Pages

Saturday, 13 December 2014

பாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் ! TIME MANAGEMENT !

தொழில் நிர்வாகத் தொடர் ... தொடர்ச்சி 
பாகம் : 11  நினைப்பது நடக்க நேரமே முக்கியம் !
TIME MANAGEMENT !
நமது அன்றாட வாழ்வில் உண்பது, உழைப்பது, உறங்குவது என்ற இம்மூன்று செயல்கள் முக்கியமானதாகும். பொதுவாக இம்மூன்று செயல்களும் சரியான நேரத்தில் நடக்கவேண்டும் என்று  எல்லோரும் ஆசைபடுகின்றனர். அதாவது இம்மூன்றும் நேரம் தவறி நடக்கும் நாளில் மனதளவில் ஒருவித குழப்பமும், உடலளவில் ஒருவித சோர்வும் ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். இப்படி ஒரு நாள் மட்டும் நடை பெற்றால் பரவாயில்லை,  மறுநாள் ஓரளவு அதை சமாளித்துவிடலாம். ஆனால் தினமும் இதே பிரச்னை தொடர்ந்தால் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்குமா? அல்லது முன்னேற்றம் தான் இருக்குமா? 
ஆக நாம் செய்யும் செயல்கள் எல்லாமே முறைப்படி நடக்க வேண்டும் என்றும் , அப்படி நடந்தால் தான் அந்நாள் நாம் நினைத்தது போல் எல்லாம் நடக்கும் !  என்பது உறுதி. அது வாழ்கையில் மட்டுமல்ல! ஏன் ? சாலையில் நடக்கும் போதும் கூட! நாம் ஏதேனும் ஒரு வண்டியில் பிரயாணிக்கும் போது, ஏதாவது ஒரு சிறிய இடையூறு நேர்ந்துவிட்டால் நமக்கு எவ்வளவு சினம் உண்டாகின்றது? 'யாருமே சரியில்லை' என்று புலம்புவோம் இல்லையா? 

அதுபோலத் தான் ஒரு தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யும்போதும் அல்லது பொருட்களின் சேவை கொடுக்கும் போதும் ஒரே ஒரு செயல் மூலம் நடைபெறுவதில்லை. உதாரணமாக மதுரையிலிருந்து சென்னை செல்ல ஒரே ஒரு தாண்டுதல் மூலம் அடைய முடியுமா? அதற்கு எவ்வளவு செயல்களை மேற் கொள்ள வேண்டும்? வீட்டிலிருந்து பேருந்து அல்லது இரயில் நிலையம் செல்லவேண்டும். சரியான வண்டியின் தேர்வு செய்யவேண்டும். பிறகு சரியான வழியில் ஒவ்வோர் ஊரைக் கடந்த பிறகு தான்  நாம்  செல்ல நினைத்த ஊர் வரும். 


அதுபோலத் தான் பொருட்களின் உற்பத்தியும் பல செயல்களின் மூலம் தான் வாடிக்கையாளர்களிடம் போய்ச் சேருகின்றது. அப்படிப்பட்ட செயல்கள் ஒவ்வொன்றும் போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்திலும் , அதை சிறிதும்  தவறில்லாமல், முறையாக, சிறந்த தரத்துடன் பலவிதங்களில்  வாடிக்கையாளர்களை கவரும்படி இருக்க வேண்டும் . முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை கொடுப்பவர்கள் அவர்களுக்குப் பிடித்தவாறும்,  பொறுமையை கடைபிடித்தும், இனிமையான முறையில் அவர்கள் மனம் கோணாமலும் தனது பொறுப்பை நன்கு உணர்ந்து தரமான சேவைகளைக் கொடுக்கும்போது தான் வியாபாரம் உயரும். லாபமும் அதிகம் கிடைக்கும்.

ஒரு நிறுவனத்தில் வெற்றி தாங்கள் தயாரிக்கும் தரமான பொருட்களில் இருப்பதோடு அதில் பணிபுரியும் திறமையான பணியாளர்களைப் பொருத்தும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் புதுமையான முறையில் வியாபார யுக்தி கொண்டு சந்தைபடுத்தும் திறமையில் தான் இருக்கின்றது. அதாவது நிறுவனத்தின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையில் அவர்கள் தத்தம் வேலைகளை பொறுப்பாக செய்திடல் வேண்டும்.
ஒரே மாதிரித் தொழிலாக இருந்தாலும் அதை பலவித வழிமுறைகளில் செய்து வருகிறார்கள். உதாரணமாக ஒரு இடத்திற்குச் செல்வதற்கு ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப மிதிவண்டி, பேருந்து, விமானம், கார் போன்றவற்றில் செல்கின்றனர். அதாவது சிலர் அதிக செலவு செய்து பிரமாண்டமாக வியாபாரம் செய்கின்றனர். பலர் குறைந்த செலவு செய்து மிகச் சாதாரணமாக வியாபாரம் செய்து வருகின்றனர். எப்படி நடத்தினாலும் அவர்களின் உற்பத்திப் பொருட்கள் அல்லது கொடுக்கும் சேவைகள் தரமாகவும், குறித்த நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் படியும் அதே நேரத்தில் விலை மலிவாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்காதவாறும் இருக்கவேண்டும்.


இன்றைய வியாபாரத்தில் சமாளிக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலைகள்: 

1. எந்த விற்பனை எடுத்துக்கொண்டாலும் அதில் அதிக அளவு போட்டிகள் (பெரிய மற்றும் அந்நிய நிறுவனங்கள் உட்பட)

2. கணிக்க முடியாத மூலப்பொருட்களின் விலையேற்றம் 

3. அவ்வப்போது மாறிவரும் ஏற்றுமதிக்கான தர நிபந்தனைகள் 

4. வாடிக்கையாளர்களின் அதிக தர எதிர்பார்ப்பும், புதுவரவும் 

5. பலவித இன்னலுக்கிடையில் குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்புதல் 

6. விலைகளின் ஏற்றத்திற்கேற்ப நிதி நிலைமை  


உலகத்தில் எந்த நாடும் , எந்த தொழிலையும் அல்லது சேவையினையும் சிறந்த தரத்துடன் முறையான வழியில் நடைமுறை பின்பற்றத் தான் ISO 9001:2008 என்கிற சர்வதேச தர நிர்ணய அமைப்பு இருக்கின்றது. அவற்றில் கூறியிருப்பது யாதென்று அடுத்த பாகத்தில் பார்ப்போம். 


**********************************************************************************************************************************No comments:

Post a Comment