வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்
கட்டுரை
கு.கி.கங்காதரன்
திருவள்ளுவரின் திருக்குறள் ஒவ்வொன்றும் ஒன்றே முக்கால் அடி கொண்டு சிறிதே ஆனாலும், அவைகள் உலகளவில் பெரிய புகழைப் பெற்று விளங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அஃதுபோல் (ஜே.கிருஷ்ண) ‘மூர்த்தி’ அவர்கள், வள்ளுவரை விடச் சிறியவரானாலும் அவருடைய ‘கீர்த்தி’ பெரியது என்று சொன்னாலும் மிகையாகாது. வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் காலத்தால் வேறுபட்டாலும், அவ்விருவரும் மனிதனையும் மனித சமுதாயத்தையும் மேம்படுத்துவதில் மற்றும் ஒழுங்குபடுத்துவதில் பல இடங்களில் ஒத்த கருத்துகளை உடையவர்களாகவே நான் பார்க்கிறேன். அவற்றில் சில எடுத்துக்காட்டுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக, திருக்குறளில், அதிகாரம் 30, ‘வாய்மை’ (உண்மை
பேசுதல்) என்கிற தலைப்பில் 298 வது குறளில்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்று
கூறுகிறார்.
குறள் விளக்கம் என்னவென்றால், ‘உடலுக்கு வெளியில் உள்ள அசுத்தங்களைப் போக்க நீரைக் கொண்டு சுத்தம் செய்துவிடலாம். ஆனால் உடலுக்குள்ளே உள்ள மனம், சுத்தமாக இருக்கவேண்டுமானால் ‘உண்மை’ ஒன்றால் மட்டுமே முடியும்!’ என்கிறார்.
இதே கருத்தினை ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், சிந்தனை உண்மையாக இருந்தால் நம் மனம் சுத்தமாகும் என்கிறார். மேலும் ஜே.கே. அவர்கள் “மனதின் சிந்தனையோடு உடலின் செயல்கள் ஒத்துப்போனால் அங்கு எவ்வித துயரமும் இருக்காது என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். அதுதான் ‘உண்மை’ என்றும், உண்மையைக் காணப் பலவழிகள் இருந்தாலும் ‘உண்மை’ என்பது ஒன்றே ஒன்று மட்டுமே இருக்க முடியும் என்கிறார். அதாவது, நிகழ்காலத்தின் எண்ணங்களோடு அக்கணமே செய்கின்ற செயலுமே உண்மையை அறிவதற்கான வழியாகும் என்கிறார். அதற்குத் தேவை இடைவிடாத விழிப்புணர்வும், ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிய நொடியாக மனதை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. அம்மாதிரியாகப் பயிற்சி செய்யும்போது, மனதில், நாம் சேர்த்து வைத்திருக்கும் அல்லது குடிகொண்டிருக்கும் ‘நான்’ என்னும் அகந்தை மற்றும் அதன் அடையாளங்கள் விரைவில் மறைந்து விடும். மனமும் தூய்மை அடையும்” என்கிறார்.
இரண்டாவதாக, திருக்குறளில் அதிகாரம் 58, அதிகாரம் 58, ‘கண்ணோட்டம்’ என்கிற தலைப்பில் 571 வது குறளில்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
என்கிறார்.
குறள் விளக்கம் யாதெனில், ‘அன்பைக் கண்ணால் நோக்குதல்’ என்னும் அழகியத் தன்மை சிறந்து இருக்கின்ற காரணத்தால்தான், இவ்வுலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது’ என்பதாகும்.
ஜே.கே. சொல்வது என்னவென்றால், “நீங்கள் நன்றாக யோசித்தீர்களானால், உங்களிடம் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். அன்பு காட்டுவது ஒன்றுதான் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வாகும். ஆனால், நீங்கள் எல்லோரிடத்திலும் அன்பு காட்டாமல் இருப்பதைக் கவனிக்கலாம். அதற்குக் காரணம், உங்கள் மனதை விட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருக்கும் உங்களது ஆசை, அனுமானங்கள், கோபம், அனுபவங்கள், பொறாமை, ஏமாற்றங்கள், தோல்விகள், பயம், விரக்தி, விருப்பு, வெறுப்பு, கர்வம், சுயமரியாதை, ஆணவம், அவமானம், என்பது போன்று ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ உங்கள் மனம் உங்களுக்குத் தெரியாமலே அடிமையாகி இருப்பதை உணரலாம். அதனால், ‘அன்பு’ உங்கள் கண்களை மறைப்பதோடு, அன்பின் மேல் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் செய்து விடுகின்றது. அப்படி உங்களுக்குள் அன்பில்லாதபோது, உங்கள் துயரத்திற்கான தீர்வு எப்படி வெளியிலிருந்து கிடைக்கும்?”
தொடர்ந்து ஜே.கே.அவர்கள், “ஒருவேளை அவ்வாறு கிடைத்தாலும் அது நிரந்தரமாக இருக்காது. அது மயக்கத்திற்கும் தூக்கத்திற்கும் ‘சமம்’ என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த இருசமயத்தில் மட்டும் உங்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது போல் இருக்கும். மயக்கம் தெளியும் போது அல்லது தூக்கம் களையும் போது மீண்டும் உங்கள் பிரச்சனை, உங்களை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கும். அதனால், மீண்டும் அதே பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த உலகத்தில் பிரச்சனைகளை தீர்ப்பதற்குப் பலர் பலவிதங்களில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், பிரச்சனைகள் அதிகமாகின்றதே ஒழியத் தீர்ந்தபாடில்லை. ஏனெனில், இன்னும் உலகில் திருட்டு, கொலை, கொள்ளை, சண்டை, சச்சரவு, ஏமாற்று, துன்புறுத்துதல், போன்றவை இருக்கத்தானே செய்கின்றது! பிரச்சனைகளைத் தீர்க்க ஒரே வழி உங்களுக்குள் ‘அன்பை’ பெருக்க வேண்டும். தூய்மையான மனதே, அன்பின் ஊற்று” என்கிறார்.
நம் ஆறடி உடலுக்குள், நம் கண்களுக்குத் தெரியாமல் ‘மனம்’ ஒன்று இருந்தாலும், நம் உடலுக்கு இருக்கும் வலிமையை விட மனதிற்கு இருக்கும் வலிமை பன்மடங்கு அதிகம் என்பதை வள்ளுவரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஆணித்தரமாகச் சொல்கின்றனர். எப்படியென்றால், ‘மனம் சில வேளைகளில் ஆக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றது. ஆனால் பல வேளைகளில் அது அழிவுக்குத் துணை போகின்றது’ என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
உண்மையில் உடலினால் உண்டாகும் நோயை விட, மனதில் உண்டாகும் பாதிப்பு மிகவும் ஆபத்தானவை. ஏனென்றால், நம் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அந்த உறுப்பு மட்டும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனை மருத்துவத்தின் வாயிலாக, சிகிச்சை செய்து குணப்படுத்தி விடலாம். ஆனால், மனதில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அந்தப் பாதிப்பானது, நம் உடலில் உள்ள பல பகுதிகளில் பரப்பிவிடும் அபாயம் இருக்கின்றது. மேலும், அதனை நவீன மருத்துவத்தின் உதவிக் கொண்டு சிகிச்சை அளித்து குணமாக்குவது என்பது மிகவும் கடினமான செயலாகும். ஆகையால், மனதைத் தூய்மையாக வைத்துக் கொண்டாலே ‘உண்மை’ அங்கு இருக்கும். மனதில் அன்பும் தானாகச் சுரக்கும்.
மூன்றாவதாக, திருக்குறளில் அதிகாரம் 35, ‘துறவு’ என்கிற தலைப்பில் 343 வது குறளில்
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு
என்கிறார்.
குறள் விளக்கம் யாதெனில், ‘நாம் மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐம்பொறிகள் வழியே வருகிற ஆசையை அடக்க வேண்டும். அதோடு ஐம்பொறிகள் விரும்பும் பொருட்களைப் பெறும் ஆசையையும் விட்டுவிட வேண்டும்’ என்கிறார்.
ஜே.கே.யும் "மனிதனுடைய மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் கடந்தகால நினைவுகளே, மனிதனின் எல்லாப் பிரச்சனைக்குக் காரணமாக விளங்குகிறது. இறந்தகால நினைவுகளே, நம் மனதை உண்மையை விட்டு விலகச் செய்கிறது. அன்பையும் மறக்க செய்கிறது. அதோடு, ஆசைகளை மேன்மேலும் தூண்டச்செய்கிறது. நினைவுகள் ஐம்புலனால் உருவாகிறது. பிரச்சனைகளிலிருந்து மனிதன் விடுபட வேண்டுமானால், கடந்தகால நினைவுகள் ஏதுமில்லாதச் சுதந்திரமான மனம் மட்டும்தான் துன்பத்திற்குத் தீர்வு காணும்" என்று கூறுகிறார்.
மனதினை நலமாக வைத்துக்கொள்ள எப்போதும் நம் மனதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. ஆறறிவு கொண்ட மனிதன்தான் ‘மனம்’ எனும் ஒன்றை பெற்றுத் தெளிவாகச் சிந்திக்கும் திறனையும் கொண்டுள்ளான். அந்த மனம், ஒரு நிலையில் நில்லாமல் எப்போதும் மாறிக்கொண்டேயும், குழப்பத்திலும் இருக்கின்றது. மனதால் மனிதனுக்குள் நிகழும் மாற்றம், அவனுடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றது. புறவாழ்க்கையே உண்மையென எண்ணிய மனிதன், ஐம்புலன்களின் துணை கொண்டு இந்த உலகத்தை அடக்கியும் ஆட்டிப்படைக்கவும் ஆசைப்படுகிறான். அதன் பலனாக, அதில் பல வெற்றிகளையும், சாதனைகளையும், விந்தைகளையும் புரிந்து, இன்றளவில் கைப்பேசி, வலைத்தளம், இணையதளம், வாயிலாக, இந்த உலகையே வலம் வந்து மக்களை ஆட்டுவிக்கிறான். ஆனால், அவனுக்குள் இருக்கும் மனதை அவனால் அடக்கி ஆள இயலாமல் திணறுகிறான். மனதின் துடிப்பைத் தணிக்க முடியாமல் தவிக்கிறான். மனதைக் காண எங்கெங்கோ அலைகிறான். இதுதான் இன்றைய மனம் கொண்ட மனிதனின் நிலை.
மனதிற்கும் அறிவுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கின்றது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் உணர்வுக்கும் செயலுக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். உணர்வோ, ஐம்புலனுக்குக் கட்டுப்படுகின்றது. செயலோ மனதிற்குக் கட்டுப்பட்டுள்ளது. மனமோ அறிவுக்கு கட்டுப்படுகிறது. நம் உடலில், அறிவுக்கும் (செயலுக்கும்) மனதிற்கும் (உணர்வுக்கும்) எப்போதும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் உடலின் இயக்கம் நடைபெறுகிறது. மனதின் இயல்பைப் பற்றிச் சொல்லப்போனால், நீரானது எவ்வாறு பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடுகின்றதோ அவ்வாறு மனமானது, கீழானவற்றை நோக்கி எளிதாகவும், வேகமாகவும், எல்லாவிதமான தடைகளையும் தாண்டிப் பாய்ந்தோடும் வலிமை படைத்தது. ஆக, மனதின் வேகம், அறிவைவிட அதிகமாய் இருக்கும்போது அங்கு உணர்வு மேலோங்கி நிற்கின்றது. அதனால் துயரம் உண்டாகிறது. இதற்கு மாறாக, அறிவின் வேகம் மனதின் வேகத்தைவிட அதிகமாய் இருக்கும்போது, அங்கு நன்மை உண்டாகின்றது. இதையே ஜே.கே. அவர்கள், “மனதில் நிகழ்கால விழிப்புணர்வு இருந்தால் ஐம்பொறிகளால் உண்டாகும் ஆசை எழாது” என்கிறார்.
நான்காவதாக, திருக்குறளில் 67வது அதிகாரத்தில் 666வது குறளில் 'வினைத்திட்பம்' என்கிற தலைப்பில்
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப்பெரின்
என்று இயம்புகிறார்.
இக்குறளின் விளக்கம், அதாவது
‘ஒருவர் திட்டமிட்டு ஒரு செயலை
செயலாற்ற எண்ணியவர், மனதில்
எண்ணியபடியே கண்ணும் கருத்துமாகச் செயலாற்றுவதிலும், மனதில் நிலையான
உறுதியோடும் இருந்தால், அவர்
எண்ணியவற்றை எண்ணியவாறு அடைந்துவிடுவார்’ என்பதாகும்.
மேலே காட்டிய குறளை ஒட்டி எண்ணங்களைப்
பற்றி ஜே.கே. அவர்கள் குறிப்பிடும்போது, “நமது எண்ணங்களே நம் வாழ்வை நடத்திச் செல்கின்றன என்பதை நம்மால் ஏற்றுக்
கொள்வது மிகவும் கடினம்தான். ஆனால், அதுதான்
உண்மை. அதாவது, இன்றைய நமது
வாழ்க்கையானது, நேற்றைய
எண்ணங்களும், நாளைய கனவுகளின்
தொகுப்புகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒரு செயல் செய்யும்போது, நம்
மனதில் தேங்கி இருக்கும் நேற்றைய எண்ணங்களும், நாளைய கனவுகளும்
குறுக்கிடுகின்றன. அதனால், நம் கவனத்தில்
சிதறல்கள் உண்டாகிறது. அதேவேளையில், நிகழ்கால
விழிப்புணர்வு இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அதனால், மனதில்
துன்பமும் குழப்பமும் மிஞ்சுகின்றன. ஆகவே, ஆற்ற வேண்டிய
செயலில் முழுமை அடைய முடியாத சூழல் ஏற்படுகிறது” என்று
விளக்குகிறார்.
இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். அதாவது, சூரியஒளிக் கதிர்களில் சிதறல்கள் ஏற்படுவதால் அதன் முழுமையான வெப்பம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், அந்தச் சூரியக்கதிர்கள், ஒரு குவி ஆடி வழியாக செல்லும்போது, சிதறிய கதிர்கள் ஓரிடத்தில் குவியும்போது அதிக வெப்பம் உண்டாவதை நாம் காணலாம். ஆகவே, நமது மனம், இப்போதைய இந்த நொடியில் குவியப்படும்போது, இறந்தகால எண்ணங்கள் மறைந்து நிகழ்காலப் புதிய எண்ணங்கள் உண்டாவதால், நமது செயல் எளிதாகவும் முழுமையாகவும் ஈடேறும் நிலை ஏற்படுகிறது.
ஐந்தாவதாக, திருக்குறளில் 35வது
அதிகாரத்தில் 666வது
குறளில் 'துறவு’ என்கிற தலைப்பில்
யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம்
புகும்
என்று
வள்ளுவர்,
‘ஆசைக்கும் துன்பத்திற்கும்
காரணமாக ‘நான்’ ‘எனது’ என்னும் பல
மனமயக்கங்களை விட்டவர்கள், வானிலும்
மேலான புகழுலகம் பெறுவர்’ என்று
கூறுகிறார்.
ஜே.கே. அவர்கள், “இந்த உலகத்தில் காணப்படும் பிரச்சனைக்குக்
காரணம் ‘நான்’ என்பதைச்
சுற்றிய அடையாளங்கள். அதுவே
பிரிவினைக்கும் துன்பத்திற்கும் காரணம். அதாவது, ‘எனது வீடு’, ‘எனது
ஊர்’, ‘எனது நாடு’, ‘எனது மதம்’, என்று
நினைக்கும்போது, அங்கே பிரிவினை உண்டாகி விடுகின்றது. அன்பு மறைந்து துன்பம் வளர்கின்றது” என்கிறார்.
உங்களின் மனதை நிம்மதியை இழக்கச் செய்ய குழப்பச் செய்ய நம்பிக்கையை அகற்றச் செய்ய பல வழிகள் இருக்கின்றன. அவை ஆசை, கோபம், பொறாமை, ஏமாற்றம், ஆணவம், வெறுப்பு, போன்றவை. ஆனால், மனதை மகிழ்ச்சியடையச் செய்ய ஒரே வழி 'உண்மையான அன்பு' ஒன்றே! அன்பு மட்டும் இருந்தால் இவ்வுலகில் யாருக்கும் எவ்வித துன்பமும் பிரச்சனையும் இருக்காது அல்லது வராது. மேலும், விருப்பு வெறுப்பு இல்லாத மனம் வேண்டும். இதை ஒரு எடுத்துக்காட்டில் புரிந்து கொள்ளலாம். அதாவது, நம்மிடத்தில் மிகச்சூடான அல்லது மிகக்குளிரான ஒரு பொருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நாம் எப்பாடுபட்டாவது மிகவும் சிரத்தையுடன் கையில் வைத்துக் கொள்கிறோமா இல்லையே? உடனே அதை நாம் என்ன செய்கிறோம்? அதை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து அது தொடுகின்ற சூட்டாக மாறிவிட்ட பிறகு அதனை நம் கையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதுபோல, நம் மனம் எவ்வளவு மகிழ்ச்சியில் மிதந்தாலும் எவ்வளவு துன்பம் அடைந்தாலும், அதனை உடனே ஏற்றுக்கொள்ளாமல், சிறிது நேரம் கழித்து, அதனால் மனதினிலில் எழும் ஆரவாம் அடங்கி, வேதனை குறைந்த பிறகு, ஏற்றுக்கொள்ளும்போது மனம் 'சமநிலை' அடையும். மனதிற்கு எவ்வித பாதிப்புக்கும் ஆளாகாது.
ஆறாவதாக, திருக்குறளில் 46வது அதிகாரத்தில் 455வது குறளில் 'சிற்றினஞ்சேராமை' என்கிற தலைப்பில்
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
என்று
வள்ளுவர்,
‘மனதால் தூயவராக இருப்பதும், செய்யும் செய்கைகளில் தூய்மை பெறுவதும், அவரவர் சார்ந்திருக்கின்ற இனத்தின் நல்லவர் கெட்டவர் தூய்மைக்கேற்பவே அமையும்’ என்று கூறுகிறார்.
ஜே.கே. யும், “மனிதனின்
எல்லா செயலுக்கும் மூலகாரணம் மனம். அது, தனக்குள் இருக்கும் கடந்தகால அனுபவங்களைக் கொண்டே உடலைச்
செயல்பட வைக்கிறது. அதற்கேற்ற பலனும் கிடைக்கிறது. அதாவது, மனம்
எண்ணுகிறது! உடல் அதனைச் செயல்படுத்துகிறது! அதனால், தூயமனமுள்ளவர்கள் நன்மை தரும் செயலையும், அசுத்த மனமுடையவர்கள் தீயசெயலையும் செய்வார்கள். தூய மனதை அடைய
ஒரே வழி, நிகழ்காலத்திலே வாழ்வதாகும்” என்கிறார்.
ஏழாவதாக, திருக்குறளில் 43வது
அதிகாரத்தில் 422வது குறளில் 'அறிவுடைமை' என்கிற தலைப்பில்
சென்ற இடத்தால்
செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
என்று வள்ளுவர், ‘மனம் போன போக்கில்
நடக்காது, உள்ளத்தை
தீமைகளிலிருந்து விலக்கி நல்ல வழிகளில் செலுத்துவதே உண்மை அறிவின் அழகாகும்’ என்கிறார்.
ஜே.கே. யும் “மனதில் ஒழுங்கற்றவை எவை என அறிந்து அதனை துறந்தால்
மன ஒழுங்கு தன்னாலே உண்டாகும்” என்று கூறுகிறார்
நம்
மனதில் எழும் எண்ணங்களானது, தாறுமாறாக
ஓடும் காட்டாறு போல, மடை
திறந்த வெள்ளம் போல, பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து
ஓடும். இடையில் எவ்விதத் தடைகளாக
இருந்தாலும் அதனை வீசி எறிந்து விடும். அதுபோல், நம் மனதில் கோபம் தலையில் ஏறிக்கொள்ளும்போது, நமது செயல்கள் அனைத்தும் கீழ்த்தரமானதாக இருப்பதை
நன்கு உணரலாம். சில வேளைகளில் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதாகவும் இருக்கலாம்.
அவ்வேளையில் அறிவு என்கிற விழிப்புணர்வு மந்தமாகி, மனதில் கோப உணர்வு சீறி எழுகின்றது. ஆகையால், நாம் மனம் போன போக்கில் செல்லாமல் இருக்க
வேண்டும். அதற்கு, நம் மனதில் அடைபட்டுக்
கொண்டிருக்கும் தீமைகள், அதாவது
அழிவை உண்டாக்கும் கன்னி வெடிகளை ஒவ்வொன்றாக நமது விழிப்புணர்வு மூலமாக செயலிழக்கச் செய்ய
வேண்டும். இதனால், மனதில் ஒழுங்கு உண்டாகிறது. அதனால், பல
நன்மைகள் உண்டாகின்றன.
எட்டாவதாக
மற்றும் நிறைவாக, திருக்குறளில் 44வது
அதிகாரத்தில் 431வது
குறளில் 'குற்றங்கடிதல்' என்கிற தலைப்பில்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம்
பெருமித நீர்த்து
என்று
வள்ளுவர்,
‘கர்வமும், கோபமும், கீழ் குணமும் இல்லாதவர், தம் வாழ்வில் அடைந்திருக்கும் பெருமையும், புகழும் போற்றி மகிழத்தக்கதாகும்’ என்கிறார்.
ஜே.கே. யும் ,
“ஒருவருக்கு ஒரு பொருளை, ஒரு செயலை, ஒரு நபரைப் பார்த்த மாத்திரத்திலே, மனதில் கோபமோ, வெறுப்போ, பொறாமையோ சற்றும் தாமதம் இல்லாமல் உடனே வருகிறதே! அது எதனால் என்று சிந்திக்கிறோமா? அதற்குக் காரணம், ‘மனம்’ என்று
புரிந்துகொண்டால் மேற்கூறியவற்றை அகற்றலாம். மனத்தை நன்கு
கவனித்தோமானால், கடந்தகால வடுக்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதால்தான் நம்
மனதை, நம்மையறியாமல் காயப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரியவரும், ஆக, ஒரு
செயலுக்குக் காரணியாகவும் காரணமும் மனம் இருப்பதைக் கவனிக்கலாம். எப்படி ஒரு உறையில் இரு வாள்கள் இருக்க
முடியாதோ அதுபோல், ஒரு மனதில் காரணம் காரணியாக இருப்பது தீங்கு ஏற்படும்” என்கிறார்.
அதாவது, நிகழ்காலத்தில்
மனிதமனம் கடந்தகாலச் சிந்தனையைக் கலக்கும்போது மனம் குழப்பத்திற்கு உள்ளாகிறது. அதனால், மனதில் கோபம், வெறுப்பு போன்றவை உண்டாகி அதனை செயலாக வெளிக்காட்டிக் கொண்டதோடு உடல் பாதிப்புக்கும்
வழிவகை செய்கிறது. ஆகவே, மனம்
நிகழ்காலச் சிந்தனையிலிருந்தால் நிம்மதியாக
இருக்கலாம். உடல் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.
நிறைவாக, வள்ளுவரும் ஜே.கே. அவர்களும், தனிமனித
ஒழுக்கத்திற்காக மற்றும் மனித சமுதாயத்தை மேம்படுத்துதலுக்கான சிந்தனைகளையும்
வழிமுறைகளையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று தெளிவாக விளங்குகின்றதல்லவா! ஆகவே, அவர்களின் கருத்துகளை
நாம் செயல்படுத்த வேண்டுமென்றால், நமது மனம்
கோபம், பொறாமை, ‘நான்’ என்னும் அடையாளம் போன்றனவற்றிலிருந்து விடுதலை பெற்று, நிகழ்கால வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தினால், தனிமனிதனின் ஒழுக்கம் பண்படும். உலக மக்கள் சமுதாயமும் மேம்படும் என்பதில் உறுதியான
நம்பிக்கை உள்ளது.
நன்றி
வணக்கம்
No comments:
Post a Comment