Pages

Friday, 11 November 2016

Demonetization of Rs 500 and 1000 - 500, 1000 நோட்டுகள் செல்லும்!

500, 1000 நோட்டுகள் செல்லும்!
விழிப்புணர்வுக் கட்டுரை
மதுரை கங்காதரன்

பூனைக்கு யார் மணி கட்டுவது? என்று இந்நாள் வரை பல தலைவர்கள் செய்யத் தயங்கியதை, சுயநலமில்லாமல், பதவிக்கு மயங்காமல் , பணக்காரர்களுக்கு அடிபணியாமல் ஒரு செயல் நடந்துள்ளது என்றால் அது இது தான். ஆம், டிசம்பர் மாதம் 30 வரையில் தான் இந்த பழைய 500, 1000 நோட்டுகள் செல்லும் என்கிற செய்தி. சுமார் 65 சுமார் ஆண்டுக்கும் மேலாக, இதுநாள் வரையில் நம்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் தலைவர் யாராவது ஒருவர் வரமாட்டார்களா? இந்தியாவில் நல்லாட்சி நடைபெறாதா? என்கிற இளைஞர் சமுதாயத்தின் ஏக்கமும், கனவும் இன்று நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு நல்ல காரியத்திற்கு யார் ஆதரிக்கிறார்கள்? யார் எதிர்க்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளலாம். சாமானிய மக்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்! என்று அவர்களைப் பற்றி கவலைபடுபவர்கள்! விலைவாசி, கல்விக் கட்டணம், மருத்துவம் என்று பலவைகள் விண்ணைத் தொடுமளவிற்கு உயரும்போதும், விவசாய நிலங்கள் விலைநிலங்களாக மாறியபோதும் எங்கே சென்றார்கள் இவர்கள்? இந்த 500, 1000 ரூபாய் பணம் இருந்தால் சட்டத்தை, வேலையை, கல்வியை, அதிகாரத்தை, பதவியை விலைவாங்கலாம் என்கிற எண்ணம் தானே மக்களிடம் இருந்தது. பணம் என்கிற போர்வையில் பல அநியாயக்காரர்களிடம் தானே பெரும்பாலான அதிகாரம் இருந்தது. மயிலே, மயிலே என்றால் இறகு போடுமா? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு! இதெல்லாம் தெரிந்த பழமொழி. நம்நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 68 ஆண்டுகள் ஆகியும் விலைவாசி மேலே பறக்கிறது. ஊழல் லஞ்சம் ஒழிந்தபாடில்லை. தீவிரவாதம் அச்சுறுத்துகிறது. அண்டை நாடுகள் பல வழிகளில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை உயர்ந்தபாடில்லை. தினமும் வீணாகிக் கொண்டிருக்கும் அரசு செலவீனங்கள், மக்களின் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்ய முடியாமை, நாட்டில் ஒரு பக்கம் வெள்ளம், மறுபக்கம் வறட்சி. இதையெல்லாம் பற்றி பொறுப்புள்ள மக்களாகிய நாம் கவலைபட்டிருக்கின்றோமா? காரணம் கேட்டால் ஆட்சி சரியில்லை, சட்டம் சரியில்லை, தலைவர்கள் சரியில்லை, மக்கள் சரியில்லை என்று இதுநாள் வரை சொல்லிக் கொண்டே இருந்தார்களே தவிர, அதையைல்லாம் சரி செய்ய ஏதாவது முயற்சி நடந்துள்ளதா? இதுவரையில் இல்லை என்பதே உண்மை.

