மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 35- 29.6.2025 - புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் - மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக் கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
" புரட்சிக் கவியின் புதுமைப் பாடல்கள் "எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி , இரா . கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராசன், கு கி .கங்காதரன் , இராம பாண்டியன், நா .குருசாமி ,பால் பேரின்பநாதன்,அழகையா ச. லிங்கம்மாள், சிவ சத்யா , மா .முனியாண்டி , தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா, ந .சுந்தரம் பாண்டி , பா .பழனி , பா .பொன் பாண்டி,சு .பால கிருட்டிணன் ,வே .இசக்கி தேவி ஆகியோர் கவிதை பாடினார்கள்.
கவிஞர் இராமபாண்டியன் எழுதிய* கம்பன் காட்டும் உவமைகள் " நூல் வெளியிட்டனர் .விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நூலை அன்பளிப்பாக வழங்கினார் நூல் ஆசிரியர் . பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய இராம பாண்டியன், நா .குருசாமி இருவருக்கு தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கினர். துணைத் தலைவர் இரா.வரதராஜன் நன்றி கூறினார் .
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். மாதாமாதம் கவிதைகளை பேரவையின் வலைப்பூவில் ஆவணப்படுத்தும் துனைச் செயலர் கு .கி .கங்காதரன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
படங்கள் : மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
*புதியதோர் உலகம்* *செய்வோம்* -பாரதிதாசன்
பாட்டுக்கொரு புலவன்
*பாரதி* கண்ட
பாவேந்தர் *பாரதிதாசன்* -
நாட்டுக் கொரு சேதி சொன்னார் -அதை
நாளும் காப்போம் (2)
நாட்டு விடுதலைக்கு
பாடினார் *பாரதியார்* -தமிழ்
பாட்டு விடுதலைக்குப்
பாடினார் *பாரதிதாசன்* (4)
*விடுதலைக்கு முன்*
நெஞ்சில் உரமின்றி நேர்மை திறனின்றி அஞ்சியஞ்சி துஞ்சிய தமிழர்கள் -
அடர்ந்திருந்த நாடு அடிமை பட்ட நாடு
அடிமை விலங்கு அறுக்க பாடியவர் *பாரதியார்* (8)
*விடுதலைக்குப் பின்*
இனமானம் இற்றுத் தன்மானம் பற்று தளர்ந்திருந்த தமிழர் மனமாசில் மாய்ந்து
மாயிருளில் தோய்ந்திருந்த தமிழர் தமை
தட்டி எழுப்பும் கொட்டும் முரசாய்
எட்டு திக்கும் எதிரொலிக்கும்
சங்க முழக்கம் செய்தவர்
*பாரதி தாசன்* (14)
*புதியதோர் உலகம்* *செய்வோம்*
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழிவழி வந்த
*தமிழ் மரபன்றோ!*
சொல் புதிது
சுவை புதிது
சோதி மிக்க
தமிழ்க் கவிதை தமிழர் நலக் கவிதை
தமிழர் நாம் படைப்போம் (20)
உடலோடு ஒட்டி உறவாடும்
*உயிர் மூச்சு* !
உயிரோடு உணர்வோடும்
*தமிழ்ப் பேச்சு!* -எங்கள்
பேச்சும் மூச்சும் வாழ்வும் வளமும்
மங்காத தமிழென்று *சங்கே முழங்கு* !(24)
சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி* பெங்களூர்
28.06.2025
***************