Pages

Tuesday 15 March 2016

தன் கையே தனக்குதவி, தமிழ்மொழியே நமக்குதவி



தலைப்பு : தன் கையே தனக்குதவி, தமிழ்மொழியே நமக்குதவி
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

           தமிழ்தாய் வாழ்த்து

உலக மொழிகளுள் முதன்மை மொழியே
உயிர்களின் ஓசையில் பிறந்த தமிழ்மொழியே
உலகத்தாய் மொழி தினத்திற்கு வித்திட்ட தமிழே
உறங்கிடும் தமிழ் மக்களை உன் கையால் எழுப்பிடுவாயாக!

தன் கையே தனக்குதவி, தமிழ்மொழியே நமக்குதவி

அளவில்லா வானம் போல் வளமிக்க தமிழ்மொழியே
அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரமே
வாட்டமான சொற்களை வாரி வழங்கும் காமதேனுவே
வாடி நிற்கும் உனை தமிழ்மக்கள் காணாது உள்ளனரே!

உடுக்கை இழந்தவனுக்கு கை போல் காத்திட்ட தமிழே
உனைக் காக்க தமிழ்மக்கள் எங்கே போனார்கள்?
தரையில் தடுமாறினால் தவழ்ந்தாவது எழலாம்
தண்ணீரில் மூழ்கிடும் தமிழை காப்பது நம் கடமையன்றோ?

கொடுத்ததெல்லாம் உனக்காக கொடுத்த தமிழன்னையை
கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா?
நஞ்சாய் அழித்திடும் அந்நிய மொழியை
நெஞ்சத்தில் அனுமதிக்க எங்ஙனம் மனது வந்தது?

சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாய்
சிங்க குகைக்குள் சிக்கிய வெள்ளாடுகளாய்
அந்தி விளக்கில் சிக்கிய விட்டில் பூச்சியாய்
அந்நிய மொழி மயக்கத்தில் தமிழை மறக்கிறாயே!

நம் தாய்மொழி தமிழா? என சந்தேக வினா
நம் மனதில் எழுகின்றது! நீ அந்நிய மொழி பேசும்போது!
நமக்கு உதவிடும் தமிழை நாம் ஏற்றுக் கொண்டால்
நம் வாழ்வில் சாதனை படைக்க இயலுமே!

முத்தமிழில் மூச்சாய் இருந்த தமிழனே
முகநூலில் மூழ்கி முகவரியை இழக்கிறாயே
கரும்பாய் இனித்திடும் செந்தமிழை இனியாவது
கருவாய் உருவாய் திருவாய் மலரச் செய்வாய் தமிழா!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


1 comment: