Pages

Saturday, 29 August 2020

கொரோனா - கலிகாலத்தின் தொடக்கமா? கட்டுரை மதுரை கங்காதரன்

 கொரோனா -கலிகாலத்தின் தொடக்கமா?

கட்டுரை

கு.கி.கங்காதரன்


இக்கட்டுரையானது 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இருபதாம் நாள் எழுதியது. சென்ற ஆண்டு டிசம்பர் 2019ல் சீனாவில் உள்ள  ஹூகான்  நகரத்திலிருந்து தான் உயிர்க்கொல்லி கோவிட்19  தொற்று உற்பத்தியாகி இருக்க வேண்டும் என்று, பல நாடுகள் (அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை) நம்புகின்றன.  இந்தியாவில் சென்ற  2020 மார்ச் மாதம் இருபத்தைந்தாம் தேதி முதல் இன்றுவரை, கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசுகள் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  இன்றுவரை,  உலகத்தில் பல நாடுகள்  அதற்கானத்  தடுப்புமருந்தைக்   கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தாலும், அ வை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

        உலக அறிவியல் மற்றும் மருத்துவ அறிஞர்கள்,  ஆராய்ச்சியாளர்களின்   தடுப்புமருந்து மாதிரிகள் அனைத்தும், சோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. எப்படியும் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்தாண்டுத் தொடக்கத்தில் பாதுகாப்பான மற்றும் முழுமையான வடிவத்தில்   கோவிட்19   தொற்றுக்கான   தடுப்புமருந்து ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுவிடுவோம்! என்று பல நாட்டு மருத்துவ நிபுணர்கள் அறிவித்து இருக்கின்றனர். இந்த  இடைப்பட்ட காலத்தில் என்னுடைய மனதின் நிலையும் மனதில் ஓடிய எண்ணங்களையும் எழுதுவதோடுகொரோனா தொற்றின்  மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து எழுதவும் விரும்புகிறது.  ஏனென்றால் பலர்  கொரோனாவின்போது,  இப்படி நடந்தது!  இப்படிச் செய்தேன்! அப்படிச் செய்தேன்!! இதைக் குடித்தேன்!   அதைக்  குடித்தேன்! என்று பலர் நன்றாகவே எழுதுவார்கள். ஏன் மிகைப்படுத்தியும் கூட!  அவைகளை மீண்டும் எழுத விரும்பவில்லை.

 இதுவரை,  மனிதன்   இயற்கையைவிட  தானே உயர்ந்தவன்!’ என்றும், அவன் நினைத்தால்  இயற்கையைத் தனது காலடியில் மண்டியிடச் செய்துவிட முடியும்?! என்கிற இறுமாப்புடன் இருந்தவன், இப்போது பதுங்கிப்பதுங்கி இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வருவது தான் இன்றைய நிதர்சனமான உண்மை. சத்துள்ள உணவுகளை அருந்தும் விசயத்திலும், சுற்றுச்சூழல் காக்கும் முயற்சியிலும்,   சுத்தம்,   சுகாதாரத்தைப்  பேணுவதிலும்  அக்கறையும்  அர்ப்பணிப்பும்  இல்லாது இருந்தவன்,  இப்போது மாங்கு மாங்கு என்று அதன்மீது  கவனம் செலுத்துவதோடு, விழுந்து விழுந்து அதன் நன்மைகளை மக்களுக்கு விளக்கியும், பல ஊடகங்களில் விளம்பரப்படுத்தியும் வருகின்ற இந்த மாற்றம், இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்குச் சற்று ஆறுதல் தரும் விசயமாகும். எங்கே இந்த அதிசய, அழகிய உலகத்தைக் குப்பையாக்கி, முடிந்தளவு அசுத்தமாக்கி, மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாக மாற்றிவிடுவார்களோ?  என்று பலரிடையே ஏற்பட்டிருந்த அச்சம், இப்போது ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே நம்புகிறேன். உலகத்தின் ஆயுள் இன்னும் நீண்டு இருக்கின்றது என்கிற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

 இந்தக் கொரோனா தொற்றுக்கு எப்படி இவ்வளவு மகத்தான சக்தி வந்திருக்கும்?  என்பதைச் சற்று ஆராய்ந்து பார்த்தோமானால் உண்மை என்னவென்று தெரியவரும். மனித இனம் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  ஆகியிருக்கலாம்.   ஆனால், அதற்கு முன், உயிர்ச்செல்கள் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள்  ஆகியிருக்கலாம்.  ஏனெனில் உயிர் உற்பத்திக்கு  முதலாவதும், அடிப்படையானதும் இருப்பது ஒரே ஒரு செல்லே’.   இந்நிலையில்,  அந்தச்  செல்   இனத்தை   அழிக்கும் கோவிட்  மாதிரியான  வைரஸ்களின்  உற்பத்தியும், இதே கால அளவாக  இருந்திருக்கும்.  அப்போது தானே 'உயிர்ச்சுழற்சி' சரியாக இருக்கும்.  அதாவது பிறப்பது  எதுவோ  ஒருநாள் அது நிச்சயம் அழிந்தேத் தீரவேண்டும்!’ என்பது இயற்கையின் விதியல்லவா!

  மேலும், மரம்,  செடி,  கொடி,  ஊர்வன,  பறப்பன,  நடப்பன,  நீந்துவன  போன்றனவற்றில் விதவிதமாக ஆயிரக்கணக்கான ஏன்? இலட்சக்கணக்கான படைப்புகள் இருக்கும் போது,  வைரஸ்   போன்றனவற்றில் கோடிக்கணக்கான படைப்புகள் இருப்பதில் வியப்பில்லையே?!  இன்னும் சொல்லப் போனால், எல்லா உயிரினங்கள் விட அவைகள் தான் மூத்த  உயிரியாய்  இருக்கும்போது, அதற்கு அதிசக்தி இருப்பதில் அதிசயமில்லையே!   அதனுடைய சக்தியை நமக்குக் காட்டவே,  இப்போது  கோவிட்     வைரஸ்   கோரத்தாண்டவம்  ஆடிவருகின்றது. 

