Pages

Tuesday 1 August 2023

தொழில் நிர்வாகத் தொடர் - EXPLANATION ABOUT QUALITY- தரம் பற்றிய விளக்கம் - தரம் பற்றிய பல தத்துவங்கள்

தொழில் நிர்வாகத் தொடர் 

தரம் பற்றிய விளக்கம் 



இந்தத் தொடரானது,  சேவை மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்களில் நடைபெறும் நிர்வாகங்களை எவ்வாறு திறம்பட செய்யலாம் என்பதையும், அவர்கள் மேற்கொண்டிருக்கும்  சேவை அல்லது தொழிலை எவ்வகையில் மேம்படுத்தி, அதனை எப்படி வளர்ச்சி பாதையில் செலுத்தி எங்கணம் பல  தரப்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்று மக்கள் மனதில்  தனியாக ஒரு இடத்தைப் பிடிக்கலாம் என்பதை பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு  கோணத்தில்  இதுவரை  யாருமே வெளியிடாத அறிய பெரிய கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

சேவை மற்றும் தொழில்  செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இத்தொடர் ஒரு காணக்கிடைக்காத ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பொதுவாக 'தரம் என்பது பொருட்களில் மட்டும் தான் பார்க்கக் கூடிய ஒன்று' என்று  இதுநாள் வரையில் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சேவையிலும் தரம் கண்டிப்பாக இருக்கவேண்டிய அவசியம்  இப்போது உங்களுக்குத் தெரிய வரும். அதையேத்தான் பல்வேறு சேவைகளைப் பெற விரும்பும்  வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். உதாரணமாக வீட்டிற்கு , தொழிற்ச் சாலைக்கு உபயோகப்படும் பல்வேறு சாமான்களின் கோளாறை சரி செய்வதாக இருக்கட்டும். அதை தரமாக செய்து தர வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதேபோல் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஆஸ்பத்திரி, போக்குவரவு, தனியார் மற்றும் அரசு சார்ந்த சேவை நிறுவனங்கள் இது போன்ற அனைத்துத் துறையிலும் வாடிக்கையாளர் தங்களுக்குத் தரமான  , திருப்தியான சேவை இருக்கவேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றனர். 

தரம் பற்றிய பல தத்துவங்கள் 

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

1. தரம் என்பது செயல் அல்ல. அது பழக்கத்தில் வருவது 
2. தரம் என்னும் ஓட்டப் பந்தயத்தில் முடிவு எனபதே கிடையாது.
3. தரம் இல்லாத பொருட்கள் குப்பையில் 
4. தரம் இல்லாத பொருட்களின் உற்பத்தி, நஷ்டத்தில் முடியும்
5. தரம் என்பது தரமான செயல் தான். அது அளவைச் சார்ந்தது அல்ல
6. தரமான ஒரு பொருள் என்பது மறைமுகமாக நாம் எதிர்பார்ப்பை விட எல்லவிதத்தில் நல்ல குணங்களைக் கொண்டுள்ளதாகும் 
7. தரம் என்பது எளிதில் வந்துவிடாது. அது பெரும்பாலும் நேர்த்தியான, சிறப்பான முறையில் செய்வதாகும்
8. தரம் எனபது 'விபத்து' அல்ல. அது விடாமுயற்சி, அறிவு மற்றும் திறமைகளின் கலவையாகும்
9. தரமான பொருட்கள் நீண்ட நாட்கள் உழைக்கும்போது அது வாங்கிய ஆண்டு மற்றும் அதன் விலையை மறக்கச் செய்கிறது
10. தரத்துடன் பொருட்களைக் கொடுக்கும்போது வாடிக்கையாளர்கள் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்   

