Pages

Friday, 19 April 2013

150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம் - நாட்டு நடப்புகள்

150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும்... 
வேலை திட்டம் - 
நாட்டு நடப்புகள் 


ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக 150 நாட்கள் வேலை திட்டம் என்று நமது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இதுவே நூறு நாட்களாக இருந்தது. தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு 150 நாட்களாக ஆக்கிவிட்டது. இது ஏழை மக்கள் மீது இரக்கப்பட்டு கொண்டுவந்த திட்டமா? அல்லது ஏழை மக்களை அடிமை படுத்தும் திட்டமா? என்று போகப்போக தெரியும். பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக, தேர்தலில் ஓட்டுகள் வாங்குவதற்காக மக்கள் வரிப்பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து அவர்களை சோம்பேறியாக மாற்றும் திட்டம். அதாவது அவர்களை ஓட்டுக்காக மட்டும் உபயோகப்படுத்தும் திட்டம்.


பெரும்பாலும் கிராம மக்களே அதில் இருக்கின்றனர். எனக்கு இதுவும் அந்நிய நாட்டு சதியோ என்று தோன்றுகின்றது. பொதுவாகவே ஆறு மாதம் சும்மா உட்கார்ந்து கொண்டு பணத்தை வாங்கி ருசித்தவன், அடுத்த ஆறு மாதம் உழைத்துச் சாப்பிட எண்ணம் வருமா? என்னதான் லட்சம் ரூபாய் கொடுத்தாலும் உழைக்கும் எண்ணம் வரவே வராது? அப்படி வந்தாலும் அந்த உழைப்பு ஏனோதானோவென்று தான் இருக்கும்.


ஏற்கனவே கிராமத்து இளைஞர்கள் பாதி பேர் நகரத்தில் இருக்கின்றனர். மீதி பேர் வெளிநாட்டிற்கு போய்விட்டனர். சொர்ப்பமானோர் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த வேலையை பார்த்து வருகின்றனர். ஆனால் கொடுமை என்னவென்றால் விவசாயம் பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். ஏற்கனவே விவசாய நிலங்கள்  'ரியல் எஸ்டேட்' ஆக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கொஞ்சநஞ்ச விவசாயமும் ஆட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்த லட்சணத்தில் அனுபவமிக்க பெரியவர்களோ 150 வேலையில் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த விவசாய தொழிலை மறக்கச் செய்து வருகின்றனர்.


வேலை இருக்கட்டும். அதற்கு தினம் தினம் வேலை இலக்கு யார் வைக்கிறார்கள்? அதை சரியா செய்து முடித்தார்களா? யார் யார் வேலைக்கு வந்தார்கள்? யார் வேலையினை மேற்ப்பார்வையிடுகின்றனர் ? எல்லோருக்கும் சரியான நேரத்தில் சரியானபடி சம்பளம் வருகின்றதா? என்கிற பலவித கேள்விகளுக்கு சரியானபடி பதில் கிடைப்பது கடினம் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இந்த திட்டம் மிகச்சரியாக நடக்கின்றது.


இப்போது இருக்கும் இந்த திட்டம் சரியாக தேர்தல் வரை தான்! தேர்தல் முடிந்தவுடன்... ஓட்டுகள் தான் போட்டுவிட்டார்களே! பின் ஏன் இந்த திட்டம்? என்று எண்ணிவிடுவார்கள். அதன் பிறகு பணம் கிடைப்பது சந்தேகமே? அதற்கு முந்தைய  நிறைய திட்டங்கள் தான் உதாரணம். தேர்தலுக்குப் பின் இத்திட்டம் ஒப்புக்காக இருக்கும். முதலில் கொஞ்சம் தாமதமாக பணம் வரும். பிறகு மிக மிக தாமதமாக.. பிறகு வரவே வராது. அதற்கு சாக்குபோக்குகள் ஆயிரம் சொல்வார்கள். பிறகு மறந்து விடுவார்கள். அதற்கு பின்னால் மீண்டும் ஒரு புதிய திட்டம்...புதிய ஏமாற்று அல்லது சோம்பேறியாக்கும் திட்டம்???!!!