 இந்த நவீனக்காலத்தொழில்நுட்பத்தில் பல சாதனைகள் புரிந்துவருகிறோம்’  என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் அனைத்து அறிவியல் அறிஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும், புரியாத புதிராகவும்,  நம்மையெல்லாம் கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோவிட்19  தொற்றை முற்றிலும் அழிக்கமுடியாது என்றும், நம்மால் அதனைக்   கட்டுப்படுத்த மட்டுமே இயலும் என்கின்ற உண்மை இப்போது தான் தெரிய வந்திருக்கின்றது.  இவ்வுலகம்,  இதுபோன்றப்  பலப்பேரழிவுகளைப்  பார்த்திருந்தாலும்,  இப்போது   நடக்கும் நிகழ்வு, இதுவரை மனித இனம் கண்டிராத, மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டது  என்றே எண்ணத் தோன்றுகின்றது. இப்போது, அதனை வெற்றி கண்டாலும் எதிர்காலத்தில் எத்தகைய அச்சுறுத்தல் அது கொடுக்கும்? என்று இப்போது கூறுவது கடினமே. 

 ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.  இயற்கையின்  'சுழற்சி'  விதியின்படி, எந்த ஓர் உயிரி உருவானாலும், அது கட்டாயமாக ஏதாவது ஒரு விதத்தில் அழிந்தே தீரவேண்டும்! என்பதில் ஐயமில்லை. அதில், இயற்கையாக அழிவது ஒரு முறையும், செயற்கையாக அழிப்பது மற்றொரு முறையாகும். இதில் இந்த வகைக்  கொரோனா தொற்று இயற்கையாகவே அதன் வீரியம்எப்போது குறையும்?  என்பதையும் அதோடு அதன் அழிவு எப்போது முற்றிலும் தானாக முடிவுக்கு வரும்? என்பதையும் கணிப்பது ஆராய்ச்சியாளர்களுக்குக்  கடினமான  செயலாகவே இருக்கின்றது. அதுவரையில்,   அதன் அட்டகாசத்தை மனிதக்குலத்தால் தாங்க முடியுமா? என்பது சந்தேகமே! இதற்கு முன் உருவான வைரஸ்களெல்லாம் ஏதோ ஓரிடத்திலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ அதன் தாக்கம் இருந்தது. மேலும், அதன் தாக்கத்தை, உடனே ஒரு சில அறிகுறிகளால் எளிதாய்க் கண்டுபிடித்து, அதற்கேற்றவாறு மருந்து மாத்திரை, ஊசி, மூலம் குணப்படுத்திவிடும் அளவுக்கு இருந்தது. அதோடு, அதன் பரவல் உலகளவில் இல்லாமல் அளவோடு தான் இருந்திருக்கின்றது. ஆனால்,   கொரோனா   தொற்று   வைரஸ்   எல்லாவற்றிற்கும் பலபடிகள்  மேலாய்,  அதன் பரவும் முறையும், அதன் தாக்கத்தையும் கண்டுபிடிப்பது சிரமமான  வேலையாக ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கின்றது.

கொரோனா, இவ்வுலக மக்களை ஆட்டிப்படைக்கும் பணக்கார, அறிவாளி, அதிகார வர்க்கங்களையே ஆட்டிப்படைப்பதோடு, அவர்களும் ஒவ்வொரு கணமும் அதனை நினைத்து அஞ்சி, நடுங்கி, ஒடுங்கவும் செய்து வருகிறதென்றால்  அதன் பலம் எத்தகையது?  என்று இதன் மூலம் அறியலாம். எப்படியென்றால் கண்ணுக்குத் தெரியாத  அந்தக்  கிருமி, எப்போது, எதன் மூலம், எப்படி, எந்த நேரத்தில், எந்த வழியில், எங்கு, எந்த இடத்தில் மனிதனைத் தாக்கும்? என்கிற பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், அது மனிதனை தாக்கிய பின், அது தோற்றுவிக்கும் அறிகுறிகள்,  சரியாக எவ்வாறு, எப்படி இருக்கும்? என்பதே அறிந்து கொள்ள முடியாத, எவ்விதப் புரிதலும் கொள்ள இயலாத வினோதமான 'உயிர்க்கொல்லி' ஆகும்.

 எப்படியெனில், கொரோனா தொற்று, ஒரு மனிதனைத் தாக்கியவுடன் அதன் செயல் உடனே தெரிவதில்லை. ஓரிரு நாட்கள் கழித்துத் தான் ஓரளவு தெரிய ஆரம்பிக்கின்றது. அதாவது காய்ச்சல், இருமல், தும்மல், உடற்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தெரிய ஆரம்பிக்கின்றது. இந்த அறிகுறிகளெல்லாம் இயல்பாய் வேறு சில காரணங்களினாலும் வருவதாகும். ஆகையால், இது கொரோனா தொற்றால் வந்ததா? இல்லை வேறு காரணத்தால் வந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்குள்,  பலர் பயத்தால் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குத் தள்ளிவிடுகின்றது. அதில்லாமல்,  ஒருவர்  'தான்'  கொரோனா தொற்றால் தாக்கப் பட்டிருக்கிறோம்! என்று தெரியாததிலிருந்து,   அறிகுறிகள் தென்படும் வரையில், அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எத்தனை பேர்களிடத்தில் பழகியிருப்பார்? எங்கெங்கு சென்று, எதை எதைத் தொட்டிருப்பார்? அதனால் எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கும்? என்பதை எந்த ஒரு ஜாம்பவானாலும், எந்த ஒரு கருவியினாலும் அல்லது அதிபுத்திசாலி கணினியாலும் அறிந்துகொள்ள முடியாத ஒரு இரகசியத் தொற்று’ ஆகும்.   

 என்னதான் தடுப்புமருந்தைக்  கண்டுபிடித்து அதனை அனைவரும் போட்டுக் கொண்டாலும்,  அதனுடைய உருவாக்கம், தாக்கம், பெருக்கம், அழிவு என்கிற சுழற்சி நிற்காது போல் தெரிகின்றது. அதனோடு சேர்ந்து நாமும் வாழும் சூழல் இருப்பதாகவேத் தோன்றுகின்றது. அது எப்போதும், பலருடன் பாதுகாப்பாக இருந்து, அதன் பெருக்க வேலையை செவ்வனே செய்துகொண்டே இருக்கும் என்பது உறுதி. பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத எவரேனும்,  அதைச்  சீண்டினாலோ, தொட்டாலோ அது தொட்டவரின் மூக்கு, வாய் வழியாக உடலினுள் நுழைந்து, அது தன் தாக்குதல்  வேலையைக் காட்டத் துவங்கி விடும். மீண்டும் அதன் பரவல் தொடரும். அதாவது நாம் தடுக்க தடுக்க, அது அழிய அழிய, மீண்டும் மீண்டும் அது பெருகிக் கொண்டே இருக்கும். இது கிட்டத்தட்ட ஒரு தீப்பொறிக்கு இணையாகக் கொள்ளலாம்!

