Tuesday, 14 August 2012

பாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்


ஐ . எஸ். ஒ 9001 : 2008 

பாகம் : 1

தொழில் அபிவிருத்தி- ஏற்றுமதி - சிறந்த நிர்வாக வழிகாட்டித் தொடர்   

எத்தனையோ கட்டுரைகள், தொடர்கள் நீங்கள் படித்திருப்பீர்கள். இத்தொடர் இதுவரை வந்திராத முற்றிலும் மாறுபட்ட ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் உபயோகமுள்ள தொடர். ஒவ்வொரு பாகம் படிக்குபோதும்  உங்களுடைய எண்ணமும் செயலும் மேம்படுவதை நன்கு உணருவீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான எவ்வளவோ நல்ல பெரிய விஷயங்களை  இந்த தொடர் மூலம் தெரிந்துகொள்வீர்கள். 

சிறந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றால் நினைத்தது நடக்க வேண்டும். நினைத்தது நடக்கவேண்டுமென்றால் நன்றாக சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டுமென்றால் ஒன்று நன்றாக படித்து நல்ல வேலையில் சேரவேண்டும். அல்லது ஏதாவது ஒரு தொழிலை லாபமாக செய்யவேண்டும். இரண்டிற்குமே முறையான பொதுவான தர நிர்வாக வழிவகைகள் தெரிந்திருக்க வேண்டும். இத்தொடர் ஒருவகையில் பயிற்சி அளிப்பதும் கூட. இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு பயிற்சி வகுப்பும், பயிற்சி பட்டறையும் அவசரம் அவசரமாகவே நடப்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தொடர் பொறுமையாக மிக எளிதான முறையில் அனைவரும் புரியும்படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னாள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில குறிப்பிட்ட பலசரக்கு கடை, ஜவுளி, நகை, ஹோட்டல், கல்வி நிறுவனமோ    இருக்கும்.அதற்குத் தகுந்தாற்ப் போல் வேலையாட்களும் வாடிக்கையாளர்களும் அப்பகுதியிலேயே  இருப்பார்கள். அன்றைய காலகட்டத்தில்   அப்பகுதி வாடிக்கையாளர்கள் திருப்தியுடனோ அல்லது திருப்தி இல்லாமலோ பொருட்களை அல்லது சேவையினை பெறும் சூழ்நிலை இருந்து வந்தது. நாளடைவில் உலகப் பொருளாதார தாரளமயம் வந்த பிறகு வாடிக்கையாளர்கள் சிறந்த தரம், துரித சேவை மற்றும் போட்டி விலையின் காரணமாக பகுதி விட்டு பகுதி சென்று, ஊர் விட்டு ஊர் சென்று , மாநிலம் விட்டு மாநிலம் சென்று ஏன்? நாடு விட்டு நாடு சென்று கூட பொருட்களை வாங்கியோ அல்லது விற்றோ வருகிறார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் பல்வேறு இடங்களிருந்து பல்வேறு ரசனையுடன் , லேடஸ்டாக வந்த வரவுகளை மட்டுமே விரும்பி வாங்குகின்றனர். வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தேவைக்குத் தகுந்தவாறு தொழிலை அல்லது சேவையை மேம்படுத்திக்கொண்டால் / மாற்றிக்கொண்டால் தான்  இந்த போட்டி உலகில் நிலைத்திருக்க முடியும். எல்லாவிதமான வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவது மிகவும் கடினமான காரியம் தான். அவர்களை எவ்வாறு எந்தெந்த வகையில் திருப்தி செய்து தொழிலில் அதிக லாபம் பெறலாம் என்பதே இந்த தொடரின் பிரதான நோக்கமாகும்.

இன்றைய வாடிக்கையாளர்கள் வெறும் தரமான பொருட்களை மட்டும் விரும்புவதில்லை. சிறந்த சேவையுடன் இன்னும் பலவற்றை விரும்புகிறார்கள். உதாரணமாக குளுகுளு வசதி இல்லாவிட்டாலும் காற்றோட்டமான இடம், சிறந்த உபசரிப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், அதிநவீன சேவை இன்னும் பல. இவைகளை அளிப்பது எவ்வாறு சாத்தியம்? தொழிலில் நல்ல அபிவிருத்தி இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் எதிபார்ப்பதைவிட அதிகமாக  திருப்தி அளிக்கவேண்டும். அவைகளையெல்லாம் ஒவ்வொரு பாகத்திலும் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த இரகசியத்தை தெரிந்தவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். ஆனால் தெரியாதவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள்.        வாடிக்கையாளர்களின் திருப்தியின் அளவைப்  பொறுத்து தான் ஒரு நிறுவனத்தின் வெற்றி  இருக்கின்றது. அதிக திருப்தி - அதிக லாபம். சுருங்கச் சொல்லப் போனால் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தான் ஐஸ்வர்யங்களை வாரித் தரும் கடவுள். ஏனென்றால் ஒரு நிறுவனம் வழங்கும் சேவையினை அல்லது  பொருட்களை  வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் வாங்கிச் சென்றால் தான்  வியாபாரம் பெருகும். வியாபாரம் பெருகினால் பலவித வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு செய்து தரமுடியும். நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு பல சலுகைகளை வழங்க முடியும் . அதன் மூலம் வாடிக்கையாளர்கள் மூலமாக  நிறுவனம் - ஊழியர்களின் ஒற்றுமை மற்றும் நல்லுறவு மேம்படும். அதன் பலனாக  நிறுவனம் நிர்ணயிக்கும்  எந்த ஒரு இலக்கையும் இலகுவாக அடைய முடியும் .

நாம் ஒரு கடைக்கு பொருட்களை வாங்குவதற்கோ அல்லது ஏதாவது ஒரு சேவையைப் பெற செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் . கடைக்காரரோ அல்லது வேலை செய்பவர்களோ 'நம்மிடம் என்ன வேண்டும்' என்று கேட்காமலோ அல்லது கண்டும் காணாது போல் நடந்து கொண்டால்  எப்படிப்பட்ட வாடிக்கையாளருக்கும் எரிச்சல் வருமா ? வராதா? கட்டாயம் வரும்! எவ்வளவு சீக்கிரம் அடுத்த கடைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றுவிடுவார்கள் இல்லையா! இவ்வாறு  வியாபாரம் செய்தால் கடைக்குச் சொந்தக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி எவ்வளவு பேர் போன நிறுவனமாக இருந்தாலும் சரி  சீக்கிரமே அவர் வியாபாரத்தில் நஷ்டப்படும் நிலைமைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு நிறைய இருக்கின்றது . அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டுமானால் கட்டாயம் வாடிக்கையாளர்களை நன்றாக கவனிக்க அல்லது திருப்திபடுத்த மேல்மட்ட ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கற்றுக் கொடுக்க வேண்டும்.

பலர் பல்வேறு இடங்களில்  பலவிதமான வியாபாரம் செய்கிறார்கள் . மக்களுக்கு பலவித சேவைகளை வழங்குகிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் பலாப் பழத்தில் 'ஈ'  மொய்ப்பது போல் மக்கள் மொய்த்து வருகிறார்கள்.  அப்படிப்பட்ட இடத்திற்கு  குறிப்பாகவோ அல்லது மெனக்கெட்டோ  விஜயம் செய்து தங்களுடைய பவிதமான தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். ஏன்? மற்றவர்களால்  அந்த மாதிரியான சேவையினைக்  கொடுக்க முடிவதில்லை. காரணம், அவர்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வழிமுறைகளை  பற்றி நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுடைய தரமான பொருட்களின் விநியோகம், அன்பான உபசரிப்பு, வாடிக்கயாளர்களின் எல்லாவிதமான குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் செயல், மற்றவர்களைக் காட்டிலும் விலை குறைவு, விஷாலமான வசதியான இடத்தில் அவர்களே பொருட்களை தேர்ந்தெடுக்கும் வசதி, குறித்த நேரத்தில் காத்திருக்க வைக்காத துரித சேவை போன்றவைகளாகும் .

    

உதாரணமாக ஒரு நாள் இருவர் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும் கிட்டத்தட்ட பக்கத்துபக்கத்தில் மீன்களைப் பிடிக்கத் துவங்கினர். ஒருவன் தொடர்ந்து மீன்களை பிடித்தபடி இருந்தான். மற்றோருவனால் ஒரு சிறிய மீனைக்கூட பிடிக்க முடியவில்லை. கடைசியில் அவனுக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. பொறுமை இழந்து பக்கத்தில் இருந்தவனிடத்தில் "உன்னால்   எப்படி அதிகமான மீன்களைப் பிடிக்க முடிந்தது?"அதன் காரணத்தைக் கேட்டான். அதற்கு மற்றொருவன் "நீ மீன்களைப் பிடிக்க என்ன செய்தாய் என்று முதலில் சொல். அவற்றிலிருந்து  நீ எங்கு, என்ன தவறு செய்தாய் என்று சொல்கிறேன்" என்றான். 


"நான் தூண்டிலில் அதிகம் மீன்களைக் பிடிக்க விலை உயர்ந்த இனிப்பை சொருகினேன். இருந்தும் ஒரு மீனும் கிடைக்கவில்லை " என்று பதிலளித்தான். அவன் செய்த தவறு இப்போது தெரிந்து கொண்டான்."நண்பா, மீன்களை பிடிக்க வேண்டுமென்றால் மீன்களுக்கு பிடித்த உணவான சிறிய புழுக்கள் இருந்தாலே போதும். விலை உயர்ந்த எந்த உணவு வைத்தாலும் வீண் தான் " என்றான் .  அப்போது தான் அவனுக்கு மீன்களைப் பிடிக்க   எளிமையான ரகசியம்  தெரிந்தது. அப்புறமென்ன தன் நண்பன் சொல்லியவாறு செய்தான். மறுநாளிருந்து அவன் நினைக்கும் அளவிற்கும் அதிகமாக மீன்களை பெற்றான்.

                           

 ஐ . எஸ். ஒ 9001 : 2008 என்பது உலகளாவிய  தர நிர்ணயம் செய்யும் செயல் வடிவமேயாகும். அதில் சொல்லியவாறு  பின்பற்றினால் நிச்சயம் ஒரு நிறுவனத்தின் வியாபாரமோ அல்லது சேவையோ அமோக வெற்றி பெறும். ஏனென்றால் இந்த ஐ.எஸ்.ஒ 9001 என்பது உலகளாவிய  தர நிர்ணய அமைப்பானது  உலகத்தில் உள்ள பல நாட்டைச் சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. அதோடு  அனைத்து நாடுகளுக்கும்  அனைத்து விதமான  வியாபாரம் மற்றும் சேவையளிப்பவர்களுக்கும் பொருந்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால்  ஐ.எஸ்.ஒ 9001 அமைப்பு  தொழில் மற்றும் சேவை வித்தியாசம் பாராமல் அனைவரும் பின்பற்றக்கூடிய எளிமையான லாபம் தரும் வழியாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்யும் பெரும்பாலோர் இதை பின்பற்றி பெரிய லாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றனர்.


இன்றைய தினத்தில் பலர் ஏன் வீணாக செலவு செய்து ஐ.எஸ்.ஒ 9001 : 2008 வாங்கவேண்டும். அவற்றை வாங்காமல் வியாபாரம் அபரிவிதமாக  நடத்த ஆசைபடுகிறார்கள். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம்' செய்பவர்கள். அப்படி  நினைத்தால்  அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் ஒரு நிறுவனம் தாங்களே சுய விளம்பரம் செய்து தங்கள் தரம் உயந்ததாக காட்டிகொண்டால் அதை விவரம் தெரியாதவர்கள் தான் ஆரம்பத்தில் நம்புவார்கள். பிறகு நிலையான தரம் மற்றும் சேவை  இல்லாததை உணர்ந்து வேறு கடைக்கு மாறிவிடுவார்கள். ஆனால் ஐ.எஸ்.ஒ 9001:2008 தர நிர்ணய சான்று பெற்ற  நிறுவனமானது அந்த அமைப்பில் அங்கீகாரம் பெற்ற அனுபவமிக்கத் தணிக்கையாளர்கள்  அந்த நிறுவனத்திற்க்குச் சென்று அவர்களின் தயாரிப்பு பொருட்களின் தரத்தையும், சேவைகளையும்  தணிக்கை செய்து , ஏதேனும் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு குறைவிருந்தாலோ  அல்லது ஐ.எஸ்.ஒ 9001:2008 தர நிர்ணய முறையிலிருந்து விலகியிருந்தாலோ    அதை கண்டுபிடித்து சரி செய்ய அறிவுரை வழங்குவார்கள். ஆகவே அவர்கள் தரும் சான்று வாடிக்கையாளர்களுக்கு முழுநம்பிக்கை தருவதாக அமைகிறது.

ஆனால் இன்றைய நிறுவனங்களின் நிலைமை :


தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வேலைகளில் ஆர்வம் இல்லாதவர்களாகவும், மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், நடைமுறையில் தங்களைச் சுற்றி மாறிவரும் மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கின்றனர். அதாவது ஒரு நிறுவனத்தில் நடக்கும் அனைத்துவித உற்பத்தி மற்றும் சேவை செயல்பாடுமுறைகள் உயர்நிலை மேலாண்மை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் பொறுப்பு மற்றும்  அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி முறையாக பயிற்சியும் அளிக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்து துறை நிர்வாக வழிமுறைகள் அந்தந்த மேனுவல் (Manual) மற்றும் டாகுமென்ஸ்  (Documents) மூலம்  தெரிந்துகொள்வதால்  யாரேனும் விடுமுறையில் சென்றாலோ, நிறுவனத்தைவிட்டு விலகிச்சென்றாலோ அந்த பொறுப்பை உடனடியாக யாராவது ஒருவர் பார்க்கலாம். தேவைபட்டால் புதியவர் ஒருவரை நியமிக்கலாம். எல்லாவற்றிக்கும் சிறிது பணம் செலவாகும் என்பது உண்மை. இதை செலவு கோணத்தில் ஒரு நிறுவனம் பார்க்கக்கூடாது. அது நிறுவனத்திற்கு அவசியமானதாக நினைக்க வேண்டும்.

 

எந்த ஒரு முதலாளியும் தனக்குக் கீழ் வேலை பார்க்கும் எல்லாத் தொழிலாளிகளும் முக்கியமானவர்கள் என்று எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு தொழிலாளியும் நிறுவனத்தில் ஒரு அங்கம் என்று கருத வேண்டும் . அவர்கள் நன்றாக தொழில் பழகி நேர்த்தியாக  வேலை செய்யும்போது தானாகவே பொருட்களின்  தரம் உயருகிறது. வியாபாரம் அபிவிருத்தியாகிறது. தொழிலாளிகள் நிறுவனத்தின் ஆஸ்தி அல்லது சொத்து என்று நிறுவனத்தலைவர் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு நடத்த வேண்டும். அப்படி நினைக்கும் போது தொழிலாளர்களுக்கு நிறுவனத்தின் மேல் இருக்கும் விசுவாசம் கூடும். மேலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உணருவார்கள்.   

                         

ஒரு நிறுவனம் பழகிய அனுபவமிக்க தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள, அவர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச சௌரியங்களை அவர்கள் கேட்காமலே செய்து தரவேண்டும். ஏனென்றால் அனுபவமிக்க தொழிலாளி நிறுவனத்தை விட்டு வெளியேறினால் போட்டி நிறுவனத்திற்கு தான் ஆதாயம் அதிகம்.போட்டி நிறுவனத்திற்கு  அனுபமிக்க , தொழில்நுணுக்கம் தெரிந்த தொழிலாளி உடனடியாக  கிடைப்பதால் பொருள் உற்பத்தியிலும் அதன் சேவையிலும் தடைபடாமல் இருப்பதோடு அவற்றின் தரம் உயரும் வாய்ப்பும் கூடுகின்றது. அதனால் வாடிக்கையாளர்கள் முழு மனதிருப்தியுடன் பொருட்களை வாங்கிச் செல்வர். அதன் மூலம் நிறுவனம் பெரிய வளர்ச்சி அடையும் வாய்ப்பு கிடைக்கிறது. 


ஆனால் அனுபமிக்க தொழிலாளியை ஒரு நிறுவனம் இழக்கும்போது அவருக்குபதிலாக மற்றொரு புது தொழிலாளியை நிறுவனம் அமர்த்தவேண்டும். அதற்கு காலவிரயம், பணச் செலவோடு விலகிய தொளிலாளி போல் அனுபவமுள்ள தொழிலாளிகள் கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒரு புதிய தொழிலாளியை வேலைக்கு அமர்த்தினால் அவருக்கு முதலில் பயிற்சி கொடுக்கவேண்டும். அதற்கு பெரும்பாலும் நேரம் அனுமதிப்பதில்லை. அதுவும் காலவிரயம் தான். மேலும் அவருக்கு அந்த புதிய சூழ்நிலை ஒத்துவந்த பிறகே அவர் தனது திறமையை காட்டத் தொடங்குவார்.

