Pages

Tuesday, 17 June 2014

ஆழமில்லா அவள் மனசு சிறுகதை

ஆழமில்லா அவள் மனசு 
சிறுகதை 
மதுரை கங்காதரன் 

"என்னங்க ! இன்னைக்கு ஆபீஸ் முடிஞ்ச பின்னே சீக்கிரமா  வீட்டுக்கு வந்திடுங்க. நீங்க, நான், நம்ம குழந்தை ! மூணு பேரும் கோவிலுக்குப் போவோம் !" என்று சாவித்திரி தன் கணவனிடத்தில் செல்லமாக கட்டளையிட்டாள். 

"என்னைக்குமில்லாமே அப்படி என்ன விசேசம் இன்னைக்கு?" என்று எதுவும் அறியாமல் விழித்தான் சக்திவேல். 
 
"ஆமாங்க. உங்களை எப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ அப்போதிலிருந்தே நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். தினமும் நான் பிரார்த்தனை பண்ணியது வீண் போகல்லேங்க. என்னோட இந்த வாழ்க்கை அந்த சாமி கொடுத்ததா நினைக்கிறேங்க. அதனாலே கோவிலுக்குப் போய் நிறைஞ்ச மனசோட சாமி கும்பிட்டா எனக்கு திருப்தியா இருக்கும் ! " என்று தன் நிகழ் வாழ்க்கையைப் பற்றி பெருமையாக பேசினாள்.  

"அப்படியா? அப்படி ஒண்ணும்  நான் பெரிசா செஞ்சமாதிரி தெரியல்லையே. எல்லோரும் எப்படி தன்னோட பெண்சாதி, குழந்தையை வச்சிக்கிறாங்களோ அப்படித் தான் நான் வச்சிருக்கேன். இதிலே என்ன அதிசயம் இருக்கு?" என்று அவன் யதார்த்தமாகப் பேசினான்.

"என்னங்க அப்படி சொல்லீட்டீங்க. ஒவ்வொரு பொண்ணுக்கும் தனக்கு பிடித்த மாதிரி கணவன் கிடைக்கிறதுக்கு ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும். அதுவும் உங்களைப் போல நல்ல குணமுள்ள கணவர் கிடைச்சாலே சொர்க்க வாழ்க்கை தான் போங்க ! " என்று தன் மனதில் பூட்டி வைத்திருந்த சந்தோசத்தை திறந்து கொட்டினாள்.
அதற்கு பதிலாக ஏதோ சொல்ல வந்தவன் 'டக்'கென்று மௌனமானான். அதை கவனித்த சாவித்திரி "ஏங்க , நான் ஒவ்வொரு முறை உங்களை புகழ்ந்து பேசுறப்போ நீங்க ஏதோ சொல்லத் துடிக்கிறீங்களே,  அது என்னான்னு என்கிட்டே சொல்லக் கூடாதா?" என்று சிணுங்கினாள். 

"அதுவா, இதுநாள் வரை எனக்கு உன்கிட்டே சொல்லனும்னு தோணலே. ஆனா இப்போ சொல்லனும்னு தோணுது. அது வந்து ... ஒண்ணுமில்லே .. எல்லோருக்கும் படிக்கிற வயசுலே ஒண்ணு வருமே .." என்று இழுத்தான். 

"எது .. காதலா ?" என்று உடன் பதில் தந்தாள்.

"அப்படின்னு எல்லோரும் நினைக்கிறாங்க. திரைப்படமும், சின்னத்திரையும், கவிஞர்களும், கதைகளும்  அதோட உண்மையான உணர்வை மறைத்து எப்படி சனங்களுக்கு காட்டக்கூடாதோ, எப்படி சொல்லகூடாதோ அப்படியெல்லாம் சொல்லிப் பல இளம் இதயங்களைப் புன்னாக்கிக் கொண்டிருக்கிறதா எனக்குத் தோணுது. காதல்னு சொல்லி என்னென்னவோ செய்றாங்க. மக்கள் மத்தியிலே தப்பான எண்ணங்களை விதைக்கிறாங்களான்னு நினைக்கத் தோணுது. ஆனா உண்மையில் அன்பு தான் காதல்னு பேரை மாத்தி அதை கொச்சைப் படுத்துறதா நினைக்கிறேன். இது என்னோட தனிப்பட்ட கருத்து தான் "

"நீங்க பேசுறது ரொம்ப புதிராக இருக்குதுங்க. கொஞ்சம் விளக்கமா சொன்னா நானும் என்னான்னு  தெரிஞ்சிக்குவேங்க" என்று ஆவலோடு அவன் சொல்வதைக் கேட்கலானாள்.
"ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது தவறு கிடையாது. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையில், இளம் வயசிலே, ஒருவித எதிர்பார்புகளோட ஆண் -பெண் இனக் கவர்ச்சி மூலமா வர்றதை உண்மையான காதல்ன்னு சொல்ல முடியுமா?"

