Pages

Tuesday, 1 February 2022

Thiruvalluvar and J.Krishnamurti - வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் - கட்டுரை - கு.கி.கங்காதரன்

 

வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்

கட்டுரை

கு.கி.கங்காதரன் 

        திருவள்ளுவரின்  திருக்குறள் ஒவ்வொன்றும் ஒன்றே முக்கால் அடி  கொண்டு  சிறிதே  ஆனாலும், அவைகள்  உலகளவில் பெரிய புகழைப் பெற்று விளங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அஃதுபோல்   (ஜே.கிருஷ்ண)  மூர்த்தி’  அவர்கள்,  வள்ளுவரை    விடச் சிறியவரானாலும் அவருடைய கீர்த்தி  பெரியது என்று சொன்னாலும் மிகையாகாது. வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் காலத்தால் வேறுபட்டாலும்,  அவ்விருவரும் மனிதனையும் மனித சமுதாயத்தையும் மேம்படுத்துவதில் மற்றும் ஒழுங்குபடுத்துவதில் பல இடங்களில்  ஒத்த  கருத்துகளை உடையவர்களாகவே நான் பார்க்கிறேன். அவற்றில் சில எடுத்துக்காட்டுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, திருக்குறளில், அதிகாரம் 30, ‘வாய்மை  (உண்மை பேசுதல்) என்கிற தலைப்பில் 298 வது குறளில் 

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்று கூறுகிறார்.

    குறள் விளக்கம் என்னவென்றால், ‘உடலுக்கு வெளியில் உள்ள அசுத்தங்களைப் போக்க நீரைக் கொண்டு சுத்தம் செய்துவிடலாம். ஆனால் உடலுக்குள்ளே உள்ள மனம்,  சுத்தமாக இருக்கவேண்டுமானால் உண்மை  ஒன்றால் மட்டுமே முடியும்!’ என்கிறார்.

      இதே கருத்தினை   ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சிந்தனை உண்மையாக இருந்தால் நம் மனம் சுத்தமாகும் என்கிறார். மேலும் ஜே.கே. அவர்கள் மனதின் சிந்தனையோடு உடலின் செயல்கள் ஒத்துப்போனால் அங்கு எவ்வித துயரமும்  இருக்காது என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். அதுதான்  உண்மை  என்றும்,  உண்மையைக் காணப் பலவழிகள் இருந்தாலும் உண்மை என்பது ஒன்றே ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்கிறார்.  அதாவது,  நிகழ்காலத்தின் எண்ணங்களோடு  அக்கணமே செய்கின்ற செயலுமே  உண்மையை அறிவதற்கான வழியாகும் என்கிறார். அதற்குத் தேவை இடைவிடாத விழிப்புணர்வும், ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிய நொடியாக  மனதை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. அம்மாதிரியாகப் பயிற்சி  செய்யும்போது,  மனதில்,  நாம் சேர்த்து வைத்திருக்கும் அல்லது குடிகொண்டிருக்கும் நான் என்னும் அகந்தை மற்றும் அதன் அடையாளங்கள் விரைவில் மறைந்து விடும். மனமும்  தூய்மை அடையும்  என்கிறார். 

இரண்டாவதாக, திருக்குறளில் அதிகாரம்  58,  அதிகாரம்  58,    கண்ணோட்டம்   என்கிற தலைப்பில் 571 வது குறளில் 


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

என்கிறார். 

       குறள் விளக்கம் யாதெனில், ‘அன்பைக் கண்ணால் நோக்குதல்  என்னும்  அழகியத்  தன்மை சிறந்து இருக்கின்ற காரணத்தால்தான், இவ்வுலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்பதாகும்.

 ஜே.கே. சொல்வது என்னவென்றால், “நீங்கள் நன்றாக யோசித்தீர்களானால்,  உங்களிடம் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். அன்பு காட்டுவது ஒன்றுதான் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வாகும்.  ஆனால்,  நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பு காட்டாமல் இருப்பதைக் கவனிக்கலாம். அதற்குக் காரணம், உங்கள் மனதை விட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருக்கும் உங்களது ஆசை,  அனுமானங்கள்,  கோபம்,  அனுபவங்கள்,  பொறாமை, ஏமாற்றங்கள், தோல்விகள், பயம், விரக்தி, விருப்பு, வெறுப்பு, கர்வம், சுயமரியாதை, ஆணவம், அவமானம், என்பது போன்று ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ உங்கள் மனம் உங்களுக்குத் தெரியாமலே அடிமையாகி இருப்பதை உணரலாம். அதனால், ‘அன்பு உங்கள் கண்களை மறைப்பதோடு, அன்பின் மேல் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் செய்து விடுகின்றது. அப்படி உங்களுக்குள் அன்பில்லாதபோது, உங்கள் துயரத்திற்கான தீர்வு எப்படி வெளியிலிருந்து கிடைக்கும்? 

 தொடர்ந்து ஜே.கே.அவர்கள், “ஒருவேளை அவ்வாறு கிடைத்தாலும் அது நிரந்தரமாக இருக்காது. அது மயக்கத்திற்கும் தூக்கத்திற்கும் சமம் என்றே சொல்லலாம்.  ஏனென்றால்,  அந்த இருசமயத்தில் மட்டும் உங்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது போல் இருக்கும். மயக்கம் தெளியும் போது அல்லது தூக்கம் களையும் போது மீண்டும் உங்கள் பிரச்சனை, உங்களை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கும். அதனால், மீண்டும் அதே பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த உலகத்தில்  பிரச்சனைகளை தீர்ப்பதற்குப் பலர் பலவிதங்களில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால்,  பிரச்சனைகள் அதிகமாகின்றதே  ஒழியத் தீர்ந்தபாடில்லை. ஏனெனில், இன்னும் உலகில் திருட்டு,  கொலை, கொள்ளை,  சண்டை,  சச்சரவு,  ஏமாற்று,  துன்புறுத்துதல்,  போன்றவை இருக்கத்தானே செய்கின்றது! பிரச்சனைகளைத் தீர்க்க ஒரே வழி உங்களுக்குள் அன்பை பெருக்க வேண்டும்.  தூய்மையான மனதே, அன்பின் ஊற்று என்கிறார். 

நம் ஆறடி உடலுக்குள், நம் கண்களுக்குத் தெரியாமல் மனம் ஒன்று இருந்தாலும், நம் உடலுக்கு இருக்கும் வலிமையை விட மனதிற்கு இருக்கும் வலிமை பன்மடங்கு அதிகம் என்பதை வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஆணித்தரமாகச் சொல்கின்றனர். எப்படியென்றால், மனம் சில வேளைகளில் ஆக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றது. ஆனால் பல வேளைகளில் அது அழிவுக்குத் துணை போகின்றது என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

 உண்மையில் உடலினால் உண்டாகும் நோயை விட, மனதில் உண்டாகும் பாதிப்பு மிகவும் ஆபத்தானவை. ஏனென்றால், நம் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த உறுப்பு மட்டும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனை மருத்துவத்தின் வாயிலாக, சிகிச்சை செய்து குணப்படுத்தி விடலாம். ஆனால், மனதில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அந்தப் பாதிப்பானது, நம் உடலில் உள்ள பல பகுதிகளில் பரப்பிவிடும் அபாயம் இருக்கின்றது. மேலும்,  அதனை நவீன மருத்துவத்தின் உதவிக் கொண்டு சிகிச்சை அளித்து குணமாக்குவது என்பது மிகவும்  கடினமான  செயலாகும்.  ஆகையால்,  மனதைத்  தூய்மையாக வைத்துக் கொண்டாலே உண்மை அங்கு இருக்கும். மனதில் அன்பும் தானாகச் சுரக்கும்.

 மூன்றாவதாக, திருக்குறளில் அதிகாரம் 35,   துறவு   என்கிற தலைப்பில்  343 வது  குறளில் 

 

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

என்கிறார். 

              குறள் விளக்கம் யாதெனில், ‘நாம் மெய்,  வாய்,  கண்,  மூக்கு, செவி,  ஆகிய  ஐம்பொறிகள் வழியே வருகிற ஆசையை அடக்க வேண்டும். அதோடு ஐம்பொறிகள் விரும்பும் பொருட்களைப் பெறும் ஆசையையும் விட்டுவிட வேண்டும் என்கிறார்.

       ஜே.கே.யும் "மனிதனுடைய மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் கடந்தகால நினைவுகளே, மனிதனின் எல்லாப் பிரச்சனைக்குக் காரணமாக விளங்குகிறது. இறந்தகால நினைவுகளே, நம் மனதை உண்மையை விட்டு விலகச் செய்கிறது. அன்பையும் மறக்க செய்கிறது. அதோடு,  ஆசைகளை  மேன்மேலும்  தூண்டச்செய்கிறது. நினைவுகள் ஐம்புலனால் உருவாகிறது. பிரச்சனைகளிலிருந்து  மனிதன் விடுபட வேண்டுமானால், கடந்தகால நினைவுகள் ஏதுமில்லாதச் சுதந்திரமான மனம் மட்டும்தான் துன்பத்திற்குத் தீர்வு காணும்" என்று கூறுகிறார்.

மனதினை நலமாக வைத்துக்கொள்ள எப்போதும் நம் மனதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. ஆறறிவு கொண்ட மனிதன்தான்  மனம்  எனும்  ஒன்றை பெற்றுத் தெளிவாகச் சிந்திக்கும் திறனையும் கொண்டுள்ளான்.  அந்த மனம், ஒரு நிலையில் நில்லாமல் எப்போதும் மாறிக்கொண்டேயும், குழப்பத்திலும் இருக்கின்றது. மனதால் மனிதனுக்குள் நிகழும் மாற்றம், அவனுடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றது. புறவாழ்க்கையே உண்மையென எண்ணிய மனிதன்,  ஐம்புலன்களின் துணை கொண்டு இந்த உலகத்தை அடக்கியும் ஆட்டிப்படைக்கவும் ஆசைப்படுகிறான். அதன் பலனாக,  அதில் பல வெற்றிகளையும்,  சாதனைகளையும், விந்தைகளையும் புரிந்து,  இன்றளவில்  கைப்பேசி,  வலைத்தளம், இணையதளம், வாயிலாக, இந்த உலகையே வலம் வந்து மக்களை ஆட்டுவிக்கிறான். ஆனால், அவனுக்குள் இருக்கும் மனதை அவனால் அடக்கி ஆள இயலாமல் திணறுகிறான். மனதின் துடிப்பைத் தணிக்க முடியாமல் தவிக்கிறான். மனதைக் காண எங்கெங்கோ  அலைகிறான். இதுதான் இன்றைய மனம் கொண்ட மனிதனின் நிலை.    

மனதிற்கும் அறிவுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கின்றது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் உணர்வுக்கும் செயலுக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். உணர்வோ, ஐம்புலனுக்குக் கட்டுப்படுகின்றது. செயலோ மனதிற்குக் கட்டுப்பட்டுள்ளது. மனமோ அறிவுக்கு கட்டுப்படுகிறது. நம் உடலில், அறிவுக்கும் (செயலுக்கும்) மனதிற்கும் (உணர்வுக்கும்) எப்போதும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.  இந்த  சூழ்நிலையில்தான் உடலின் இயக்கம் நடைபெறுகிறது. மனதின் இயல்பைப் பற்றிச் சொல்லப்போனால், நீரானது எவ்வாறு பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடுகின்றதோ அவ்வாறு மனமானது, கீழானவற்றை நோக்கி எளிதாகவும், வேகமாகவும், எல்லாவிதமான தடைகளையும் தாண்டிப் பாய்ந்தோடும் வலிமை படைத்தது. ஆக, மனதின் வேகம், அறிவைவிட அதிகமாய் இருக்கும்போது அங்கு உணர்வு மேலோங்கி நிற்கின்றது. அதனால் துயரம் உண்டாகிறது. இதற்கு மாறாக, அறிவின் வேகம் மனதின் வேகத்தைவிட அதிகமாய் இருக்கும்போது,  அங்கு நன்மை உண்டாகின்றது. இதையே ஜே.கே. அவர்கள், “மனதில் நிகழ்கால விழிப்புணர்வு இருந்தால் ஐம்பொறிகளால் உண்டாகும் ஆசை எழாது என்கிறார்.

 நான்காவதாக,  திருக்குறளில் 67வது அதிகாரத்தில்  666வது குறளில்  'வினைத்திட்பம்'  என்கிற தலைப்பில் 

                       எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்  எண்ணியர் 
                        திண்ணியர் ஆகப்பெரின்

 

என்று இயம்புகிறார்.

 

இக்குறளின் விளக்கம்,  அதாவது  ஒருவர்  திட்டமிட்டு ஒரு செயலை செயலாற்ற எண்ணியவர், மனதில் எண்ணியபடியே கண்ணும் கருத்துமாகச் செயலாற்றுவதிலும், மனதில் நிலையான உறுதியோடும்  இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறு அடைந்துவிடுவார் என்பதாகும்.

 

மேலே காட்டிய குறளை ஒட்டி எண்ணங்களைப் பற்றி ஜே.கே. அவர்கள் குறிப்பிடும்போது, “நமது எண்ணங்களே நம் வாழ்வை நடத்திச் செல்கின்றன என்பதை நம்மால் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்தான். ஆனால், அதுதான் உண்மை. அதாவது, இன்றைய நமது வாழ்க்கையானது, நேற்றைய எண்ணங்களும், நாளைய கனவுகளின் தொகுப்புகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒரு செயல் செய்யும்போது,  நம் மனதில் தேங்கி இருக்கும் நேற்றைய எண்ணங்களும், நாளைய கனவுகளும் குறுக்கிடுகின்றன. அதனால், நம் கவனத்தில் சிதறல்கள் உண்டாகிறது. அதேவேளையில், நிகழ்கால விழிப்புணர்வு இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அதனால், மனதில் துன்பமும் குழப்பமும் மிஞ்சுகின்றன. ஆகவே, ஆற்ற வேண்டிய செயலில் முழுமை அடைய முடியாத சூழல் ஏற்படுகிறது என்று விளக்குகிறார்.  

 இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். அதாவது, சூரியஒளிக் கதிர்களில் சிதறல்கள் ஏற்படுவதால் அதன் முழுமையான வெப்பம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், அந்தச் சூரியக்கதிர்கள், ஒரு குவி ஆடி வழியாக செல்லும்போது, சிதறிய கதிர்கள் ஓரிடத்தில் குவியும்போது அதிக வெப்பம் உண்டாவதை நாம் காணலாம். ஆகவே, நமது மனம், இப்போதைய இந்த நொடியில் குவியப்படும்போது, இறந்தகால எண்ணங்கள் மறைந்து நிகழ்காலப் புதிய எண்ணங்கள் உண்டாவதால், நமது செயல் எளிதாகவும் முழுமையாகவும் ஈடேறும் நிலை ஏற்படுகிறது.

ஐந்தாவதாக, திருக்குறளில் 35வது அதிகாரத்தில் 666வது குறளில்  'துறவுஎன்கிற தலைப்பில் 

யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

என்று வள்ளுவர், ‘ஆசைக்கும் துன்பத்திற்கும்  காரணமாக  நான் எனது என்னும் பல மனமயக்கங்களை விட்டவர்கள், வானிலும் மேலான  புகழுலகம்  பெறுவர்  என்று கூறுகிறார்.

 

ஜே.கே. அவர்கள், “இந்த உலகத்தில் காணப்படும் பிரச்சனைக்குக் காரணம் நான் என்பதைச் சுற்றிய அடையாளங்கள். அதுவே பிரிவினைக்கும் துன்பத்திற்கும் காரணம். அதாவது, எனது வீடு’, எனது ஊர்’, எனது நாடு’, எனது மதம்’, என்று நினைக்கும்போது, அங்கே பிரிவினை உண்டாகி விடுகின்றது. அன்பு மறைந்து துன்பம் வளர்கின்றது என்கிறார்.


உங்களின் மனதை நிம்மதியை இழக்கச் செய்ய குழப்பச் செய்ய நம்பிக்கையை அகற்றச் செய்ய பல வழிகள் இருக்கின்றன. அவை ஆசை, கோபம், பொறாமை, ஏமாற்றம், ஆணவம், வெறுப்பு, போன்றவை. ஆனால், மனதை மகிழ்ச்சியடையச் செய்ய ஒரே வழி 'உண்மையான அன்பு' ஒன்றே! அன்பு மட்டும் இருந்தால் இவ்வுலகில் யாருக்கும் எவ்வித துன்பமும் பிரச்சனையும் இருக்காது அல்லது வராது. மேலும், விருப்பு வெறுப்பு இல்லாத மனம் வேண்டும். இதை ஒரு எடுத்துக்காட்டில் புரிந்து கொள்ளலாம். அதாவது, நம்மிடத்தில் மிகச்சூடான அல்லது மிகக்குளிரான ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நாம் எப்பாடுபட்டாவது மிகவும் சிரத்தையுடன் கையில் வைத்துக் கொள்கிறோமா இல்லையே? உடனே அதை நாம் என்ன செய்கிறோம்? அதை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து அது தொடுகின்ற சூட்டாக மாறிவிட்ட பிறகு அதனை நம் கையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதுபோல, நம் மனம் எவ்வளவு மகிழ்ச்சியில் மிதந்தாலும் எவ்வளவு துன்பம் அடைந்தாலும், அதனை உடனே ஏற்றுக்கொள்ளாமல், சிறிது நேரம் கழித்து, அதனால் மனதினிலில் எழும் ஆரவாம் அடங்கி, வேதனை குறைந்த பிறகு, ஏற்றுக்கொள்ளும்போது மனம் 'சமநிலை' அடையும். மனதிற்கு எவ்வித பாதிப்புக்கும் ஆளாகாது.

ஆறாவதாக,  திருக்குறளில்  46வது  அதிகாரத்தில்  455வது  குறளில்  'சிற்றினஞ்சேராமை' என்கிற தலைப்பில் 

 

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை
 தூவா வரும்

என்று வள்ளுவர், ‘மனதால் தூயவராக இருப்பதும், செய்யும் செய்கைகளில் தூய்மை பெறுவதும், அவரவர்  சார்ந்திருக்கின்ற  இனத்தின் நல்லவர் கெட்டவர்  தூய்மைக்கேற்பவே அமையும் என்று கூறுகிறார்.

 

ஜே.கே. யும், மனிதனின் எல்லா செயலுக்கும்  மூலகாரணம்  மனம்.   அது,  தனக்குள் இருக்கும் கடந்தகால அனுபவங்களைக் கொண்டே உடலைச் செயல்பட வைக்கிறது. அதற்கேற்ற பலனும் கிடைக்கிறது.  அதாவது,  மனம் எண்ணுகிறது! உடல் அதனைச் செயல்படுத்துகிறது! அதனால், தூயமனமுள்ளவர்கள்  நன்மை தரும் செயலையும், அசுத்த மனமுடையவர்கள்  தீயசெயலையும்  செய்வார்கள். தூய மனதை அடைய ஒரே வழி, நிகழ்காலத்திலே வாழ்வதாகும் என்கிறார்.

 

ஏழாவதாக,  திருக்குறளில்  43வது அதிகாரத்தில்  422வது குறளில்  'அறிவுடைமை' என்கிற தலைப்பில் 

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால்
 உய்ப்ப தறிவு

என்று வள்ளுவர், ‘மனம் போன போக்கில் நடக்காது, உள்ளத்தை தீமைகளிலிருந்து விலக்கி நல்ல வழிகளில் செலுத்துவதே உண்மை அறிவின் அழகாகும் என்கிறார்.

ஜே.கே. யும் மனதில் ஒழுங்கற்றவை எவை என அறிந்து அதனை துறந்தால் மன ஒழுங்கு தன்னாலே உண்டாகும் என்று கூறுகிறார் 

நம் மனதில் எழும் எண்ணங்களானது, தாறுமாறாக ஓடும் காட்டாறு போல, மடை திறந்த வெள்ளம் போல, பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து ஓடும். இடையில் எவ்விதத்  தடைகளாக இருந்தாலும் அதனை வீசி எறிந்து விடும். அதுபோல், நம் மனதில் கோபம் தலையில் ஏறிக்கொள்ளும்போது, நமது செயல்கள் அனைத்தும் கீழ்த்தரமானதாக இருப்பதை நன்கு உணரலாம். சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதாகவும் இருக்கலாம். அவ்வேளையில் அறிவு என்கிற விழிப்புணர்வு மந்தமாகி, மனதில் கோப உணர்வு சீறி எழுகின்றது.  ஆகையால், நாம் மனம் போன போக்கில் செல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு, நம் மனதில் அடைபட்டுக் கொண்டிருக்கும் தீமைகள், அதாவது அழிவை உண்டாக்கும் கன்னி வெடிகளை ஒவ்வொன்றாக நமது விழிப்புணர்வு மூலமாக செயலிழக்கச் செய்ய வேண்டும்.  இதனால்,  மனதில் ஒழுங்கு உண்டாகிறது. அதனால், பல நன்மைகள் உண்டாகின்றன.

எட்டாவதாக மற்றும் நிறைவாக, திருக்குறளில் 44வது அதிகாரத்தில் 431வது குறளில் 'குற்றங்கடிதல்' என்கிற தலைப்பில் 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

என்று வள்ளுவர், ‘கர்வமும், கோபமும், கீழ் குணமும் இல்லாதவர், தம் வாழ்வில் அடைந்திருக்கும் பெருமையும், புகழும் போற்றி மகிழத்தக்கதாகும் என்கிறார்.

 

ஜே.கே. யும் , ஒருவருக்கு ஒரு பொருளை, ஒரு செயலை, ஒரு நபரைப் பார்த்த மாத்திரத்திலே, மனதில் கோபமோ, வெறுப்போ, பொறாமையோ சற்றும் தாமதம் இல்லாமல் உடனே வருகிறதே! அது எதனால் என்று சிந்திக்கிறோமா?  அதற்குக்  காரணம், மனம் என்று புரிந்துகொண்டால்  மேற்கூறியவற்றை  அகற்றலாம்.  மனத்தை நன்கு கவனித்தோமானால், கடந்தகால வடுக்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதால்தான் நம் மனதை,  நம்மையறியாமல் காயப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரியவரும், ஆக, ஒரு செயலுக்குக் காரணியாகவும் காரணமும் மனம் இருப்பதைக் கவனிக்கலாம். எப்படி ஒரு உறையில் இரு வாள்கள் இருக்க முடியாதோ அதுபோல், ஒரு மனதில் காரணம் காரணியாக இருப்பது தீங்கு ஏற்படும் என்கிறார்.

 

அதாவது, நிகழ்காலத்தில் மனிதமனம் கடந்தகாலச் சிந்தனையைக் கலக்கும்போது மனம் குழப்பத்திற்கு உள்ளாகிறது.  அதனால்,  மனதில் கோபம்,  வெறுப்பு போன்றவை உண்டாகி  அதனை செயலாக  வெளிக்காட்டிக் கொண்டதோடு உடல் பாதிப்புக்கும் வழிவகை செய்கிறது.  ஆகவே,  மனம் நிகழ்காலச் சிந்தனையிலிருந்தால்  நிம்மதியாக இருக்கலாம்.  உடல் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.

 

நிறைவாக, வள்ளுவரும் ஜே.கே. அவர்களும், தனிமனித ஒழுக்கத்திற்காக மற்றும் மனித சமுதாயத்தை மேம்படுத்துதலுக்கான சிந்தனைகளையும் வழிமுறைகளையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று தெளிவாக விளங்குகின்றதல்லவா! ஆகவே, அவர்களின் கருத்துகளை நாம் செயல்படுத்த வேண்டுமென்றால், நமது மனம் கோபம், பொறாமை, நான் என்னும் அடையாளம் போன்றனவற்றிலிருந்து விடுதலை பெற்று, நிகழ்கால வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தினால், தனிமனிதனின் ஒழுக்கம் பண்படும். உலக மக்கள் சமுதாயமும் மேம்படும் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ளது.

நன்றி

வணக்கம்

Monday, 10 January 2022

JALLIKATTU - ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதல்- காளை அடக்குதல் புதுக்கவிதை மதுரை கங்காதரன்

 

ஜல்லிக்கட்டு - ஏறு தழுவுதல்-  காளை அடக்குதல் 

புதுக்கவிதை

மதுரை கங்காதரன் 



அலங்கார ஏறுதழுவுதல் காண  

அலங்காநல்லூரில் ஆரவாரங்கள்  

 

பாலமேட்டில் புகுந்த காளைகளைப் 

பந்தயத்தில் ஜெயிக்கும் காட்சிகள்

 

வாடிவாசலில் புறப்பட்ட காளைகளை   

வளைத்துப் பிடிக்கும் காளையர்கள் 

 

அமர்க்களம் செய்யும் காளைகளை

அற்புதமாய்க் கவர்ந்திடும் காளையர்கள்

 

வம்பாய் கிளர்ந்தெழுந்த காளைகளை

அம்பாய்த் துளைத்திடும் காளையர்கள்

 

திமிறி ஓடும் காளைகளைத்

திமிலைப் பற்றும் காளையர்கள்

 

கொம்பினால் முட்டும் காளைகளை

கைகளால் தடுக்கும் காளையர்கள்

 

துள்ளிப் பாயும் காளைகளைத்

துரத்திப் பிடிக்கும் காளையர்கள்

 

வேங்கையாய்ச் சீறும் காளைகளை

வீரத்தோடு அணைக்கும் காளையர்கள்

 

தமிழ்மண் வாசமுள்ள காளைகளைத்

தமிழனாய் நுகரும் காளையர்கள்

 

வேடிக்கை காட்டும் காளைகளை

விளையாட்டாய் சீண்டும் காளையர்கள்

 

வேகத்தோடு தாக்கும் காளைகளை

விவேகத்தோடு சமாளிக்கும் காளையர்கள்

 

சவாலோடு மோதும் காளைகளைச்

சமாளித்து நெருங்கும் காளையர்கள்

 

மஞ்சுவிரட்டுக்கு வந்த காளைகளை

நெஞ்சுரத்தோடு   அடக்கும் காளையர்கள்

 

சல்லிக்கட்டு முரட்டுக் காளைகளை

மல்லுக்கட்டித் தாவும் காளையர்கள்

 

காளையடக்குவது தமிழர் பண்பாடு

காளைகளுக்கும் தமிழனுக்கும் உடன்பாடு

 

**********

 


Thursday, 6 January 2022

MUDRA - Micro Units Development and Refinance Agency - A VIEW - K.K.GANGADHARAN

 

MUDRA - 

Micro Units Development and Refinance Agency - A VIEW - 

முத்ரா திட்டம்

K.K.GANGADHARAN



1. இந்த உலகத்திலே பலருக்கு ஏதாவது ஒரு லட்சியம் இருக்கலாம். அல்லது கனவாகவும் இருக்கலாம். ஏன் ஆசையாகவும் இருக்கலாம். அனேகமா அந்த லட்சியம் அல்லது கனவு அல்லது ஆசை என்னவா இருக்கும்னா? தான்ஒரு நல்ல தொழில் தொடங்கி அதுக்கு முதலாளியாக வேண்டுமென்ற ஆசை தாங்க. அதன் மூலமா பலருக்கு வேலை தரணும் என்கிற ஆசையும் இருக்கும். சிலருக்கு அபரிவிதமான திறமை இருக்கலாம். ஒரு சிலருக்கு நல்ல படிப்பும் அறிவும் இருக்கலாம். சிலருக்கு கடினமாக உழைக்கின்ற வலிமை இருக்கலாம். ஆனா இவ்வளவு இருந்தும் பணம் இருக்காது.

பணம் பத்தும் செய்யும்னு சொல்வாங்க. அந்த பணம் இருந்தா தானுங்க தொழில் தொடங்க முடியும். ஒரு முதலாளியாக முடியும். நாலு பேருக்கு வேலையும் தர முடியும். படிச்சிட்டு வேலை தேடுறதைக் காட்டிலும் தனக்கான ஒரு வேலையை உருவாக்குவதுதானே பத்திசாலித்தனம். அப்படிப்பட்ட வாய்ப்பை உருவாக்கித் தருவது தாங்க முத்ரா திட்டம்’. அந்த முத்ரா திட்டத்தைப் பத்திய சில தகவல்களை தெரிஞ்சுக்கலாம். 

பணம் பத்தும் செய்யும்னு சொல்வாங்க. அந்த பணம் இருந்தா தானுங்க தொழில் தொடங்க முடியும். ஒரு முதலாளியாக முடியும். நாலு பேருக்கு வேலையும் தர முடியும். படிச்சிட்டு வேலை தேடுறதைக் காட்டிலும் தனக்கான ஒரு வேலையை உருவாக்குவதுதானே பத்திசாலித்தனம். அப்படிப்பட்ட வாய்ப்பை உருவாக்கித் தருவது தாங்க முத்ரா திட்டம்’. அந்த முத்ரா திட்டத்தைப் பத்தி தாங்க இன்றைய சிறப்பு. 


2. பொதுவா சிறு தொழில்களுக்கு எல்லா வங்கிகளில் அவ்வளவு எளிதா கடன் கிடைப்பதில்லை. சமீபத்திலே நடந்த அரசின் கணக்கெடுப்பின் படி நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை பெறுவதில்லை என்பதோடு இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன எனவும் தெரியவந்திருக்கு. அரசுவங்கியிலே கடன் கிடைக்காததாலே தொழில் செய்வோடும் தொழில் தொடங்க நினைப்போரும் தனியார் நிதி நிறுவனங்களிலே கடன் வாங்குகிறாங்க. அங்கு, அதிக வட்டியில் கடன் பெறுவதாலே அவர்களின் தொழிலே எதிர்பார்த்த வளர்ச்சியை பெற முடியாத சூழ்நிலை உருவாகுது அந்த இடர்களைப் போக்கத்தான்ங்க  மத்திய பட்ஜெட்டில் 'முத்ரா' வங்கி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஏப்ரல், 8ம் 2015 தேதி முத்ரா யோஜனாகடன் திட்டத்தை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார். இதன்மூலம் கார்பரேட் சாராத நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காகவும், சிறு, குறு, நடுத்தர (MSME) தொழில் வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.



 3. வேலை தேடுவோரை சுயமாக தொழில் செய்ய ஊக்குவிப்பதே இந்த முத்ரா திட்டத்தின் நோக்கமாகுங்க. முக்கியமா மக்கள் இந்த கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதோடு, அதனாலே ஏராளமானோர் வேலைவாய்ப்புகளையும், தொழிலையும் இழந்துள்ளனர் என்பது நிதர்சமான உண்மை தானே. கடல்லே விழுந்து தத்தளிப்போர்க்கு கரையேற சிறிய படகு கிடைத்தால் எப்படி இருக்கும். அத்தகைய சூழலில் பலரும் சொந்தமாக தொழில் செய்ய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சரியான வாய்ப்பை இந்த முத்ரா திட்டம் உதவுகின்றதுன்னு சொல்லுவதே ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர் என்பதிலிருந்து இதன் திட்டத்தின் பலன்களை எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் அறியலாம்.

 4. இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கபடுகிறது.

 •     முதல் வகை சிசு (SHISHU) முத்ரா வங்கி திட்டம், இந்த திட்டம் மூலமாக Rs.50,000 வரை ஒருவர் கடன் பெறலாம்.

•     இரண்டாவது வகை கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெற முடியும்.

•     மூன்றாவது வகை தருண் (TARUN) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக ஒருவர் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கடன் வசதி பெற முடியும்.

உங்களின்  தொழிலில் சரியான கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில், கடன் கொடுப்பது தொடர்பாக வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுத்த பின்னர், கடன் வழங்கப்படும். முக்கியமா நீங்க ஒண்ணு தெரிஞ்சுக்கனும் அது என்னான்னா இந்த திட்டத்தில் சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. கல்வி கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகன கடன் இதில் வராது.

 


5. இத்திட்டத்தின் கீழ் யார் யார் பயன் பெறலாம்? என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்

எல்லா வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைகளுக்கான உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல்  என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

ஆனால் பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை, கோழி பண்ணை, விவசாயம், காளான் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும். அதன் அடிபடையில் கடன் கிடைக்கும்.

 

6. இத்திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை என்னன்னு பார்க்கலாம்

இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம் அல்லது PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்றவாறு விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயது  முடிந்திருக்க வேண்டும் இத்திட்டத்தில் ஏற்கனவே சொல்லியபடி மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார். இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழிலுக்கான கடன் திட்டம் மட்டுமே. இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும். நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை வங்கி கணக்கிட்டு அதனை EMI மூலம் செலுத்த வேண்டும். நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும். ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.

இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. ஒருவர்  பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு  குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிப்பது நல்லது .இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.

 


7. முத்ரா திட்டத்தில் கடன் பெறுவதற்கு திட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இப்போ திட்ட அறிக்கைன்னா என்னன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டும்.

திட்ட அறிக்கைன்னா  ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழிலை எங்கே ஆரம்பிக்க போறீங்க? சொந்த இடமா அல்லது வாடகை இடமா? வாடகை இடம்ன்னா வாடகை ஒப்பந்தம் அவசியம். பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் இதிலே அடங்கும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீங்க? எத்தனை தவணையில் கட்டுவீங்க?, எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையிலே இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பாங்க.

 

8. முத்ரா திட்டம் விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.

அடையாள சான்று ( வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்)

இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது, மின்சார கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது)

லேட்டஸ்ட் புகைப்படம்

இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது

இயந்திரங்களை வழங்குபவர் விபரங்கள்

தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்

சாதி சான்று

மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதல்களை அளிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்திற்கான கடனைத் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்க பட்டுள்ளது.

 


9. கடன் வழங்கும் வங்கிகள் எவை எவைன்னு இப்போ தெரிஞ்சுக்கலாம்

27 பொதுத்துறை வங்கிகள்

17 தனியார் துறை வங்கிகள்

31 மண்டல கிராம வங்கிகள் (RRBs)

4 கூட்டுறவு வங்கிகள்

36 நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)

25 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)

அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும்.

 

10. முத்ரா அட்டைன்னா என்னான்னு இப்போ தெரிஞ்சுக்கலாம்.

முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் மறுக்கும் பட்சத்தில்

நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம். வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம். உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.

முக்கிய குறிப்பு

வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் பார்க்க வேண்டும் மாலை  4.00 மணிக்கு அனுமதி பெற்று பார்த்தல் நன்று.மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும்.மேலாளரின் முடிவே இறுதியானது.மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கலாம்.

***********************************************************

Saturday, 25 December 2021

27.11.2021JK- J.KRISHNAMURTI MADURAI TALKS 101th YEAR CELEBRATION - THEOSOPHICAL SOCIETY MADURAI




*தத்துவ ஞானி* ஜித்து.கிருஷ்ணமூர்த்தி - JK அவர்கள்....

* மதுரைக்கு 3 நாள் விஜயம் செய்து 27-11-1920  தனது வாழ்வின் முதல் பொது உரையை நிகழ்த்தினார். 

* இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின்  101வது வருட விழா 

*அன்றைய தினம் அவரது உரையானது மதுரை பிரம்ம ஞான சபையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..
அன்றைய நிகழ்வில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி மதுரையில் ஆற்றிய உரை வெளியிடப்பட்டது.

 *  27-11-2021, சனிக்கிழமை அன்று  மாலை 4 மணி அளவில் 101வது ஆண்டு விழா  பிரம்ம ஞான சபை, மதுரையில் ஜே.கே உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்...


FOR VIDEO

VISIT THIS LINK.........