Pages

Sunday, 13 August 2017

"எங்களிடம் விளம்பரம் செய்யுங்கள்! வியாபாரம் பெருக்குங்கள்!"

இது நம்ம சானல் வழங்கும் 'விளம்பர ரகசியம்' 
'ஐடியா  மன்னனின்'  விளம்பர சீரியல்!
மதுரை கங்காதரன்  
"எங்களிடம் விளம்பரம் செய்யுங்கள்! 

வியாபாரம் பெருக்குங்கள்!"

இடம் : இது நம்ம சானல் டி.வி அலுவலகம்

(சில நிறுவனங்கள் விளம்பரத்தின் மூலம் எப்படியெல்லாம்  மக்களை ஏமாற்றி வியாபாரம் பார்க்கிறார்கள் என்பதை  கற்பனையுடன் ஒரு  பேட்டி. மேலும்  இனி  வரும்  காலங்களில்  விளம்பரங்கள் எந்த மாதிரியாக இருக்கும்  ஒரு நிகழ்ச்சி )    

 'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : வணக்கம் ! நான் தான் 'மை ஹேர் ஆயில்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.   ஏற்கனவே நான் என்னோட 'மை ஹேர் ஆயில்' வியாபார அபிவிருத்தி விசயமா , அதனோட விளம்பரம் சம்பந்தமாக  இன்றைக்கு பேசி முடிவு பண்ணலாம்ன்னு சொல்லியிருந்தேன். நீங்க அதுக்குத் தயாரா இருக்கீங்களா ?   

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : வணக்கம். என்ன தயாரா? நீங்க இந்த அளவுக்கு ஆதரவு தர்றதே எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. விளம்பரத்திலே எங்க 'சானல்' ஒரு புதுமையைப் புகுத்தி டி.வி. சரித்திரத்திலே  முன் எப்போதுமே இல்லாத அளவுக்கு ஒரு கலக்கு  கலக்க இருக்கிறோம்.  ஆமாம் ..   நீங்க ஏதோ முடி நீளமாக வளரவும், நரை முடியை கருகருன்னு ஆக்குவதற்கு 'மை ஹேர்'ன்னு ஒரு  தைலம் தயாரிக்கிறதா சொன்னீங்க.  உங்க வியாபாரம்  சிறப்பா நடக்க நாங்க என்ன செய்யனும்ன்னு சொல்லுங்க.  எங்களாலே எவ்வளவு சிறப்பா செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பா நாங்க செய்யுறோம். உங்களோட 'மை ஹேர் ஆயில்' பற்றி கொஞ்சம் சொல்லுங்க ! 

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : கட்டாயமா ! அதாவது இப்போது ஆண்களாகட்டும், பெண்களாகட்டும்,  சின்னவங்க, பெரியவங்க  யாராயிருந்தாலும் தங்களோட  முடி கரு கருவென்னு இருக்கனும்ன்னு விருப்பப்படுறாங்க. ஏன்னா கருப்பு முடி 'இளமையின் அடையாளம்' ன்னு நினைக்கிறாங்க. இன்னும் சொல்லப்போனா  வழுக்கைத் தலையிலே முடி வளராதுன்னு நல்லாவேத் தெரியும். ஆனாலும் சிலர் எவ்வளவு பணம் செலவழிந்தாலும்   பரவாயில்லே, எப்படியும்   தன்னோட வழுக்கைத் தலையிலே   நாலு முடி  வளர்த்தே தீருவேன்னு ஒத்த கால்லே நிக்குறாங்க. அதுக்குத் தகுந்தாற்போல் ஏதாவது  புது வரவாக  ஏதாவது வந்தா  உடனே  அதை  வாங்கி  தேச்சுக்கிறாங்க. அதுக்கெல்லாம்  முக்கிய காரணம்! இந்தக் கால சினிமாவிலே வர்ற ஹீரோ, ஹீரோயின்களுக்கு எப்போதுமே இளமையா, முடி கருப்பா  காட்டுறதனாலே தான். அதுபோல  மக்களும்  என்றும்  இளமையா  இருக்க  விரும்புறாங்க. அதைத் தான் நாம 'டக்'குன்னு  புடிச்சிக்கிட்டோம்.  நம்ம மக்கள்ளே சிலருக்கு சுயம்மா சிந்திக்கிற அறிவு ரொம்ப கம்மி. பத்து  ரூபாய்க்கு  தேங்காய் எண்ணெய் வாங்கி தினமும் ஒழுங்கா தலையிலே தடவிக்க மாட்டாங்க ! ஆனா அதே  எண்ணையே  கொஞ்சம் கலர்  பொடியைப்  போட்டு,  லேசா ஆளைத் தூக்கும் 'சென்ட்' ஐ சேர்த்து, கண்ணைப் பறிக்கும் பேக்கிங்லே போட்டா அதை நூறு ரூபாய் வாங்கவும் தயாராக இருக்காங்க. இப்போ அதோட பேரு 'தைலமா' மாறுது. அதோடு தினமும் தவறாம தடவவும் செய்யுறாங்க. இதைவிட ஒரு படி கூடுதலா புகழ்பெற்ற கதாநாயகனோ அல்லது  கதாநாயகியையோ  அல்லது  விளையாட்டில்  உள்ளவர்களை  வைத்து  விளம்பரம்  செய்தா  அதே  எண்ணையே  ரூபாய்  இருநூறுக்கும்  விற்கலாம்.  அதையும் மக்கள் வாங்குறாங்க. இந்த மாதிரி ஏமாந்து வாங்கறது பெருமையா கூட பேசுறாங்க.  இப்போது தான் நான் வியாபாரத்திலே  காலெடுத்து வைச்சிருக்கேன். என்னாலே அவங்களைப் போட்டு பெரிய செலவு செய்ய முடியாது. அதனாலே  உங்களைத் தேடி வந்திருக்கேன். 
                                            

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :அதுக்கு நான் என்ன பண்ணனும் ? ஜனங்களை ஏமாத்துறது பாவமில்லேயா ? 
'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : நாம ஏமாத்தப் போறதில்லையே. யாரையுமே தேங்காய் எண்ணெய் விற்க விடாம வெறும் என்னுடைய 'பிராண்ட்' மட்டும் கொள்ளை லாபத்திலே வித்தா அது பாவம்! நான் என்னோட தைலத்தின் விலையை அதாவது கலர் தேங்காய் எண்ணெய் விலையை கொஞ்சம் கூட்டி விக்கிறேன். இது தவறா?  ஏமாளிங்க வாங்கட்டும். தெளிவானவங்க இதை வாங்காம இருக்கட்டும். இப்போ என்னோட 'லாஜிக்' சரிதானா ?
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : ஒருவேளை உங்க குட்டு தெரிஞ்சுட்டா? அப்புறம் என்ன செய்வீங்க? உங்க வியாபாரம் போயிடும்லே!
'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : யார் சொன்னது? உடனே  அந்த பேரை  மாத்தி 'யூவர்  ஹேர் ஆயில்'ன்னு வைச்சு   சிவப்பா இருக்கிறதை பச்சையாக்கி  வேறு வாசனை  திரவியத்தை கலந்து பாட்டில்லே கொடுத்துவிடுவோம்லே.  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :இது எப்படி  வெற்றிகரமா 'வொர்க் அவுட்'  ஆகும்ன்னு சொல்றீங்க ?
    
'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : பிரமாதமா ஒண்ணுமில்லே. நம்ம எண்ணெய்யை யார்  யார் வாங்குவாங்க ? வெறும்  வழுக்கைத்  தலைக்காரங்களும், வெள்ளை முடி இருக்கிறவங்க  மட்டுமில்லே? இயற்கையிலே முடி  நல்ல கருப்பா, நீளமா உள்ளவங்களும் வாங்குறாங்க. அவங்களைப்  பொருத்தமட்டில்  தங்களோட கருப்பு முடிக்குக் காரணம்  நம்ம எண்ணெயின்  மகிமைன்னுதான் நினைப்பாங்க. அவங்க  வாங்குற  வரைக்கும்   நம்ம   வியாபாரம்   ஜோரா  நடக்கும். அவங்களைப் பார்த்து மத்தவங்களும் வாங்குவாங்க. ஒரு  வருஷம் கழிச்சுதான்  உண்மை தெரியவரும்.   அப்போ 'டக்'குன்னு பேரை மாத்தி புது விளம்பரம் செய்து மறுபடியும் அதே வியாபாரத்தை தொடங்கிவிடுவோம். இது எப்படி இருக்கு ?                         
  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :சரி ! இந்த மாதிரியெல்லாம் கூட வியாபாரம் பண்ணலாம்ன்னு   இப்போது தான் உங்க  மூலமாத் தெரிஞ்சுகிட்டேன். அது போகட்டும். என்கிட்டே நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?        
  

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : பெருசா ஒண்ணுமில்லே ! எங்களோட வியாபாரம் பெருக்குறதுக்கு  'ஐடியா மன்னன்' நீங்கதான் ஒரு வழி  சொல்லணும்.    
  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :என்கிட்டே  ஆயிரக்கணக்கா 'ஐடியா' இருக்கு. ஆனா .. ஆனா .. 

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : ஆனா .. என்னங்க.. சும்மா சொல்லுங்க .. நீங்க எதுக்கு யோசிக்கிறீங்கன்னு எனக்கு  புரிஞ்சி போச்சி. அதாவது  என்னோட லாபத்திலே   உஙகளோட பங்கு எவ்வளவுன்னு கேட்குறீங்க! சரி தானே.        
  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :பரவாயில்லையே.  சுத்தி வளைக்காம நேரடியா வியாபாரத்துக்கு வந்துட்டீங்களே! எவ்வளவு கொடுக்கலாம்ன்னு நீங்க சொல்லுங்க?

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : இதுலே நான் ரொம்ப நியாமானவன். உங்களுக்கு 50% , எனக்கு 50% சரியா? 
  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி: நீங்க இவ்வளவு பரந்த மனப்பான்மை உள்ளவர்ன்னு   இப்பத் தான் தெரிய  வருது. நீங்க இவ்வளவு தருகிறதனாலே நான் உங்களுக்கு அதிகபட்ச   விளம்பரத்தையும்,  லாபம் அதிகமா வருவதற்க்கான ஏற்பாடும் செய்கிறேன். 
    

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி: எப்படி செய்யப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
  

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி: கட்டாயமாக! அதாவது இப்போ மக்கள் திரைப் படங்களை  விட அதிகம்  பேர்  சீரியல்கள் தான் பார்க்குறாங்க. அதுவே நான்  ஒரு வியாபாரத் தளமாக எற்படுத்திக்கப் போறேன். அதாவது இப்போதுள்ள சீரியல் புகழ் , மக்களின் கனவுக் கன்னியாக,  அழகு தேவதையா இருக்கிற நம்ம 'காந்த சுந்தரி'யைத்  தான்  நடிக்க வைக்கப்  போறேன்.      
  
'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி : அருமையான தேர்வு ! ஆமா  அவங்களுக்கு முடி அவ்வளவா  இல்லையே. இருக்கிற கொஞ்சம் முடியும் வெள்ளையா இருக்கும்.   அவங்களை வைச்சு எப்படி ? விளம்பரம்!

 இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : இந்த விஷயம் உங்களுக்கும் எனக்கும் தான் தெரியும். மக்களுக்குத் தெரியாது. அவங்களுக்கு  கருப்பா நீளமா உள்ள ஒரு சவுரி  முடியை  ஒட்ட வைச்சு அழகா மேக்கப் போட்டு          கண்ணைப்  பறிக்கும் ஆடைகளை போட்டு   கலர்கலரா விளக்குகளைப் எரியவிட்டு அசத்திடுறேன். அதோடு  எல்லா  சீரியல்லேயும் கட்டாயம் உங்களோட 'ஆயில்'  எல்லா நடிகர்களும் உபயோகப்படுத்துறாப்பிலே காட்டுறோம். அதோடு ஒவ்வொருமுறை நடிக நடிகைங்க நேயர்களுக்கு, உங்க தைலம் காட்டி 'என்னோட கருமையான முடிக்குக் காரணம் இந்த மை ஹேர் தாங்க. என்னைப் போல உங்களுடைய முடியும் அழகா இருக்க வேண்டும்ன்னா தினமும் உபயோகிங்க' என்கிற 'பஞ்ச்' வசனத்தை ஒவ்வொரு முறை தடவும்போதேல்லாம் பேசுவாங்க. அப்போது பின்னணியிலே  கைத்தட்டலும்,  விசில்  அடிக்கிற  சப்தமும் பறக்கும். அதோடு பல பொம்மைங்க ஓடி வந்து (அனிமேசன்) முத்தம் கொடுக்கிறதா  காட்டுவோம். இந்த மாதிரி ஒவ்வொரு சீரியல்லேயும் கட்டாயம் ஐந்து முறை வரும். அப்புறமென்ன மக்கள் அதை பார்க்கப் பார்க்க  வாங்க  ஆரம்பிப்பாங்க!  அப்புறம் வியாபாரம் பிச்சிட்டு ஓடும்.             
  
'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி: சரி எப்போ ஷூட்டிங் வைச்சுக்கப் போறீங்க. வசனம் ரெடியா?   
  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : எல்லாமே தயாரா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்திலே  'காந்த சுந்தரி' வந்துடுவாங்க. வசனம் தயார். அதோ அவங்களே வந்துட்டாங்க.  

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி :   அப்போ  நான் நாளைக்கு வர்றேன். 
  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி: சரிங்க. உங்களுக்கு பல வேலைங்க இருக்கும். நீங்க எண்ணெய் தயாரிப்பு வேலை பாருங்க. விளம்பரம் வந்த பிறகு நல்லா போகும். அதனாலே எல்லாக் கடைகளிலேயும் கிடைக்கும்படி  பார்த்துக்கொள்ளுங்க.
    

'மை ஹேர்'  கம்பனி நிர்வாகி :  சரிங்க .


****************************************************************************************************************

 இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : வாங்க 'காந்த சுந்தரி' ! 
காந்த சுந்தரி : ரொம்ப அவசரம்ன்னு என்னோட செக்ரட்டரி சொன்னாங்க! 
  

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : ஒண்ணுமில்லே. சீரியல் புகழ் உச்சியிலே  இருக்கிற உங்களை விளம்பரம் மூலமாகவும் புகழின் உச்சிக்கே  கொண்டுபோகப் போறேன். 'ஹாலிவுட்'லே போறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு!       

காந்த சுந்தரி : புதிர் போடாம கொஞ்சம் புரியும்படியாச் சொல்லுங்க.  
  

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :அதாவது நீங்க மெயின் ரோல்லே ஒரு ஹேர் ஆயில் விளம்பரத்திலே  நடிக்கப்  போறீங்க. உங்களைப் போல சீரியல்லே நடிக்கிற  எல்லாருமே அந்த எண்ணெய்யை உபயோகப்படுத்துறதா காட்டப் போறோம். நீங்க தான் எல்லோருக்கும்  அந்த எண்ணெய்யைத் தர்றீங்க. ஆமா, நீங்க  இப்போ எந்த எண்ணெய்  தலைக்குத் தடவுறீங்க ?
காந்த சுந்தரி: முன்னாடி விளம்பரத்திலே வர்ற எண்ணெய்ங்கதான் தடவுனேன். முடி கொட்ட  ஆரம்பிச்சுச்சு. கொஞ்சம் சுதாரிச்சு உடனே வெறும் தேங்காய் எண்ணையை தினமும் தடவ ஆரபிச்சேன். இப்போ பரவாயில்லை. எனக்கு இருக்கிறதே சின்ன முடி. எப்படி நீளமா ஆக்கப்போறீங்க?  
இது நம்ம சானல் டி.வி நிர்வாகி : நீளமான சவுரி முடியை வச்சுத் தான்.  அது மக்களுக்குத் தெரிய வேண்டாம். இப்போ  நீங்க புதுசா மார்கெட்டிலே வரப்போற 'மை ஹேர்' ன்னு  ஒரு   எண்ணெய்யை  தலையிலே தடவுறாப்பிலே ஒரு ஷாட். அப்போ ஒரு வசனம். என்னோட கரு கரு கூந்தலின் ரகசியம் இந்தியாவில் நம்பர் ஒன் ஹேர் ஆயில் 'மை ஹேர்' ஆயில். நீங்களும் உபயோகிச்சுப் பாருங்க. உங்க இளமை என்றும் நிரந்தமாக இருக்கும். உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர, முடி கரு கருவென்று இருக்க நாள் தவறாமல் தினமும் குளிப்பதற்கு முன், குளிப்பதற்கு பின் உங்கள் முடிக்குத் தகுந்தவாறு உபயோகிங்க. இளமை புத்துணர்ச்சி பெறுங்க !' இது தான் உங்கள் வசனம்.

காந்த சுந்தரி: ரொம்ப சின்ன வசனமா இருக்கு? நான்  பேசிய வசனத்திலே இது தான் சின்ன வசனமா இருக்குன்னு நினைக்கிறேன். சீரியல்லே புகுத்த போறீங்க. ஒரு அரை மணி நேரம் வசனம் பேசினாத் தானே எனக்கு மதிப்பு இருக்கும்.  

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :நீங்க சொல்றது சரி தான். போகப் போக அந்த மாதிரி பண்ணுவோம். அதோடு 'விளம்பரப் பாட்டு' ன்னு புதுமையா புகுத்தப்போகிறோம். முதல் பாட்டு நீங்க தான் பாடுறீங்க. அஞ்சு நிமிடப் பாட்டு. அது ரொம்பவே ஹிட் ஆகும்! இப்போ இது போதும்ன்னு நான் நினைக்கிறேன்.  
காந்த சுந்தரி : ஆமா. இந்த எண்ணெய் இப்போத்தான் அறிமுகப்படுத்துறாங்க. நான் எப்படி ' என்னோட அழகான  கூந்தலின்  ரகசியம் இந்த 'மை ஹேர் ஆயில்'ன்னு   சொல்றது. அதோடு அதுக்குள்ளே எப்படி இந்தியாவின் நம்பர் ஒன் ன்னு சொல்றீங்க?      
  

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி :அது அப்படித் தான். எப்படி மூணு நாள்  கூட ஓடாத படத்தை 'சூப்பர் ஹிட் திரைப்படம்'ன்னு சொல்றதில்லையா? கொஞ்சமா விற்பனையாகுற பல பத்திரிக்கைங்க 'இந்தியாவின் நம்பர் ஒன் நாளிதழ், வார இதழ், மாத இதழ்ன்னு சொல்றதில்லையா!? அதுப்போலத் தான் இதுவும். நம்ம மக்கள் சிலருக்கு, மத்தவங்க எதைச் சொன்னாலும் உடனே நம்பிடுவாங்க. அது போதுமே. அதுவுமில்லாம சீரியல்லே எது இருக்கோ அதை மக்கள் விரும்புறாங்க. குறிப்பா நீங்க நடிச்சா உங்க விசிறிங்க ஆண்கள் கண்டிப்பா வாங்குவாங்க. அவங்க வாங்கினா அவங்களோட மனைவிங்க உபயோகிப்பாங்க. அதாவது ஒரே விளம்பரத்திலே பல பேர்கள் வாங்குவாங்க ! எப்படி ஐடியா ?  

காந்த சுந்தரி :  இப்போவே நான் தயார். உடனே எடுங்க. அடுத்து வேற ஷூட்டிங் இருக்கு!

******************************************************************************************************************  
     

இது நம்ம சானல் டி.வி நிர்வாகி: 'இது நம்ம சானல்' தொழிலாளிகளே !  நம்ம டி.வி யிலே சீரியல், படம் , ஆடல் ,  பாடல்,  பேட்டி , செய்திகள், விளையாட்டுகள், ஆன்மிகம் போன்றவைகள் பல நேயர்களின் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி தயாரித்துத் தருகிறோம். இது எல்லோருமே பண்றாங்க. உலகிலே முதன்முறையாக நம்ம டி.வியிலே இதுவரை யாருமே செய்யாத ஒரு புதுமையை நம்ம டி.வி யிலே செய்யப் போகிறோம். அதுக்கெல்லாம் நீங்க ஒத்துழைப்புத் தரவேண்டும்ன்னு கேட்டுக் கொள்கிறேன். முதல்லே வெள்ளோட்டமா  '  மை ஹேர் ஆயில்' கம்பனியின் தயாரிப்புக்கு  நாமே ஒரு விளம்பரம் செய்து கொடுத்து, அதுவே எல்லா சீரியலிலேயும் வர்றமாதிரி வசனத்தை லேசா மாத்தி எழுதச் சொல்லணும். எப்படி திரைப்படத்திலே அப்பப்போ 'பாட்டு' வருகின்றதோ  அதுபோல சீரியல்லே அப்பப்போ 'விளம்பரம்' வரும். அந்த விளம்பரத்திலே சீரியல்லே நடிக்கிறவங்களே 'விளம்பரப் பாட்டு'  பாடுவாங்க.  'ஹேர் ஆயில்'லே பல பிராண்டு பாட்டு. அது மட்டுமில்லே. ஞாபக  சக்தி அதிகமாக்க, உயரமா வளர , ஆரோக்கியமா  இருக்க,  கடன் வாங்க, பணம் முதலீடு செய்ய,  கார், வீடு, பிளாட் , நிலம் வாங்க, நகை அடமானம் வைக்க, நொறுக்கு, மளிகை, சோப்பு, காப்பி,  டீ, கூல் ட்ரிங்க்ஸ் போன்ற எல்லாத்துக்கும்  நம்ம சீரியல்லே , ஆட்டம், பாட்டு, கொண்டாட்டமோட விளம்பரத்தைப் போட்டு கலக்கப்போறோம். அதுக்குத் தகுந்தாற்ப்போல் பாட்டு, இசை, போட்டோகிராபி இருக்கணும். இந்தப் புதுமையான முயற்சியை வெற்றியடைய வைப்பது நம் கையில் தான் இருக்கின்றது. 

அனைவரும் : நாங்கள் இதற்கு கடுமையாக .உழைக்கிறோம்.

******************************************************************************************
ஒவ்வொரு தொடரிலும் 'மை ஹேர் ஆயில்' விளம்பரம் வருகின்றது. அதன் ஆட்டமும் , பாட்டும் மிகப்பெரிய அளவில் புகழைடைகின்றது.  அமோகமாக  வியாபாரம்                                                           



'மை ஹேர் ' கம்பனிக்கு விளம்பர வாசகங்கள் தயார் பண்ணியாச்சா ?




உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர, முடி கரு கருவென்று இருக்க நாள் தவறாமல் தினமும் குளிப்பதற்கு முன் , குளிப்பதற்கு பின் உங்கள் முடிக்குத் தகுந்தவாறு உபயோகிங்க. இளமை புத்துணர்ச்சி பெறுங்க ! 




              ******************************************************************************************

No comments:

Post a Comment