30/08/2026 மாமதுரைக் கவிஞர் பேரவை
சிந்தனைக் கவியரங்கம் 49
தலைப்பு : எங்கும்தமிழ் எதிலும் தமிழ் என்றாகவேண்டும் !
மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சி . சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத் தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர். ஆதிசிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம்,நன்றி கூறினார்.
கவிஞர்கள் இரா.இரவி, இரா.கல்யாணசுந்தரம், இரா.வரதராஜன், , கி.கோ.குறளடியான், சுந்தரம்பாண்டி, பால் பேரின்பநாதன், முனியாண்டி, அஞ்சூர்யா செயராமன், மு, இதயத்துல்லா, சோ.தமிழன்பன், பா.பழனி,க .கலையரசன் , கவிதாயினிகள் , லிங்கம்மாள், போ .சத்யா ,முனிவர் ந .வாசுகி ஆகியோர் கவிதை படித்தனர்.
கவிஞர்கள் க .கலையரசன் ,பா .பழனி இருவரும் இணைந்து எழுதிய "ஆவணத் தமிழ் மொழி " நூல் வெளியிட்டனர். நூலாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து 'கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் விருது' வழங்கினர். சிறப்பாக கவிதை பாடிய தமிழன்பன், இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டன.
மாதாமாதம் கவியரங்கம் நடத்துவதற்கு பள்ளியைத் தந்து உதவும் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் அனைவரும் நன்றி கூறினார்கள்.
புகைப்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கைவண்ணம்.
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
கவிஞர் இரா. இரவி.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்ற நிலை வந்தாக வேண்டும்!
ஆரம்பக் கல்வி தமிழில் வேண்டும்
ஆலயத்தில் தமிழே ஒலிக்க வேண்டும்!
நீதிமன்றத்திலும் தமிழில் வாதாட வேண்டும்
நாட்டில் நடைமுறையில் தமிழே வேண்டும்!
தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை வேண்டும்
தமிழை தமிழாகவே பேசிட வேண்டும்!
தமிழ் படித்தோருக்கு முன்னுரிமை வேண்டும்
தமிழர்கள் யாவரும் ஓரணியாகிட வேண்டும்!
தமிழில் இலக்கியங்கள் பெருகிட வேண்டும்
தமிழில் பிறமொழிபெயர்ப்பு வந்திட வேண்டும்!
உலகின் முதன்மொழிக்கு உரிய இடம் வேண்டும்
உலக முழுவதும் தமிழ் பரவிட வேண்டும்!
இந்திய ஆட்சிமொழிகளில் தமிழும் வேண்டும்
இந்தியாவில் தமிழ் மதிக்கப்பட வேண்டும்!
ஊடகங்களின் தமிழ்க்கொலை நிறுத்திட வேண்டும்
ஊடகங்களில் நல்ல தமிழ் பேசிட வேண்டும்!
உலகப் பொதுமறையை தேசிய நூலாக்கிட வேண்டும்
உலகம் போற்றும் திருக்குறளை மதித்திட வேண்டும்!
இந்தியா முழுவதும் தமிழ் கற்பிக்க வேண்டும்
இந்தியை விட குறைந்ததல்ல தமிழ் உணர்ந்திட வேண்டும்!
வழக்கொழிந்த மொழிகளை விட்டுவிட வேண்டும்
வண்டமிழை என்றும் கொண்டாட வேண்டும்.
*********
*எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!*
எங்கும்தமிழ் முழங்குக! எதிலும்தமிழ் விளங்குக!
இங்குத் தமிழன்றி இனியதோர் மொழியேது?
தொன்மையின் ஆழ்கடல்! தூய்மையின் தேனூற்று!
தோன்றிய காலம் தொலைந்தும் தொலையாதே!
மண்ணின் மணம்போல் மக்களின் நெஞ்சில்
மரபின் உயிராய் மணக்கின்ற செந்தமிழே!
விண்ணின் விரிவையும் விளக்கும் விழித்தமிழே!
விண்மீன் பாதையும் விரித்துரைக்கும் வித்தகமே!
இலக்கணத் தாயாய் எழுந்த நம்தமிழே!
எழுத்தும் சொல்பொருளும் இசையும் செப்பியவளே!
அறிவியல் ஆழத்தை அளந்திடும் அறிவே!
அண்டத்தின் புதிரையும் ஆராயும் ஆன்மீகமே!
வானியல் வாசலைத் திறந்திடும் சாவியே!
விண்ணியல் விந்தையை விளக்கும் விளக்கே!
கணிதத்தின் நுண்மையும் கைக்கொண்ட மொழியே!
கடலின் ஆழமும் கற்றறிந்த செம்மொழியே!
மருத்துவம், மெய்யியல் கலைகள் அனைத்திலும்
மறையாத ஒளியாய் மணிமுடி சூடியவளே!
உலகத்தின் ஓரமெலாம் ஓங்கிடும் நாள்வரை
உயிருள்ள தமிழரின் உள்ளத்தில் தீயாவாய்!
எங்கும் தமிழே! எதிலும் தமிழே!
என்று சுயமுடிவு இமயமாய் ஓங்கட்டும்!
தமிழ்ப்பற்று பேச்சன்று வாழ்வென நிரூபிப்போம்!
தாய்த்தமிழ் வெல்க! தனித்தமிழ் வெல்கவே!
___________________
மதிப்புறு முனைவர்
ந.சுந்தரம் பாண்டி
*****
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்றாக வேண்டும்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
வேழமும் ஆலமரமுமாய் நிமிர்ந்த தமிழ்
வாழையடி வாழையாய் வளர்ந்த தமிழ்
ஏற்றங்களும் இறக்கமும் சந்தித்தத் தமிழ்
எங்கும் எக்காலமும் நிலைக்கும் தமிழ்
விண்ணில் ஒலிகளாய்த் தவழும் தமிழ்
மண்ணில் முத்தமிழாய் நடமாடும் தமிழ்
தமிழனுக்கு அடையாளமாய் நிற்கும் தமிழ்
தரத்தில் செம்மொழியாய் விளங்கும் தமிழ்
அந்நிய நாடுகளிலும் நிலைத்துள்ள தமிழ்
ஆட்சிமொழி அலுவல் மொழியாய் உள்ளது
இதனை ஏனோ அறிந்திராத தமிழர்கள்
ஆங்கில மோகத்திலிருந்து எப்போது விடுதலையோ?
வாழ்க தமிழென்றால் தமிழ் வாழ்ந்து விடாது
வெல்க தமிழென்றால் தமிழ் வென்றுவிடாது
பேச்சளவில் தூய்மையானத் தமிழ் வேண்டும்
எழுத்தளவில் செம்மையானத் தமிழ் வேண்டும்
தமிழர்களுக்குப் பன்மொழிப் புலமை வேண்டும்
தொழில்நுட்பத் தமிழைப் படைத்திட வேண்டும்
மருத்துவத்தில் தமிழை கற்றிட வேண்டும்
அறிவியல் பாடங்கள் நற்றமிழில் வேண்டும்
*********
எனது கவிதைக்கு AI Review
*****************************
********************






























































No comments:
Post a Comment