23.02.2025 கவியரங்கம்
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
" இரும்பின் முதல்வன் தமிழன்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராஜன் வரவேற்றார் . பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், முன்னிலை உரையாற்றினார். துணைச்செயலர் கு .கி கங்காதரன் முன்னிலை உரையாற்றினார்.
மாமதுரைக் கவிஞர் பேரவை கவிஞர் கவிபாரதி மற்றும் ஆசிரியர் கு. பேரின்பநாதன் அவர்கள் படைத்த 'பல்சுவைப் பாக்கள்' என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. அண்மைக்கால திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கு.ப. நாகராஜன் அவர்கள் கவியரங்கத் தலைப்புக் கவிதை, திரைப்படப் பாடல் மற்றும் தனிப்பாடல் சிலவற்றைப் பாடி கவிஞர்களை மெய்மறக்கச் செய்தார்.
மேலும், கவிஞர்கள் பேராசிரியர் சக்திவேல், முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம் , புலவர் மகா.முருகு பாரதி, குறளடியான், அழகையா , ச. லிங்கம்மாள், முனியாண்டி , அஞ்சூரியா க.செயராமன் , பா.பழனி, வித்யாபாரதி, பொன்.பாண்டி, பறம்பு முனைவர் நடராசன், ஆறுமுகம், இதயத்துல்லா, பால் பேரின்பநாதன், ந.சுந்தரம் பாண்டி, அ.அழகையா, ஆகியோர் கவிதை பாடினார்கள். தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி அவர்கள் வர இயலாத காரணத்தால் அவர் அனுப்பிய கவிதையினை கு.கி.கங்காதரன் வாசித்தார்
பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் மதுரை ரெ.கார்த்திகேயன் மற்றும் உதவியாளர் மோகன் அவர்களின் கை வண்ணம்...
அடுத்த மாதம் 30.3.2025ம் நாள் அன்று நடைபெறும் கவியரங்கம் தலைப்பு:
"மணம் கமழும் தமிழே;
மனம் கவரும் தாயே!"
என்பதை அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது.
இரும்பின் முதல்வன் தமிழன்
- கவிஞர் இரா. இரவி
***
இரும்பைக் கண்டுபிடித்த முதல்வன் தமிழன்
இரும்பால் ஆயுதங்கள் செய்திட்டவன் தமிழன்
கல்ஆயுதம் தாண்டி யோசித்த தமிழன்
கல்லைவிட கடினமான இரும்பாயுதம் செய்தான்
இரும்பை உருக்கும் நுட்பம் கற்றவன் தமிழன்
இரும்புத் தொழிற்சாலை வடிவமைத்தவன் தமிழன்
ஐயாயாயிரத்து முன்னூறு ஆண்டுக்கு முன்பே இரும்பை
அகிலத்திற்கு அறிவித்த அறிவாளி தமிழன்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளோடு முன்தோன்றியது உண்மையானது
உலகின் முதல்மொழி தமிழ் உரைக்கின்றனர்
உலகின் முதல்மனிதன் தமிழன் உரைக்கின்றனர்
மொழியியல் ஆய்வாளர்களின் அறிவார்ந்த கூற்று
முன்மொழிந்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
ஆய்வக முடிவுகளும் அறிவித்தனர் அகிலத்திற்கு
அனைத்து மக்களுக்கும் அறிவித்தார் தமிழக முதல்வர்
பழம்பெருமை பேசியதில் பொய் இல்லை
பழம்பெருமை இன்று மெய்யாகி விட்டது
பல்லாயிரம் ஆண்டு பழைமையானது எம்தமிழ்
சிலநூறு ஆண்டு இந்தி எமக்கு எதற்கு?
கட்டாயமாக்கினால் கட்டாயம் வெறுப்போம்
கடைசியில் தமிழ்நாடே வெல்லும் உணருங்கள்
மீண்டும் மொழிப்போருக்குத் தள்ளாதீர் எங்களை
மும்மொழியை எந்நாளும் ஏற்கவே மாட்டோம்.
சிந்தனைக் கவியரங்கம்.
தலைப்பு:இரும்பின் முதல்வன் தமிழன்.
&&&
ஆதிச்ச நல்லூர்
அன்றை சிவகளை
ஆச்சரியம் ஊட்டும்
அரிய தகவலாம்
நீதிமிகு கோலோச்சும்
நம்தமிழ் நிலத்தில்
நேர்மையுடன் கண்டார்
தமிழன் முதல்வன்
வீதியெலாம் கொடிதாங்கி
ஊர்வலம் வந்தான்
வெற்றிச் செல்வன்
வீரமிகு தமிழன்
சோதி முகங்கொண்டான்
சுடரென தோன்றினான்
சொக்கும் அழகன்
தமிழன் முதல்வனே!
&&&&
கிருத்து பிறப்பின்
முன்னமே தமிழகத்தில்
கையொடு வாளெடுத்து
களங்கண்ட முதல்வன்
காளையாம் தமிழனே
வருத்த மில்லா
வாலிபன் முதல்வன்
வாகைச் சூடி
வலம்வரக் காணீர்
இரும்பின் பயன்பாடு
இருப்பதாகக் கூறி
இதயம் விம்ம
எடுத்துரைத்த முதல்வன்
விரும்பி தமிழர்கள்
வழிநெடுக முதல்வனை
வரவேற்று மகிழ்வோமே
வாரீர் கவிஞர்காள்!
&&&&&
தொல்லியல் துறையின்
கண்டுப் பிடிப்பு
துள்ளிக் கூறினார்
தமிழக முதல்வர்
எல்லை இல்லா
இன்பத்தை நிரப்பி
எடுத்துரைத்த பாங்கு
இதயம் குளிர்ந்ததே
செல்லா நின்ற
சமுதாயச் சுழலில்
சிக்கிய நற்பெரும்
சேதி வியப்பன்றோ
கல்லும் மண்ணும்
காணாத காலத்தே
கையில் வாளெடுத்து
முன்தோன்றிய முதல்வனே!
&&&&&
வணக்கத்துடன்
கவிபாரதி
என்.எஸ்.விஸ்வநாதன்
மதுரை. 76398 41731.
******************************
இரும்பின் முதல்வன் தமிழன்
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
சரித்திரத்தில் மாறுது தமிழனின் காலம்
சிவகளையில் கிடைத்த இரும்பு காரணம்
ஈராயிரம் ஆண்டுக்குச் சாட்சி திருக்குறள்
ஐந்தாயிரம் ஆண்டுக்கான நீட்சி இரும்பே
இரும்புக்கும் தமிழனுக்கும் இருந்த உறவு
இமயமாய் சிவகளையில் கிடைத்தத் தரவு
அறிவியல் அறிவில் தமிழனின் தெளிவு
ஆணித்தரமாய் உரைக்கும் சிவகளை அகழாய்வு
உலகில் முதன்முதலில் இரும்பை அறிந்தவன்
இரும்பின் பயன்பாட்டை நன்றாய்த் தெரிந்தவன்
ஈடில்லா இரும்பின் வலிமையை உணர்த்தியவன்
இணையிலா இரும்பின் உறுதியைக் கண்டவன்
தமிழகத் தொல்லியல் துறையின் சாதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் அகழாய்வுச் சோதனை
ஆதிச்சநல்லூரில் சிவகளையில் இரும்புக் கண்டுபிடிப்பு
ஆதித்தமிழன் காட்டிய அளவில்லா உழைப்பு
வேட்டையாடும் ஆயுதங்கள் செய்வது முதல்
வேளாணுக்கு உதவிடும் கருவிகள் வரை
அளப்பரியத் தமிழனின் அறிவியல் பங்களிப்பு
உலகுக்குத் தமிழன் கொடுத்த அன்பளிப்பு. ..
***********
























.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment