Thursday, 21 March 2013

மனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END

மனிதனின் முடிவு திரைப்படம் போல் 
சுபமாக இருக்க-
WHY END OF THE LIFE IS NOT LIKE FILM'S END 


தன்னம்பிக்கை கட்டுரை 

பொதுவாக எல்லோருக்கும் திரைப்படம் பார்ப்பது என்றால் மிகவும் பிடித்தமானது ஒன்றாகும். ஒரு சிலர் குறிப்பிட்ட திரைப்படத்தை அல்லது திரைப்படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். அதே போல் சில திரைப்படங்கள் நீண்ட நாட்கள் அமோகமாக ஓடுகிறது. அது எதனால்  என்று பார்த்தோமானால் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் நகைச்சுவை கலந்தும், கள்ளம், கபடமில்லாமல் இருப்பார்கள் அல்லது மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படியாக இருப்பார்கள் . அதாவது ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலுமே அதில் வரும் கதாநாயகன் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி கடைசியில் அனைவருக்கும் திருப்திபடும் வகையில் நல்ல முடிவு கட்டாயம் கொடுத்திருப்பார்கள். அதைத் தான் எல்லோரும் எதிர்பார்த்துச் செல்கின்றனர். இது திரைப்படம்.

ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு மனிதனின் முடிவும் திருப்தியாக , சுபமாக முடிகின்றதா? எத்தனை கஷ்டங்கள், நஷ்டங்கள்? ஏன் எதற்காக மனிதனின் முடிவு வெற்றிகரமாக இருப்பதில்லை? அனைத்திற்கும் காரணம் சுயநலம், நம்பிக்கையின்மை, பொறாமை, நான் என்கிற அகம்பாவம், விட்டுக்கொடுக்கும் மனப்பன்மையின்மை, உறவுகளை பெரிதாக மதிக்காமை, பேராசை, இன்னும் அடுக்கின்கொண்டே போகலாம். 

இவைகளெல்லாம் இல்லாமல் திரைப்படத்தில் வருவதுபோல் மனிதனின் முடிவின் போது எல்லாப் பிரச்சனைகளும் நன்றாக தீர்த்துவிட்டு சுபமாக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதில் கதாநாயன் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ப்பது போல் நீங்களும் ஏன் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கதாநாயகனாக மாறக்கூடாது. அனைத்துப் பிரச்சனைகளையும் ஏன் தீர்க்கக் கூடாது?

உங்களாலும் சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அதற்குத் தேவை சிறிதளவு தன்னம்பிக்கை, சிறிதளவு முயற்சி, சிறிதளவு தியாகம். ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியை விட்டுச் செல்லும்போது தன்னுடைய பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருந்தால் அதுவே புண்ணியமான காரியமாகும். சொர்கத்திற்கு செல்லும் பாதையும் கூட.

அன்றாட வாழ்விலும் சரி, ஆட்சியிலும் சரி அவர்கள் விட்டு இறங்கும்போது தலை முங்கும் அளவிற்க்கு பிரச்சனைகளை வைத்துச் செல்வதைத் தான் பார்க்கிறோம். ஆட்சியே அப்படியிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு மனிதனின் முடிவும் நன்றாக இருக்குமா? இதற்குக் காரணம் மிதமிஞ்சிய மாற்றங்கள். அனைத்தும் குறுகிய காலத்தில் நிகழ்கின்றமையால் எல்லோராலும் அதை உடனே பின்பற்ற முடியாத நிலைமை. உற்பத்தியை கண்மூடித்தனமாக பெருக்கிக்கொண்டே போனால் யார் அதை அனைத்தும் வாங்குவது? வாங்கிவிட்டால் அதை வைப்பதற்கு இடமேது? பெரிய பெரிய கட்டங்கள் கட்டிக்கொண்டு போனால் யார் அதை வாங்கி இருப்பது?  ஒரே நாளில் மனிதனின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் அவ்வளவு பெரிதாக மாறிவிடவாப் போகிறது? 

ஆனால் மீடியாக்கள் அப்படித்தான் காண்பிக்கிறார்கள். அப்படி பெரிதாகப் திட்டங்கள் போட்ட நாடுகள் அனைத்தும் இன்று திவாலா ஆகி மற்ற நாட்டினிடத்தில் கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டி யிருக்கிறார்கள். நாடுகள் மட்டுமல்ல. பல முக்கிய தொழில் நிறுவனங்களும் கூட. மாற்றங்களைப் புரிந்துகொள்ளு முன்னமே மீண்டும் அடுத்த மாற்றம்? இப்படி இருப்பதனால் எல்லோரையும் மிக எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள். உலகம் முழுவதிலும்  கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பேர்களின் கைகளுக்கு  மாறுகின்றது. அப்படியிருக்கும்போது அது யாருடைய பணம் எப்படி வந்தது என்று யாருக்குத் தெரியும். அத்தனை வேகத்தில் இடம் மாறுகின்றது. உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை?

ஒரே நாளில் கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் !! ??? என்று பல மீடியாக்கள் விளம்பரப் படுத்துகின்றன. ஆனால் அதன் பின்னணியில் எத்தை பேர் ஆண்டியானார்களோ!? அல்லது பணத்தை இழந்தார்களோ? இன்றைய கால கட்டத்தில் தனக்கு அதிக ஆதாயம் இல்லாமல் யாருமே பணத்தை தூக்கித் தரமாட்டார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாமே சரியாகத் தான் தெரியும். ஆனால் மறைவில் நடப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதாவது ஒருவருக்காக பல நூறு பேர்கள் ஏமாறுகிறார்கள் என்பது தான் உண்மை. அதுவும் கற்பனை செய்து பார்க்கமுடியாத வகையில் ஏமாற்றுகிறார்கள். அதோடு பிடிபடாமலும் தப்பித்தும் விடுகிறார்கள். இந்த மாதிரி வாழ்க்கை இருந்தால் எப்படி சுமூகமான முடிவு வரும்?? என்றா கேட்கிறீர்கள்!இப்படியே எல்லோரும் தள்ளிவிட்டால் எப்படி? பகட்டு விளம்பரத்தில் மயங்காமல் முதலில் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை சுபமாக தீர்ப்போம். தன்னம்பிக்கையோடு செய்வோம். திரைப்படம் போல கட்டாயம் திருப்தியான முடிவு ஒவ்வொர்ருடைய வாழ்விலும் நிகழும் என்று நம்புவோம்.


நன்றி
வணக்கம்.    

Tuesday, 19 March 2013

உன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம் - SUCCESS FORMULA TO GET VICTORY

உன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம் -
SUCCESS FORMULA TO GET VICTORY
புதுக்கவிதை
 
மதுரை கங்காதரன் 

கண்ணளவு முயற்சி செய்வது 
மூக்களவு பொறுமையாய் இருப்பது 

வாயளவு பிறரை வாழ்த்துவது 
இமையளவு பிறரிடம் உறவாடுவது 

நாவளவு பிறரிடம் பழகுவது 
தலையளவு அனுசரணையாய் இருப்பது 

கையளவு உழைப்பை மேற்கொள்வது 
நகமளவு சுத்தமாய் இருப்பது 

காலளவு தேடுதலில் இருப்பது 
மனதளவு தன்னைம்பிக்கையோடு இருப்பது 

காதளவு அறிவுரைகளைக் கேட்பது 
நெஞ்சளவு உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது 

செயலளவு மரியாதையாக நடந்துகொள்வது 
கடலளவு அன்பாய்ப் பழகுவது 

அறிவளவு பலவற்றைக் கற்றுக் கொள்வது 
இதயமளவு பிறர்க்கு உதவியாய் இருப்பது 

விரலளவு ஆசைபடுவது 
உடலளவு உண்மையாய் இருப்பது  


நன்றி 
வணக்கம்.  

உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHES TO UPLIFT YOUR LIFE

 உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை 
   
108 WISHES TO UPLIFT YOUR LIFE 

தினம் தினம் காலைபொழுது விடியும்போது கூடவே விடியாத கஷ்டங்கள் பலவும் கண் முன்னால் வந்து பயமுறுத்துவது தான் தினமும் எதிர்கொள்ளும் உண்மை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கையில் தங்குவதோ காயங்களும் , வலிகளும் தான். அத்தகைய சந்தர்ப்பத்தில் யாருடைய உதவியைத் தேடுவது? எவ்வாறு உதவிகளைக் கேட்பது? 

இதோ, உங்களுக்கு  மட்டுமில்லாது அனைவருக்கும் பொதுவான 108 அருள்களை எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் அசையாத நம்பிக்கை தந்து வாழ்வில் தினமும் மகிழ்ச்சியை எப்போதும் அள்ளித்தர மாலையாகத் தொகுத்து கொடுத்துள்ளேன். தங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு அமைதியான நேரத்தில் இந்த அருள்மாலையினை சொல்லிக்கொண்டு வந்தால் நினைத்த காரியம் இனிதே நடக்கும். எதைக்கண்டு பயம் கொள்ளாமல் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். நாளுக்கு நாள் இந்த அருள்மாலையினைச் சொல்ல சொல்ல அதன் பலன் உங்களுக்கு கைமேல் கிடைக்கும். அனைத்தும் சொல்ல முடியாவிட்டாலும் ஏதாவது ஆறு மட்டும் சொன்னாலேப் போதும்.  இப்போதே சொல்ல ஆரம்பியுங்கள்...

   1. இப்பிறவியைக் கடக்க சக்தி தந்தருள்வாய்
   2. இன்றும் உன்னை மறவாத வரம் தந்தருள்வாய்

   3. நல்ல காலைப் பொழுதை தந்தருள்வாய்
   4. நலமிக்க உடலைத் தந்தருள்வாய்

   5. ஞாயிறு போல் பிரகாசம் தந்தருள்வாய்
   6. சந்திரனின் குளிர்ச்சியைத் தந்தருள்வாய்

   7. குடும்பம் செழிக்க மகிழ்வைத் தந்தருள்வாய்
   8. குறைவில்லாத நிறைவுகளைத் தந்தருள்வாய்

   9. கனி கொடுக்கும் காலத்தை தந்தருள்வாய்
 10. கருணை மிக்க தரிசனம் தந்தருள்வாய்

 11. கஷ்டத்தை அகற்றி சுகத்தை தந்தருள்வாய்
 12. கஷ்டமில்லாப் பெருவாழ்வு தந்தருள்வாய்

 13. உன்னை அடைய நற்கதி தந்தருள்வாய்
 14. உயிர்களை இரட்சிக்க வரம் தந்தருள்வாய்

  15. பகை விரட்டும் வீரம் தந்தருள்வாய்
  16. பந்தங்களை காக்க அன்பைத் தந்தருள்வாய்

  17. உழைப்பவர்களுக்கு உயர்வைத் தந்தருள்வாய்
  18. உண்மையாய் இருப்போருக்கு ஆசி தந்தருள்வாய்

  19. வலிமையான இதயத்தை தந்தருள்வாய்
  20. வளமையான எண்ணங்களைத் தந்தருள்வாய்

  21. எதையும் தாங்கும் பொறுமை தந்தருள்வாய்
  22. எல்லோரும் போற்றும் பெருமை தந்தருள்வாய்

  23. சாதிக்கும் தன்னம்பிக்கை தந்தருள்வாய்
  24. சாய்ந்து விடாத முயற்சியைத் தந்தருள்வாய்

  25. இனிமையான உறவுகளத் தந்தருள்வாய்
  26. இணைபிரியாத நட்புகளைத் தந்தருள்வாய்

  27. உலகம் போற்றும் அறிவைத் தந்தருள்வாய்
  28. உலகைக் காக்கும் சக்தியைத் தந்தருள்வாய்

  29. வாழ்கையில் அதிர்ஷ்டம் தந்தருள்வாய்
  30. வருபவனவற்றில்  வெற்றியைத் தந்தருள்வாய்

  31. பொய் களவு கலவாமை தந்தருள்வாய்
  32. பொன்னான வாய்ப்புகளைத் தந்தருள்வாய்

  33. சிந்தனையில் திடம் தந்தருள்வாய்
  34. சிதறாத கவனம் தந்தருள்வாய்

  35. காரியத்தில் நிதானம் தந்தருள்வாய்
  36. காற்றும் மழையும் அளவோடு தந்தருள்வாய்

  37. பயத்தை துரத்தும் உறுதியைத் தந்தருள்வாய்
  38. பயன் தரும் நினைவுகளைத் தந்தருள்வாய்

  39. கேட்கும் வரத்தை தந்தருள்வாய்
  40. கேடு ஒழிக்கும் பலத்தை தந்தருள்வாய்

  41. எதையும் ஏற்கும் பக்குவம் தந்தருள்வாய்
  42. எதையும் கற்கும் அனுபவம் தந்தருள்வாய்

  43. சாகா வரம் தரும் கல்வியைத் தந்தருள்வாய்
  44. சாகும் பின்னும் புகழைத் தந்தருள்வாய்

  45. தேன் கலந்த சொற்களைத் தந்தருள்வாய்
  46. தேடிக்கிடைத்திடாத செல்வங்களை தந்தருள்வாய்

  47. வற்றாத அமுத சுரபியைத் தந்தருள்வாய்
  48. வாரி வழங்கும் குணத்தினை தந்தருள்வாய்

  49. பொருள் ஈட்டும் வழியைத் தந்தருள்வாய்
  50. பொறாமை படாத உள்ளத்தினைத் தந்தருள்வாய்

  51. நோயில்லா நீண்ட ஆயுளைத் தந்தருள்வாய்
  52. நோன்பு கொண்டு தூய உள்ளம் தந்தருள்வாய்

  53. நிறைவேறும் ஆசைகளைத் தந்தருள்வாய்
  54. நிறைவான மனதினைத் தந்தருள்வாய்

  55. பசித்தோர்களுக்கு அமுதினைத் தந்தருள்வாய்
  56. பஞ்சம் தீர்க்க வழியினைத் தந்தருள்வாய்

  57. இழந்த செல்வங்களைத் தந்தருள்வாய்
  58. இருள் நீக்கி ஒளியைத் தந்தருள்வாய்

  59. உயர்வு தாழ்வில்லா சமுதாயம் தந்தருள்வாய்
  60. உயர்ந்தோர்களுக்கு இரக்க குணம் தந்தருள்வாய்

  61. மக்களைக் காக்கும் ஆட்சியைத் தந்தருள்வாய்
  62. மக்களைப் போற்றும் தலைவர்களைத் தந்தருள்வாய்

  63. சுயநலம் அழித்து பொதுநலன் தந்தருள்வாய்
  64. சுரக்கும் இன்பம் கோடி கோடித் தந்தருள்வாய்

  65. லஞ்சம் வாங்காத கைகளைத் தந்தருள்வாய்
  66. லட்சியப் பயணத்தில் வெற்றியைத் தந்தருள்வாய்

  67. காலமும் நேரமும் கைகொடுக்கத் தந்தருள்வாய்
  68. காணும் திசையெங்கும் நீயாக தந்தருள்வாய்

  69. நரகம் வழி அடைத்து சொர்க்கம் தந்தருள்வாய்
  70. நரன் வாழ்வு போக்கி தேவன் வாழ்வு தந்தருள்வாய்

  71. கலைகளைக் கற்கும் திறனைத் தந்தருள்வாய்
  72. கலையாத கல்வியினைத் தந்தருள்வாய்

  73. காண்பவர் கண்படும் அழகினைத் தந்தருள்வாய்
  74. கண்டு வணங்கும் பணிவினைத் தந்தருள்வாய்

  75. மாய வலையில் சிக்காதபடி வரம் தந்தருள்வாய்
  76. மாய வடிவைக் காண அகக்கண்களைத் தந்தருள்வாய்

  77. எந்நாளும் உனைப் போற்றும் நாவினைத் தந்தருள்வாய்
  78. எந்நிலையிலும் மறவாத உள்ளத்தைத் தந்தருள்வாய்

  79. எங்கும் எதிலும் மகிழ்ச்சியைத் தந்தருள்வாய்
  80. எட்டுத் திசைகளில் அமைதியைத் தந்தருள்வாய்

  81. பாசமுடன் வாழ்த்தும் நல்இதயங்களைத் தந்தருள்வாய்
  82. பாவத்தை அழித்து வளமான வாழ்வினைத் தந்தருள்வாய்

  83. பேராசை கொள்ளாத மனதினைத் தந்தருள்வாய்
  84. பேர் சொல்லும் பிள்ளைகளைத் தந்தருள்வாய்

  85. நாட்டுக்குநாடு ஒற்றுமையினைத் தந்தருள்வாய்
  86. நாடு போற்றும் சாதியினைத் தந்தருள்வாய்

  87. பயம் வரும்போது உன்துணை தந்தருள்வாய்
  88. பேய் பிசாசு ஓட்டும் துணிவைத் தந்தருள்வாய்

  89. ஏமாறாமல் விழிப்புணர்வைத் தந்தருள்வாய்
  90. ஏன் என்கிற கேள்விகளுக்கு பதிலைத் தந்தருள்வாய்

  91. ஊசல் இல்லாத நிலையினைத் தந்தருள்வாய்
  92. ஊக்கம் கொடுக்கும் நெஞ்சத்தைத் தந்தருள்வாய்

  93. கொடியவர்களிமிருந்து விடுதலைத் தந்தருள்வாய்
  94. கொடுத்து சிவக்கும் கரங்களைத் தந்தருள்வாய்

  95. மயக்கம் கலக்கம் குழப்பமில்லாமைத் தந்தருள்வாய்
  96. மதி கொண்டு விதியை வெல்லத் தந்தருள்வாய்

  97. தோல்விகளைத் தாங்கும் மனதினைத் தந்தருள்வாய்
  98. தோல்வி காணும்போது ஆறுதல் தந்தருள்வாய்

  99. வேதனைகளை சாதனைகளாக மாற்றித் தந்தருள்வாய்
100. வேர் போன்று உறுதியினைத் தந்தருள்வாய்

101. சோர்வின்போது சத்தான மந்திரம் தந்தருள்வாய்
102. சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பைத் தந்தருள்வாய்

103. எளியோருக்கு அன்பு கருணை தந்தருள்வாய்
104. எண்ணுபவர்களுக்கு உதவிகளைத் தந்தருள்வாய்

105. கடன்படாத செல்வத்தினைத் தந்தருள்வாய்
106. கடல் அலையைப்போல பாசத்தினையைத் தந்தருள்வாய்

107. உன்னை ஆட்கொள்ளும் உரிமையைத் தந்தருள்வாய்
108. உன்னையே சரணாகதி அடைய தந்தருள்வாய்


   

நன்றி 
வணக்கம். 

Thursday, 14 March 2013

கண்களை மூடிக்கொண்டு நம்புகிறீர்களா? தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்' - YOU NEED A SAFETY RING

எதையும் கண்களை மூடிக்கொண்டு நம்புகிறீர்களா? உங்களுக்கு அவசியம் தேவை 
ஒரு 'பாதுகாப்பு வளையம் ' -
 YOU NEED A SAFETY RING
நாட்டு நடப்புகள் 

நீங்கள் ஒரு காரியம்  செய்யும்போது  'அவர் சொல்லிவிட்டாரா ? அப்படியென்றால் அவர் சொன்னபடி அப்படியே செய்து விடுகிறேன் ' என்று எதையும் கண்களை மூடிக்கொண்டு செய்பவரா? ! அப்படியென்றால் உங்களுக்கு அவசியம் தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம் '. அதென்ன பாதுகாப்பு வளையம்? அதாவது தினமும்  மாறாத உங்களது இயல்பான வாழ்கையும், வாழும் விதமும் தான் பாதுகாப்பு வளையம்.!  இந்த வளையத்திற்குள் நிங்கள்  இருந்தால்  பிரச்சனைகள் இல்லாமல் உங்களது வாழ்க்கை நன்றாகவோ, சுமாராகவோ அல்லது கஷ்டப்பட்டோ ஓடிவிடும் . 
    

அதற்குக் காரணம் அதனுள் இருக்கும் வரை உங்களின் இப்போதைய  நிலைமை, உங்களுக்கிருக்கும் ஆதரவுகள்  மற்றும் சூழ்நிலை ஆகியவைகள் நன்றாக தெரியுமாகையால் அதன்படி அனுசரித்து சற்று கூட்டியோ , கழித்தோ வாழ்க்கை ஓட்டிவிடலாம். அந்த வளையத்திற்குள் இருக்கும் வரை உங்கள் வாழ்க்கை ஒரேயடியாய் உயர்ந்தோ அல்லது ஒரேயடியாய் மட்டமாக இருந்துவிடாமல் படிப்படியாய் மெல்ல மெல்ல உங்கள் வாழ்க்கை உயரும். 

        

ஆனால் சிலர் உங்களிடம் பசப்பு வார்த்தைகளைப் பேசி 'பேராசை' காட்டி நான் சொல்வது போல் செய்தால் வீடு வாங்கலாம், நகை , பணம், செல்வம்  எல்லாமே கிடைக்கும்' என்று அந்த பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வரும்படி ஆலோசனை சொல்வார்கள். விதவிதமாக கணித்து  யோசனை செய்து வரிசையாக பத்து வழிகள் சொல்வார்கள். அதில் குருட்டாம்போக்கில் இரண்டு மூன்று பலித்துவிடும். பிறகு என்ன! அவர் தான் எல்லாமே என்று எதை செய்தாலும் அவரின் ஆலோசனை படியே செய்வார்கள். நல்லது மட்டுமல்ல ! கெட்டவைகளும் அதில் அடங்கும்.

            

எத்தனை நாட்களுக்கு அது நடக்கும். புதுப்புது பிரச்சனைகள் வரும்போது அவரின் ஆலோசனைகள் லாபம் தராமல் நஷ்டம் தரும். 'நீங்க சொன்னது போல செய்தேன். ஆனா லட்சம் ரூபாய் நஷ்டம்' என்று பதட்டத்துடன் சொன்னால் 'லட்சம் ரூபாய் தானே! மறுமுறை வட்டியும் முதலுமாய் அஞ்சு லட்சம் கிடைக்கும் பாருங்க' என்று சொல்வார். அதுவும் நஷ்டம் பட்டு 'என்னங்க இப்படி ஆயிடுச்சி !' என்று கவலையோடு சொன்னால் 'கவலைப் படாதீங்க, இந்தமுறை உங்களுக்கு ஜாக்பாட் அல்லது பம்பர் பரிசு தான்' என்று சொல்லி அவர்களை நடுத்தெருவுக்கு விட்டுவிட்டு கிடைத்தவரை லாபம் என்று கிடைப்பதை சுருட்டிக்கொண்டு கம்பியை நீட்டிவிடுவார்கள். இந்த ஆலோசைகள் சும்மாவா சொல்வார்கள். ஆயிரக்கணக்கில் கறந்து அல்லவா சொல்வார்கள். 

    

இதற்குப் பெயர் தான் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருவது என்பதாகும். ஓரிரு தடவைகள் நஷ்டப்படும்போதே சுதாரிக்க வேண்டாமா? அவர் ஒரு போலி ஆசாமி என்று விழித்துக்கொள்ளவேண்டாமா? ஓட்டாண்டி ஆகும் வரை கண்மூடித்தனமாக நம்பி பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்தால் இந்த கதி தான்.

  

ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள்,விளையாட்டு வீரர்கள், நடிக நடிகையர்கள், வியாபாரிகள் போன்றவர்கள் நினைத்தால் தங்களின் பணபலத்தால் அத்தகையோர்களை தேடிக்கண்டு பிடித்து ஆயிரம் என்ன கோடி ரூபாய் கொடுத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டே வரலாம் இல்லையா! அவர்களும் ஏன் தோற்கிறார்கள்? நஷ்டம் அடைகிறார்கள். கடைசியில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிறார்கள். இதற்கு நூறு சதவீதம் காரணம் , அவர்கள் அதிக ஆசைப்பட்டு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வருவதே ! பெரும் வசதி படைத்தவர்கள் ஓரளவு சாமாளித்துவிடுவார்கள். ஆனால் நடுத்தரம் மற்றும் அடித்தட்டு மக்கள் அவ்வாறு பேராசை படும்போது இருப்பதை எல்லாம் இழந்ததோடு கடைசியில் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர்களை அதள பாதாளத்தில் தள்ளும் அபாயம் வருகின்றது. 
                 
ஆகவே எதையும் கண்மூடிக்கொண்டு செய்யும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படியே செய்தாலும் எப்போதும் பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு செய்யுங்கள். அப்படி நீங்கள் நடப்பீர்களேயானால்  உங்களுக்கு வாழ்கையில் என்றும் நிம்மதி தான். எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
நன்றி 
வணக்கம்.  

Monday, 11 March 2013

திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'

சின்னத்திரை, திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது' என்ற வாசகம் வேண்டும்  
           
இன்றைய நாட்டு நடப்புகள் 
         
மதுரை கங்காதரன் 

           


நாம் சின்னத்திரை அல்லது திரைப்படம் பார்க்கின்ற போது இடை இடையே 'சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அல்லது மது அருந்தும் காட்சிகள்' வரும்போது ஒன்றோ அல்லது இரண்டோ இந்த வாசகங்கள், அதாவது 'புகை பிடிப்பது புற்று நோய் உண்டாகும்' ' புகை பிடிப்பது உயிரைக் குடிக்கும்' என்கிற வாசங்களும் 'மது அருந்துவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு' என்று கட்டாயம் காட்டுவார்கள். அதன் நோக்கம் இப்படி காட்டினாலாவது மக்கள் அதை நாடுவதை, விரும்புவதை குறைத்துக் கொள்வாரகள் என்பது தான். 

                  

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது. இன்னும் சொல்லப்ப் போனால் அந்த வாசகங்கள் வரும்போது சிறியவர்களின் கவனம் குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்களை கூர்ந்து பார்க்க நேருகிறது. அது ஒரு விளம்பரமாகவே தெரிகின்றது. அது சரி ஆங்கிலப் படங்களில் வரும்போது ஆங்கிலத்தில் அத்தகைய வாசகங்கள் வருவதில்லை. ஏன்?

       

அதற்குப் பதிலாக சின்னத் திரை மற்றும் திரைப்படங்களில் லஞ்சம் கொடுக்கின்ற காட்சிகள் வரும்போது ' லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனை கிடைக்கும்' என்றும், பாலியல் பலாத்காரம் நடக்கும் காட்சியில் 'பாலியல் பலாத்காரம் ஆயுள் அல்லது மரண தண்டனை' கிடைக்கும் என்றும் பெண் கொடுமை, விபச்சாரம் , ஏமாற்றுத் திருமணங்கள், பால்யத் திருமணம், முதியோர் கொடுமை, ஆபாசம், கறுப்புப் பணம், பதுக்குதல், தற்கொலை, வரதட்சணை காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், அராஜகம், உடலில் ஆசிட் ஊற்றுதல், கொலை செய்யும் காட்சிகளில் 'ஆயுள் அல்லது மரண தண்டனை' உறுதி என்றும், ஏமாற்று, மோசடி, பொய் காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், சட்டம் மற்றும் காவல் துறையை மதிக்கதவர்களுக்கு 'XXX ஆண்டுகள் தண்டனை ' கிடைக்கும் என்றும், குழந்தை தொழிலார்கள், அடிமைத் தொழிலார்கள் இருக்கும் காட்சிகளில் 'தண்டனை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் வரவேண்டும். அது எந்த மொழியானாலும் சரி கண்டிப்பாக அதை பின்பற்றியே தீரவேண்டும் என்கிற கேளிக்கைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். 

                            

அதை 'சின்னத்திரை மற்றும் திரைப்படம்' சென்சாருக்கு வரும்போது காட்டாயம் மேற்கண்ட வாசகம் இருப்பதை உறுதி செய்த பிறகே மக்கள் பார்வைக்கு வெளி வரவேண்டும். இப்போதுள்ள A / U சான்றிதல்கள் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. அப்போது தான் திரைப்படங்கள், எவ்வாறு தரக்குறைவாக, மக்கள் சமுதாயத்தை கெடுக்கும்படி இருக்கின்றது என்பது தெரியும். அதிகமாக வாசகங்கள் வரும் திரைப்படம் கட்டாயம் வன்முறை தூண்டும் திரைப்படம் என்று முத்திரை குத்திட வேண்டும். ஏனென்றால் இத்தகைய விழிப்புணர்வு இல்லாமையால் இளைஞர் சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள் செய்து வருகிறார்கள். கதாநாயர்கள் எந்த தவறு செய்தாலும் அது சரி தான் என்று இளைய சமுதாயம் உணருவதை தடுத்திடவேண்டும். சட்டம், நீதி மற்றும் தண்டனை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் நல்ல சமுதாயம் எதிர்பார்க்க முடியும். ஓரளவு சட்டம் பற்றிய தெளிவும், பயமும் இதன் மூலம் கொடுக்கலாம்.

              

இதை நடை முறைப்படுத்தினால் கட்டாயம் நாட்டு மக்களிடையே கண்டிப்பாக நன்மைதரும் மாற்றங்கள் நிகழும். இதை உலகம் முழுவதிலும் நடைமுறைப் படுத்தும்போது மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், இயல்பாகவும் இருக்கும். இதை தனி ஒரு மனிதனால் சாதிக்க முடியாது. தன்னார்வத் தொண்டுகளும், மக்கள் உரிமை அமைப்புகளும், மக்கள் சேவை அமைப்புகளும், பெண் பாதுகாப்பு அமைப்புகளும், மக்களும், அரசுகளும் ஒன்று சேர்ந்து ஒலி கொடுத்தால் தான் வெற்றி கிடைக்கும்.

                 

எடுத்தவுடன் அனைத்தும் கொண்டுவருவது என்பது முடியாத காரியம். ஆனால் இப்போது நடைபெறும் லஞ்சம் மற்றும் பெண் கொடுமைகள், பலாத்க்காரம் போன்றவைகளை முதலில் வெகுசீக்கிரமாக கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொது மக்கள் இந்த கருத்துக்களை பற்றி பதிவு செய்தால் இன்னும் அதிகமாக கவனத்திற்கு வரும். உங்கள் பதிவுகள் சக்தியுள்ளதாக இருக்கட்டும். ஆதரவு தாரீர். மாற்றம் கொண்டுவருவோம். புதிய உலகம் படைப்போம். புதுச் சரித்திரம் எழுதுவோம்.

             

நன்றி


வணக்கம்.