இந்த மாதிரி மத்திய அரசும், மாநில அரசும் மக்களை இலவசம் கொடுப்பதின் மூலமாகவும், வேலை திட்டத்தின் மூலமாகவும் சொம்பெரியாக்குவதில் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர் என்பது உண்மை. இதில் ஊறிய மக்கள் மீண்டும் பழையபடி உழைக்கத் தயாராக இருப்பார்களா? அப்படி உழைக்கத் தயாராக இருந்தாலும் சொந்தத் தொழில் அனேகமாக மறந்திருப்பார்கள். பிறகென்ன? சோறுக்கும் , கஞ்சிக்கும் அற்ப கூலியில் மற்றவர்களிடம் அடிமைபடவும் தயாராக இருப்பார்கள்! இதன் பலனாக நமது நாட்டில் கூடிய விரைவில் விவசாயத் தொழில் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டிய பெருமை நமது அரசியல்வாதிகளைச் சேரும்.


ஒரு சமயத்தில் மழை நன்றாக பெய்யும். என்னதான் நிலம் , மின்சாரம், தண்ணீர் இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே விளை நிலம் தரிசாக மாறி ஒன்றுக்கும் உதவாமல் போகும். ஏற்கனவே பருப்பு, எண்ணெய் , சர்க்கரை, உரம் , மருந்து மற்றும் பல பொருட்கள் இறக்குமதி செய்து வருகிறோம். கூடிய விரைவில் அரிசி மற்றும் கோதுமையும் இறக்குமதி செய்ய நேரிடப் போகிறது.



அவ்வாறு இறக்குமதி செய்த பொருட்களின் விலை ஏணி வைத்தால் கூட எட்டாத அளவாக இருக்கும். அதை வாயை மூடிக்கொண்டு வாங்கவேண்டும் நிலைமை உருவாகும். இப்போது ஆட்சி செய்யும் நமது அரசியல் தலைவர்கள் நாளுக்கு நாள் நமது பொருளாதாரத்தை பாதாளத்தில் இறக்கிவிடப் பார்க்கிறார்கள். நூறு கோடிக்கு மேல் மக்கள் கொண்ட நமது நாட்டில் தலை சிறந்த பொருளாதார நிபுணர்கள் ஒரு சிலர் கூட இல்லாதது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் தான். ஒருவேளை எல்லோரும் படிப்பில் புலியாகவும், அதை நடைமுறை படுத்துவதில் எறும்பாக இருப்பதில் மர்மம் என்னவென்று இன்றுவரை பிடிபடவில்லை தான்.


ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். நாம் சுதந்திரம் அடைவதற்கும் இந்த மாதிரி காரணங்கள் இருக்கத் தான் செய்திருக்கும். ஏன்? அதைவிட நன்றாக சூழ்நிலையில் நாம் இப்போது இருக்கிறோம்.இருந்தும் நம்மால் ஏதும் செய்ய இயலவில்லை. விலைவாசி ஏறுவது , வரிகள் ஏறுவதும் குறைந்தபாடு இல்லை. இப்படியே இருந்தால் நாம் சிறிய அண்டை நாட்டிற்கும் அடிமை படவேண்டியிருக்கும். சுயமரியாதை இழந்து மீண்டும் அடிமை வாழ்வு வாழ்ந்திட வேண்டுமா? மக்களே ! நன்றாக யோசியுங்கள். நீங்களும் உங்கள் சந்ததியினரும் சந்தோசமாக, நிம்மதியாக வாழவேண்டுமானால் கண்டிப்பாக உழைப்பு மிகமிக அவசியம். 


உழைக்க மறந்தால் அடிமை வாழ்வு தான் என்பதை மனதில் கொண்டு இலவசங்களை மறந்துவிடுங்கள். சோம்பேறியாக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தருவதை விட்டுவிடுங்கள்.

உழைப்போம்!

உயர்வோம்!

ஏமாற்றங்களை தவிர்ப்போம்!    
   

Tuesday, 16 April 2013

தாய் மொழி எப்போது வளரும்? WHEN WILL BE THE MOTHER TONGUE GROW? நாட்டு நடப்புகள்

தாய் மொழி எப்போது வளரும்? 
WHEN WILL BE THE MOTHER TONGUE GROW?
நாட்டு நடப்புகள் 


உலகத்தில் எவ்வளவோ மொழிகள் உள்ளன. ஆனால் சில மொழிகளே பேசப்பட்டு, எழுதப்பட்டு, படிக்கப்பட்டு வருகின்றன. பல மொழிகள் தாய் மொழியாகவே இருந்தாலும் அவைகள்  வெறும் பேச்சளவில் தான் இருக்கின்றன. அதிகமாக எழுதப்படுவதோ, படிக்கப்படுவதோ கிடையாது. ஏன்? அவ்வகையான மொழிகள் வளரவில்லை? அப்படியானால் ஒரு தாய்மொழி வளரவேண்டுமென்றால் என்னென்ன தேவை? என்பது பற்றி பார்ப்போம்.


இதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏழை வீட்டில் யாராவது வேலைக்காரர்கள் இருப்பார்களா? அப்படி இருந்தால் அவர்களின் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டிற்கு போதுமா? அதாவது தனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லாதவன் மற்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியுமா? இன்றைய காலகட்ட்டத்தில் எல்லாமே வியாபார நோக்கில் தான் எந்த ஒரு காரியமும் நடைபெறுகின்றது. அதாவது மொழியின் வளர்ச்சி உட்பட. எந்த மொழி வழியில் பாடங்களை, கல்வியைக் கற்றால் நிறைய சம்பாதிக்கலாம்? என்பதை மனதில் கொண்டே கல்வியைக் கற்கின்றனர். அவ்வாறு கற்றுக்கொண்டால் தான் கை மேல் பலன் கிடைக்கும் என்று எண்ணி எப்பாடுபட்டாவது எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கற்கின்றனர்.. தாய் மொழியாக  இல்லாமல் இருந்தாலும் சரி. வாயில் நுழையாமல் இருந்தாலும் சரி. அம்மொழியை கற்கின்றனர்.


அதாவது இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி வளரவேண்டுமானால் வெறும் கதை, கவிதை,  இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றில் மட்டும் இருந்தால் போதாதது. அதை வைத்துக்கொண்டு அதிகமாக சம்பாதிக்க முடியுமா? அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மிக மிகக் குறைவாகும். எந்த மொழியில் கலை, கணினி, அறிவியல், மருத்துவம், அதிநவீன பலதுறை  பாடங்கள், இலக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் மக்களிடையே எளிதாக, வேகமாக பரிமாற்றங்கள் நடைபெறுகின்றதோ அம்மொழியே சந்தேகமில்லாமல் மிக வேகமாக வளரும். அம்மொழியையே மக்கள் பிரயாசைபட்டு கற்பர். அம்மொழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி அதைப்பற்றி கவலை கொள்ளாமல் கற்பார். 


எடுத்துக்காட்டாக தமிழ் எங்கள் மூச்சு , தமிழ் எங்கள் உயிர்  என்று பல தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள் மேடைகளில், சின்னத் திரைகளில் முழங்கிவருகின்றனர். உண்மையில் தமிழை வளர்க்கவா அவ்வாறு பேசுகின்றனர். இல்லவே இல்லை. தங்கள் சுயநலத்திற்காகவும், பட்டம், பதவி மற்றும் நாலு காசு சம்பாதிப்பதற்கு தான் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் விவரமாக அவர்களின் வாரிசுகளுக்கு அந்நிய மொழிக்கல்வியைத் தான் கறக்கச் செய்து வருகின்றனர். இது மறுக்கமுடியாத உண்மை. பின் எப்படி அவர்கள் தாய் மொழியை வளர்ப்பார்கள். பொதுவாக அனைத்து மொழிகளுக்கும் ஆங்கில மொழி ஒரு எமனாக இருப்பது உண்மை. அது பல தாய் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வருகின்றது.


இவ்வளவும் கண் கூடாக தெரியும் போது 'மொழி வளரவில்லையே' என்று கூப்பாடு போடுவதில் ஏதேனும் அர்த்தமுண்டா? தாய் மொழி கற்ற அனைவருக்கும் வேலை உண்டா? நம்முடைய அன்றாட தேவைக்கு வெளி மாநிலத்திடம் கையேந்தி நிற்கின்ற நிலை.நம் நாடோ அந்நியனின் உதவியை கையேந்தி நிற்கும் நிலை. கிட்டத்தட்ட அந்நியனின் கைபொம்மையாய் இருக்கிறோம். ஏனெனில் நம்மிடம் நுட்பமான அறிவுள்ளவர்கள் ரொம்ப பேர் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகளும் செய்து தருவதில்லை. ஆகையால் அறிவும், திறமையும் மிக்கவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று அந்நாட்டிற்க்காக உழைக்கின்றனர்.


தாய் மொழியைக் கற்பதைக் காட்டிலும் ஆங்கில வழியில் பாடங்களைக் கற்றால் அறிவியல் ஆராய்ச்சி செய்வது எளிது. அதோடில்லாமல் நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைக்கும் என்று தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்கின்றனர். ஏனெனில் அந்த மொழியில்  தான் இன்றைய தினம் வரை உள்ள அனைத்து துறைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வலைதளத்தில் வேகமாக , எளிதாகவும் கிடைக்கின்றன, ஆனால் தாய் மொழியில் அனைத்துக் கட்டுரைகளை 'தமிழாக்கம்' செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.


அதாவது தமிழறிவு பெற்ற அறிவியலறிவு அறிஞர்கள் யாருமே இல்லை எனலாம். அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்களுக்கு தகுந்த ஊதியமோ , வசதியையோ செய்து தருவதில்லை. மேலும் ஆங்கில மொழி வளர்ச்சி காட்டுத்தீ போல் அனைத்து மீடியாக்களில் பரவிவிட்டது. ஏன்? மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் தமிழ் மொழி வழி இல்லை எனலாம். அதனால் பள்ளிவரை தமிழ் வழி பாடத்தைக் கற்றவர்கள் கல்லூரியில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆங்கிலம் வளருவதைத் தடுக்க யாராலும் முடியாது. ஒருவேளை தடுத்தால் கிடைக்கும் வருமானம் போய்விடும் என்று எல்லோருக்கும் தெரியும் .


இந்த நிலை தொடருமேயானால் தாய் மொழி வெறும் கேளிக்கைகளுக்கும், வியாபாரத்திற்கும் தான் உதவும். மொழி வளர உதவாது. ஒருவேளை தாய் மொழி வளர வேண்டுமானால் அது பணக்கார மொழியாக மாறவேண்டும். தமிழைக் கற்றவர்களுக்கெல்லாம் கை நிறைய சம்பளம் தரவேண்டும். அதை கற்பவர்களுக்கு ஊக்கத் தொகை தரவேண்டும். அந்நியர்கள் இங்கு வந்து தமிழைக் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். தமிழில் வெளியாகும் அறிவியல் ஆராச்சிக் கட்டுரைகளுக்கு தகுந்த சன்மானம் மற்றும் விருதுகள் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.


உலகளவில் தமிழைப் பரப்புபவர்களுக்கு தகுந்த வசதியும், சம்பளமும் தரவேண்டும். அதாவது ஆஸ்கார் விருது வாங்குவதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம் என்பது போல அன்னிய மொழி படங்கள் தமிழில் 'டப்' செய்தால் அந்த மாதிரி திரைப்படங்களுக்கு விருது கொடுக்கவேண்டும். வந்தாரை வாழவைத்து, அதிக சம்பளம் கொடுக்கும் பணக்கார மொழியாக தமிழை மாற்றவேண்டும். அவ்வாறு பணக்கார மொழியானால் அதன் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.


இன்றைய நிலையில் 'ஆங்கில மொழி' பணக்கார மொழியாக விளங்குகின்றது. அதை பின் தொடர்ந்து பல மொழிகள் செல்ல ஆரம்பித்துள்ளது. இப்படியே போனால் பல தாய் மொழிகளுக்கு ஆபத்து தான். நமது மத்திய மாநில அரசுகளும் அந்நிய மொழியை ஊக்குவிக்கத்தான் செய்கின்றது. ஏனென்று கேட்டால் அதன் மூலம் அன்னியச் செலாவணி கிடைக்கின்றதாம். அதற்கு முக்கிய காரணம், பல தலைவர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது தான். 


அவர்கள் மற்ற மொழிகளை தாமும் படிக்காமல், மற்றவர்களையும் படிக்கவிடாமல் பல ஆண்டுகள் இருந்ததால் மற்ற மொழிகளின் வளர்ச்சி நமக்கு தெரியாமல் போனது. ஆகையால் இப்போது எதற்கெடுத்தாலும் அந்நியனின் கையை எதிர்பார்த்து நிற்கவேண்டிய நிலைமை. நமது நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கு அந்நியனை பல சலுகைகள் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கணினி, மருத்துவம், மின் சக்தி, ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் அந்நியன் தயவினால் நடைபெறுகின்றது. ஏனெனில் அவர்களிடத்தில் தொழில் நுட்பம் இருக்கின்றது. திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை மற்றும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும், பணவசதியும் இருக்கின்றது.

ஆகவே நமது தாய் மொழியை பணக்கார மொழியாக்குவோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய வேண்டும். பல மொழியில் உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழாக்கம் செய்தால் நிச்சயம் நடக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் கட்டாயம் தாய் மொழி வளரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நாமே நமது மொழியின் பெருமையை பேசி சுயதம்பட்டம் பேசுவதை நிறுத்திவிட்டு மற்ற மொழியினர் நம் மொழியை பெருமையாக பேசுமளவிற்கு செய்தால் தான் தாய் மொழி வளரும்.

நன்றி 
வணக்கம்.


Monday, 15 April 2013

இளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்

இளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும் 

                           
நாட்டு நடப்புகள்.

           

நமது நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், மக்களுக்கு அறிவும் திறமையும் இருந்தாலும் விளையாட்டிலும், ஆராய்ச்சியிலும் நாம் சாதித்தது மிகமிகக் குறைவே? அதற்கு சாட்சி, 1896 வருடம் முதல் இது நாள் வரை 29 தடவை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஒருமுறை கூட தடகளப் போட்டியில் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. அதேபோல் ஆராய்ச்சியில் 1930 ம் ஆண்டு சர். சி.வி. இராமன் பெற்ற பிறகு இதுநாள் வரை யாருமே நோபல் பரிசு பெறவில்லை. அதற்குக் பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில முக்கியக் காரணங்களை பார்ப்போம்.

                 

முதலில் நமது கல்வி முறை. பெரும்பாலும் நமது கல்வி செய்முறையோடு இல்லாமல் வெறும் மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரம் போலத் தான் இருக்கின்றது. அதில் வேதனைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் நன்றாக அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்கள் கூட பொறியியல், மருத்துவம், கணினி அல்லது   அறிவியலில் சிறப்பாக தேர்ச்சி பெறுவது கிடையாது. காரணம் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்கிற பழமொழிக்கேற்ப கடைசிவரை மனப்பாடமே செய்கின்றனரே தவிர செய்முறையில் அதிக நாட்டம் காட்டுவதில்லை.


பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, முனைவர் பட்டம் வாங்கும்போதே வயது அதிகமாகிவிடுகின்றது. அதன் பிறகு வேலை, கல்யாணம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கத்தில் சினிமா , டி .வி  என்று தொடர் பயணம் செய்வதால் ஆராய்ச்சி செய்து புதியவைகளை கண்டுபிடிப்பதற்கு நேரம் ஏது ? மேலும் பள்ளி பாடத்திலிருந்து கல்லூரி (கலை அல்லது பொறியியல்) பாடம் என்று மாறும்போது அவைகள் மிக மிக கடினமான பாடத்திட்டம் தான். 

 

அதை நடத்துபவர்களுக்கு அதிக கல்வியறிவு இல்லாததால் வெறும் வாசிப்பு (கணிதம், கணினி பாடம் உட்பட) மட்டும் கடமைக்கு வாசித்துவிட்டு வேலையை முடித்துக் கொள்கிறார்கள். ஏதேனும் சந்தேகம் வந்தால் சொல்லித் தருவதில்லை. மீறி தெரிந்துகொள்ள விரும்பினால் வலைதளத்தை நாடவேண்டிய சூழ்நிலை. அதற்கு நேரமும், பணமும் வேண்டும். வலைதளத்தில் உட்கார்ந்துவிட்டால்  பாடத்தைவிட படத்தையும், பாடலையுமல்லவா பார்க்கிறார்கள்!

    

அதேபோல் விளையாட்டிலும் இதேகதி தான். +2 வரை படிப்பில் கவனம் செலுத்தி திடீரென்று விளையாட்டில் ஆசியா அளவில் அல்லது ஒலிம்பிக் அளவில் ஜொலிக்க வேண்டுமென்றால் அவ்வளவு எளிதா? இது விளையாட்டு அல்லது ஆராய்ச்சியில் மட்டும் பொருந்துவது கிடையாது. எல்லாத் துறைகளுக்கும்   பொருந்தும். 


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை... என்று பழமொழிகள் இருக்கின்றன. அதாவது சிறிய வயதிலிருந்தே ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டால் தான் அதில் வெற்றி பெற முடியும். 'ஜிம்னாஸ்டிக்ஸ்'மற்றும் சர்கஸ்  விளையாட்டுகள்  இருக்கின்றது. அந்த விளையாட்டில் உடலை வளைத்து, மடக்கி, நீட்டி விளையாடுவார்கள். அது வயது வந்தவர்களால் செய்ய இயலாது. ஏனென்றால் அவகளின் உடல் ஒத்துழைப்பு தராது. அது போல ஆராய்ச்சியில் ஈடுபட நினைக்கும் மாணவர்கள் ஆறாவது வகுப்பிலிருந்தே அம்மாணவர்கள் விரும்பினால் கணிதம், அறிவியல் பாடங்களை ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது .... என்று ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரீட்சை வைத்தால் மூன்றரை ஆண்டுகளில் அந்த இரு பாடத்தில் +2 வரை உள்ள பாடத்தை படித்துவிடலாம்.

        

பிறகு கல்லூரி பாடங்களை படிக்கும்போது அவர்களுக்கு எளிதில் புரிவதோடு ஆழ்ந்து, சிந்திப்பதற்கும் நேரம் கிடைக்கும். இன்றிருக்கும் ஆராயச்சி மைக்ரோ அளவு என்று இருந்தது போய் நானோ அளவு நுட்பமாக இருந்தால் தான் சாதனை படைக்க இயலும். வெறும் பாடம் படித்து நோபல் பரிசு வெல்ல முடியாது. சிறு வயது முதற்கொண்டே ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்கு செய்முறை கல்வியோடு ஆராய்ச்சி படிப்பும் கொடுத்தால் பிற்காலத்தில் நம் நாடு நிறைய நோபல் பரிசு பெரும்.

                   

இதேபோல் சிறு வயது கொண்டே சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கடுமையான விளையாட்டுப் பயிற்சிகள் கொடுக்கும்போது கண்டிப்பாக நமது நாடு பல சாதனைகள் படைக்கும். இதனால் சிபாரிசுகள் தவிர்க்கப்படும். வேண்டுபவர்களை சேர்த்துக் கொள்வது என்பதை ஒழித்துவிடலாம். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின்போதும் சாதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. அவைகளை முறியடிப்பதற்கு விசேஷமான பயிற்சியும், விடா முயற்சியும் தேவை. அது உடனே வந்து விடாது. படிப்படியாகத் தான் வரும். இளமை மிகவும் அவசியம்.

         

உதாரணமாக செல்போனில் ஏதாவது புதுமை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அது எவ்வளவு தூரம் வளந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கவே நிறைய மாதங்கள் தேவைப்படும். அதுமட்டுமா? ஆட்டோமொபைல், மருத்துவம், விவசாயம், எரிசக்தி, பொறியியல், இராணுவம், விண்வெளி,  இன்றைய வியாபார நுணுக்கம், கணினி, அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சியின் ஆழம் எவராலும் கணிக்க முடியாது. இந்நிலை இப்படியே நீடித்தால் ஆராய்ச்சி என்பதே மறந்து அந்நிய நாட்டை எப்போதும் கையேந்தி நிற்கவேண்டிய நிலை வந்துவிடும். அவர்கள் சொல்வது தான் விலை என்று வருவதற்கு நீண்ட நாட்கள் இல்லை.  

             

ஆக இந்த மாதிரியான பயிற்சிகள் தருவதால் மாணவர்களின் அறிவும் திறமையும் ஒழுங்கு படுத்தப்பட்டு கூர்மையாக்கப் படுகிறது. அடுத்தடுத்து அவர்கள் திறமைகளைப் பெருக்கிக்கொள்வதால் மற்றவற்றில் அதாவது வேண்டாத செயல்களில் கவனம் செலுத்துவது தவிர்க்கப் படுகின்றது. இதை அரசியல் தலைவர்கள் நன்றாக புரிந்துகொண்டு தகுந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்து கொடுத்தால் நிச்சயம் நமது நாடு சிறந்த நாடாக மாறும். இப்போதே நமது பழைய கண்டுபிடிப்புகள் வெளிநாட்டுக்கு போய்விட்டது. மீதி இருப்பதையாவது காப்பாற்றப்படவேண்டும். இன்னும் பல சி.வி. ராமன்களை, இராமனுஜத்தை, ஜகதீஷ் சந்திர போஸ்களை உருவாக்குவது நமது கடமை அதற்கு விழிப்புணர்வும், நல்ல பாடத்திட்டமும் வேண்டும். வளர்ச்சிகள் கட்டாயம் இருக்கும். அதை நாம் பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

    

இளைஞர்களின் மாய வலையினை அறுத்தெறியுங்கள்.

ஆராய்ச்சிக்கு வசதியும், முதலிடமும் கொடுங்கள்.

          

நிச்சயம் 2020 ல் இந்தியா ஒரு வல்லரசு தான்.

              

இல்லையேல் பூஜ்யம் தான்.