 எவ்வாறெனில், ஒரு தீப்பொறி, உலகத்தில் ஒரு மூலையில் விழுந்து  தீப்பற்றிக் கொண்டால், அது இந்த உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டல்லவா? இத்தொற்றிலும் இவ்வுலகம் ஒரு நன்மையைப் பெற்றுள்ளது. அதாவது இது தொற்றுடன்’ நின்று கொண்டது. அதாவது இந்தக் கொரோனா தொற்று உள்ளவரிடமிருந்து மற்றவருக்கோ அல்லது  கொரோனா தொற்று உள்ளவர் தும்மல்,  இருமல், எச்சில் மூலமாக  ஏதாவது ஒரு பொருளின் மீதுப்பட்டிருந்தாலோ அல்லது அவர் எங்காவது ஒரு இடத்தில் தொட்டிருந்தாலோ, அந்தத் தொற்று மற்றவரின் கை, கால் மற்றும் உடல் வழியாக மட்டுமே தொற்றித் தாக்கும். ஒருவேளை, இதுவே காற்றின் மூலம் பரவுவதாக இருந்திருந்தால்?  இக்கணம்  இவ்வுலகத்திற்கு  பேரழிவு வந்திருக்கும்! எல்லோரும்   அபாயக்கட்டத்தில்  இருந்திருப்போம். அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்போம். அந்த வகையில் இந்த உலகத்திற்கு ஒரு நல்லகாலம் தான். யார் யார் செய்த புண்ணியமோ?  அவைதான் இவ்வுலகத்தை இப்போது வரையில்  காத்துக் கொண்டு வருகின்றது. இதுநாள் வரையில் மூன்றாம் உலகப்போர்,  தண்ணீருக்காகவே பல நாடுகளுக்கிடையே நடக்கும்!   என்கிற  கூற்றினை  பொய்யாக்கிவிட்டது. இந்தக்  கொரொனாத் தொற்று.

  இன்று, உலகமே  கண்ணுத்தெரியாத ஒரு வைரஸை எதிர்த்துப்  போராடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. உலகமே ஒன்றுபட்டு இணைந்து போராடினால் ஒழிய இதனை வெற்றி பெறுவது சிரமமே! அல்லது இதனை எதிர்கொள்ள ஒரே வழி, நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை எப்போதும் அதிகமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் துரித உணவுக்கு ஆசைப்படாமல் நமது பாரம்பரிய உணவுப்பழக்கத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதோடு தனிமனித ஒழுக்கத்தோடு நமது சுற்றுப்புறங்களில் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தினமும் பேணிக்காக்க வேண்டும். அது மட்டுமா? சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்!  முகக்கவசம்  கட்டாயமாக அணிய வேண்டும்! அடிக்கடி கைகளைக் கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்!   இருமல், காய்ச்சல், தும்மல் வந்தால் உடனே கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கிற பல கட்டுப்பாடுகள் உலக சுகாதார அமைப்பு’  மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.

      ஒரு பக்கம் சிந்தித்துப்பார்த்தால், இந்தக் கொரோனா தொற்று உலகத்தைப் புரட்டிப் போட்டதோடு, புதிய ஒரு வரலாற்றை எழுத ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றொரு பக்கம் இது யதார்த்தமாக நடந்ததா? அல்லது திட்டம் போட்டுப் பரப்பிவிடப்பட்டதா?  அல்லது ஆராய்ச்சியாளர்கள் ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்போய்,  தவறுதலாக இந்நிகழ்வு நடந்ததோ?     அல்லது     கொரோனா  தாக்கப்பட்ட உயிரினத்தை   அதாவது பறப்பன,  ஊர்வன,  நடப்பனவற்றை உண்டதாலே பரவியதா? என்பதை எதுவும் உறுதி செய்ய முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகிறார்கள்.

 கொரோனா வரவால் இந்த உலகத்திற்குக்  கீழ்க்கண்ட  மாற்றங்களைத் தந்துள்ளது. கொரோனாவுக்கு முன், பல  பள்ளிக்கல்லூரி   மாணவர்கள்,  தங்களின் பாடங்களைப் படிக்காமல்,  எந்நேரமும் அவர்கள் கைப்பேசியில்      விளையாட்டு,  திரைப்படம்,   திரைப்படப் பாடல்கள், குத்து நடனம் போன்றவற்றிலே மூழ்கிக்கிடக்கும்  நிலையிலிருந்தார்கள். ஆகையால், அவர்கள் படிப்பதில் அக்கறையில்லாமல் இருந்து வருகிறார்கள்!   என்கிற குற்றச்சாற்றைப் பல சமூக ஆர்வலர்கள் முன்வைத்தார்கள்அதன் விளைவாக, பல பள்ளிக்கல்லூரிகளில் மாணவர்கள், இளைஞர்கள்  கைப்பேசியைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்ததை நாம் அறிவோம்.  ஆனால் இன்றோ அவர்கள் கல்வியைக் கற்கவேண்டுமென்றால் கட்டாயமாகக் கணினி,  கைப்பேசியை உபயோகப்படுத்தியேத் தீரவேண்டும்!   என்கிற   நிர்ப்பந்தத்திற்கு  ஆளாகியிருக்கிறார்கள். 

கொரோனாவுக்கு முன், பணப்பரிவர்த்தனை பெரும்பாலும் நேரடியாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனாவுக்குப் பின், பணப்பரிவர்த்தனை அதிகமாக இணையவழியில் நடைபெறுகின்றது என்று அரசுப் புள்ளிவிவரம் கூறுகின்றது. இது எதிர்கால இந்தியாவுக்கு ஆரோக்கியம் தரும் வளர்ச்சியாகும். 

 கொரோனா தொற்றுக்கு முன், மனிதனுக்கு மனிதன், தனது நட்பை,  அன்பை,   உறவை, வியாபாரத்தை, சேவையை வளர்த்துக் கொள்ள   நேரடியாகச்  சந்தித்து, அவர்களுடன் இணக்கமாக,  சமமாக அல்லது வயது வித்தியாசம்,  ஏற்றத்தாழ்வு இல்லாமல்,  அனைவரிடத்தில் சங்கோசப்படாமல் சகஜமாகப் பழக வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இருந்தது. ஆனால் இன்றோ  'தனித்திரு!  வீட்டிலேயே இரு!', தனிமனித இடைவெளியாக ஒரு மீட்டர் இருக்க வேண்டும்!  மனிதனுக்கு மனிதன்  நெருக்கமாக இருக்கக் கூடாது!  அவசியத்தேவைக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்! வீண் பயணத்தைத்  தவிர்க்க  வேண்டும்! அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடுவதைத்  தவிர்த்தல் வேண்டும்!   (கோவில், பள்ளி, கல்லூரி, விளையாட்டுப் போட்டிகள், வேலை பார்க்கும் இடங்கள், திரையரங்கம், வணிக வளாகம், காய்கறிச்சந்தை உட்பட) என்று சட்டம் போடும் நிலை உருவாகி இருக்கின்றது.

 இந்த நிகழ்வுக்கு முன், விவசாயத்திற்கு முக்கியத்துவம் இரண்டாம் பட்சமாகத் தந்து கொண்டிருந்த நாடுகள், இப்போது முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அதற்குச் சாட்சியாக   கொரோனா  தொற்று  பரவத் தொடங்ககியபோது      எல்லாத்  தொழில்கள் முடங்கிக் கிடந்தபோதும்,  விவசாயத்  தொழில் எந்த ஒரு இடையூறு இல்லாமல் நடைபெற்றதே ஆகும்.  ஏனெனில் அறிவுப்பசி, பொருட்பசி, பொன் பசி, உடற்பசி, ஐம்புலனான பசி போன்ற பசிகளைத் தாங்கிக் கொண்டாலும்  உண்வுப்பசியை மனிதனால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

 பலர்பார்க்கப் பொறாமையாகவும், வியப்பாக நோக்கும்படியும் பரபரப்பாய், இங்கும் அங்கும் பலவிதப் போக்குவரத்துகளில் நடந்தோ,  ஓடியோ,  பறந்தோப் பிடித்து,  அலுவலகங்களுக்குச் சென்று வேலை செய்வதே பெருமையாகவும், கௌரவமாகவும் நினைத்து வந்த மனிதக்குலம், இப்போது பலர், எவ்வித ஆரவாரமில்லாமல்அமைதியாக வீட்டிலேயே தங்கள் வேலையினைப் பார்த்துக்கொண்டு வருவதுஇதுவரையில் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்த்திடாத நிகழ்வாகும். அதோடு பள்ளிக் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே மழலைகள், மாணவ மாணவிகள், இளைஞர்கள் கல்வி பயில்வது மாபெரும் அதிசயமாகும்.

 இந்த கொரோனா தொற்றால் மேலும் ஒரு நன்மைஎன்னவென்றால், சுற்றுச்சூழலின் மாசு வெகுவாக    குறைந்துள்ளது.  கொரோனாவுக்கு  முன்,  பருவநிலை மாற்றம்,   ஓசோன்   ஓட்டையால் புவி வெப்ப மயமாதலுக்குக் காரணமாய் விளங்கிய தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள், மாசுகள், போக்குவரத்து சாதனங்கள் வெளிவிடும் புகைகளால் சுற்றுச்சூழல் அதிகமாகப் பாதிப்படைகின்றது. ஆகவே அதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கொஞ்சம் கூட காதில்   வாங்கிக்  கொள்ளாதவர்கள்,   இப்போது கொரோனா  தொற்றால் பல நிறுவனங்கள்,  முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளைத் திறப்பதற்கும், அதனை தொடர்ந்து நடத்தவும்  படுசிரமப்படுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு குறைந்துள்ளதாக உலகநாடுகளின் சில  ஆய்வறிக்கைகள் சான்றாக விளங்குகின்றது.

 தொற்று கொரோனா வந்தது

தொழிற்சாலை கழிவுகள் நின்றது

காற்றின் மாசு குறைந்தது

குளம் ஆறுகள் சுத்தமானது

 

தனி மனித இடைவெளி

தள்ளிப் போகுமே கொரோனா

தனித்திருப்பதே சிறந்த வழி 

தடுக்குமே கொரோனா பலி

 

மொத்தத்தில் தனிமனித ஒழுக்கம்,  சுத்தம்,  சுகாதாரத்தை  பேணுதல்  ஆகியவைகளைச் துச்சமாக மதித்துவந்த மனிதன், இப்போது

எளியோர்கள் முதல் வலியோர்கள் வரை, 

ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை, 

மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை, 

தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை, 

தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரை, 

அறியாதவர்கள் முதல் அறிவுடையோர்கள் வரை, 

பாவ ஆத்மாக்கள் முதல் புண்ணிய ஆத்மாக்கள் வரை

யாரையும் எவரையும்  தயவு, தாட்சண்ணியம் கொண்டு பிரித்துப் பார்க்காது,  அனைவரையும் தாக்கும் வல்லமை கொண்டது என்று கொரோனா தொற்று’ செயலில் காட்டி வருகின்றது.

 ஒருவருக்கு நோய்த் தொற்று இருந்து, அவர் அறிந்தோ அறியாமலோ பலருடன் பழகினால் இந்நோய் அவர்களுக்கு எளிதில் பரவும் அபாயமுள்ளது. அதனாலே தான் மேற்கூறியப் பல கட்டுப்பாடுகளை அரசுகள் மக்களுக்கு விதித்து இருக்கின்றது. இதில் கொடுமை என்னவென்றால் அதிகமாக  நோய்ப்பரவலுக்குக்  காரணம் இளைஞர்கள் தான் என்று ஆய்வுகள் கூறுகின்றது. பெரும்பாலும் இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருப்பதால் அவர்களைக் கொரோனா தொற்று தாக்கினாலும், அவர்கள் பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுடன் பழகும்போதும் அல்லது தேவையில்லாத இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு  இத்தொற்றைப் பரப்பிவிடும் அபாயமுள்ளதாக உலக சுகாதார அமைப்பு’ நம்மை எச்சரிக்கின்றது.

 கொள்ளைப் பக்கமாய் வந்த கொரோனா

கொல்ல வந்த கொடூரக் கொரோனா

கொக்கரித்துத் தொற்று பரப்பும் கொரோனா

கொன்று குவிக்கும் வைரஸ் கொரோனா

 

முகக்கவசம் அணிந்து கொள்

கொரோனா அண்டாது தெரிந்துகொள்

கைகளை சுத்தம் செய்வோம்

கொரோனா தாக்கத்தை ஒடுக்குவோம்

பொதுவாக மருத்துவத்தில் இதுவரை, எந்த ஒரு புதிய ஆட்கொல்லி நோய்க்கானத்  தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாகும் என்றும், ஏன் அதற்கு மேலும் ஆகும்? என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏன்? சில ஆட்கொல்லி நோய்க்கு   இன்றுவரையில்  தடுப்புமருந்து  கண்டுபிடிக்கப்படவேயில்லை. ஏனென்றால் அப்படிப்பட்ட ஆட்கொல்லி நோயின் பரவல் குறைவாக இருக்கலாம் அல்லது அதனை சில நடவடிக்கைகளால் எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்கிற காரணமாகக் கூட இருக்கலாம். அப்படி வரலாறு இருக்கும்போது,   கொரோனா   தொற்றுக்கு  தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க சுமார் ஒன்றரை வருடம் முதல் இரண்டு வருடமாகலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்தத் தொற்று, மற்ற ஆட்கொல்லி நோய் போல் இல்லாமல் பன்மடங்கு வீரியம் மிக்கதாலும், ஒருவர் அதன் தாக்கத்தை எளிதில்   அறிய, உணர முடியாததாலும்,  உலகெங்குமுள்ள  ஆராய்ச்சியாளர்கள் தங்கள்  சோதனைகளைப்  பல வழிகளில் முடுக்கிவிடப் பட்டியிருக்கின்றார்கள். 

 

இந்தியா உட்பட சில நாடுகள், சிலவகைத்  தடுப்புமருந்தினைக் கண்டுபிடித்துப் பல நாடுகளில் உள்ள மனிதர்களுக்கு அதனைச் செலுத்திச்  சோதனைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதன் விரிவான ஆய்வு முடிவுகளை நோக்கி இந்த உலகமே விழிகொண்டு காத்து இருக்கின்றது.  கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க, உலக மக்கள் அனைவரிடத்திலும் விழிப்புணர்வும்,  ஒத்துழைப்பும்,  அதோடு  'கொரோனாவிடமிருந்து மக்களைக் காப்போம்' என்கிற மனவுறுதியும் கண்டிப்பாக வேண்டும். இதனின் மறுபக்கமாக, சில தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்,  மக்களின் கொரோனா பயத்தை தங்களுக்குச் சாதகமாக்கி, அவர்களிடம் எவ்வித ஈவு இரக்கமில்லாமல் இலட்சக்கணக்கில்  பணத்தை கறப்பது சற்று வேதனை தரும் விசயமாக நான் பார்க்கிறேன். 

 உலகையே அசைத்துப் புரட்டிப் போட்ட கொரோனா, எக்காலத்திலும் யாராலும் நம்ப இயலாத நிகழ்வை நடத்திச் சாதித்துள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி! இன்னும் பத்து, இருபது ஆண்டுகள் கழித்து,  வருங்கால சந்ததியினர்கள்  இந்த  செய்தியைப் படிக்க நேர்ந்தால், இந்த நிகழ்வை நம்பமாட்டார்கள். அவர்களின் வாதம் என்னவாக இருக்குமென்றால், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிராம்கொரோனா   தொற்று   வைரஸாம்? மக்களை   பயமுறுத்தியதாம்?  மக்களும் பயந்தார்களாம்?  ஊரடங்கு போடப்பட்டதாம்?  உலக இயக்கமே நின்றதாம்? யார் காதில் யாரைப்   பூச்சுற்ற பார்க்கிறார்கள்? ‘இது  திரைப்படத்தில்  தான் சாத்தியம்!’  என்பார்கள்.  'உலகமே நடக்காத ஒன்றை நடந்துள்ளதாகப் பொய் சொல்லியுள்ளது' என்று கருதுவார்கள்.

 சொற்ப மக்கள் தொகை கொண்ட நாட்டிலேயே, கொரோனா தொற்றால் இலட்சம் இலட்சமாய், கொத்து கொத்தாய் மக்கள் மடிந்து கொண்டிருக்கும் போது, உலகத்தின் கண்கள் அனைத்தும் இந்தியாவின் மேல் தான் இருந்தது என்னவோ உண்மை. ஏனெனில் சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் எத்தனை கோடி பேர் மாண்டுவிடப் போகிறார்களோ? என்கிற வருத்தமே.

 நான் ஒரு தகவலைப் படிக்க நேர்ந்தது. அது உண்மையோ? பொய்யோ? இந்த உலகம் 20 பணக்காரர்களின் சொல்லினாலும், செயலினாலும்  அசைவினாலும் இயங்குகின்றது. அவர்கள் தான் உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறார்கள் என்று!  அதாவது நாளைக்கு? அடுத்த வாரம்? அடுத்த மாதம்?, அடுத்த ஆண்டு? ஏன் ஐந்தாண்டுக்குப் பின் என்ன நடக்க வேண்டும்? என்பதை திட்டம் போட்டு  செவ்வனே வழி நடத்திச் சென்று கொண்டிருந்தார்கள். இதுவரையில் உலகத்தில் மனிதனால் நிகழ்ந்த சில நிகழ்வுகளைத்  தவிர, மற்றவனவற்றைச் சரியானபடி  நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது அவர்களுக்கு, இந்த  கொரோனா தொற்று’ மரண அடி தந்திருக்கும். அவர்கள் விரித்த மாயவலைகளில் சிக்கித்தானே உலக மக்கள் உழன்று கொண்டிருந்தனர். எந்தெந்த மாயவலைகள் என்றா கேட்கிறீர்கள்?  திரைத்துறை,   செய்தி  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், கேளிக்கை வளாகங்கள்,   சுற்றுலாத்தலங்கள், விளையாட்டு, இணைய வழி சமூக வலைத்தளங்கள், பலவித செயலிகள் போன்ற பலவிதத்தில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி  உலக மக்கள் அனைவரையும், தங்களை மறந்து, வீட்டை மறந்து, நாட்டை மறந்து ஏன் உலகத்தையே மறக்கச் செய்து, அவர்களை நடைப்பிணமாக மாற்றி, எதையுமே சிந்தனை செய்ய விடாது ஒரு இயந்திர மனிதனாக, இயந்திர வாழ்க்கைக்கு வித்திட்டவர்கள் அவர்கள் தானே!

 ஆம், இந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகில் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், அறிவியல் அறிஞர்கள், வருங்காலத்தைக் கணிப்பவர்கள், அரசியல் தலைவர்கள், நிறுவன முதலாளிகள் இன்னும் பல துறை வல்லுநர்கள், ஒவ்வொருவரும் இந்த ஆண்டை இப்படித்தானே கணித்தார்கள். 2020 என்பது அருமையான ஆண்டு! இந்த ஆண்டைப் பற்றிய எத்தனை எத்தனை செயல்திட்டங்கள்!  நாட்டின்  பொருளாதாரம்,  ஏற்றுமதி, உணவு மற்றும் பொருட்களின் உற்பத்தி, வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் விளையாட்டில் சாதனைகள், தொழில் நிறுவன வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள், நாட்டின் கட்டமைப்பு! இவையெல்லாம் மேன்மை அடையும் என்றார்கள். இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கத்தில், இந்த ஆண்டில் இனி நடக்கப்போகும் நிகழ்வுகளான கல்வித் தேர்வுகள், பள்ளிக் கல்லூரிச் சேர்க்கைகள்,  கல்யாணம்,  சுற்றுலா,  தேவையான பொருட்கள் வாங்குவது, வீடு, நகைகள், ஆன்மீகப் பயணங்கள், புதுத்திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவ்வளவு ஆசைகளும் கனவுகளும் இப்போது என்னவாயிற்று? அனைத்தும் இந்த  கொரோனா  பெருந்தொற்றால் நிராசையாகப் போனதே நிஜம்!

 சுனாமி, பூகம்பம், எரிமலை, உலகப்போர்கள், இதற்கு முன் நிகழ்ந்த வைரஸ் தாக்கம் ஆகியவற்றையெல்லாம் அனாவசியமாய் சமாளித்து, தங்களது திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி வந்த இந்த உலகம், இப்போதுதான் முதன்முதலாகக் கண்களுக்கு தெரியாத இந்த கொரோனா  வைரஸைப் பார்த்து மரண பயத்தில்  உறைந்துள்ளது. ஏனெனில் அது அனைவரையும் உண்டு, இல்லை என்று ஒரு கை பார்த்து கொண்டிருக்கின்றது. சீனாவில் தானே இத்தொற்றுப் பரவல் உள்ளது. நம்மை இங்கு வந்து எப்படித் தாக்கும்? என்று அசட்டையாய் நினைத்தவர்களின் நாட்டையும், வீட்டையும் ஏன் தனிமனிதனையும் விட்டுவைக்கவில்லை. இதுநாள் வரை பரபரப்பாய்  பம்பரமாய் சுழன்றும் ஓடி ஆடி இயங்கிக் கொண்டிருந்த உலக மக்கள் அனைவரையும், மாதக்கணக்கில் வீட்டுச்சிறையில் அடைபட்ட     கைதிகள்  போலல்லவா           ஆக்கிவிட்டது.  எல்லோரையும் வீட்டில் முடங்கச் செய்து ஒரு அசாதாரண வாழ்க்கை அல்லவா நம்மை ஆழ்த்தியுள்ளது. அது எமன் போல உனக்கு  வாழ்வு வேண்டுமா? சாவு வேண்டுமா? என்கிற கேள்வியைக் கேட்காமல் செயலில் காட்டிக்கொண்டு வருகின்றது.  

இதற்கானத் தடுப்புமருந்தைத் தயாரிப்பில் இறங்கிய நாடுகள், ஆரம்பத்தில், இதனை இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சியின் உதவியால்  எளிதாகச்  செய்துவிடலாம் என்று எண்ணினார்கள். போகப்போக அதன் வீரியமும், குணமும் அவர்களைக் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியது. முதலில் அதன் தாக்கத்திற்கான  அறிகுறிகள்: சளி,  இருமல்,  தும்மல் இருக்கும் என்று அறிக்கைவிட்டவர்கள், அதன் பின் தான் அதிர்ச்சியூட்டும் மற்றொரு  உண்மை தெரிய வந்தது. எந்த ஒரு அறிகுறியுமில்லாமல்,  ஆரவாரமில்லாமல்,  அமைதியாகத் தாக்கவும் செய்யும்! என்கிற உண்மை தெரியவரும் போது எல்லோருக்கும் பீதி ஏற்பட்டது. உலகம்  முழுவதுமான  இயக்கங்கள், அசாதாரணமாக மாறியது.   அனைத்து விதமான  போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

 

ஆகையால் நாடு விட்டு நாடு செல்ல, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, ஏன் ஒரு தெருவிலிருந்து மற்றொரு செல்லவும் தடை போடப்பட்டது? அவசியம் ஏற்பட்டால் அரசு அனுமதி கட்டாயம் வேண்டும். அதுபோல் ஆரம்பத்தில் ஒரு தெருவில் ஒருவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியானால்,  அந்த தெரு வழியாக யாரும் போகக்கூடாது என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிறகு கொஞ்சம்  கொஞ்சமாகத் தளர்வு செய்யப்பட்டது. அவ்வாறான அரசு உத்தரவுகள் அனைவருக்கும் ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கினாலும்,  போகப்போக அதன் அவசியத்தை மக்கள் உணரத் தொடங்கியதே நிதர்சனமான உண்மை.

 

ஏனெனில், கொரோனாவின் தாக்கம் உடனே தெரிவதில்லை. ஏன் இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் தான் தெரிய ஆரம்பிக்கும் என்பதே காரணம். தொற்று அறிகுறி சோதனை மூலம் தெரியவந்தால் முதலில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பிறகு இது 14 நாட்களாக அதன் பின்பு ஒரு வாரமாகக் குறைக்கப்பட்டது. அச்சமயத்தில், அரசு அல்லது தனியார் மருத்துவ மனைகளில்  கொரோனா நோயாளிக்கென்றே சிறப்புச் சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் படியும்,   பரிந்துரையின் படியும், மற்றும் நெறிமுறையின் படியும்   கவனிக்கப்பட்டு   மக்களை  குணப்படுத்தி வருகின்றனர். உரிய நேரத்தில், உரியக் காலத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாக இருந்தால்,  தொற்று  வைரஸ்   மனிதனை   மரணக்குழியில்  தள்ளிவிடும் அபாயமிருக்கின்றது.  

   

கொரோனா தொற்று பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய்விட்டது! பொருளாதார வீழ்ச்சி அடைந்துவிட்டது! வேலையின்மை பெருகிவிட்டது! தொழில்கள் நசிந்துவிட்டது!  என்பனப் பல புலம்பல்கள் கேட்டதும் நம்முள் உடனே என்ன சிந்தனை வரும்? இதனால் ஏழை எளியோர்களே  அதிகமாகப் பாதிப்படைந்திருப்பார்கள்? என்கிற எண்ணம் தான்! ஆனால், உண்மையில் இதனால் அதிகமாகப் பாதிப்படைந்தது யார் யாரென்றால்  கோடீஸ்வரரர்கள், செல்வச்சீமான்கள், தொழிலதிபர்கள் தான்! ஏனெனில் தங்களுடைய செல்வத்தால், தொழிலால், சேவையால் தொழிலாளர்களின் உழைப்பான இரத்தத்தை உறிஞ்சி,  அப்பாவி மக்களை ஏமாற்றியோ, பேராசை காட்டியோ, கற்பனையைத் தூண்டிவிட்டோ இன்னும் பற்பல வழிகளில் பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் தானே அவர்களுள் இருக்கின்றது.

 

அதன் நோக்கமாக, இந்த 2020 ஆண்டிலாவது உலகப்  பணக்காரர்களின்  வரிசையில்  இன்னும் பல இடங்களுக்கு முன்னேற வேண்டும் என்கிற கற்பனையில் மிதந்தவர்களுக்குத் தான் இந்நிகழ்வு பேரிடியாக இருக்கும். நடுத்தர, ஏழை மற்றும் விவசாயிகளுக்கு  அவ்வளவாகப் பாதிப்பு உண்டாகியிருக்காது. ஏனெனில் அவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்காக, அரசுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலவசமாக உணவுப்பொருட்களும்,  கொஞ்சமாகப் பண உதவியும், ஏழை, தெருவில் வசிப்போருக்கு உணவு வழங்கும் திட்டம் ஆகியன அவர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுத்திருக்கும். 

  

ஏனெனில், அவர்களிடம் பேராசை இல்லை! ஆட்சி அதிகாரத்திற்கு   ஆசைப்பட்டதில்லை! பதவிக்குப் பறப்பவர்கள் இல்லை! அன்றைக்கு அன்று சாப்பாடு கிடைக்கின்றதா? பொழுது போகின்றதா? என்று தானே இருக்கிறார்கள். அதற்கு மாறாக அவர்கள் பணத்திமிரால் ஊர் உலகத்தை சுற்ற வேண்டும், கேளிக்கைகளில் ஈடுபட வேண்டும்,  விளையாட்டு,  திரைப்படங்களைப் பார்க்கவேண்டும், எல்லாவற்றையும் அனுபவிக்க  வேண்டும், வீட்டு விசேசங்களை உலகமே மெச்சும் அளவுக்கு நடத்த வேண்டும்   போன்றவற்றிற்கு ஆசைப்பட்டதில்லையே? பொதுவாக உலக மக்களுக்கு இது போதாத காலம் தான். இப்போதுள்ள கொரோனா தொற்று, வெறும் ஒரு   முன்னோட்டமாகவே  நான் கருதுகிறேன். இனிவரும் காலத்தில் கொரோனா, கல்கி அவதாரமெடுத்தாலும் வியப்பில்லை. அவ்வாறு எடுத்தால் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும்? அதனைத் தாங்கிக் கொள்ள இவ்வுலகத்தால் முடியுமா என்பது சந்தேகமே? 

 

இதற்கெல்லாம் முக்கிய காரணம், நாம் இயற்கைக்கு மாறாகச் செய்த காரியத்தால் விளைந்தது. அதனால் தான் இப்போது இந்தக்  கொடூரப்பலனை அனுபவிக்கின்றோம். இனியும் இவ்வுலகம் திருந்தாது போனால், உலகத்தின் அழிவை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது.  

 

இவ்வேளையில் ஒரு மிகப்பெரிய சந்தேகம் வருகின்றது. இதுவரையில் மருத்துவத்தில் ஏதேதோ சாதனைகளை செய்துள்ளதாக மார்தட்டிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த கொரோனா  தொற்றுக்குத்  தடுப்புமருந்து  இன்றுவரையில் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதன்  காரணம் என்ன? ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகின்றது. அதாவது  இதுநாள் வரையில், அவர்கள் என்னென்ன மருந்தினைக் கண்டுபிடிக்கிறார்களோ அந்த மருந்துகளைத் தான், மக்களுக்கு ஏதாவது ஒருவகையில்,  நோயினையோ அல்லது எதிர்ப்புச்  சக்தியினையோ  காரணம் காட்டி, அவர்களை மூளைச்சலவை செய்து காசாக்கி கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. அதனால் தானோ, இப்போது, மக்களுக்குத் தேவையானத்   தடுப்புமருந்தினை  புதிதாகக்  கண்டுபிடித்துத் தருவதற்கு இவ்வளவு தாமதமாகிறது?

 

என்னதான் சில நாடுகள் பல  தடுப்புமருந்துகளைக்   கண்டுபிடித்திருந்தாலும்,  இந்த தடுப்புமருந்தினை இவ்வளவு மாதம் இந்தந்த சோதனைகள் செய்யவேண்டும்? அந்தந்த சோதனைகள் அவ்வளவு மாதம் செய்யவேண்டும்? என்று கூறி வருகிறது மருத்துவ உலகம். அப்படி இருக்கும்போது, ஒருநாளைக்கு நூற்றுக்கணக்கில் புதுப்புது மருந்துகள் எப்படி வெளியிட முடிகின்றது? எல்லா மருந்துகளும் எல்லா நாட்டிலும் முறையாகச் சோதனைகள் நடைபெற்றுத்தான் வெளிவருகின்றதா? என்கிற ஐயப்பாடு என் மனதில் எழுகின்றது அதாவது வீண் சோதனைகள் செய்து நேரத்தையும், பணத்தையும், சேமிப்பதற்காகவும் சீக்கிரமாக மருத்துவ முகவர்கள் மூலம் மருந்துகளை அறிமுகப்படுத்தி அதை விற்றுவிட்டு, அதனுடையப் பக்கவிளைவுகள் தெரிய வருவதற்குள் அந்த  பக்கவிளைவுகளைத் தீர்ப்பதற்கு வேறு ஒரு மருந்தினை தந்து……..ஆக நோயினை உற்பத்தி செய்வதும் அதை அவர்களே தீர்த்து வைப்பதாகவேத் தெரிகின்றது.

