Pages

Monday, 10 June 2019

உள்விதி மனிதன் பாகம்: 47 உன் எண்ணப்படி மாறும் ஜீன்கள் YOUR THINKING CAN CHANGE THE GENE



உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
பாகம்: 47 உன் எண்ணப்படி மாறும் ஜீன்கள் 
Your thinking can change the Gene
மதுரை கங்காதரன்  

அன்பு மனிதா! இந்த உலகில் இன்றைய நடைமுறை வாழ்க்கையில்  அந்தக் கால காப்பியங்கள், இதிகாசங்கள், மதவாதக் கொள்கைகள், நாகரீகம், கலாச்சாரம், வேதங்கள், சித்தாந்தங்கள், பல தரப்பட்ட நூல்களை பற்றி பல வழிகளில் நாம் அறிகிறோம். அவைகளெல்லாம் மனிதர்களால் மனிதர்களின் நன்மைக்காக, சிறந்த வாழ்வுக்காக எழுதப்பட்டவை என்றாலும் அந்தப் புத்தகங்களால் ஏன் மக்களை பண்படுத்த முடியவில்லை. இவ்வளவுக்கும் அந்தக் காலத்தில் குறைந்த மக்கள்தொகையே இருந்தாலும் வெகுவானவர்களின்  கல்வியறிவு மிகமிகக் குறைவாகவே இருந்திருக்கின்றது. பின் எப்படி இன்று இருப்பதைக் காட்டிலும் அவர்களால் நல்ல வாழ்க்கை அமைத்திருக்க முடியும்? அந்த நூல்கள் இல்லாமல் எப்படி வாழ்ந்திருக்கின்றனர்? அப்படியென்றால் அந்த நூல்களெல்லாம் சும்மா ஒப்புக்காக, நேரத்தைச் செலவழிப்பதற்காக எழுதப்பட்டதா? என்கிற கேள்வி மேலோங்கி நிற்கிறது.

இனிய மனிதா! எப்போதும் நான் கூறுவது இது தான். செயல் இல்லாமல் வெறும் வார்த்தைகள், எழுத்துக்கள், எண்ணங்கள் என்றும் விலை பெறா ! மதிப்பும் பெறாது! செயல் எது செய்கிறதோ அது தான் நிலைத்து நிற்கும்செயலைச் செய்பவர்கள் தான் எப்போதும் வெற்றி பெறுவர்.

மேலும் பேரன்பு மனிதா! அந்தக் காலத்தில் அரசாட்சி எப்படி இருந்தது? வீரம், நேர்மை, நீதி, நியாயம் இருந்தது. தர்மம் வாழ்ந்தது. நாட்டை ஆளும் மன்னர்களுக்கு மக்கள் நன்மை ஒன்றே குறிக்கோளாக இருந்தது. பின் ஏன் திடீரென்று இந்த மாற்றம்? இன்று கொலை, கொள்ளை லஞ்சம், ஊழல், ஏமாற்று என்று சர்வ சாதாரணமாய் நடைபெறுகிறது ! அதற்குக் காரணம் யார்?    

கோவில்கள் பல இருக்கின்றன. ஆனால் சில கோவில்களின் தவறான காரியங்கள் நடக்கின்றன. அதனால் கோவிலுக்குச் செல்பவர்கள் எல்லோரும் பக்திக்காக செல்கிறார்கள் என்பது உறுதியாக சொல்வது கடினமாக இருக்கின்றது. ஆன்மிகம் பேசுகிறவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா?

பெருமையுள்ள மனிதா! அதற்கு காரணம் நாம் தான். உன் ஜீவா ஓட்டம், ஆன்ம ஓட்டம் தான் காரணம். இதைக் கேள். கேட்கும்போது உனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஏனெனில் உன்னுள் இருக்கும் இந்த மனஓட்டத்தை , மனக்காட்சியை அழித்து, மற்றவர்களுக்குத்  தீங்கு செய்யும் எண்ணம், செயல் எப்படி உருவானது? 

முன்பெல்லாம் உனக்கு இறைவனைப் பற்றிய பயம், இறப்பை பற்றிய பயம், சட்டத்தைப் பற்றிய பயம், வாழ்வைப்பற்றிய பயம், உன்னுடைய கௌரவம் பற்றிய பயம், இயற்கையின் பயம், பெரியோர்களின் பயம் என்று பலவகை பயம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனிடமிருந்து அகன்று கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் முதல் காரணம் நமது எண்ணங்களின் மாற்றமும் வாழ்க்கைப் பற்றிய அசாதாரண நினைவுமாகும்.

