Pages

Friday, 19 October 2018

18.10.18 கவியரங்கம் - தமிழும் மலேசியத்தமிழரும்' - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்



          18.10.18 கவியரங்கம் - தமிழும் மலேசியத்தமிழரும்' 
                          மதுரை காமராசர் பல்கலைக்கழகம்  

நேற்று  (வியாழக்கிழமை) 18.10.18 அன்று காலை 10.30 மணி அளவில் 
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள சேதுபதி அரங்கத்தில் 
'தமிழும் மலேசியத்தமிழரும்' என்ற தலைப்பில் கவியரங்கம் தொடங்கி 
மதியம் 2.30 மணி அளவில் முடிந்தது. 

தலைமை: கவிதைக் கலைமாமணி திரு வீரபாண்டியத் தென்னவன் 
(தலைவர், மாமதுரைக் கவிஞர் பேரவை)
(குறிப்பு: இது இவரது 5040வது கவியரங்கம்)

மேலும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்களும், அண்டை மாநிலத்தவரும் 
கலந்து கொண்டனர்.  

கவிதை  எழுதி அனுப்பிய அனைத்து கவிஞர்களும் தவறாது கலந்து 
கொண்டு கவிதையினை தந்து சிறப்பித்தனர்.  

அனைவருக்கும் மதிய உணவு, தேநீர் வழங்கப்பட்டது.

         தமிழும் மலேசியத்தமிழரும்
       அன்று நான் வாசித்தக் கவிதை 
                 புதுக்கவிதை
            மதுரை கங்காதரன் 

மலேசிய நாட்டை மலைக்க வைக்கும் தமிழர்கள்
மங்காதப் புகழுக்கு நீங்காது பதித்த முத்திரைகள்
ஓயாத உழைப்பால் தேய்ந்து மாய்ந்த தமிழர்கள்
இறந்த பின்னும் மறக்க முடியாத வரலாறுகள்.

வலியோடு வழிதேடிய தமிழர்கள்
விழிபோல் மொழிகாத்தத் தமிழர்கள்
வளம் பெருக்கப் புலம் பெயர்ந்தத் தமிழர்கள்
வளர் கனவுகளை நனவாக்கச் சென்றவர்கள்.

காடுகளை அழிக்க மாடுகளாய் உழைத்து 
மேடுகளை சமனாக்க ஓடுகளாய் தேய்ந்து 
தோட்ட வேலையில் பாட்டாளிகளாய் ஆகி   
உறவுகளை மறந்து துறவியாய் வாழ்ந்தார்கள். 

விடுதலைக்குப் பல விடியல்களைத் தொலைத்து 
நித்திரை இல்லாது சித்திரவதைக்கு ஆளாகி 
உயிர் பிழைக்க உடல் உழைப்பு கொடுத்து  
எறும்புகளாய் செத்து மடிந்தார் தமிழர்கள்.

தமிழ் காக்க இலக்கியங்கள் படைத்து  
தமிழ் வாழ கல்விக்கூடங்கள் அமைத்து 
தொப்புள்கொடி உறவுவை மறவாது மதித்து 
தியாகிகளாய் மாறிய எண்ணற்றத் தமிழர்கள்.  

தாய்மண் பிரிந்தும் தமிழை மறவாதவர்களாய்  
வேற்றுமையில் ஒற்றுமையாய்  வாழ்பவர்களாய் 
அருந்தமிழை ஆட்சிமொழியாக ஆக்கியவர்களாய்
வியப்பில் ஆழ்த்தும் விந்தையான மலேசியத்தமிழர்கள்.



                                  &&&&&&&&&&&&&&&&&&&&&

       நல்லாசிரியர்    கவிஞர்    பேராசிரியர்.மு.க.பரமசிவம்
               (அன்று வாசித்தக் கவிதை) 
             1-1-921  கருப்பணசாமி  கோவில்தெரு
       பேரையூர்  நகர் பேரையூர்  அஞ்சல்,
       பேரையூர்  வட்டம்மதுரை  மாவட்டம்
       தமிழ்நாடு  -  625703 
       அலைப்பேசி  எண்  :  9786519558

        தமிழும் மலேசியத் தமிழரும்

உலகமக்கள் போற்றிடவே உயர்வான தமிழ்மொழியை
நிலமெங்கும் பரப்புகிற நிறைவான தமிழ்த்தொன்டை
நலமாகச் செய்கின்ற நடையினிலே உயர்கின்ற
மலர்களாக இருப்பவர்கள் மலேசியாவின் தமிழினமே.

நாட்டுமொழி இரண்டுடனே நமதுமொழி தமிழினையும்
ஆட்சிமொழி ஆக்கிவைத்த அறிவினிலே சிறந்தவராய்
கூட்டாக இணைந்திருந்து கொடியேற்றி உள்ளாரே
மாட்சிமிக்க எழுச்சியாளர் மலேசியாவின் தமிழினமே.

கடல்தாண்டிச் சென்றாலும் கடினமாக உழைத்தாலும்
இடம்மாறி இருந்தாலும் இனியதமிழ் மறவாமல்
படிக்கின்ற மழழைக்கும் பள்ளிதனில் ஊட்டுகின்றார்
முடியாது என்றுரைக்கார் மலேசியாவின் தமிழினமே.

கல்லூரி வரையினிலே கல்விதனில் தமிழைவைத்து
எல்லோரும் தமிழ்வழியில் இனிதாகப் படிக்கின்றார்
நல்லபடி பிறமொழியின் நினைந்தங்கே கற்கின்றார்
பல்லாண்டு வாழ்கவாழ்க மலேசியாவின் தமிழினமே.

மெய்யான தமிழனென்றால் மானமுள்ள தமிழனென்றால்
வெய்யோனாய் உயர்ந்துநிற்கும் வாழ்தமிழைக் காத்துநிற்கும்
ஒய்யாரத்தமிழ் காக்க உள்நாட்டில் புறப்படுநீ
மெய்யான மலேசியா மக்களைப்போல் எழுகஇன்றே!
                                                       **************


         கவிஞர் மு.க.ப.சீவராசா.
         கணிதம்பேராசிரியர் 3286.து.சாணார்பட்டி.
         ம.கல்லுப்பட்டி அஞ்சல் பேரையூர் வட்டம்
         மதுரை மாவட்டம்தமிழ்நாடு 625535 
         அலைப்பேசி எண்: 9600567273
  
   தமிழும் மலேசியத்தமிழரும்
  
அரும்தமிழாம் நம்தாயை அரியணையில் ஏற்றுகிறார்
பெருவாரித் தமிழினமாய் பிறப்பினிலே பொருந்திருப்பார்
உருவாகிச் சிறந்திருப்பார் உருப்படியாய் உயர்ந்திருப்பார்
மருவற்ற தனித்தமிழாய் மதிக்கிறவர் மலேசியத்தமிழர்களே.

பிறநாட்டார் போற்றுகிறார் பழகுதமிழ்க் காப்பியங்கள்
சிறப்பாலே சிறந்திருக்கும் செம்மொழியாய் நிறைந்திருக்கும் 
உறவாகும் தமிழ்மொழியாய் உயர்வாகும் தமிழ்த்தாயாய்
மறபாகவும் மதிக்கிறவர் மலேசியத் தமிழன்குணமே.

கடல்தாண்டிக் கடந்தாலும் கடினமாய் உழைத்தாலும்
கடமைதனை மறவாமல் நடனமாய்க்கல்வியில் புகுத்துகிறார் 
இடம்மாறி இருந்தாலும் இனியதமிழாய் ஏற்கின்றார்
மடம்மாறாத மாண்புடையோர் மலேசியத் தமிழினமே.

செழுமைதரும் செம்மொழியாய் செந்தமிழாம் நம்மொழியை 
பழுதடைய விடாமலே பாங்காய்ப் போற்றுகிறார்;
எழுதுகின்ற எழுத்துக்களில் இருந்தமொழி கிரந்தெழுத்தை 
முழுமையாய் மடக்குகிறவர் மலேசியத் தமிழினமே.

எல்லோரும் தமிழ்மொழியாய் ஏற்புடையதாய் படிக்கின்றார்
கல்லூரிக் கல்விதனில்; கனிவாகத் தமிழைக்காத்தே
நல்லபடி பிறமொழியை நினைத்தங்கே கற்கின்றார்
பல்லாண்டும் ஏற்றமுறப்போற்றுகிறவர் மலேசியத் தமிழினமே.
                                %%%%%%%%%%%%%%%


           மின்படங்கள்
  








  

   







































  















  

 









   
  
  


  

  





 
  
  

  

  

 



 
  


  

  

 
  

  








  





                                                                              நன்றி 



Friday, 12 October 2018

MONEY HELPS BUSINESS? - வியாபாரத்திற்கு பணம் உதவுமா? - கட்டுரை



வியாபாரத்திற்கு பணம் உதவுமா?
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

வியாபாரம் ஆரம்பிப்பது எளிதுதான். அதுவும் பணம் இருந்தால் எளிதோ எளிது. ஆனால் பணம் மட்டும் வியாபாரத்தை தொடர்ந்து வெற்றியுடன் நடத்த உதவாது. வியாபாரம் ஆரம்பிக்கும்போது உங்களைச் சுற்றிலும் போட்டியாளர்கள் / எதிராளிகள் எத்தனை பேர்? இருக்கிறார்கள் என்பதை அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அவர்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? என்பதை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களில் சிறப்பாக வியாபாரம் செய்பவரை உற்று நோக்குங்கள், நன்கு கவனியுங்கள். அவர்கள் எவ்வாறு நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு வெற்றியைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்? என்கிற கலையினை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைத்தால் அவர்களித்தில் ஓராண்டு வேலை செய்து அனுபவம் பெற்று அவர்களைவிட சிறப்பாக செயல்படும் திட்டமும் வழியையும் கண்டுபிடித்த பின்னரே வியாபாரத்தை ஆரம்பித்தால் வெற்றி உறுதி. சிலர் எவ்வித அனுபவமில்லாமல் அல்லது குறைந்த அனுபவத்தோடு வியாபாரம் தொடங்கி சீக்கிரமே தோல்வியடைகின்றனர். சிலர் நாலு பேர் செய்கிறார்கள், நாமும் செய்வோம் என்று இறங்கினால் தோல்வியே தழுவநேரிடும்.

சிலர் அரசியல் செல்வாக்குடன், விளம்பரத்திற்காகவும்,  பொழுதுபோக்கிற்காக, புகழ் கௌரவத்திற்காக அல்லது கட்டாயத்திற்காகவும் வியாபாரம் ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் பின்னணி செழிப்பாக இருப்பதால் லாபநஷ்டத்தைப் பற்றி கவலைபடமாட்டார்கள். சொல்லப் போனால் அவர்கள் வியாபாரத்தின் 'வில்லன்கள்' எனலாம்.

வியாபாரத்தில் எப்போதும் நூறு சதம் வெற்றி பெற வேண்டுமென்றால் சாமர்த்தியம், புத்திசாலி, அறிவு, ஆற்றல், மன உறுதி, நம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி, திறமை, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் குணம் வேண்டும். வியாபாரம் செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஆர்வத்தில் மனப்பயிற்சி மற்றும் போதுமான கல்வி அறிவும், அனுபவமும் இல்லாமல் அவசரப்பட்டு தொழிலில் இறங்கிவிடுவதால் அவர்களின் வெற்றி கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தகுந்த தொழிலை தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். அப்படி தேர்ந்தெடுத்த தொழிலில் நீண்டகாலம் புதுமைகளை புகுத்த முடியுமா? என்பதை ஊகித்து கொள்ளுதல் அவசியம்.

பரம்பரை தொழிலிலை தொடர்வது புத்திசாலித்தனம். ஏனோ பலருக்கு அதில் ஆர்வம் இருப்பதில்லை. அதற்கு காரணம் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை'யே. தெரியாத, புதிதாக ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து புதிய முதல் போட்டு அதில் கால் ஊன்றுதல் மிகச்சிரமமான காரியமே. அப்படி இறங்கும்போது ஒன்றுக்கு நான்கு தடவை யோசித்து முடிவு எடுத்தல் நலம். நடக்கும் / இருக்கும் தொழிலை சற்று நவீனமயமாக்கினாக்கினாலே போதுமானது.  பிறரைச் சார்ந்து தொழில் செய்வது தவிர்ப்பது நன்மை தரும்.

வியாபாரம் செய்கின்ற போது அனைவரிடத்தில் சுமூகமாக பழகும் பாங்கு மிகவும் அவசியம். பொறுமை, ஏமாற்று, கோபக்காரர்களுக்கு வியாபாரம் சரிபடாது. மேலும் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்தல் வெற்றிக்கு வழிவகுக்கும். சிறிய ஒன்றை விட்டுக்கொடுத்து பெரிதாக லாபம் பார்க்கும் ஒருவகையான திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

வியாபாரத்தில் உழைப்பு மிகவும் அவசியம். பலர் தங்களது சோம்பேறித்தனத்தால் காலுக்கடியில் இருக்கும் தங்கப் புதையலை எடுக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் எவ்வித குறிக்கோளும் திட்டமுமில்லாமல் சும்மா எதையோ செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பேச்சில், செயலில், குணத்தில், நேர்மையில் தனித்தன்மை பெற்றிருந்தால் அதுவே வியாபாரத்தில் வெற்றி தரும். வியாபாரம் இன்றி இருக்கும்போதும், வாடகை, குடும்பச் செலவு, பணநெருக்கடி, வரி, வட்டி மற்றும் கடன்பாக்கி இருக்கும்போதும் சில அபூர்வ குணாதியங்கள் வெளிப்படும். அது வியாபாரத்தை உயர்த்தலாம் அல்லது தாழ்த்தலாம். அந்தமாதிரியான சமயத்தில் பணியாளர்களை கடிந்து கொண்டால் அல்லது தன்னம்பிக்கை இழந்தால் வியாபாரம் 'அம்போ' தான். அப்போதும் புன்சிரிப்பு செய்யும், எதையும் தாங்கும் துணிவு வேண்டும். அந்த சமயத்தில் மனதில் எப்போதும் உற்சாகம் தரும் எண்ணங்கள் வேண்டும்.

குறிப்பாக அம்மாதிரியான சூழ்நிலையில் உடல் நலன், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் பேணுதல் அவசியம். ஒன்றை எப்போதும் மனதில் கொள்ளுதல் நல்லது. அதாவது நீங்கள் இப்போது இருக்கும் நிலை 'நிரந்தரமானது' அல்ல. அந்த நேரத்தில் குறுக்கு வழியில் வியாபாரம் செய்யவும் துணிவு வரும். கெட்ட பழக்கம் , கெட்ட சகவாசம் வரும். அப்போது மனக்கட்டுப்பாடு தேவைபடும்.

வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களின் இரகசியம் என்னவென்றால் தாங்கள் எதிர்காலத்தில் செழிப்பாக இருக்கவேண்டுமென்பதற்காக, பல சௌகரியங்களை துறந்திருப்பதை நாம் அறியலாம்சிலர் சூதாட்டம், பரிசு சீட்டு, பங்கு வரத்தகம், ஊகவணிகம், அதிக வட்டி போன்றவற்றிற்கு ஆசைபட்டு உள்ளதை இழக்கும் அவலம் தொடர்ந்து நடக்கின்றன. அதில் நுழைவது நரகத்தில் நுழைவதற்குச் சமம்.
  