8.11.16 அன்று உலக வரலாற்றில் நம்நாடு செய்திருக்கும் செயற்கரிய செயல் தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு. இந்த அதிர்ச்சியான செய்தி ஒரு பக்கம் மக்கள், தங்களுடைய வாழ்வில் பூகம்பம் போல் சில நிமிடங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், வருங்காலதிதில் வரவிருக்கும் சுனாமி, எரிமலை, பஞ்சம் போன்ற பேராபத்திலிருந்து தடுத்துக் காத்து மக்களின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுத்தவே இந்த செயல் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதனால் என்ன நன்மை உண்டாகும்? இதுநாள் வரை செயற்கையாய் நடைபெற்று வந்த விலைவாசி ஏற்றம் இனி நடக்காது. சேவை மற்றும் பொருட்களின் உண்மையான முகம் இப்போது தான் தெரியவரும். தாறுமாறாய் விலை ஏறி நிற்கும் உணவு வகைப் பொருட்கள் (எண்ணைய், பெட்ரோல், டீசல், போக்குவரத்து, அரிசி, பால், பருப்பு, காய்கறிகள் போன்றவைகள்), தங்கம், வெள்ளி, வைரம், வாகனங்கள், வங்கி வட்டி, வீட்டுமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஊழல், லஞ்சம், தீவிரவாதம் என்று மேற்சொல்லியவைகள் பெருமளவில் குறைவதற்கு மிகப்பெரிய அளவில் உதவிசெய்யும் என்பதை போகப்போக மக்கள் உணருவார்கள். இதில் என்னக் கூத்து என்றால் சில ஊடகங்களில் காட்டிய பேட்டி (இன்று இருக்கும் கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் அரசியல்வாதியோ அல்லது அரசியல்வாதிகளின் தயவினால் நடைபெறுகிறது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது) சிரிப்பை வரவழைக்கின்றது. இவர்கள் தான் ஏழைகளின் கண்ணீர் பற்றி பேசியவர்கள்! என்ன நடக்கிறது? அவர்களுக்குச் சாதகமான செய்தியை அடிக்கடி பிரமாண்டமாய்க் காட்டியும், பாதகமான செய்தியை ஒரு சில வினாடியே காட்டுவது நாம் தினமும் பார்க்கிறோம். இன்றைய நாட்டு மக்களின் நிலைமை, ஊடகங்களை விட இளைஞர் சமுதாயம் அதிகமாக இருக்கும் சமூக வலைதளங்களில் நன்றாகவே நன்றாக பிரதிபலிக்கின்றது. குறுகிய காலத்தில் ஏழைமக்களை அல்லாட வைத்தது இந்த 500, 1000 நோட்டுகள் தானே!

கிலோமீட்டர் கணக்கில் சொற்ப விலையில் நிலங்களை வாங்கி அதைக் கூறுபோட்டு சாமானியர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவிற்குப் கோடிக்கணக்கில் விற்றதோடு, அந்தப் பணத்தால் எதையும் சாதித்து வருவதே உண்மை. இந்தப் பணம்தான் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி, ஏழைகளை மிகவும் ஏழையாக்கிக் கொண்டு வருகின்றது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த இரண்டு மூன்று நாட்கள் அலைக்கலைக்கப்பட்டவர்கள் பிறகு வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும், மற்றவர்கள் தங்கள் தகாத செயல்களால் அடையாளம் காணப்பட்டு அலைக்கலைக்கப்படுவார்கள் என்பதே உண்மை.

அது எப்படி? ஐம்பது கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி என்று வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாத, அரசை, மக்களை ஏமாற்றிய பணம் இன்று வெறும் காகிதங்களாக மாறிவிட்டன. அந்தப் பணத்தைக் கொண்டு மென்மேலும் எல்லோரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என்கிறர்களின் ஆசை மண்ணாகப் போய்விட்டது. இப்போது அவர்களும் சாதாரண மனிதர்கள். இனிமேல்அவர்களால் எதையும் சொற்ப விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கும் வேலை நடக்காது. இதுநாள் வரை அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளின் உழைப்பை உறிஞ்சியவர்கள், அறிவாளிகளை விலைக்கு வாங்கி அவர்கள் மூலம் ஏமாற்றும் வேலை, பணம் கொடுத்து எதையும் சாதித்தவர்கள் என்பதெல்லாம் இப்போது நடக்காது.

8.11.16 அன்று அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை உலகமே எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது, அதை விட வரலாற்றுச் சிறப்புமிக்கச் செய்தியாக இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு. புலி வருது, புலி வருது என்று பூச்சாண்டி காட்டியவர்களுக்கு உண்மையான புலியை அரசியலில் இப்போது தான் பார்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இது இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாதையாகவும், வழிகாட்டியாகவும், எதையும் சாதிக்கலாம் என்கிற துணிவும், நல்ல செயலுக்கு என்றும் மக்களின் ஒத்துழைப்பு இருக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கச் செய்துள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சி பற்றிய அக்கறையும் பெற்றிருப்பார்கள். இது நாள் வரை அரசியல்வாதிகள் அட்டைக் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்தவர்களுக்கு, அரசியல்வாதிகளால் எதையும் செய்ய முடியும் என்று இப்போது தெரிய வரும்.

இதுநாள் வரை இரகசியமாய் நடந்த அணுகுண்டு சோதனை, சர்ஜிக்கல் ஆபரேசன், இப்போது500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு என்கிறது போல் இன்னும் பல செயல் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நாளை50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு வந்தாலும் அதிசயம் இல்லை. ஆகையால் மக்கள் இனிமேலாவது அதிகமான ரூபாய் புழக்கத்தை வங்கியின் மூலம் நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் உள்ள இரகசியத்தை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள். கிட்டத்தட்ட நம்நாட்டில் பதினைந்து இலட்சம் கோடி மக்களிடத்தில் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அதில் எவ்வளவு கறுப்பு? எவ்வளவு வெள்ளை என்று கணக்கி எடுக்கவே இந்த செயல். ஒருவேளை ஐந்து இலட்சம் கோடி தான் மாற்றப்பட்டுள்ளது. மீதம் பத்து இலட்சம் கோடி வரவில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்து இலட்சம் கோடி தான் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அந்தப் பணம் அரசாங்கத்திற்கு வராவிடில், இனி அந்தப் பணம் அரசாங்கப் பணம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு, இது நாள் வரையில் தடைபட்டுவந்த இலவசக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவம், நதி நீர் இணைப்பு, போக்குவரத்து வசதி, நிலையான விலைவாசி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, உணவுப்பாதுகாப்பு, விவசாயம் போன்ற வளர்ச்சிக்கு இந்தப் பணம் கட்டாயம் உதவும். இனி அரசாங்கத்தால் எதையும் நிர்ணயிக்கும் நிலை உண்டாகும். அதாவது இது நாள்வரை பணக்காரர்கள் கையில் இருந்துவந்த விலைவாசி, இனி அரசாங்கத்திடம் இருக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவுகள் நனவாகும். அவர்கள் தந்த இந்த மாபெரும் ஒத்துழைப்பு கட்டாயம் நல்லரசுக்கு வழி வகுக்கும்.

சிலர் இதைக் கோமாளியான செயல் என்று விமர்சனம் செய்கிறார்கள்! எது கோமாளியான செயல்? சிலராகிய நாங்கள் வரிகட்டமாட்டோம், வியாபாரக் கணக்கு காட்டமாட்டோம், லஞ்சம், ஊழல் தொடர்ந்து செய்வோம், ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களை ஏமாற்றுவோம், இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை வழக்கம்போல் காற்றில் பறக்கவிட்டு சுயநலம் மற்றும் வாரிசு, உறவினர்களின் நலனுக்காக எதையும் செய்வோம் என்கிற செயல் இனி நடக்காது. அரசியல்வாதிகளின் 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்கிற வீராப்பு வசனம் இனி எடுபடாது.

8.11.16 அன்று சுமார் இரவு 9.00 மணி அளவில் வெளியான அறிவிப்பு ஏமாற்றியவர்களுக்கு இடியும், உண்மையாய் இருப்பவர்களுக்கு இனிப்பும் ஆக இருந்திருக்கும். இதை எண்ணும்போது 'எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்கிற பாடல் நினைவுக்கு வருகிறது. இது எப்படி இருக்கிறதென்றால் பணமுதலைகள் பல ஆயிரம் கோடிகள் ஏமாற்றற்றும். என்னிடம் இருக்கும் ஆயிரம் ரூபாய் ஒன்றும் ஆகாமல் இருந்தால் சரி என்கிற எண்ணம் இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கு எடுத்துக்காட்டாக தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மூன்று கண்டெய்னர்களில் சுமார் 5000 கோடி பணம், வாராக்கடன் சுமார் இரண்டு இலட்சம் கோடி, சுவிஸ் வங்கியில் இருந்த பதினைந்து இலட்சம் கோடி, கடன் தள்ளுபடி சுமார் இரண்டு இலட்சம் கோடி, சமீபத்தில் சுமார் ஒண்ணேகால் லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப்பணம் வெள்ளையாக்கிய வாய்ப்பு, அதன் பின்னும் வருமானவரி சோதனையின் போது கண்க்கில் வராமல் பிடிபட்ட கோடிக்கணகான பணம்! இவைகள் தான் நம்நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை. இன்னும் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்பது தான் ஒரு அரசாங்கத்திற்கு வேலையா? அந்த பணமெல்லாம் வெற்றுக் காகிதமாக்கியது இந்தச் செயல். இதற்கெல்லாம் முடிவுகட்ட பாரபட்சமில்லாமல் முடிவுகட்டவே இந்த ஏற்பாடு!

சிலர் சொல்கிறார்கள், 1946 மற்றும் மொராஜிதேசாய் ஆட்சியில் இத்தகைய செயல் நடந்தது. ஆனால் எவ்வித பலனும் அளிக்கவில்லை என்கிறார்கள். அன்றைய காலம் வேறு, இன்றைய கணினி காலம் வேறு! இன்று தொழில்நுட்பம் சிறந்து இருக்கின்றது. அதை உபயோகித்துக் கொள்ள இது தான் வழி. அன்று நடைபடுத்திய வழி வேறு. இன்று நடைப்படுத்துக்கின்ற வழி வேறு. இன்று பணப்பழக்கத்திற்கும், பணமுதலீடு செய்வதற்கும் பல வழிகள் இருக்கின்றன. அவைகளெல்லாம் சில அடையாள அட்டையின் உதவியோடு கணக்கில் காட்டப்படுகின்றன. இந்த நடைமுறை அப்போது இல்லை.

இந்தத் திட்டம் எடுத்தேன், கவிழ்தேன் என்றது போல் செய்யப்படவில்லை. பல மாதங்களாய் திட்டமிட்ட செயல் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. சாம பேத தான தண்டம் என்கிற வரிசையில் வந்துள்ளது. அனைவருக்கும் கணினி மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு, பொது மற்றும் விவசாய மக்களுக்கு மானியம் தருவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் மற்றும் குடும்ப அட்டை, பான் கார்டு, கணினியில் வியாபாரம் மற்றும் வரி கணக்குத் தாக்கல், கறுப்புப்பணத்தை வெள்ளைபணமாக்கும் வாய்ப்பு என்று பலவேறு எச்சரிக்கைகள் கொடுத்த பிறகே இந்த நடவடிக்கை! இதுநாள் வரை உலக வங்கியில் வாங்கிய கடன் எங்கே? அரசு வருமானம் எங்கே? வளர்ச்சி எங்கே? என்கிற பல கேள்விக்கான பதில் இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது தான்!

இப்போதுள்ள ஊடகங்கள் சிலரைக் காக்கவும், விளம்பரத்திற்காகவும், தங்களின் கருத்துக்களை திணிப்பதற்காகவும், ஒன்றுமே இல்லாததை ஆ, ஊ என்று மக்களை உசுப்பேற்றும் இயந்திரமாக செயல்படுகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. சமீபத்தில் நடந்த உள், வெளிநாட்டுத் தேர்தலின் கருத்துக் கணிப்பு பொய்யாய்ப் போனது இதற்குச் சாட்சி. ஏன் பொய்யாய் போனது என்பது இப்போது மக்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கும்.


இந்த  சூழ்நிலையிலும் சிலர், இருபது விழுக்காடு மக்கள் தவறு செய்பவர்களுக்காக எண்பது விழுக்காடு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கலாமா? என்று என்றைக்குமில்லாமல் மிகுந்த அக்கறையாக தினமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்காக இவ்வாறு பேசுகிறார்கள். அவர்களின் பின்னால் இருக்கும் பலவீனம் என்பதை மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டதால் சிரமத்தைப் பார்க்காமல், எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

எனக்கு ஒன்று விளங்கவில்லை. ஒரு பாத்திரத்தில் உள்ள பாலில் சில துளி விஷம் இருந்தால் பரவாயில்லையா?  அந்த விஷம் பாலை என்ன செய்துவிடும் என்று எண்ணி நாம் அதை பயன்படுத்துவோமா? அட ஆங்காங்கே தீவிரவாதிகள் குண்டு வைக்கிறார்கள். இனிமேலும் ஏதோ சில இடத்தில் குண்டு வைக்கப்போகிறார்கள் என்கிற தகவல் வருகின்றது. அப்போது அரசாங்கம், சில இடங்களில் தானே! என்று சும்மா இருக்கின்றனரா? விமான நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களில் பாரபட்சமில்லாமல் அனைவரையும் சோதிப்பதில்லையா? சரி, உடம்பு சரியில்லை. அசதியாய், பலவீனமாய் இருக்கின்றது. அப்படியே இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிடுகின்றோமா? உடம்பு அனைத்தும் ஸ்கேன் செய்தும், பலவித சோதனைகள் செய்து கொள்கிறோமா? இல்லையா? இவ்வளவு ஏன்? ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் விலையுயர்ந்த பொருள் ஒன்று திருடு போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்கிறார்கள். உடனே கதவுகளை அடைத்து அங்குள்ளவர்களை ஒருவர் விடாமல் சோதனை செய்யப்படுகின்றனவா? இல்லையா? அதுபோலத்தான் இன்று பல நிகழ்வுகள் நடக்கின்றது. நான் ஒரு குற்றமும் செய்யாதவன் என்று வாய் வார்த்தை பேசாமல் அதை மற்றவர்களுக்கும் நிரூபித்துக் காட்டுவதே கடமையும், நேர்மைக்கு அடையாளமும் ஆகும்.   

இப்போது மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யாரென்றால் வரம்பிற்குள் சேமிப்பு செய்பவர்கள், சட்டப்படி சொத்து சேர்த்திருப்பவர்கள், ஒழுங்காக வருமானவரியை கட்டிக் கொண்டிருப்பவர்கள், வங்கி மூலம் வியாபாரம் மற்றும் பணப்பரிமாற்றம் செய்பவர்கள், வருமானம் - செலவுக் கணக்கை ஒழுங்காக வைத்திருப்பவர்கள், கள்ளப்பணம், கறுப்புப்பணம் மற்றும் போலி பணத்தை வெறுப்பவர்கள், நம்பர் டு வியாபாரம் செய்யாதவர்கள், பிறர் பெயரில் பணம் மற்றும் சொத்துகளைச் சேர்க்காதவர்கள், அதையும் மீறி அரசாங்கம் கொடுத்த கடைசி வாய்ப்பான அதிகம் சேர்த்த கறுப்புப்பணத்தை கணக்கில் காட்டி அதற்கு முறையாக வரிசெலுத்தியவர்கள்.

பலருக்குச் சந்தேகம் வருகின்றது. சிலர் அதாவது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நேரத்திலும் தாராளமாக செலவு செய்கிறார்களே அது எப்படி? என்று. இதற்கு பதில் ரொம்ப எளிது. அவர்கள் பெரும்பாலும் வங்கிகளிடம் மூலம்தான் பணப்பரிவர்தனை செய்துவருபவர்களாக இருப்பார்கள். அவர்கள் கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள் / சேமிக்கிறார்கள். அதற்குத் தகுந்தாற்போல் கோடிக்கணக்கான பணத்தை சரிபடி கணக்கு காட்டி வரியினைக் கட்டுகிறார்கள். அந்த லாபப் பணத்தைத் / சேமித்தப் பணத்தைத்தான் இப்போது தாம் தூம் என்று செலவு செய்கிறார்கள். உங்களிடத்திலும் கணக்குக் காட்டிய பணம் அதிகமாக இருந்தால் இப்போது செலவழிக்கலாம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் இதுவரை டாம் டூம் என்று செலவழித்தவர்கள் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள் என்றால், அதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

ஒரு சிலர் இதனால் எல்லாம் கறுப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் கட்டுப்படுத்தவோ அல்லது கண்டுபிடிக்க முடியாது என்று கூக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது விதைத்தவுடன் மரம் வளர்ந்துவிடுமா? பத்துமாதம் நிறைவு அடையாமல் குழந்தை பிறப்பு பற்றி சந்தேகம் கொள்ளலாகுமா? அதுபோல மத்திய அரசு கொடுத்த காலக்கெடு முடியாமல் அதனைப் பற்றி விமர்சனம் எந்தவகையில் நியாயமோ? என்று தெரியவில்லை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது. இதில்லாமல் சிலருக்கு இவ்விசயம் முன்பே தெரிந்துள்ளது. ஆகையால் அவர்கள் வங்கியில் அதிக டெபாசிட் செய்துள்ளனர் என்று கூறுகின்றனர். இப்படிப் பார்த்தால் தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள் எல்லோருக்கும் முன்பே வினாத்தாள் கிடைத்திருக்கின்றன என்று சொல்வது போல் இருக்கின்றது. அது சரிதானா? நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு சாரார் எறும்பாய், தேனியாய், நன்றி காட்டும் நாயாய் சுறுசுறுப்பாய் இயங்குவதைப் பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்வது நியாயமாஅவர்களுக்கு கட்டாயம் இவர்கள் உதவி செய்யமாட்டார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று வேடிக்கை மட்டும் பார்க்கலாம் இல்லையா?     

சமீபத்தில் தலைநகர் புதுதில்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க ஒற்றை இலக்கம், இரட்டை இலக்க வாகன விதிமுறை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கும் போது, இந்தத் திட்டம் கோமாளித்தனமாக இருக்கின்றது என்றும், இதனால் எவ்வித பயனும் இல்லை என்று கூறினர். அதாவது தங்களது சொந்த வாகனத்தை ஐம்பது விழுக்காடு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டம் போடுவதுபோல் உள்ளதல்லவா? ஆரம்பத்தில் மக்களும், ஊடகங்களும் என்னென்ன விமர்சனம் செய்தார்கள் என்று ஒருதடவை நினைவுபடுத்திப் பாருங்கள். அதுபோலத் தான் இது. இதன் பலனை அடுத்தமாதத் தொடக்கத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். தலைநகரில் வாகனம் இல்லாமல் மக்கள் இருப்பார்களா? அவர்கள் அனைவரும் பொறுமையைக் கடைப்பிடித்து விதியைப் பின்படுத்தவில்லையா?

எப்போது மக்க்ளின் நன்மைக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு அரசியல் தலைவரால் இந்த மாதிரி துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டதோ, பின் வரும் காலங்களில் கூட எப்போதெல்லாம் விலைவாசி ஏற்றமோ, கறுப்புப் பணம் புழக்கமோ, வாராக் கடன் அதிகரித்தோ, அதிக வரி ஏய்ப்பு நடந்தாலோ, போலிப் பணம் நடமாட்டமோ, தீவிரவாதிகள் அச்சுறுத்தலோ, லஞ்சம், ஊழல் அதிகரித்தாலோ, பொதுச் சேவையில் ஏமாற்று வேலையோ இன்னும் மக்களை ஏமாற்றும் பிற வேலையில் ஈடுபடுவது தெரியவந்தால், இனி மக்களே 'உயர் மதிப்பு பணத்தை செல்லாது' என்று எந்த கட்சி அறிவிக்கின்றதோ அந்தக் கட்சிக்கே எங்கள் வாக்கு' என்கிற கோரிக்கை வைப்பதற்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்றது. ஆகையால் எந்த மதிப்பு கொண்ட பணம் இருந்தாலும் சரி, அதில் உள்ள கவர்னரின் கையொப்பத்திற்கு மேல் ஒரு வாசகம் இருக்கின்றதே அந்த வாசகத்தில் உள்ள I promise to ... வரியினைத் தொடர்ந்து  until demonetization action taken.என்கிற இந்த வரியினையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.



முடிவாக, நம்நாட்டு அரசியல் சரித்திரம் புதிதாக எழுதப்பட்டுள்ளது. இனி எழை, எளியவர்கள், நடுத்தர மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். அவர்களின் கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகிக் கொண்டு வரும் என்பதைப் போகப்போகத் தெரியவரும்.

************************************************************************                                    



No comments:

Post a Comment