Pages

Wednesday, 25 January 2017

தவறான வழியைக் காட்டுகிறதா உலகம்? - WHETHER THE WORLD GUIDING WRONG WAY?

தவறான வழியைக் காட்டுகிறதா உலகம்?
WHETHER THE WORLD IS GUIDING WRONG WAY?
விழிப்புணர்வுக் கட்டுரை
மதுரை கங்காதரன்

இந்த அவசர உலகத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு ஊடகங்கள் எவ்வாறெல்லாம் இளைஞர்களை மாயவலையில் சிக்கவைத்து, அவர்களின் பலவீனத்தைப் பணமாக மாற்றுகிறார்கள் அதாவது இளைஞர்களை மொய் கொடுக்கத் தயாராக்கி அதைக் கரக்கும் விசயத்தில் நிறுவனங்கள், ஊடகங்களை மிஞ்ச யாருமில்லை. அதற்காக அவர்கள் பயன்படுத்தும் பகடைக் காய்கள்! அழகை அள்ளிக் காட்டும் நடிக நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தேன் ஒழுகப் பேசிடும் புகழ்ச்சியாளர்கள், ஒன்றுமில்லாததற்கும், உப்புச்சப்பான செய்கைக்கு ஆஹா, ஓஹோ என்று விசில் ஊதி கைத்தட்டி ஆரவாரம் செய்யும் கூட்டம் போன்றோர்களே. அதனால் இளைஞர்களின் எதிர்காலம் எவ்வாறு கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது என்பது பற்றிச் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கவலை கொள்வது போல் தெரியவில்லை. எப்போதும் கைபேசி கொண்டு எப்போதும் சீண்டியும், வாய்பேசும் இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்தாததால் வாழ்க்கை நிலை, சமூக கௌரவம், வேலைவாய்ப்புகள் எவ்வாறு பறிபோகின்றன? அதற்குக் காரணம் என்ன என்பதுதான் இந்த விழிப்புணர்வுக் கட்டுரை.

ஊடகங்களோ, எங்கே அதிகம் பணம் செலவழிக்காமல் நாள் முழுதும் தினமும் நடக்கும் ஏதாவது ஒன்றோ அல்லது பல சம்பவத்தை எவ்வாறு பரபரப்பாக ஒளிபரப்பலாம் என்று இருக்கின்றனர். இடை இடையே பணம் கொடுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்பத் தவறுவதில்லை. அதிலும் அதிகப் பணம் பார்க்கத் தவறுவதில்லை. மக்கள் எல்லோருக்கும் பயன்படும் ஆக்கப்பூர்வமான செய்திகள் கொடுப்பது மிகவும் அரிதாகிப் போய்விட்டது. நடந்த நிகழ்வுகளையே, காட்சிகளையே, செய்திகளையே, திரைப்படங்களையே திரும்ப திரும்பக் காட்டும் பாங்கு பெருகிவிட்டது.

சொந்த பணத்திலே எப்போதும் சமூகவலைதளங்களே கதி என்று இருக்கின்ற இளைஞர்களுக்கு ஆறு மாதம் இலவசமாக மணிக்கணக்கில் யாருடனும் பேசலாம், இணையதளம் பயன்படுத்தலாம் என்று ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தின் அறிவிப்பானது இளைஞர்களை உழைப்பாளிகளாக்கச் செய்யுமா? அல்லது மகா சோம்பேறிகளாக்குமா? அதுவும் ஒருவகையில் பல இளைஞர்களை பலவீனமாக்கி அதற்கு அடிமைகளாக மாற்றி வீட்டிற்கும் நாட்டிற்க்கும் பாரமாகச் செய்து வருவது உண்மை தானே! அதற்கு நாட்டின் சட்டமும், அரசும் அனுமதிப்பது கொடுமையிலும் கொடுமையல்லவா? இந்த இலட்சனத்தில் இப்போது இருக்கும் இளைஞர்கள் பலருக்கு கல்வி இருக்கின்றதே தவிர அறிவு, ஆற்றல், புத்திசாலித்தனம், உழைக்கும் மனநிலை இல்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்டவைகள் எல்லாம் பார்க்கின்றபோது ஒருவேளை  வேண்டுமென்றே கண்ணாடியை உடைக்கச் செய்து அதை அவர்களே சரி செய்யும் அந்த வேண்டாத வேலையைச் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. மொத்தத்தில் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்பதில்தான் ஆழமாகச் சிந்திக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. இல்லையென்றால் மத்திய மாநில அரசுகளின் (மக்களின்) கடன் சுமை எந்த அளவில் இருக்கின்றது என்பதிலிருந்து தெரிகின்றதல்லவா! 

எந்த ஒரு பரிமாற்றமோ, நிகழ்வோ, செயலோ, மாற்றமோ ஆக்கப்பூர்வமாகவும் இயற்கையாக அல்லது செயற்கையாக நடைபெற வேண்டுமென்றால், கொடுப்பவர்கள் மேல் நிலையிலும் (நேர்மை, எளிமை, திறமை, ஆற்றல், புலமை, கடமை உட்பட), பெறுபவர்கள் கீழ் நிலையிலும் இருக்க வேண்டும். அது கல்வியாக, செல்வமாக, வீரமாக, கலையாக, இலக்கியமாக, நடிப்பாக, விளையாட்டாக, அரசியலாக, ஆன்மீகமாக, அறிவாக, தொழில்நுட்பமாக போன்று எதுவாக இருந்தாலும் பொருந்தும். மேல் நிலையிலிருந்து வரும் மழை, நீர்வீழ்ச்சி, அருவிகளிலிருந்து கொட்டுகின்ற தண்ணீர் இயற்கையாக நிகழ்கின்து. அது கீழ் நிலையில் உள்ள நிலம், ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவைகள் வாங்கிக் கொள்கின்றன. எங்கேயாவது தண்ணீர் தானாக மேல் நோக்கிச் செல்லுவதைக் கண்டிருக்கின்றோமா? ஒருவேளை கீழ் நிலையில் இருப்பவர்கள் பிறர்க்கு ஏதாவது கொடுக்க நினைத்தால், முதலில் மேல் நிலைக்கு உண்டானத் தகுதியை, திறமையை, அறிவை வளர்த்துக் கொண்டு, பெறவேண்டியதை உயர் நிலையில் இருப்பவர்களிடம் பெற வேண்டும். பிறகு கொடுப்பதுதான் மிகச் சரியாக இருக்கும். அதுதான் விதியாய் இருக்கும்போது இப்போது நடப்பது என்ன?

விளையாட்டை எடுத்துக் கொள்வோம். இது எதற்காக உருவாக்கப்பட்டது? மன்னர் காலத்தில் எதிரிகளிடமிருந்து மக்களை, நாட்டைக் காக்க வீரர்கள், காவலர்கள் பலர் தேவைப்பட்டனர். அதற்காக காளையை அடக்குதல், மல்யுத்தம், கத்திச் சண்டை, வேல் சண்டை, குதிரை, யானையின் மீது அமர்ந்து சண்டையிடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. திறமை மற்றும் வீரத்தின் அடிப்படையில் அந்தப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களின் மூலம் அவர்களுக்குத் தகுந்த அரச பதவிகள் அளிக்கப்பட்டன. பிற்காலத்தில் அதுவே காலாட் படை, கப்பற் படை, விமானப்படை, பீரங்கிப் படை, காவலர்கள் என்றாக மாறி வீரத்துடன் கல்வியும், அறிவும், திறமையும் சேர்க்கப்பட்டு அதன் மூலம் வீரர்கள், காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்வாறுத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு எந்தெந்த விளையாட்டில் எந்தெந்த வீரர்களுக்கு எவ்வகையானத் திறமைகள் இருக்கின்றனஅதுபற்றி மத்திய மாநில அரசுகள் ஏதாவது ஒன்றோ அல்லது பலவகை ஊடகங்களின் மூலம் அவர்களைப் பற்றிய வீரதீர சாகச விவரங்கள் ஏதாவது தெரியப்படுத்திருக்கின்றனரா? இந்த இந்த பிரிவுகளில் இவர்கள் இப்படியாக பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்கிற வீடியோ இது வரையில் எந்த ஊடகமாவது வெளியிட்டு இருக்கின்றதா? எப்படி இருந்தாலும் அவர்கள்தான் நம் மக்களையும், நாட்டையும் காக்கின்றனர். அதற்காக அவர்களுக்குச் சலுகைகள், விருதுகள், பணப்பரிசுகள் கொடுக்கப்படுகின்றனவாஆண்டிற்கு ஒரு முறை அவர்களின் வீரத்தனம் வீடியோவாக எடுத்து தொலைக்காட்சியில் காட்டியிருக்கிறார்களா? அப்படிக் காட்டினால்தானே இளைஞர்களுக்கும், மக்களுக்கும் அவர்களின் அருமை, பெருமைகள் தெரிவதோடு நாட்டுப்பற்றும், நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையும் வரும்?

அது போகட்டும். சென்ற ஆண்டின் ஆதாவது கிரிக்கெட், டென்னிஸ், பூப்பந்து, சதுரங்கம், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் யார்? யார்? என்பது நமக்குத் தெரியும். அவர்களை கௌரவித்து விருதும், பணமும். வெகுமதியும் கொடுக்கும் அளவிற்கு நாட்டிற்காக என்ன தியாகம் செய்தார்கள்? நாட்டு மக்களுக்காக என்ன உதவி செய்தார்கள்? என்று கேட்கும் கேள்விக்கு யாரிடமாவது பதில் இருக்குமா? ஆனால் அவர்களால் பெரிய நிறுவனங்களுக்கு வியாபாரம் நன்றாகவே நடக்கிறது. அதனால் மக்களுக்கு ஏதாவது நன்மை இருக்கின்றதா? அப்படியென்றால் நாட்டைக் காப்பதை விட, ஒன்றுக்கும் உதவாத பல விளையாட்டுகளில் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டு வாழ்கையை வீணாக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்மறையாக உலகம் சொல்லுகின்றதா என்று நினைக்கத் தோன்றுகின்றது. அதாவது விளையாடுங்கள். விருதுகள் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அரசிடம் வேலை மட்டும் கேட்காதீர்கள். ஏனென்றால் அதற்கு எங்கள் வாரிசுகள். உறவுகள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்று அரசுகள் எழுதாத சட்டமாக வரையறுத்து இருக்கின்றது. மீறியும் நான் விளையாடியேத் தீருவேன் என்று அந்தப் பக்கம் போனால் பலன் பூஜ்ஜியம்தான் பெரும்பாலும் இருக்கும். உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள கல்வியறிவுடன் உடற்பயிற்சி கட்டாயம் தேவை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒன்று மட்டும் உண்மை, ஒரு வீரரோ, காவலரோ இறந்தால் உடனே ஊடகத்தில் அதே போடுகிறார்கள். அது எப்படி?

அதைவிடக் கொடுமை என்னவென்றால் விவசாயம் சரிவு, விவசாயி தற்கொலை என்று வாய்கிழிய பேசும் பல ஊடகங்கள் தினம் ஒரு விவசாயின் பேட்டியாவது ஒளிபரப்புகின்றனரா? அதுபோல் இந்த வருட சிறந்த விவசாயி, இந்த விளைச்சலில் என்று யாராவது கௌரவித்து விருதும், பணமும் தருகிறார்களா? அதுவும் எதைக் காட்டுகின்றதென்றால், இளைஞர்களே! விவசாயத் துறையில் நீங்கள் எந்த சாதனை படைத்தாலும் நாங்கள் யாரும் கண்டு கொள்ளமாட்டோம் என்று பல ஊடகங்கள் சொல்லுகிறார்கள் போலத் தோன்றுகின்றது. எப்போது ஊடகங்கள் கண்டிப்பாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறைந்தது இரண்டு மணிநேரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்வளம், நிலவளம், உரம், பூச்சிக்கொல்லி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியேத் தீரவேண்டும் என்கிற சட்டம் வருகின்றதோ அப்போது இருந்துதான் விவசாயத் துறை வளரும். இல்லையென்றால் உணவுக்கு அயல்நாட்டில் ஐயா, ஐயா என்று கெஞ்ச வேண்டிய சூழ்நிலை விரைவில் வரும் வாய்ப்பு இருக்கின்றது.

அரசியலை எடுத்துக் கொண்டால் சில தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்தில் எவ்வித  தொலைநோக்கும், நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகளின் மூலக்காரணங்களை அறிந்து ஆராயமாலும், கவனத்தில் கொள்ளாமலும், இன்றையத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கருத்தில் ஏற்றுக் கொள்ளத் தெரியாமல் ஆட்சியை  நடத்தும் விதம் அழுவதா? சிரிப்பதா என்று தெரியவில்லை. எதெற்கெடுத்தாலும் சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைப் பற்றிப் பேசாமல் அதற்குத் தீர்வு காணும் செய்திகள் கொடுப்பதற்குப் பதிலாக  அங்கு வெளிநடப்பு இல்லையென்றால் கூச்சல், குழப்பம் செய்திகள் வருவதுதான் அதிகமாகிவிட்டது. அதாவது சரியான அரசியல் தலைவர்களைத் தேர்தெடுக்கத் 'தேர்தல்' வைக்கிறார்கள். அப்போது சரியான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டு பிறகு, எங்கள் பகுதியில் குடிநீர், சாலைப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் செய்துத் தரப்படவில்லை என்று ஒரு முறையல்ல, பலமுறைகள் ஆட்சியாளர்களிடத்தில் புகார் கொடுத்தால் நன்றாகவா இருக்கும். வாய்ப்பு வரும் நேரத்தில் ஒவ்வொரு முறையும் அதனைப் பயன்படுத்தாமல் ஏமாந்தால் யாருக்கு என்ன நஷ்டம்? இதில் எத்தனை முறை அடிபட்டாலும் திரும்பத் திரும்ப மக்களின் குறைகளைத் தீர்க்காதவர்களையேத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு முறையும் ஏமாறும் மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? அவர்களின் வாழ்நாள் முழுதும் கஷ்டம்தவிர வேறு என்ன பரிசு கொடுத்தாலும் சரியாக இருக்காது.

கல்வித்துறையில் நடக்கும் கேலிக்கூத்து அதைவிடக் கொடுமை. இப்போது இருக்கும் கல்வி முறையால் உலகளவில் போட்டி போட முடியாது என்று நன்றாகத் தெரிந்தும் பல ஆண்டுகளாக பின்பற்றியதன் பலன் சிறந்த சில விஞ்ஞானிகளை, தொழில்நுட்ப வல்லுனர்களை, மேதைகளைசிந்தனையாளர்களை உருவாக்க முடியவில்லை. அந்த மாதிரி அறிஞர்களை உருவானால்தானே நாட்டுக்கும், மக்களும் லாபம். அந்த அளவுக்குக் கல்வியின் தரம் இருக்கின்றது? ஒருவேளை ஒரு விஞ்ஞானி சாதனை செய்து விட்டால் அவர்களுக்கு ஒரு விருது மட்டும் கொடுத்து அத்தோடு தங்களது கடமைகளை முடித்துக் கொள்வார்கள். ஆனால் நடிக நடிகைகளுக்கு கொடுக்கும் கௌரவம், மரியாதை, சலுகைகள், பதவிகள் கால் பங்குகூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. அவைகளை எல்லாம் இளைஞர்கள் பார்க்கின்றபோது ஒஹோ, அப்படியானால் எப்படியாவது நடிகனாகிவிட வேண்டும் என்றே நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்றளவில் சிறந்த முன்மாதிரியாகப் பழைய தலைவர்களையோ, கல்வியாளர்களையோ, விஞ்ஞானிகளையோ எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார்களே தவிர நடப்பில் இருப்பவர்கள், தங்களைத் தகுதிபடுத்திக் கொள்ள தவறி, சுயநலவாதிகளாக மாற்றிய பெருமை மக்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். இளைஞர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்போது வந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் சுதந்திரம், விழிப்புணர்வு, காதல் என்கிற பெயரில் வன்முறை, தீவிரவாதம், பொய், பித்தலாட்டம், சட்டத்திற்கும், இயற்கைக்கும் புறம்பான செயல்கள் என்பதே அதிகமாக இருக்கின்றது. ஊடகங்கள் கண்டிப்பும், கண்காணிப்பும் குறைந்துபோனால் பின்னால் அவதிப்பட வேண்டியிருக்கும்.   
                             
இதற்கெல்லாம் தீர்வு இருக்கின்றதா? என்று கேட்டால் 'இருக்கின்றது' என்றுதான் சொல்லுவேன். முதலில் உங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். உடலில் வேர்வை சிந்த உழையுங்கள், உழவுத் தொழிலை இளைஞர்கள் செய்ய அவர்களை உற்சாகப்படுத்துங்கள், அதுதான் உங்களுக்கு எப்போதும் நிம்மதியைக் கொடுக்கும். சோறும் போடும். பிறகு தொலைக்காட்சி அதிகபட்சம் ஒரு மணிநேரம் பாருங்கள். ஏனென்றால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் உங்கள் தகுதிக்கும் கீழ் உள்ளதுதான் இருக்கும். அவர்களைவிட உங்களால் நன்றாகச் சிந்திக்க முடியும். சிறந்த படைப்புகளைப் படைக்க முடியும். மக்கள் நல்வழியில் அழைத்துச் செல்ல முடியும். அதனால் பகட்டைக் கண்டு பயந்து விடாமல், தீவிரவாதம் கண்டு மிரண்டு விடாமல், தோல்வியைக் கண்டுத் துவண்டுவிடாமல், ஏழைகளைக் கண்டு ஒதுங்கிவிடாமல் அனைத்தையும் எதிர்க்கொண்டு இளைஞர்களே! நீங்கள் நினைத்தால், மனது வைத்தால் அரிய பெரிய சாதனைகளைச் செய்ய முடியும். ஆகையால் நீங்கள் பார்க்கும் பலவற்றில் மூழ்கிவிடாமல் உங்களுக்குள் இருக்கும் திறமையையும், ஆற்றலையும், அறிவையும் வீட்டிற்கும், நாட்டுக்கும் கொடுத்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் அரைமணி நேரம் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை அதிக நேரம் படியுங்கள்.

இளைஞர்களே, 120 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் உங்களுக்குத் தெரிந்து எந்த ஒரு விஞ்ஞானியாவது விவசாயத்துறையில் அதிக மகசூல் தரும் காய், கனி விதைகளையும், குறைந்த அளவுத் தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் நெல், கோதுமை, பயிர் மற்றும் எண்ணெய் வித்துகள் வகைகளை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்காக இதுநாள் வரையில் கொடுத்திருக்கிறார்களா? ஆனால் நாமோ நமது பாரம்பரிய விவசாயத்தை அழித்து, இழந்தும் (அடுக்குமனைக்காக, அடுக்குமாடி கட்டிடங்களுக்காக விளைநிலத்தை விற்றதன் வாயிலாக), வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தையும் பின்பற்றாமல் எல்லாவற்றையும் விதைகள் மற்றும் உரங்கள், பூச்சி மருந்துகள் முதலியன வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றோமே அதைப் பற்றி இளைஞர்களே நீங்கள் சிந்தித்து இருக்கின்றீர்களா? மேலும் வறட்சியான மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று நாக்கூசாமல் சொல்லுகின்றனரே அது சரியா இளைஞர்களே! இது எப்படி இருக்கின்றதென்றால் 'நான் தேர்வில் தோற்றுவிட்டேன்' என்று அறிவித்தால் எப்படி இருக்கும்? அது பெருமையாகுமா?

எல்லாவற்றிற்கும் அந்நிய நாட்டையே நம்பியிருந்தால், கையேந்தி நின்றால் நம் நாட்டில் விவசாயிகளைக் காக்கும் விஞ்ஞானிகளே இல்லையா? நாட்டு மக்கள் வாழ்வைச் சிறக்க வைக்கும் பொருளாதார நிபுணர்களே இல்லையா? நீர் வளம் பெருக்கச் செய்யும் தொழில்நுட்ப வல்லுணர்களே இல்லையா? எளிய வழியில் மிகக் குறைந்த விலையில் அனவருக்கும் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு கொடுக்கும் பொறியியல் வல்லுனர்கள் இல்லையா? அவ்வாறு இல்லாது போனால் எவ்வாறு இன்றைய இளைஞர்கள் சமுதாயம் நம் நாட்டை வல்லரசாக விளங்கச் செய்ய முடியும்? அதற்கு எவையெல்லாம் தடையாய் இருக்கின்றதோ அவைகளைத் தகர்த்து நாட்டு மக்களின் நன்மைக்காக இளைஞர்களே சற்றுச் சிந்தியுங்கள். உங்களின் வருங்கால வாழ்க்கையும், உங்கள் தலைமுறைகளும் மகிழ்ச்சியாக இருக்க இப்போதே அதற்கான திட்டங்களை, கண்டுபிடிப்புகளைத் தருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக பல அனுபவசாலிகள், அறிவாளிகள், திறமைசாலிகள் உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். இப்போதும் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் இளைஞர்களே நீங்களும் உங்களின் சந்ததிகளும் பல இன்னல்களுக்கு ஆளாவீர்கள் இது உறுதி.

இளைஞர்களே! நீங்கள் விவசாயத்தில் சாதனை செய்து விஞ்ஞானிகளானால் நாடே செழிக்கும். பொறியியல் துறையில் சாதனை செய்தால் நாடே வளம் பெறும். புதுக் கண்டுபிடிப்புகள் கொடுத்தால் நாடு வல்லரசாகும். இந்த நாட்டின் வளர்ச்சியால் உலகமே மகிழ்ச்சியில் மிதக்கும். அதை விட்டுவிட்டு ஒரு விளையாட்டு வீரனானால், சிறந்த நடிகனானால், பாடகனானால், பேச்சாளரானால் பலன் என்னவோ சுயநலமான உனக்கு மட்டும் தான். அதனைக் கொண்டு நாட்டை செழுமை ஆக்கிட முடியுமா? ஆனால் இந்த நாடு அப்படிப்பட்ட் சுயநலத்திற்குதான் மதிப்பு கொடுக்கின்றது. பெருமை கொடுக்கின்றது. உன்னையும் அவ்வாறு இருக்கத் தூண்டுகின்றது. அந்த புதைகுழியில் விழுந்தால் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாது. இப்போது நீயே முடிவு செய்து கொள். நீ மட்டும் நன்றாக வாழவேண்டும் என்கிற சுயநலத்தை தேர்ந்தெடுக்கப் போகின்றாயா? அல்லது சுயநலத்துடன் பொது நலத்தைத் தேர்ந்தெடுக்கப் போகின்றாயா?

இளைஞர்களே, உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாய் விளங்கும் கல்வியில் கவனம் செலுத்தாமல் கைபேசியிலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலும், வீண் அரட்டை அடிப்பதிலும் காலத்தைப் போக்குவீர்களானால் விரைவில் தாய்நாடுஎன்னும் கௌரவத்தை இழந்து பிறநாட்டிற்குத் தலையாட்டும் பொம்மை நாடாக மாறிவிடும் ஆபத்து இருக்கின்றது. ஆகவே இளைஞர்களே, நாட்டை முன்னேற்றும் வழிகளில் உங்களுடைய கவனமும், செயலும் இருக்க வேண்டும்.

காய், கனியில் உள்ளே இருக்கும் சதைப் பாகத்தை கீழே போட்டு வீணாக்கிவிட்டு அதன் மேலே இருக்கும் தோலை ரசித்து ருசித்துச் சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இருக்கின்றது இப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளும் இருக்கின்றன. எதையுமே ஆழமாக ஆராயாமல் மேலோட்டவாறு படித்துவிட்டு, பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு உணர்வுக்கு அதிக மதிப்பளித்து செயலில் இறங்குவது நிரந்தர வெற்றியைத் தருமா? தங்களுடைய தகுதி என்ன? மற்றவர்களின் தகுதி என்ன? என்று எதுவுமே சிந்திக்காமல் ஒரு முடிவுக்கு வருவது நல்லதா? தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் எவ்வளவு தூரம் மனித மனங்களை ஆக்கிரமிக்கும் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஊடகங்கள் அனைத்து இடங்களில் ஏதாவது ஒரு வடிவில் இருக்கின்றன. உங்கள் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி ஊடகத்தில் எத்தனை சேனல்கள் இருக்கின்றன. அந்தச் சேனல்களில் எத்தனைச் சேனல்கள் உங்கள், உங்கள் குழந்தைகளின் , சந்ததியினர்களின் நல்வாழ்வுக்காக, நல்ல தொழிலுக்காக, உங்கள் ஊரில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளைக் காட்டுகின்றதா? நல்ல வேலைவாய்ப்புக்காக, அரசின் சலுகைக்கு நல்ல வழியைக் காட்டுகின்றதா? ஒவ்வொரு வினாடியும் வியாபார நோக்கிலே இருப்பதால் பெரும்பாலும் வீண் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கின்றதே தவிர ஆக்கப்பூர்வமான அம்சங்களுக்கு துளியும் இல்லாதபோது எவ்வாறு இளைஞர்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுக்க முடியும்? முக்கியமாக விவசாயம் பற்றிய செய்திகள் மருந்திற்கும் இல்லையென்றால் எவ்வாறு இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவார்கள்? மக்களும், நாடும் எவ்வாறு முன்னேறும்? இப்படியே போய்க் கொண்டிருந்தால் வருங்கால இளைஞர்கள் சமுதாயத்தைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இப்போது இருக்கும் பெற்றோர்கள் புலம்புவது தவிர எதுவும் செய்ய முடியாது. இப்போதே பல இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களை மதிப்பதில்லை அவர்களின் சொல் கேட்பதில்லை என்கிற கூற்று இருக்கின்றது. இதற்குக் காரணம் ஊடகங்களே. இளைஞர்களே சுயநினைவு கொண்டு எங்கு அவர்களுக்கு உண்டான முன்னேற்றம் கிடைக்கின்றதோ அதை அவர்களேத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இது நடக்கின்ற காரியமா? இளைஞர்கள் மனத்தில் அயல்நாட்டு விதை மோகம், ஆழமாக வேரூன்றி வளர்ந்து விருட்சமாக வளர்ந்துவிட்டது. இதை அகற்ற சில ஆண்டுகள் நாம் பொருத்துக் கொண்டேத் தீரவேண்டும்.

எப்போது தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் ஏன் செய்தித்தாள்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்ததோ அன்றிலிருந்து மக்கள் சமுதாயத்திற்கும், இளைஞர்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். சென்ஸார் துறை செயல்படுகின்றதா என்று சொல்லும் அளவிற்கு இன்றைய ஊடகங்கள் அதிகச் சுதந்திரமாகச் செயல்படுகின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அரசாங்கமும், சட்டமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. "நீங்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் மக்களுக்குக் கொடுங்கள். அவர்கள் கெட்டாலும் பரவாயில்லை. எப்படியெல்லாம் இளைஞர்களை உழைக்க விடாமல், தங்களது வருங்காலத்தை சிந்தனைச் செய்யவிடாமல் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். குறிப்பாக விவசாயம், தொழில் பற்றிய எண்ணங்களை வளர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக நாங்கள் அதிகக் கடன் தருகிறோம். நீங்கள் செய்யும் தொழிலுக்கு சரியான வரி கட்ட வேண்டாம். கடனுக்கான வட்டியும் கட்ட வேண்டாம். முதலும் கட்ட வேண்டாம். எல்லாம் தள்ளுபடி செய்கிறோம். எல்லாம் மக்களின் வரிப்பணம்தான். அவர்கள் எதையும் தாங்கிக் கொள்வார்கள்" என்று சொல்வது இருக்கின்றது.            

இளைஞர்களே இறுதியாக, எது உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுகின்றதோ, நல்ல குணத்தை வளர்க்கின்றதோ அதைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள். யார் உங்கள் மகிழ்ச்சிக்கு நல்வழி காட்டுகின்றனரோ அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு அதன்படி நடப்பதே நன்மை பயக்கும். எது உங்கள் வாழ்க்கையை, நேரத்தை வீணடிக்கின்றதோ, எது உங்கள் பணத்தை ஆக்கப்பூர்வமாக இல்லாமல் செலவு செய்யத் தூண்டுகின்றதோ அதனை விட்டு விலகுங்கள் அல்லது அதனை மறந்துவிடுங்கள் அல்லது அழித்துவிடுங்கள். பிறகு பாருங்கள் நம் நாடு வல்லரசு ஆகின்றதா? இல்லையா என்று!
*****
                              


Saturday, 21 January 2017

ஒன்றும், சுழியும் (One and Zero)

ஒன்றும், சுழியும் (One and Zero)
சிறு கதை  
மதுரை கங்காதரன்

எங்கிருந்தோ ஒரு வானொலியில் "சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனைத்திந்திய வியாபாரிகள் சங்கம் கடுமையாக கண்டனம் " தெரிவிக்கும் செய்தியை அலறலுடன் தந்து கொண்டிருந்தது.

அதேநேரத்தில் 

'இது நம்ம உணவகத்தில்' வழக்கம்போல் சாப்பிடுவதற்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதை நல்ல முறையில் நடத்தும் திருப்பதி தனது ஹோட்டலுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களை புன்சிரிப்புடன் கண்ணால் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களை செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்கிடையில் அவருடைய கண்கள் வெளியில் யாரையோ தேடிக்கொண்டிருந்தது.

அவர் எண்ணம் உண்மையாக்கும் விதத்தில் அவருடைய நண்பர் கந்தன் அவசரமாக வருவதை ஊகித்த்தவராய் விறுவிறுவென்று வெளியே சென்று சற்று உரத்த குரலில் "முதலாளி ! ஏன் இவ்வளவு வேகமாக போறீங்க? உடம்பை நல்லா பார்த்துக்குங்க. அதிகமா உழைச்சு ஆரோக்கியத்தை கெடுத்துகிறாதீங்க !" என்று உரிமையாக எச்சரித்தார்.

அவர் அந்த வார்த்தைகளை நன்றாகவே காதில் வாங்கிக்கொண்டு அதை ஆமோதிக்கும் விதமாக சற்று தலையை ஆட்டிவிட்டு நேரம் இல்லாத காரணத்தினால் அந்த இடத்தை கடந்து சென்றார்.

அதே நேரத்தில் மின்னல் போல அவருடைய நினைவுகள் சற்று பின்னோக்கி அசைபோட்டது.

எப்போதும் திருப்பதி, கந்தனை 'முதலாளி, முதலாளி' என்றே கூப்பிட்டுப் பழக்கம். கந்தன் தொழிலில் சிறந்த நிர்வாகி. தொழில் உள்ள நெளிவு சுளிவுகளை அக்குவேறு ஆணிவேறாய் திருப்பதிக்கு சொல்லிக்கொடுத்து தன்னைப்போல அவரையும் முதலாளியாக்கிப் பார்த்தவர். அந்த விசுவாசத்தின் பிரதிபலிப்பு தான் இந்த 'முதலாளி' பட்டம்.

'முதலாளி' என்பது கந்தனின் பழைய பட்டம். இப்போது என்னவோ அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்க்கிறார். முதலாளி ஸ்தானத்திலிருந்து தொழிலாளியாக அவர் மாறியது ஒரு கொடுமையான நிகழ்ச்சி.

சூதாடித் தோற்றவர்கள், குடித்துக் கெட்டவர்கள், உறவினால் கெட்டுப் போனவர்கள், ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போன்றவர்களில் இவர் எந்த ரகம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.

சில வருடங்களுக்கு முன் திருப்பதியும், கந்தனும் தனித்தனியாக சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் சிற்றுண்டிச் சாலை வைத்து வியாபாரத்தை வெற்றிகரமாக நல்ல முறையில் நடத்தி வந்தனர். அந்த மகத்தான வெற்றிக்கு பின்னால் அவர்கள் வழங்கி வந்த பழமையான உணவுவகைகளும் அதை சாப்பிட்ட  மக்கள் ஒருவித தெம்பையும்  சுறுசுறுப்பையும் தருவதாக உணர்ந்தது தான் காரணம்.  அதிலும்  முக்கியமாக  கேப்பை, கம்பு, கோதுமை மற்றும் உளுந்து சேர்ந்த உணவுப்பதார்த்தங்கள். மேலும் எளிய மக்களுக்கேற்ற மிக மலிவான விலையில், சுகாதாரணமான முறையில், நல்ல சுவையோடு நாக்கு ருசியோடு எளிமையான வழியில் மக்களுக்கு வழங்கி வந்தார்கள் . அவர்கள் செய்து வந்தது 'வியாபாரம்' இல்லை. ஒரு 'சேவை' என்றே சொல்ல வேண்டும்.ஏனென்றால் லாபம் அதிகமில்லாமல் எதோ கொஞ்சம் கிடைத்தால் போதும் என்று திருப்தியுடன் நிம்மதியுடன் நடத்தி வந்தனர். 

அவர்களின் அணுகுமுறை, நல்லெண்ணம், மலிவுவிலையில் நல்ல தரமான உணவுகளை வழங்கியதால் நாளுக்கு நாள் அவர்களின் புகழ் எந்தவித விளம்பரமில்லாமல்,பந்தா இல்லாமல் கொடிகட்டிப் பரவத் தொடங்கியது. சாப்பிடுவதற்காக மட்டுமின்றி பார்சலுக்காகவும் கூட்டம் கூட்டமாக அந்த இரு கடைகளில் மக்கள் முற்றுகையிட்டு வந்தனர். பலர் அந்த இரு கடைகளில் தான் சாப்பிடவேண்டுமென்று காக்கவும் செய்தனர்.

அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் பலவிதமாக அவர்களுக்கு பலவித யோசனைகளை சொல்லி வந்தனர்.அதற்கெல்லாம் சரியான பதிலை இருவரும் ஒரேமாதிரியாக சொல்லி வந்தார்கள். எப்படியென்றால் , தினமும் இருவரும் கடைகளை மூடிய பிறகு ஒரு பத்து நிமிடமாவது அன்று நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுருக்கமாக பரிமாறிக்கொண்டு விட்டுத் தான் தங்கள் வீட்டிற்கு செல்வது வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

கந்தன் கடைக்கு வரும்  வாடிக்கையாளர் ஒருவர் சொன்ன யோசனை ஒன்று, 
"கடையிலே ஓஹோன்னு வியாபாரம் நடக்குது! ஆனா கடைக்கு வெளிச்சம் போதாது. ரொம்ப மங்கலாத் தெரியுது. பிரகாசமான டிஸ்கோ லைட்டுகளைப் போட்டு ஜெகத்ஜோதியாக எரிய விடுவது தானே?" என்பதற்கு 
"அதெல்லாம் எதுக்குங்க? இப்போ இருக்கிற மின்வெட்டு பிரச்சனையிலே அதிக லைட்டுகளை எரியவிடுறது அவ்வளவு நல்லதல்ல.அதில்லாம கரண்ட் பில் அதிகமாவரும். டீசல் செலவும் கூடும். அதெல்லாம் கட்டுபடியாகாது." என்று கூறிவிடுவார்.

திருப்பதி கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ,
"கடைய பெரிசா கட்டி, ஏ.சி ஆக்கி ஜமாய்ச்சுட வேண்டியது தானே !"

"பண்ணலாம். ஆனா அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட நீங்க  சாப்பிடுற உணவு பொருட்களின் மேல் தான் வச்சாகணும். அதிக விலைக்கு விற்கணும். அதெல்லாம் சரிபட்டு வராது. நம்மிடம் வருகிற 'கஷ்டமர்கள்' எல்லோரும் ஏழை எளியவங்க, நடுத்தரமானவர்கள் . அன்றாடம் சாப்பிடுற பொருட்களை அவர்களாலே அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் சாப்பிடுற கொஞ்சத்திலேயும் மண்ணு விழுந்திடும். அவர்கள் படும் அந்த கஷ்டத்தை என்னாலே பார்க்க முடியாது!" என்கிற ஆணித்தரமாக வந்த பதிலால் மேற்கொண்டு அவர்களை பேசவிடாமல் செய்து விடும்.

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' 'கிடைத்தவரையில் லாபம்' என்று பொதுவான வியாபார நோக்குள்ள மனிதனின் செயல்பாட்டுக்கு மாறாக அவர்களின் பதில் இருந்தது.       

எல்லாமே சரியாக, பிரச்சனையிலாமல் கதை நகர்ந்தால் சுவாரஷ்யம் வருமா? ஒருவரை ஹீரோவாக்க வேண்டுமென்றால் வில்லன்னு ஒருத்தர் இருக்கனுமில்லே.அந்த வில்லன் ஒருநாள் இரவு நேரத்தில் காரிலிருந்து வந்திறங்கினார்.

"டிரைவர், ராத்திரி வேளையாயிடுச்சு. இந்த ஏரியாவிலே டேஸ்டா சாப்பிடுறதுக்கு நல்ல கடை எதாச்சும் இருக்கா. கொஞ்சம் டிபரண்டா இருந்தா ரொம்ப நல்லது.ரொம்ப நாளாகவே நாக்கின் சுவை தெரியாமலே இருந்த ராஜாங்கம் தன் ஆதங்கத்தையும் சேர்த்து வெளிப்படுத்தினார். அவர் ஒரு கோடீஸ்வரர். பணத்தை எதில் போட்டு லாபம் எப்படி அதிகம் அள்ளலாம் என்பது அவருக்கு அத்துப்படி. அதேபோல் ஒருவரை பேச்சு ஜாலத்தில் மயக்கி தன் காரியத்தை எப்படி சாதிக்கலாம் என்பதும் அவருக்கு கை வந்த கலை. தேன் தடவிய பேச்சு, மென்மையான வார்த்தைகள், சிரித்த முகம், அக்கறையான விசாரிப்பு இவைகள் அனைத்தும் பக்கா நடிப்பாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் நம்பும்படியாக செய்யும் சாதூர்யம் அவரிடத்தில் பிறவியிலிருந்தே இருந்து வந்தது  எனலாம். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு வியாபாரத் தந்திரமிக்க நரி. இல்லையென்றால் ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர், இன்று எப்படி அவரால் கார், பங்களான்னு அதிக சௌரியங்களுடன் வாழமுடிகின்றது! 

"சார் .." என்று தலையைச் சொரிந்தார் டிரைவர்.
"என்னப்பா தலையை சொரியிரே. சும்மா சொல்லு. நல்ல கடை இருக்கா?"
"இருக்கு சார். ஆனா அந்த இடத்திலே நீங்க எப்படி உட்கார்ந்து சாப்பிடுவீங்கன்னு யோசிக்கிறேன்?"
"சாப்பிட இடமா முக்கியம்? செத்த நாக்குக்கு ருசி கிடைச்சா போதாது? எந்த இடமானாலும் பரவாயில்லை. நான் வரத்தயார்!" என்றார் ராஜாங்கம்.

டிரைவர் நேராக 'இது நம்ம உணவகத்திற்கு' வண்டியை விட்டார். கார் நிறுத்துவதற்கு அசௌகரியமாக இருந்தாலும் மிகுந்த சிரமத்துடன் ஒருவழியாக நிறுத்திவிட்டு அந்த கடைக்கு இருவரும் நுழைந்தார்கள். ஏற்கனவே டிரைவர் சொன்ன அத்தனை கண்டிசனுக்கும் கட்டுப்பட்டவராய் அவருடைய கௌரவத்திற்கு குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக அந்த கடையை பலமுறை சுற்றும்முற்றும் பார்த்தவாறு உள்ளே நுழைந்தார்.மக்கள் சாப்பிடுவதற்கு இடம் பிடிப்பதை பார்க்கும்போது அங்கு 'மியுசிக்கல் சேர்' விளையாட்டு நடைபெறுவதுபோல் ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டது. அங்கு நடப்பது எல்லாமே அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது.அவர்களின் நல்ல நேரம்!  தாமதமில்லாமல் இருவருக்கும் நல்ல இடத்தில் உட்கார இடம் கிடைத்தது.


எல்லாமே டிரைவர் தான் ஆர்டர் கொடுத்தார்.


"சார், இந்த அயிட்டம் நல்லா இருக்கும். அந்த அயிட்டம் அந்தமாதிரி ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்"என்று டிரைவர் பேச்சால் சொல்லுவதை ராஜாங்கம் தன் நாவின் சுவையால் உண்மையை உணர்ந்தார். டிரைவர் சொல்லியது  கொஞ்சமே  தான் என்பது அப்போது அவர் உணர்ந்தார்.

"பில் எவ்வளவு?" என்று கேட்டபோது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
"என்ன இவ்வளவு தானா? எப்போதும் நான் ஸ்டார் ஹோட்டல்களுக்குத்தான் போய் பழக்கம். அங்கு ருசியும் இருக்காது.மண்ணுமிருக்காது. ஆனா பில் மட்டும் ஆயிரக்கணக்கில்..ஆனா இங்கே இருக்கே.. ருசி..ஆஹா .. தேவாமிர்தம்ன்னு நான் கேள்விபட்டிருக்கேன்.ஆனா இப்போது தான் அதை ருசிச்சிருக்கிறேன்" என்று டிரைவரை புகழ்ந்து தள்ளினார். அவரே தொடர்ந்து

"நானும் எவ்வளவோ பெரிய பெரிய ஊர்லே பல இடத்திலே சாப்பிட்டுயிருக்கேன்.ஆனா இவ்வளவு விலை குறைச்சலிலே நல்ல ருசியோடு நான் சாப்பிட்டதேயில்லை. இந்த இடத்தை காட்டியதற்கு ரொம்ப நன்றி.இன்னொன்று முக்கியமா நான் இங்கே வர்ற மூணு மாசத்துக்குள்ளே  ஒரு நல்ல வியாபாம் தொடங்குற விசயமா தங்குறதா 'ப்ளான்' போட்டிருக்கிறேன் . என்ன வியாபாரம்ன்னு இன்னும் முடிவு பண்ணலே. ஆனா அதிக லாபம் தரக்கூடிய வியாபாரமா இருக்கனும்னு குறியாக இருக்கிறேன்.அது வரை மூன்று வேலைக்கும் இந்த கடையிலே தான் எனக்கு சாப்பாடு அரேன்ஞ் பண்ணிடு" என்று சொல்லி முடிப்பதற்குள்


"சார், இந்த ஒரு கடை மட்டும் இல்லே சார். இன்னும் கொஞ்ச தூரத்திலே இதேபோல இன்னொரு கடையும் இருக்கு. இங்கே எப்படி என்ன என்ன இருக்கோ அப்படியே அங்கேயும் இருக்கு" என்று சொன்னதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்.


"உண்மையாகவா? அப்படீன்னா இந்த கடைக்கு போட்டிக்கடைன்னு சொல்லு"


"அது தான் சார் இல்லை. இரண்டு பேரும் திக் பிரண்ட்ஸ். அவர்களிடையே போட்டி பொறாமை இது நாள் வரைக்கும் இருந்ததில்லை. ஒருவருக்கொருவர் உதவி செய்துக்குவாங்க. சில சமயத்திலே தங்களுக்கு வர்ற கஸ்டமர்களை கூட்டத்திற்குத் தகுந்தாற்ப்போல் மாறி மாறி திருப்பிடுவாங்க. பெரிய ஆர்டர் வந்தா இருவரும் சேர்ந்து தான் செய்து தருவாங்க" என டிரைவர் பேச பேச அவர் மனதில் வேறொரு யோசனையும் தோன்றியது.


நேரத்திற்குத் தகுந்தாற்ப்போல் இருகடைகளில் மாறி மாறி சாப்பிட்டு வந்தார். வித்தியாசமே தெரியாத அதே ருசி.நாட்கள் நெருங்க நெருங்க பலவிதமான வியாபாரத் திட்டங்களை பலமாக யோசித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.


அன்றும் வழக்கம் போல் டிரைவருடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ராஜாங்கம்.


" சார். எவ்வளவு நாளைக்குத் தான் இப்படி இந்த மாதிரியிடத்த்திலே சாப்பிட்டுயிருப்பீங்க. உங்களுக்கு இருக்கிற பணத்திற்கும், வசதிக்கும் ஏன் இதேபோல் ஒரு கடையை வைக்கக் கூடாது? இப்போது நடக்கிற வியாபாரத்திலே 'பாஸ்ட் புட்' பிசினெஸ் தான் ரொம்ப லாபம் தரக்கூடியது.மக்களுக்கும் அத்தியாவசியமானது" என்று சொன்ன வார்த்தைகளில் கிளம்பிய தீப்பொறியானது அவர் மனதில் பெரிய திட்டமாக எரியத் தொடங்கியது.


மறுநாள் அவருக்கே உண்டான வியாபாரத் தந்திரத்தை செயல்படுத்த ஆரம்பித்தார் ராஜாங்கம். முதலில் திருப்பதி கடையினை குறி வைத்தார்.


" சார், நான் இந்த ஏரியாவிலே பதினைந்து வருமா கடை நடத்துறேன். ரொம்ப லாபம் இல்லாமே ஏழை எளியவங்களுக்கு ஒரு சேவையாக நினைச்சு கடமையை செய்யுறேன். உங்களோட கண்டிசனை ஏத்துக்க என்னாலே முடியவே முடியாது" என்று கறாரா சொல்லி முடித்தார்.


"நல்லா யோசனை பண்ணிச் சொல்லுங்க. நீங்க தினமும் தயார் பண்ணுகிற அத்தனையும் இருபது சதம் அதிகம் கொடுத்து தவறாம வாங்கிக்குறேன். அதை புதுசா தொடங்கும் என்னோட கடையிலே வச்சு வித்துக்கிறேன். ஒரு மணி நேரத்திலே உங்களுக்குண்டான பணம் கொடுத்துடுறேன். தினமும் மாங்கு மாங்குன்னு , லோ லோன்னு லோல் பட்டு கஷ்டப்படவேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். என்ன சொல்றீங்க?" என்று திருப்பதியை எப்படியும் தன் வலைக்குள் வீழ்த்த போராடினார். முடிவில்


" சாரி சார். என்னை மன்னிக்கணும். நீங்க எத்தனை முறை கேட்டாலும் எவ்வளவு பணம் கொட்டிக்கொடுத்தாலும் இந்த வியாபாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்தார்.


'தான் நினைத்தது சாதிக்க முடியவில்லையே' என்று வருத்தப்பட்டார். அனேகமாக அவருக்கு இது தான் முதல் தோல்வியாக இருக்கும். இருப்பினும் திடீரென்று வேறொரு முயற்சி செய்து வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டார்.


அடுத்த குறி கந்தன் கடைக்கு வைத்தார்.


ராஜாங்கத்தின் 'ஆசை'என்கிற ராட்சச அலையில் அவர் அகப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.


"என்னமோங்க. திருப்பதி என்னோட பால்ய நண்பன். அவன் ஒரு முடிவு எடுத்தார்னா அது சரியாகத் தான் இருக்கும். ஆனா எனக்கும் வயசாயிடுச்சி. தினமும் ஒரேமாதிரியாக உழைக்க முடியல்லே.ஆனா இதனாலே என் நண்பன் கடைக்கு பாதிப்பு வந்திடக்கூடாதுன்னு தான் என்னோட எண்ணம்" என்று தன் இயலாமையும் அபிப்பிராயத்தையும் எடுத்துரைத்தார்.


"கந்தன். நீங்க எதற்கும் பயபடாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். வர்ற ஒன்றாம் தேதியிலேயிருந்து உணவுகளை தயாரித்துக் கொடுத்திடுங்க.இருபது சதம் அதிகமா பணம் வாங்கிக்குங்க. இந்தாங்க ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ்" அவர் கையில் திணித்து வெற்றிப் புன்னைகையோடு அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை மும்முரமாக சிந்திக்கத் தொடங்கினார்.


வழக்கம் போல் அன்றைய இரவு நேரத்தில் இருவரும் சந்தித்தனர்.


"என்ன முதலாளி. அந்த பணக்கார ராஜாங்கம் சொன்ன கண்டிசனுக்கு ஒத்துக்கிட்டீங்க போலிருக்கே! எனக்கென்னமோ அவரோட பேச்சும் நடையும் சரியாத்தெரியல்லே. ஏதோ பெரிசா ஒரு சதி திட்டம் போட்டு உன்னை பாதாளக் கிணத்திலே தள்ளி அழிக்கப் பார்க்கிறார்ன்னு தோணுது" என்றார் திருப்பதி.


"ஏன் அப்படி நினைக்குறே. இது ஒரு நல்ல வாய்ப்பா ஏன் நினைக்கக் கூடாது!  நீயும் பேசாம நான் செஞ்சபடி செஞ்சுடு. ஒரு நாள்லே ஓடா உழைச்சி சம்பாதிக்கிறதை ஒரே மணிநேரத்திலே கிடைச்சுருதில்லே.மத்த நேரத்திலே வேற வியாபாரம் பண்ணலாம்"என்று சொல்லி முடிப்பதற்குள்


"முதலாளி, அது மட்டும் என்னாலே முடியாது. என் மனசு இப்போ சரியில்லை! .நான் போயிட்டு வர்றேன்"என்று என்றைக்குமில்லாமல் பாதியிலே பேச்சை நிறுத்திவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.


ஒன்றாம் தேதி வந்தது. வழக்கமாக வரும் கந்தன் கடை வாடிக்கையாளர்களிடம்

"இன்று முதல் இங்கு எதுவும் கிடைக்காது. புதுசா தொடங்கிய அந்த கடைக்கு என்னோட அத்தனை உணவுப்பொருட்களையும் கொடுக்க முடிவு செய்துட்டேன்.உங்களுக்கு வேணும்கிறதை அங்கு வாங்கிங்க" என்று திருப்பிவிட்டார்.

புதிய கடை ! பகட்டான தோற்றம். பிரகாசமான விளக்குகள். ஏ.சி வசிதிகள் இன்னும் பல சௌரியங்களுடன் இருந்தது.மக்களும் மிகவும் சந்தோசமாக அனுபவித்தனர். முதலில் மலிவான விலையில் கொடுத்தவர் ,போகப்போக விலையினை உயர்த்தினார்.தினமும் சாப்பிடும் மக்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. சிறிது நாட்களிலே அனைத்தும் மூன்று மடங்கு விலையில் விற்பனையாகியது.இதை எல்லோரும் கந்தனிடத்தில் ஒரு குறையாகவே முறையிட்டனர். அதாவது


"முதலாளி. நீங்க கடை நடத்தியபோது விலை குறைவா இருந்தது. ஆரம்பத்திலே குறைச்ச விலை இருந்தது  இப்போது மூணு மடங்கு விலை கொடுத்து சாப்பிடுற நிலைமை வந்திருச்சி.திருப்பதி கடையிலே கூட்டமோ கூட்டம்.அவரு பாவம் முடிஞ்ச வரைக்கும் கொடுக்கிறாரு. மேலும் சீக்கிரமே தீர்ந்திடுது. அடுத்து நாங்க இந்த கடையிலே தான் அதிக பணம் கொடுத்து சாப்பிடவேண்டியிருக்கு"என்று பலர் கூறியதை ராஜாங்கத்திடம் கேட்டே விட்டார்.


" சார், இது உங்களுக்கே சரியா இருக்கா? நான் விலை குறைவா உங்களுக்கு கொடுக்கும் பொருட்களை மூன்று மடங்கு விலைக்கு விக்கீறீங்க. அது ரொம்ப அநியாயம்" என்று பொறுமினார்.


