Friday, 16 December 2016

பாரதியார் பிறந்த தினம் - நாமமது தமிழர் கொண்ட நாமே...

நாமமது தமிழர் கொண்ட நாமே
நற்றமிழுள் வேற்றெழுத்தைக் கலத்தல் நன்றோ?
பாரதியார் பிறந்த தினம் - சிறப்புக் கவியரங்கம்
           இடம் : மணியம்மை மழலையர் பள்ளி, மதுரை.
                    புதுக்கவிதை
                மதுரை கங்காதரன்
                   எங்கள் பாரதி!

எட்டையபுரத்தில் பாரதியாய் பிறந்தவர்
எட்டாத உயரத்திற்குத் தமிழை வளர்த்தவர்
சொட்டும் தேன் கவிகளைத் தந்தவர்
சொற்ப ஆயுளில் மகாகவியாய் மறைந்தவர்.

        நாமமது தமிழர் கொண்ட நாமே
நற்றமிழுள் வேற்றெழுத்தைக் கலத்தல் நன்றோ?

அன்று பச்சைத் தமிழர்களாய்த் தமிழைக் காத்தார்கள்
இன்று பச்சோந்திகளாய் மாறி இருக்கிறார்கள்
நிறமாலையிலுள் கறுப்பு நிறம் புகமுடிகின்றதா?
நற்றமிழுள் வேற்றெழுத்து புகுந்தது எப்படி?

பகடையினால் பாஞ்சாலியின் மானம் போனது
பகட்டினால் தமிழின் மானம் போகின்றது
இலவசமாய் எழுத்துகள் கிடைத்தபதே ஆயினும்     
இலகுவாய் தமிழில் பிறஎழுத்துகளைக் கலக்கலாமா?

உயிர் காக்கும் கத்தியைக் கொண்டு
உயிர் கொலை செய்வது தகுமோ?
மொழி காக்கும் எழுத்துகளைக் கொண்டு
மொழியைக் கொலை செய்வது நன்றோ?

அனுமதி இலவசம் என்றால்
ஆடு மாடுகளை நுழைய விடலாமா?
அமைதி காக்கும் தனித்தமிழுக்குள்
அந்நிய எழுத்துகளை கலக்கவிடலாமா?

இன்று சில சொல்லில் கலந்த வேற்றெழுத்துகள்
நாளை பல சொல்லில் கலந்து தமிழை மாய்க்கும்
தமிழா, உனகுள்ள அடையாளம் தமிழ் மொழி
தமிழா, அதை இழந்தால் அனாதையாய் அலைவாய்.


                                                       

27.12.16
அன்று நடந்த நிகழ்ச்சியின் சில மின் படங்கள்  

 

 

 

 

 

 

 

 

 

 


நன்றி ..... வணக்கம் ...
CHILDREN'S DAY - குழந்தைகள் தினம் - வருங்காலம் உங்கள் கையில்…

குழந்தைகள் தினம் -
வருங்காலம் உங்கள் கையில்
14.11.16 சிறப்புக் கட்டுரை
மதுரை கங்காதரன்

         
'கல்வித் தொண்டே கடவுள் தொண்டு' என்பது முடியரசனின் கூற்று.
   அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
   ஆலயம் பதினாயிரம் நாட்டல்
   அன்னயாவினும் புண்ணியம் கோடி
   ஆங்கோர் ஏழைக்கு எழுத்தருவித்தல்
என்றார் பாரதியார். அத்தகைய சிறப்பான கல்வியை சீரோடும், சிறப்போடும் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஆசிரியப் பெரு உள்ளங்களுக்கும்

'கல்லாமல் இருப்பதைவிட பிறவாமல் இருப்பது மேல்' என்று சொன்ன பிளாட்டோவின் உரைத்த படியும், 'கேடில் விழுச்செல்வமாம் கல்வி' என்று  திருவள்ளுவரின் கூற்றும் , 'இளமையில் கல்' என்று இயம்பிய ஒளவையாரின் அமுதவரியினை உண்மையாக்கும் வண்ணம் கல்வி பெறுவதே கடமையாய் வந்திருக்கும் மாணவ, மாணவியர் செல்வங்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலம் கையைவிட்டு நழுவிச் சென்ற காலம். அதைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தை கையில் விடாமல் பிடித்து கொண்டுவிட்டால் கட்டாயம் வருங்காலம் உங்கள் கையில்தான் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை.

(கூட்டத்தைப் பார்த்து) நீங்கள் 'மேஜிக் ஸ்டோன்' அதாவது மந்திரக்கல் பற்றி கேள்விபட்டு இருக்கின்றீர்களா? ஒரு பள்ளியில் இதே போல் ஒரு விழா நடக்கிறது. அந்த விழாவில், சிறந்த மேதையும், தொழிலதிபருமான சிறப்பு விருந்தினர் ஒருவர் உரை நிகழ்தினார். அந்த உரையில் அவர் " நான் மிகவும் சுமாராகப் படிக்கும் மாணவன். ஆனால் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஒரு நாள் எனது ஆசிரியர் என்னை அழைத்து " நீ முதல் மதிப்பெண் வாங்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா?" என்று கேட்டார். அதற்கு 'ஆமாம்' என்று தலையாட்டினேன். "முதலில் உனது குறும்புத்தனத்தை குறைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் என்னைப் போல் பல சுமாராகப் படிக்கும் மாணவ மாணவியர்களை, இந்த அளவுக்கு உயர்த்திய எனது மூத்த ஆசிரியரைப் பார். அவர் ஒரு மந்திரக்கல் தருவார். அதன் பிறகு அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நட" என்று என்னை அந்த ஆசிரியரிடம் அனுப்பினார். 'அவர் என்னைப் பார்த்தவுடன் "வாப்பா வா, இங்கே உட்கார், எதற்காக என்னைப் பாரக்க வந்தாய்? என்று கேட்டார். நான் விவரத்தைச் சொன்னேன். அப்படியா? அப்படியென்றால் நான் சொல்லும்படி நடந்து கொண்டால்தான் நீ நினைத்தது நடக்கும். சம்மதமா?" என்று கேட்டார். பள்ளி மெச்சும் பிள்ளையாக பெயர் எடுக்க வேண்டும் என்கிற ஆசையில் 'சம்மதம்' என்றேன். அவர் பூஜையறைக்குள் சென்று ஏதோ ஒரு பொட்டலம் எடுத்து வந்தார். வாயில் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லி "இதனுள் ஒரு மந்திரக்கல் இருக்கின்றது. ஒவ்வொரு முறை படித்த பிறகு அதை எழுதிப் பார்க்க வேண்டும். அது மறக்காமல் இருக்க இந்த பொட்டலத்தைத் தொடவேண்டும். அப்படித் தொடும்போது அதனுள் இருக்கும் மந்திர சக்தி நீ படித்ததை மறக்காமல் செய்துவிடும்" என்று சொல்லி அந்த மந்திரக்கல்லை' என் கையில் கொடுத்தார். அந்தக் கல் என் கைக்கு வந்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு சக்தி புகுந்தது போல் உணர்ந்தேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டு அவர் சொல்லியபடி செய்தேன். என்ன ஆச்சரியம். நான் எழுதிய தேர்வுகளில் அனைத்துப் பாடத்திலும் நான்தான் முதல் மதிப்பெண் பெற்றேன். அந்த ஊக்கம் இனி வரும் காலம் என் கையில் இருக்கின்றது என்கிற நம்பிக்கை பிறந்தது. அப்போது என்னைப்போல் சுமாராகப் படிக்கும் மாணவர்கள் சிலர் நான் பெற்ற முதல்பெண் இரகசியத்தை கேட்டனர். நானும் அந்த மந்திரகல்லைப் பற்றிச் சொன்னேன். என்ன அதிசயம். அவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று இன்று பெரிய பெரிய பதவியில் இருக்கின்றனர். எனது தன்னம்பிக்கையும், மந்திரக்கல்லின் மேல் இருத்த நம்பிக்கை தான் என் வருங்காலம் என் கையில் கிடைக்கப் பெற்றேன்" என்று முடித்தார்.

அந்த தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் உங்களுக்கு கொடுப்பதோடு, ஏறுவதற்கு ஏணியாகவும், அக்கரையைக் கடப்பதற்கு தோனியாகவும், பறப்பதற்குச் சிறகாகவும், நல்ல சிலைகளைச் செதுக்கும் உளியாகவும் உங்களை மாற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்குத் தான் இந்நாள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஒருசமயம் நான் என் உறவினர் வீட்டிற்குச் சென்றேன். நான் எப்போது சென்றாலும் ஏதாவது ஒரு வால்தனம் செய்து திட்டு வாங்குவான். அதே எண்ணத்தோடு 'இன்று என்ன சுட்டித்தனம் செய்து திட்டு வாங்கப் போறானோ' என்கிற நினைப்பில் உள்ளே நுழைந்தேன். அங்கே நான் பார்த்தது அதிசயம், ஆனால் உண்மை. இந்த தடவை அவன் எந்த சுட்டித்தனமும் செய்யவில்லை. மாறாக அவன் எழுதிய பாடங்களையும், ஓவியங்களையும், அவன் செய்த புராஜெட் ஐ காண்பித்தபோது நான் மகிழ்ச்சியில் மிதந்தேன். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? என்ற விவரம் அவன் அம்மாவிடம் கேட்டேன். அந்த நிகழ்ச்சியை விரிவாகச் சொன்னார்.

இரண்டு மாதத்திற்கு முன்பு அவனோட பள்ளிகூடத்தில் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. நான் முதல்லே அனுப்புவதா இல்லை. ஏன்னா ஏதாவது குறும்புத்தனம் செய்திடுவான் என்கிற பயம். ஆனா அவன் "நான் எந்த ஒரு சுட்டித்தனம் செய்யாமல் சமத்தாக சென்று வருகிறேன்" என்று உறுதி சொன்ன பிறகே அவனை அனுப்பினேன். சொன்னது போல சமத்தா வந்தான். ஆனா அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கவனித்தேன். சீக்கீரம் எந்திரி, குளி, படி, கை கழுவு, சாப்பிட வா, வீட்டுப்பாடம் செய் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் எல்லா வேலையும் செய்வான். ஆனா டூர் போய் வந்த பிறகு, இப்ப என்னான்னா எல்லா வேலையும் சொல்லாம டக்கு டக்குன்னு செய்றான். அவனே படிக்கிறான், புராஜெட் வொர்க் பண்றான்.

அப்படியா, அப்படி அந்த டூர்லே என்ன தான் நடந்தது.

அதுவா, சில இடங்கள் சற்றிப் பார்த்த பிறகு ஒரு தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார்களாம். அங்கே பல தரப்பட்ட தொழிலாளர்களை பார்த்திருக்கான். மூட்டை தூக்குபவர், காப்பி கொடுப்பவர், காவல் காப்பவர், ஆபிஸ் வேலை செய்பவர், தரையை சத்தம் செய்கிறவர், ஏசி யில் மும்முரமாய் வேலை பார்பவர் என்று பலரைப் பார்த்தவன் மேலாளரின் நடை, பேச்சு, வேலை அவனுக்கு ரொம்பவே இம்ப்ரஸ் ஆனது போல் உணர்ந்துள்ளான். நேராக அவரிடத்திலே, சார், சிலர் மூட்டை போன்றவற்றைத் தூக்கி கஷ்டப்பட்டு வேலை செய்யுராங்க, ஆனா நீங்க ஏசியிலே ஜாலியா உட்காந்திருக்கீங்க. நீங்க அந்த மாதிரி வேலையெல்லாம் செய்யுறதில்லே, ஏன்? என்று கேட்டிருக்கான். அதற்கு அவர்..

"அதுவா தம்பி, அந்த மாதிரி மூட்டை தூக்கிற வேலை செய்யுறவங்க சரியாகப் படிக்காதவங்க. அதனாலே அந்த மாதிரி வேலை தான் கிடைக்கும்.
அப்போ உங்க மாதிரி ஆகனும்னா,"

"என்னை மாதிரி ஆகனும்னா, அன்றைக்கு அன்று நல்லா படிக்கனும், உன் வேலையை நீயே உடனுக்குடன் செய்யனும். வால்தனம் செய்யக் கூடாது. எல்லாரிடத்தில் பணிவா நடக்கனும். அப்படி நடந்தா வருங்காலம் உன் கையில் தான். உன்னோட கனவும் பலிக்கும்" என்று சில அறிவுரை சொல்லியிருக்கிறார். அதற்கு இவன்

"நானும் நல்லா படிச்சு உங்களைப் போல உயர்ந்த பதவியிலே அமருவேன்" என்று சொல்லிட்டு வந்திருக்கான். அந்த தாக்கம்தான் அவனை இந்த அளவுக்கு மாற்றியிருக்கு" என்று சொல்லிய போது எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. நம்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் நன்றாக படித்து மூட்டைத் தூக்கும் வேலைக்குச் செல்லாமல் நல்ல பெரிய பதவியை அடைவார்கள். ஏனென்றால் அவர்கள் நன்றாகப் படிப்பதால் அவர்களின் வருங்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை நம் ஆசிரியர் ஒவ்வொருவரிடத்திலும் உண்டு.

நடப்பவர்களுக்கு வழிகாட்டியாக, பறப்பவர்களுக்கு திசைகாட்டியாக நாம் இருக்க வேண்டும் என்பதையே இந்த நாள் அறிவுறுத்துகிறது என்றே நினைக்கிறேன்.

இந்த சமயத்திலே இன்னொரு சம்பவமும் சொல்லியே ஆக வேண்டும். மூனு மாசத்துக்கு முன்னாடி எனக்கு மிகப் பழைய நண்பியிடத்திலிருந்து ஒரு கால் வந்தது. அவள் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அட்ரஸ் கொடுத்தேன். அவள் தன்னுடன் எட்டாவது படிக்கும் மகனோடு வந்திருந்தாள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவன் அம்மாவிடத்தில் ஏதோ ஒன்று கேட்பது போல் இருந்தது. "உன் மகன் என்ன கேட்கிறான். சும்மா சொல்லு" என்றேன்.

"ஒன்றுமில்லை. நியூஸ் பேப்பர் வேண்டும்" என்று கேட்கிறான். அது கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம். அன்றைய பேப்பரை அவனிடத்தில் கொடுத்துவிட்டு, இதில் என்ன பாக்கப்போறான்என்று கேட்டேன்.

அவனுடைய கிளாஸ் டீச்சர் ஒரு தடவை எல்லோரிடத்தில் "நீங்கள் வருங்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்" என்று கேட்டிருக்கிறார். நான் அப்துல்கலாம் போல விஞ்ஞானி ஆகவேண்டும்" என்று இவன் சொல்லியிருக்கிறான். இந்த மாதிரி ஒவ்வொருவரும் சொன்னார்களாம். ஒவ்வொருவரும் என்னவாக விரும்புகிறீர்களோ அதைப் பற்றிய கல்வித் தகவல்கள், வேலை கிடைக்கும் இடங்கள், தகுதிகள், அனுபவம், சம்பளம் என்று பலவற்றைச் சேகரித்து அவன் வகுப்பில் ஒட்டிவைக்க வேண்டும், பிறகு அதை நோட்டில் ஒட்டி ஆல்பமாக செய்து, அந்த நோட்டிற்கு வருங்காலத்தில் நான் ஒரு விஞ்ஞானியாக ஆவேன் என்று எழுதிக் கொண்டுவருமாறு சொல்லியுள்ளார். இது வரையில் இருபது தகவல்கள் சேகரித்துள்ளான். இன்னும் ஐந்து சேர்க்க வேண்டும்" என்று சொல்லியபோது அவன் இப்போதே அப்துல்கலாமாக மாறிவிட்டான் என்று எண்ணிக் கொண்டேன்.

ஆகவே, மாணவமணிகளே! வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல், எவ்வித இலட்சியம் இல்லாமல் காற்றடிக்கும் திசையில் பட்டம் பறப்பது போல பறக்காமல், குறி பார்த்து எய்தப்பட்ட அம்பு போல திசை மாறாது, நேராக சென்றால் கட்டாயம் உங்களின் வருங்காலக் கனவு நினைவாகும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். நன்றி, வணக்கம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


இளைஞர்களே .... உங்களுக்காக..

டிசம்பர் 2016 'புதிய தென்றல்
இதழில் வெளியான
எனது கட்டுரைப் படைப்பு:
தலைப்பு : இளைஞர்களே .... உங்களுக்காக..

படியுங்கள்... பகிருங்கள்..  

நன்றி , வணக்கம்...

Friday, 9 December 2016

இரண்டாயிரம் ரூபாயை (2000) அறிமுகப்படுத்தியதன் இரகசியம்

The secrets behind the Rs 2000 introduced in India
இரண்டாயிரம் ரூபாயை (2000) அறிமுகப்படுத்தியதன் இரகசியம்
விழிப்புணர்வுக் கட்டுரை
மதுரை கங்காதரன்


உங்களிடத்தில் வருமானத்திற்கு அதிமாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கின்றனவா? அப்படியென்றால் அது செல்லாமல் போகும் நிலை வரலாம்.  உயர் மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளால்தான் கறுப்புப் பணம், போலி நோட்டுகள், லஞ்சம், ஊழல், தீவிரவாதம், செயற்கை விலைவாசி ஏற்றம் போன்றவைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது என்று மக்கள் உறுதியாய் நம்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஏன் இரண்டாயிரம் ரூபாயை வெளியிட்டார்கள் எங்கிற சந்தேகம் வரலாம். எல்லாம் காரணமாகத்தான் இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? இதுவும் எளிதாக கறுப்புப்பணம் காட்டிக் கொடுக்கும் வழி என்றே நான் கருதுகிறேன். எவ்வாறு இருக்கலாம் என்று இ்க்கட்டுரையை படியுங்கள். ஒருவேளை ஒருவரிடத்தில் இரண்டாயிரம் நோட்டுகள் அதிகமாக இருந்தால் எவ்வாறு செல்லுபடி ஆகாமல் போகும் என்றும், எவ்வாறு வருமான வரித்துறையினரால் பிடிபடலாம் என்றும் பார்க்கலாம். அவர்கள் வீட்டிற்கு, நிறுவனத்திற்கு வந்து சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களே அவர்களைக் காட்டிக் கொடுத்துக் கொள்வார்கள்.

இப்போது புதிதாக வெளியாகியிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் வரிசை எண் இருக்கும். இதுவரையில் வெளியாயிருக்கும் அனைத்து வரிசை எண்களும் கணினியில் பதிவாகியிருக்கும். அவ்வகை நோட்டுகள் வங்கியில் மற்றும் மக்களிடத்தில் தான் இருக்கும். அப்படித்தானே?

இப்படியிருக்கும்போது, மைய அரசு ஒரு நாள் திடீரென்று இவ்வாறு அறிவிப்பார்கள். அதாவது இன்று நள்ளிரவு முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இரண்டாயிரம் ரூபாய் யாரும் பயன்படுத்துவதோ, மாற்றுவதோ, பிறர்க்கு கொடுப்பதோ கூடாது என்றும் அன்றைய மூன்று நாட்கள் கண்டிப்பாக உங்களிடத்தில் தான் அந்த இரண்டாயிரம் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பார்கள். அதேசமயத்தில் ஏதாவது ஒரு வங்கியின் மூலமாக எல்லோருக்கும் ஒரு இரகசிய எண் தருவார்கள். (இரண்டாயிரம் ரூபாய் இல்லாதவர்கள் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை). அதில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், பான் மற்றும் ஆதார் எண், வங்கிகளின் கணக்கு எண்களைப் (உங்களுடைய தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிக் கணக்கு, கோ-ஆபரேடிவ் வங்கிகளின் கணக்கு உட்பட - ஒரு வேளை ஏதாவது ஒன்றோ அல்லது பல வங்கி கணக்கு எண் காட்டாமல் இருந்தால் அந்தக் கணக்கு காலாவதி ஆகிவிடும். எச்சரிக்கை!) பதிவு செய்ய வேண்டும். அதோடு உங்களிடத்தில் உள்ள அனைத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் வரிசை எண்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். உதாரணமாக, உங்களிடத்தில் ஆயிரம் நோட்டுகள் (1000) இருந்தால் அதன் வரிசை எண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மதிப்பு, இருபது லட்சம். அதேபோல் ஒரு கோடி பணம் வைத்திருந்தால், ஐயாயிரம் நோட்டுகளின் வரிசை எண்களை பதிவேற்றம செய்ய வேண்டும். நூறு கோடி பணம் வைத்திருந்தால் ஐந்து லட்சம் நோட்டுகளின் வரிசை எண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதவும் மைய அரசு கொடுக்கும் காலக் கெடுவுக்குள். சரியா? அதற்கு வருமானவரி கட்டியிருந்தால் ஏதும் பிரச்சனை இல்லை. ஆனால், வருமானவரி கட்டாமல் இருந்தது தெரிய வந்தால், உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கி வைக்கலாம். மேலும் ரூபாய் வரிசை எண்களை பதிவேற்றம் செய்ய முடியாது. மேலும் பதிவேற்றம் செய்யும் அனைத்தும் வரிசை எண்கள் அனைத்தும் சரிதானா? அல்லது போலியானவையா? என்று கணினி உடனுக்குடன் சரிபார்த்துச் சொல்லிவிடும். எல்லாம் பதிவு செய்து முடிந்த பிறகு மொத்தம் இவ்வளவு பணம் உள்ளது என்று சொல்லும். அது வருமான வரிவரம்பில் இருந்தால் அவருக்கு எவ்வித பாதிப்பில்லை. வருமானவரி கட்டாமல் அதிக பணம் இருந்தால் அப்பணம் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்படும்.

இப்போது நீங்கள் வங்கிக்குச் செல்ல அவசியம் இல்லை. 'கியூ' வரிசை நிற்கத் தேவையில்லை. நீங்களாக அல்லது பிறர் உதவியுடன் இந்த பதிவு செய்யலாம். இந்நிலையில் சரியான வங்கிக் கணக்கு, பான் மற்றும் ஆதார் எண் இருப்பவர்களால் மட்டுமே பதிவேற்ற முடியும். அவைகள் இல்லாதவர்களால் பதிவேற்றம் செய்ய முடியாது. அவர்களிடத்தில் இருக்கும் இரண்டாயிரம் நோட்டின் வரிசை எண்கள் பதிவேற்றம் செய்யப்படாததால் அதன் வரிசை எண்கள் அனைத்தும் செல்லாது என்று வங்கிக்கும் பொது மக்களுக்கும் இணையதளம் மூலம் தெரியப்படுத்துவார்கள். இனிமேலும் உங்களிடத்தில் புழங்கும் நோட்டுகள் உண்மையானதா? என்பதனை கணினி, லேப்டாப், மொபைல் போன்கள் மூலம் உங்களிடத்தில் இருக்கும் வரிசை எண்ணை பதிவேற்றம் செய்தும் படம் பிடித்தோ சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஏற்கனவே பதிவேற்றம் செய்த வரிசை எண் நோட்டே உங்களிடத்தில் இருந்தால் அதனை உங்களால் மீண்டும் பதிவேற்றம் செய்ய முடியாது. அது ஒருவேளை போலி நோட்டு என்று சொல்லும். அதன் தகவலை அருகில் இருக்கும் வங்கியில் தெரிவிக்க வேண்டும். அதேபோல் செல்லாத வரிசை நோட்டுகள் இருந்தால் அது யாரிடத்திலிருந்து பெற்றீர்கள் என்கிற விவரத்தையும் வங்கியில் சொல்ல வேண்டும். இந்த பதிவேற்றம் முடிந்தவுடத்தில் மைய அரசு கறுப்புப்பணம் இவ்வளவு இருகின்றது என்றும் வரி ஏய்ப்பினால் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிப்பார்கள்.
ஒருவேளை உங்களுக்காக மற்றவர்களின் வங்கிக் கணக்கில் பதிவேற்றம் செய்தால் அவர்களிடத்தில் வருமானவரித்துறை திவிர விசாரணை மேற்கொண்டு பறிமுதல் செய்வதற்கும், அத்தகைய கணக்கினை முடக்குவதற்க்கும் வழி உண்டு. பெரும்பாலும் மொத்தமாய் கறுப்புப்பணமாய் பதுக்கி வைப்பவர்கள் அதன் வரிசை எண்கள் சீராக இருப்பதால் 'இந்த எண் முதல் இந்த எண் வரைச் செல்லாது' என்கிற அறிவிப்பு எளிதாகத் தான் இருக்கும்.

இப்போது சொல்லுங்கள். இனிமேலும் யாராவது இரண்டாயிரம் நோட்டை அதிகமாகக் கறுப்புப்பணமாக வைத்துக் கொள்வார்களா? மீறியும், வைத்திருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். இப்போது சொல்லுங்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்டது சரியா? தவறா? இவற்றால் கறுப்புப் பணம், போலி நோட்டுகள், லஞ்சம், ஊழல், தீவிரவாதம், செயற்கை விலைவாசி ஏற்றம் போன்றவைகள் கட்டுப்படுத்த முடியுமா? முடியாதா? ஆக இதிலிருந்து தப்பிக்க சில வழிகள்; சரியானபடி வருமான வரி கட்ட வேண்டும்; பிறரின் பணத்தை உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவே கூடாது; அளவாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக இருந்தால் உங்கள் கணக்கில் வங்கியில் உடன் செலுத்திவிட வேண்டும். இந்ந நடவடிக்கையால் கட்டாயம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குப் பாதகம் இருக்காதுபணப்பரிமாற்றம் எங்கு நிகழ்ந்தாலும் அதைக் கணினியானது கண்கானித்துக் கொண்டிருக்கின்றது என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சிறப்பான தொழில்நுட்பம் இக்காலம் பெற்றுள்ளது. ஆகையால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அதிகம் வைத்திருப்பவர்களின் தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கின்றது என்கிற அபாயத்தை உணர்ந்து அதற்கேற்றபடி நேர்மையாக நடந்து கொண்டால் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். இது எனது கருத்து.

பெரிய நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மின்னணு பரிமாற்றம் மேற்கொள்வதால் எவ்வித பிரச்சனையும் அவர்களுக்கு இருக்காது. வருமானவரி கட்டாமல் பணத்தைப் பதுக்கி வைப்பவர்களுக்குத்தான் இந்த ஆப்பு. இது இப்போது படிக்கும்போது சிரிப்பாக, கோமாளித்தனமாகத் தெரியலாம். ஆனால் நடைமுறைப்படுத்தும்போது அய்யோ, அப்பா, போச்சே, எண் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதே! என்று புலம்புவதில் எவ்வித பயனும் இல்லை. மேலும் தங்கத்தில், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்ய முடியாது. அதற்கும் வரம்பு இருக்கின்றது. ஒருவேளை முதலீடு செய்தால் கணினி அதன் விவரங்களைக் காட்டிவிடும். முடிவாக, உங்கள் வருமானத்திற்கு மேல் எவ்வித பணமும் சேர்க்கக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ற வரியை காலதாமதம் இல்லாமல் உடனடியாக கட்டிவிட்டால் எவ்வித தொல்லையும், பயமும் இருக்காது. ஒருவேளை அந்த நேரத்தில் உங்களுக்கு மட்டுமே பணம் மறைத்து வைத்திருக்கும் இடம் தெரியும் நிலை இருந்தால், மைய அரசு அறிவிக்கும் நேரத்தில்  நீங்கள் வெளிநாடு  சென்றிருந்தாலும் சரி, நினைவில்லாமல் போனாலும் சரி, சுகமில்லாமல் படுத்தாலும் சரி இப்படி ஏதாவது ஒன்றில் சிக்கி இருந்தால் உங்கள் பணம் அம்போதான்.   
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Wednesday, 7 December 2016

இது என்ன தமிழ்மொழியா? எவன்மொழிக்கோ அடிமைதானா?

இது என்ன தமிழ்மொழியா?
எவன்மொழிக்கோ அடிமைதானா?
மதுரை கங்காதரன்

அந்நியன் போட்ட சொக்குப்பொடி
இன்றுமல்லவா வேலை செய்கிறது
ஆங்கில விதையை விதைத்து
அடிமைகளாக ஆக்கிவிட்டான்.

தமிழ்த்தாய் ஊட்டிய அன்னத்தை உண்டு
அந்நிய நாய்களுக்கு வாலாட்டுகிறாயே
வாய் பேசுவதற்கு ஆங்கிலமொழி வேண்டும்
வயிற்றுப் பிழைப்பிற்கு தமிழ்மொழியா?

தனித்தமிழில் ஒரு மணித்துளியாவது
தடையில்லாமல் பேசுவாயா?
தமிழனென பெருமை கொள்ளாதே
தமிழ்மொழிக்குத் துரோகம் இழைக்காதே.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் காத்த தமிழை
ஆங்கில மோகத்தில் அடகு வைத்தாயே
பிறமொழி பயிலுவது தவறில்லை
பிறமொழியை தமிழில் கலப்பது தவறே.

அழகு செறிந்த செந்தமிழ்சிலையை
ஆங்கில உளியால் அசிங்கமாக்காதே
தேனினும் இனிய செம்மொழி தமிழை
தேளாக கொட்டி நஞ்சாக்காதே!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, 30 November 2016

தனித்தமிழ் நூற்றாண்டு விழா - 2016 சிறப்புக் கவியரங்கம் - மதுரை

தனித்தமிழ் நூற்றாண்டு விழா - 2016
சிறப்புக் கவியரங்கம் - மதுரை 
27.11.2016 விழா பற்றிய படத்தொகுப்பு 
மதுரை கங்காதரன் 
விவரங்கள் இதோ ......


 

என் கவிதை இதோ ...

 எனக்குக் கொடுத்த 
'கவிமணிமுரசுப் பட்டயச் சான்றிதழ்' இதோ...


விழாவின்போது எடுத்த மின் படங்கள் இதோ .....


 

 

 

 

   

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

விழாவினை சிறப்பித்துத் தந்த அத்தனை அன்பு உள்ளத்திற்கும் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் நன்றியினையும் , வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.