வரவுக்கு மீறிய செலவு துன்பத்தை கொடுக்கும். வருமானத்திற்கு மீறிய கடன் குடும்பத்தை அழிக்கும். கடன் வாங்குபவனிடத்தில்  கூடவே தொல்லைகளும் இலவசமாக ஒட்டிக்கொள்கிறது. சக்திக்கு மீறிய பாரம் தூக்கினால் உடல் கெடும். அளவுக்கு மீறிய ஆசை ஆளை அழிக்கும்வியாபாரத்தின் சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதில் உள்ளது. மற்றவர்களின் மூளைத்திறன்களை ஆளும் திறமை வேண்டும். தங்களைச் சற்றி இருப்பவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். பிறரின் நம்பிக்கை பெறுதல், தவறாத வாக்குறுதி ஆகியவைகள் சிறந்த குணங்களே.

வியாபாரப் போட்டியை பொறாமையாக இல்லாமல் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுதல் அவசியம். அது மன உளைச்சல்லை தவிர்க்கும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து காக்கும். எப்போதும் இனிமையாக பேசவேண்டும். சமீப காலமாக பலர் ஏற்றுமதி தொழில் செய்யவேண்டும் என்கிற ஆசையுடன் நுழைந்து அதில் கையைச் சுட்டுக் கொண்டவர்கள் ஏராளம். உள்ளூரில் விலை போகாதவர்கள் பெரும்பாலும் வேறிடத்தில் விலைபோவது கடினமே.

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் கிடைத்தால் சுமூகமாக நடத்தலாம் என்பதை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி வியாபாரம் செய்திட வேண்டும். லாப வியாபாரம் நல்லது. லாபத்தில் நஷ்டம் பரவாயில்லை. ஆனால் நஷ்ட வியாபாரம் கூடவே கூடாது. அனுபவம் மற்றும் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

பெரிய அளவில் வியாபாரம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்றெண்ணி தங்கள் சக்திக்கு மீறிய கடனை வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பித்து விரைவிலே எல்லாவற்றையும் இழக்கின்றனர். காரணம் சரியான மனிதவளம் கிடைக்காமை, திறனற்ற நிர்வாகம், மாறுபடும் வரியும், வட்டியும், வியாபாரப் போட்டி, நிலையற்ற விலைகளும் செலவுகளும் போன்றவைஆகையால் கையில் இருக்கும் மூலதனத்தில் சிறிய அளவில் வியாபாரம் தொடங்கி படிப்படியாக முன்னேறலாம்.
********************************


Wednesday, 3 October 2018

இன்றைய பள்ளிக்கல்லூரிகளில் புராஜட்களின் (Project) நிலை



இன்றைய பள்ளிக்கல்லூரிகளில் புராஜட்களின் (Project) நிலை
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

திறமை வளர்பதற்காகவும் புதிய சிந்தனை வளர்க்கவும் புதியன படைக்கவும் இன்றைய பள்ளிக்கல்லூரிகளில் 'புராஜட்' என்கிற ஒரு வேலையை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக பொறியியல் கல்லூரியில் நான்காண்டு படிப்பில் மூன்றாம் ஆண்டு 'சிறிய புராஜட்'ம், (Mini Project) நான்காம் ஆண்டில் 'பெரிய புராஜட்'ம் (Main Project) செய்ய வேண்டும். அத்தகைய புராஜட் பேராசிரியர் (Professors) வழிகாட்டியுடன் ஒரு குழு (Group) என்று தனியாக (individual) புதியன (New innovation) ஏதாவது செய்யலாம் அல்லது அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்திற்குச் சென்று அவர்களின் வழிகாட்டுதலுடன் (Guide)  அவர்களுக்குத் தேவையான ஒன்று செய்து தரலாம். எனினும் குழுவோ, தனிமாணவனோ படைத்தது 'புதியதுதான்' (It is new) என்று அவர்களின் அங்கீகாரம் (Recognitionஇருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படும் புராஜட்கள் உண்மையில் வீட்டிற்கும், கல்லூரிக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் பலன் (useful) தருகின்றதா

அவ்வாறு இருந்திருந்தால் நாடு எப்போதோ முன்னேற்றமடைந்திருக்கும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அதாவது மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் தரும்போது எவ்வாறு பெற்றோர்களோ அல்லது மற்றவர்களோ செய்துதருகிறார்களோ அவ்வாறு தான் புராஜட் விஷயத்தில் பெரும்பாலும் நடக்கிறது. எதற்காக புராஜட் செய்கிறோம்? என்று தெரியாமலும், எப்படி செய்ய வேண்டும்? என்று அறிவு இல்லாமலும் எப்படி வேலை செய்கிறது? என்று தெரிந்து கொள்ள ஆர்வமில்லாலும் இருக்கிறார்கள். அதற்கு காரணம், புராஜட் ஐ சம்பந்தபட்ட மாணவர்கள் செய்யாமல் யாரோ செய்து தருகிறார்கள் அல்லது ஆயுத்தமாக (ready made) வைத்திருப்பதை தான் செய்தேன் என்றும் காட்டுகிறார்கள். பலர் கடனுக்காக ஏதோ ஒன்று செய்து காட்டுகிறார்கள். இதில் கூத்து என்னவென்றால் யார் என்ன, எப்படி செய்தாலும் மதிப்பெண் சரமாரியாக பேராசிரியர்கள் போட்டுவிடுகிறார்கள். அப்படிப்போடும் போது உண்மையில் ஆர்வத்துடன் செய்த மாணவர்களுக்கு மதிப்பெண் சற்று குறைவாக போடுவதுதான் மிகக் கொடுமையான விஷயம். பேராசிரியர்கள மற்றும் ஆசிரியர்களில் கையில் மதிப்பெண்கள் இருக்கும்போது எவ்வாறு சிரத்தையுடன் புராஜட் விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள்.

அதிலும் பொறியியல் கல்லூரியில் புராஜட் வழிகாட்டும் பேராசிரியர்கள் சுத்தம்! அவர்களின் செயல்களை சிரிப்பைதான் வரவழைக்கிறது. சில பேராசியர்கள் உண்மையில் அவர்கள் நடத்தும் பாடத்தை ஒழுங்காக புரியும்படியும் முழுமையாகவும் பொறுமையாகவும் நடத்த திறமை இல்லாதபோது புராஜட் விஷயத்தில் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக செயல் இருக்கும். சில பேராசிரியர்கள் பாடங்களை சரியாக நடத்தாமல் பொழுதுபோக்காக வந்துபோவது எந்தவகையில் நியாயமோ? மேலும் சில கல்லூரிகளில் சம்பந்த பாடங்களுக்கு பேராசிரியர்களே இல்லாமல் இருப்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். அப்படி இருக்கும்போது புதிய புராஜட்களை எவ்வாறு அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

அதாவது மாணவர்கள் சிலர் பலமாதங்களாக சிரமப்பட்டு புதிய ஒன்றை கண்டுபிடித்து பேராசிரியர்களிடம் சொல்லும்போது அதை சரியாக காதில் வாங்காமல் உதாசீனப்படுத்தியோ மதிக்காமலோ கேவலப்படுத்தியோ அவமானப்படுத்தியோ அவநம்பிக்கை ஏற்படுத்தியோ அனுப்பிவிடுவது தான் அதிகமாக நடக்கிறது. ஏனென்றால் அத்தகைய போராசிரியர்களுக்கு அந்த புராஜட் பற்றிய அறிவு இன்மையாலும் அதை தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அக்கறை இல்லாமலும் இருப்பதே மிகப்பெரிய காரணம்.

அத்தகைய பேராசிரியர்கள் யோசிக்க சோம்பேறித்தனப்பட்டு முதலில் மாணவர்களிடம் கேட்டும் கேள்வி " இந்த புராஜட்' கூகுளில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் தான் நம்புவார்கள். அதில் உள்ள புராஜட் தான் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். ஏனென்றால் கூகுளில் இருந்தால் பேராசிரியர்கள் புதிதாக யோசிக்கத் தேவையில்லையே. ஆனால் புதிய புராஜட் என்பது கூகுளில் இருக்கக் கூடாது என்கிற பொதஅறிவு கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும். எனக்கு ஒரு சந்தேகம்! அவர்கள் எல்லோரும் பழைய புராஜட் செய்து பேராசியர்களாக ஆகியிருப்பார்களோ? அதனால் புதிதாக கண்டுபிடிக்கும் ஒரு சில மாணவர்களின் அறிவையும் வெற்றிகரமாக மழுங்கடிக்கும் வேலையை நன்றாக செய்கிறார்கள் என்பதே உண்மை.

இன்றைய பேராசிரியர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பீடு செய்யும் அளவிற்கு அவர்களுக்கு அறிவும் திறமையும் இருக்கின்றதா? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில்தான் முனைவர் பட்டம் பெற்றிருப்பார்கள். அல்லது அவர்கள் புராஜட் செய்திருப்பார்கள். அதில்லாமல் முனைவர் பட்டம் பெறாமலும் பேராசிரியர்களாக இருகிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி அவர்களால் புதிய கண்டுபிடிப்புக்கு மதிப்பீடு செய்ய இயலும். என்னதான் மாணவர்கள் படிப்படியாக புராஜட் பற்றி ஒவ்வொரு நிலையினை விளக்கினாலும் பெரும்பாலான பேராசிரியர்கள் காதில் வாங்கிக்கொள்வதில்லை. அப்போதெல்லாம் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்காமல், சரியான வழி காட்டாமல் தேர்வு நெருங்க நெருங்க புராஜட் ஐ நல்ல முறையில் வழிவகை செய்யாமல் புராஜட்கு சம்பந்தமில்லாத பல கேள்விகளைக் கேட்டு மாணவர்களை நோகடிப்பதே சில பேராசிரியர்கள் செய்வது கொடுமையான விஷயம்

மேலும் எந்த ஒரு கல்லூரியிலும் புராஜட் செய்வதற்கான சாதனங்கள், கட்டமைப்பு வசதிகள், நல்ல நிலையில் உள்ள ஆய்வகம், இயந்திரங்கள் போன்றவை இருப்பதில்லை. பின் எவ்வாறு மாணவர்களால் புதிய புராஜட் செய்ய முடியும். அதனால் வெளியில் கிடைக்கும் ஏற்கனவே செய்த ரெடிமேட் புராஜட் தான் சமர்பிக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகிறார்கள். மீறியும் புதிய புராஜட் செய்துவிட்டால் அதை மெருகேற்றச் செய்யாமல் ஏளனமாக பார்ப்பது சில சமயம் நடப்பதுண்டு. இந்த வேளையில் 'ஏண்டா புதிய புராஜட் பண்ணினோம். பேசாமல் பழைய புராஜட் ஐயே எடுத்து பண்ணிருக்கலாம்' என்கிற நிலமைக்கு பேராசிரியர்கள் தள்ளிவிடுகிறார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சி காண ஆரம்பித்தது எனலாம். ஆனால் இன்றோ அறிவியல் நுணுக்கம், தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. அதை ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும். அப்படி இருக்கும் பழைய கண்டுபிடிப்புகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அது நூறு சதவீதம் உண்மை என்று கொள்ள முடியுமா? அப்படி அதை வைத்துக்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நிராகரிக்கும் செயல் அதிகமாக நடந்துவருகிறது. மேலும் கண்டுபிடிப்புகளின் முடிவுகள் எல்லாம் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்தால் தவறான முடிவு வரும் என்று சொல்லக்கூடாதா? பல விண்வெளிக்கலன்கள், ராக்கெட்டுகள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சிகள் தோல்வி பெறவில்லையா? அதுவும் தானே வலைதளத்தில் இருக்கின்றது. அப்படி இருந்தால் தான் புதிய கண்டுபிடிப்பாளர்கள் விழிப்புணர்வோடு கூடுதல் கவனம் செலுத்து வேறொரு முறையில் செய்வதற்கு உதவுமல்லவா! அவற்றிற்கெல்லாம் அசிரியர், பேராசிரியர்களுக்கு உண்மையான திறமையும் அறிவும் புதியவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பொறுமையும் நிறைய வேண்டும்.  

இன்னொரு கூத்து என்னவென்றால் மாணவர்கள் மாங்கு மாங்கு என்று ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் புராஜட் செய்தால் அதனை சில நிமிடத்தில் விளக்க வேண்டுமாம். அந்த குறுகிய நேரத்தில் பேராசிரியர்களால் புரிந்து இயலுமா? பேராசிரியர்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகளா என்ன? இந்த கூத்து பொறியியல் தொழில்நுட்ப போட்டிகளிலும் நடக்கிறது. அப்போட்டிகளில் பெரும்பாலும் கூகுளில் இருக்கின்ற புராஜட் களுக்குதான் பரிசுகள் கிடைக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். எங்கே பொறியியல் கல்லாரி தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் எந்தனை கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களின் புராஜட் களுக்கு 'காப்புரிமை' கிடைத்துள்ளது. மிக சொற்பமாகத்தான் இருக்கும். ஏனெனில் 'காப்புரிமை' பற்றிய விழிப்புணர்வு, விவரங்கள் பேராசிரியர்களுக்கே தெரியாதபோது பின் எவ்வாறு மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு 'காப்புரிமை' பெற உதவி செய்வார்கள்.

முடிவாக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்மையில் மாணவர்களின் புராஜட்களுக்கு சரியான வழி காட்டுபர்களாக இருந்தால் அம்மாணவர்களின் புராஜட் பேசக்கூடியதாகவும், சமுதாயத்திற்கு உடனடி பலன் தருவதாகவும், மின்னணு ஆய்விதழில் வெளியிடக்கூடியதாகவும், காப்புரிமை பெற தகுதியுடையதாகவும் இருக்கச் செய்திடல் வேண்டும். இது ஐ..டி மாணவர்களுக்கும் பொருந்தும். எங்கே ஐ..டியில் படித்த மாணவர்கள் எவ்வளவு பேர் நாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் கொடுத்துள்ளார்கள். பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை படித்து மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி எங்கேயாவது ஒரு இடத்தில் வேலை பெற்று காலம் தள்ளுவதே குறியாக இருகிறார்கள். ஒருவேளை காப்பரிமை பெற்ற புராஜட்க்கு அரசு நல்ல ஊக்கத்தொகையும் மேல்படிப்புக்கான பல சலுகையும் வழங்கினால் ஒழிய புராஜட்களுக்கு மரியாதை இருக்காது. இல்லாவிட்டால் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி பேரளவில் தான் இயங்கும். பலதுறைகளில் மாற்றங்கள் நடைபெறும் இக்காலகட்டத்தில் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தங்கள் திறமைகளையும் அறிவையும் அளவீடு செய்வதற்கு அவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் தனியாக அல்லது வழிகாட்டியாக செயல்பட்ட புராஜட்கள் மின்னணு ஆய்விதழில் வெளிவரவேண்டும். பேலும் மூன்றாண்டுக்கு ஒரு புராஜட் காப்புரிமை பெறும் அளவிற்குத் தகுதி பெறச் செய்யவேண்டும். அவர்களுத்தான் பதவி உயர்வு தரவேண்டும். அவ்வாறு செய்தால்தான் கல்வித்துறை வளர்ச்சி பெறும். நாடும் வளர்ச்சி காணும். அப்படியில்லையென்றால் எந்த காலத்திலும் கல்வித்துறை வளர்ச்சி காணாது. மேலும் பிறநாட்டு 'காப்புரிமை' பெற்ற பொருட்கள், இயந்திரங்கள் அதிக விலைகொடுத்து வாங்கி உற்பத்தி செய்யும் நிலையே ஏற்படும். நம்நாட்டில் எத்தனைபேர் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்? எதில் பெற்றிருக்கிறார்கள்? என்று அவர்களின் துணையையும் நாடினால் ஓரளவுக்கு நல்லது. இது கலித்துறைக்கு எச்சரிக்கை மணியல்ல. விழிப்புணர்வு மணியே! 
***************************