" இங்கே பாரு கந்தா, இது என்னோட கடை. பல லட்சம் முதல் போட்டு செலவு செஞ்சு  கட்டிய கடை. அதையெல்லாம் எப்படி எடுக்கிறது? இவ்வளவு லாபம் வச்சு வித்தாத் தான் ஒரு வருசத்திலே போட்டதை எடுக்கமுடியும்.பின்னே எப்படி கோடி கோடியா சம்பாதிக்கிறது? உன்னைப்போல வியாபாரம் பண்ணினா ஆயுசுக்கும் கஷ்டம் தான். நீ உன் வேலையைப் பார். எனக்கு எது எது எப்போ எப்போ செய்யனும்ன்னு தெரியும்.இந்த வியாபாரத் தந்திரம் உனக்குத் தெரியாது" என்று அவருடைய கோரிக்கையை முற்றிலும் நிகாரித்துவிட்டார்.


வேறு வழியில்லை என்று வாயை மூடிக்கொண்டு தொடர்ந்து சப்ளை செய்து வந்தார்.


வழக்கம் போல இரவு சந்திப்பிற்கு காத்திருந்தார் முதலாளி என்ற கந்தன். அவருக்குத் தான் ஒரு மணிநேரத்தில் பணம் கிடைத்துவிடுகிறதே! மீதி நேரம் பொழுது போக்கும் நேரம் தானே? இருவரின் சந்திப்பு நேரம் வந்தது.


"என்ன முதலாளி ! எப்படியிருக்கீங்க?"

"நல்லா இருக்கேன். கை மேலே பணம். குறைஞ்ச உழைப்பு. கவலையில்லாம இருக்கிறேன். இப்போதாவது உன்னுடைய முடிவு மாத்திக்கிறதா உத்தேசம் இருக்கின்றதா?
"முதலாளி அது பத்தி பேச வேண்டாம். மற்ற விசயத்தைப் பேசுவோம்" என்று பொதுவாக பேசிவிட்டுப் பிரிந்தனர்.

விலை அதிகமாக இருந்தாலும், பகட்டான தோற்றத்திற்காகவும், ருசிக்காகவும் நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அலை மோதியது. ஆகையால் கந்தனின் தினமும் சப்ளை செய்யும் அளவு அவருக்குப் போதவில்லை.கந்தனிடம் எப்படியும் தினச் சப்ளை அளவு இருமடங்கு வாங்கவேண்டும் என்கிற திட்டம் போட்டார். மீண்டும் சதிவலையை விரித்தார். இப்போது அவர் 'சேம் சைடு கோல்' போட்டார்.


ஒரு நாள் ராஜாங்கம் அவசரம் அவசரமாக கந்தனிடம் சென்று "கந்தா,நாளை முதல் ஒருவாரத்திற்கு எந்த சரக்கும் எனக்கு வேண்டாம். நான் சொல்லும்போது கொடுத்தல் போதும்" என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.


"சார், என்ன சொல்றீங்க. ஒரு வாரத்திற்கா? என்னோட செலவுக்கு இந்த வியாபாரத்தை நம்பித் தான் இருந்தேன். இப்போ திடீரென்று இப்படி சொன்னால் எப்படி? செலவுக்கு நான் எங்கே போவேன்? இந்த ஒரு வாரத்திற்கு நான் எப்படி இந்த வியாபாரம் பார்ப்பேன்? நான் வித்தாலும் யாரும் வாங்க மாட்டாங்களே ! ஆமா சார் நான் தெரியாமத் தான் கேட்கிறேன்.  எதற்கு இந்த அதிரடி மாற்றம்?" ஒரு குழந்தைத்தனமாக கேட்டார்.


"அது ஒண்ணுமில்லே. நீ சப்ளை செய்யும் அளவு உடனே தீர்ந்துவிடுகின்றது. எனக்கு இப்போது சப்ளை அளவு போல இரு மடங்கு வேண்டும்.காற்றுள்ள போதே வியாபாரத்தை கூட்டி அதிக லாபம் சம்பாதிக்கனுமில்லே.ஒவ்வொருநாளும் எனக்கு லாபம் வர்றது விட்டுப்போகுது ! "


"இதோ பாருங்க இப்போது இருக்கும் அளவுக்குத்தான் என்னிடம் வசதி இருக்கின்றது.அதிக அளவு சப்ளைக்கு நான் எங்கே போவேன்?"


" எங்கேயும் போகவேண்டாம். என்னோட இடத்துக்கு வாங்க. எல்லா வசதியும் செஞ்சுத் தர்றேன். நீங்க ரெண்டு மணி நேரம் மட்டும் மேற்ப்பார்வை பார்த்தாப் போதும். மீதி நேரம் உங்க விருப்பப்படி நடந்துக்குங்க. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சிக்கிருங்க. நான் இப்போது எவ்வளவு பணம் கொடுக்கிறேனோ அது தான் கிடைக்கும்.அதிகம் கேட்டால் 'உன்னோட சப்ளையே வேண்டாம். எப்படி வசதி?"


"சார், அது மட்டும் சொல்லிடாதீங்க. எனக்கு இந்த தொழில் தவிர வேறு ஏதும் தெரியாது. உங்க இஷ்டப்படியே அங்கு வந்து வேலை செய்யுறேன்"என்று வேறு வழி தெரியாமல் ஒத்துக்கொண்டார். இந்த வேளையில் தான் தன் நண்பன் திருப்பதி இந்த விஷயத்தில் எடுத்த முடிவு கட்டாயமாக நினைவுக்கு வந்திருக்கும்.


அன்று முதல் கந்தன் ஒரு தொழிலாளி போல் தினமும் சரியான நேரத்தில் அவசரம் அவசரமாக திருப்பதியின் கடை வழியாக செல்வது வழக்கம்.திருப்பதியும் அவர் படும் கஷ்டத்தை மனதில் கொண்டு தன்னுடைய கடைக்கு வருமாறு அழைத்தும் கந்தன் வரவில்லை.அது மிகவும் கௌரவக் குறைச்சலாகவும், தங்களுடைய நட்புக்கு களங்கம் வந்துவிடுமோ என்றும் பயப்பட்டார்.


இவ்வளவும் திருப்பதியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.சற்று பெருமூச்சுடன் அவரது கடையை கவனிக்கச் சென்றுவிட்டார்.


முதலாளிகளின் ஆசை எந்த காலத்தில் அளவோடு இருந்தது ? இன்னும் அதிகம் .. இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கவேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு வேலைக்காரர்களை  சக்கையைப் பிழிவது தானே இயற்கை. அதற்கு இந்த ராஜாங்கம் விதிவிலக்கல்லவே. ஒரு மணி நேர உழைப்பு ,இரண்டு மணி நேரமானது.இரண்டு..மூன்று..என்று கடைசியில் பன்னிரண்டு மணிநேரம் அதே சம்பளத்தில் வேலைகளை வாங்கத் தொடங்கினார்.


இதனால் தினமும் இருவரின் சந்திப்பு குறைந்து வந்தது. பிறகு அவ்வப்போது நடந்தது.


நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொண்டனர்.


"முதலாளி, இப்படி துரும்பாட்டம் இளைச்சிப் போயிட்டீங்களே. முகம் கலையில்லாமல் வாடி வதங்கி போயிருக்குதே"


"அட போப்பா. நீ ஒண்ணு. என்னை இனிமே முதலாளின்னு கூப்பிடாதே. ராஜா கோலத்துடன் இருந்த இந்த கந்தன் இப்போது ஆண்டிக்கோலத்துக்கு வந்து விட்டேன். நான் இப்போ ஒரு கூலித் தொழிலாளி. இன்னும் சரியா சொல்லப் போனால் அந்த பணக்காரனுக்கு அடிமைத் தொழிலாளி. நான் இப்போ மனதளவிலும், உடலளவிலும் படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. என் போல கஷ்டம் யாரும் படக்கூடாது.என் வாழ்க்கை, சின்ன வியாபாரம் பண்ணும் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும். அப்போ நீ எவ்வளவோ தடுத்தும் நான் கேட்கவே இல்லை.பின் விளைவுகளை யோசிக்காம நான் முடிவு எடுத்தது ரொம்ப தப்புன்னு இப்போ உணர்றேன். அந்த புதுப்பணக்காரனின் வாய்ஜாலத்தில் மயங்கி இப்போ வாழ்கையில் பிடிப்பில்லாம நடைபிணமா அலையுறேன். நான் செஞ்ச காரியம் எவ்வளவு மடத்தனமானது. நல்லவேளை அந்த பாதாளக்குழிக்குள்ளே உன்னையும் தள்ளப் பாத்தேனே! நீ விழிச்சுசுதாரிச்சுட்டே.'திருப்பதி'  பெயருக்குத் தகுந்தாற்போல் எப்போதும் செழிப்பாக இருக்கணும்.  என்னை போல நீயும்  அந்த சுழியிலே மாட்டியிருந்தா.. நினைச்சுப்பார்கவே பயம்மா இருக்கு. வெளுத்ததெல்லாம் பால்னு நினைச்சு நாட்டு நடப்பு தெரியாம என்னோட சுதந்திரத்தையும், உரிமையும் இழந்து அவரின் கைப்பொம்மையாய் மாறிவிட்டேன்.ஒரு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ருசியான உணவுகளை கொடுத்துக் கொண்டிருந்தவன் இப்போ.. என் பொருளுக்கு இந்த பணக்காரன் சொல்வது தான் விலை. மக்களும் வேறு வழியில்லாமல் வாங்கியேத் தீர வேண்டுமென்கிற தலையெழுத்தாகிவிட்டது.லோக்கல் முதலாளிகங்களோட ஆதிக்கமே சமாளிக்க முடியல்லேயே,இன்னும் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கிற இந்த அரசாங்கத்தின் முடிவினாலே என்னைப்போல எத்தனைப் பேரோட வாழ்க்கை சீரழியப்போகுதோ.அது நினைச்சா தான் என் கண்ணு கலங்குது.அவங்களோட குழந்தை குட்டிகள் என்ன பாடுபடப்போகுதோ?இதனாலே எத்தனை பேர் பாதிக்கப்படப் போறாங்களோ?ன்னு தெரியல்லே.இவங்க மாதிரி பணக்காரங்களோட ஆசை அடங்கப்போறதில்லை அதனாலே விலைவாசி ஏறுவது நிற்கப் போறதில்லை. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இதுபோல செயல்களை அரசாங்கம் ஊக்குவிச்சா மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகத் தான் போகும். அதற்கு என்னோட வாழ்கை ஒரு உதாரணம். இதனாலே பலர் தற்கொலைக்கும் ஆளாக நேரிடும்.