"ஒண்ணுமே புரியல்லேங்க. கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்"

"ஏன் சுத்தி வளைச்சு பேசணும். நேரடியாகவே இப்போ  சொல்றேன். நான் கல்லூரியில் படிக்கிறப்போ நானும் ஒரு பொண்ணுகிட்டே மனசை பறிகொடுத்தேன்"

"அப்படியா! ஆச்சரியமா இருக்கு!"

"என்ன ஆச்சரியமா இருக்கா ? இதைக் கேட்டவுடனே பதறிப்போவேன்னு நினச்சேன். ஆனா இவ்வளவு இலேசாக எடுத்துக்கிட்டே"

"பின்னே என்னாங்க. இதுநாள் வரை அது மாதிரி ஒண்ணு நடந்ததா காட்டிக்கவே இல்லையே. அந்த நினைப்பிலே என்கிட்டே ஒருநாளும் தப்பா நடந்தது கிடையாது. இன்னைக்கு வரைக்கும் ஒருநாள் கூட என்கிட்டே கோபமா பேசினது கிடையாது. நான் சொன்னது தட்டினது கிடையாது. அப்படீன்னா உங்க வாழ்கையிலே ஏதோ ஒரு சம்பவம் நடந்து மறந்சிடுச்சின்னு அர்த்தம். அதையே நினைச்சுட்டு இருக்கலேன்னு தெரியுதுங்க. அப்பறம் எப்படிங்க..?" என்று அவளின் முதிர்ந்த வார்த்தை அவனுக்கு ஒருவித உத்வேகத்தை கொடுத்தது.
  
"நம்மோட இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவள் தான் காரணம் ! அப்போ நான் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கின்றபோது அவள் முதலாண்டு மாணவி. கல்லூரியில் நடக்கும் எல்லாப் போட்டியிலும் அவள் தான் முதல் ஆள். படிப்பிலும் அவள் கெட்டிக்காரி. அப்படியிருக்கும்போது ஒரு நாள்.."
'சக்திவேல் சார்.. இந்த பாடத்திலே இந்த பகுதி எனக்கு புரியவே இல்லை. நீங்க புரியும்படி கொஞ்சம் விளக்க முடியுமா?' என்று கேட்டது தான் எங்கள் முதல் சந்திப்பு. எங்களுடைய எல்லாவித சந்திப்பும் எப்போதும் தனிமை என்பதே இருந்ததில்லை. எப்போதும் அவள் தன் தோழியுடன் தான் வருவாள். அப்படி இருந்ததற்காக அவளைப் பாராட்டியேத் தீரவேண்டும். தன்னைப் பற்றி யாரும் சந்தேகக்கண்களோடு பார்த்திடக் கூடாதுன்கிற மனோபாவம் அவளுக்கு இருந்தது"

"என்னங்க, நீங்க இரண்டு பேரும் அப்படி இருந்தவங்க.. எப்படி பிரிஞ்சிங்க.. ?"

"சொல்றேன் .. கேளு ..அந்த மாதிரி அவள் பாடத்திலே சந்தேகம் கேட்கிறது, அதை நான் சொல்லித் தருவது ஒரு தொடர்கதை போல போய்க் கொண்டிருந்தது. அவளுடைய மூன்றாண்டு பட்டப்படிப்பு முடியும் நேரம். அதே கல்லூரியில் எனது முதுகலை பட்டப்படிப்பும் முடியும் நேரம். இனிமேலும் என் காதலை சொல்லாமல் இருக்கக் கூடாதுன்னு அவளிடத்தில் என் காதலை தைரியமாகச் சொல்லிட்டேன்" என்று அப்போதும் வார்த்தைகளின் வேகம் இருந்தது.

"பலே ..பலே அப்புறம்"
"என்னோட காதலை சொல்லியும் அவ எந்தவித உணர்வும் வெளிப்படுத்தலே. அதுக்கு மாறாக சிரிச்சா.. அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டேன். அன்னைக்கு அவள் சொன்ன பதில்லே எனக்கு  உண்மையான அன்பும் காதலும்னா என்னான்னு புரிஞ்சது"

"எனக்கும் தெரியாதுங்க? அவங்க என்ன சொன்னாங்க. நீங்க எப்படி அதை ஏத்துக்கிட்டீங்க?" என்று அவனிடத்தில் சற்று துருவிக் கேட்டாள். 

"அது தான் நான் எதிர்பார்க்காத முடிவு ! என் இந்த இனிய வாழ்க்கையின் ஒரு திருப்பம்னு தான் சொல்லவேண்டும் " என்று சற்று மௌனம் காத்தான். 

"ரொம்ப திரில்லா இருக்குங்க. உடனே சொல்லுங்க. இல்லாட்டி என் தலை வெடிச்சிடும் போல இருக்கு"

"அப்போது அவள் திரும்ப திரும்ப சொன்ன ஒரு வார்த்தை ..'எதையும் பிராக்டிகலா யோசிங்க' ங்கிற வார்த்தை. தான். அது எவ்வளவு சத்தியமான வார்த்தைன்னு இப்போ தான் எனக்கு தெரியுது. அவள் அன்னைக்கு பேசியது இப்போவும் பசுமையாய் இருக்கு. அவ சொன்னா ' வாழ்க்கைன்னா சும்மா ஜஸ்ட் லைக் தட் இல்லீங்க. இப்போத்தான் நீங்களும் நானும் படிச்சு முடிச்சிருக்கிறோம். இனிமேல் வேலை தேடி சம்பாதிக்கணும். அதுவரைக்கும் சின்ன சின்ன செலவுக்கும் அப்பா , அம்மா தயவைத் தான் எதிர்பார்க்கணும். பிறகு  குடும்ப கடமைகளை பார்க்கணும். இதுக்கு மேலேயும்  நம்ம காதல் வெற்றி பெறுமா? உங்ககிட்டே எனக்கு பிடிச்ச விசயம் இதுநாள் வரைக்கும் என்னோட மொபைல் நம்பரைக் கேட்காதது. அதுபோல பேஸ் புக் , சாட் ன்னு என்னோடு எதுவுமே செய்யாதது. ஒருவேளை அப்படி செய்திருந்தா  உங்க மேலே உள்ள அபிப்பிராயம் குறைஞ்சிருக்கும். ஏன்னா  குறுஞ்செய்தி ஓயாம அனுப்புறது,  பேஸ் புக் தான் கதின்னு கிடக்கிறதே ஒரு வாழ்க்கையா? அப்படியே கதியா கிடக்கிறவங்க , ஒருத்தர்கிட்டே மட்டும் இந்த மாதிரி தொடர்பு வைச்சிட்டுக்கிருப்பாங்கன்னு எப்படி நம்புறது. அப்பேற்பட்டவங்க எப்படி நல்லா படிப்பாங்க. எப்படி நல்லா வேலையிலே கவனம் செலுத்த முடியும்?  எப்படி நல்ல வேலை கிடைக்கும்? நல்ல சம்பளம் எப்படி கிடைக்கும்?"
"சபாஷ் ! உண்மை தான். இந்த காலத்திலே வேலை கிடைக்கிறதே குதிரை கொம்பு. அதுவும் ரெண்டு பேரும் வேலை செஞ்சா தான் வாழ்க்கை வண்டி ஓடும். அதுவுமில்லாம சதா குறுஞ்செய்திகள், பேஸ் புக், சாட் லே இருந்தா எப்படிங்க வாழ்க்கை நல்லா இருக்கும்? வீட்டு வேலைகள் எப்படி கத்துக்கிறது? அவங்களுக்கு கல்யாணமானால் யாரு வீட்டு வேலை செய்வாங்க? அப்பறம் யாருகிட்டே குறுஞ்செய்திகள், பேஸ் புக், சாட் செய்வாங்க? நல்லாவே புத்திமதி சொல்லியிருக்கிறா. அப்பறம் மேலே என்னங்க சொன்னாள்?"

"அப்பறம் என்ன சொன்னாள் தெரியுமா ? 'பசையுள்ளவனைப் பார்த்து பழகுறது, அழகைப் பார்த்து பழகுறது தான் காதலா? இந்த மாதிரி எதிர்பார்ப்பு காதல் எத்தனை நாட்கள் தாங்கும்?  உங்க சாதி என்ன.. என் சாதி என்ன?  உங்க வசதி என்ன? இந்த ஏழையின் வசதி என்ன? உங்க குடும்பமும், சுற்றங்களை எங்கள் சாதி சனங்கங்களும் நம்ம கல்யாணத்திற்கு ஒத்துக்குவாங்களா? வாழ்க்கையென்கிறது இரண்டு பக்கமும் சுமூகமா இருக்கணும். எல்லாமே முறையா மகிழ்ச்சியா நடக்கணும். குடும்பத்தை, உறவுகளை எதிர்த்துட்டு கல்யாணம் பண்றது ஒரு வாழ்க்கையா? அப்படீன்னா ஒட்டும் உறவும் எதுக்கு? தாய், தகப்பன் , பெரியவங்க எதுக்கு? இல்லே உங்களுக்கு உங்க சாதியிலே பொண்ணு கிடைக்காதா? அல்லது எனக்கு எங்க சாதியிலே ஆம்பளை கிடைக்காதா? நமக்கு இப்போ வருகிற உணர்வுகளை மட்டும் பார்க்கக்கூடாது. நம்மைச் சுற்றி இருக்கும் குடும்ப உறவுகளைப் பார்க்கணும். முக்கியமா நமக்கு பொறக்க போகும் குழந்தைக்கு என்ன சாதி, எந்த மதம் போடுறது?' ன்னு கேட்டுட்டா"

"அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?"           

"அந்த கேள்விக்கு என்னாலே சட்டுன்னு எந்த பதிலும் சொல்லத் தெரியல்லே. மௌனம் சாதித்தேன். அதைப் பார்த்து 'பார்த்தீங்களா? இந்த ஒரு கேள்விக்கு பதிலைத் தேடுறீங்க. நம்ம வாழ்க்கையிலே தினம் தினம் எழுகிற கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவீங்க ? ஒண்ணு நல்லா தெரிஞ்சிக்குங்க. சாதி இல்லை! மதம் இல்லை!ன்னு எல்லாமே மேடையிலே பேசுறதுக்கு நல்லாத் தான் இருக்கும். ஏன் கதையா, படமா பார்க்குறதுக்கும் நல்லாத் தான் இருக்கும். ஆனா அதுக்கு மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க வாழ்க்கை இன்னும் சமுதாயத்திலிருந்து மறைவாத் தான் வாழுறாங்க. எங்கேயாவது ஒருத்தர் நான் கலப்புத் திருமணம் பண்ணிருக்கேன்ன்னு வெளிப்படையா தைரியமா சொல்றாங்களா? ஏதோ ஒரு சிலர் அங்கொன்னு , இங்கொன்னு தான் இருப்பாங்க. ஏன் அந்த மறைவான வாழ்க்கை வாழனும். அது அவங்களா தேடிகிட்ட விதி! தினம் தினம் சமுதாயத்திற்கு பயந்து, குடும்பத்திற்கு பயந்து வாழ்ந்துட்டே இருந்தா தனிப்பட்ட ஒருவரின் குறிக்கோளை எப்படி அடையறது' ன்னு கேள்விகளை சரமாரி கேட்டா பாரு எனக்கு ஒரு நிமிசம் தலை சுத்திரிச்சி"

"அவங்க சொன்னது சரிதாங்க. நீங்க குறுஞ்செய்திகள், பேஸ் புக், சாட் ன்னு கதின்னு இல்லாம அல்லது தேவைப்படும்போது மட்டும் உபயோகிச்சதாலே வருசா வருசம் உங்களுக்கு சம்பளம் உயர்வு, ஊக்கத் தொகை, பதவி உயர்வுன்னு வந்துட்டே இருக்கே! அப்பறம் என்ன சொன்னாங்க ?"
 
"அப்பறம் தான் ஆணி அடிச்சாப்பிலே பலது சொன்னாங்க. என்னான்னா 'இந்த மாதிரி மனசை கஷ்டப்படுத்திட்டு வாழ்க்கை வாழனுமா? நீங்க வசதியாய் இருக்கிறதனாலே எங்க வீட்டிலே நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க. ஆனா என்னை கட்டிக்கிட்டதனாலே உங்களுக்கு எவ்வளவு சிரமம் வரும்னு சொல்லவே முடியாது. உங்க சந்தோசம், குடும்ப கெளரவம் நிலைகுலையாம இருக்கணும்னா என்னை சுத்தமா மறந்திடுங்க. அது தான் நம்ம அன்புக்கும், காதலுக்கும் கொடுக்கிற மரியாதை. நான் என்னோட வசதிக்கு தகுந்தாற்ப்போல நம்ம சாதியிலே கல்யாணம் பண்ணிட்டு பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த நிமிசத்தோட உங்களை மறந்துட்டேன். மீண்டும் சொல்றேன். எதுவும் பிராக்டிகலா யோசிங்க. வானத்திலே பறக்கிறாப்பிலே கனவு காணுறது நல்லாத் தான் இருக்கும். ஆனா முடியுமா? நம்ம சந்தோசம் , எல்லோருக்கும் சந்தோசத்தைக் கொடுக்கும்ன்னு நினைக்க குடியுமா? உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னா..' என்று அவள் கொஞ்சம் யோசித்தாள்"

"அவள் தான் எல்லாமே புட்டுபுட்டு வைச்சுட்டாலே. இனி அவள் பேசுறதுக்கு என்ன இருக்கு. உடனே நீங்க ஒரு நல்ல பதில் சொல்லிடவேண்டியது தானே?"     

"சரியாய் சொன்னே போ. நான் என்ன சொன்னேன்னா 'நீ சொன்ன விளக்கங்கள் எனக்குப் போதுமானது. இப்போ எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சி. உன்னை நினைச்சி, நீ என்கிட்டே காட்டுற அன்பை நினைச்சி நான் ரொம்ப பெருமைபடுறேன். காதலென்னும்  போர்வையிலே கஷ்டப்படாம வசதியாய் வாழ வாய்ப்பு கிடைச்சாப் போதும்ன்னு நினைக்கிறவங்க மத்தியிலே என்னோடு வாழப்போகும் இந்த சொகுசான வாழ்க்கையை  எந்த பொண்ணு வேணாம்ன்னு சொல்லுவா ? பொண்ணோட மனசு ஆழம்ன்னு சொல்லுவாங்க ! அந்த ஆழத்தைத் தொட முடியாதுன்னு கூட சொல்வாங்க. ஆனா அவள் மனசு ஆழமில்லா மனசு. இனிமையான என்னோட வாழ்க்கைக்கு உன்னை பரிசாக தந்த தேவதை. என்னோட வாழ்க்கை ஏற்றத்திற்கும், மாற்றத்திற்கும் காரணம் அவள் தான்" என்று இத்தனை நாள் தன் நெஞ்சிற்குள் இருந்த பாரத்தை அவன் இறக்கி வைக்கும்போது சாவித்திரியின் கண்களில் கண்ணீர் மிதந்தது.

"உண்மையிலே அவள் உங்களுக்கு மட்டுமில்லே, எனக்கும் அன்புன்னா என்ன? காதல்ன்னா என்னான்னு புரிய வைச்சுட்டா. அவள் இருந்த அந்த நிலைமையிலே நானா இருந்திருந்தா கூட இந்த மாதிரி பேசியிருப்பேனான்னு சந்தேகம் தான். எவ்வளவு சுயனலமில்லாதவள்! அவள் எங்கிருக்கிறாள்? அவளை ஒரு தரம் பார்க்கணும் போல இருக்கு" என்று துடித்தாள் சாவித்திரி.
"என்னங்க அவள் எங்கே இருக்கிறாலோ அது தான் இப்போ எனக்கு கோவிலாத் தெரியுது. அவளோட பரந்த மனசுக்கு நாமெல்லாம் ஒரு தூசு தான்" என்று தொடர்ந்தாள். 

"அவள் எங்கிருக்கிறாளான்னு தெரியல்லே. இதுநாள் வரை ஒருத்தருக்கொருத்தர் மொபைல் நம்பர் கூட வாங்கிட்டதில்லையே ! கல்லூரியில் தான் ஒருவருக்கொருவர் பேசிக்குவோம். சரி..சரி இப்போ அதெல்லாம் எதுக்கு. கோவிலுக்குப் போவோம். அங்கே அவங்களைப் பார்க்கிறதா நினைச்சுக்குவோம். இதெல்லாம் நான் எதுக்கு உன்கிட்டே சொல்றேன்னா நம்ம வாழ்க்கையிலே நல்ல விசயங்கள் எவ்வளவோ நடக்குது. அது நாலு பேருக்கு தெரியப்படுத்துறதினாலே எனக்கும் திருப்தி. கேட்கிறவங்களுக்கும் திருப்தி கிடைக்கும். இந்த மாதிரி பொண்ணுங்க உலகத்திலே இருக்காங்கன்னு எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும்" என்று பேச பேச சாவித்திரியின் கண்ணுக்கு அவன் தெய்வமாய்த் தெரிந்தான்.

அவளுக்குக் கோவிலுக்குப் போய் வந்த திருப்தி ஏற்பட்டிருந்தது.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 
                                                       
    

No comments:

Post a Comment