Pages

Wednesday, 17 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம் - A JOYFUL NEW WORLD

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம் : 18 மனிதா ! மகிழ்ச்சி கொண்ட 
புது உலகம் செய்வோம் -
WE WILL MAKE A JOYFUL NEW WORLD


இனிய மனிதா! உள்விதி மனிதன் உன்னுடன் பேசுகிறேன்! நீ செய்யப் போகும்  செயல் நல்லதா? அல்லது கெட்டதா? என்று எனது ஜீவ ஓட்டத்தின் மூலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன்! அதை நீ உணர்ந்திருக்கின்றாயா? நீ நினைக்கும் எண்ணத்தில் அல்லது செய்யும் செயலில் ஏதேனும் தீமை விளைவிப்பதாக இருந்தால் அதை கோபமாக வெளிக்காட்டுவேன், இதயம் படபடக்கும், உடல் வேர்க்கும், உடம்பு நடுங்கும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும், மூச்சு வேகம் அதிகரிக்கும், உடலின் வெப்பம் கூடும், எதோ ஒருவித பயம் உடல் முழுவதும் பரவும், யாரை பார்த்தாலும் ஓடி ஒளிந்து கொள்ளச் சொல்லும். குற்றஉணர்வு எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். இவைகளெல்லாம் எனது ஜீவ அல்லது இரத்த ஓட்டமே செய்கின்றது. இந்த உள்விதி மனிதனின் எச்சரிக்கை என்று புரிந்து கொள். அந்த தீய செயலுக்கு நான் உடந்தை இல்லை என்று இப்படிப்பட்ட உணர்வின் மூலமாக உனக்கு உணர்த்துகிறேன் என்பதை இப்போதாவது தெரிந்துகொள்.



அன்பு மனிதா! உனக்குள் மேற்கூறிய செயல் நடக்கிறதென்றால் அந்த செயல் செய்யலாமா! வேண்டாமா! என்று என்னுடன் வாதம் செய். உனக்கு அதிக சக்தி தருகிறேன். அந்த நடுக்கத்தை நான் போக்குகிறேன். நீ  திணறாவண்ணம்  தைரியம் தருகிறேன். என்னுடன் பேசும்போது உனக்கு அனைத்துவிதமான பயம் நீங்கும். இனி உனக்கு நான் புது சக்தியைத் தருகிறேன். நான் இருக்கும் போது பயம் கூடாது.



மதிப்புள்ள மனிதா! கடவுளை அறிவது பரமரகசியம் என்றும் அதை வெளியே சொன்னால் பலன் கொடுக்காது என்று பலர் சொல்லி அறிந்திருப்பாய். அது சரிதானா? பிரிய மனிதா! எந்த ஒரு ரகசியமான பொருட்களோ, செயல்களோ, எண்ணங்களோ இந்த உலகில் இருந்தால் அது மானிடஜென்மங்களுக்குப் பயன்படாது. அதைப் பற்றி நீ அதிகமாக கவலை கொள்ளவேண்டாம். ரகசியம் என்பது இருவருக்கிடையே நடக்கும் ஒருவகைப் பரிவர்த்தனை. அது சக்தியாக இருந்தாலும், அறிவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் தான் அதற்குப் பெருமை உண்டு. மதிப்பு உண்டு. அப்போது தான் பலருக்குத் தெரியும். அவர்களுக்கும் உபயோகமாகவும் இருக்கும். தெரிந்து கொள்ளாத, அறியப் படாத எந்த ஒரு ரகசியமும் உனக்கு அவசியமற்றவை. உனது வாழ்கையில் உபயோகப்படாதவை என்பதை நினைவில் வைத்துக் கொள். சொல்லப்போனால் அந்த இரகசியத்தால் உனக்கு குழப்பமும், கெடுதலும் உண்டாகும். ஏன் கொஞ்சம் கொஞ்சமாக உன்னைக் கொள்ளும் நஞ்சு என்றும் தெரிந்து கோள். அதனால் அவைகளின் மீது நாட்டம் கொள்ளாதே! புரிகின்றதா?



பாசமுள்ள மனிதா! அதாவது ஒரு தகப்பன் நீண்ட காலம் கடுமையாக உழைத்து, பொருட்களை, பணத்தை சேர்த்து வைத்து கொஞ்சமாய் செலவு செய்து, அவருடைய மனைவி, மக்களுக்குத் தெரியாமல் கண்காணாத இடத்தில் அவருக்கு  மட்டும் தெரியும் இடத்தில் சேர்த்த செல்வங்களை ஒளித்து வைத்தார். தேவைப்படும் நேரத்தில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்து வந்தார். அவருடைய கடைசி காலத்தில் அந்த இரகசிய இடத்தை தன்னுடைய மக்களுக்கு தெரிவிக்காமலே அவருடைய ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம்  நின்று விட்டது. அந்த ரகசிய இடத்தில் இருக்கின்ற செல்வம் யாருக்குத் தெரியும். யாருக்கும் பயன்படாமல் வீணாக அல்லவா போய்விட்டது. அவர் தன்னுடைய  மக்களுக்குத் தர நினைக்காத செல்வதைப் பற்றி அவருடைய மக்கள் கவலைகொள்வார்களா? இதற்காவா அவர் கடுமையாக உழைத்து சம்பாதித்தார். அதுபோல நான் எந்தவிதமான ரகசியத்திற்கு அப்பாற்ப் பட்டவன். 

இரக்கமுள்ள மனிதா! உன் ஜனனம் உனது கண்களுக்குத் தெரியாத ஆண் - பெண் என்ற இரண்டு ஜீவ அணுக்களால் உண்டானது என்று சொன்னால் நீ நம்ப மாட்டாய். அதை என்  செயலின் மூலம் எனது மகத்தான ஆன்மா ஓட்டத்தின் சக்தியினால் காட்டவே ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் அதை பொத்தி பொத்தி அந்த கரு, ஜீவ உடலாக உருவாதற்கு இந்த உள்விதி  மனிதனின் உடல், பொருள், ஆவி இந்த மூன்றையும் கொடுத்துப் பத்து மாதத்தில் ஒரு குழந்தையாக மாற்றி உன்னை போல் அனுபவிக்கவும், மகிழ்ச்சியாக இந்த குழந்தையைக் காக்கும் பொறுப்பை நான் உனக்குத் தந்திருக்கிறேன்.

அன்பு மனிதா! நீ கருவாக உருவாகி பிறகு குழந்தையாக மாறும்போது உனக்கு சுவாசம் கொடுத்து, அதற்குண்டான பக்குவத்தை கொடுத்து அவளை தாயாக்கி, புதிய ஜீவ ஓட்டமுள்ள ஜீவனை தனியாக பிரித்து இந்த பூமியில் பிறக்கச் செய்து அதனுள் ஆன்ம ஓட்டமாக இருந்து வாழ்க்கைக்குத் உதவி  புரிந்து வருகிறேன். புதிதாக ஜீவன் உருவாகும்போது எனது வேலை அதிகமாகிறது. உனக்குள்ள இந்த உலகப் பங்கை நான் உனக்கு கொடுக்கவேண்டுமல்லவா! அதற்குத் தான் இந்த உள்விதி மனிதன் எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. அதற்குள் நீ திசை மாறிப் போகநினைக்கும்போது உன்னை இழுத்து என் வழிக்கு கொண்டு வந்து, உன்னை ஆயுள்  முழுவதும் காப்பாற்றும் அந்த 'காத்தல்' வேலையை செய்யவே உனக்குள் நான் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். 



இனிய மனிதா! இப்போது சொல். இந்த பூமியின் ரகசியத்தைக் காக்க நினைத்து உன்னைக் கருவிலேயே முடித்துவிட்டால், என்னால் படைக்கப் பட்ட இந்த உலகத்தை யார் அனுபவிப்பது? இந்த உலகில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நீ தான் தலைவன். உனக்குத் தான் மனித உயிர்களை காக்கும் சக்தியும், அதோடு மற்ற அனைத்து உயிர்களையும் காக்கும் சக்தி உன்னிடத்தில் இருக்கின்றது. அதை அழியாதவாறு தொடர்ந்து தரவே உனக்குள் இந்த உள்விதி மனிதனாக வந்துள்ளேன். இந்த காக்கும் சக்தியை வீணாக்காதவாறும் உனது உயிர் ஓட்டம் தடைபடாமலும்  இருப்பதற்கு உதவி செய்ய வந்துள்ளேன்.



பாசமுள்ள மனிதா! என்னால் தான் பாரதி உருவில் 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கினார். அது தான் உண்மை. அது தான் சத்தியம். 

அன்பு மனிதா! முன்பு கல்வி, வீரம், ஆன்மிகம் குருகுலம் முறையில் நடந்தது. அதில் அரச குடும்பம் மற்றும் உயர் குடும்பம் கல்வி, கேள்விகளில் கற்று திகழ்ந்தனர். மக்களைக் காக்கும் கல்வியைக்  கற்றனர். அதனுடன் ஆன்மீக ஒழுக்கத்தையும் கற்றனர். ஆனால் சதா தெய்வம், கடவுள் தொண்டு செய்து, கடவுளின் புகழை பாடிக் கொண்டிருந்தனரா? அவர்கள் கற்றது, கற்பிக்கப்பட்டது இந்த மனித குலத்திற்கு நன்மை செய்வது எப்படி? அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படித் தடைபடாமல் அளிப்பது ? அவர்களைக் காப்பது எப்படி? எதிரிகளிடமிருந்து மக்களை, நாட்டைக் காப்பது எப்படி? உணவு தானியங்கள் பஞ்சமில்லாமல் எல்லா காலத்திலும் கிடைக்கப் பெறுவது எப்படி? விவசாயத்தை மழையினால் செழுமைபடுத்துவது எப்படி? ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளைக் காப்பது எப்படி? நீதி தவறாமல் அரசாள்வது எப்படி?  போன்றவைகளைத் தான் அதிகமாகக்  கற்றுக்கொண்டனர். அது அந்தக் காலம்.



இனிய மனிதா! இந்த காலத்தில் கல்வி கற்றவர்களா ஆட்சி செய்கிறார்கள்? கல்வி வாடை தெரியாதவனுக்கு கல்வி அமைச்சர் பதவி! நிதி என்றால் என்னவென்றே தெரியாதவருக்கு நிதியமைச்சர். மக்களின் நிலைமை புரிந்து கொள்ளாதவருக்கு பெரிய அமைச்சர் பதவி! விவசாயம் தெரியாதவருக்கு விவசாயத்துறை அமைச்சர். பக்கத்து நாட்டை பற்றித் தெரியாதவருக்கு வெளியுறவு துறை அமைச்சர்! இப்படி தகுதி இல்லாதவர்களை எல்லாம் அமைச்சராக்கி கொள்வதன் ரகசியம், மேல்மட்டத் தலைவர்களுக்கு எப்போதும் ஜால்ராவாக இருப்பதற்குத் தான். எல்லாம் தெரிந்த மனிதனை நிர்வாகத் திறன் இல்லாத தலைவரால் சமாளிக்க் முடியாது. ஆக இப்போதுள்ள தலைவர்களா அநேகர் தனது சொந்த லாபத்திற்கும், பெரும் புகழும் பெறுவதற்கும் மக்களாகிய உன்னைப்போன்றோரையும் என்னையுமல்லவா அடிமையாக்கிவிட்டனர். இனி இந்த நிலை நீடித்தால் மனித குலம் அவதிப்படும். கூடிய விரைவில் மக்களிடையே எழும் போட்டியினால் மனிதகுலம் அழிவதற்குள்  எல்லோரையும் காக்கும் பொருட்டு நான் உனக்குள் வந்துள்ளேன். 


பாசமுள்ள மனிதா! எல்லோரும் உயிர் வாழவேண்டும், உணவு கிடைக்கவேண்டும் அதற்காக இலவசமாக பஞ்சபூதங்களாகிய காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு (சூரிய ஒளி ) ஆகியவை அளவுக்கு அதிகமாகவே தந்திருக்கின்றேன். உனக்கு எளிதாக இருப்பதற்காக மரங்களைக் கூட சிறிய விதைகளாகக் கொடுத்திருக்கிறேன். ஏனெனில் உன்னிஷ்டப்படி அதை எங்கு வேண்டுமானாலும் விதைத்துக் கொள்ளலாம். இப்படி இருக்கும்போது நான் படைத்த உலகத்தை நான் இருக்கும்போதே, நான் அமைத்ததை மாற்றியமைக்கத் துணிந்ததை எண்ணி வருத்தமடைகிறேன். அதாவது விவசாயம் செய்த நிலத்தை மாடி வீடு கட்டினால் பின்னால் அதுவே உனக்கு எமனாக மாறிவிடும் என்பதை உஷார் படுத்தவே நான் வந்துள்ளேன்.

பிரிய மனிதா! எந்த நாட்டில் விவசாயம் அழிகின்றதோ அங்கே மறைமுகமாக பாலைவனம் உருவாதற்கு வழிசெய்கிறாய். இதனால் இப்போது உனக்கு பணம் கிடைக்கும். ஆனால் உனது சந்ததியினர் நீ இப்போது செய்த காரியத்தை மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் அப்போது வேதனைபடுவதை நீ இப்போது நினைத்துப் பார். இதை எப்போதும் மறந்துவிடாதே! நான் இலவசமாக கொடுத்ததைக் கொண்டு, உணவு உற்பத்திச் செய்கின்ற பூமியைப் பற்றி கவலைபடாமல் கட்டாந்தரையாக்கி அதை பளிங்குகற்களால் மாட மாளிகை, கூட கோபுரங்களைக் கட்டினால் போதுமா! குடியிருக்க அழகான வீடுமட்டும் இருந்துவிட்டால் போதுமா! உணவுக்கும், தண்ணீருக்கும் எங்குபோவாய்?



இனிய மனிதா! பூமிக்கு நான் தரும் இயற்கையானச் செழுமையினால் தான் மனிதனின் வாழ்க்கை மகிழ்ச்சி அடையமுடியும். ஆனால் அதை சுயநலத்திற்காக, நீ படைத்தச் சலவை பணத்திற்கு அதை அழிக்க நினைப்பதைத் தடுத்து நிறுத்தவே நான் வந்துள்ளேன். என்னுடைய தாராள மனம், பொதுவான நோக்கம், நன்மையான குணம் அனைத்தும் உன்னுடையத் திமிறினால், தீய எண்ணங்களினால் குறைந்துவருவதை தெரிந்து இனிமேலாவது சுதாரித்துக் கொள். உனக்கு மிகவும் அவசியமானதை நீ பார்த்தால் தெரிவது போல் உனது தேவைக்கும் அதிகமாக பூமிக்கு மேலேயும், உனக்குப் பயன்படாத அல்லது சிறிது மட்டும் தேவைப்படும் பொருட்களை உனக்கு கண்களுக்கு அல்லது உனது அறிவுக்கு எட்டாத அளவுக்கு பூமிக்குக் கீழே அல்லவா படைத்திருந்தேன். ஆனால் உனது அறிவினால் அதை மேலே கொண்டுவந்து உனது இடத்தில் பரப்பிக்கொண்டு வந்தால் கடைசியில் நீ நிற்பதற்கு கூட இடமிருக்காது. ஜாக்கிரதை. நான் எண்ணுவதற்கு நேர் மாறாக, தலைகீழாக போனால் மனித இனத்தை நானே அழிந்துவிட நேரும். எனது ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை கூட அழிக்க வல்லது. இப்போதே தண்ணீர்  கொடை குறைந்து சூரிய வெப்பக் கோடை அதிகரித்து வருகின்றதா! ஏன் இந்த மாற்றம். நீயாக நிறுத்தாவிடில் எனக்கு யாருக்குள் புகுந்து எப்படி நிறுத்துவது நன்றாக அறிவேன். அதற்கான தருணம் வந்துவிட்டதால் நீ இதுநாள் வரை தேடியும் கிடைக்காமல் நானாகவே வந்துள்ளேன்.

மதிப்புமிக்க மனிதா! இந்த மாற்றம் நீடித்தால் நான் படைத்த இந்த உலகில் நானே அழிந்துபோக நேரிடும். அதை தவிர்க்கத் தான், என்னையும், உன்னையும் காப்பாற்றிக் கொளவதற்கு உன் மூலமாகப் பல நன்மைதரும் காரியங்களைச் செய்யப் போகிறேன். உனக்கு நிம்மதி, சந்தோஷத்தைக் கொடுத்து, பசியை நீக்கி, பஞ்சபூத அழிவிலிருந்து காக்கவே செயல்பட ஆரம்பித்துள்ளேன். இனி இந்த உலகம் புதுபிக்கப் படப்போகிறது. புது உலகம் படைத்து உன்னைப் போன்றவர்களின் ஆற்றல் மற்றும் அறிவை உபயோகித்து பெருவாழ்வு வாழ வழிகாட்டியாகவும் இருக்க வந்துள்ளேன்.



பெருமை மிக்க மனிதா! என்னை உணர்வது எல்லோராலும் முடியும். ஆனால் அதை ரகசியம்.. ரகசியம் என்று ஒரு சிலர் கூறி உன்னைப்போன்றோர்களை ஏமாற்றி வருகிறார்கள். நீயோ அவர்களிடத்தில் ஏமாந்து கொண்டு உன் செல்வத்தை , பணத்தை அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டி கொண்டும், மறைமுகமாக உனது கடமையை மறக்கடித்து, தொடர்ந்து கஷ்டங்களை கொடுத்து கடைசியில் அவர்களுக்கு அடிமையாகி கொண்டிருப்பதைத் தடுக்கவே உள்விதி மனிதனாக உனக்குள் வந்துள்ளேன். என்னைப் பற்றி சிந்திக்காமல், என் உதவியை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் தேன் கலந்த நஞ்சான பேச்சில் மயங்கி என்னை உதாசீனப்படுத்துவதை இப்போதாவது நிறுத்திக்கொள். 

இனிய மனிதா! நான் என்னுடைய படைக்கும் தொழிலை அறிவுள்ள உனக்குக் கொடுத்தால் இந்த உலகம் சுபிட்சம் அடையும். அனைவரும் மகிழ்ச்சியடைவர் என்று இருந்த எனது எண்ணம் இப்போது பாழாய் போகுமுன் உன்னை நல்ல வழிக்கு கொண்டு வந்து எனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளவே வந்துள்ளேன். 



இனிமையான மனிதா! தினமும் எத்தனை ஜீவன்களின் ஆன்ம ஓட்டத்தைத தடைபடாமல் இயங்கச் செய்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் உன் முன்னால் நான் நிற்பேன். வேஷம் போடும் மனிதனை நம்புவதும், அவனுக்குத் துணை போவதை இதோடு நிறுத்திக்கொள். புது உலகம் படைப்பதற்கும், மனித ஜீவ ஓட்டங்களை காப்பதற்க்கும் இப்போதிலிருந்து நல்ல முடிவு எடுத்து அதன் படி நடப்பாயாக!

                

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
  




  

'வெற்றி ' இடத்திற்குச் சென்ற அனுபவங்கள் - AN EXPERIENCE TO REACH 'SUCCESS' PLACE

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

'வெற்றி ' இடத்திற்குச் சென்ற அனுபவங்கள் -
AN EXPERIENCE TO REACH 'SUCCESS' PLACE  


'வெற்றி ! வெற்றி ' பலர் சொல்கிறார்களே! அதை அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கின்றது . ஆனால் வழி  தன் தெரியவில்லை என்று பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் ! அதற்காக அந்த வெற்றியே உங்களுக்கு வழியை காட்டுவதோடு அது தன்னுடைய அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.


நான் தான் வெற்றி! வெற்றி பெறுவது என்பது சற்று கடினம் தான். அதை நீ பார்க்கும் அல்லது  சந்தித்த கஷ்டங்கள்  அல்லது பிரச்சனைகள் மூலம் எளிமையாக விளக்குகிறேன். முதலில் இந்த வெற்றி அறிமுகமாவது பிரச்சனை எதிர்கொள்ளும்போது அல்லது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் போது . 


நான் பிரச்சனை அல்லது கிடைத்த வாய்ப்பில் வெற்றியடைவதற்கு ஆர்வத்துடன் ஓட ஆரம்பித்தேன். அதற்கான வழியை தேட ஆரம்பித்தேன். சிறிது தூரத்தில் அதன் வழியில் ஒரு திசை காட்டியை பார்த்தேன். அது வலது மற்றும் இடது என்று இரண்டு வழியைக் காட்டியது. இடது பக்கம் திசைகாட்டியில் 'வெற்றி (குறுக்கு வழி)' என்றும் வலது பக்கம் திசை காட்டியில் 'வெற்றி நேர் வழி ' என்றும் இருந்தது. வலது பக்கம் செல்வதா? இடது பக்கம் செல்வதா? என்று முடிவு எடுக்க முடியாமல் தவித்தேன். 


என்னானாலும் சரி என்று இடது பக்கம் அதாவது வெற்றி(குறுக்கு வழி ) தேர்ந்தெடுத்தேன். அதன் பாதை பளபளவென்று அருமையாக இருந்தது. இவ்வளவு எளிதாக இருகின்றதே! என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென்று ஒரு பெரிய பள்ளம் (அதாவது அது தோல்வியை குறிக்கும்). அதற்கு பக்கத்தில் எச்சரிக்கை பலகை ஓன்று இருந்தது! அதில் 'இதேபோல் சில பள்ளங்களை தாண்டிச் சென்றால் வெற்றி யை அடையலாம் ' என்று எழுதி இருந்தது. இந்த ஒரு பள்ளத்தை தாண்டவே சிரமம். மேலும் சில பள்ளங்களை எப்படித் தாண்டுவது ! அடி ஆத்தாடி! இந்த குறுக்கு வழியே வேண்டாம். தப்பித்தேன் . பிழைத்தேன். அந்த வலது பக்கம் நேர் வழியிலேயே வெற்றிப் பயணம் செய்யலாம் என்று அவசரம் அவரமாக ஓடினேன். ஆரம்பத்திலேயே முடிவு சரியாக எடுத்திருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்காதே! என்று மனதில் நொந்துகொண்டேன்.


வலது பக்கம் ஆரம்பமே கரடுமுரடான கற்களும் முட்களும் நிறைந்திருந்தது. (இவைகள் அனைத்தும் வெற்றியை அடையவிடாமல் தடுக்கும் இடையூறுகள்). இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது அதனை விலக்கியும் , தாண்டியும் சென்றேன். அந்த வழியில் செல்ல செல்ல கற்களும் முற்களும் மறைந்தன.(அதாவது இவைகள் கடின உழைப்பினால் கிடைத்த பலன்). 'இனி இதுபோல் எந்த கஷ்டம் வந்தாலும் தைரியமாக, துணிச்சலாக சமாளிப்பதற்கு தயாராக வேண்டும்' என்று மனதில் உறுதி கொண்டேன்.

இப்படியே சென்றுகொண்டிருக்கும் போது கடுமையான வெயில் உடலை வாட்டி எடுத்தது. தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் விடாமுயற்சியினால் தண்ணிரை தேடி அலைந்தேன் . அதோ ஒரு அழகான சுனை. ஆஹா.. என்ன அருமையான தண்ணீர். இப்போது எதையும் தாங்கும் மனமும், புது தெம்பும் கிடைத்துவிட்டது. இனி அடுத்த படி கடப்பதற்கு தயாராகி விட்டேன்.


அந்த பாதை மீண்டும் எவ்வித கஷ்டம் கொடுக்காமல் சென்றன. ஆனால் சிறிது நேரத்தில் உடலை நடுங்கவைக்கும் கடுமையான குளிர் தாக்க ஆரம்பித்தது. எனது மன உறுதி அதைக்கண்டு அஞ்சவில்லை. சலிக்காமல் அந்த பாதையை கடந்தேன். அதன்பிறகு இளம் வெயில் எனக்கு சற்று ஆறுதல் தந்தது.


மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன். சட்டென்று எதிர்பாராத பலத்தகாற்றுடன் ஒரு சூறாவளி எனது பயணத்தை தடுக்கபார்த்தது. ஆனால் அதைகண்டு எனது வெற்றி லட்சியத்தில் பின் வாங்காமல் பொறுமையாக உறுதிமிக்க மரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அனைத்தும் காணாமல் போய்விட்டன. அந்த இடமே அமைதியாக திகழ்ந்தது.


இப்போது எதையும் தாங்கும் தன்னம்பிக்கை வந்தது. அந்த வழியில் முன்னேறிச்செல்லும்போது ஒரு 'அறிவிப்பு பலகை' ஒன்று இருந்த்து. அதில் இன்னும் 10 நிமிடத்திற்குள் 'வெற்றி ' இடத்திற்க்குச் செல்லும் படகு புறப்படத் தயாராக இருக்கிறது. அங்கு செல்ல விரும்புவோர் அதற்குள் சென்றால் தான் படகை பிடிக்கமுடியும். அதன்பின் படகு எப்போது வரும் என்று சொல்லமுடியாது.இந்த படகை விட்டுவிட்டால் மீண்டும் நீங்கள் வந்த வழியே  திருப்பிச் செல்ல வேண்டியிருக்கும்.என்று இருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு திரும்பிச் செல்வதா! கூடவே கூடாது!


பத்து நிமிடம் இருக்கின்றதே ! எனது ஆற்றல் அனைத்தையும் கொண்டு அந்த தூரத்தை அதற்கு முன்னமே கடந்தேன். அங்கே எனக்காக காத்திருந்த அந்த அழகான படகில் ஏறினேன். இன்னும் சிறிது நேரத்தில் 'வெற்றி' இடத்தை அடையப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் மீண்டும் புயல் மற்றும் மழையில் படகு தத்தளித்தது. கடைசியில் தாக்கு பிக்க முடியாமல் கவிந்தது. நான் எனது அறிவையும், திறமையும் கொண்டு ஒரு மரக்கட்டையின் உதவியால் 'வெற்றி ' இடத்தை அடைந்தேன்.

 
அங்கு நான் கண்ட காட்சி , அந்த சொர்க்க லோகத்தின் ஒருபகுதி தனியாக பிரிந்து வந்ததுபோல் ஒரு ஆனந்தம். அங்கு பூத்து குலுங்கும் வண்ண மலர் சோலைகள், அருவிகள், இதமான காற்று , மனதிற்கு குளிர்ச்சி தரும் அருமையான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு வகைகள், அன்பான உபசரிப்பு, கண்கவர் மாளிகை இன்னும் பலவற்றை கொண்டிருந்தன. ஓஹோ .. இது தான் வெற்றி இடமா! இதுவரை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இங்கு வரும்போது அனைத்து கஷ்டங்களையும் மறக்கச் செய்துவிட்டன. எங்கு எந்தவித கஷ்டமில்லாமல் சுதந்திரமாக, ஆனந்தமாக இருக்கலாம்!

இது தான் எனது வெற்றிப் பயணத்தின் கதை.

கஷ்டங்கள் எது வந்தாலும் கலங்காதீர்கள்!
உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்!

வெற்றி அடைவீர்கள்.


அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  

           
நன்றி!

இன்னும் வரும்...

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com           

Tuesday, 16 October 2012

உங்கள் வெற்றி , குறிக்கோளில் ஐக்கியமாவதில் - GET YOUR SUCCESS WITH FOCUS IN YOUR AIM

அனுபவ பொன்வரிகள் 

மதுரை கங்காதரன் 

உங்கள் வெற்றி , நீங்கள் குறிக்கோளில் ஐக்கியமாவதில் இருக்கின்றது -
GET YOUR SUCCESS WITH FOCUS IN YOUR AIM 


எத்தனையோ தலைவர்கள், மகான்கள், சமயத் தலைவர்கள், அறிவுச் சான்றோர்கள் போன்றவர்களின்  அழகான , பொன்னான, அருமையான பேச்சுகள் கேட்டிருப்பீர்கள் ! எவ்வளவோ புகழ்பெற்ற, தரமிக்க , அறிவைக்கொடுக்கும் புத்தகங்களை படித்திருப்பீர்கள்  ! எவ்வளவோ இனிமையான பாடல்களை கேட்டு ரசித்திருப்பீர்கள் ! எவ்வளவோ நல்ல படங்களைப் பார்த்திருப்பீர்கள் ! எத்தனையோ மனிதர்களிடம் பேசியிருக்கின்றோம் ! பழகியிருக்கின்றோம் ! எத்தனையோ வெற்றிச் சரித்திரங்களை , சாதனையாளர்களை, சிந்தனையாளர்களை, சமூக சேவகர்களை, தொண்டு உள்ளங்களை, அறிஞர்களை இந்த மனித சமுதாயம் கொடுத்திருந்தாலும் மனிதனின் முன்னேற்றம் என்பது கேள்விக் குறியாகத் தான் இருக்கின்றது. ஒரு சிலர் மட்டும் வெற்றியடைகிறார்களே அவகளுக்கு மட்டும் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகிறது.


எத்தனயோ பாடல்களை திரும்ப திரும்ப கேட்டிருந்தாலும் அவற்றில் எத்தனை பாடல்கள் நமக்கு முழுமையாக தெரியும். (நான்கு வரிகள் தெரிந்தாலே அதிகம் தான் என்கிறீர்களா ! ). அதேபோல் ஒரு விருப்பமுள்ள புத்தகத்தை படித்து முடித்தபிறகு அதிலிருக்கும் ஒரு நாலு வரிகளாவது நமக்கு தெரியுமா! அல்லது நினைவில் நிற்கின்றதா! இது இவ்வாறு இருக்க...


அரிச்சந்திர நாடகத்தை எத்தனையோ பேர் பார்த்திருப்பார்கள் ! ஆனால் காந்தியைப் போல் சத்தியம் தவறாமல் எத்தனைபேர் நடக்கிறார்கள்? அந்த நாடகம், காந்தியை மாற்றியது போல் ஏன் அனைவரையும் மாற்றவில்லை!

எத்தைனையோ பேர் போதி மரத்தடியில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால் புத்தரை போல ஏன் அனைவராலும் மாறமுடியவில்லை.

எத்தனையோ பேர்கள் ஏழையைக் கண்டு வருத்தப்பட்டாலும் , இரக்கப்பட்டாலும் 'அன்னை தெரசா ' போல் எத்தனைபேர் ஏழைகளுக்கு பொறுமையாக சேவை செகின்றனர்.

எத்தனை பேர்கள் தலையில் ஆப்பிள் விழுந்திருந்தாலும் எத்தனை பேர் சர் ஐசக் நியுடடனை போல் ஏன் புகழை பெறவில்லை.

எத்தனையோ  தாயார்கள் தங்கள் மகனுக்கு கல்வி கற்றுக்கொடுத்திருந்தாலும் ஏன் தாமஸ் ஆல்வா எடிசனைப் போல் அறிவியல் அறிஞராக ஆக்கமுடியவில்லை.

எத்தனயோ கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் சச்சின் டெண்டுல்கரை போல் புகழ் பெற முடியவில்லை. 

இப்படி இன்னும் அதிகமான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 


இதிலிருந்து என்ன தெரிகின்றது! உதாரணமாக ஒரு புத்தகத்தை படித்தாலோ, அல்லது படித்து மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதன்படி யார் ஒருவர் தவறாது தினமும் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களே வெற்றிக்கு தயாராகிறவர்கள்!


அதாவது தாங்கள் தேர்ந்தெடுக்கும்  குறிக்கோள் மற்றும் கொள்கையில் ஐக்கியமாகி , அதையே சிந்தித்து , அதன் கர்மமே கண்ணாக, கடமையாகக் கொண்டு, எந்த ஒரு இடையூறு வந்தாலும் அதைத் தாண்டி, ஒவ்வொரு நொடியும் விழிப்புடன், விடாமுயற்சியுடன், கடின உழைப்போடு தங்கள் செயலிருந்து விலகாது இருந்ததால் தான் இவ்வளவு பெரிய செயலை, புகழை அடைய முடிந்தது.


குறிக்கோளில் ஐக்கியமாதல் ஆர்வம் இருந்தால் மட்டுமே முடியும். ஆர்வம் வெறியாக மாறுகின்றது. அந்த வெறி மனவலிமையும் , துணிச்சலையும் தருகின்றது. பிறகு குறிக்கோள் அடைவதற்கான  அறிவையும்,ஆற்றலையும் தேடச் சொல்கிறது . அறிவும், ஆற்றலும் கிடைக்கும்போது முயற்சியும், பயிற்சியும் கிடைக்கின்றது. பிறகு கடின உழைப்பு சேரும்போது கனவான குறிக்கோள் நிஜமாகிறது.  

ஆகவே உங்கள் குறிக்கோளுடன் ஐக்கியமாகுங்கள்!


அதுவே அடுத்தடுத்து உந்து சக்தி கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்!  


இன்னும் வரும்...

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 


    

Monday, 15 October 2012

உள்விதி மனிதன் பாகம் : 17 விதி, மாயையை உள்விதி மனிதனால் வெல்வாயாக - BEAT YOUR FATE BY YOUR INNER MAN

உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 

பாகம் : 17 விதி , மாயையை உள்விதி மனிதனால் வெல்வாயாக -
BEAT YOUR FATE BY YOUR INNER MAN

மதிப்பு மிக்க மனிதா! பரவாயில்லையே, இந்த உள்விதி மனிதனை நீயாக விரும்பி அழைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. எனது வேலையை நீ எளிதாக்குகிறாய்!  சரி, எதெற்கெடுத்தாலும் மாயை, விதி என்ற இருவகைகளை பேசுவதை கேட்டிருக்கிறோம். அதாவது மகான்கள் மாயை எனவும், மனிதர்கள் விதி எனவும், நேரம், காலம் எனவும் பேசுவார்கள். அது புரிந்தோ அல்லது புரியாமலோ தலையை ஆட்டுகிறாய். அதைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறேன். சற்று பொறுமையுடன் கேள்! அவைகளெல்லாம் ஒருவகையில் தீய செயல்களே. அவைகளெல்லாம் நிலைத்தன்மை அற்றவை. நொடியில் மாறுபவை. அப்படியிருக்கும் போது பரபரப்பான இன்றைய உலகில் மனிதனுடைய சிற்றறிவுக்கு ஏறுவது மிகவும் கடினம். அதற்கு நுண்ணறிவு மற்றும் பேரறிவு தேவை.  அதை வெல்வது மிகவும் சிரமம். 

பிரிய மனிதா! முதலில் விதி அல்லது மாயை இதுவென்று அறியவேண்டும். அறிந்த பின் அதன் செயலை உணரவேண்டும். உணரும்போதே அதனால் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்கவேண்டும். அவைகள் நல்லவைகள், நாலு பேருக்கு நன்மை தரக்கூடியவையாக இருந்தால் நான் உன்னுடன் கை கோர்த்து உதவி செய்வேன். அதுவே கெட்டவைகளாக இருந்தால் அதை முளையிலேயே நசுக்கி விடுவேன். அதுவே உனக்கும் எனக்கும் நல்லது. 

மேன்மையான மனிதா! மாயை மற்றும் விதி ஆகியவை ஒருவகையில் உன்னை ஏமாற்றுபவை. உனது அறிவை திரை போட்டு மூடி கண்களை மறைக்கும் சக்தி பெற்றவை. மாயாஜால வித்தைகள் மற்றும் சித்து வேலை செய்பவை. இருப்பதை இல்லாமல் செய்யும். இல்லாததை இருப்பதாக காட்டும். நேர்மை, உண்மை, நியாயம், தர்மம் ஆகியவற்றை தெளிவாக பேசுவார்கள். உன்னை திசை திருப்புவதற்கு, உன் கண்களை மறைப்பதற்கு மாய விளையாட்டு காட்டுவார்கள். பெரும்பாலும் அவைகள் மனிதர்கள் உருவில் தான் வரும். அவர்களின் வார்த்தைகள் தேன் தடவிய சொற்களாக இருக்கும். அவர்களுடைய உபசரிப்பு யாரும் காட்டாத மிக மிக அன்பாக இருக்கும், அவர்களுடைய செயல்கள் அதிசயத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கும். அவர்களுடைய இடம் சில சமயங்களில் பிரமாண்டமானதாக இருக்கும். அவர்கள் எதை சொன்னாலும் நம்புபடியாகச் சொல்வார்கள். ஆதாரதிற்காக பக்கத்தில் சில ஜால்ராக்களை உட்கார வைத்திருப்பார்கள். பெரிய, சிறிய தலைவர்களைத் தெரியும் என்பார்கள். கடவுள் பற்றி ஏகாந்தமாய் பேசுவார்கள். அழகாக பாடுவார்கள, பேசுவார்கள். இவற்றுக்கும் மேலாக அவரைப் பற்றிய விளம்பரங்கள் டி.வி.யில் அடிக்கடி வரும். போட்டோக்கள், வீடியோக்கள், ஒலி - ஒளி குறுந்தகடுகள், புத்தகங்கள் என்று அடுத்தடுத்து காட்டுவார்கள். உங்களுடைய எதிர்காலம் பற்றி ஆஹா...ஓஹோ... என்று பேசுவார்கள். உங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக சத்தியம் செய்வார்கள், கொஞ்சி பேசவும் தயங்க மாட்டார்கள். உன்னிடத்தில் பணம் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவந்தால் உன்னிடம் விசுவாசகமாக நடப்பதாக காட்டிக் கொள்வார்கள். இவைகள் தான் மாயையாகவும், விதியாகவும் உன்னிடத்தில் வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்கள், சொத்துகள், செல்வம், பணம் உன்னிடத்திலிருந்து பேச்சிலே உன் கண்களைக் கட்டிவிட்டு உன் மூலமாகவே எடுத்து (அபகரித்து) செல்வார்கள். இதுநாள் வரை உனக்கு அவைகள் தெரியாமல் இருந்தது. இனி அவைகளை இந்த உள் மனிதன் கவனித்து கொள்வான். அதிலிருந்து தப்புவிக்க அனைத்து உபாயங்களை  உனக்கு சொல்கிறேன்.  என் பேச்சை நுண்ணிப்பாக கேள். உண்மைகள் தெரியும். பொய்யைப்  புரிந்துகொள்வாய். 


இனிமையான மனிதா! மனித ஜென்மம் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவேண்டுமென்றால்  உன்னிடத்தில் மன சுத்தம், வாக்கு சுத்தம், எண்ணச் சுத்தம், செயல் சுத்தம், சரீர சுத்தம், சூழ்நிலை சுத்தம் போன்றவை இருக்கவேண்டும். அப்போது தான் உனது புனிதத் தன்மை மேன்மை பெரும். அவைகளெல்லாம்  இருக்க வேண்டுமென்றால் உனக்கு எப்போதும் பசி, பிணி அணுகக்கூடாது. நீ பிறக்கும்போதே உனக்குத் தேவையான உணவு, உடை, இடம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதி ஆகியவை அளித்து விட்டேன். ஆனால் அதில் சிலவற்றை மாயை என்ற தீய செயலுக்கு அடிமையாகி நான் கொடுத்ததை இழந்து, உனது அடுத்த ஜென்மத்திற்கு (மகன் அல்லது மகளுக்கு) வைக்காமல் அவர்களை துன்பக் கடலில் ஆழ்த்தி எனது வேலையை அதிகமாக்கிவிடுகின்றாய். அதை இனிமேல் நடக்காமல் இருக்கவே நான் பெரும் முயற்சி எடுக்கிறேன்.

பாசமுள்ள மனிதா! இளமையில் பசியின் கொடுமை மிகவும் அவஸ்தை தருவது. அது என்னையும் மீறி பல அழிவுச் செயல்களுக்கு தூண்டுகிறது. அதை உன் மூலம் போக்க விரும்புகிறேன். நீ பிறக்கும் போது கோபம், பொறாமை, போட்டி, தீமை தரும் எண்ணங்களுடன் பிறந்தாயா! சந்தோஷமாகத் தானே படைத்தேன். அதன் பின் எப்படி குணம் மாறியது! உனக்கு கொடுத்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? உனக்குள் நான் இருப்பதால், இதை மட்டும் தெரிந்து கொண்டேன். நீ நினைக்கும் மகிழ்ச்சி, அதாவது பணம் சம்பாதிப்பது, கேளிக்கைகளில் ஈடுபடுவது, சாப்பிடுவது, படம், டி . வி. பார்ப்பது, அரட்டையடிப்பது எவையெல்லாம் மகிழ்ச்சி என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறாய். இன்னும் உண்மையான மகிழ்ச்சி எப்படி பெறுவது என்பதை நான் உனக்கு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் அதை உதாசீனப் படுத்துகிறாய். மாயை உருவில் அதிர்ஷ்டம் வருகின்றது. அதைத் தேடி கோவில், குளம், அர்ச்சனை, பரிகாரம், யாகம், தானம், தர்மம் போன்றவற்றை செய்கிறாயே அதனால் நீ பலன் அடைந்தாயா? உனது எண்ணத்தை, செயலை  சுத்தமாக வைத்துக்கொண்டால் ஒழிய இவையனைத்தும் பலன் தராது. 

மதிப்புமிக்க மனிதா! தினம் அல்லது உனக்கு நேரம் கிடைக்கும்போது கோவிலுக்குச் செல்கிறாயே அது என்னைவிட புனிதமானது என்பதை மறந்துவிடாதே! கோவில்களுக்குச் செல்லுமுன் உனது எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஞாபக படுத்தும் இடம். உனக்குள்ளே ஆற்றல், அறிவு, இந்த உள்விதி மனிதன் இருப்பதை உணர்த்தும் இடம். உனக்குள்ள கடமைகளை செய்யச் சொல்லும் ஸ்தலம். உனது கடமை என்னவெனில் வீட்டையும், நாட்டையும் இரு கண்கள் போல் காக்கவேண்டும் என்பதை நினைவூட்டும் சின்னம். ஆனால் அங்கேயே இருந்துவிடக் கூடாது. ஏனெனில் நான் கொடுத்த அறிவும், ஆற்றலும் பயன்படுத்தாமல் இருந்துவிடக்கூடாது. உனது உடல் ஒரு கோயில். அதில் நான் ஒரு தெய்வமாக ஜீவ ஓட்டமாக இருக்கிறேன் என்பதை மனதில் நன்றாக பதிந்துகொள். 

இரக்கமுள்ள மனிதா! கோவில், குளத்திற்கு பெரிய பணக்காரர்கள், அரசியல் வாதிகள், அறிஞர்கள், தலைவர்கள், மகான்கள், முனிகள் தினமும் வருகின்றனரா! எப்போதாவது தான் வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்! உழைத்தால் தான் உணவு கிடைக்கும், பாடு பட்டால் தான் பலன் கிடைக்கும் என்று. அது உனக்கு ஏன் தெரிவதில்லை? எல்லா கடமைகளை முடித்துவிட்டு வா! உன்னை ஏற்றுக்கொள்கிறேன். கடமையை செய்யாமல் அல்லது கடமையை தவிர்ப்பவனை  நான் மன்னிக்கவே மாட்டேன்! கடமையைச் செய்தால் தான் அதற்குரிய பலனை தரமுடியும். முதலில் வீட்டில் இருக்கும் கடமையை தவறாமல் செய். தாய், தந்தையரைக் காப்பாற்று. சகோதர சகோதரிகளின் கடமைகளைச் செய். உனது குடும்பத்தை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள். இவையனைத்தும் முடித்தால் தான் என்னை முழுமையாக அடைய முடியும். உனது கடமையை செய்தாலே நீ பூரண முக்தி பெறுவாய். அதை விட்டுவிட்டு போலிச் சாமியார் பின் செல்வது, மந்திரம் சொல்வது, அவர் சொல்லும் பலவற்றை கடைபிடிப்பது, அவர்களிடம் செல்வத்தை இழப்பது, கடமையை விட்டு விலகுவது இவையனைத்தும் உனக்கு கெடுதலே தருமே அன்றி பலன் தராது. உனது வாழ்கையில் மகிழ்ச்சி ஏற்படாது, மற்றவர்களுக்கும்  மகிழ்ச்சி தர முடியாது. அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். 

பிரிய மனிதா! ஏனோ தானோவென்று, எங்கேயோ எதையோ நினைத்துக்கொண்டு கோடி முறை கடவுளை நினைப்பதைவிட மனதளவில் உண்மையாக , சத்தியமாக ஒரே ஒரு தடவை நினைத்தாலே போதும். நீ புண்ணியம் பெறுவாய். அந்த புண்ணியத்தை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள். தினமும் ஒரே சொல்லை உச்சரிப்பதால் மட்டும் எவ்வித பலன் கிடைக்காது. அது உனக்கு சொல்லும் அல்லது  உணர்த்தும் ஆரம்ப பாடம். உனது எண்ணம் ஒரு மனம் தீவிரமாக இருக்கின்றதா வென்று சோதித்துப் பார்க்கும் பாலபாடம். அதில் வெற்றி பெறும்போது புதிதாக பல கற்பதற்கு அறிவு பெறுகின்றாய். புதிது, புதிதாக கற்பதால்  மட்டுமே நீ மேன்மை பெறுவாய். கற்பதோடு நிற்காமல் அதை செயல்படுத்து. வெறும் எல்லோருக்கும் நல்லதை நினைக்கவேண்டும், நல்லதை செய்யவேண்டும், நல்லதை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் நீ இன்று யாருக்கு என்ன நல்லது செய்துள்ளாய் என்பதை தெரிந்துகொள். இது மகான்களுக்கும், தலைவர்களுக்கும், மனிதர்களுக்கும் பொருந்தும். நீ யாருடன் நட்பு கொள்வதற்குமுன் அவன் எவ்வளவு நன்மையான செயல்கள் மக்களுக்குச் செய்திருக்கிறான் என்பதை அறிந்துகொண்டு பழகு. அதுவே உனக்கு நல்லது. இந்த உள் மனிதனுக்கும் நல்லது.


பண்புள்ள மனிதா! சிலர் பணத்தையும், செல்வத்தையும் அள்ளி அள்ளித் கோவிலுக்குத் தருகிறார்கள். அவைகளெல்லாம் நல்ல வழியில் கிடைத்தது என்று சொல்லமாட்டேன். பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்காக, பணத்திமிறினால் என்னமோ அவர்களை நம்பித் தான் நான் இருக்கிறேன் என்கிற இறுமாப்பு. அன்பு மனிதா! அதற்கெல்லாம் நான் அவர்களுக்கு இம்மியளவு கூட பலன் தரமாட்டேன். அவர்கள் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. குறுக்கு வழியில் சம்பாதித்து, குறுக்கு வழியில் என்னைப் பார்பவர்களுக்கு , பணத்தைக் கொண்டு என்னை விலைக்கு வாங்க நினைப்பவர்களை நான் ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டேன்.  பலர் நேர்மையாக, அன்பாக , பணிவுடன் சிறிதே செய்தாலும் அதில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். அதில் உண்மை இருக்கின்றது. ரகசியமாக் போட்ட பணம் யாருக்குப் போய் சேருகின்றது? பாவப்பணம் அனைத்தும் பாவ மனிதருக்குத் தான் சேருகின்றது. அதன் மூலம் மக்களுக்கு நன்மை தராது. யார் ஒருவர் பணத்தை நேரடியாக அவரே தன் கைகளால் ஏழைகளுக்கு அல்லது மக்களுக்கு பகிர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்கின்றனரோ அவர்களே புனிதப் பிறவிகள். அவர்களிடம் நான் விரும்பி இருப்பேன். நீயும் புனிதமாவதற்கு முயற்சி செய். அதற்கு நான் துணையாக வருகிறேன். அனைவரையும் காத்து மகிழ்ச்சியை தருவதே எனது கொள்கை. அதை உள் மனிதனாக இருந்து செய்ய இருக்கிறேன். 


உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com