ஒரு முதலாளி என்னை எப்படி அடிமையாக்கினான்?நான் எப்படி அவங்களோட ஆசை வலையிலே மாட்டிக்கிட்டேன்னு எல்லோருக்கும் ஒரு பாடமா இருக்கட்டும்.இப்படி ஏமாறுவது நான் தான் கடையாக இருக்கவேண்டும். மக்களோட நல்ல வாழ்க்கைக்காக தயவுசெய்து நீயும் தப்பித்தவறி இந்த சகதியிலே சிக்கிடாதே.முடிந்தால் பிரச்சாரம் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்து. அதுக்கு நான் ஒன்றும் கவலைப்பட மாட்டேன். அவமானமாகவும் நினைக்க மாட்டேன். இந்த பாடம் இத்தகைய காலகட்டத்துக்கு கட்டாயம் வேண்டும்.அப்போதாவது எல்லோருக்கும் விழிப்புணர்வு பிறக்கட்டும்.இதுவே அரசாங்கத்திற்கும் மக்கள் சமுதாயத்திற்கும் நான் கொடுக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்' என்று தன் மனதில் புதைந்து கிடந்த , புளுகிக்கிடந்த வார்த்தைகளை காட்டருவியாய்க் கொட்டினார்.


இவற்றையெல்லாம் திருப்பதி அமைதியாக கேட்க அவனின் இருதயத்தில் ஒருவகை சுமை ஏறுவதை உணர்ந்தார். இந்த சுமையை இறக்கவேண்டுமென்றால் நாளை முதல் "சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நாட்டிற்கும், மக்களுக்கும்" நல்லதல்ல என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்.


இன்னும் கந்தனின் குமுறல் அடங்கவில்லை போலும். கடைசியாக " ஒரு முதலாளியோ, ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ தாமாகவே முன்வந்து பல சலுகைகளோ அல்லது பண உதவியோ கொடுக்கிறார்களென்றால் நிச்சயமாய் அது மக்களின் வாழ்க்கையிலே மண்ணு விழப்போகிறதுன்னு அர்த்தம். அதை நல்லாவே புரிஞ்சுகிட்டேன். புலி போல சுதந்திரமா உலா வந்துகிட்டே இருந்தேன். நானே வழியப்போய் புலிக்கூண்டிலே அகப்பட்டுக்கொண்டேன். இப்போ சர்கஸ் புலிபோல அந்த பணக்கார ராஜாங்கம் ஆட்டிப்படைக்கிறான். இந்த கதி யாருக்கும் வரக்கூடாது" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு நாளைய விடிவுக்கு விடை தேட விடை பெற்று சென்றார்.


வழக்கம் போல் கந்தனை  " முத ..... " முதலாளி என்று கூப்பிட எண்ணினார் திருப்பதி . ஆனால் கூப்பிடலாமோ வேண்டாமோ என்று ஒருவித முழிப்புடன் பேச்சில்லாமல் நகர்ந்து சென்றார்.


****************************************************************************** *******************

   

Wednesday, 18 January 2017

அழுத்தமானப் பதிவு - சிறுகதை

அழுத்தமானப் பதிவு
சிறுகதை
மதுரை கங்காதரன்

'நேற்றும் இன்றும் குணத்தில் மாறாத, நாளையும் மாறாமல் உறுதியாய் இருக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவனும், இன்றைய தொழிலதிபருமான திரு கோ. செல்லையா அவர்களே வருக! வருக!!' என்கிற ஆழமான வாசகம் அடங்கிய அழைப்பும், விழா பற்றிய நிகழ்ச்சி நிரலும் பள்ளி நுழைவுவாயிலில் அடக்கமாகக் கட்டப்பட்டு இருந்தது.

விழா அமைப்பாளர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவமணிகள் அந்தக் கௌரவ விருந்தினருக்காக, ஆவலின் பெருக்கத்தோடு வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

"இந்நேரம் தொழிலதிபர் வந்திருக்கனுமே. அவர் ஒருபோதும் நேரம் தவறாதவர்" என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நம்பிக்கையுடன் பேசிய பேச்சைக் கேட்ட விழா அமைப்புத் தலைவர்," ஐயா, இது வரை எந்த ஒரு புதிய வாகனமும் உள்ளே வரவில்லை. ஒருவேளை இன்று அவருக்கு அவரசர வேலை வந்துவிட்டதோ என்னவோ? அப்படி இருந்தாலும் அவர் நமக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருப்பாரே! ஆகையால்..." என்கிற அவர் பேச்சை முழுவதும் முடிக்கவிடாமல்,
"விழா வரவேற்பாளர்கள் அனைவரும் மிதிவண்டிகள் நிறுத்தும் இடத்திற்குச் செல்லுங்கள்" என்று அவர்களை தலைமை ஆசிரியர் அவசரப்படுத்தினார்.

கூட்டத்தோடு கூட்டமாக வந்த ஒருவர் தனது மிதிண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு வந்தார். அதற்கான அடையாள வில்லை கொடுக்கும் அதன் காப்பாளர், அந்த மிதிவண்டியைப் பார்த்தபோது 'இந்த மிதிவண்டி எனக்குப் பழக்கமான வண்டியாயாற்றே. அடிக்கடி இதனைப் பார்திருக்கிறேன். ஆனால் சில வருடத்திற்கு முன்னால் பார்த்தது. சமீபத்தில் பார்க்கவில்லை' என்று யோசித்துக் கொண்டே வில்லையை அவர் கையில் ஏறெடுத்துப் பார்த்துக் கொடுக்கும்போது,
"ஐயா, நீங்க... நீங்க... செல்லையா ...தொழிலதிபர்..." என்ற காப்பாளரின் கண்கள்  ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது.

அதற்குள் விழாவுக்கு வந்த கூட்டம் மிதிவண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு பொதபொதவென்று வந்ததோடு சில வினாடியில் அந்த இடத்தையே ஆக்கிரமித்துக் கொண்டது. சற்று நேரத்தில் அந்த இடம் தற்காலிகமாக விழா நடத்தும் இடமாக மாறியிருந்தது.

அங்கு வந்த மாணவ மாணவியர்கள் தொழிலதிபர் திரு செல்லையா அவர்கள் தனது மிதிவண்டியை அங்கு நிறுத்திவிட்டு வருவதைக் கண்கொள்ளாக் காட்சியாக கண்டு ரசித்தனர். அனைவரின் முகத்திலும் அந்தப் பதிவு இதயத்தில் நுழைந்து ஆழமாகத் தைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அனைவரின் உடலில் குதூகலமும், முகத்தில் பிரகாசமும், புத்துணர்வும், நம்பிக்கையும் ஒருங்கே சேர்ந்திருந்தது நன்றாகத் தெரிந்தது. அவர் அந்த இடத்திலிருந்து விழா மேடையை நோக்கி நடக்க நடக்க, அவர் பின்னே கூட்டம் நடந்து சென்றது. எத்தனை மணி நேரம் விழாவில் பேசினாலும் இந்த ஒரு செயலுக்கு ஈடு இணை வரவே வராது என்று கூட்டம் பேசிற்று.
                                   
சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர், "இந்த நாள் இப்பள்ளியில் படிக்கின்ற மாணவமணிகளுக்கு ஒரு நன்னாள். பல தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரராகிய திரு செல்லையா அவர்கள் மிதிவண்டியில் வந்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். எனக்கு இந்த யோசனை வரவில்லை. அதோடு பொறாமையாகவும் இருக்கின்றது. எனது வீடு நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கின்றது. நானும் அப்படி வந்திருக்கலாம். அத்தகைய சிறந்த முத்தை உருவாக்கித் தந்த அத்தனை ஆசிரியப் பெருமக்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன். இங்கு நான் நான்கு சக்கர வாகனத்தில் வந்தது  அவமானமாகக் கருதுகிறேன். கல்வி அமைச்சராகிய நான் மாணவமணிகளுக்கு முன்மாதிரியாக இல்லாமல், அவர்களின் பேராசையைத் தூண்டும்படி நடந்து கொண்டேன். இனிமேல் நானும் சிறிய தூரம் எங்காவது செல்வதாக இருந்தால் கட்டாயம் மிதிவண்டியில்தான் செல்வேன். எனக்கு இந்த ஞானம் கொடுத்த தொழிலதிபர் திரு செல்லையா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி" என்று கூறி அமர்ந்த கல்வி அமைச்சருக்கு கரவொலி கொடுத்து அக்கூட்டம் கௌரவித்தது.

அதற்கடுத்து தொழிலதிபர் திரு செல்லையா அவர்கள் பேச எழுந்தபோது அக்கூட்டமே எழுந்து நின்று விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அது அடங்க சில வினாடிகள் பிடித்தது. " மாணவமணிகளே! இன்று நான் மிதிவண்டியில் வந்ததைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நானும் உங்களைப் போல பள்ளிக்கு நடையாகவும், மிதிவண்டியிலும் வந்தவன். பள்ளிக் கல்லூரி முடித்த பிறகு எனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி, நன்றாக உழைத்து இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். ஏன் உங்களாலும் என்னைப் போன்று, ஏன் அதற்கு மேலும் வாழ்கையில் உயரலாம். என்னுடைய முன்மாதிரி திரு அப்துல் கலாம் அவர்கள். அவர்களின் இந்திய வல்லரசுக் கனவை நனவாக்க, நம் நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு நம்நாட்டு இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும். அதிகமாக இறக்குமதியைச் செய்யும் கச்சா எண்ணெய்யை குறைக்க வேண்டுமென்றால் கூடிய மட்டும் நமது வாகனத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். முதன்முதலாக நாம் விண்ணில் செலுத்திய விண்கலம் மாட்டு வண்டியிலும், மிதிவண்டியிலும் பயணித்தது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். ஆகவே மாணவமணிகளே, நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடித்து, அறிவைப் பெருக்கி விவசாயம், மருத்துவம், மின்சாரம், கணினிக் கல்வி, தொழில், சேவை ஆகியவற்றில்  மக்களுக்குத் தேவையானத் தொழில்நுட்பத்தைத் தந்து இந்தியாவை வல்லரசாக மாற்ற அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். வாழ்க இந்தியா, வாழ்க இந்திய மக்கள்" என்று அழுத்தமான பதிவாக உரையாற்றி அமர்ந்தபோது அனைவருக்கும் புதுத்தெம்பு வந்ததுபோல் உணர்ந்தனர். அதை உறுதி செய்யும் வண்ணம் அக்கூட்டம் மீண்டும் கரவொலி கொடுத்தது.

88888888888888888888
                


Monday, 16 January 2017

STRENGTH OF THE FORGOTTEN - மறக்கும் வலிமை

      மறக்கும் வலிமை
STRENGTH OF THE FORGOTTEN
        புதுக்கவிதை
     மதுரை கங்காதரன்

கல்லை மறக்கச் செய்கிறது
சிலை
கனிகளை மறக்கச் செய்கிறது
சுவை

மனிதனை மறக்கச் செய்கிறது
தெய்வம்
மனவலியை மறக்கச் செய்கிறது
ஆறுதல்

அன்பை மறக்கச் செய்கிறது
பிரிவு
அறிவை மறக்கச் செய்கிறது
மயக்கம்

பாவத்தை மறக்கச் செய்கிறது
பலிகள்
பாசத்தை மறக்கச் செய்கிறது
பணம்

உறவை மறக்கச் செய்கிறது
நட்பு
உண்மையை மறக்கச் செய்கிறது
பொய்

கண்களை மறக்கச் செய்கிறது
காதல்
காதலை மறக்கச் செய்கிறது
கல்யாணம்

வாழ்க்கையை மறக்கச் செய்கிறது
இறப்பு
வாய்ப்புகளை மறக்கச் செய்கிறது
சோம்பல்

தோற்றத்தை மறக்கச் செய்கிறது
பதவி
தோல்வியை மறக்கச் செய்கிறது
வெற்றி.
                       ***





Wednesday, 11 January 2017

QUALIFICATION TO GO TO HEAVEN - சொர்க்கத்திற்கான தகுதிகள்

சொர்க்கத்திற்கான தகுதிகள்
விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 

உடலை வைத்துக் கொண்டுதான் உயிர் வாழ முடியும். ஆரோக்கியமான உடலே சொர்க்க்த்திற்குச் செல்லும் தகுதி கொண்டது. அதுவே நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும். உடலிலிருந்து பிரியும் உயிரே (ஆன்மா)சொர்க்கதிற்குச் செல்கிறது. அதிலும் உடல் வலியில்லாமல் பிரியும் உயிரே உண்மையான சொர்க்கத்திற்குச் செல்லும் தகுதி கொண்டது.  இவ்வுலகில் பிறக்கின்ற உயிர்கள் அனைத்தும் வாழவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றது. அப்படிப் பிறகின்றபோது பலருக்குக் கூடவே துன்பத்தையும் ஒட்டிக் கொண்டுதான் பிறக்கின்றன. பொதுவாக குழந்தைகள் பிறக்கின்றபோது ஆரோக்கியமாகவேப் பிறக்கின்றன. அதற்குக் காரணம், குழந்தைக் கருவாக இருக்கும்போது தாயின் உயிரானது, அக்குழந்தையைக் காப்பதற்கு அதிக அக்கறையை எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் குறைவாகவே அக்குழந்தை வெளிவந்த பிறகு தாயானவள் காட்டுகின்றாள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம்.

அப்படி வளர்கின்ற உடலானது தன்னைச் சுற்றிலும் இருக்கும் 'மாயை' என்று சொல்லப்படுகின்ற கவர்ச்சி, அழகு, அன்பு, மயக்கம், இரக்கம், கோபம், பொறாமை, ஆசை போன்றவற்றால் அளவுக்கு அதிகமாக ஈர்க்கப்படும்போது உடலின் ஆரோக்கியத்தைத் தடுமாறச் செய்துவிடுகின்றது. வாழ்க்கையின் விதி என்னவென்றால் 'எதிலும் அளவோடு ஆசை இருந்தால் ஆயுள் முழுதும் அனுபவிக்கலாம்'. அந்த நிலையில்தான் உயிரும் உடலும் சமநிலையில் இயங்கும். ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ மனமானது அதிக ஆசைபடும்போது மற்ற குணங்களின் நிலை தாழ்ந்து விடுகின்றன. அந்தவேளையில்தான் மனதில் குழப்பங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. மனம் குழப்பத்தில் இருக்கும்போது உடலின் உள் வெளி உறுப்புகள் சரியானபடி செயல்படுவதில்லை. அதனால் உடல் தோற்றத்தாலும், ஆரோக்கியத்தாலும் நலிவு அடைய ஆரம்பிக்கின்றது. அதுவே பல நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகவும் அமைந்துவிடுக்கின்றது.

இதயநோய், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி போன்ற உபாதைகள் பெரும்பாலோருக்கு ஆரம்பத்தில் இல்லாமலும் போகப்போக அவைகள் ஏற்பட்டதாகவும் இருக்கும். அதற்கான காரணங்கள் உங்களுக்கே நன்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். அனைத்திற்கும் காரணம், நாம் உட்கொள்ளும் உணவினால் வந்ததே. புதிய புதிய பெயரில், புதிய புதிய வடிவில், புதிய புதிய இடத்திலிருந்து வரும் உணவுப்பண்டங்களை நாகரீகம், கலாச்சாரம் என்கிற பெயரில் நம் உடல் ஒத்துக் கொள்ளுமா? ஒத்துக் கொள்ளாதா? என்பதைக் கூட எண்ணாமல் வாய்க்கு உள்ளே அனுப்பி, நாக்கு ஆல் சுவைத்து உடலின் ஆரோக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழியக் காரணமாய் இருந்தது யார் என்று இப்போது தெரிகின்றதா? உடலுக்கு என்ன வந்தாலும் இருக்கவே இருக்கிறார் மருத்துவர். கடையில் நூறு ரூபாய் சாப்பிட்டதால் மருத்துவருக்கு ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்த நீங்கள் தயாராக இருக்கும்போது அதை யாராவது தடுக்க முடியுமா? எல்லாவற்றையும் அனுபவிக்கத்தான் வேண்டும். புதிதாக உண்ட உணவு நல்லதோ அல்லது தீயதோ அதன் தாக்கம் சிலருக்கு உடனடியாகத் தெரியும். பலருக்கு நாட்கள் கடந்து தெரியும்

எப்படி இருந்தாலும் அதிலிருந்து எவ்வளவு விரைவாக விடுபடுகிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். அவ்வாறு முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதைத் தாங்கக் கூடிய அளவிற்குப் பார்த்துக் கொண்டாலேப் போதுமானது. ஏனெனில் நோய்நொடியில்லாத அல்லது நோய் குறைவாக இருக்கின்ற உடலே எளிதாகச் சொர்க்கத்தை அடைதற்குத் தகுதி அடைகின்றன.

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது பசிக்கும்போதோ அல்லது வேளாவேளைக்கு எடுத்துக் கொள்ளும் எளியவகை உணவுகள், இயற்கைக் காய்கனிகள், சுத்தமான தண்ணீர், சிறிதளவு உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகியவைகள் மட்டுமே. வசதியுள்ளவர்கள் அதிகச் சத்துள்ள விலை அதிகமுள்ள உணவுப்பொருள்களை உட்கொள்கிறார்கள். எவைகளை உட்கொண்டாலும் உடல் ஆரோக்கியம் பெறுவது ஒன்றாகத்தான் இருக்கும். இதில் அடங்கியிருக்கும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால், இவைகளை நல்லவனோ, கெட்டவனோ, தீமை செய்பவனோ, நன்மை செய்பவனோ, சோம்பேறியோ, சுறுசுறுப்பானவனோ போன்றவர்கள் யாராக இருந்தாலும் அந்த உடல் ஆரோக்கியம் ஒரே மாதிரியாகத்தான் கிடைக்கும். அதில் துளியளவும் வேறுபாடு இருக்காது. ஏனெனில் உடல் அமைப்பானது உட்கொள்கின்ற உணவைப் பொறுத்துதான் வேலைசெய்கின்றதே தவிர உட்கொள்கின்ற ஆள் பொறுத்தல்ல.

ஏமாற்றுக்காரர்கள், பொய்யர்கள், நல்லவர்கள் போல் பாசாங்கு செய்பவர்கள், கொலை கொள்ளைக்காரர்கள், பிறரைத் துன்புறுத்துபவர்கள் போன்ற பசுந்தோல் போர்த்திய ஆட்கள் சிரித்துக் கொண்டே வலம் வருவதற்குக் காரணம் அவர்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவே. அதனால்தான், மேற்கொண்டு மேற்கொண்டு தொடந்து பலரை ஏமாற்ற முடிகின்றது. ஆரோக்கியமான உடலைக் கண்டால் அந்த எமன் கூட கண்கானாத இடத்திற்குச் சென்றுவிடுவான். அந்நிலையில் எமனால் ஒன்றும் செய்ய இயலாது. 

ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைக் கொண்டு அவரின் ஆயுளை கணக்கிடலாம்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




                


Monday, 9 January 2017

POWER OF THE THOUGHTS - சிகரத்தைத் தொடும் சிந்தனைகள்

     சிகரத்தைத் தொடும் சிந்தனைகள்
              POWER OF THE THOUGHTS
               புதுக்கவிதை
           மதுரை கங்காதரன்

அரசியலின் சிந்தனை
தலைவராகிறான்
அறிவியலின் சிந்தனை
விஞ்ஞானியாகிறான்

கல்வியின் சிந்தனை
அறிஞராகிறான்
கலையின் சிந்தனை  
கலைஞராகிறான்

நடிப்பின் சிந்தனை  
நடிகராகிறான்
நல்லவனின் சிந்தனை
வல்லவனாகிறான்

எழுத்தின் சிந்தனை
எழுத்தாளராகிறான்
எண்ணங்களின் சிந்தனை
தத்துவமேதையாகிறான்

தொழிலின் சிந்தனை
தொழிலதிபராகிறான்
தொண்டின் சிந்தனை
சமூகசேவகராகிறான்

சேயின் சிந்தனை
தாயாகிறாள்
சேமிப்பின் சிந்தனை
பணக்காரனாகிறான்

பக்தியின் சிந்தனை
பக்தனாகிறான்
படிப்பின் சிந்தனை
அறிவாளியாகிறான்

ஆன்மீகத்தின் சிந்தனை
மகானாகிறான்
ஆத்மாவின் சிந்தனை
மகாத்மா ஆகிறான்

எதில் சிந்தனையோ
அதுவாக ஆகலாம்
ஏற்றம் தரும் சிந்தனையால்
அகிலத்தை ஆளலாம்.

                                        ******