Monday, 26 September 2016

ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?
ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள்
அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?
                     புதுக்கவிதை
        மதுரை கங்காதரன்

தமிழ்த்தாய் வாழ்த்து

ஓடையாய் ஓடும் தேன்தமிழ்
கோடையாய் சுடும் செந்தமிழ்
மேடையில் முழங்கிடும் கவித்தமிழ்
வாடை மாறாத அன்னைத் தமிழை வணங்குகிறேன்.
.

            அவை வணக்கம்

உள்ளத்திலும் உதட்டிலும் மெய்யான தமிழில்
எக்கணமும் கவிதையினை 'கணீர் கணீர்' என்று
தந்து கொண்டிருக்கும் அவைத் தலைவர் அவர்களே!
மற்றுமுள்ள தனித்தமிழ் கவிஞர்களே!
அறிஞர்களே!
பெரியோர்களே, தாய்மார்களே!
வந்திருக்கும் அனைவருக்கும் எனது
முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள்
அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி?
                     புதுக்கவிதை
             

மயிலோடு வான்கோழி சேர்ந்தால்
குயிலோடு காக்கை சேர்ந்தால்
தமிழுள் அயல்எழுத்து சேர்ந்தால்
தத்தம் தனித்தன்மை என்னவாகும்?

கல்வியில் அயல்நாட்டு மொழி
உடலுக்கு அயல்நாட்டு மருந்து
பேசுவதில் அயல்மொழி கலப்பு
தமிழுள் அயல்எழுத்து திணிப்பு

சொத்தில் பங்கு கொடுக்கலாம்
மொழியில் பங்கு கொடுக்கலாமா?
இல்லாதவன் கையேந்தினால் யாசகம்
இருப்பவன் கையேந்தினால் பாதகம் தானே!

உயிர் மேல் அக்கறை உண்டு
உடல் மேல் அக்கறை நன்று
உறவு மேல் அக்கறை இருக்கு
தமிழ் மேல் அக்கறை வேண்டாமா!

வலைக்குள் அகப்பட்ட மீன் பிழைத்திடுமா?
அயல்எழுத்தில் அகப்பட்ட தமிழ் வாழ்ந்திடுமா?
கனவு கலைத்து கண்திறந்து விழித்திடு தமிழா?
கண்கெட்ட பிறகு காட்சி காண எண்ணாதே!

தமிழ் வளம் சிறக்க
தமிழுள் அயல்எழுத்து புகுத்தாதே!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&Wednesday, 14 September 2016

அக்கறை, ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு…அக்கறை, ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு
12.9.16 அன்று நிகழ்திய உரையின் சாராம்சம்
மதுரை கங்காதரன்

பொதுவாக இளைஞர்கள் என்றாலே எந்நேரமும் கையில் கைபேசி வைத்துக் கொண்டு பேசிக்கொண்டோ அல்லது சமூக வலைதளத்தில் மூழ்கியபடியே இருப்பார்கள். டி.வி, திரைப்படம் பார்ப்பார்கள் அல்லது அவைகளைப் பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு வீட்டைப் பற்றிய அக்கறையோ, வாழ்க்கைப் பற்றிய எண்ணமோ இருக்காது  என்கிற மனோபாவமே எல்லோர் மனதிலும் உண்டு. அக்கறையும், ஆர்வமும் கொண்ட இளைஞன் பொறுப்போடு வேலை செய்கிறான். குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். அக்கறை இல்லாத இளைஞன் ஊர் சுற்றுகிறான். ஆர்வம் இல்லாத இளைஞனோ குடுப்பத்திற்கு பாரமாக இருக்கிறான். மனிதப்பிறவி என்பது அரிய பிறவி. அதிலும் இளைஞர் பருவம், விதைக்கின்ற பருவம். இந்தப் பருவத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தான் பின்னாளில் நன்றாக அறுவடை செய்ய முடியும்.

பல இளைஞர்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சையாகத் தெரியும். அதாவது இன்ஜினியரிங் இளைஞர்களுக்கு டாக்டர் வேலை நன்றாக இருப்பதாகத் தெரியும். அதேபோல் டாக்டர்  இளைஞர்களுக்கு இன்ஜினியரிங் வேலை நன்றாக இருப்பதாகத் தெரியும். ஆனால் அக்கறையும், ஆர்வமும் கொண்ட இளைஞர்களுக்கு எக்கரையும் பச்சையாகும்அதாவது எந்த வகையான வேலையாக இருந்தாலும் அதனை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்கள். வாழ்க்கை என்னும் கடலில் இ்க்கரையைக் கடந்து அக்கரையை அடைய வேண்டுமென்றால் அக்கறையும், ஆர்வமும் வேண்டும்.

ஒரே கல்லூரி, ஒரே வகை மாணவர்கள், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாய் பழகிய பழக்கம், திடீரென்று முடியும் போது மனமானது ஒருவித குழப்பமும், அமைதியின்மையும், வெறுமையும் எதிர்கொள்ளும்போது அதனை ஜீரணிப்பதற்கு சிரமமாகத் தான் இருக்கும். அடுத்து எங்கே போகப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்? என்கிற பயம் எட்டிப் பார்க்கும். அடிக்கடி கல்லூரியில் நடந்த இனிமையான சம்பவங்கள் திரும்பத் திரும்ப அசை போடும். மெல்ல மெல்ல தம்முடன் படித்த நண்பர்கள் விலகிப் போவதை உணரும்போது உள்ளம் சற்று தடுமாற்றம் அடையும். 'உறவும் பிரிவும்' நிறைந்தது வாழ்க்கை என்று அப்போது தான் மனம் ஒத்துக் கொள்ளும்.

பாதுகாப்பாய், நிம்மதியாய் கழித்த பத்துமாதக் குழந்தை, கருவறையிலிருந்து வெளிவரும் நிலைமையும், படித்து பட்டம் பெற்று 'வேலை' என்கிற பெயரில் வெளி உலகத்திற்கு அறிமுகமாகும் இளைஞனின் நிலைமையும் ஒன்றே. 'வேலை' யினை அடையும் பயணம் பட்டென்று முடியலாம் அல்லது பாடாய்ப் படுத்தலாம். நாலாபக்கமும், 360° கோணத்தில் வரும் போட்டியை சமாளித்து வெற்றி பெறுவது என்பது தன்னம்பிக்கையும், அறிவையும், ஆற்றலையும், பொறுமையும் சோதிக்கும் ஒரு விளையாட்டுக்களம் என்று நினைக்க வேண்டும்.

ஒரு இளைஞனுக்கு 'வேலை' கிடைத்து விட்டால் அதோடு கடமை முடிந்துவிட்டது என்று எண்ணிவிட முடியாது. உண்மையில் அப்பொழுதிலிருந்து தான் கடமையே ஆரம்பமாகிறது. வீட்டையும், சமூகத்தையும் தாண்டி நாட்டையும் காக்கும் பெரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இளைஞர்கள் கல்வியும், அறிவையும் பொறுத்து பல்வேறு தரப்பட்ட விதைகளாக மாறுகிறார்கள். அந்த விதை எங்கே விழுகின்றதோ அதன் இடமும், சூழ்நிலை பொறுத்தே எத்தகைய வளர்ச்சி பெறும் என்பதை அனுமானிக்க முடியும். அவர்கள் தனியார் வேலை, அரசாங்க வேலை அல்லது சொந்தத் தொழில் சார்ந்த சூழ்நிலையில் வளரலாம். அது சொந்த நாடாக இருக்கலாம் அல்லது அந்நிய நாடாக இருக்கலாம். எந்த இடமாக இருந்தாலும் கடமையைச் செய்து, அதில் வெற்றி பெற்று பேரும், புகழும் அடைவதற்கு இளைஞர்களே! உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சில விதைகள் கட்டாந்தரையில் விழுத்து வீணாகிப் போவது போல, சில இளைஞர்கள் மாயவலையில் சிக்கி வீணாகிப் போவதும் உண்டு.    

இப்போதுள்ள புள்ளி விவரம் 'உலகளவில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள்' என்று கூறுகின்றது. ஆகவே இளைஞர்களின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இளைஞர்களே வேலைகளில் உங்களின் அக்கறையும், ஆர்வத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.  

இளைஞனே! உனக்குள் இருக்கும் அறிவையும் திறமையும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளாதே! கல்வியறிவு குறைவாக இருக்கும் இளைஞனுக்கு கடினமாக உழைக்கும் திறமை இருக்கும். அதேபோல் கல்வியறிவு அதிகமாக இருக்கும் இளைஞனுக்கு உழைக்கும் திறமை குறைவாக இருக்கும். ஆனால் இரண்டுமே இருக்கும் இளைஞர்களே சாதனை சரித்திரம் படைக்கிறார்கள் என்பதே உண்மை. மொத்ததில் எந்த ஒரு இளைஞனும் சோடையாய்ப் போவதில்லை. அவர்களுக்கு 'சிறந்த வழிகாட்டி' மட்டும் கிடைத்துவிட்டால் நிலத்தில் ஓடுவார்கள், விண்ணில் பறப்பார்கள், நெருப்பில் பிரகாசிப்பார்கள், காற்றில் பரவுவார்கள், நீரில் நீந்துவார்கள் என்பது உறுதி.

பறவைகளின் அக்கறை குஞ்சுகளைக் காக்கும் கூட்டில் இருக்கிறது
தேனீக்களின் அக்கறை தேன் சேகரிக்கும் கூட்டில் இருக்கின்றது
மரங்களின் அக்கறை அது கொடுக்கும் காய் கனிகளில் இருக்கின்றது
பசுக்களின் அக்கறை அது கொடுக்கும் பாலில் இருக்கின்றது

இளைஞனே உனது அக்கறை!
வீட்டையும், சமூகத்தையும் காப்பதில் இருக்க வேண்டும்.    

இளைஞனே! வாழ்கை என்பது சமமான நேரான பாதையல்ல! வளைவுகள், மேடு பள்ளங்கள், கல்லும், முள்ளும் நிறைந்த பயணம். விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

நிறைவாக ஓட்டையான பாத்திரத்தில் எதுவுமே தங்குவதில்லை. அடித்தளம் ஓட்டை கொண்ட கப்பல், தனது பயணத்தை முடிப்பது அரிது. அத்தகைய ஓட்டைகளை அடைப்பதற்கு அக்கறையும், ஆர்வத்தால் மட்டுமே முடியும்.    
***************************