
26.5.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை-
" தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தலைப்பில் கவியரங்கம்
26.5.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- " தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -" தமிழ் எங்கள் உயிருக்கு நேர்", என்ற தலைப்பில் நடந்தது மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது செயலர் கவிஞர் இரா.இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது . துணைத் தலைவர் முனைவர் இரா.வரதராசன் வரவேற்றார் . ஆலோசகர் ஆதி சிவம் தென்னவன், பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைச் செயலர் கு .கி . கங்காதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிதாயினி வனஜா நன்றி கூறினார் .
மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி அவர்களின் தலைமையில், " தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற தலைப்பில், கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , புலவர் மகா .முருகபாரதி , செ.அனுராதா , வனஜா, சமயக்கண்ணு , பா .பழனி , இராமப்பாண்டியன் , முனியாண்டி , சிவ. சத்யா , பொன் பாண்டி ஆகியோர் கவிதை பாடினார்கள் .
.முனைவர் இரா .வரதராஜன் எழுதிய 'சரித்திர நாயகர்கள்' கவிதை நூல் வெளியிட்டனர் .
மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கினார் . சிறப்பாக கவிதை பாடிய கவிதாயினி அனுராதா , கவிதாயினி சிவ. சத்யா , பா .பழனி ஆகியோர் விருது பெற்றனர் .
முனைவர் ஸ்ரீ வித்யா பாரதி , தா .மு .எ.க .ச . செயலர் ஜி .பாலசுப்ரமணியன் , பறம்பு நடராசன், தேவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்க்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
நன்றி.தினமலர் நாளிதழ்.28.5.2024
நன்றி.மாலை முரசு நாளிதழ் 28.5.2024
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
- கவிஞர் இரா. இரவி
***
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார்
தமிழ்க்கனல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தமிழர்கள் தான் தமிழை மதிக்கவில்லை இன்று
தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் நிலை
ஆங்கிலமோகம் கொண்டு அலைகின்றான்
ஆங்கிலவழிக்கல்வியை பெரிதும் விரும்புகின்றனர்
தமிழைத் தமிழாகப் பேசுவதே இல்லை
தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர்
தமிழன் அங்காடிகளில் தமிழ்எழுத்து இல்லை
தமிழன் நாவில் நல்லதமிழ் பேசுவதே இல்லை
அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி
ஆரம்பக்கல்வி தமிழில் இருப்பதுதான் சிறப்பு
தொலைக்காட்சிகளோ தொல்லைக்காட்சிகளானது
தொலைக்காட்சிகளிலும் தமிங்கிலமே பேசுகின்றனர்
தமிழர்களுக்கு தமிழ்ப்பற்று தானாக வரவேண்டும்
தமிழ் உலகின் முதல்மொழி என்பதை உணர வேண்டும்
பலநாடுகளில் ஒலிக்கும் மொழி நம் தமிழ்
பன்னாட்டின் ஆட்சிமொழி பண்டைத் தமிழ்
உலகம் அறிந்துள்ளது தமிழின் தொன்மையை
உள்ளூர் தமிழர்கள் அறியாமல் உள்ளனர்
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்
நேற்று முளைத்த காளான் தான் ஆங்கிலமொழி
என்று பிறந்தது தெரியாத தொன்மை தமிழ்மொழி!
*******************
இன்று ஒரு கவி பாடவா....
"தமிழ் எங்கள் உயிர்க்கு
நேர்."-
(அறுசீர் விருத்தம்.)
அப்பழுக்கில் லாத தமிழெங்கள்
அழகிற்கு நேரென் பேனே!
தப்பேதும் செய்யா தமிழெங்கள்
தரணிக்கு நேரென் பேனே!
எப்போதும் இன்பத் தமிழெங்கள்
இளமைக்கு நேரென் பேனே!
உப்பரிகையில் ஏற்றும் தமிழெங்கள்
உயிர்க்கு நேரென் பேனே!
&&&&&
(ஏழுசீர் விருத்தம்.)
சொல்தமிழா! சொல்வாய்
சொல்லாலே வெல்தமிழ்
சுடரொளிக்கு நேரெனச்
சொல்லவா?!
நில்தமிழா! நிற்பாய்
நிற்காமல் ஓடும்தமிழ்
நதிநீர்க்கு நேரெனச்
சொல்லவா?!
கல்மனதில் கண்ஈரம்
கசிந்துருகும் இன்தமிழ்
கண்ணிமைக்கு நேரெனச்
சொல்லவா?!
வில்லுக்கும் புலிக்கும்
மீனுக்கும் துளிதமிழ்
வீரத்திற்கு நேரெனச்
சொல்லவா?!.
கண்ணதாசனுக்குத்
தாசன் -கவிஞன்
விஸ்வநாதன்.
15/05/2024
9.32 A..M.
**************************
தமிழெங்கள் உயிருக்கு நேர்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
தமிழர்களுக்குத் தமிழ் சுமைதாங்கி
தாக்க நினைப்பவர்களுக்கு இடிதாங்கி
தமிழன்னைக் காப்பாள் மனமிரங்கி
தரணியின் நிலைப்பாள் புகழோங்கி
பிரபஞ்சத்தில் உலகாகி
உலகில் மனிதர்களாகி
மனிதர்களில் மொழியாகி
மொழிகளுள் தமிழாகி
தமிழுக்குள் உயிரானது
உடலாய் வடிவெடித்த மொழி
உயிராய் நுழைந்த தமிழ்
உயிருக்கும் தமிழுக்கான மரபு
இமைக்கும் கண்ணுக்கான உறவு
காட்டை ஆள்வது சிங்கம்
கடலை அடக்குவது கரைகள்
மலைகள் மூடுவது மேகம்
மொழிகளில் மூத்தது தமிழே
உயிர் உள்ளோர் வாழ்வர்
உயிருள்ள மொழியே வாழும்
மாற்றங்களுக்கு அசராத தமிழ்
ஏற்றங்களுக்கு உகந்த தமிழ்
***********
**********************
No comments:
Post a Comment