அவளின் கை நாடி பிடித்தபடி " சந்தேகமில்லை. இவள் கர்ப்பமாயிருக்கிறாள்" என்று சொல்ல அதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.


"என்ன கர்ப்பமா?" என்று பாரதியின் அம்மா அப்பாவுக்கு வயிற்றில் புளி கரைத்தது. எல்லோரும் ஒவ்வொரு விதமாய் கற்பனை செய்து பேச பேச அவைகளைக் கேட்டு கூனிக்குறுகி நின்றனர். எப்படி இது நடந்தது என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் பாரதியின் கணவர் இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. பின் எப்படி இவள் கர்ப்பம் ? ஒருவேளை தவறான வழியில் சென்றிருப்பாளோ? என்று ஆளுக்காள் அவர்கள் வாய்க்கு வந்ததை அனாவசியமாகப் பேசினார்கள். பிறரின் மனதை புண்படுத்தும் கலை சொல்லியாத் தரவேண்டும். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை அனைவரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததார்.

" ஆமாம் .. இவள் கர்ப்பமாவாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவள் வயிற்றில் இருப்பது அவளது வாரிசு தான்" என்று கேட்ட அனைவருக்கும் அதிசயமும் ஆச்சரியமும் தந்தது.

'என்ன சொல்லுகிறான். அவள் வயிற்றில் சுமப்பது. அவளோட வாரிசாம்? அதை நாம நம்பனுமாம்' என்று முணுமுணுத்தனர். பாரதியின் அம்மா அப்பாவிற்கும் தன் மாப்பிள்ளை என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் முழித்தனர்.

"எல்லோரும் நான் சொல்வதை கவனமாக் கேளுங்க. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரதி வீட்டிற்கு போயிருந்தேன். இந்த கல்யாணத்தில் அவளுக்கு நம்பிக்கையும், தைரியமும் தருவதற்கு போயிருந்தேன். பல விசயங்களைப் பகிர்ந்துகிட்டோம். அவளோட முதல் கணவரின் நினைவுகளை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருதாள்.  அதை மட்டும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பேச்சுவாக்கிலே ஒருசமயம் அவளும், அவரோட கணவரும் இங்கிருக்கும் மழலை ஆஸ்பத்திரிக்கு போனதா சொன்னாள். அது ஒரு 'விந்து வங்கி'. அதிலே இவள் கணவோரோட விந்துவும் கொடுத்திருக்கிறார். அங்கே போய் பார்த்த பிறகு அது உண்மை எனத்தெரிந்தது. எனக்கு ஒரு யோசனை வந்ததது. ஏன் அதைக்கொண்டு அவளுக்கு அவளுடைய வாரிசைத் தரக்கூடாதுன்னு நான் நினைச்சேன். அப்போ அதை அவங்ககிட்டே இந்த மாதிரி சொன்னேன்.

"பாரதி! நான் ஒண்ணு சொல்வேன். நீங்க அதை கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. நீங்க விருப்பபட்டால் உங்களுக்கு உன் கணவரின் நினைவுப் பரிசாக அந்த விந்து வங்கியில் இருக்கும் உன் கணவரின் விந்தைக்கொண்டு உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னேன்.

"அதெப்படிங்க முடியும்?" என்று பாரதி சந்தேகப்பட்டாள்.

"எனக்கு என்னோட வாரிசு தான் வேணும்னு இல்லை. ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டவங்க சிலர் இருக்கிறாங்க. ஆனா அதுக்கும் ஒருபடி மேலே அவங்களோட வாரிசை இந்த நவீன விஞ்ஞானத்தின் மூலமாக் கொடுத்தால் இன்னும் சிறப்பாகும் உங்களுக்கும் பரம திருப்தியாகவும் இருக்குமில்லையா" என்றேன். 

"அந்த யோசனை பாரதிக்கு மிகவும் பிடித்து போயிடுச்சு. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் பக்கபலமா இருப்பதாகச் சொன்னேன். அந்த எதிரொலி தான் இந்த சம்பவம்" என்று நவீன விஞ்ஞான வளர்ச்சியை எடுத்துச் சொல்ல எல்லோருக்கும் மகிழ்ச்சி ஒருபுறம் அடைந்தாலும் நெகிழ்ச்சி ஒருபுறமும் அடைந்தனர். சிலருக்கு அவர் சொல்லியது புரியாமலும் தவிர்த்தனர். கட்டாயம் அவர்கள் பிறரிடமோ அல்லது வலை தளத்தில் மூலம் தெரிந்துகொள்வார்கள்.


இவ்வளவு குழப்பமும் அவர் தெளிவுற எடுத்துச் சொல்வதற்கு பின்னர் திட்டமிட்டபடி அந்த விழா இனிதே முடிந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சியும் தந்தது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%     

Monday, 21 July 2014

பாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்?


தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 10

ISO - வின் தரம் பற்றிய விளக்கம் 

'புதிய தென்றல்' ஜூலை 2014  மாத இதழில்

வெளியான பகுதி.

யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்?

WHO CAN DO GOOD EXPORT BUSINESS?

மதுரை கங்காதரன்