தரமும் , வாடிக்கையாளர்களின் திருப்தியும் 

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது அவ்வளவு எளிதாக முடிகின்ற காரியம் கிடையாது. ஆகையால் பலருக்கு சில அடிப்படையான கேள்விகள் மனதில் எழும். அதாவது தரம் எப்போது உயரும்? தரம் உயர்த்துவதன் அவசியம் என்ன? இந்த இரண்டு கேள்விக்கான பதிலை நீங்கள் அவசியம் தெரிந்து கொண்டே தீரவேண்டும். முதலாவது கேள்விக்கு பதில் இதோ. எங்கு அறிவு, அக்கறை, ஆற்றல், திறமை மற்றும் விடாமுயற்சி இருக்கின்றதோ அங்கு தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது இவைகளெல்லாம் கட்டிடம் என்கிற வாடிக்கையாளர்களைத் தாங்கிப் பிடிக்கும் தூணாகவும், பலமான அடித்தளமுமாகும். 

இரண்டாவது கேள்விக்கு பதில் ! அது ஒரு சிறிய சூத்திரம். அதாவது தரமும், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பும் நேர்விகிதத்தில் இருக்கின்றது. தரம் அதிகமாக அதிகமாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகிறது. அதேபோல வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள்   கூடக்கூட தரமும் தானாக உயருகின்றது. ஆனால்  வாடிக்கையாளர்கள் விரும்பும் தரம் அடைவதற்கு நாம் கட்டாயமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகின்றது. அப்போது தான் வியாபாரம் பெருகும். எதிர்பார்க்கும் லாபமும் கிடைக்கும்.

முன்பு நிலத்தில் வேகமாய் ஓடிய மனிதன் வானத்தில் பறக்க ஆசைபட்டான். வானத்தில் பறந்த பிறகு  நிலவைத் தொட நினைத்தான். நிலவைத் தொட்டவன் பல்வேறு கிரகங்களுக்கு சென்றான். நாளை நட்சத்திரத்திற்கும் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே சொல்லலாம். தரம் உயர்வினால் 'மனிதனால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை' என்ற சொல்லை உண்மையென நிரூபித்து வருகின்றார்கள்.  இதேபோல் நமக்குத் தெரிந்து பெரிதாக இருந்த கணினியின் உருவம் நாளடைவில் டேபிள் - டாப், லேப்-டாப் , பாம்-டாப் என்று உருமாறி உருமாறி இப்போது கைக்கு அடக்கமாய் சிறிய அளவில் கைபேசி என்ற பெயருடன் அனைத்துவிதமான வசதிகளுடன்  புதிது புதிதாக வெளிவந்து அதன் செயல்பாடுகள் நம்மை தினந்தோறும் பிரம்மிக்க வைக்கின்றது.

தரம் பற்றிய  விழிப்புணர்வும் அதை அடையும் வழிமுறைகளும் ஒரே நாளில் வந்துவிடவில்லை. ஒரு நூற்றாண்டு மேலாகவே தரம் பற்றிய பல்வேறு சிந்தனைகள், கருத்துக்கள், தொடர் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிகள் மற்றும்   அதன்   கட்டுரைகள், தரம் பற்றிய பல்வேறு ஆய்வுகளைப் பற்றிய விளக்கங்களும் முடிவுகளும், பலநாட்டு வல்லுனர்களின் கருத்துக்களின் பகிர்வுகள், நேரில் அல்லது கூட்டங்களின் மூலமும்,    இணையதளத்தில் மூலமும்  நடக்கும் பல்வகையான பரிமாற்றங்கள்  போன்றவைகள் தரம் உயர்வதற்கு முக்கியமான காரணங்களாகும்.

தரமான மனிதர்கள் 

தரமுள்ள மனிதர்களால் தான் தரமான வேலைகளையும், தரமான சேவைகளையும், தரமான பொருட்களை உற்பத்திச் செய்து தரமுடியும். இன்றுள்ள காலகட்டத்தில் தரம் எப்போது மிகுந்த கவனத்தில் கொள்ளபடுகிறதென்றால்  புதிய ஒரு பொருளை வடிவமைத்து தயாரிக்கும் போதும், மிகப்பெரிய அளவில் புதிய ரக கட்டுமானங்கள் , வாகனங்கள், விமானங்கள், போர்கருவிகள், விண்வெளி ஆய்வுக்கருவிகள், தொழிற்சாலைகள் நிறுவும்போதும் தான்.

மேலும் ஒன்றை நாம் நன்றாக மனதில் கொள்ளவேண்டும். வேலையும் அதன் தரமும் இணைந்து செயல்படுவது தான் புத்திசாலித் தனம். அதாவது நமது பொருட்களை நல்ல தரத்தோடு தரவேண்டுமென்று வீணாக நாட்களை கடத்திக்கொண்டிருந்தால் வேலையைத் தொடங்குவது தாமதமாகும். அதேசமயத்தில் குறிப்பிட்ட நாட்களில் அந்த வேலையை முடிப்பதும் சிரமமாகும். தாமதம் ஆக ஆக மூலப்பொருட்களின் விலையேற்றம், உற்பத்திக்கான செலவுகள் அதிகமாகி கடைசியில் அந்தத் தொழிலை தொடர  முடியாமல் போகலாம் அல்லது பாதியில் விட்டுவிடவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். ஆகவே தரமான சேவை மற்றும் தொழில் வெற்றி பெற திட்டம் - செயல் - ஆய்வு -  உற்பத்தி - வெற்றி என்று செயல்கள் சீராக நடைபெறுவதை  ஒவ்வொரு நிலையிலும் உறுதி செய்யவேண்டும். ஆனால் ஒரே நேரத்தில் அனைத்துவிதமான வசதிகள் செய்து தருவது மிகக் கடினம். படிப்படியாகத் தான் வசதிகள் செய்துதர முடியும் என்பதை வேலை செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர்  'பெட்ரோல் பங்க்' ஒன்றைத் திறந்தார். அங்கு சென்று பார்த்தபோது அங்கே சிறிய கட்டடம் கூட இல்லாமல் வெறும் கட்டாந்தரையாக காட்சியளித்தது.  முதலாளியும் என் நண்பனுமானவர் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார். ஒரே ஒரு காசாளர் தனக்கு வெயில் தாக்கம் இல்லாமல்  இருப்பதற்காக பெரிய குடை ஒன்றை நட்டு அதற்குக் கீழ் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பெட்ரோல், டீசல் போடுவதற்கு தனித்தனியாக தானியங்கி அமைப்பு இருந்தன. இரண்டையும் அவரே தான் கவனித்துக் கொண்டிருந்தார். புதிதாக ஆரம்பித்திருந்ததால் குறைவான அளவே வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர். அவர் இருந்த அந்த நிலைமை பார்த்தபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மனசு தாங்காமல் ," ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்? கட்டமைப்புகள் எல்லாமே முடிந்த பின்னே வியாபாரத்தை தொடங்கியிருக்கலாமே?" என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே இதற்கான பதிலை இப்போது கூறினால் உனக்கு புரியாது! இரண்டு மாதங்கள் கழித்து நான் சொல்கிறேன்" என்று சொன்னார்.

பிறகு ஒருவாரம் கழித்து மீண்டும் அங்கு செல்லவேண்டிய வேலை இருந்தது. அப்படியே அந்த 'பெட்ரோல் பங்க்' கட்டுமான வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்று அறிய ஆவலுடன் அங்கு சென்றேன். அங்கு சிலர் வேலி அமைக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தனர். சிலர் கட்டடம் கட்டிக்கொண்டிருன்தனர். சிலர் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். அந்த வெயிலில் வியாபாரமும் நடந்துகொண்டிருந்தது. அதன் பின் நான் அங்கு செல்லவில்லை.

சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அங்கு நான் கண்ட காட்சி என்னால் நம்பவே முடியவில்லை. அதாவது கண்ணைக்கவரும் கட்டிடம். அழகான பலவண்ணத்தில் கூரை. கண்ணைப் பறிக்கும் தளம். பட்சைப்பசேலென புல்தரைகள், பூச்செடிகள் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் மிகச் சரியாக இருந்தன. பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதோடு பெட்ரோல் மற்றும் டீசலின் தரம் பற்றிய விளக்கங்கள். இவைகளெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த என்னை அங்கிருந்த குளுகுளு அறைக்கு அழைத்துச் சென்றார். இப்போது அந்த இரண்டு மாதங்கள் கழித்து வரச் சொன்னதன் ரகசியத்தைச் சொன்னார்.

அவர் சொல்ல சொல்ல எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. அதாவது " நீ அப்போது வந்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதாவது நான் முதலில் வியாபாரம் தொடங்கியதோடு அப்படியே கட்டுமான பணிகளும் கவனித்ததால் தான் இவ்வளவு வேகமாக முடிந்தது. அதோடு என்னுடைய இந்த முன்னேற்றங்களைப்  பார்த்த வாடிக்கையாளர்கள் மிகவும் சந்தோசப்படுகிறார்கள். எல்லாமே கட்டி முடிந்த பின்னே வியாபாரம் தொடங்கலாம் என்றிருந்தால் கட்டாயம் இன்னும் ஆறு மாதங்களாகியிருக்கும். அப்போது வியாபாரம் ஏதுமில்லாமல் வெறும் செலவு தான் மிஞ்சியிருக்கும். எல்லா வசதியும் முதலில் கிடைத்துவிட்டால் உடம்பு வளையாது. கஷ்டத்தை ஏற்காது. ஆனால் எனக்கு கஷ்டத்தின் அருமை தெரியும். இப்போது அனுபவிக்கும் சுகம் எப்படி கிடைத்தது என்றும் தெரியும்" என்று பதிலளித்தார். அவரின் இந்த பதில் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன். 

தரமும் வளர்ச்சியும் 

தரம் எங்கு இருக்கின்றதோ அங்கு வளர்ச்சியும் இருக்கும். உதாரணமாக இருசக்கர வாகனம் முன்பு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாற்பது கிலோமீட்டர் கொடுப்பதே பெரிது என்றிருந்தது. ஆனால் தொடர்ந்து பல நாடுகள் அதன் வடிவமைப்பிலும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் மேற்கொண்டதன் பலனாக இன்று எழுபது, என்பது , தொண்ணூறு என்று அதன் ஆற்றல் கூடிக்கொண்டே போகின்றது. இதேபோல் மருத்துவத் துறையில் அபரிதமான சாதனை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எக்ஸ் - ரே , 3டி ஸ்கேன், நானோ தொழில் நுட்பம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 

தரம் என்பது கவர்ச்சியில் மட்டுமில்லை. குணத்திலும் மற்றுமுள்ள சிலவற்றையும் நாம் கவனிக்கவேண்டும். உதாரணமாக ஒரு பொருளின் எடை அளவு குறைந்தாலும் அது தரம் குறைவு தான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?குறிப்பாக உணவு, இரசாயணம் மற்றும் மருந்துப் பொருட்களின் தரம் மிக முக்கியமானது. ஒவ்வொரு பொருட்களின் தர உத்திரவாதத்திற்கு சில அமைப்புகள் சான்றிதழ் கொடுக்கின்றனர். அதில்  ஐ.எஸ்.ஐ, எப்.பி. ஒ, சி.ஈ, ஹால் மார்க் போன்றவைகள் நமக்கு பரீட்சயமானவைகள். ஒரு பொருளின் தரம் நாட்டிற்கு நாடு வேறுபாடும் எனபதை கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக ஏற்றுமதி செய்யும்போது அந்த நாட்டின் தரத்தை நன்றாக தெரிந்து கொண்டு பின்னர் தான் பொருட்களை உற்பத்தி / தயாரித்து அனுப்பவேண்டும். உள்நாட்டில் வழங்குவது  போல் வழங்கிவிட முடியாது. ஏனென்றால் அந்நாட்டவர்கள் நாம் அனுப்பும் பொருட்கள் 'தரம் குறைவாக இருக்கின்றது' என்று தெரியவந்தால் அதற்கு அவர்கள் மிகப் பெரிய அளவில் 'தண்டத் தொகை' கொடுக்க வேண்டியிருக்கும்.  மேலும் அப்பொருட்கள் அனுப்பிய செலவும், திரும்பப்  பெறும் செலவும் நம் தலையில் தான் விழும். கிடைக்கின்ற கொஞ்சநஞ்ச லாபமும் இல்லாமல் போக நேரிடும். ஆக தரம் பொருளுக்கு  மிக முக்கியம்.

எவை தரமான பொருட்கள் ?

பொதுவாக தரமான பொருள் வாங்கும்போது நாம் முதலில் பார்க்க வேண்டியது 'காலாவதி' யாகும் தேதி. பிறகு அதில் கலந்துள்ள மூலப்பொருட்களின் சதவீதங்கள், பிறகு எப்படி உபயோகிப்பது, உபயோகித்த பின்பு அந்த பேக்கிங் என்ன செய்யவேண்டும்? ஏதேனும் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமா? போன்ற குறிப்புகள் பொதுவாய்த் தெரிந்த மொழியில் இருக்கின்றனவா? என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு கைபேசி வாங்கும்போது அதனுடன் எல்லா விவரமும் அடங்கிய ஒரு சிறிய கையேடு வழங்குவதை நாம்  பார்த்திருக்கிறோம். 

சில பொருட்கள் காலாவதி தேதிக்குள் இருக்கும். ஆனாலும்  முறையாக பராமரிக்கப் படவேண்டிய அவசியம் இருக்கின்றது. அதேபோல் பக்குவமாக வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக எரிவாயு உருளை மாற்றும்போதும், உபயோகிக்கும்போதும் கவனம் தேவை. இல்லாவிடில் பெரிய 'தீ விபத்து' ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதுபோல் சிமெண்ட் மூட்டைகள் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவேண்டும், இல்லையேல் 'கல்' போன்று கட்டியாகி உபயோகமில்லாமல் போய்விடும். எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உபயோகபடுத்தும் போது மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாக நேரிடும்.  காய்கறிகள், திண்பண்டங்கள் போன்றவைகள் பக்குவமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பூஞ்சாணம் பிடித்து உபயோகமில்லாமல் போய்விடும்.

பொருட்களை அடைத்து பேக்கிங் செய்து விற்கும் எல்லாப்பொருட்களும் தரம் உயர்ந்தது என்று சொல்லமுடியாது. அதேபோல் வெளியில் வைத்து விற்கும் எல்லாப் பொருட்களும் தரம் குறைந்தது என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. அதாவது தரமான மனிதனை அடையாளம் காண்பதற்கு எவ்வளவு சிரமமோ அவ்வளவு சிரமம் தரமான பொருட்களை அடையாளம் காண்பது. இன்னும் உடைத்துச் சொல்லப் போனால் அசலை விட போலிகள் தான் வெகுகவர்ச்சியாக இருக்கின்றது. இதை நாம் என்னவென்று சொல்ல?

