Pages

Thursday, 12 November 2015

BEWARE OF E.COMMERCE - ‘இ.காமர்ஸ்’ ஒரு சுரண்டல் வர்த்தகம்

BEWARE OF E.COMMERCE
.காமர்ஸ் ஒரு சுரண்டல் வர்த்தகம் 
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை

இப்பொழுதெல்லாம் அகில உலகளவில் எப்படி வியாபாரம் செய்யலாம்? மக்களின் பணத்தை எவ்வழியில் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் மூலம் அபகரிக்கலாம்? ஐம்புலன்களில் மயங்கிடும் மனிதர்களிடமிருந்து எவ்வாறு பணத்தை கைப்பற்றலாம்? என்று பலர் யோசிக்கிறார்கள். நாளுக்கு நாள் புதிதுபுதிதாய் தோன்றும் ஊடகங்கள் மனிதர்களை தவறாது மூளைச்சலவை செய்து வருகின்றது. அதைக் கொண்டு சாதிக்கவும் செய்கிறார்கள். சிலர் அந்த சந்தில் எப்படி சிந்து பாடலாம்? இல்லை இல்லை எப்படி ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள்! அவர்கள் சட்டத்திற்கு தண்ணீர் காட்டி எப்படியோ தப்பித்தும் சாதித்தும் வருகிறார்கள். புதுப்புது உக்தியுடன் புதுப்புது வியாபாரம் வரும் போது புதுப்பது ஏமாற்று வித்தைகளும் தவறாமல் அரங்கேறுகின்றது. அதற்குக் காரணம் பேராசை. குறுகிய காலத்தில் பணக்காரனாகிவிட வேண்டுமென்ற துடிப்பு. ஏதோ ஒருவகையில் ஏமாற்றம் நடக்கின்றது. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று ஏமாறியவர்கள் சுதாரிப்பதற்குள் ஏமாற்றுபவர்கள் அடுத்த ஏமாற்றத்திற்கு தயாராகி விடுகிறார்கள் அல்லது கண் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள்.

இதுவரை மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாந்திருக்கிறார்கள் என்பதை சற்று பின்னோக்கித்திரும்பிப் பார்ப்போம். குறுகிய காலத்தில் போட்ட முதல் இருமடங்கு கொடுக்கப்படும்  என்று கவர்ச்சியான விளம்பரத்தில் ஈர்க்கப்பட்டு ஏமாந்தவர்கள் பலர். கொடுத்த  பணத்திற்கு மாதம் ஐந்து வட்டிவரை தரப்படும் என்று அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு  அனைத்தும் இழந்தவர்கள் ஏராளம். அதிக தள்ளுபடி கொண்ட சீட்டுத்தொகை கட்டலாம் என்று முதலை வாயில் பணம் போட்டு ஒரேயடியாய் 'அம்போ'ன்னு இழந்தவர்கள்    ஏராளம் ஏராளம்.

ஒரே மாதத்தில் பல மடங்கு லாபம் தரும் 'பங்குச்சந்தை வணிகம்' என்று  நிமிடத்திற்கு  நிமிடம் செயற்கையாக ஊடகங்களில் பலர் 'பில்ட் அப்' கொடுத்து யாரோ ஒருவர்  எழுதியதை பேசி  உண்மை என்று பலர் நம்பி போட்ட முதல்களை பல பெரிய  நிறுவனங்கள் விழுங்கி ஏப்பம் விட்டது எத்தனை கோடியோ அதில்லாமல் தேக்குமரம், பால், எண்ணெய், கோழி போன்றவற்றில் போடுங்கள் உங்கள் முதலீடு! வேறு இல்லை  ஈடு! என்று 'பட்டை நாமம்' போட்டவர்களும் உண்டு.

மக்களை ஏமாற்றுவது வெகு சுலபம். "இதில்   போடுங்கள்   உங்கள்   பணத்தை!  பாருங்கள் அதன் பலனை!" என்கிற வசனத்தை ஒரு புகழ்பெற்ற ஆசாமி பேசட்டும். உடனேஅதில் மயங்கி முதலீடு செய்து பணத்தை விட்டவர்கள் பலர்.  அதைவிட எம்.எல்.எம்  எனப்படும் நூதன ஏமாற்றம்! அதாவது எங்கள் பொருட்களை நான்கு பேர்களுக்கு  விற்றால் உங்களுக்கு அதில் ஒரு பங்கு! என்று முட்டாள்தனமாய் ஏமாந்தவர்கள் பலர்.

பலரின் முதல்களை விழுங்கிய தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் மற்றும் மியூச்வல் பண்டு.ஊகவணிகத்தில் பலவிதமான சுருட்டல்கள்சமீபத்தில் எல்லாமே  கணினிமயமானதால் ஏமாற்றுகள், தவறுகள் சகஜமாக ஆகிவிட்டன. யாரிடத்தில் எப்படி முறையிடுவது? என்பது பலருக்கு புரியாத புதிர் தான். ஏன்? பல புகழ்பெற்ற  நிறுவனங்கள் நாம் மொபைல் போனில் ரீ-சார்ஜ்   செய்த   பணத்தை   எவ்வித  அறிவிப்பும் இல்லாமல் நம்முடைய பணத்தை இழந்த அனுபவம் பலருக்கு இருக்கும்.  எத்தனை பேர் அந்த இழந்த தொகையை திருப்பி வாங்கியிருப்பார்களோ?  வாங்குவதற்கு எவ்வளவு பாடுபட்டார்களோ!

உங்களிடம் செல்வம் கொழிக்க 'ராசிக்கல்' என்று சொல்லி ரூபாய் 100 பெறுமானமுள்ள ஒரு கலர் கல்லை ரூபாய் 5000 என்று வாங்கி ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ? 'வாஸ்து' என்கிற பெயரில் ஓரிடத்தில் இடித்து வேறிடத்தில் கட்டியவர்கள் எத்தனையோ பேர்! இது மட்டுமா, பெயரில் மாற்றம் ! மொட்டை மாடியில் 'பிரமிடு' இருந்தால் செல்வம் கொட்டுமாம்! வித விதமான பொம்மைகள் கூட தவறவில்லை. கலர் கலர் சேலைகளில் நுழைந்து பலரின் வியாபாரத்தில் முன்னேற்றம் கொடுத்துள்ளது. உண்ணும் உணவில்  கூட விட்டுவைக்க வில்லை.    


இந்த லட்சணத்தில் .பேங்கிங் என்று வந்திருக்கின்றது. போகப்போக அதன் உண்மையான உருவம் தெரியவரும். இதில் என்ன கூத்தென்றால் புதிதாக ஆரம்பிக்கும் போது அதன் தரமான சேவையென்ன! நேர்மையான வியாபாரமென்ன! எல்லாமே நன்றாக கவர்ச்சியாக நடைபெறுகின்றது. நாட்கள் செல்லச்செல்ல ஏமாற்றுதல் மெல்ல மெல்ல ஆரம்பித்து  கடைசியில் கடையை மூடிவிட்டு கிடைத்த பணத்தை சுருட்டிக்கொண்டு சிலர் ஓடியதை செய்தித்தாளிலும் தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்து இருக்கிறோம். சிலர் மறக்கமுடியாத வேதனையும் அடைந்திருக்கலாம். அதையும் தாண்டி சிலர் உங்களுக்கு இவ்வளவு பரிசு விழுந்திருக்கின்றது. சேவை செலவு மட்டும் எங்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்! என்று அவர்கள் போடும் பணத்தை எடுத்துக் கொண்டு 'பட்டை நாமம்' சாத்திவிட்டு போனவர்களின் பட்டியல் ஒருபக்கம் இருக்கின்றது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பலர் நியாயமான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு மத்தியில் சிலர் கவர்ச்சியான முறையில் வியாபாரம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்களின் அறியாமையையும் அலட்சியமான சிந்தனைப் போக்கையும், வரட்டு கௌரவத்தையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். பல ஊடகங்கள் விழிப்புணர்வு கொடுத்தும் குருட்டு நம்பிக்கையால், பேராசையால் பலவகையான ஏமாற்றத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.  

இப்படியெல்லாம் எவ்வாறு சாத்தியமாகிறது என்றால் எல்லாம் ஊடகங்களின் கைங்கரியம் தான். அவர்களால் மட்டுமே எறும்பை யாணையாக்கியும் யாணையை எறும்பாக்கியும் காட்ட முடியும். ஒன்றுக்கு ஆயிரமாக்கி கவர்ச்சியான வழிகளில் மக்களை ஏமாளி வலையில் சிக்க வைக்கின்றனர். திரைப்படங்களிலாவது ஒரே பாட்டில் பணக்காரனாக காட்டுவார்கள். ஆனால் விளம்பரத்தில் ஒரே படத்தில் பயில்வான் நோஞ்சானாக மாறுவான். நோஞ்சான் பயில்வானாக காட்டுவார்கள். அது மட்டுமா? மொட்டைத்தலையில் காடுபோல் முடி வளர்வது போல் காட்டுகிறார்கள். அதையும் மக்கள் நம்புவது தான் ஆச்சரியம். அந்த வகையில் .காமர்ஸ் என்னும் சாத்தான் புதிய பெயரோடு மக்களை ஏமாற்றக் கிளம்பியுள்ளது. தொலைக்காட்சியில் ஒரு நிமிட விளம்பரத்திற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்று உங்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும் சில விளம்பரங்கள் மணிக்கணக்கில், நாட்கணக்கில், மாதக்கணக்கில் ஒளிபரப்பாகிறது என்றால் அவர்கள் எவ்வளவு செலவழிக்க வேண்டும்! அதை எப்படி வசூல் செய்வார்கள் என்று சற்று யோசித்துப் பார்த்தால் எல்லாமே உங்களுக்குப் புரிந்துவிடும். அதுவும் 'மிஸ்ஸிடு கால்' கொடுங்கள் என்கிற விளம்பரம் வேறு.

நாள் முழுக்க பல கடைகளில் ஏறி இறங்கி வாங்கினாலும் திருப்தி அடையாத மக்கள் விளம்பரத்தை பார்த்தவுடன் வாங்கிவிடுவார்களா என்ன? அது என்ன எங்கேயும் கிடைக்காத அதிசயப் பொருட்களா என்ன? ஒன்று மட்டும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரேமாதிரியான பொருட்கள் பலவிதமான விலைகளில் குறைவாகவும் விலை அதிகமாகவும் கிடைக்கின்றது. அப்படி இருக்கும்போது நீங்கள் பார்த்து பிடித்த பொருள் எவ்வளவு பெறும் என்று உங்களால் கணிக்க முடியுமா? இப்போது பெரும்பாலும் பார்த்த பொருள் கிடைக்கின்றது. போகப்போக பல டுபாகூர் விளம்பரம் வரத்தொடங்கும். அப்போது நீங்கள் கேட்டது ஒன்று, வந்தது ஒன்றாக இருக்கும். இப்போது இரு நாட்களில் கிடைப்பது இரண்டு மாதமானாலும் கிடைப்பது சந்தேகம் தான். உங்களது சோம்பேறித்தனம் என்னும் பலவீனம் தான் இப்போது அவர்களின் பலம். விலை குறைவு என்று கருதினாலும் ஒன்றிற்கு பல முறை யோசித்து தேவையிருந்தால், அவசியமிருந்தால் மட்டுமே வாங்கலாம். பணவர்த்தகம் எளிதாக எளிதாக யோசிக்காமல் செலவு செய்யத் தோன்றும். ஆக .காமர்ஸ் வலையில் சிக்கிவிடாமல் காத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது மாயை என்பது இதன் மூலம் உண்மை என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%