உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம் 46. மூளைச் சலவையில் மயங்காதே!
DON'T BELIEVE BRAINWASH PEOPLE!
பிரியமுள்ள மனிதா! உன் மூளையை
வசியப் படுத்துவது மிகவும் எளிது. அதாவது யார் ஒருவர் தனது
வாழ்வில் இலட்சியம் இல்லாமல், நிலைத் தன்மையில்லாமல் இருக்கிறார்களோ
அவர்களின் மூளையை நாம் பேச்சால், கவர்ச்சியால், செயலால், போலி வாக்குறுதியால் எளிதாக அடிமைபடுத்திவிடலாம். ஏனென்றால்
அவ்வாறான மூளை, சுய சிந்தனை இல்லாத மூளை! யார் எதைச் செய்யச் சொல்கிறார்களோ
அப்படியேச் செயல்படும். அப்படிப்பட்ட மனிதர்கள் தான் இவ்வுலகில் அதிகம் உள்ளனர். அந்த வசியம், நன்மை தருவதாக இருந்தால் அவர்களுக்கு நன்மை
கிடைக்கும். அதுவே தீமையாக இருந்தால் அது தீமையில் முடியும்.
ஆனால் இவ்வுலகில் நிலைத்தன்மை உடையவர்கள் மிக மிகக் குறைவானவர்களே உள்ளனர்.
அவர்களில் சிலர் நிலைத்தன்மை இல்லாதவர்களின் மூளையை வசியப்படுத்தி, அவர்களைத்
தவறான வழியில் போகச் செய்து, மனிதக்குலத்திற்குப் பல தீங்குகள் செய்து வருகின்றனர்.
அவர்களை உன் மூலம் இனம் கண்டு உன் மூலமாக அவர்களையும் நல்ல திசையில் திருப்பிவிடவே
உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கிறேன். நல்ல எண்ணம் கொண்ட நிலைத்
தன்மையானவர்கள் தான் பெரும்பாலும் இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இரக்கமுள்ள மனிதா! இந்த நிலைத்
தன்மை உள்ளவர்கள், நன்மை தரும் செயல்களைச் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் சுற்றியிருப்பவர்களுக்கு
நன்மை கிடைக்கும். நாட்டுத் தலைவராக இருந்தால் அந்நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கட்டாயம் கிடைக்கும். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வளமை பெறுவார்கள்.
எத்தனையோ நல்ல சமூகச் சேவகர்கள், தேசியத் தலைவர்கள், இரக்ககுணம் உள்ளவர்கள், உண்மை ஆன்மீகவாதிகள், தொண்டுள்ளம்
கொண்ட அரசியல்வாதிகள் அதற்குச்
சான்று. ஆனால் அந்த நிலைத்தன்மை
உள்ளவர்கள், கெட்டவர்களாக இருந்தால் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு அவர்களின் கெட்ட செயல்களை
நியாயப்படுத்தி தினமும் அல்லது அடிக்கடி பேசிப்பேசியேக் கேட்பவர்களின் மூளையை வசியப்படுத்தி அவர்களை தங்கள் பக்கத்தில் இழுத்து அடிமையாக்கி, அதோடு நிற்காமல் உன்னையும்
உன்னைச் சார்ந்தவர்களையும், ஏன் உன் பரம்பரையும் எதிர்மறையாகக் கஷ்டப்படுத்துவதோடு அவர்களின் வாழ்க்கையையும் வீணாக்கி வருகிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக நடக்க நான் உன்னுள் உள்விதி மனிதனாக இருந்து நல்லவழி காட்டுகிறேன்.
பசுமை மனிதா! அந்த மாதிரி
செயலில் உன்னை ஈடுபடுத்தவிடாமல் நான் அதைத் தடுத்து நல்ல திசையில் திருப்ப ஆரம்பித்துவிட்டேன். உனக்குள் உள்விதி மனிதனாக இருக்கும் நான் உனக்கு நிலையான புத்தியைக் கொடுத்து உனக்கு
உண்மை எது? பொய் எது? என்பதை விளக்கி உன்னை
நல்வழிப்படுத்தி, உனது வாழ்வில் நான் கொடுத்த செல்வதையும், வளத்தையும்
திருப்பி வாங்கித்தருவேன் அல்லது அவற்றை தவறவிடாமல் செய்யப் போகிறேன்.
மதிப்புள்ள மனிதா! பாலும்
வெண்மை, கள்ளும் வெண்மை. ஆனால் அதன் செயல்
வித்தியாசம். பால் அருந்தினால் மூளை நன்றாய் சுறுசுறுப்பாய் வேலை
செய்யும். கள் அருந்தினால் மூளை மயங்கும். அப்போது உன்னை அறியாமலே நீ மற்றவர்களுக்கு அடிமையாகிவிடுவாய். அதைத் தான் எல்லோரும் செய்துகொண்டு இருக்கிறார்கள். போலியான அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் பெரியவர்கள் அழகாகப் பேசுவார்கள்.
அழகாக நடிப்பார்கள். அவைகளெல்லாம் கள் போன்றது.
அதை உங்களுக்குத் தருகிறார்கள் என்றால் உன்னை மயக்குவதற்கும்,
உன் மூளையை அவர்களுக்கு அடிமைப்படுத்துவதற்குமாகும். ஆனால் இதில் விசேசம் என்னவென்றால், உனக்கு கள் கொடுத்த அவர்கள் எப்போதும் பால் அருந்திக் கொண்டு நிலையாக இருப்பார்கள்.
அவர்களைப் பார்த்து நீ ஏமாந்துவிடக் கூடாது. அந்த
வேளைகளில் உனக்குள் இருந்துகொண்டு உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். அப்போது நீ விழித்துக் கொண்டால் போதும். நீ ஏமாற்றங்களிலிருந்து
தப்பித்து அவர்களிடத்தில் ஏமாறாமல் உனது செல்வங்களை பாழாக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.
கௌரவமான மனிதா! இந்த உலகத்தில்
உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கு யார் யாருக்கு எது எது தேவைப்படுகின்றதோ அவற்றைக் கொடுத்து இருக்கிறேன். அதோடு எல்லாவற்றையும் அனுபவிக்கும், ரசிக்கும், பார்க்கும் சக்திதந்து இருக்கிறேன். ஒலிகளைக் கேட்கும் சக்தி இருக்கின்றது. இப்படி பலவிதப் புலன்களை இலவசமாகத் தந்து இருக்கிறேன். தந்து கொண்டும் இருக்கிறேன். குறிப்பாக எல்லா ஜீவராசிகளும் தங்களின் உணவுத் தேவைக்கும், இனப்பெருக்கத்திற்கும், உயிரைக் காப்பதற்கும் தான் அவைகளைப் பயன்படுத்தி வருகிறது.
ஆனால் மனிதனோ பலவற்றைப் பார்க்கிறான். பல நல்ல கெட்டப் பேச்சுகளை ஒலியாகக் கேட்கிறான்.
ஆனால் நல்லவை அனைத்தும் எடுத்துக் கொள்கிறானா? என்றால் 'இல்லை'
என்றே சொல்லலாம். என்ன தான் அவனைப் பக்கத்தில்
வைத்துக் கொண்டு நல்லவற்றை மூளையில் ஏற்றினாலும் அவன் நினைத்தால் தான், அவனுக்கு ஆர்வம் கொண்டும் ஆழ்ந்த கவனம் கொண்டும் திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தால், கேட்டால் தான் அவன் நினைவில் நிற்கும். இல்லை என்றால் நீ ஒரு மணி நேரமோ
பத்து மணி நேரமோ பேசினாலும், அழகாக நடித்துக் காட்டினாலும் அவன் மனதில்
நிற்காது. அவைகளெல்லாம் எங்கே போகிறது? அதாவது அவன் எண்ணங்கள் யாவும் கேளிக்கை மற்றும் வேடிக்கையில் ஈடுபட்டால், நீ என்ன சொன்னாலும்
அவன் எண்ணத்தில் ஏறாது. அதாவது பசியோடு இருக்கும் மனிதனுக்கு
எவ்வளவு பெரிய விசயத்தைச் சொன்னாலும் அவன் மண்டையில் ஏறாது. பசியோடு
இருப்பவனுக்கு உணவு தான் முக்கியம். அந்த பசிப் போக்கும் முதல்
செயல் தான் ஜீவாதாரம் அல்லது வாழ்வாதாரம்!