நெற்றியில் பட்டை, கையில் உத்திராட்ச கொட்டை, சுத்தமான காவி உடை, முகத்தில் சிரிப்பு என்று பக்தி பழமுடன் இருப்பவரை நாம் 'நல்லவர்' என்று சொல்லிவிட முடியுமா? உங்களுக்கெல்லாம் சமீபத்தில் நடந்த ஒரு இளம் சாமியாரின் லீலைகள் நன்றாய் ஞாபகம் இருக்கும். அதை சின்னத்திரையில் ஒளிபரப்பியபோது  பலர் பலவிதமாய் என்னமாய் விமர்சித்தார்கள். கடைசியில் அவரின் முகவரி இல்லாமலே ஆக்கிவிட்டார்கள் . அவரைப் போல் தினமும் சில சாமியார்களின் லீலைகள், அதோடு சில போலி நிதிநிறுவனங்களின் ஏமாற்று வேலைகள்,  சில கல்வி நிறுவங்களின் அடாவடிச் செயல்கள் என்று தரமின்மைக்கு எடுத்துக்காட்டுகள் பல சொல்லிக் கொண்டு போகலாம்.

அதற்கு நேர் எதிராக பொன்னும், பொருளும் வாங்காமல் அடக்கமாய் இருக்கும் பரதேசியை யாரும் நம்பமாட்டார்கள். அதேபோல் பல ஆண்டுகளாக எவ்வித விளம்பரமும், ஆடம்பரமும், பகட்டும் இல்லாத சில பெரிய / சிறிய நிறுவனங்களை மக்கள் நம்பாமல் இருப்பதன் காரணம் ஏனென்று இன்றுவரைத் தெரியவில்லை. இப்படி மனிதர்களில் முரண்பாடு உள்ளது போல் பொருட்களின் தரத்திலும் முரண்பாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.

தரம் பற்றிய விழிப்புணர்வு 

ஆரம்பத்தில் பொருட்களை உற்பத்தி செய்த பல நிறுவனங்கள், தொழிற்ச் சாலைகள் தரத்திற்கு மிகக் குறைவாகவே முக்கியத்துவம் தந்தனர். அவர்களின் நோக்கம் அன்றைய உற்பத்தி இலக்கை அடைவது தான் என்றிருந்தது. ஏனெனில் அப்போது பொருட்கள் கிடைப்பதே அரிது. ஏதோ கிடைத்தால் போதும் என்று வாங்கிக்கொண்டு இருந்தனர். நாளடைவில் பொருட்களின் தரம் திருப்தியில்லாமல் இருந்ததாலும், அதை உபயோகத்திற்கு ஏற்றபடி இல்லாமையாலும் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகமாக புகார்கள் வர ஆரம்பித்ததன் காரணமாக உற்பத்தி செய்த பொருட்கள் விற்க முடியாமல் மலைபோல் குவிய ஆரம்பித்தன. ஆகையால் அந்த சமயம் உற்பத்தியாளர்கள்  இழப்பிற்கு மேல் இழப்பிற்கு ஆளானார்கள். பலர் தொழிலை விட்டு விலகியும் சென்றார்கள். அதன் பின்னர் தான் தரத்தினை பற்றிய ஆய்வுகள், அடைவதற்கான பயிற்சிகள், வழிமுறைகள் என்று உலகளவில் விழிப்புணர்வு ஏற்படத் துவங்கியது. முக்கியமாக உலகப்போருக்குப் பிறகு முதன்முதலில் இராணுவத்தில் தான்  தரம் பற்றிய கொள்கை வகுக்கப்பட்டு  அதுவே மற்ற பொருட்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டது.

சிறந்த தரத்தை அடைவதற்கு பல எளிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதற்கும் ஒருபடி மேலாக சிறந்த தரமான பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு உயரிய விருதுகள் கொடுத்தும் கௌரவிக்கப்பட்டன. முக்கியமாக ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளில் தரம் பற்றிய புரட்சி ஏற்பட்டன. அதுவே இப்போது ஐ.எஸ்.ஒ 9001 வடிவில் உலகளவில் பரவத் தொடங்கியது. அடுத்த தொடரில் தரம் கடந்து வந்த பாதையும், தரம் சரியாக பராமரிக்கப்படாததால் சில நிறுவனங்கள் எவ்வளவு பெரிய இழப்புகள் சந்தித்தன என்பதையும் பார்ப்போம்..    

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$                            























                                                              

No comments:

Post a Comment