சில ஆன்மீகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அவர்களின் மனதில் 'நாம் எல்லோரும் எப்போதோ ஒரு நாள் இறக்கத்தானே வேண்டும். அந்த சமயத்தில் நாம் எதையும் கொண்டுபோகப் போவது கிடையாது. அதனால் இப்போது இருக்கும் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்று பொய்யான உண்மையை அவர்கள் எல்லோரின் மண்டையில் திணித்து வருகிறார்கள். உன் நிம்மதியின்மைக்கு காரணம் உன் குடும்பம் மற்றும் வளமான செல்வங்கள் தான். அதை எனக்குக் கொடுத்து விடு என்று மூளையை வசியப்படுத்தி அவர்களின் செல்வங்களை வாங்கிக்கொண்டு அவர்களை தங்கள் வாழ்நாள் முழுதும் அடிமையாக்கிவிடுவதே ஒரு சிறந்த தொழிலாகக் கொண்டுள்ளனர். அதோடு இந்த உள்விதி மனிதனை 'இறைவன்' என்கிற போர்வையில் பல தொண்டுகள் போலியாக நடைபெறுவதால் தான் இந்த மாற்றம்.

அவர்களின் விளம்பரங்கள், அணுகுமுறைகள் பல ஊடகங்கள் வெகு பிரமாதமாய் திரும்பத்திரும்பக் காட்டி, பார்ப்பவர்களின் மூளையை வசீகரம் செய்வது முதல் முயற்சி.  அந்தக் கவர்ச்சியான பேச்சில், விளம்பரத்தில் கவரப்பட்டு அதைப் பார்ப்பவர்கள் 'சும்மா அங்கு போய் பார்ப்போம், என்ன சொல்கிறார்கள்? பார்ப்போம்' என்கிற சிந்தனையுடன் அங்கு செல்கிறார்கள். அப்போது ஏமாற்றுபவர்களுக்குப் பாதி வெற்றி. அங்கோ அவர்களின் அன்பான உபசரிப்பு, இனிமையான பேச்சு, ரம்மியமான சூழ்நிலை, பிரச்சனை இல்லாத மனிதர்கள் போன்றவை பார்க்க பார்க்க, அவைகளெல்லாம் பிடித்துவிட, அது தான் தாங்கள் தேடிய இனிய வாழ்க்கை என்று தங்கள் கண்ணால் காண்பதை நம்பி அவர்கள் தங்களின் கடமையை மறந்து அல்லது ஒதுக்கி அங்கு தஞ்சம் அடைகிறார்கள். மேலும் தங்கள் வாழ்நாளில் முக்கிய நோக்கமான 'மக்கள், மக்களைக் காத்தல்' என்கிற கடமையை மறந்து வாழ்வை வீணாக்கிக்கொண்டு வருகிறார்கள்.

இனிய மனிதா! மனிதர்களின் எண்ணங்கள் பலத்தரப்பட்டவை. அது எப்படி அமைந்துள்ளது என்று உனக்கு ஆச்சரியமாக இல்லையா? கல்வியறிவு இல்லாத தாய் தந்தையர் மகன் மருத்துவம் படித்து டாக்டராகிறான். மற்றொருவன் பொறியாளராகிறான். அறிஞராகிறான், விஞ்ஞானியாகிறான். கலெக்டர் ஆகிறான். அதாவது அவர்களுடைய மூதாதையர்களின் அறிவுக்குச் சம்பந்தமில்லாத பல துறைகளில் மேதையாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது?

சிறப்புமிக்க மனிதா! அன்றோ நெசவாளியின் மகன் நெசவாளி தான். டாக்டர் மகன் டாக்டர், கொல்லர் மகன் கொல்லர், ஆசிரியர் மகன் ஆசிரியர் என்று இருந்த காலம் போய் எவரும் எந்தத் துறையிலும் நுழைந்து தேர்ச்சி பெறலாம் என்கிற எண்ணம் எப்படி வந்தது? இங்கு ஜீன்கள் எவ்வாறு முன்னேற்றம் பெற்றன? என்று சந்தேகம் உங்களுக்கு வருகிறது தானே?

மானமுள்ள மனிதா! உனக்குள் இருக்கும் இந்த எண்ண ஓட்டம், எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தது. நானும் எனது எண்ண ஓட்டத்தை உனது நன்மைக்காக மாற்றிக் கொண்டேன். அதாவது சூழ்நிலைக்கும், உன் விடாமுயற்சிக்கும், உன் அறிவுக்கும், உனது கடின உழைப்பிற்கும் உன் எண்ண மேன்மை அடையும் தன்மைக்குத்  தகுந்தாற்போல் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பதை மறந்து விடாதே! 

பெருமைமிக்க மனிதா! நான் உன்னுள் இருந்துகொண்டு இத்தகைய அதிசய நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதை இப்போதாவது உணர்ந்து கொள்! உனக்குள் இருந்துகொண்டு உன்னையும் மற்றவர்களையும் நல்வழிப்படுத்துவதற்காக நான் உனக்கு எந்தவித பிரதிபலன் இல்லாமல் கொடுத்தது' என்று மட்டும் மறந்துவிடாதே! அதற்காத் தான் உனக்குள் உள்விதி மனிதனாக இருந்துகொண்டு துணை செய்ய வந்திருக்கிறேன்.
%%%%%%%%%%%%%%%%% 

1 comment: