Monday, 25 February 2013

நீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா ?

நீங்கள் குண்டா / ஒல்லியா / கருப்பா / குட்டையா / நெட்டையா / தொப்பையா /அழகைக் கூட்ட வேண்டுமா ?எதற்கு பயம்? நாங்கள் இருக்கிறோம் !
விழிப்புணர்வு / நாட்டு நடப்பு கட்டுரை 
         
மதுரை கங்காதரன்  


டி.வி யை திருகினாலும் சரி, பேப்பரை விரித்த்தாலும் சரி, எந்த வலை தளத்திற்கு போனாலும் சரி, குறுந்தகவல்கள் வந்தாலும் சரி , யாரைப் பார்த்தாலும் சரி , எந்த விற்பனையாளரும் சரி மேற்கூறிய ஏதாவது ஒன்றைப் பற்றி கண்டிப்பாக பேசியேத் தீருவார்கள். அதாவது ஒருவர் மற்றொவருவரை கவருவதால் தன்னுடைய அந்தஸ்து கூடும் என்கிற  ஒரே  குறிக்கோள் தான் இத்தகைய செயல்களைச் செய்யச் சொல்கிறது. அது மட்டுமா ? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியே அழகு நிலையங்கள் பல்கி பெருகி வருகின்றது. அதிலும் பல 'சிறப்பு நிபுணர்களும்' முளைத்துவிட்டார்கள். சிகிச்சை முறைகள் ஆயுர்வேதிக் மருந்து வேண்டுமா அல்லது அல்லோபதி மருந்து வேண்டுமா என்று போட்டி போட்டுக்கொண்டு மக்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
       
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அல்லது படித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளத் தவறுவதில்லை. இவ்வளவு ஏன் தினம் தினம் இதே கவலையோடு தான் தூங்குகின்றனர், காலையில் எழுகின்றனர்! இந்த குறையினால் வாழ்க்கையில் ஏதோ பெரிய ஒன்றை இழந்துவிட்டது போல எண்ணி முகத்தில் கலையில்லாமல் எந்தெந்த வழிகளில் அழகை கூட்ட வேண்டுமோ, என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து பார்த்தும் தாங்கள் நினைக்குமளவிற்கு முன்னேற்றம் இல்லை என்பதை மிக மிக தாமதமாக, பக்க விளைவுகள் வந்த பிறகு தான் அதை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். கட்ட கடைசியில் 'உள்ளதும் போச்சுட லொல்ல கண்ணா' என்று புலம்புவது தான் மிச்சம்.

எதற்கு எதற்கு மக்கள் அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்.

                          

முடி கொட்டுவதை தடுப்பதற்கு ஒரு தைலம் :  இந்த XXX தைலத்தை தொடந்து தடவுங்கள் நிச்சயம் முடி உதிர்வதை நின்றுவிடும் என்று ஒரு தைலத்தை கொடுப்பார்கள். தினம் ஒரு தைலம் அறிமுகமாகின்றது. இவைகள் யாவும் சில மாதமே வந்து மறைந்து விடுகின்றது. ஆனால் அவர்கள் சொல்வதோ 'இதை தேங்காய் எண்ணையில் கலந்து தேய்த்து வாருங்கள் . முடி கொட்டுவது நின்றுவிடும்' என்பார்கள். 

முடி கொட்டுவதற்கு காரணம், அநேகம் பேர் தினமும் எண்ணெய் தடவுவதே இல்லை. முடியை பெரும்பாலும் காய்ந்து தான் இருக்கும். அது தண்ணீர் ஊற்றாத செடி போல. அது எப்படி பட்டு போகின்றதோ அது போல் தலைமுடியும் கொட்டி விடுகின்றது.
             
இதை தவிர்க்க நல்ல தரமுள்ள தேங்காய் எண்ணெய்தினமும் தவறாமல்  தடவி வந்தாலே போதும். மேலும் நல்ல பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது  முடியை உறுதியுடன் இருக்கச் செய்யும் வழியாகும். ஒரே நாளில் பலனை யாராலும் தர இயலாது. ஆகவே பலன் மெல்லவும், உறுதியும் உங்களுக்கு தேவையானால் தெரிந்த இயற்கையான வகைகளை மட்டுமே உபயோகிங்கள். 

உடல் எடையைக் குறைப்பதற்கு மருந்து மற்றும் சாப்பாடு முறை:

                            

இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது. எண்ணெய் , இனிப்பு பலகாரங்கள், நொறுக்கு தீனிகள் சாப்பிடக் கூடாது. சாதாரணமாக இவைகள் குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும். அதோடு நிற்காமல் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து இதை கொண்டு 20 தடவை உட்கார்ந்து எழுந்தால் மூன்றே மாதத்தில் எடை குறையும். தியானம், யோகாவும் செய்யச் சொல்வார்கள். அதே சமயத்தில் சில மருந்துகளையும் சாப்பிட சொல்வார்கள். பணம் செலவழித்தது தான் மிச்சம். பலன் என்னவோ பூஜ்யம் தான். ஏனென்றால் மேற்க்கூரியத்தை யாரும் தவறாமல் செய்ததாக சரித்திரம் இல்லை. அந்த சமயத்தில் ஆர்வமாக செய்வார்கள். பிறகு மறந்து விடுவார்கள்.

இதை தவிர்க்க தினம் தினம் உணவுக் கட்டுப்பாடு, தியானம் மற்றும் யோகா வை தவறாமல் செய்து வந்தாலே போதும். மற்ற எதுவும் தேவையில்லை.

இதில் என்ன கூத்து என்றால், எல்லாமே சில நாட்கள் தான் பின்பற்றுவார்கள். பிறகு சீ .. என்று சலித்து பழையபடி இருந்துவிட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். பணம் வீணாகியது தான் மிச்சம். மனம் பாதிப்பு அடைந்தது தான் பலன். ஆக நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

முகப்பரு நீக்க , முகத்தின் அழகு கூட்ட :

இதோ இந்த YYYY கிரீம் தடவுங்கள் கருப்பான உங்கள் முகம் வெள்ளையாக மாறும். இந்த சோப்பை கொண்டு தினமும் மூன்று வேலை வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகம் பள பளவென்று ஜொலிக்கும்.

பெரும்பாலும் யாருமே ஒரு தடவைக்கு மேல் முகத்தை கழுவுவதில்லை. அப்படியே வெதுவெதுப்பான நீரில் கழுவுவதில்லை. பொதுவாக வெதுவெதுப்பான நீர் முகத்தில் இருக்கும் எண்ணெயும், பிசுபிசுப்பையும் அகற்ற வல்லது. ஆக அது மட்டும் செய்து சாதாரண சோப்பை உபயோகித்தாலே போதும். உங்கள் முகம் பளிச்சிடும். வறட்சியான முகமாக இருந்தால் முகத்தை கழுவுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தாலே போதும்.

உயரமாக வளருவதற்கு:

இதோ போஷாக்கு நிறைந்த சத்துள்ள டானிக் மற்றும் பானம். இதை பாலில் கலக்கி சாப்பிட்டால் உங்கள உயரம் நான்கே மாதத்தில் அதிகமாகும். 

பாலென்றால் யாரும் விரும்பி குடிப்பதில்லை. பின் எப்படி சத்து கிடைக்கும். உயரமாக வளரமுடியும். 

வாரம் மூன்று முட்டை மற்றும் தினமும் பாலை அருந்தினாலே உங்களுக்கு பலம் கிடைக்கும். உயரமும் கூடும். தினமும் 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது தவறக்கூடாது. இவைகள் எல்லாம் நன்றாக வேலை செய்வது உண்மையானால் இந்நேரம் ஜப்பானியர்கள் எல்லோரும் நெட்டையாக இருப்பார்கள்.

                                    

கடைசியாக உங்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் சினிமா நடிகர், நடிகை யானாலும் சரி, சின்னத்திரை ஆனாலும் சரி பல நடிக , நடிகையர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தட்டிப் போவதன் காரணம் மேற்கூறிய பிரச்சனைகளே. ஏன் அவர்கள் நினைத்தால் தங்கள் அழகைக் கூட்ட ஆயிரங்கள் என்ன லட்சங்கள் கூட செலவழிக்கத் தயாராக் இருப்பார்கள். அவர்கள் இதைவிட அதிக தரம் வாய்ந்த பொருட்களை உபயோகப்படுத்தியும் இருப்பார்கள். பலன் என்னவோ சொல்லிக் கொள்ளும்படி இல்லாத காரணத்தினால் அவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர். பெரும்பாலும் அலர்ஜியால் பாதிக்கப் பட்டு இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்டவர்கள்  தான் அதிகம் பேர்.

இன்னும் ஒருபடி அதிகமாக சொல்லப் போனால் நடிகர்கள் புருவங்கள், மீசை எல்லாமே ஒட்டு ஆகவோ அல்லது கருப்பு மையால் வரைந்தோ இருப்பார்கள். தலையில் முடி இல்லாததால் டோபா அல்லது விக் போட்டிருப்பார்கள். முகத்தில் சுருக்கங்களை மறைக்க அரை இஞ்ச் பவுடர் அல்லது கிரீம் போட்டிருப்பார்கள். எல்லாமே டக் டக்கென்று காட்சிகள் மாறுவதால் நமக்கு அதிகமாக வித்தியாசம் தெரிவதில்லை. நடிகையர்கள் கூட அப்படித் தான்.

எந்த ஒரு கருப்பான நடிகர்கள் சிகப்பாக நேரில் காட்சியளித்திருக்கிறார்களா? குட்டையானவர்கள் நெட்டையாக வளர்ந்துள்ளனரா? ஓம குச்சியை இருப்பவர்கள் குண்டாக அல்லது குண்டாக உள்ளவர்களாக மாறியுள்ளனரா? தொப்பை உள்ளவர்கள் சிலிம் ஆக மாறி இருக்கின்றனரா? ரூபாய் லட்சம் கொடுத்து தலைமுடியை ஒட்டிகொண்டவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு இருப்பவர்களைப் பாருங்கள். அதன் உண்மை புரியவரும்.காரணம் சில இயற்கைகள் மாற்றுவது முடியாத காரியம்.    

பிரபல ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள்  என்னென்னவோ எவ்வளவோ எங்கெங்கோ பல லட்சம் செலவு செய்து பார்த்தார். அவர் முகம், முடியில் எதுவும் மாற்றமில்லை. இன்னும் சொல்லப் போனால் முன்பை விட அழகு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இயற்கையில் இருக்கும் அழகு என்றும் நிரந்தரம். செயற்கையாய் செய்துகொள்ளும் அழகு சிறிது நேரத்தில் மறைந்து போகும். மீண்டும் அழகை ஏற்றிக்கொள்ள வேண்டும். மேக் அப் இல்லாமல் எந்த ஒரு நடிகர் நடிகையும் வெளியில் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் பார்க்குபடி இருக்க மாட்டார்கள்.  

இதையும் மீறி சில நடிக, நடிகையர்கள் என்றும் இளமையாக இருப்பதன் இரகசியம் அவர்கள் விதவிதமான ஷாம்புகள்  உபயோகிப்பதால் அல்ல, விலை உயர்ந்த கிரீம்கள்  தடவுவதால் அல்ல, அழகுகலை நிபுணர்கள் பரிந்துரை செய்யும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மேற்கொள்ளும் தினம், தினம் செய்யும் உடற்ப்பயிற்சி, தியானம், யோகா போன்றவை. இவைகளை அவர்கள் பிரமாதப்படுத்திச் சொல்வதில்லை. ஏனெனில் இவைகளுக்கு செலவு இல்லை. வரவும் இல்லை அவர்கள் பணத்திற்காக மட்டுமே சோப்பு, கிரீம், ஷாம்பு  என்று விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். உண்மையில் அவைகள் அவர்கள் உபயோகிப்பது கிடையாது.

ஆகவே..
இயற்கையாய் இருங்கள்..

இயற்கையை பின்பற்றுங்கள்..

இளமையாய் உணருங்கள்..
இன்பமாய் வாழ்க்கையை அனுபவியுங்கள்..     

  

Monday, 18 February 2013

உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது ? HOW ABOUT YOUR LIFE? புதுக்கவிதை - MADURAI GANGADHARAN

உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது  ?
        
              HOW ABOUT YOUR LIFE?
                        
                                  புதுக்கவிதை 
                            மதுரை கங்காதரன் 
                          
வாழ்க்கை எனக்கு கடவுள் போல 
இருப்பது போல் இருக்கின்றது 
இல்லாதது போலும் இருக்கின்றது.

வாழ்க்கை எனக்கு அதிர்ஷ்டம் போல 
எப்போது வரும் இன்று தெரியவில்லை 
எப்போது வராது என்றும் தெரியவில்லை.

வாழ்க்கை எனக்கு கனவு போல 
தூக்கும் போது இனிமையாய் இருக்கிறது 
விழிக்கும்போது கசப்பாய் இருக்கிறது.

வாழ்கை எனக்கு பேயைப் போல 
நேற்றும் அடித்து விரட்டுகிறது 
இன்றும் அடிக்க வருகின்றது.வாழ்க்கை எனக்கு மனம் போல 
நேற்று நான் நினைத்தபடி நடந்தது 
இன்றும் அதுபோல் நடக்கிறது.

வாழ்க்கை எனக்கு குரங்கு போல 
நேற்று இருந்த குணம் இன்றில்லை 
இன்றைய குணம் நாளை மாறிவிடுமோ?

வாழக்கை எனக்கு டி.வி சீரியல் போல 
'முடியும்' என்று நினைக்கும்போது தொடர்கிறது 
'தொடரும்' என்கிறபோது முடிந்து விடுகிறது.

வாழ்க்கை எனக்கு கிரிக்கெட் போல 
எப்போது 'சிக்ஸர்' அடிப்பேன் 
எப்போது 'டக் அவுட்' ஆவேன் தெரியவில்லை.

வாழ்க்கை எனக்கு விதை போல 
நேற்று தான் விதைத்தது போல இருந்தது.
இன்று நெடு நெடுவென்று வளர்ந்துவிட்டது.

வாழ்க்கை எனக்கு கடல் போல் 
நீந்தத் தெரிந்தோர் பிழைக்கின்றனர் 
தெரியாதோர் செத்து மடிகின்றனர்.

வாழ்க்கை எனக்கு விலைவாசி போல 
தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கின்றது 
ஏறிய வயது இறங்குவதுண்டோ ?

வாழ்க்கை எனக்கு செல்வம் போல 
நேற்று என்னிடத்தில் இருந்தது 
இன்று வேறு ஒருவனிடத்தில் போய்விட்டது.

வாழ்க்கை எனக்கு தேன்கூடு போல 
கஷ்டப்பட்டு கட்டியது நான் 
ஆனால் அனுபவிப்பதோ வேறொருவன்.

பொதுவாக வாழ்க்கை என்பது 
உண்மையும் பொய்யும் கலந்த கலவை 
பிறப்பும் இறப்பும் கொண்ட அதிசயம்.
                 
                               நன்றி 
                
                          வணக்கம்.
 

Friday, 15 February 2013

என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே - MY FAVORITE MOON - புதுக்கவிதை

      என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே -
                        
                       MY FAVORITE MOON -
                        
                                            புதுக்கவிதை 
                                      மதுரை கங்காதரன் 

இரவின் இருளைப் போக்க வந்த 
எப்போதும் எரியும் அணையா விளக்கு நீ 
எண்ணெய் திரியில்லாமல் இயற்கை தந்த 
இருளை அகற்றும் ஒளி விளக்கு நீ 

கவிஞர்களுக்கு நீ கற்பனை ஊற்று 
காதலர்களுக்கு நீ அழகு தேவதை 
மழலைகளுக்கு நீ காட்சி பொருள் 
எல்லோருக்கும் நீ அதிசயப் படைப்பு.தூய அன்பு உடையவர்களுக்கு நீ உதாரணம் 
வெள்ளை உள்ளங்களுக்கு நீ எடுத்துக்காட்டு 
கறைபடியாத வாழ்க்கைக்கு நீ சாட்சி 
பரிசுத்த ஆன்மாக்களுக்கு நீயொரு முன்மாதிரி.

வாழ்கையில் இருள் வரும் ஒளியும் வீசும் 
எப்போதும் ஒரே நிலையில் இரு 
என்று இலவசமாக வாழ்க்கை பாடத்தை 
கற்றுக்கொடுக்கும் ஆசான் நீ.  அன்று உன்னை கவியால் மட்டுமே 
தொட்டு பார்த்தவர்கள் 
இன்றோ உன்னை அறிவியல் வளர்ச்சியால் 
எட்டி பிடித்திருக்கின்றனர் சிலர்.

பகலின் வெப்பத்தை தணிக்க வந்த 
இரவு குளிர் காற்று நீ 
இரவு பொழுதில் உறங்குவதற்கு 
மடியைக் கொடுக்கும் அன்னை நீ.

விஷேங்களுக்கு நீ அடையாளம் 
அமாவாசை நாட்களில் நீ தெரிவதில்லை 
பௌர்ணமியில் நீ முழுமையாக தெரிகின்றாய் 
பிறையில் நீ தெரியும் அழகோ அழகு தான்.

நான் மட்டும் உன்னை விரும்பவில்லை 
உலக மக்கள் அனைவரும் விரும்புவது 
உன்னைப் போல மாசற்று வாழவேண்டும் 
உலக மக்களை நல்வழி படுத்தவேண்டும்.

                         நன்றி 
 
                     வணக்கம்.

இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL - பாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா?

இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL 
(புதிய பகுதி) A NEW CHANNEL
இது யாரையும் புண்படுத்தும் நிகழ்ச்சி கிடையாது. முழுக்க முழுக்க கற்பனை தான். தவறு இருப்பின் மன்னிக்கவும்...
பாகம் : 1 நேயர்கள் கடிதம் -
 உங்களுக்கு சமைக்க ஆர்வமா?


உள்ளது உள்ளபடியே சொல்லும் சானல் !

ஒளிவு மறைவு இல்லாமல் உண்மை பேசும் சானல்!

இப்போது நிகழ்ச்சிக்கு போவோம்.... வாருங்கள்....

இது நம்ம சானல் சார்பாக உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.

நிலைய இயக்குனர்: 

இன்றைய நிகழ்ச்சி - நேயர்கள் கடிதம்.- சென்ற மாதம் ஒலி - ஒளிபரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா? பற்றி நிறைய கடிதம் வந்துள்ளது. முதல் கடிதம் படியுங்கள்...

முதல் கடிதம் படிக்கிறார்.... நிலைய தொகுப்பாளர்:


சென்ற மாதம் ஒளி -ஒலி பரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா?' என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் 'புதுவகை இட்லிகள்' எப்படி செய்வது என்று செய்து காண்பித்தார்கள். அதன்படி ஒன்று தவறாமல் அப்படியே செய்தேன். இட்லி கொஞ்சம் கூட ருசியில்லாமல், ரொம்ப கன்றாவியா இருந்தது. ஆனால் நீங்கள் அதை சாப்பிட்டு விட்டு 'அஹா ரொம்ப அற்புதம் ! இது நாள் வரை இந்த மாதிரி இட்லி என் வாழ்நாளில் சாப்பிடவே இல்லை. என்று புகழ்ந்தீர்கள். அப்படியென்னா உங்க டேஸ்ட் அவ்வளவு கன்றாவியா?' எனக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க.. 

நிலைய இயக்குனர் பதில் சொல்கிறார்.

மன்னிக்க வேண்டும். வந்த கடிதங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இப்படித் தான் எழுதியிருக்கிறார்கள். தவறு எங்கள் மீது இல்லை. பலர் நிகழ்ச்சியை முழுவதும் கடைசிவரை பார்க்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சியின் கடைசியில் நாங்கள் சொல்ல வந்ததை மீண்டும் உங்களுக்காக ஒலி -ஒளி  பரப்புகிறோம். இப்போது... நிகழ்ச்சி கடைசியில்...


..... இதோ பாருங்க ! நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த 'புது வகை இட்லிகள் ' என்று இட்லி கொப்பரையை திறக்கிறார். ஆ .... இட்லி கூழ் போல இருக்கே. எனக்கு மயக்கம் வருதே. பாக்கிறதுக்கே இவ்வளவு மட்டமாக இருக்கே ! இதை சாப்பிட்டு வேறே பார்க்கணும்மா.. என்னால கற்பனை செய்துகூட பார்க்க முடியலே. ஒருவித குமட்டல் வருகிறது. சரி சரி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு பணத்தை வீணாக்குகிறீங்க ! நேரே உங்கள் தெரு முக்குக்கு போங்க ! நல்ல ஹோட்டலே பார்த்து நுழையுங்க.. நீங்க எதிர்பார்த்த வகை வகையான இட்லியென்ன , தோசையென்ன சட்னி சாம்பாரோடு நல்ல சாப்பிடுங்க.. புது தினுசா சமைக்கிற ஆசை விடுங்க.. மீண்டும் அடுத்த வாரம் 'உப்பு காப்பி' செய்வது எப்படின்னு பிரபல சமையல் கலை நிபுணர் விளக்குவார்.. அதுவரை.. உங்கள் எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்..

நிலைய இயக்குனர்..இப்போது நேயர்களின் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.. நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேலாவது நிகழ்ச்சிகளை முழுமையாகப் பாருங்க.

 நன்றி
 வணக்கம்... 

Thursday, 14 February 2013

வான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது ? RAIN , RAIN WHAT HAPPEN TO YOU?

வான் மழையே ! உனக்கென்ன ஆகிவிட்டது ?
               
RAIN ! RAIN ! WHAT HAPPEN TO YOU?

                

                     புதுக்கவிதை 
               மதுரை கங்காதரன் 

 
நேரத்தை கடைப்பிடிப்பதில் 
மனிதர்களை மிஞ்சி விட்டாய்!
அவர்கள் தான் சொன்ன நேரத்தில் 
சொன்ன இடத்தில் வராதவர்கள்!

உனது கடமை செய்வதில் 
அரசியல்வாதிகளையும் முந்தி விட்டாய்!
அவர்கள் எல்லோரும் தன வேலைகளை 
சரியான நேரத்த்தில் செய்யாதவர்கள்!

வான் மழையே நீ மாறிவிட்டாய் 
உனது கடமையை மறந்துவிட்டாய் 
உனது கொடை குணத்தை இழந்துவிடாதே 
மக்களை துயரத்தில் தள்ளிவிடாதே 

மழையே மழையே வா வா !
காலம் தவறாமல் பெய்து வா !
தண்ணீர் பிரச்சனை தீர்க்க வா !
உலகை காக்க விரைந்து வா !

      

வான்வெளியில் தோன்றும் கருமேகங்கள் 
தேனை உடைய தேன்கூடுகள் 
மழைத் துளிகளோ தேன் துளிகள் 
மக்களுக்கோ அது ஜீவாதாரம்.

மழையில் நனைவது மகா சந்தோசம் 
அதிகமானால் வருவது ஜலதோஷம் 
மரம்,செடி,கொடி செழிப்பது மழையாலே 
'நைட்ரஜன் சுழற்சி' நடப்பது அதனாலே!

சிப்பியில் ஒரு மழைத்துளி 
முத்தாய் மாற்றும் சக்தி கொடுக்கிறாய் 
பூமியில் நீ தரும் பலத் துளி சேர்ந்த மழை 
மனித வாழ்க்கையை  முத்தாய் மாற்ற வா வா! 

  

மழையில்லையேல் பசுமை இல்லை 
பசுமையில்லையேல் உயிர்கள் இல்லை 
உயிரில்லையேல் உலகில்லை 
ஆதலால் மழையே மழையே வா வா!

மக்கள் மனம் குளிர்விக்க 
புவி வெப்பமாவதை தடுக்க 
அனைத்து ஜீவராசிகள் உயிர் வாழ 
காலம் தவறாமல் பெய்து வா வா!

                     நன்றி 
   

                 வணக்கம்.

  

பழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை / வாங்கும் சந்தை - OLD GOLD, SILVER JEWELRIES BUY / SALES BAZAAR

பழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் 
வாங்கும் சந்தை -
OLD GOLD, SILVER JEWELRIES BUY / SALES BAZAAR.
இப்படியும் நடக்கலாம் எதிர் காலத்தில்
ஒரு சமயத்தில் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வேண்டுமென்றால் வருடக்கணக்கில் காத்திருந்தோ அல்லது அதிக விலை கொடுத்தோ வாங்க வேண்டும். நாளடைவில் புதிய பொருளாதாரக் கொள்கை படி பலவித நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அதிக உற்பத்தி செய்து சந்தையில் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் குறைவாக இருந்த வாகனங்கள் போக போக விலை அதிகமாகியது. அதோடு நில்லாமல் தவணை முறை விற்பனையாலும்  விலையை அதிகமாக்கிவிட்டது என்று சொல்லலாம். மேலும் தினம் தினம் புதிது புதிதாக வரும் மாடல்களை  வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆகையால் கையில் இருக்கும் வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்க ஆரம்பித்தனர். பெரிய நிறுவனங்களைப் போல் 'ஷோ ரூம்' வைப்பதற்கு பணமில்லாதவர்கள் 'செகண்ட்ஸ் சேல்ஸ்' என்று தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அதிலும் அவர்கள் பழைய வாகனத்தை புதிய வாகனத்தைப் போல் மாற்றி விற்கின்றனர். தரமாக , குறைவான சரியான விலையில் வாகனங்கள் கிடைப்பதால் மக்களுக்கும் திருப்தி தான்.  
இதேபோல் இப்போது தங்கத்திற்கு வருவோம். தங்கத்தை தாங்காதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம். அதை விரும்பாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம். அது அந்த காலம். இப்போது மக்கள் தங்கத்தை தேவை இருந்தால் மட்டுமே வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். ஏனென்றால் அதன் விலை. நேற்றைய விலை போல் இன்றில்லை. ஒரு நேரத்தில் அதன் விலை விறு விறுவென்று ராக்கெட் வேகத்தில் ஏறி கிராமுக்கு 3150 ரூபாய் தொட்டது. உடனே மீடியாக்கள் அதன் விலை வெகுவிரைவில் கிராம் ரூபாய் 5000 க்கு தொடும் என்றனர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதற்கு மாறாக இப்போது கிராம் ரூபாய் 2850 க்கு வந்துவிட்டது. கிட்டத்தட்ட கிராமுக்கு ரூபாய் 300 குறைவு. மேலும் சிலர் அப்போதைய விலையில் கிராம் ரூபாய் 160 க்கும் குறைவாக விற்று வருகிறார்கள்.
இது எதனால்? மக்களுக்கு தங்கம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதைத் தான் காட்டுகிறது. அதற்கு முக்கியமான காரணம் விலைவாசி தான். ஒரே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள் , போக்குவரத்து செலவு, பால் மின் கட்டணம், வாடகை, கேளிக்கை செலவு, கல்வி போன்றவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. இப்படியே போனால் யார் தங்கத்தை வாங்குவார்கள்? வயிற்றுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கவே மக்கள் திண்டாடுகிறார்கள்?!
இந்த விலையேற்றம் எதனால் ஏற்பட்டது? சில வருடத்திற்கு முன் தங்கம் விலை சீராக இருந்தது. அதேபோல் ஏறுவது இறங்குவது குறைவாகவே இருக்கும். ஆனால் எப்போது ஊக வணிகத்தில் தங்கம் போன்ற பலவகைகள் நுழைந்ததோ அப்போதிலிருந்து ஏறுமுகம் தான். தங்கம் கிராமுக்கு ரூபாய் 600 இருக்கும்போது பல பெரிய நிறுவனங்கள், முதலாளிகள், பணம் படைத்தவர்கள், வங்கிகள் போன்றவர்கள் வாங்கி குவித்தனர். ஏனெனில் தங்கம் நமது நாட்டு மக்களின் அந்தஸ்து அடையாளம். எப்படியும் ஏறத்தான் செய்யும் என்கிற உறுதியான நம்பிக்கை. அதே போல் அதன் விலையும் சிகரத்தை தொட்டது. அதற்குத் தகுந்தாற்போல் மீடியாக்களும் நிறைய 'பில்ட் அப்' செய்து தங்கத்தை எட்டாத விலைக்கு வைத்துவிட்டார்கள். 
அதனால் ஏராளமான சிறிய நகை கடை மற்றும் ஆசாரிகள் இப்போதும் சிரமப் பட்டு வருகின்றனர். தங்கத்தை வாங்காமல் இருக்க முடியாது. இன்றைய சூழ் நிலையில் தங்கத்தை வாங்குபவர்கள் மிக மிக குறைவு தான். அதை அடகு வைத்து வீணாக வட்டி கட்டும் சூழலில் தான் இப்போது மக்கள் இருக்கின்றனர். இதனால் அடகு கடைகள் அதிகமாக முளைத்து விட்டனர். சிறிது பணத்திற்கு அதிகமான நகைகள் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். மேலும் அதை திருப்புவது அவ்வளவு எளிதாகவும் இல்லை. அதோடில்லாமல் பல அடகு கடை தங்கத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி ஓடிவிடுகின்றனர். அவர்களை பிடிப்பது குதிரைக் கொம்பு தான்.
இப்படி இருக்கும்போது இனி வரும் காலத்தில் 'எக்ஸ் ஷோ ரூம் தங்க நகைகள் விற்பனைக்கு' என்று வருவதற்கு வெகுதூரத்தில் இல்லை. ஏராளமான நகை கடைகள் இருப்பதாலும், மேலும் அவர்களால் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட முடியாத்தாலும்  பழைய தரமான 916 நகைகளை பாலிஷ் செய்து குறைந்த விலையில் கூலி, சேதாரம் இல்லாமல் விற்கும் நிலை உருவாகும். மக்கள் ஒரு சாரார் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் ஒரு சாரார் நல்ல விலைக்கு விற்கவேண்டுமென்று விரும்புகின்றனர். அடகு வைத்து வட்டி காட்டுவதற்கு பலர் தயாராக இல்லை. அதில் நம்பிக்கையும் குறைந்து வருகின்றது. ஆகையால் நெட்டையோ குட்டையோ விற்பதில் விருப்பம் காட்டி வருகின்றனர். 
தங்கம் விற்பதற்கு அவர்களுக்கு தெரிந்த  நம்பிக்கையானவர்கள் ஒரிருவர்கள் தான் இருப்பதால் சற்று கஷ்டப் பட்டு வருகின்றனர். அவர்களிடத்தில் அவ்வளவு இருக்குமா என்பது சந்தேகமே? ஆனால் இதேபோல் தரமான நம்பிக்கையான நகை வியாபாரிகள் பலர் இருந்தால் பல வாடிக்கையாளர்களுக்கு  கூலி, சேதாரம் இல்லாமல் குறைந்த விலையில் தரமான நகைகள் கிடைக்குமல்லவா? 

அதேபோல் வரும் நாட்களில் உலகத்தில் இதுநாள் வரை நடை பெறாத வியாபாரம் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் 'பழைய நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை' என்று வரும். அதில் பெரிய நிறுவனம் முதல் சிறிய வியாபாரிகள் வரை கலந்து கொளவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த சந்தை அனாவசியமாக யாரும் நுழையாத வண்ணம் அவர்களும் இருப்பிட முகவரி, போட்டோ மற்றும் அனுமதி பெற்ற நம்பிக்கையான தங்க நகை புரோக்கர், ஆசாரிகள்  அல்லது ஏஜென்ட் அல்லது நகை கடை உரிமையாளர் மூலமாக வியாபாரம் நடைபெறும். சந்தையில் தங்கம் தரம் பார்ப்பவர்களை கூட நியமிக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகை கட்டடித் தான் கலந்து கொள்ளவேண்டும். இதில் நல்ல பயனும் , வியாபாரமும் இருக்கும். இதனால் சிறிய தங்க நகை வியாபார்கள் புத்துயிர் பெறுவார்கள். அவர்களின் வாழ்கையும் மலர்ச்சி பெறும் . பலருக்கு நன்மை உண்டு. 
இதில் காணப்படும் சிறப்பு அம்சங்கள்:

1. நம்பிக்கையான வியாபாரத்தின் மூலம் உடனே பணம் கிடைக்கிறது.

2. அன்றைய விற்பனை விலையிலிருந்து மிக மிக குறைவான விலையில் கிடைக்கும். (அது வாடிக்கையாளரின் அவசரம் மற்றும் நிதானம் பொருத்து விலை மாறும்)

3. கூலி , சேதாரம், கல் போன்றவற்றின் விலை இல்லாமல் வாங்கலாம்.

4. வரிகள் கிடையாது.

5. 916 தங்கம் தரம் கிடைக்கும்.

6. பழைய டிசைன்கள் இப்போது அதிக கிராக்கி. உறுதியும் கூட.

7. தங்கம் மட்டுமில்லாமல் வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்றவைகளும் விற்கலாம். 

8. அடகு வைக்கும் வட்டி பணம் குறைகிறது.   

9. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறிய கொலுசு, மோதிரம் , தோடு போன்றவைகளை எளிதாக வாங்க உதவிடும். (அவர்கள் பெரிய நகைக்கடைக்கு போக தயங்குவார்கள்)

10. மொத்தத்தில் அனைவருக்கும் பயன் தரும் அற்புத முயற்சி.

11. இறக்குமதி குறைக்கவும், இந்திய நாணய மதிப்பை கூட்டுவதற்கும் பயன்படும்.

வந்தால் வரவேற்போம்!
அது வருகின்ற நாளை எதிர்பார்ப்போம். 

நன்றி!

வணக்கம்.

Tuesday, 12 February 2013

பிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள் - .. HAVE CONFIDENT TO SOLVE YOUR PROBLEM YOURSELF

பிரச்சனை தீர்க்க முடியும் என்று 
தன்னம்பிக்கை கொள் - 
.. HAVE CONFIDENT TO SOLVE YOUR PROBLEM YOURSELF 
தன்னம்பிக்கை கட்டுரை 
மதுரை கங்காதரன் 
எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், குருவாக இருந்தாலும் அவர்களால் உனது குறைகளையும், கஷ்டங்களையும் கேட்க முடியுமே தவிர உனது குறைகளை தீர்க்க முடியாது. அதுவும் நீ எவ்வளவு லட்சம் கொடுத்தாலும் நடக்காது. அதாவது உனது பசியை போக்குவதற்கு அவர்களுக்கு அறுசுவை உணவும், முக்கனியும், பொன்னும் , பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது. உனக்கு பசியென்றால் நீ சாப்பிட்டால் தான் உன் பசி அடங்கும்.

                 
உனது கஷ்டத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யாராலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எவரேனும் உனது கஷ்டத்தை தீர்க்கிறேன் என்று சொன்னால் அதற்காக பணம் கேட்டால் கட்டாயம் அவர்கள் போலி ஆசாமிகள். அவர்கள் உன்னிடம் பணம் இருக்கும் வரை கறந்துவிட்டு டாட்டா காட்டி 'எஸ்கேப்' ஆகிவிடுவார்கள். அந்த நிலையில் உனக்கு கூடுதல் கஷ்டம் வந்து சேரும்.

உனக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் நிதானமாக யோசி. உடனே யோசிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் அப்போது நீயே பெரும் குழப்பத்தில் இருப்பாய். உனது மனம் தெளிவகாவும், யோசிக்கின்ற நிலையிலும் இருக்காது. சிறிது நேரம் விட்டு அல்லது ஓரிரு நாட்கள் தள்ளியோ பிரச்சனையின் ஆழத்தைப் பொறுத்து நேரம் எடுத்துக்கொண்டு யோசித்தால் மிகவும் நல்லது.


பிரச்சனைக்கான காரணம் நீயா ? அல்லது வெளியிலா? என்பதை உறுதிபடுத்திக்கொள். உன்னால் என்றால் பிரச்சனையை மேலும் வளரவிடாமல் சமாதானமாகவோ அல்லது அதனின்று விலகியோ அல்லது துண்டித்தோ விடு. அதை கண்டும் காணாமல் இருந்து விட்டால் அந்த பிரச்சனை விதை உன் கண்ணுக்குத் தெரியாமலே நெடு நெடுவென்று வளர்ந்து வெட்ட முடியா பெரிய மரமாக வளர்ந்து உன் முன் தினமும் தோன்றி பேயாட்டம் ஆடிவரும். நாளடைவில் அதுவே உனக்கு எமனாகவும் மாறி உன்னை அழித்துவிடும் ஜாக்கிரதை!
                
பிரச்சனை எழும்போது உன் பவீனத்தை பயன்படுத்தி கோபத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கி விடுவார்கள். அல்லது தேனாக பேசி உன் பக்கத்தில் மிகப் பெரிய குழியை தோண்டி விடுவார்கள். அப்போது உனது உறவையும் (மனைவியும், பிள்ளைகளையும்), நீ தேடி வைத்த செல்வங்களையும் பத்திரமாக நினைவில் வைத்துக் கொள். எனென்றால் பல போலி ஆசாமிகள் உனது பிரச்னையை போக்குகிறேன் என்று சொல்லி முதலில் உன்னையும் உனது உறவுகளையும் பிரிப்பார்கள். அப்போது தானே உன்னிடமிருந்து பணத்தை பிடுங்குவது எளிதாக இருக்கும். உன்னுடைய பிரச்சனைகளை மற்றவர்களிடம் கொண்டு போக கொண்டு போக பிரச்சனை பெரிதாக்குமே ஒழிய பிரச்சனைகள் தீராது. அதுவும் ஒரு சிறிய பிரச்சனை நூறு பிரச்னைக்கு வழிவகுத்து விடுவார்கள். மேலும் பிரச்சனை தீக்க வேண்டும் என்கிற வேகத்தில், அல்லது எண்ணத்தில் பணத்தை தண்ணீராய் செலவு செய்வீர்கள். கடைசியில் பிரச்சனை தீராது. பணமும் இருக்காது.
உதாரணமாக பல பிரச்சனைகள் நீதிமன்றத்தில் இருக்கின்றது. குறித்த நேரத்தில் தீர்க்க முடிகின்றதா? இவ்வளவுக்கும் படித்தவரும், சட்டத்தைக் கரைத்து குடித்தவர்கள் தான் பிரச்சனை தீர்க்க வாதாடுகிறார்கள். இதற்கும் மேலாக நீதிபதியோ தீர்ப்பை கூறாமல் ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பதிலிருந்து உனக்கு புரிகின்றதல்லவா! ஏனெனில் உனது பிரச்சனை தீர்ப்பதில் அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் அக்கறை இல்லை என்றே கூறலாம்.
ஆக உனது பிரச்சனைகளை உன்னால் தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள். சிக்கல்களை கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்க முயற்சி செய். கட்டாயம் எந்த பிரச்சனையும் நீ தீர்த்து விடலாம்.
ஆக உனது கஷ்டத்தைப் போக்க தன்னம்பிக்கையுடன் வழி தேடு. நிச்சயம் வழி தெரியும். அதில் பயணம் செய். தொலைந்த மகிழ்ச்சி மீண்டும் உன்னிடம் ஒட்டிக்கொள்ளும். வழிகள் உனக்கு உதவி செய்யும் நட்பாகவோ, உறவாகவோ, இரக்கம் படைத்த மனிதர்களாகவோ இருக்கலாம்.
               
நன்றி 
                      
வணக்கம்.