ஆகவே ஒரு செயல் வெற்றிபெற வேண்டுமென்றால் எதிரில்
இருப்பவன் பசியை ஜெயித்து இருக்கவேண்டும்.
மானமுள்ள மனிதா! இந்த உலகத்தில் மனிதர்கள் மிக அழகாகத் தேன் தடவி இனிமையாக பேசுகிறார்கள். காந்தம் போல் கவருகிறார்கள். தங்கள் நடிப்பில் மக்களை மயக்குகிறார்கள்.
பெருமை கொண்ட மனிதா! ஒரு மனிதன்
பலவற்றைப் பற்றி பேசுகிறான் என்றால் அவன் அதுவாக மாறிவிட்டான் என்று தவறாக நினைத்துக்கொண்டு
அவன் பின்னால் சென்று கடைசியில் அதலபாதாளத்தில் விழுந்து விடாதே. இனிய மனிதா! ஒரு இலக்கியத்தை, தத்துவத்தை, ஆன்மீகத்தை பேசுகிறான் என்றால் அவைகளால்
ஏதேனும் பிரயோசனம் இருக்கின்றதா? அது உன்னை மயக்குவதற்க்கும்,
கவர்வதற்கும் கடைசியில் உன்னை அடிமைபடுத்துவதற்கும் செய்துவிடுகிறது.
சிறப்பு மிகு மனிதா! ராஜா வேடத்தில்
இருந்துகொண்டு வீர ஆவேச செயலையும், மதி தரும் நன்மையையும் செய்தால்
யாருக்கு என்ன பயன்? ஒரு கண்ணாடியில் அனைத்து செல்வத்தையும் காட்டி
'எல்லாம் உனக்குத் தான்! அதை எடுத்துக் கொள்!'
என்பதாகும். கண்ணாடியில் தெரியும், கனவில் தெரியும், திரையில் தெரியும் , புத்தகத்தில் இருக்கும் செல்வத்தினால் யாருக்காவது ஏதாவது பிரயோசனம் கிடைக்குமா?
அது போலத் தான், மற்றவர்கள் உன் முன்னால் பேசுவது,
நடிப்பது! எதற்காகவென்றால் உனது செல்வத்தை அவர்கள்
பறிப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் ஏதுவாக இருக்கும். தன்னலமற்ற மனிதா! உனது கையில் நிஜமான செல்வங்கள் இல்லாத
வரைக்கும், அவர்கள் கொடுக்காத வரைக்கும், எது வந்தாலும், எது காட்டினாலும்,
எது சொன்னாலும் உனக்கு பிரயோசனப் படாது.
இறைவனாக உனக்குள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றி பிறர் பேசியோ, நடித்தோ இருந்து கொண்டே இருப்பவன் இறைவனாக மாற முடியுமா?
முடியாது! ஏனெனில் அவைகள் வெத்து வேட்டு.
எங்கு பேச்சைப் போல் செயல் இருக்கின்றதோ அவனால் மட்டுமே உனக்கு லாபம்.
வெறும் பேச்சில் மட்டும் திருப்தியடைந்து உனது வாழ்க்கையை, செல்வத்தை, வளத்தை அவர்களுக்கு அர்பணித்து, குறைந்த காலத்திலேயே உனது வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளாதே.
சிறப்பு மிக்க மனிதா! இப்போது
சிறியவர்கள் கூட அழகாக பேசுகிறார்கள், நடிக்கிறார்கள்.
ஆனால் செயல் இருக்கும்போது தான் முழுப் பலன் கிடைக்கிறது. புதுமை மனிதா! ஒரு தாயால் மட்டுமே குழந்தை பிறப்பின்
முறையையும், வலியையும் சரியாக விளக்க முடியும். அதுவும் அவர்கள் ஆர்வத்துடன், ஆழ்ந்த சிந்தனையும் அந்த
பேரு பெற்றவர்கள் தெளிவாகச் சொல்லுவார்கள். மற்றபடி எவ்வளவு தான்
அதை புத்தகத்தில் படித்தாலும், அதைவிட மிகைப்படுத்தியோ,
குறையுடனே தான் சொல்ல முடியும்.
மகிழ்ச்சி மனிதா! அரு சுவை
உணவு பற்றி எவ்வளவு பேசினாலும், காட்டினாலும் உன் பசி தேறாது.
அதை எடுத்து சாப்பிட்டால் தான் உனக்கு பலன் கிடைக்கும். ஆகவே இனிய மனிதா! உன் கடமைகளை, தேவைகளை எப்போதும் மறக்காதே! அது தான் உனக்கு கடைசி வரையில்
உதவும். பொறுமை மனிதா! நீ நல்லதை சாப்பிட்டு
நன்கு ஜீரணமானால் தான் நல்லவை உன் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். அதே சமயத்தில் கெட்டவைகள் வெளியேறும். அது போல நீ ஒரு
காட்சியை, நடிப்பை, படிப்பை உன் மூளையில்
ஏற்றுக்கொண்டு அதை நன்றாக ஆழ்ந்து சிந்தித்தால் தான் உனக்கு நல்லவை ஏற்று கெட்டவை நீக்கி
நன்மை கிடைக்கும்.
நீ இப்போது எப்படி இருக்கிறாயென்றால் பார்ப்பது எல்லாம் எனக்கு வேண்டும்!
வேண்டும் என்று அனைத்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அதை ஜீரணிப்பதற்கு நேரம் கொடுக்காமல் உனது உடல் நல்லவை, கெட்டவை என்று பிரிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அப்போது எந்த வைத்தியனாலும் நிரந்தர தீர்வு காண முடியாது.
அப்படியே வைத்தியம் பார்த்துக் கொண்டாலும் அந்த வைத்தியத்திற்கு அடிமையாகி
உனது செல்வத்தை இழப்பது உறுதி.
இன்பமான மனிதா! அதற்கு
வைத்தியம் தரும் ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், பெரியோர்கள் வேண்டாம். யார் ஒருவர் உனக்கு ஜீரணம் (சிந்தனை) செய்யும்
நன்மை எது, தீமை எது என்று சொல்லித் தந்து எப்போதும் உன்னை சுறுசுறுப்பாக
வைத்திருக்கிறார்களோ அவர்களே உண்மை மகான்கள். அவர்கள் எப்போதும்
நன்மை செய்வார்கள். உனக்கு அவர்களால் எப்போதும் தீங்கு வராது.
பிரியமான மனிதா! யார் ஒருவரால்
நீ கடமையை மறக்கிறாயோ, செல்வத்தை, வளத்தை, வாழ்க்கையை வீணாக்குகிறாயோ,
உனது வாழ்க்கையை மயக்கமடையச் செய்கிறார்களோ அது உனக்கு நஞ்சு கலந்து
கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள். அவர்களிடமிருந்து
நீ பிரிந்து விடு. பிறகு யார் ஒருவர் உனது வாழ்விற்காக,
மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக பல செயல்களைச் செய்கிறார்களோ
அவர்கள் பின்னால் நீ செல்லலாம். அதற்கு இந்த உள்விதி மனிதன் துணையாக இருப்பான்.
வீணர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கும் வழியை நான் காட்டுகிறேன்.
உன் வாழ்வு சுகம் பெறும் .
*********************
Good
ReplyDelete