 

 ஏனெனில், புதுப்புது வியாதிகள், புதுப்புது மருந்துகள், புதுப்புது பக்கவிளைவுகள்,  புதுப்புது அவஸ்தைகள். இவையெல்லாம் உற்றுநோக்கும்போது,  இந்தக்  கொரோனா  தொற்றும் மனிதர்களின் ஆராய்ச்சியின்போது   வெளிப்பட்டதோ   என  எண்ணம்   தோன்றுகின்றது. ஏதாவது ஒரு தவறு  செய்யாமல் தவறான செயல் நடைபெறுவதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் தவறு செய்தவனையோ, தவறு நடந்த இடத்தையோ,  வெளிப்பட்ட  அந்த  கொரோனா  வைரஸ் தாக்கியதோடு உலக   மக்களையுமல்லவா வாட்டி வதைக்கின்றது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், அந்த வைரஸ் பற்றிய தகவல்களையும், தாக்கும் குணத்தையும்,  அறிகுறியையும்,  உடனே வெளியிடாமல் சம்பந்தப்பட்ட நாடு மௌனத்தைக்  காத்தது, மனிதக் குலத்திற்கு  இளைத்த மகத்தான தீங்கு. இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் இவர்களால் இன்னும் பலவிதக் கொடுமைகளை உலகம் அனுபவிக்கக் கூடும் என்கிற எண்ணம் எழுகிறது. அம்பை எய்தவன், எவ்வித முனைப்பும் இல்லாமல் அலட்சியமாகவும் சிரத்தையில்லாமல் இருக்கும்போது, அம்பைப் பார்த்து ஏன் கோபம் கொள்வானேன்? இவர்களின் சிந்தனையும் செயலும் உலகை அழிக்கவே பயன்படும் போல் தெரிகின்றது. சென்ற சந்ததியினர்கள் பெரும்பாலும் ஊட்டமாக இருந்தார்கள்.  ஆனால் இன்றோ இந்தத்  தொழினுட்ப விருத்தியடைந்த இந்நிலையிலும் இவ்வகை பிரச்சனைகள் எழுவது என்பது மன்னிக்க முடியாத ஒன்று.  இதற்கு அந்நாட்டுத் தலைவரும் உடந்தையாக இருப்பது கொடுமையோ கொடுமை.

இத்தொற்றுக்குக் காரணம் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதே. மேலும் விளம்பரங்களில், பல ஊடகங்களில்,  எதற்கெடுத்தாலும் இப்புதுவித   மருந்தை, டானிக்கை தவறாமல் உட்கொண்டால், உங்கள் மேனியின் அழகு, திரைப்பட நடிகர் நடிகையைப் போல் ஜொலிக்கும்! உடல் பருமன் குறைந்து, கவர்ச்சியாகத் திகழலாம்! கூந்தலின் நீளம் அதிகரிக்கும்! உடல் எடையினைக் கூட்டும்! பலவிதத்தில் உடல் இன்பத்தைத் தரும்! ஞாபகசக்தியை வளர்க்கும்! அறிவையையும் உடல் உயரத்தையும் ஊட்டச்சக்தியையும் கொடுக்கும்!. விளையாட்டு வீரனைப்போல்  புகழைத்  தேடித்தரும்!’  என்று குழந்தைகள் முதல் பெரியோர்களுக்கு மருத்துவ ஆலோசகர்கள் பரிந்துரை செய்ததோடு, அதனை உட்கொள்ளச் சொல்லி வந்ததால் தான் இந்த   மாதிரியான  பிரச்சனைகள் வருகின்றது.

 

 பாரம்பரிய உணவுகளை மறந்து, துரித உணவையும் டப்பாவில் அடைத்து விற்கப்படும் புதிய உணவுக் கலாச்சாரத்தை ஆடம்பரமாக ஒரு ஆரோக்கிய மாற்றமாக நாம் ஏற்றுக்கொண்டதால் தான் வந்த வினை.  இது ஆரம்பமாகவேத் தெரிகின்றது. இந்த தொற்று வைரஸ் அப்பாவாக’ நாம் கருதினால், இனி வரப்போகும்  மகன்   வைரஸின்  தாக்கம், எப்படி இருக்குமோ என்கிற அச்சம் எழுகிறது. அதாவது தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாறு பாய்வான் என்கிற பழமொழி உண்டல்லவா!

 

இந்நேரத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.   கொரோனா   தொற்றுக்கு   தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்கும் அனைத்து ஆராய்ச்சி அறிஞர்களை, நான் கலியுகக் கடவுளாகப் பார்க்கிறேன். ஏனெனில், அவர்கள் தானே ஆபத்பாந்தவர்கள். நம்மை இரட்சிக்கும் தேவர்கள்! அவர்களோடு மருத்துவர்களும்,  செவிலியர்களும்,   துப்புரவுத்   தொழிலாளர்களும், சில தன்னார்வலர்களின் சேவைகளும், தொண்டு நிறுவனங்களும்,   காவல்துறைகளும், அரசுகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் அரசுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம். 

 

நிறைவாக, ஒவ்வொரு நாடும் தங்களை இவ்வுலகம் வல்லரசாக மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை மறந்து, ஒரு நல்லரசாக, தீவிரவாதம் இல்லாத அரசாக, உலகமக்கள் அல்லல்படும்போது உதவிக்கரம் நீட்டும் அரசாக, மக்களைப் பல தீமைகளிலிருந்து  காத்து, அவர்களில் வாழ்வில் அச்சத்தையும்,  அவநம்பிக்கைகளைத்  தகர்த்தெறியும் அரசாக,  வருங்காலத்தை வளமாக ஆக்கும் அரசாகத் திகழவேண்டும் என்பதே இவ்வுலக மக்களின் அவா ஆகும். நிச்சயம் அதற்கான செயலை இன்றுமுதல் அனைவரும் ஒன்றுபட்டு முன்னெடுத்துச் செல்வோம், வாருங்கள்! வாருங்கள்!   

 நிறைவு பெற்றது

 



 

1 comment:

  1. அவசியமான பதிவு..அருமையான துவக்கம்...தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete