Pages

Wednesday, 6 February 2019

சமூக விரோதியை சமூகநலனுக்காக உள்ள சமூக நெம்புகோல்



சமூக விரோதியை சமூகநலனுக்கு அசைக்கும் இளக்கும் 
அவனச் சுற்றி உள்ள சமூக நெம்புகோல்
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

என்னைப் பொருத்தவரையில் சமூகவிரோதிகளை சமூகநலனின் மேல் அக்கறைக் கொள்ளவைக்கும் நல்ல சமூகத் தொண்டர்களாக மாற்றுவது மிகவும் எளிது என்றே கருதுகிறேன். அதற்கு நெம்புகோலாக ஆன்மீகம், அன்பு, அறிவு, பொறுமை இந்நான்கும் அமையும் என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆன்மீகத்தால் கருணை வாங்கலாம். அன்பினால் உறவை வாங்கலாம். அறிவினால் கல்வியை வாங்கலாம். பொறுமையினால் உலகையே வாங்கலாம். இந்நான்கும் குறையும்போதோ அல்லது இல்லாதபோது தான் ஒருவன் சமூகத்திற்கு வேண்டாதவனாகிறான். பிறகு சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறான். அதனால் அவனே சமூகவிரோதியாக மாறுகிறான்.

புகழ்பெற்ற வெற்றிபெற்றச் சமூகத் தொண்டர்களின் வரலாற்றை அசைபோட்டுப் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட மூன்று பண்புகள் இருப்பதைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தியடிகள், அன்னை தெரேசா ஆகியோரைக் கூறலாம். இந்த உலகத்தில் கடினமிக்கச் செயல் என்னவென்றால் மக்களில் யார் நல்லவன்? யார் கெட்டவன் என்பதை அடையாளம் காணுவதுதான். இவரா இப்படிச் செய்தார்? என்னால் நம்பவே முடியவில்லையே! என்று அவரின் சமூக விரோதச் செய்திகள் பல்வேறு ஊடகங்களில் மூலம் நமக்குத் தெரியவரும்போதுதான் அவரைப்பற்றிய உண்மை நிலை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆண் பெண் இவற்றில் எந்த வர்க்கத்தின் சதவீதம் அதிகம் என்பது சொல்வதற்கில்லை. இதிலும் அவர்களுக்குள் போட்டியாகவே காணமுடிகின்றது.

நன்றாகப்படித்து வேலைக்குச் செல்லும் ஆண்களும் சரி பெண்களும் சரி மிதமிஞ்சிய வருமானத்தால் இளமை வேகத்தால் ஆசைத் தூண்டுதலால் பலர் இயல்பான கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைத் தூக்கி எறிந்துவிட்டுக் காண்பதே உண்மை! கொள்வதே சுகம் என்பதற்கு அடிமையாகிக் கெட்டுச் குட்டிச்சுவராக ஆகின்றனர். அவர்களைப் பகடைக் காய்களாய் மாற்றி அவர்களைச் சுடச்சுடச் செய்திகளைத் தரும் சுரபிகளாக மாற்றி அதனை வைத்துப் பணம் பார்க்கும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றில் அடிப்பட்ட வெகு சிலரே சிலரின் அறிவுரைகளால், தொடர்சிகிச்சைகளால் மனம்மாறி திருந்தி நல்வழிக்குத் திரும்புகின்றனர். பின்னரே நான் ஏன் இப்படிச் செய்தேன்? ஒழுங்காக வாழ்ந்திருக்கலாமே என்று வருந்துகின்றனர். உறவுகளும் பொருள்களும் இழந்த பின்னர் வருந்தி என்ன பயன்? கண்கள் நன்றாகப் பார்க்கும்போதே பாதையைப் பார்த்து நடக்காதவன், கண்கெட்ட பின்னே எங்ஙனம் சரியான பாதை நோக்கி நடக்க இயலும். இவர்கள் முதலில் வீட்டிற்கு விரோதியாக மாறி பின்னர் சமூகத்திற்கு விரோதியாக மாறி விடுகின்றர் என்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

படித்தவர்கள் இப்படியென்றால் படிக்காதவர்களோ தங்களைத் தாங்களே ஒரு 'ஆமாம் சாமி' கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர்களின் உதவியால் சில சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது கொடுமை அல்லவா? இவர்களில் பெரும்பாலும் வரட்டு கௌரவத்தில் மூழ்கி, இருக்கும் உறவை இழந்து, நல்ல வாழ்க்கைத் துறந்து அடாவடித்தனம் செய்பவர்களே. இப்படி இருக்கும்போது இதில் யாருக்கு என்ன அறிவுரைச் சொல்லித் திருத்த முடியும்? இதில் கூத்து என்னவென்றால் ஒரு கூட்டம் திருந்தி நல்ல வாழ்க்கைக்குத் தயாராகி வரும்போது, அடுத்த கூட்டம் சீரழிவதற்குத் தயாராகவும் அதன் ருசிகளை அனுபவிக்கத் துடிப்பவர்களாக மாறுவதே கொடுமையிலும் கொடுமை. இதிலும் நல்லவன், கெட்டவனாகும், கெட்டவன் நல்லவனாக மாறும் சுழற்சி நடைபெறுகிறது என்றே சொல்லலாம். ஆக நல்லவன் எப்போதும் நல்லவனாகவும் கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவே இருப்பான் என்று சொல்வது மிகக் கடினம்.                           ,

சமூகச் சுமைகளான (விரோதிகான) இவர்களை நல்வழி நோக்கி அசைக்கும் நல்லவடிவங்களில் உடனே இளக்கவும் ஏதாவது மந்திரக்கோல் உலகில் உண்டா? என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். இவர்களைப் பாறாங்கல்லுக்கு ஒப்பிட்டால், அக்கல் பூமியின் மீது இருந்தால் நெம்புகோலால் நிமிர்த்தி விடலாம். ஆனால் பூமியில் புதைத்திருந்தால் எங்ஙனம் அடையாளம் கண்டு வெளியே கொண்டுவர இயலும். வேண்டுமென்றால் ஒரு ஊகமாக ஆங்காங்கே தோண்டி ஒருவேளை பாறை இருந்தால் நெம்புகோலால் வெளியே கொண்டுவரலாம். இது தேவையற்ற வேலை தானே?

இவர்களை இப்படியே விட்டுவிடவும் முடியாது. இவர்களை கவனிக்கத் தவறி அதற்குண்டான தீர்வை கண்டுபிடித்து திருத்தாவிட்டால் பின்னாளில் ஒட்டுமொத்த சமுதாயமே சின்னாபின்னாமாகி விலங்கினைவிடக் கேவலமாக மனிதகுலம் மாறும் வாய்ப்பு உண்டு. பிறகு மனிதனை கடவுள் படைத்ததன் நோக்கம் அர்த்தமற்றதாகி விடும். அதோடு ஆன்மீகவாதிகள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோர் நினைத்த பொன்னான எதிர்காலக் கனவு நிறைவேறாமல் போய்விடும். இப்போதே பார்க்க, சுவைக்க, ரசிக்க, அனுபவிக்க இருக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்புகள் முழுவதும் இல்லாமலே போகலாம். இதற்கு மணிகட்டுவது யார்? சாதாரணமணி இல்லை! அபாயமணி! இந்த அபாயமணி கட்டாமல் இல்லை. கட்டியாச்சு. மணியும் ஒலிக்கின்றது. ஆனால் ஒரு திருத்தம். அந்த ஓசை ஒரே நேரத்தில் ஒலித்தால் ஒட்டுமொத்த உலகமே எழும். அதிலிருந்த தப்பிக்க வழிதேடும். ஆனால் ஒலி ஒரு சில இடத்தில் ஒலிப்பதால் அதன் தாக்கம் அதிகமாகத் தெரியவில்லை. ஆனால் ஒருநாள் அனைத்து திசைகள்ளிலும் ஒலிக்கும். அப்போது புலம்பிப்பயன் இல்லை.

இப்போது 'மனித உரிமை' என்ற அமைப்பு கொலை(கள்) செய்த ஒருவரை தூக்கிலிடவோ மரணதண்டனை கொடுக்கவோ கூடாது என்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. சிறுவயதுக் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது. வீட்டுபாடங்கள் அதிகம் கொடுக்கக் கூடாது. மீறினால் அக்காட்சிகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு பிரலயமே உண்டாக்கிவிடுகிறார்கள். அதனால் சிறிய தவறுகளைத் தொடக்கத்திலே தடுக்கமுடியாமல் அதுவே பெரிய தவறுகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. ஒருவன் அடிப்படையிலே ஏழையாகவே இருந்தாலும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போனாலும் சமூகவிரோதச் செயலில் ஈடுபடுவதில்லை. அவனின் வளர்ப்பு, சூழ்நிலை, மற்றும் சமுதாயம் பற்றியத் தவறான புரிதலே காரணமாக அமைகின்றது.

என்னதான் ஆட்சியாளர்கள், சட்டம், நீதி மன்றங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இவர்களைத் திருத்தும் நெம்புகோலாக இருந்தாலும் அல்லது அக்கறை எடுத்துக்கொண்டாலும் அவர்களில் பெரும்பாலும் இவர்களை வைத்துப் பணம் பண்ணும் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர். ஆகையால் தான் சான் அளவு முன்னேறினாலும் முழம் அளவு சறுக்கல் உண்டாகின்றது. மேலும் பலவேறு ஊடகச் செய்திகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சமூக விரோதிகளான ரௌடிகள், கொலை, கொள்ளை, அராஜகம் செய்பவர்களை உயர்த்தியும், அவர்களின் செயல்களை நியாயப்படுத்திக் காண்பிப்பதால் ஒ... இப்படி இருந்தால் தான் எல்லோரும் பயப்படுவார்கள்! என்கிற முடிவுக்கு வருகின்றனர். இதனப் பார்க்கும் சிறார்கள் உட்பட அனைவரின் மனதில் பதிந்துவிடுகின்றது. அதோடு கைபேசியினால் பாலியல் வன்முறைகள் அதிகமாகிக்கொண்டுதான் வருகின்றது. ஒவ்வொரு தவறான செயலுக்கும் காலம்தாழ்த்தித் தண்டனை தரும்போது குற்றங்கள் நீர்த்துப் போவதோடு இல்லாமல் குற்றவாளிமேல் அனுதாபம் காட்டும்படியாக அமைகின்றது. 

நீதித்துறைகளின் சில திர்ப்புகள் தாமதமாக வருவதோடு, சில திர்ப்புகள் குழப்பதில் ஆழ்த்தவும் செய்கின்றது. ஒரே வழக்குக்கு ஒரு நீதிபதி தண்டனை வழங்குகின்றார். மேல் முறையீட்டின்போது அதே வழக்கினை வேறொரு நீதிபதி விடுதலை கொடுக்கிறார். இது கேலியாக இல்லை! இதில் கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு குற்றத்தின்போதும் சமூக விரோதிகளை பிடித்துவிட்டோம் என்று முகமூடி அணிந்த சிலரைக் காண்டுகின்றனர். முகத்தைக் காட்டினால் தானே மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது புரியாதபுதிராக உள்ளது.
   
மேலும் ஆங்காங்கே கண்கானிப்புக் கேமராக்கள் இருந்தாலும் பல காமிராக்கள் செயல் இழந்து இருக்கின்றது. அதோடு அந்த கேமராக்களின் உதவியால் குற்றவாளிகளை சொற்ப அளவே பிடிப்பது உண்மை. உண்மை, நேர்மை, தேசபக்தி, மரியாதை ஆகியவை இளைஞர்களிடம் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பம் மேலும் மேலும் மனிதர்களை சோம்பேறிகளாக்குவதோடு வேலையில்லா திண்டாத்திற்கும் வழிவகுக்கின்றது. அதனாலும் இளைஞர்கள் சமூக விரோதச் செயலுக்கு ஈடுபடக்காரணமாக அமைகின்றது. மேலும் மனப்பாடக் கல்வி முறையை குறைத்து செயல்முறைக் கல்வி கொண்டுவந்தால் ஓரளவிற்கு நன்மை தரலாம். இன்றையத் தொழில்நுட்பம் ஆசையைத் தூண்டும் கருவியாகவே உள்ளது. அதனால் தறிகெட்டுப் போகவும் செய்கிறார்கள். முடிவாக முதலில் சொன்ன நான்கினையும் பின்பற்றினாலே போதும். சமூக நலன் என்றுமே நிலைத்து நிற்கும்.                    **************************************


No comments:

Post a Comment