ஆறுகளின் இராணி தாமிரபரணி
புதுக்கவிதை
கு.கி. கங்காதரன்
கைப்பேசி: 9865642333
நெல்லையின் மகுடத்தில் முத்துகள் மூன்று
நெடிய ஆனித்தேரில் வலம்வரும் நெல்லையப்பர்
ஒய்யாரமாய்த் தவழும் தாமிரபரணி ஆறு
அம்பாள் உருவில் திருவருளும் அம்பாசமுத்திரம்
தாமிரபரணி அழகில் மயங்கியது மனம்
தானாகவே எழுதியது எனது எழுதுகோல்
கவர்ச்சியின் பின்னே காரணத்தை அலசியது
கன்னியின் இளமைக்கான மர்மம் விலகியது
சூரியஒளி தடவுவதால் பளபளப்பு சேர்ந்திருக்குமோ?
சந்திரனின் பார்வையால் வெண்மை ஏறியிருக்குமோ?
பொதிகைத் தென்றலால் குளுமை பெற்றிருக்குமோ?
பூக்களின் மென்மையால் பொழிவு கூடியிருக்குமோ?
தெற்கின் கங்கையோ விண்ணின் மங்கையோ !
தேனமுதச் சுவையோ நோய்களுக்கு மருந்தோ !
பரமனை மனிதனோடு இணைக்கும் பாலமோ !
பரணியின் பாரம்பரிய விழாக்கள் கோலமோ !
தாமிரபரணி கரையில் நடைபெறும் ஆடிப்பெருக்கு
திரளான பெண்களின் சீர்வரிசைக் காட்சி
சுமங்கலிகள் புதியதாலி அணியும் நிகழ்ச்சி
சப்த கன்னியர்க்கான கோவில்களில்
வழிபாடு
ஆண்டின் விசாகத்தில் புஷ்கரத் திருவிழா
புண்ணியம் சேர்க்கும் பாவத்தைப் போக்கும்
குருபகவான் சஞ்சரிக்கும் விருச்சிக ராசி
குளிப்போருக்குக் கிட்டும் மகாமகம் நல்விணை
ஆன்மீகத் தலங்களின் அடிநாதமான தாமிரபரணி
ஒன்பது சிவாலயங்களான நவ கைலாயங்கள்
ஒன்பது பெருமாள் கோவில்களான நவதிருப்பதி
ஆறுகளின் இராணிக்கான தகுதிகள் தாமிரபரணியே
*******************************************
No comments:
Post a Comment