Pages

Friday, 1 June 2018

அன்னை தெரேசாவின் நிழல் - சிறுகதை


அன்னை தெரேசாவின் நிழல் 
சிறுகதை 
கு.கி.கங்காதரன்

"உனது வாழ்நாளில் சமூகத்தொண்டு செய்தவரின் சரித்திரத்தைப் படிப்பது அல்லது பொதுச்சேவையில் ஈடுபடுபட்டிருப்பவரை ஒருமுறையாவது சந்தித்துப் பேசினால்தான் உனது பூலோக வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும்" 

அரிதாக அன்று  'நீதிநெறி' (Moral) வகுப்பு நடந்ததுபொதுவாகக் கல்விக்கூடங்களில் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் 'ஏட்டுக்கல்வி'யை மட்டும் அவர்களின் மனதில் ஆழமாக உழச்செய்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இம்மாதிரியான வகுப்புகள், மாணவர்களுக்குள் இருக்கும் மனஇறுக்கத்தைத் சற்று தளர்த்தும் என்பது ஆசிரியர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும்கூட அதைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் என்பது ஒரு கேள்விக்குறியே?  

தமிழாசிரியர் கந்தசாமி அந்த வகுப்பை எடுக்கப்போகிறார் என்பதைக் கேட்டவுடன் மாணவர்களுக்கு உற்சாகம் பீறிட்டது. தமிழாசிரியராய் இருப்பதால்தான் என்னவோ தமிழ்பாடம் எடுக்கும்போது அவரின் தமிழ் உணர்வோடு கலந்த உச்சரிப்பானது ஒவ்வொரு வார்த்தையும் உயிர்பெற்று உறவாடுவதைப்போல் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடுகிறது என்பது உண்மையோ உண்மை. இரக்கம், மனிதநேயம், அன்பு ஆகியவை அதிகமாகத் தெரியாத இன்றைய மாணவ சமுதாயத்திற்குச் சிறப்புமிக்கத் அரசியல் தலைவர்கள், சமூகசேவகர்கள், அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள் என்று பலரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் மூலம் நல்வழி காட்டவேண்டும் என்கிற அளவளாவிய விருப்பம் அவருக்குள் இயற்கையாகவே இருந்துவந்தது. குறிப்பாக அவரது வெற்றியைச் சொல்லவேண்டுமானால் ஆங்கிலமே பேச விரும்பும் தனது மாணவர்களைத் தெள்ளியத் தனித்தமிழில் பேசவைத்த பெருமை அவரைத்தான் சாரும். மாணவர்களிடத்தில் அவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தை 'தமிழ் கற்காதவர்கள் பேச்சுவழக்குத் தமிழில் தெரியாமல் பேசலாம். ஆனால் தமிழ்க் கற்றவர்கள் தனித்தமிழில் பேசுவதுதான் அழகு' என்பதே. அவர் ஒரு நடமாடும் போதிமரம். அவர் மூலம் கல்வியறிவு ஞானம் பெற்றுப் பெரிய அளவில் இன்று கௌரவமாய் நடமாடுபவர்கள் பலர். 

அன்றைய வகுப்பில் தனது நீண்டநாள் ஆசையான 'அன்னை தெரேசாவின் வாழ்க்கையை சுருக்கமாகவும் அதேவேளையில் மாணவர்களின் இதயத்தினுள் நுழைத்து அவர்களின் இரத்தத்தோடு கலக்கச்செய்து அவர்களையும் சமூகத்தொண்டில் நாட்டம் செய்துவிட வேண்டும்' என்கிற முனைப்போடு வகுப்பில் நுழைந்து தனது வகுப்பைத் தொடங்கினார் கந்தசாமி. உயரிய 'நோபல் பரிசு பெற்றதோடு உலகளவில் பெருமையும் புகழும் கொண்ட அன்னை தெரேசா அவர்கள், ''தன்னலம் கருதாது வாழ்நாள் முழுவதும் தனது உடல்உருகிப்போவதைப் பற்றியும், வயது தேய்ந்துபோவதைப் பற்றியும் கொஞ்சம்கூடக்  கவலைப்படாமல்   உலகத்தின் பல்வேறு இடங்களுக்குச சென்று அங்குள்ள பலத்தரப்பட்ட மக்களுக்குப் பல்வகைப் பொதுத்தொண்டுகள் செய்துவந்தார். அவர் தமது இறுதி மூச்சுவரை பசி, பிணி, நோயில் வாடிய ஏழைகளுக்காகவே தொண்டு செய்து உயிர் நீர்த்தார். அன்னைத் தெரேசாவின் இளகிய மனிதநேய மனத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கந்தசாமி பேசியதைக் கேட்ட மாணவர்களில் ஒருவனான மாணிக்கத்தின் உடலும் மனமும் ஒருவிதப் புத்துணர்ச்சி பெற்றது. எத்தனையோ வகுப்புகள் இதற்குமுன் நடந்தபோதிலும் அப்போதிருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையும் ஒன்றுதான் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவனை அறியாமலே ஏதோ ஒருவித ஞானமும் ஆற்றலும் அவன் மனதைக் கிழித்து அதனுள் நுழைந்து பத்திரமாய் உட்கார்ந்துவிட்டது.     

தொடர்ந்து கந்தசாமி "நீங்கள் மனது வைத்தால் 'தூய்மை இந்தியா'வை இப்பள்ளியின் மூலம் ஆரம்பிக்கலாம். வகுப்பறையை, பள்ளிவளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். மரக்கன்றுகளை நடலாம். ஏன்? உங்கள் வீட்டையும், தெருவையும் சுகாதாரமாகப் பராமரிக்கலாம். இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பற்பல உதவிகள் செய்யலாம். அவர்கள் படும் துயரங்களைப் போக்கலாம். எல்லாவற்றிக்கும் சொந்தப்பணம் செலவழிக்கவேண்டும் என்பதில்லை. மனது இருந்தால் அன்னை தெரேசா செய்ததுபோல் பெரிய மனது படைத்த மக்களிடம் பணமோ, பொருட்களோ வாங்கி எங்கு எப்போது யாருக்கெல்லாம் சேவை தேவையோ அவர்களுக்கு உதவலாம். அதற்குப் பரந்த மனமும், உதவும் எண்ணமும், இரக்க குணமும் இருந்தாலேப் போதுமானது' என்று பலவிதப் பொதுத்தொண்டுகளை அடுக்கிக்கொண்டே போனார். அன்னைத் தெரேசா மக்களுக்குத் தொய்வில்லாமல் சேவை செய்யவேண்டுமென்பதற்காக அவர் சந்தித்த அவமானங்கள், அளவில்லாத இன்னல்களை எடுத்துச் சொல்லச்சொல்ல மாணவர்கள் அமைதியாகவும் கவனம் சிதறாமலும் கேட்டனர். 

அவையனைத்தும் கேட்ட மாணிக்கம் "ஐயா, நானும் வருங்காலத்தில் அன்னை தெரேசாபோல் ஆகவேண்டும்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினான்.

அதைக்கேட்ட கந்தசாமிக்கு 'ஒருநாள் வகுப்பிற்கே தன்னால் ஒரு மாணவனை பொதுச்சேவை செய்யும் எண்ணத்தைத் தூண்டமுடிந்ததே' என்று சற்று திருப்தியடைந்தார்.

"மிக்க மகிழ்ச்சி" என்று அவனைப் பாராட்டினார். அதோடு அவனிடத்தில் 'முடிந்தால் உனது அப்பாவை நாளைச் சந்திக்கிறேன்' என்கிறத் தகவலையும் அவனிடத்தில் கூறினார்.

கந்தசாமியும் மாணிக்கத்தின் அப்பா மதியழகனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் தமிழின்மேல் அலாதியான பற்று உண்டு. பள்ளியில் படிக்கும்போதே பொதுத்தொண்டில் இருவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் தங்களால் முடிந்தளவிற்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் தவறுவதில்லை. அது இன்றளவுக்கும் தொடருவதே சிறப்பு.  

வீட்டிற்கு வந்த பிறகும் மாணிக்கத்தின் மனதில் பொதுச்சேவைப் பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. பொதுச்சேவை செய்வதில் இவ்வளவு துன்பங்கள் இருக்கின்றனவா? என்று அப்போதுதான் உணர்ந்தான். அத்தகைய துயரங்கள் யாருக்காக எதற்காக தாங்கிக்கொள்ளவேண்டும்? எதற்காக ஏழைகளுக்கு அன்னைத் தெரேசா அவர்கள் தன்னை வறுத்திக்கொண்டு இத்தனை உதவிகள் செய்யவேண்டும் என்கிற கேள்வியும் கூடவே அவனுள் எழுந்தது. அவ்வாறு எழுந்த எண்ணங்களானது, எவ்வாறு பெரிதான நீர்குமிழி சில வினாடிகளிலே தானாக உடைவதுபோல சில நிமிடங்களிலே அவனைவிட்டு அகன்றதன் அடையாளமாக அவன் அவசரம் அவசரமாகக் கைகால் கழுவிவிட்டு நேராக டிவி (தொலைக்காட்சி)யின் முன் அமர்ந்து ரிமோட்டை (தானியக்கி) கையில் எடுத்து டக்கு டக்குவென்று சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான்.

அந்தவேளையில் முக்கியச் செய்தியாக 'வானிலை அறிவிப்பு' அனைத்து சானல்களிலும்  ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததுஅதில் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியும் வந்தது. அதாவது 'இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் பலத்தமழைப் பெய்யக்கூடும் என்பதாலும் குறிப்பாக  சென்னையை அதிவேகக்காற்றுடன் கூடிய  புயல்மழை  தாக்கக்கூடும்  என்பதாலும் பள்ளிக்கல்லூரிகளுக்கு நான்கு தினங்கள் விடுமுறை  அளிக்கப்படுகின்றன'  என்கிற எதிர்பாராதச் செய்தி மாணிக்கத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அச்செய்தியை வீட்டிலுள்ளவர்களுக்கும் கேட்கவேண்டு மென்பதற்- காகச் சப்தமாக வைத்தான்.

அச்செய்தியைக் கேட்டவுடன் சமையலறையிலிருந்து ஒருகுரல் "போச்சுடா, மறுபடியும் நாலுநாள் லீவா?  இப்படியே லீவுவிட்டுட்டே இருந்தா வாத்தியாருங்க எப்போ பாடத்தை நடத்திமுடிக்கிறது? நீங்க எப்போ பாடத்தைப் படிச்சு தேர்வு எழுதுறது?"  என்று மாணிக்கத்தின் அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

"அம்மா, உனக்கு என்னைத் திட்டுவதே ஒரு வேலையாகப் போய்விட்டது. எப்பொழுது பார்த்தாலும் படி, படி... இது மட்டும்தான் உனக்குத் தெரியும். படிப்பதை நான் மறக்கமாட்டேன். அதைத்தவிர எனது இலட்சியம் மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று மாணிக்கம் தன் பங்கிற்குப் பதிலளித்தான்.   

"உனக்கு லீவு விட்டாலும் விட்டாங்க, ஏண்டாப்பா சதா டிவியை வச்ச கண்ணு எடுக்காம பார்த்துக்கொண்டே இருக்கனுமா? இது உனக்கே நல்லா இருக்கா? லீவு விடுறது இதுமாதிரி பொழுதுபோக்குறதுக்கு இல்லே. பாடத்தைப் படிக்கிறதுக்கு!  ம்... உனக்கு எப்போ புத்தி வரப்போறதோ" என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் மாணிக்கத்திற்குக் கேட்கும்படி வழக்கம்போல் பல்லவியைப் பாடி முடித்தாள் அவன் அம்மா கீதா.

மறுநாள் வானிலை எச்சரிக்கையின்படி சென்னையில் கொட்ட ஆரம்பித்த மழையானது, வானத்திலிருந்து வீசியெறியப்பட்ட தண்ணீர்க்குண்டுகளாய் சாலை, வீடு, வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், குடிசைகள், தெருவோரத்தில் வசிக்கும் மனிதர்களை தயவுதாட்சண்யம் இல்லாமல் தாக்கிக்கொண்டிருந்தது. அச்செயல் விண்ணிற்கும் மண்ணிற்கும் நடக்கும் போர்களம்போல் காட்சியளித்தது. அதில் சிக்கிய மனிதர்கள் உட்பட பல்லுயிர்கள் என்னவென்றுச் செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தது. கொந்தளிக்கும் கடல்போல் அனைத்து இடங்களையும் தீவுபோல் சூழ்ந்து கொண்டிருந்ததால் மீட்புப்பணிகள் முழுவீச்சில் செய்யமுடியாதபடி கிட்டத்தட்ட அனைத்துக்கரங்களையும் கட்டிப்போட்டிருந்தது. மின்சாரம் முழுவதுமாகத்  துண்டிக்கப்பட்டிருந்தது. மழைவெள்ளம் சாலைகள் இருப்பதே தெரியாதவண்ணம் காட்டாறாய் ஆர்ப்பரித்தபடித் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வினைச் செய்திகளாய் நேரலையாக அனைத்து வீடுகளின் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.
சென்னையில் மாணிக்கத்தின் வீடுச் சற்று மேடான பகுதியாதலால் அங்கு மழையின் தாக்கம் குறைவாகவேக் காணப்பட்டது.

இம்மாதிரி நிகழ்வு, சென்னையானது நூறுஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவித்துக்கொண்டிருந்தது. அதேவேளையில் இத்தகையப் பேரிடரானது, மக்கள் நகரத்தின் தாழ்வான பகுதிகளில் பல வீடுகளைக் கட்டியதாலும், வீடுகளில் மழைநீரைச் சேமிக்கும் வசதி இல்லாமையாலும், சாலைகளில் தண்ணீரை உறிஞ்சிடாத அளவுக்குத் தார், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டதாலும், நீர்வடிகால் கட்டமைப்பு இல்லாததாலும்  ஏற்பட்டது? என்கிறப் பலகாரணங்களை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தது. நல்லவேளையாக முன்னெச்சரிக்கை காரணமாகவும், அரசு மற்றும் மக்களின் ஒத்துழைப்புக் காரணமாகவும் மனித உயிர்கள் இறப்பதைக் கணிசமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தது. அதைவிடக் கூடுதல் தகவலாக வாட்ஸ் ஆப், முகநூல் மூலம் பல்வேறுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைச் சென்னைப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுவீச்சில் இறங்கி தொண்டுசெய்வதை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்த்த மாணிக்கத்தின் உள்ளம் பரவசத்தில் ஆழ்த்தன.

பல பகுதியிலிருந்து வந்திருந்த இளைஞர்கள், பாதித்தவர்கள் பலருக்குப் பால், உணவுப்பொட்டலங்களை வழங்குவது, வெள்ளத்திலிருந்துச் சிலரைக் காப்பாற்றுவது, முதியோர்களைப் பத்திரமாக ஒரிடத்தில் அழைத்துச் செல்வது, மருந்தும் மருத்துவ உதவிகளும் செய்வதை நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த மாணக்கத்தின் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது.       

சொல்லியபடி கந்தசாமி, தன் நண்பன் மதியழகனைப் பார்க்க வீட்டிற்குச்சென்றார். வீட்டுச் சூழ்நிலையை அவர் நோட்டமிட்டார். தொலைக்காட்சிப்பெட்டியில் மூழ்கியிருக்கும் தன் மாணவன் மாணிக்கம் ஒருபுறம், சமையலறையே கதியென்றுகிடக்கும் அவன் அம்மா, வீட்டுச்சாமான்ககளை ஒழுங்குபடுத்துவதற்கும், வீட்டுவேலைகளைச் செய்துப்பழகிப்போன தன் நண்பன் மதியழகன் ஆகிய எல்லோரும் அவரவர் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.  

சற்று நிதானித்த கந்தசாமி "தொலைக்காட்சியைப் பார்த்தாயா மதியழகா? எப்படியிருந்த சென்னை! இப்படி ஆகிவிட்டது! ‘கலிகாலம் என்பது சரியாகத்தான் இருக்கின்றது! இம்மாதிரிப் புயலும், மழைவெள்ளமும் என்வாழ்நாளிலேப் பார்த்ததே இல்லை. மூலைமுடுக்குகளில் இருக்கும் யார்யாரோ போட்டிப்போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல உதவிகள் செய்யும்போது பக்கத்தில் இருக்கும் நாம் அவங்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று தனது ஆசையைச் சொன்னார் கந்தசாமி.

"நீ சொல்வதுச் சரிதான். ஆனால் இந்த நிலைமையில் யாரிடத்தில் எந்த உதவி கேட்டு எப்படி அதை அவங்களிடத்தில் சேர்ப்பது என்பதுதான் தெரியவில்லை?" என்று இருவரும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தின் குரல் கம்பீரமாய்க் கேட்டது. 

"வணக்கம் ஐயா. அப்பா, நீங்கள் பேசியதை நான் கேட்டேன். நீங்கள் அனுமதிக்கொடுத்தால் என்கூட படிப்பவர்கள் இப்பகுதியில் பலர் இருக்கிறார்கள். சற்றும் தாமதிக்காமல் அவர்களிடம் உணவும் உடைகளும் சேகரித்து அதை எனது நண்பனின் அப்பா வாகனத்தில் ஏற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் பல அளிக்கலாம்" என்று மாணிக்கம் என்றைக்குமில்லாமல் இவ்வாறுப் பேசியத்தைக் கேட்டு வாயடைத்துப் போனார்கள்.

"மாணிக்கம், ஒருவரிடத்தில் உதவி பெறுவது என்பது மிகவும் கடினமானச் செயல்!" என்றார் கந்தசாமி.

"தெரியும் ஐயா! கொடுக்க நினைப்பவர்களிடத்தில் வாங்குகிறேன். அவர்களில் சிலர் எத்தகைய வார்த்தைகள் பேசுவார்கள்? எவ்வாறுத் தரக்குறைவாக நடந்துகொள்வார்கள் என்பது நீங்கள் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது ஐயா! நீங்கள் நன்னெறி வகுப்பில் போதித்த அன்னைத் தெரேசா அவர்கள் மக்களுக்குச் செய்த தொண்டுகள் பசுமரத்தாணிபோல் என்மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது ஐயா. என்னால் சென்னை மக்கள் படும் துன்பமும் வேதனையும் பார்த்து சும்மா இருக்கமுடியவில்லை ஐயா. சென்னையில் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத தகுந்த நேரத்தில் உதவிசெய்வதுதான் நாம் மற்றவர்களுக்குச் செய்யும் அற்புதத்தொண்டு என்று நான் கருதுகிறேன். அன்னைத் தெரேசா இருந்திருந்தால் என்ன செய்வாரோ அதை நான்செய்ய வேண்டும் என்று என்மனது துடிக்கின்றது. இதுநாள்வரை தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்துப்பழகிப்போன எனக்கு இன்று காலை மழையால்பாதித்த மக்களை நேரலையாகப் பலஊடகங்களில் பார்த்தபின் எனக்கு அன்னைத் தெரேசா அவர்களின் தொண்டு நினைவுக்கு வந்தது. போரில் காயமடைந்தவர்களுக்கு அவர்கள் செய்த தொண்டு இன்றளவும் உலகம் பேசிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல் நானும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தேதீர வேண்டும் என்று என்மனம் சொல்கிறது" என்று தனது உணர்வுகளை மழையாகக் கொட்டினான்.  

'மாணிக்கம்தான் இவ்வாறு பேசுகிறானா?' என்று இருவருக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

"கந்தசாமி, நம்ம மாணிக்கம் ஏதோ ஒரு வேகத்தில் இருக்கிறான். புத்தபகவான் ஞானம் பெற்றதுபோலல்லவா துள்ளுகிறான். எனக்கென்னமோ நீதான் கண்ணபிரான் அர்சுனனுக்கு உபதேசம் செய்ததுபோல் ஏதாச்சும் சொல்லியிருப்பாய் என்று நினைக்கிறேன். எப்படியோ இந்த அளவுக்கு இவன் பேசுவதே எனக்குப் பெருமையாய் இருக்கின்றது" என்று மதியழகன் அதிசயமாய்ப் பேசினார்.

"மதியழகா, அவனைத் தடைசெய்யாமல் பாதித்தவர்களுக்குத் தொண்டு செய்ய மாணிக்கத்திற்கு அனுமதி கொடுப்போம். அவனுக்குத் துணையாய் நாம் இருப்போம்" என்று கூறியதுதான் தாமதம் மாணிக்கம் மக்களிடமிருந்து பல உதவிகளைச் சேகரிக்கச் சிட்டாகப் பறந்தான்.

ஒருமணி நேரம், இரண்டுமணி நேரம் என்று நான்குமணி நேரம் கடந்தது. கையைப் பிசந்தபடி கந்தசாமியும், மயில்சாமியும் இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருந்தனர். 'தன் மகனுக்கு என்னானதோ' என்று பதறியபடி புலம்பினாள் கீதா. இந்நிலையிலும் மூவரும் நேர்மறை நம்பிக்கையோடு இருந்தனர்.

"மாணிக்கம் கட்டாயம் நல்ல செய்தியோடு வருவான்' என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் கந்தசாமி.

சிலமணிநேரத்திற்குப் பிறகு, மாணிக்கம் எங்கு எப்படி யாரித்தில்லெல்லாம் உதவி கேட்டானோ என்றுத் தெரியவில்லை. அவனின் ஆர்வமும் வேகமும் தொண்டுசெய்யவேண்டும் என்கிற எண்ணமும் எல்லோரும் எண்ணியபடியைவிடவும் கூடுதலாக அனைத்தையும் எளிதாகச் செய்யவைத்தது. இன்றுதான் மக்களின் எண்ணத்தை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு தனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றே எண்ணினான்.

"யாரு, மதியழகன் மகன் மாணிக்கமா? பரவாயில்லையே. உன்னைப்போல மாணவங்க சமூகசேவை செய்றது ரொம்பப் பெருமையா இருக்கு. எங்களாலே நேரடியா பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவிசெய்ய முடியலேன்னாலும் உன் மூலமாச் செய்றது நாமக் கொடுத்து வச்சிருக்கனும். எங்களான உதவிங்க இதோ' என்று பலரும் போட்டிப்போட்டுக்கொண்டு கொடுத்ததை கண்ட மாணிக்கம், மக்களுக்கும் ஈரம் உண்டு என்பதை  உணர்ந்துகொண்டான்.

உணவும் உடையும் நிரம்பிய படி வாகனத்தின் முன்கண்ணாடியில் 'வெள்ள நிவாரணப் பணி வாகனம்' என்கிற வாசகம் தாங்கிய பதாகையுடன் வந்து சேர்ந்த மாணிக்கத்தைப் பார்த்த மதியழகன், கந்தசாமி, கீதா மற்றும் தெருவில் உள்ள அனைவரும் வியப்பாகப் பார்த்ததோடு அவர்களும் பல உதவிகள் செய்தனர். 

"ம்.. மாணிக்கம் செய்த வேலை! மகத்தானது. இதைக்கொண்டு பாதிக்கப்பட்ட சிலருக்காவது உடனே உதவ வேண்டும்" என்று  சற்றும் தாமதிக்காமல் அம்மூவரும் வாகனத்தில் அமர, வாகனம் வெள்ளம் பாத்தித்த திசையை நோக்கிப் பறந்தது.                          

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 

Monday, 28 May 2018

27.5.18 - மாமதுரைக் கவியரங்கம் - தமிழைக்காக்க ... மின்படங்கள்

மாமதுரைக் கவியரங்கம் நிகழ்ச்சி - 27.5.18 - தமிழைக்காக்க...  மின்படங்கள் 
இடம் : மணியம்மை மழலையர் பள்ளி , மதுரை .


அன்று நான் வாசித்தக் கவிதை - இதோ ....                       
              தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் 
                                      புதுக்கவிதை 
                               மதுரை கங்காதரன் 

அக்கறையாய்த் தமிழைப் பரப்பலாம் வாரீர் 
ஆர்வமாய்த் தமிழைப் படைக்கலாம் வாரீர் 
இயக்கமாய்த் தமிழை வளர்க்கலாம்  வாரீர் 
ஈடுபாட்டுடன் தமிழைக் காக்கலாம் வாரீர்.

காகிதத்தில் எழுதுவதைக் கணினியில் எழுதுவீர்
புத்தக வடிவத்தை வலைப்பூவில் வடிப்பீர் 
தமிழ் படிப்பதை வலைதளத்தில் படிப்பீர் 
இலக்கியம் அதை இணையத்தில் படைப்பீர்.

பள்ளிக்கல்லூரியில் தமிழைப் புகுத்துவீர் 
ஊடகங்களில் தனித்தமிழை பரப்புவீர்
வேலைவாய்ப்புகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிப்பீர்
பெயற்பலகைகள் தமிழில் எழுதிடுவீர்

தற்பெருமை பேசுவதைத் தவிப்பீர் 
தற்புகழ்ச்சிக்கு அடிமையாவதைத் தடுப்பீர் 
தமிழை விற்பதை நிறுத்துவீர்
தமிழர்கள் விலைபோவதை அறிவீர்

மாறும் உலகில் மறவாமல் மாறுவீர்
வாழும் உலகில் நன்றாய் வாழுவீர் 
தமிழ் உலகில் தனித்தமிழ் பேசுவீர்
தமிழர் உலகில் தமிழைக் காப்பீர்
                          ************************

                            மின்படங்கள் 

















Wednesday, 9 May 2018

குப்பையில் வாழப்போகும் உலகம் - FUTURE WORLD THAT WILL LIVE IN TRASH



குப்பையில் வாழப்போகும் உலகம் -
FUTURE WORLD THAT WILL LIVE IN TRASH
கட்டுரை 
மதுரை கங்காதரன்
 


தினந்தோறும் திடக்கழிவு உற்பத்தி அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. நகர்ப்புறங்களில் எங்கு பார்த்தாலும் பலவகைக் கழிவுகள் கண்ணுக்குத் தெரிகின்றது. அதன் நீட்சியாக கிராமப்பறங்களிலும் பிரதிபலிக்க ஆரம்பித்து வருகிறது. கிட்டத்தட்டப் பெருநகரங்கள் பெரிய குப்பைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிக்கொண்டு இருக்கின்றது. அதன் கிளையாக 'ஒவ்வொரு வீடு' என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கெல்லாம் முதற் மூலக்காரணம் 'கார்பரேட் நிறுவனங்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றுப்புறம் மாசாகுமே? , சாலையோரங்கள் குப்பையாகுமே? அதனால் மழைநீர் பூமிக்குள் போகாதே? என்பதைப் பற்றி சிறிதும் கவலைபடாமல் அன்றாடம் மக்களுக்குத் தேவைபடும் உணவு வகைகள், மளிகை சாமான்கள், காய்கறிகள், குடிபானங்கள், மின்னனு சாதனங்கள், மருந்து வகைகள் மற்றும் உபகரணங்கள், உடைகள் ஆகியவைகளைக் கவர்ச்சியாகப் பல்வேறு பொருட்களைக் கொண்டு பல்வேறு வடிவப் பொட்டலத்தில் அடைத்து விற்கும் முறை வழக்கமாக ஆரம்பித்து  அதுவே பழக்கமாக மாற்றி இப்போது மக்களை அதற்கு அடிமைபடும் அளவிற்கு வளர்ந்து உச்சத்தைத் தொட்டு இருக்கின்றது. அதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதச் சிந்தனையின் எழுச்சி, கணினியின் மலர்ச்சி என்று சொல்லலாம். அதுமட்டுமல்ல, மனிதர்களுடைய எண்ணங்கள் தினம் தினம் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. அதையே சாதகமாக்கி தங்களின் புதிய சிந்தனைகளைச் செயலாக்கி அதைக் காசாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  

மேலைநாட்டின் 'ஒரே முறை உபயோகி! பிறகு தூக்கி எறி!' என்கிற கலாச்சாரம் இப்போது உலகெங்கும் வேகமாகப் பரவுவதால் நாளை நம் தலைமுறையினர் குப்பைகளுக்கு இடையில் வாழும் அவலமான சூழ்நிலை உருவாகப்போகின்றது. அதனால் சுற்றுப்புறம் மாசடைவதோடு கேடு விளைவிக்கும் பலவித நுண்ணுயிரிகள் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதற்குக் காரணம் மக்களின் சோம்பேறித்தனம், மெத்தனம், அசட்டை, விழிப்பணர்வு இன்மை, கல்வியின்மை போன்றவைகளாகும்.

Image result for The world that lives in the trash

நாமெல்லாம் நினைக்கிறோம், அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் தலைவர்கள், வல்லரசு நாடுகள் எல்லாரும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறவர்கள் என்று. அது முற்றிலும் தவறு. அவர்கள் எல்லோருக்கும் ஒரே சிந்தனை தான். 'மக்களை எவ்வழிகளில் தொல்லை கொடுக்கலாம். அவற்றின் மூலம் எவ்வாறு நமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளலாம்' என்பதே. இதில் மேலும் ஒரு விந்தை என்னவென்றால், பூமியை நோக்கி ஏதோ ஒரு விண்கல் வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியைத்தாக்கி இந்த உலகத்தை அழிக்கும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள். அதுவும் தாண்டி சில ஆய்வாளர்கள் நீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கிறார்கள். அதாவது கண்ணுக்கெதிரே திடக்கழிவுகளால் பூமியானது நாசமாகிக் கொண்டிருப்பதையும், புவி வெப்பமயமாகிக் கொண்டிருப்பதையும், நிலத்தடிநீர் குறைந்து கொண்டிருப்பதையும், நீருக்காக மக்கள் அலைவதையும், நச்சு வாயுக்கள் காற்றை மாசுபடுத்திக் கொண்டிருப்பதையும், கழிவுநீர்களால் நிலத்தடி நீர், நீர்நிலைகள், கடல் அசுத்தமாகிக் கொண்டிருப்பதை எப்படி அவர்களால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறார்களோ?!

இப்போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றது. அதாவது 'குழந்தையைக் கிள்ளி அழவிட்டு பிறகு தொட்டிலை ஆட்டுவதுபோல்' பாசாங்கு செய்யும் செயல்தான் நடந்துகொண்டு இருக்கின்றது. இப்போது இதுவரை உருவாகி இருக்கும் திடக்கழிவுகள் மலைபோல் உயர்ந்துகொண்டு வருக்கின்றது. அதில் சொற்ப அளவு மண்ணுக்குள் புதைத்து வருகிறார்கள். சிறிதளவு எரிக்கவும் செய்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிய இக்கழிவுப்பொருட்கள் அதை அழிக்க மக்களின் வரிப்பணம் வீணாகப்போகின்றது.

இதிலும் பன்னாட்டு மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் தந்திரம் அடங்கியிருக்கின்றது. அதாவது நீங்கள் குப்பை கொட்டுங்கள், அதைப் பொறுக்கக் குத்தகை எடுத்து அதன் மூலம் கோடானகோடி சம்பாதிக்கலாம் என்று தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகின்றது. கூடியவிரைவில் எந்தக் குப்பையானாலும் தனியார் மூலமாகதான் அப்புறப்படுத்தவோ அல்லது குப்பைக்கூடங்களுக்குக் கொண்டு சேர்க்கவோ, மறுசுழற்சி செய்யவோ முடியும். அரசாங்கம் ஏதும் செய்யாது. அதற்குத் தனியாக ஒரு விலைகொடுத்தால் நடக்கும். இல்லையென்றால் வீட்டுக்குள்ளே எல்லாக் குப்பைகளை வைத்துக் கொள்ளவேண்டும். இது கூடியவிரைவில் நடக்கப்போகிறது. அப்போது மக்கள் 'குய்யோ, முய்யோ'ன்னு கத்தவும், கதறவும் செய்வார்கள்.

இவ்வாறு பொட்டலங்களின் மூலம் திடக்கழிவாக பூமி நச்சுத்தன்மை ஏறவும், வாகனம் மூலம் கற்று மாசுபடுவதையும், தொழிற்சாலைக் கழிவுநீரினால் நீர்நிலைகள் அசுத்தமாவதையும், கடல்வாழ் உயிரினங்கள் அழிவதையும் தடுக்க அதிலிருந்து மனித இனம் காக்கும் ஏதாவது ஒரு கூட்டமைப்போ, சட்டமோ, இயக்கமோ ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றதா? என்றால் அது கண்டிப்பாக 'இல்லை' என்பதே உண்மை. ஏதோ ஒப்புக்கு பக்கம் பக்கமாக சட்டத்தையும் அதை மீறுவோருக்கான தண்டனையும் இயற்றி வைத்ததோடு சரி. அது செயலாக பின்பற்றப்படுகின்றதா? என்கிற கண்காணிப்பு அறவே இல்லை.                         
'குப்பைதானே! கழிவுதானே! மாசுதானே! அசுத்தம்தானே!' என்று இன்று அலட்சியமாக இருந்தாலோ அல்லது செயல்பட்டாலோ வரும்காலத்தில் அதன் எதிர்விணை மிகத்தீவிரமாக இருக்கும் என்பதில் எள்ளவிலும் ஐயமில்லை. அண்மையில் பல புதிய புதிய நோய்கள் உண்டாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது நம்புவது கடினமாகத்தான் இருக்கும். மேலும் குப்பைகள் கையாளுவதற்குத் திறமையும், மிகுந்த கல்வியும், அறிவியல் அறிவும், மாசுக்கட்டுப்பாடு சட்டங்களை பின்பற்றும் மன உறுதியும் மிகவும் தேவை.

உங்களிடம் ஒரு கேள்வி! நீங்கள் எதிர்கொள்ளும் குப்பைகளில் எவை மறுசுழற்சிக்கு உரியவை? அதேபோல் எவை புதைக்கப்பட வேண்டியவை? எவை எரிக்கப்பட வேண்டியவை? எவை மீண்டும் பயன்படுத்தக் கூடியவை என்று சரியாகச் சொல்லமுடியுமா? கண்டிப்பாக முடியாது! ஒரு எடுத்துக்காட்டு. நாம் பயன்படுத்தும் காகிதம், அட்டை போன்றவைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவை. ஆனால் ஆய்வு, அதில் சுமாராக 50% கீழ்தான் மறுசுழற்சிக்கு போகின்றது. அதுபோல் பிளாசுடிக் விசயத்தில் கூட. அதாவது பல ஆண்டுகளாக மரத்தைக் கொண்டு காகிதம், அட்டைகளையும், பிளாசுடிக் மூலப்பொருட்களையும் உபயோகித்து வருகிறோம். அப்படி இருக்கும்போது இருக்கின்ற அதன் கழிவுக்கொண்டு நாம் மறுசுழற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இன்றும் மரத்தை வெட்டுகிறோம். புதிய பிளாசுடிக் மூலப்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். அப்படியென்றால் அதன் கழிவுப்பொருட்கள் என்ன ஆயிருக்கும்? அது பூமியில் பல இடங்களில் பத்திரமாக இருக்கின்றது என்றுதானே பொருள். மேலும் கணினிப்புரட்சி வந்திராவிட்டால் பூமியில் ஒரு மரம்கூட மிஞ்சி இருக்காது.  அவைகள் மறைமுகமாக மரங்களைக் காப்பாற்றி வருகின்றது.  

Image result for The world that lives in the trash

குப்பைகள் இவ்வாறு மனிதகுலத்தை நாசம் செய்ய வந்தச் 'சாத்தான்' என்றே அழைக்கலாம். ஏனென்றால் அதன் ஆக்கம் பலவித பண்புகள் கலந்த பொருட்களால் ஆனது. எடுத்துகாட்டாக ஒரு காகித்தில் ஒரு பிளாசுடிக் காகிதத்தை வைத்து அதில் உணவுபண்டத்தை வைத்து பொட்டலமாகக் கட்டி இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் காகிதம் மறுசுழற்சிக்கும், மெல்லிய பிளாசுடிக் காகிதம் புதைக்கவும், மிஞ்சிய உணவுப்பண்டத்தை மக்க வைக்கவும் வேண்டும். ஆனால் நாம் அவற்றை ஒன்று சேரத்து குப்பையாகப் போடுவதால் காகிதம் மறுசுழற்சியாவதுத் தடுக்கப்படுகிறது. இப்படி குப்பைகளுக்குப் பலபணபுகள் இருப்பதால் படித்தவர்களுக்கே குழப்பம் வருகிறதென்றால், குப்பை அள்ளும் படிக்காத பாரமரர்களினால் என்ன செய்ய முடியும். ஒன்று மட்டும் உறுதி. குப்பைகள் வாங்கும் இடத்திலே பிரித்து பிரித்து வாங்குவது தான் நல்லது. அது தவிர்த்து குப்பைகள் ஒரேயடியாய் வாங்கி மொத்தமாகச் சேர்த்து வைத்து பிறகு பிரிக்கலாம் என்றால் அது இயலாத காரியம். ஏனெனில் நாள் ஆக ஆக குப்பைகளில் இருந்து துருநாற்றம் வருவது அதிகமாகும். சரி கண்காணாத இடத்தில் புதைக்கலாம் என்றால் அங்கு வரை யார் எடுத்துச் செல்வது? யார் குழியைத் தோண்டுவது? யார் அதில் போட்டு மூடுவது? அதற்கு பணம் கொடுப்பது யார்? அதைவிட்டு எரிக்கலாம் என்றால் அதிலிருந்து வெளிப்படும் நச்சுவாயுக்களை எப்படி தடுப்பது? அதனால் மக்களுக்குப் பாதிப்பு உண்டானால் யார் பதில் சொல்வது? என்கிற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லையே?!

அப்படியென்றால் பூணைக்கு யார் மணிகட்டுவது? என்கிற பழமொழியில் முடியும். அதாவது எந்த ஒரு ஆக்கப்பூர்வமாக வேலையும் காசு இல்லாமல் நடக்காதுஅதுவும் பணத்தைத் தண்ணியாகச் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் தானே. அரசாங்கம் செய்யட்டும் என்றாலும் கழிவு அகற்றும் வேலைகள் முழுமையாக நடக்காது. ஆனால் பணம் மட்டும் கார்பரேட் நிறுவனத்திற்குத் தந்து கொண்டே இருக்கவேண்டும். மேலும் அவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்களை வைத்துக் கொண்டே பாதி வேலைகளை முடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன சொல்வோம்? அரசு கார்பரேட் நிறுவனத்திற்குத் துணை போகின்றது என்று போராட்டம் பண்ணி அரசியல் ஆதாயம் தேடவேண்டியது. ஆக தானும் செய்யக் கூடாது. பிறரையும் வேலை செய்யவிடக்கூடாது என்கிற சித்தாந்தத்தில்தானை அரசியல் நடக்கின்றது. மக்கள் பொதுவாக கண்கெட்ட பின்னேதான் சூரியனைப் பார்த்து வணங்க ஆசைப்படுவார்கள்! என்பது உண்மை தானே.

சரி, நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்க வேண்டியது பார்க்கலாமா? எவ்வகைகளில் இ்க்குப்பைகளைக் கையாளலாம். மேற்கொண்டு உருவாகாமல் தடுக்கலாம். இருக்கின்ற குப்பைகளை என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். அரசாங்கம் 'குப்பைச் செயலி' ஒன்றை உருவாக்கி அதில் குப்பை வகையினை தினமும் பதிவேற்றம் செய்திட வேண்டும். முதலில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட, கல்லூரி, பள்ளி, அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவ மனைகள், தியேட்டர்கள், மால்கள், மார்கெட், திருமண மண்டபங்கள் போன்றனவற்றில் அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது குப்பைகள் உற்பத்தியாகும் இடங்கள், அதன் அளவுகள் மற்றும் அதன் வகைகள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் வேண்டும்.  

இப்போது சேர்ந்து இருக்கின்ற குப்பைகளைக் கண்டிப்பாக மறுசுழற்சி, புதைப்பது, எரிப்பது, மறுபயன்பாடு என்று பிரித்தே தீரவேண்டும்.

Image result for The world that lives in the trash

இனி சேரவிடாமல் தடுக்க

1. எந்த ஒரு பொட்டலம் மடிக்கும் பொருளில் கட்டாயம் அதன் பண்புகளுக்குத் தகுந்தாற்போல் எவ்வகையில் குப்பையினை ஒழிக்கவேண்டும் என்கிற முறையினை நிறத்தின் மூலம் தெரியப்படுத்தலாம். சிவப்பு - எரிக்க (மருந்து, நச்சு உலோகம், வேதிப்பொருட்கள், மின்னணு பொருட்கள் போன்றவை), பச்சை - மக்க (உணவு, இலை, காய்கறிகள், கனிகள் போன்றவை), ஊதா - மறுசுழற்சி (தகுந்த பிளாசுடிக், மரக்கட்டைகள் போன்றவை), மற்றும் மஞ்சள் - மறுபயன்பாடு (கண்ணாடி புட்டிகள், உலோக டப்பாக்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவை)  என்றபடி இருந்தால் குழப்பமில்லாமல் இருக்கும். 

2. பள்ளி குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களுக்கும் குப்பைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3. குப்பையினைச் சேகரிப்பவர்கள் குறைந்த அளவு கல்வித்தகுதியும், அதில் அச்சிடப்பட்ட நிறத்தினைப்பற்றிய விளக்கம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

4. குப்பை சேகரிப்பர்கள் விலை உயர்ந்த பொருட்களைத் தவிர மற்ற பொருட்களையும் சேகரிக்க வலியுறுத்த வேண்டும்.

5. அவர்களை அமைப்பு சாராத் தொண்டு நிறுவனங்கள் வழிநடத்த வேண்டும்.

6. ஒவ்வொரு வார்டு உம் அங்குள்ள அல்லது ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

7. வாகன விற்பனை கட்டுப்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பு இல்லாத வாகனத்தை ஓட்டிட அனுமதி அளிக்கக் கூடாது.

8. பிளாசுடிக் உற்பத்தியாளர்களை கட்டுப்படுத்துவதுடன், புதிதாகத் தொடங்குபவர்களுக்கு மாசுக்கட்டுப்பாடு சட்டத்தை கண்டிப்பான முறையில் பின்பற்றச் செய்யவேண்டும்.

9. பிளாசுடிக் மற்றும் காகித உற்பத்தியாளர்கள் கட்டாயம் அவர்களின் விற்பனை அளவுக்கேற்ப மக்கள் கூட்டம் நடத்தி அதில் பங்கேற்று அவர்களின் ஐயங்களை போக்க வேண்டும்.

10. குப்பைச் சேகரிப்பவர்கள் நேரடியாக வீடுகளுகுச் சென்று பிரிக்கப்பட்ட குப்பையினை மட்டும் பெறவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு வகை குப்பை மட்டும் பெறவேண்டும். ஒரே நாளில் எல்லாவிதக் குப்பைகள் பெறவேக் கூடாது.

11. நடமாடும் குப்பை வண்டி மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு குப்பை மட்டும் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

12. பொது இடங்களில் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகள் வைப்பது தவிர்க்க வேண்டும். அதிக குப்பைகள் தனியாக நகராட்சிக்குத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

Image result for The world that lives in the trash

இவ்வாறு செய்தால் மட்டுமே வருங்கால சந்ததியினர்கள் தப்பிப்பார்கள். இல்லையேல் அவர்களுக்கு குப்பை ஒரு சொத்தாக விட்டுச் செல்ல நேரிடும். எல்லா இடத்திலும் குப்பையினைப் புதைக்க ஆரம்பித்தால் பின்பு அதன் மேல் தான் மக்கள் குடியேற வேண்டியிருக்கும். எவ்வாறு 'மயான இடங்கள்' குடியிருப்பு இடமாக மாறியதோ அவ்வாறு குப்பை விசயத்திலும் நடைபெற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது. ஆக குப்பை விசயத்தில் மக்கள் சற்று அக்கறையாகச் செயல்பட்டால் பூமியைக் காக்கலாம். அதனால் மழைநீர் நிலத்தடிக்குச் செல்லும். அதன் நீர்மட்டம் உயரும். அதோடு மரம், செடி, கொடிகள், கால்நடைகள், நீர்வாழ் உயிரினங்கள் பெருகும். மக்களின் வாழ்வாதாரம் பெருகும். அதனால் தண்ணீர் தட்டுப்பாடின்றி, பசிப்பஞ்சமின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம்.  
*****************************