          

அதுவரை நிறுவனம்  பொறுமையில்லாமல் புதியவரை  வேலைக்கு அமர்த்தியவுடன் பழைய தொழிலாளியின் திறமை போல் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நடைமுறையில் பலவித காரணங்களால் முக்கியமாக சகதொழிலாளியின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகவே அவரது முழுத்திறமை காட்ட முடியாதவராகிறார். நிர்வாகம் அவரை  விரைவிலே  'திறமையில்லாதவர் ' என்று முத்திரையை குத்திவிடுகிறது . வேறு வழியில்லாமல் வேறு ஒருவர் வரும் வரை தரமில்லாமல் ஏனோதானோவென்று அந்தவேலை நடைபெறும் சூழ்நிலை ஏற்படுகிறது . ஒருவழியாக அவரும் வெளியேறிவிடுகிறார். மீண்டும் புது தொழிலாளி. அவருக்கு பயிற்சி ..இது தொடர்கதையாகவே நடை பெற்று வருகின்றது. 

                     

கடைசியில் பழைய தொழிலாளியே அதேவேலைக்கு கூடுதல் சம்பளத்தில் அமர்த்தபடுகிறார் . ஆனால் இப்போது அந்த பழைய தொழிலாளி பழைய திறமையைக் காட்டிலும் குறைவாகவே வெளிப்படுத்துகிறார் . ஏனென்றால் நிறுவனத்தின் மேல் அவருக்கிருந்த மரியாதை மற்றும் நம்பிக்கை குறைந்து போகின்றது. நிர்வாகம் எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பது தெரியுமாதலால் அவரின் ஏனோதானோ என்கிற மனப்பான்மை வளருவதற்கு நிர்வாகமே காரணமாக அமைந்துவிடுகின்றது. ஒத்துவராதபட்சத்தில் அதை விட அதிக சம்பளத்தில் வேறு இடத்திற்கு வேலைக்கு போகவும் தயாராகிறார். அவர்களால் நிறுவனத்திற்கு அதிக  பிரயோஜனமில்ல்லாமல் போய்விடுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஐ.எஸ்.ஒ 9001:2008 உலக தரச்சான்று வாங்குவது சற்று சிரமமான காரியம்.


தரம் மற்றும் சேவையில் திருப்தி தான் வாடிக்கையாளர்களுக்கு மிகமுக்கியம். இவைகள் தான் வாடிக்கையாளர்களைக் கவரும் எளிய வழி. ஒரு பொருளின் தரம் ஒவ்வொரு பகுதி தயாரிப்பிலும் / நிலையிலும்   அல்லது துறையிலும் செயல்படும் விதத்தில்  இருக்கின்றது. இவைகளனைத்தும் தொழிலாளர்கள் தான்  பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் நிலையிலும் , தயாரிப்பிலும்  ஈடுபடுகிறார்கள். அவ்வாறு  இருக்கும்போது அவர்களின் மனநிலை மிகவும் நிலையானதாகவும் , ரம்மியமானதாகவும், அமைதியாகவும் தொழிலில் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பதைப் பொறுத்துதான் பொருட்களின் தரம் அமைகின்றது. ஒருவேளை அப்போது அந்த தொழிலாளிக்கு வீட்டுப் பிரச்சனை பற்றிய சிந்தனையோ, நிறுவனம் ஒரு ஊழியரை திட்டியதை பற்றிய சிந்தனையோ, சக ஊழியரின் தண்டனை பற்றிய சிந்தனையோ இருந்தால் அவரின்  கவனம் சிதறி அவர் செய்யும் வேலையில் கவனம்  குறைந்து, தரம் தாழ்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அதன் பலனாக நிறுவனம் குறைந்தளவு உற்பத்தி செய்ய நேரிடுகின்றது.போகப்போக கடைசியில் வியாபாரம் மூடும் நிலை நிறுவனத்திற்கு வருகின்றது. இதை மட்டும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நிறுவனத் தலைவரோ அல்லது முதலாளியோ தொழிலாளிகளுடன் அனுசரணையாக நடந்துகொண்டால் ஐ.எஸ்.ஒ 9001:2008 உலக தரச்சான்று வாங்குவது மிகவும் எளிது. 

முதலாளி -தொழிலாளி கூட்டுறவு ஓங்குக !


தரமிக்க பொருட்களை உற்பத்தி செய்க !


வாடிக்கையாளர்களை கவர்வதைப் பெருக்குக !


நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்க !

உங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்க! 
வாழ்க தொழிலாளர்கள் ! வாழ்க நிறுவனம் !

                                              

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

      
   
           

No comments:

Post a comment